விவாகரத்து! – ஒரு பக்க கதை
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 16, 2019
பார்வையிட்டோர்: 18,471
கோர்ட். நீதிபதி ஆசனத்தில் அமர்ந்திருக்க….. குற்றவாளி கூண்டுகளில் எதிரும் புதிருமாக கணவன் மனைவி கணேஷ்; – கமலா.
நடுவில்… வக்கீல்கள் வரிசையை ஒட்டி இவர்கள் குழந்தைகள் பத்து வயது பாபு, ஏழு வயது கிருபா. நின்றார்கள்.
நீதிபதி கணேசைப் பார்த்து……
”உங்க விவாகரத்துக்கான கடைசி கெடுவு நாளான இன்று இறுதி முடிவாய் கேட்கிறேன். உங்களுக்கு மனைவியோடு வாழ விருப்பமில்லை. விவாகரத்துத் தேவையா?” கேட்டார்.
”தேவை சார் !” கணேஷ் தயங்காமல் பதில் சொன்னான்.
”கமலா ! நீங்க ? ” பார்த்தார்.
”தேவை சார் !” இவளும் அசராமல் சொன்னாள்.
”சரி. உங்க ரெண்டு குழந்தைகள்ல யாருக்கு எந்த குழந்தை வேணும் ? ”
”கமலா விருப்பம் சார்.”
”நீங்க ? ” அவர் பார்வை இவள்; பக்கம் திரும்பியது.
”அவர் விருப்பம் சார் !” சொன்னாள்.
”குழந்தைகளா! நீங்க யார், யர்ரோடு இருக்க ஆசைப்படுறீங்க ? ” நீதிபதி குழந்தைகளைக் கேட்டார்.
”யாரோடும் இல்லே சார் !” பாபு,கிருபா இருவரும் ஒரே குரலில் கூவினார்கள்.
கேட்ட…. நீதிபதி உட்பட அங்கிருந்த மொத்தப்பேர்களுக்கும் அதிர்வு.
பாபு தொடர்ந்தான். ”எங்களுக்கு யாரும் எதுவும் சொல்லிக் கொடுக்கலை. ரெண்டு பேரும் எடுத்த எங்க புத்தியில்பட்ட முடிவு. எங்க பொறப்புக்கு இவுங்க காரணம். ஆகையினால ஒரு வயித்துல பொறந்தோம். அப்படியே கடைசிவரை ஒன்னா இருக்க ஆசைப்படுறோம். இவுங்க பிரிவுக்காக நாங்க பிரியமாட்டோம். இவுங்க அப்பா, அம்மாவோடும் நாங்க வாழ மாட்டோம். காரணம்….அது தாத்தா, பாட்டிகளுக்குள் வீண் வருத்தம். நாங்க வளர, வாழ… எங்களை ஒரு அனாதை ஆசிரமத்துல சேர்த்துவிடுங்க. இல்லே…. தொட்டில் குழந்தை திட்டத்துல அரசாங்கத்துக்கிட்ட ஒப்படைச்சுடுங்க. அதுக்கு வழி வகை செய்யுங்க.” கையெடுத்துக் கும்பிட்டு முடித்தான்.
”ஆமாம் சார் !.” சிறுமியும் தலையை ஆட்டி அதை ஆமோதித்தாள்.
மற்றவர்களைவிட பெற்றவர்களுக்குச் செருப்பாலடித்த உணர்வு, அதிர்வு.
”புள்ளைங்க புத்தி எங்களுக்கில்லே. கண்ணைத் திறந்துட்டாங்க. எங்களுக்குக் குழந்தைங்க வேணும். விவாகரத்து வேணாம்!!” கணேஷ் கதற…
”ஆமாம் சார்;! ” கமலாவும் கமறி….நீதிபதியைப் பார்த்து கைகூப்பினாள்.
கண்களில் கண்ணீர் வழிந்தது.