கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினகரன் வாரமஞ்சரி
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: February 22, 2025
பார்வையிட்டோர்: 2,528 
 
 

(1987ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

பிரியமுள்ள தேவனுக்கு, கடந்த கடிதத்தை நீங்களா எழுதியிருந்தீர்கள்? இன்னமும் நம்பவே என்னால் முடியவில்லை. அம்மி மிதித்து, அருந்ததி காட்டி, என் கழுத்தில் மாங்கல்யம் தந்து, ஆசையுடன் வார்த்தைக்கு வார்த்தை ஆரத்தி, ஆரத்தி என அழைக்கும் நீங்களா அத்தான் அப்படியாக ஒரு கடிதத்தை எழுதியிருந்தீர்கள்? 

ஆருயிரே என ஆரம்பிக்கும் நீங்கள் கடிதத்தின் முதலிலேயே வெறும் ஆரத்தியென விளித்ததிலிருந்தே…. ஆயிரக்கணக்கான கிலோ மீற்றர்களுக்கு அப்பாலிருந்து நீங்கள் எழுதிய ஒவ்வொரு வார்த்தையும் ‘ஷெல்’லாக என் தலைமீது வந்து விழுந்து கொண்டிருந்தன. 

எங்கள் இரண்டு வருட தாம்பத்தியத்தில் என்றுமே இல்லாதவாறு இப்படியாக ஏன் நடந்து கொண்டீர்கள்? என்னில் தவறுகள் இருப்பதாக உணர்ந்திருந்தால் தாராளமாகவே சொல்லியிருந்திருக்கலாம்…. சந்தேகங்களை நானும் விளக்கியிருப்பேன். மாறாக, விவாகரத்துத்தான் இதற்கு முடிவென்று எழுதி ஏன் தேவன் நீங்களும் நிலைதவறி, என்னையும் கதிகலங்க வைத்தீர்கள்? 

மிருக வைத்தியம் பார்த்து என் மனதும் மிருதுகெட்டு பகுத்தறிவை இழந்துவிட்டதாகச் சொல்லி, என் மீது நீங்கள் கண்ட குற்றம், குழந்தை கதறக் கதற அவனைத் தவிக்க விட்டு, சனி ஞாயிறுகளில் சக ‘வெற்றினறி சேர்ஜன்’ மாதவனுடன் கூடிக் கொண்டு கருத்தரங்குகளில் கலந்து கொள்ள நான் ‘ரவுணுக்குச்’ செல்வது. உங்களுக்கு இந்தத் தகவலைத் திரித்துத் தந்த அந்த நண்பர் யாரோ…..எவரோ? சும்மா சொல்லக்கூடாது தேவன் அவர் சோடனை சிறப்பாகவே செய்திருக்கிறார். நாரதராக நன்றாகவே வேஷம் போட்டிருக்கிறார். 

வெறும் தரவுகளை வைத்து ஒரு தலைப்பட்சமாக நின்று கண் மூடித்தனமான முடிவெடுத்தீர்களே தவிர, தீர விசாரித்து ஒரு விடிவைக் காண நீங்கள் முயலவில்லை. மனைவியுடன் கலந்து ஆலோசிக்கும் மனப்பக்குவம் உங்களுக்கு இல்லாவிட்டாலும், இவற்றிற்கெல்லாம் விளக்கந்தர வேண்டிய கடமைப்பாடு உடையவளாக நான் இருப்பதால் என் விரிவான பதிலை எழுதுகிறேன். 

தேவன், கடந்த இரண்டு வருடங்களாக மட்டுமல்ல அறிவு தெரிந்து அரிச்சுவடியை ஒன்றாகப் படித்த அந்தக் காலத்தில் இருந்தே உங்களைப் பற்றி எனக்கு நன்றாகவே தெரியும். ‘அட்வான்ஸ் லெவலில்’ ஏதோ என் அதிர்ஷ்டம் பல்கலைக்கழகம் புகுந்து கொண்டேன். ஆனால், உங்களுக்கு என் ‘றிசல்ட்’ இருந்தாலும் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. வைராக்கியத்துடன் முன்னேறி இன்று ‘எக்கவுண்டன்’ ஆகியிருக்கிறீர்கள். 

ஒன்றுக்குள் ஒன்று என்ற பந்தம் விட்டுப் போகக் கூடாது என்பதற்காக, என்னை மணம் முடிக்க உங்கள் மனப்பான்மை பின் நின்ற பொழுதிலும் கூட, விடாப்பிடியாக நான் நின்றதால் நாம் தம்பதியானோம். மணம் முடித்த மறு வருடமே மகனும் பிறந்தான். மகன் பிறந்த மூன்றாம் நாளே வெளிநாட்டில் அதுவும் லண்டனில் உங்களுக்கு ஓர் உத்தியோக வாய்ப்பு கிடைத்தது. உங்களுடன் கூடி வர மனமிருந்தும் உடன் வர முடியாத என் உடல்நிலை. ‘இரண்டு வருடங்கள் தானே? பிறகு வந்து ஒன்றாகத் தானே இருக்கப் போகிறோம்’ என்ற உங்கள் சமாதானம். இந்தச் சமயத்தில் எங்கள் பிரிவு நிகழ்ந்தது. 

“ஆரத்தி, உன் கடிதங்களை என் சட்டைப்பைக்குள் வைத்திருக்கிறேன். அப்போதுதான் காரியாலயத்தில் என்னால் உற்சாகமாகச் செயலாற்ற முடிகிறது” என நேற்று வரை நெப்போலியனாக நின்று சொன்ன நீங்கள் இன்று நெருப்பாக மாறியிருக்கிறீர்கள். பிரிந்திருந்தாலும் உங்கள் அன்பு வார்த்தைகளாலும், ஆசை மொழிகளாலும் என்னுள் ஒரு பிடிப்பை ஏற்படுத்தி வைத்திருந்த என்னை இன்று பயங்கரமாக வந்த மடலினால் பித்துப் பிடித்தவளாக மாற்றிவிட்டீர்கள். பிறரது பேச்சுக்களைக் கேட்டு அன்புக்குரியவர்களது ஆளுமையையே சந்தேகிப்பதும், ஆத்திரத்தினால் அறிவிழந்து வார்த்தைகளைக் கொட்டிவிடுவதும் பின் இரவிரவாக விழித்திருந்து வேதனைப்படுவதும் உங்களுக்கே உரித்தான இயல்பான குணங்கள் தான். மற்றப்படி என் கணவர் மாற்றுக்குறையாத தங்கம். இது நன்றாகவே எனக்குத் தெரியும். 

வேண்டுமாயின் அந்த மாதவனையே உனக்கு மணம் முடித்து வைக்கிறேன் என எழுதியிருந்தீர்கள். ஏனப்பா இப்படி என்னைப் போட்டு வதைக்கிறியள்? மாதவனுடன் நான் அந்நியோன்னியமாகப் பழகுவதும், அவரது காரில் அவருடன் கூடவே செமினாருக்குச்’ செல்வதும் உண்மைதான். அவருடன் கூடிப்போனனே தவிர,கூக் களித்தேனா? நீங்களும் தான் கொழும்பில் வேலை செய்த காலங்களில் எத்தனையோ பெண்களுடன் மனம் விட்டுப் பழகுவதாயும் ஒன்றாகவே ‘ஒப்பீசில் ‘சாப்பிடுவதாயும் சொல்லவில்லையா? அப்போதெல்லாம் ஒரு வார்த்தை சொன்னேனா நான்? உங்கள் தனிப்பட்ட விடயங்களிலெல்லாம் தலையிட்டேனா? இப்போது நீங்கள் புளுங்குகிறீர்கள். தனிப்பட்ட விடயங்களிலெல்லாம் தலையிடுகிறீர்கள். ஏனென்றால் இது ஆண் ஆதிக்க சமுதாயம். உங்கள் கடிதத்தொனி ஆத்தரமூட்டுவதாக இருந்ததே தவிர, ஒரு நல்ல மனப்பாங்குடனோ அல்லது மற்றப் பக்கமாகவும் நின்று சிந்திப்பதாகவோ அமைந்திருக்கவில்லை. 

‘பெண் ஆதிக்கம் ஓங்க வேண்டும் என்பதற்காக என்னை நீ கருவியாகப் பயன்படுத்தியிருக்கிறாய்.’உங்கள் அடுத்த குற்றச்சாட்டு இது.தேவன் இப்படியாக எல்லாம் சிந்தித்து உங்கள் ஆளுமையை நீங்களாகவே ஏன் குறைத்துக் கொள்கிறீர்கள்? நிறைவுகளைக் கொண்டு பெருமைப்படுவதை விடுத்து, எதில் நீங்கள் குறைந்து விட்டதாக இப்படியாக எல்லாம் பிதற்றுகிறீர்களோ எனக்குப் புரியவில்லை. உங்களுக்கே தெரியும் பால்ய பருவத்திலிருந்தே நாம் காதலித்ததும், கல்யாணஞ் செய்வதாக இருந்ததும் பிறகென்ன பெண்ணாதிக்கம் என்று இப்போது புதுக் கோலம் கொள்கிறீர்கள்? என்னால் விளங்கிக் கொள்ள முடியவில்லை. 

குழந்தையைக் கவனிப்பதில்லை என்ற ஒப்பாரி வேறு. உங்கு ஏ.சி. றூமிலிருந்து கொண்டு நீங்கள் எழுதியிருக்கிறீர்கள். இங்கு தம்பியுடன் நான் படும் அவஸ்தை, மரணங்கள் மலிந்த இந்தப் பூமியில் நடைபெறும் அழிவுகள், இடப்பெயர்வுகள் மத்தியிலும் தனியாளாக நின்று அவனை வளர்த்தெடுக்கப் படும் சிரமம் உங்களுக்கு எங்கேயப்பா புரியப் போகிறது? ‘கதற கதற’ என்று எழுதியிருக்கிறீர்களே….. யார் உங்களுக்குக் கோள் சொன்னவன் தூக்கத்தைக் குழந்தை கெடுக்கிறதாமோ? பின்னை என்னப்பா? சவலைக் குழந்தை கதறாமல் கானமா இசைக்கும்? 

கருத்தரங்குகளில் பங்கு கொண்டு நான் தொழிலில் முன்னேறுவதையும், நீங்கள் உங்கிருந்து உழைத்து எம் பொருளாதாரத்தைப் பெருக்க முற்படுவதையும் பார்த்து எவருக்கோ பொறாமை ஏற்பட்டிருக்கிறது. மன எரிச்சலைக் காகிதத்தில் கொட்டி, உங்களுக்கு அவர் அனுப்பி வைக்க நீங்களும் அதைப் படித்து விட்டு மிரண்டு என்னையும் நன்றாக மிரட்டிவிட்டீர்கள். 

இப்போது நம்முள் ஏற்பட்டிருக்கும் இந்தச் சிறிய பிரச்சினைக்குப் பரிகாரம் நிரந்தரமான பிரிவுதான் என்ற உங்களது வாதம் எனக்கு மிகவும் வியப்பாக இருக்கிறது. இப்படியாகக் குடும்பத்தில் ஏற்படுகிற பிரச்சினைகளுக்கு எல்லாம் விவாகரத்துத்தான் முடிவாயிருந்தால் எமது மண்ணில் வாழா வெட்டிகள் தொகைதான் இன்று அதிகரித்திருக்கும். ஆனால், பண்பாடு பாரம்பரியம் கெடாது, குலைந்து போகாது இன்னும் பலர் வாழ்ந்து கொண்டும் இருக்கிறார்கள் என்றால் அதற்குத் தம்பதிகளின் மிகையான புரிந்துணர்வுதான் மூலகாரணமாக இருந்திருக்கிறது. 

மாதவனுடன் எனக்குள்ள தொடர்பில் எந்தவித களங்கமும் இல்லை. சொந்த சகோதரர்களாகத்தான் நாம் பழகி வருகிறோம். சந்திக்கும் போதெல்லாம் எமக்குள்ள சந்தேகங்களைப் போக்கிக் கொள்வோம். கருத்தரங்குளிலும் பங்கு பற்றிக் கொள்கிறோம். இதில் தவறு என்ன அத்தான் இருக்கிறது? நீங்கள் தலையிட்டுக் கொள்ளவும் என்னதான் இருக்கிறது? எங்களது பழக்கம் உங்களது அருமை நண்பருக்கு புளுக்கமாக இருந்திருக்கிறது. அதுதான் உங்களையும் குழப்பி விட்டிருக்கிறார். 

இங்கு நீங்கள் இல்லாது தனிமையில் நான் படும் பாட்டை, அணு அணுவாகச் செத்துக் கொண்டிருப்பதை எங்கே உங்களுக்குச் சொன்னால், அங்கு உங்கள் மனோநிலை எப்படியாகப் பாதிப்படையுமோ என்ற பயத்தில் சகலதையுமே என்னுள் பொசுக்கிய உங்கள் ஆரத்திக்கு நீங்கள் தரும் ஆறுதல்கள் இவைகள் தானா அத்தான்? 

ஒருவாறு ஒரு வருடம் முடிந்துவிட்டது. முடிவில் ஒரு ‘மினி’ யுத்தமும் நடந்து முடிந்து ஓய்ந்திருக்கிறது. இன்னொரு வருடம்…. உங்கள் ஒப்பந்தம் முடிந்ததும் ஓடோடி வாருங்கள். சம்பாதித்தது போதும். சந்தோஷமாக வாழ்வோம். 

தம்பி இப்போது சரியாகவே நடக்க ஆரம்பித்து விட்டான். சமயங்களில் ‘அம்மா,அப்பா’ கூடச் சொல்கிறான். இதையெல்லாம் பார்த்துப் பூரிக்க நீங்களும் என்னோடு இல்லையே? நாங்கள் மூவரும் கூடிக் குலவும் அந்த நன்னாள் எப்போது தேவன்? 

கடித முடிவில் ‘இதுதான் என் இறுதி மடல், இது உறுதி’ என எழுதியிருந்தீர்கள். இப்படியாக எல்லாம் பச்சைப் பிள்ளைத்தனமாகக் கடிதமெழுதி என்னை மேலும் பதறவைக்காது இதற்குப் பதிலை உடனே 
அனுப்பிவையுங்கள். 

மீண்டும் சந்திப்போம். 

ப்ரியங்களுடன் 
என்றும் உங்கள்
ஆரத்தி. 

– 09.08.1987, தினகரன் வாரமஞ்சரி.

– நிலாக்காலம் (சிறுகதைத்தொகுப்பு), முதற் பதிப்பு: 25 ஜூலை 2002, ஆ.இரத்தினவேலோன் வெளியீடு, கொழும்பு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *