விளையாட்டுப் பிள்ளை





(1948ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

கண்ணன் தீராத விளையாட்டுப்பிள்ளை மட்டும் அல்ல. கேலியும் கிண்டலும் செய்து எல்லோருக்கும் அளவற்ற ஆனந்தத்தைக் கிடைக்கச் செய்து முடிவில் எல்லோருக்கும் நல்லவனுகிவிடுகிறான்!
‘அடீ, அக்கா! என்னடி தின்னுண்டிருக்கே?’
‘ஆமாம்; தின்னுண்டிருக்கேன்; என்கையில் எதைப்பார்த்தாலும் உன் கண்ணில் உறுத்திடும்.’
‘என்ன இப்போகேட்டுட்டேன்?’ பிரமாதமா கோச்சுக்கறயே; அந்தத் திருட்டுக் கண்ணன் வந்தானாக்க…அப்போ உன் பாடு தெரியும்’.
‘என்னடி ? அவன் என்னை என்ன செய்ய முடியும் ? அவனைவிட நான் எத்தனை வயது பெரியவ ?’
‘அவன் உன்னைவிடப் பெரிய பெரிய பெண்களை யெல்லாம் ஏச்சுக் கட்டி விடுவான். பூதகியையும் தாடகையையும் பூமியில் உருட்டியவனுக்கு நீ மகாபெரிய மனுஷியாக்கும். அவனுடைய துஷ்டத்தனத்திற்கு நாம் இருவரும் எந்த மூலை? ஓசைப்படாமல் நீ தின்கிற பழத்தில் பாதி கொடுத்து விடு; இல்லா விட்டால் உனக்கு மில்லாது எனக்கு மில்லாது அத்துஷ்டன் பழத்தை பிடுங்கிக் கொள்வான்.’
‘என்ன ஆனாலும் சரி நான். உனக்குக் கொடுக்கமாட்டேன்.’
‘அக்கா! அதோ பார் அதோ பார்; அந்தப் பயல் ஒடி வரான். உன் பழத்திற்கு பிடிச்சுது சனி.’
‘நீ மகா பித்தலாட்டக்காரி; அவன் கையிலும் ஏதோ பழத்தை எடுத்துக் கொண்டு தான் வருகிறான். ‘என் கண்ணன் கருமுகில் வண்ணன்’ நம்முடைய பழத்திற்குக் காத்துண்டா கிடக்கான்?’
மேற்கண்டவாறு இரு சகோதரிகளும் வாத விவாதம் நிகழ்த்திக் கொண்டிருந்த பொழுது, புன் சிரிப்புத் தவழும் இளவதனத்துடன் கையில் ஓர் மாங்கனியைத் தாங்கி கண்ணன், காலில் உள்ள கிண்கிணி கொஞ்ச ஓடி வந்தான். அவன் கை மாங்கனியைக் கண்ட மங்கை அந்தக் கனியில் விருப்பங் கொண்டு தன்னுடைய இளைய சகோதரியிடம் தன்கைப் பழத்தைக் கொடுத்து அவளை அனுப்பி விட்டாள். பாவம்! மூத்தவள் எண்ணத்தை இளையவள் கண்டாளா? அகப்பட்டது லாபமென்று ஓடிவிட்டாள்.
கண்ணனும் மங்கையை நெருங்கினான். தேவர்களுக்கும் எட்டாத கண்ணன் கைக்கனிக்கு கன்னி ஆசை கொண்டாள். கண்ணா! எனக்கு அந்தப் பழத் தைத் தரமாட்டாயா? என்று கையை அகல விரித்து இறைஞ்சி நின்றாள். கண்ணன் மோகன முறுவலுடன் கனியைக் வெகு தாராளமாகக் கொடுத்து விட்டான்.
“நம்முடைய கைக்கனியைக் கொடாது கண்ணன் கனியை பெற்று விட்டோம்” எனப் பெருமையுடன் கனியை உண்ண ஆரப்பித்ததுதான் தாமதம் ‘தடார்’ என அவளுடைய கைப் பழம் தட்டப் பட்டு கீழே விழுந்ததை உணர்ந்தாள்; திடுக்கிட்டுத் திரும்பினாள். விழுந்த பழத்தை கண்ணன் வாயில் வைத்துக் கடித்துக் கொண்டு இடி இடி எனத் தன்நித்திலப்பற்கள் பிரகாசிக்கச் சிரித்தான்.
முதலில் மங்கைக்கு கோபந் தான் வந்தது. கண்ணனின் இளந் தாமரை வதனத்தைக் கண் கண்டதும் தன்னை மறந்து கண்ணன் மயமானாள் கன்னி.
“என் குஞ்சுக் கண்மணி என்னப்பா; என் தங்கமே! அந்தப் பழத்தை எனக்குக் கொடம்மா; அந்த சபரி செய்த பூஜை நான் செய்யவில்லையா? கொடுடா கண்ணே” என ஏக்கமுற்று, வேறு சிந்தையற்றவளாய் வேண்டினாள். ஏன் அவன் எச்சிலைத் தான் உண்ண, அவ்வளவு ஆசை.
“என்ன உளறுகிறாய்? சபரின்னா எச்சல் செய்து கொடுத்தா பழத்தை இப்போ நான் எச்சல் செய்த பழத்தை யின்னா நீ கேட்கறே. இதோ பார் எனக்கு ஒண்ணும் தெரியாதின்னு நினைச்சுண்டையோ? நான் வரும்போது உன் கைப் பழத்தை தங்கையிடம் கொடுத்து விரட்டினது எனக்குத் தெரியாதா? போ, போ; நான் தர மாட்டேன்” என்று கண்ணன் கூறிக்கொண்டே இடுப்பில் கட்டிய சிறிய பட்டாடை நழுவ, சுருண்ட மயிர்க் கத்தை முகத்தில் புரள, தண்டையும் பாத சரமும் ‘கணீர் கணீர்’ என ஒலியிட ஓடினான்.
கன்னியும் விடவில்லை. யாவராலும் தொடர முடியாத கண்ணனைத் தொடர்ந்து ஒடிப் பிடித்து விட்டாள். கண்ணனும் மனமிரங்கி பழத்தை அவள் வாயில் திணித்தான்.
தின்னப் பழங்கொண்டு தருவான் – பாதி தின்கின்ற போதிலே தட்டிப் பறிப்பான்.
என்னப்பன் என்னையன் என்றால் – அதனை எச்சிற்படுத்திக் கடித்துக் கொடுப்பான் [தி]
ஐயையே! அம்மா!! இவனைப் பாரேனம்மா; தலைப் பின்னலைப் பிடித்து ‘கரகரன்னு’ இழுக்கிறாம்மா. போக்கிரி; விடுடா பின்னலை!
‘நான் அப்பொழுதே சொன்னேன் இல்லையா? அந்தத் துடுக்குப் பையனுடன் விளையாடாதே விளையாடாதேன்னுட்டு; இன்னும் நன்றாக இழுடா! வேண்டும் அவளுக்கு.
“பத்தியா? அம்மாகூடச் சொல்லறா” என்று சிரித்துக் கொண்டே கண்ணன் அக்கன்னியின் மயிரை மேலும் பிடித்து இழுத்தான்.
கன்னி மல்லிகா வேர்க்க விறு விறுக்க எப்படியோ அவனிடமிருந்து தன்னுடைய பின்னலை இழுத்துக் கொண்டு ஓடத் துவக்கினாள்.
அவளுடைய புத்தப் புது பட்டாடையில் செம்மண்ணை வாரி இறைத்துவிட்டு கைக்கெட்டாத தூரத்தில் நின்றுகொண்டு கண்ணன் கைகொட்டிச் சிரித்தான்.
மல்லிகாவுக்குக் துயரமும், கோபமும் பொங்கிக் கொண்டு தான் வந்தது. “இப்பொழுது தான் 200 ரூபாய் கொடுத்து வாங்கினேன். அதில் மண்ணை அள்ளிப் போட்டு விட்டானே யம்மா” என்று ஓவென அழுதாள்.
புடவை வீணானதும் அம்மாவுக்கும் கோபந்தான் வந்தது. கண்ணனை விரட்டிக்கொண்டே ஓடிப் பிடிக்கப் போனாள். அவனா அகப்படுவான்? எடுத்தான் ஓட்டம்.
“ஒமரு, குட்டிச் சுவராட்டமா வயதாச்சு. அந்தக் குழந்தையோடு என்ன விளையாட்டு?” எனத் தாயார் தன் பெண்ணையேத் திருப்பிக் கொண்டாள்.
“பின்னலைப் பின்னின்றிழுப்பான்; தலை பின்னே திரும்புமுன்னே
சென்று மறைவான்
வண்ணப் புதுச்சேலை தனிலே – புழுதி
வாரிச் சொரிந்தே வருத்திக்
குலைப்பான்”.
மந்த மாருதத்துடன் கண்ணனின் குழலோசை கலந்து பரவியது. அவ்வினிய அமுத வாரிதி யாகிய கானத்தை கன்னியர் செவியாகிய வாயால் பருகியது தான் தாமதம். வீட்டிற்குள் உள்ள அனைவரும் தெருவில் வந்து ஒன்று கூடினர். கண்ணனின் குழலாகிய கருணாமிர்தத்தைப் பருகிக் கொண்டிருக்கும் பெண்கள் வாய்ப் பேச்சை இழந்தனர். கண்ணனிடத்திலேயே ஒன்றுபட்ட உள்ளத்துடன் ஒலி வந்த வழியே ஒளி பெற்றவரெனச் சென்றார்கள்.
கண்ணனின் குழல் ஒலி அக் கன்னிகைகளை அணுக அணுக மது உண்ட மதுகரமென மயங்கினர் மங்கையர்.
கண்ணனைக் காணவில்லை, கன்னிகள். நீலவானில் வானவில்லைத் தான் கண்டார்கள். ஆமாம் அவர்கள் கண்களுக்கு கண்ணனும் அவன் கைக்குழலும் அவ்வாறுதான் தோற்றமளித்தது.
“ஐயோ கண்ணன் எங்கே காணோமே” என்று கன்னியர் கூறிக்கொண்டே கண்ணனை இன்னும் அருகில் நெருங்கினார்கள். அவர்கள் கண்ணில் தென்பட்டது என்ன? பச்சை வண்ணமுள்ள தடாகத்தில் பல செந்தாமரைகள் மலர்ந்துள்ளதைத்தான் பார்த்தார்கள். அவர்களில் ஒரு பெண் மற்றவர்களை நோக்கி “ஏண்டீ! தாமரை மலர் எப்படி பாடும்?” என்றாள். மற்றொருத்தி “அடி பைத்தியமே! கஞ்ச மலரிலுள்ள சுரும்பு சுருட்டைப் பண்பாடுகிறது” என்றாள்.
மதியிழந்த மங்கையரைக் கண்டான் கண்ணன். வாயிலிருந் புல்லாங் குழலை எடுத்துவிட்டு “கலீ”ரென நகைத்தான்.
நங்கையர் கனவு கண்டு விழித்தவர் போன்று திகைப்புற்றனர். மாயையாகிய இருட் பகையை விலக்கி ஞானச் சூரியன் உதயமாவதைப் போன்று கண்ணனின் தோற்றத்தை மம்மரிலிருந்து நீங்கிய கன்னியர் கண்டு ஆனந்தங் கொண்டனர்.
புல்லாங்குழல் கொண்டு வருவான்; –
அமுது பொங்கித் ததும்பு நற்கீதம்
படிப்பான்
கள்ளால் மயங்குவது போல –
அதைக் கண்மூடி வாய் திறந்தே
கேட்டிருப்போம்.
“அடீ கோமளா! ஸ்யாமளா!! கண்ணன் வந்துட்டான், ஒடியா ஓடியா; அவனோடு விளையாடப் போகலாம்” என்று சுந்தரி மற்றத் தோழிகளை அழைத்தாள்.
கோமளா, “அடீ! அவன் துஷ்டன். அவனுடன் விளையாடப் போனால் நம்மை அழவிட்டு விடுவான்” என்றாள் ஒரு பெண்.
“நீ வராட்ட போ நாங்கள் கண்ணனுடன் விளையாடத்தான் போகிறோம்” என்று சொல்லிக் கொண்டே கண்ணனைத் தொடர்ந்து ஓடினார்கள்.
வெட்ட வெளியில் கண்ணனும் கன்னிகைகளும் வட்டமிட்டுக் கொண்டு விளையாடினார்கள். கை கோத்துக் கொண்டு நடனமாடினார்கள்; வெண்மதி வெள்ளிக் கிண்ணத்தில் பாலைவாரி இறைத்துக் கொண்டிருந்தான்.
கண்ணனும் கன்னியரும் நான்கு மூலைத்தாச்சி விளையாடினார்கள்; “சொளா சொளா காட்டிலே” என்று கூறிக் குதித்தார்கள்.
கண்ணன் கண்ணைக் கட்டும் தலைமையை வகித்திருந்தான். பெண்கள் ஒவ்வொருவராக ஓடிப் பிடித்தனர்.
மற்றவர்கள் ஒளிந்திருக்கும் பொழுது ஒரு பெண்ணின் கண்ணைக் கட்டிவிட்டு கண்ணன் “வாயைத்திற, பழந்தின்னலாம்” என்றான். கண்ணன் கைப்பழத்திற்கு விருப்பங்கொண்டு கன்னி வாயைத் திறந்தாள். அதுமட்டுமல்ல. “தனக்கு மட்டும் கண்ணன் பழம் சொந்தமாகும்” என்ற ஓர் பெருமிதம் கன்னிக்கு.
போக்கிரிக் கண்ணன், அங்காந்த வாயில் ஐந்தாறு கட்டெறும்பைப் பிடித்து போட்டு விட்டு மறைந்தான்.
எறும்பு வாயைப்பிடுங்க “ஐயோ! ஐயோ!!” என்று அலறினாள் கன்னி. ஒளிந்திருந்த மற்ற கன்னியர் ஓடி வந்தார்கள்; அவள் வாயிலிருந்த கட்டெறும்புகளை ஒருத்தி எடுத்தாள். மற்றவள் அவளுடைய கண்ணின் கட்டை அவிழ்த்தாள். நடந்த விஷயத்தை வினவினார்கள். ‘கோமளீ! எங்களை விட்டு விட்டு பழத்தை நீ மட்டும் தின்கலா மென்று நினைத்தாயோல்லியோ அதுதான் அந்தக் கண்ணன் அப்படிச் செய்தான்” என்றாள் சுந்தரி.
“சீ பாவம் ! அவள் நோயுடன் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் பொழுது இப்பொழுதுதானா கேலி செய்வது?” எனக் கோமளிக்குப் பரிந்தாள் ஒரு மாது.
அங்காந்திருக்கும்
வாய்தனிலே – கண்ணன்
ஆறெழு கட்டெறும்
பைப்போட்டு விடுவான்;
எங்காகிலும் பார்த்த
துண்டோ?–கண்ணன் எங்களைச்
செய்கின்ற
வேடிக்கை யொன்றோ!
“அடீ சுந்தரி! அவனை சும்மா விடக்கூடாது. அவன் தாயார் எசோதாவிடம் போய் அவன் செய்த துஷ்டத்தனத்தை எல்லாம் சொல்லிவிட வேண்டும்” என்று அழைத்தாள் கோமளி. அவர்களுடன் பின்னல் இழுக்கப் பட்ட பெண்ணும் சேர்ந்து கொண்டாள்.
தற்காலத்தில் மந்திரிகளிடம் தங்கள் குறைகளைத் தெரிவிக்க (டெபுடேஷன்) போவது போல எசோதையிடம் கண்ணனால் ஏற்படுகின்ற தொந்தரவைத் தெரிவிக்க எல்லோரும் சென்றனர்.
குழந்தை கண்ணன் மிகவும் சாதுக்குழந்தையைப் போன்று தன் அத்தை வீட்டுக்குப்போய் அத்தைக்கு விழுந்து விழுந்து நமஸ்கரித்தான். “பாவம்! குழந்தை; போதுண்டா” என்று ஆனந்தக்கண்ணீர் ததும்ப கண்ணனை அணைத்துக் கொண்டாள். வாய்நிறைய வெண்ணையை ஊட்டினாள். கைநிறைய சீடை, முறுக்கு முதலிய பக்ஷணங்களை அளித்தாள். கண்ணன் வாயில் வெண்ணெயை ஊட்டினாள். காய் நிறைய சீடை, முறுக்கு முதலிய பக்ஷணங்களை அளித்தாள். கண்ணன் வாயில் வெண்ணெயை ஊட்டியதை மறந்து அன்புள்ள அத்தை அவன் முகத்தை தன் முகத்தோடு சேர்த்து முத்தமிட்டாள். அவள் கன்னமெல்லாம் வெண்ணெயாய் விட்டது. “ஐயையோ! அத்தை” என்று சிரித்தான் கண்ணன். அத்தை வெட்கப் பட்டு வெண்ணையைத் துடைக்க உட்சென்றாள்.
அப்பொழுது கோமளியும் அவளுடைய தோழிகளும் கண்ணன் அத்தை வீட்டில் இருப்பதை அறிந்து அங்கு வந்தனர். கண்ணன் இதை எப்படியோ அறிந்து கோமளியின் பின்பக்கமாக வந்து அவள் வாயில் வெண்ணெயை முதுகுபுறமாக நின்று கொண்டு தடவிவிட்டு சிட்டாகப் பறந்து கட்டிலில் படுத்து கண்ணை மூடிக் கொண்டான்.
அத்தை கண்ணனைத் தேடிக் கொண்டு வந்தாள். குழந்தை கட்டிலில் படுத்து தூங்குவதைப் பார்த்து தடவிக் கொடுத்துவிட்டு வாசலில் வந்தாள்.
“கோமளி! ஏண்டிம்மா இங்கே நிற்கிறாய். உள்ளே வா. இதென்ன வாயில் வெண்ணெய்?” என்று கேட்டாள் அத்தை.
கோமளி, கண்ணன் கட்டெறும்பை வாயில் போட்டதையும் வாயில் வெண்ணெயைத் தடவியதையும் சொல்லி அழுதாள்.
“நன்னாதானிருக்கு. கிடந்து அலைகிறீர்களோ? தங்க மாட்டமா குழந்தை இப்பத்தான் என்னை நமங்காரம் பண்ணிவிட்டுத் தூங்குகிறான். என் சாதுத்தங்கத்தை என்னடி வாயில் வந்த வாறெல்லாம் கூறுகிறீர்கள். எங்கேயோ வெண்ணெயைத் திருடித் தின்று இருக்கிறாய்; வெண்ணெய் வாசனைக்கு கட்டெறும்பு வந்து கடித்திருக்கிறது. போங்கடி வேலையற்றவளே,” என்று கூறிக்கொண்டே அத்தை உள்ளே நுழைந்து விட்டாள்.
“ஏழை சொல் அம்பலம் ஏற்குமா? எசோதையிடமே செல்வோம். அத்தைகளே அப்படித் தான் மருமான் மருமாள் குற்றமே அவர்களுக்குத் தெரியாது” என்று சொல்லிக் கொண்டு எசோதையிடம் சென்றனர்.
அம்மாயக் கண்ணன் எங்கும் நிறைந்தவனன்றோ? எசோதை வீட்டு உட்புறச் சுவரில் ஒன்றும் தெரியாத அப்பாவி பிள்ளை போல் பசுமாடு வரைந்து கொண்டிருந்தான். எசோதை வாசல் திண்ணையில் உட்கார்ந்திருந்தாள்.
கண்ணனால் அவதியுற்ற நங்கையர் எசோதையிடம் வந்து கண்ணன் தங்களுக்கிழைத்த இன்னல்களைக் கூறினர்.
ஒரு பெண் “நான் தின்று கொண்டிருந்த பழத்தை கண்ணன் தட்டிப் பறித்துக் கொண்டான்” என்றாள்.
இரண்டாமவள் “என் பின்னலைப் பிடித்திழுத்து செம்மண்ணை வாரிப் புடவையில் இறைத்தான்” என்றாள்.
மூன்றாமவள் “கண்னை மூடி கட்டெறும்பை வாயில் போட்டதுமல்லாமல் வெண்ணெயையும் தடவிவிட்டு ஓடிவிட்டான்” என்றாள்.
“எல்லாம் சரிதான் இப்பொழுது அவன் எங்கிருக்கிறான்?” என்றாள் எசோதை.
ஒருத்தி “அவன் அத்தை வீட்டில் சாதுபோல படுத்துத் தூங்குகிறான்” என்றாள்.
அதற்குள் நந்தகோபர், வெளியில் வந்து “குழந்தை உட் சுவற்றில் பசு பொம்மை போட்டுக் கொண்டிருக்கிறான் அந்த பரமசாது. குழந்தைபேரில் இவர்கள் ஏன் இப்படி கோள் சொல்லுகிறார்கள்” என்று சிடுசிடுத்தார்.
அத்தையும் வந்தாள். “கண்ணன் கட்டிலில் தூங்குகிறான். அவர்கள் சொல்வது உண்மை தான்” என்றாள். “உள்ளே போய்ப்பார்” என்றார் நந்தகோபர்.
பசுவனையும் கண்ணனையும் கண்டதும் எல்லோரும் பரவசமாயினர். ஒரு கணம் அவன் எங்கும் நிறைந்த வனன்றோ ? என்று கூறி ஆனந்தக்கண்ணீர் உகுத்தனர்.
“அம்மைக்கு நல்லவன்,
கண்டீர்;- மூளி
அத்தைக்கு நல்லவன்
தந்தைக்கு மஃதே;
எம்மைத்துயர் செய்யும்
பெரியோர்-வீட்டில்
யாவர்க்கும் நல்லவன்
போல நடப்பான்
தீராத விளையாட்டுப்
பிள்ளை;…கண்ணன்
தெருவிலே பெண்களுக்
கோயாத தொல்லை”
(தருவான்)
என்று கூறிக்கொண்டே அவனுடைய குணங்களைப் பாடிக் கொண்டு பெண்கள் தம்முடைய வீடு அடைந்தனர்.
– மங்கை, Vol_2_no_10, ஜூலை_1948