வி(ல)ளக்கு
பேரமைதியை விழுங்கிய இரவு வீதி….மத்திய தமிழகத்தின் மாநகர் ஒன்றின் வளரும் நகரமது.
அரசாங்க தொகுப்பு வீடுகளுக்கிடையில் குடிசை வீடுகளும்,ஓட்டு வீடுகளும் நிறைந்த சூசையப்பர் தெருவில் அரவங்கள் ஏதுமில்லை. பணி முடித்து வந்த கணவருக்கு அவசர அவசரமாக குழம்பு தாளிக்கிறாளொருத்தி…
மாதா கோயில் மணி எட்டு முறை அடித்து…
‘பிள்ளைகளே,வந்து எனக்குச் செவி கொடுங்கள் கர்த்தருக்குப் பயப்படுதலை உங்களுக்கு போதிப்பேன். (சங்கீதம் 34:11)என்ற வசனத்தோடு கரண்ட் போனது.
லாந்தரின் வெளிச்சத்தில் தெரிவது இம்மானுவேலின் முகம்.மென்மையானவர்,இரக்கமுள்ளவர்.
ப்ரின்ஸி…ப்ரின்ஸியென லாந்தரோடு வெளியில் வந்தார் இம்மானுவேல்..வீட்டிலிருந்து இருபது வீடு தள்ளிதான் ப்ரின்ஸி டியூஷன் படிக்கும் வீடு.
மெசியா…
கொஞ்சம் வசதியானவள்,அரசாங்க பள்ளி ஆசிரியை…கணவருக்கு இரயில்வேயில் பணி. பள்ளி நேரம் போக மீதி நேரத்தை டியூஷனில் கழிப்பாள்.பிள்ளைபேரு இல்லாத குறையை ப்ரின்ஸியிடமும் மற்ற பிள்ளைகளிடமும் போக்கிக்கொள்வாள்.கட்டணங்கள் ஏதுமில்லை டியூஷனுக்கு.
காதில் விழாத முணு முணுப்புகளை கடந்து மெதுவாய் நடந்து சென்றார் இம்மானுவேல்.
ச்சே…இந்த கெரண்டு ஏந்தான் இப்படி போயி தொலையிதோ?பில்லு மட்டும் மாசா மாசம் எகிறுது.கட்டலனா புடுங்கி விட வந்திட்றாங்க கெரண்ட ஒழுங்கா விட மாட்றாங்க….ப்ளாஸ்டிக் விசிறியால் கவ்…கவ்வென விசிறிக்கொண்டே….புலம்பினாள் ஜெரால்டு.
காய்ந்த சருகொன்றில் கால் வைத்து பதறி… மெல்ல நகர்ந்து நடந்தார் இம்மானுவேல்.
உங்ககிட்ட எத்தன தடவ சொல்றது கேக்கமாட்டீங்களா? புள்ளக்கி பள்ளிகொடம் போட்டுட்டு போவ நல்ல சட்ட துணி மணி இல்ல…கால்ல போட செருப்பு இல்ல இப்படி குடிச்சி அழிக்கிறீங்களே….ஞாயித்திக்கெழம ஆனா சர்ச்சிக்கி வெள்ள பொடவ கட்டிட்டு போவன்..அத காலத்துக்கும் கட்டிட்டு கெடடினு குடிக்கிறீங்க…
விசும்பிக்கொண்டே…பிள்ளைகளை தட்டி…தட்டி தூங்க வைத்துக்கொண்டிருந்தாள் சகாயமேரி.
விரக்தியாய் உதட்டை பிதுக்கி ஏதோவொரு வசனத்தை முணு முணுத்து நகர்ந்தார் இம்மானுவேல்.
செல்லக்குட்டில்ல…எந் தங்கம்ல…சாப்புட்றா செல்லம்.
எனக்கு நாணாம்…எனக்கு நாணாம்…போ..
இப்போ நீ சாப்புட்ல சாந்தி அக்கா புடிச்சிக்கும்.
சட்டென இருபுறமும் திரும்பி…பதட்டத்துடன் நகர்ந்து ப்ரின்ஸி…ப்ரின்ஸியென கூப்பிட்டபடி நடந்தார் இம்மானுவேல்.
புள்ளைங்களா…கரண்ட் வரும்னு பாத்தேன் வரல…ஒரு பத்து நிமிசம் பாத்துட்டு வீட்டுக்கு போகலாமா?
சரிங்க டீச்சரென கத்தினார்கள் பிள்ளைகள்.
ப்ரின்ஸியை அழைக்க அவங்க அப்பா வருவார்.நீங்க பாத்து போங்க…
என்னங்க…என்னங்க
பாத்ரூம் போய்ட்டு வர்றேன்…ப்ரின்ஸிய பாத்துக்கோங்க…
மெசியாவுக்கு,
இது இரண்டாம் நாள்
நாப்கின் மாற்றிவிட்டு வெளியல் வந்தாள்.
மூச்சுத்திணறும் சத்தம்
மெழுகுவர்த்தி அணைந்திருந்தது
ப்ரின்ஸி….ப்ரின்ஸியென வாசல் வந்துவிட்டார் லாந்தரை உயர்த்தி…உயர்த்தி….
என்னங்க…என்னங்கவென பதறினாள் மெசியா..
தீப்பெட்டியை தேடி எடுத்து ஏற்றினாள் மெழுகுவர்த்தியை…
அணைந்துகொண்டிருந்தாள் ப்ரின்ஸி…
அடப்பாவி மனுசா…விட்றா….விட்றா…
வெறியின் உச்சத்தில் காது கேளாதவனாய் புணர்ந்துகொண்டிருந்தான்… ப்ரின்ஸியை….
பரிதாபமாய்….மூச்சுத்திணறிக்கொண்டே மெசியாவை பார்க்கிறாள் ப்ரின்ஸி….
ஐந்தடி மரச்சிலுவையை எடுத்து பின் மண்டையில் ஓங்கி இரண்டு அடி அடித்தாள் மெசியா…
ரத்தம் தோய்ந்த சிலுவையை கையில் பிடித்தபடி ப்ரின்ஸியை கட்டி அழுகிறாள்.
வீட்டுக்குள் வந்துவிட்டார் இம்மானுவேல்.
அய்யா….அய்யா…
டீச்சர் ஏன் அழுவுறீங்க…
ப்ரின்ஸி….என தழு தழுத்தாள்.
என்னாச்சு….என்னாச்சு என் ப்ரின்ஸிக்கு….
செதச்சிட்டான் அய்யா…செதச்சிட்டான்…
லாந்தரை சட்டென கீழே போட்டுவிட்டு தரையை தடவுகிறார்…
ப்ரின்ஸி…ப்ரின்ஸி…
பிஞ்சு கால்கள் தடவி கதறுகிறார்.
இரத்த வாடை நுகர்ந்து பரிதவிக்கிறார்.
அடப்பாவி,
உன் மகள நீயே செதச்சிட்டியே…..
மெசியா…உறைந்து நின்றாள்.
சாந்தி… சாந்தியம்மா..நீ இருக்குற எடத்துக்கே ப்ரின்ஸிய அழைச்சுக்கிட்டியா?
தலை தூக்கி அதிர்ந்து விழித்து பார்த்தார் மெசியாவின் கணவர்….
இப்போது மரச்சிலுவை அவர் நெஞ்சில் இறங்கி குத்துயர நின்றது.
தட்டுத்தடுமாறி….மாதா சிலையை பிடித்து கதறி அழுகிறார் இம்மானுவேல்.
என்ன குருடா படச்சி….ப்ரின்ஸிய எனக்கு கண்ணா படச்ச.
இப்போ,
என் நிஜ கண்ணை பறித்துவிட்டு என்னை நிரந்தர குருடாக்கிட்டியே.!!
கரண்ட் வந்துவிட்டது
மாதா பிரகாசமாய் தெரிகிறாள்.
மனித வாழ்வுதான் இருளாய்.
-(கரு நன்றி:சரவண வடிவேல்)