வியாபாரம்
கதையாசிரியர்: துருவன். பரராஜசிங்கம்
தின/வார இதழ்: ஈழநாடு
கதைத்தொகுப்பு:
சமூக நீதி
கதைப்பதிவு: January 4, 2026
பார்வையிட்டோர்: 535
(1963ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
பேப்பர் விற்கிற ஆறுமுகத்துக்கு அன்றைக்கு வியாபாரம் உச்ச நிலை அடைந்திருந்தது. யாழ்ப்பாணம் பஸ் நிலையத்தைச் சுற்றி இயந்திரக் கால்களோடு அவன் சுழன்றான். யாரையோ காதலித்து, ஏமாந்து தற்கொலை செய்து கொண்ட பள்ளிக்கூட மாணவியைப் பற்றிய செய்தியை அவன் வாய் திரும்பத் திரும்பக் கூவியபடியே இருந்தது. தினசரி பத்திரிகை முகப்புச் செய்தியைச் சொல்லிப் பத்திரிகை விற்பது அவனது வியாபார ‘தந்திரம்!
“தம்பி இஞ்சை ஒண்டுதா…..” பதினைந்து சதம் நீளப் பத்திரிகை கைமாறியது.
“எனக்கும் ஒண்டு”
“எட, பிறக்கிறசியாரின்ரை பெட்டை! ஏன் இப்பிடிச் செய்தவள்….. இஞ்சா ஒண்டு”
எல்லாப் பக்கமும் ஓடி ஓடி வியாபாரம் செய்தான். சில்லறையாகக் காசு வைத்திருக்காத வர்களுக்கு அன்றைக்கு அவன் ‘பேப்பர்’ விற்கவில்ைைல. மற்றைய நாட்களைப்போல் எதிரிலிருக்கும் கடைகளில் மாற்றித் தனக்குரிய காசை எடுத்துக்கொண்டு மிச்சத்தைக் கொடுக்க அவனுக்கு நேரமில்லை. யாரோ ஒருத்தி செத்துப்போன மர்மத்தை அறியத் துடிக்கும் மக்களின் பலவீன வேகத்தை அவன் காசாக்கிக் கொண்டிருந்தான்.
பேசாமல் பத்திரிகைக் கட்டோடு அவன் ஒரு இடத்தில் நிற்கவே எல்லாரும் செய்தியைத் தேடி ஓடிவந்தாலும், பழக்கத்தால் அவன் வாய் ஓயாமல் கத்தியபடியே இருந்தது. பெரிய பெரிய உலக விஷயங்களையெல்லாம் அவன் கத்து கத்தென்று கத்தித்தான் காத்திருக் கிறான். ஆனால் அன்று…….?
ஒன்பது மணிக்குள்ளேயே கொண்டு வந்த அத்தனை பேப்பரும் விற்பனையாகி விட்டதால், பஸ்நிலைய வாங்கில் காலை ஒடுக்கி வைத்து இருந்தபடியே காக்கி கால்சட்டை பாக்கட்டுக்குள் கையை விட்டு சில்லறையை பொத்தி அள்ளி வாங்கிலே போட்டு எண்ணினான். ஒவ்வொரு குற்றியும் படிகளாகி அவனை மேலே உயர்த்தின.
‘பதினாறு ரூவாய் அறுபது சதம்…….. சூ’ சத்தியாக்கிரக நேரத்திலையும் எனக்கு இவ்வளவு யாவாரமில்லை. அப்ப, பேப்பர் காசைக் கழிச்சால் எனக்கு நாலு ரூவாய்க்குக் கிட்டத்தட்ட ஆதாயம் என்ரை கடவுளே! ரெண்டு மணித்தியால யாவாரம் ஒவ்வொரு நாளும் இப்பிடியெண்டால்…….
தண்ணீர் வாளிக்குள் கையை விட்டு சுழற்றியது போல் அவன் இதயத்தைச் சுற்றி மகிழ்ச்சி சுழித்துச் சுழித்து ஓடியது.
அவ்வளவு காசையும் பாக்கட்டுக்குள் போட்டுக்கொண்டு வீட்டை நோக்கி ஓடினாள். ஆரிய குளத்தடிச் சந்தியால் திரும்பி வீட்டுக்குப் போகும் போது ‘கலீர் கலீர்’ என்று சில்லறை குலுங்குவதைக் கண்டு மற்றவர்கள் அவனைப் பார்க்க, நெஞ்சு தானாகவே நிமிர்ந்து கொள்கிறது.
நிமிர்வினால் ஏற்பட்ட பார்வை நீட்டத்தில் துாரத்திலே அவனுடையதாய் வந்து கொண்டிருப்பது ஆறுமுகத்தின் கண்களில் பட்டது. தாயைக் கண்டவுடன் அவனையறியாமல் ஏற்பட்ட சிரிப்பை மறைத்துக்கொண்டு மற்றைய நாட்களைப்போல் முகத்தை வாட்டமாக வைத்துக்கொண்டான்.
“எங்கையெணை மாட்டுத் தாள்க் கடுதாசியோடை வெளிக்கிட்டனி? மீன் வாங்கவே? இண்டைக்கு நீ மீன் வாங்க வேண்டாம். பேசாமல் போ. நான் இண்டைக்குச் சின்ன கடையிலை ஆமை இறைச்சி வாங்கியாறன்”
“ஏன்ரா…ஏன்?”
“சொன்னாப் போவன் கருகப்பிலை, தேசிக்காய் எல்லாம் வாங்கிக் கொண்டு இப்ப வாறன்”.
உழைக்கிற அதிகாரம் அவன் பேச்சிலே எப்போதும் தொனிக்கும். தாய் பேசாமல் திரும்பி விட்டாள். ஆரிய குளத்தடி நாகவிகாரைக்குப் பக்கத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டினால் அவளது கணவன் இறந்து போனபின், ப்ேபர் வியாபாரம் செய்து குடும்பத்தைக் கொண்டு நடத்தும் ஒரே மகன் ஆறுமுகத்தைப் பற்றி அவளுக்கு அளவில்லாத பெருமை. அவனுக்கும் ‘அம்மா’ என்றால் உயிர், இருந்தாலும் இடைக்கிடை அவன் அதிகாரம் செய்வதை அவள் பொருட்படுத்துவதில்லை.
ஆறுமுகத்தின் குரல் பஸ் நிலையமெங்கும் இடைவிடாது ஒலித்தது! ஒவ்வொரு பஸ் வந்து நிற்கும் போதும், ஓடிப்போய் இறங்குபவர்களுக்கு முன்னால் நின்று அன்றைய பத்திரிகையின் முக்கிய செய்தியை சொல்லிக் கத்தினான்.
அவர்களுக்கு ஏதேதோ அவசரம்.
யாராவது ஒருவர் இரண்டு பேர் நாளாந்தம் பேப்பர் வாங்ககிற வழக்கத்தில் வாங்கினார்கள்.
ஆறுமுகம் உலகத்தின் முக்கிய பிரச்சினை பற்றிய அன்றைய முகப்புச் செய்தியை அடிவயிற்றிலிருந்து ஒலி எடுத்துக்’ கத்தினான்.
உலகத்தைப் பற்றி யாருக்குக் கவலை?
ஆறுமுத்துக்கு முதல் நாளைய நினைவு முன்னுக்கு இடித்துக்கொண்டு ஓடிவந்தது.
‘ஆரோ ஒரு பள்ளிக்குடப் பெட்டை செத்துப் போனதைச் சொல்ல எல்லாரும் விழுந்தடிச்சு பேப்பர் வாங்கிச்சினமே? இண்டைக்கு என்ன வந்தது? சாவுதான் மனிசருக்கு முக்கியமான புதினமா? அப்பிடியெண்டால் எந்த நாளும் ஊருக்குள்ளை ஆரெண்டாலும் செத்துக்கொண்டிருந்தால் நல்ல யாவாரம் செய்யலாம் போலையிருக்கு.
எங்கிருந்தோ வந்து திரும்பின பஸ்ஸை நோக்கி பத்திரிகைக் கட்டைத் தலைக்குமேல் தூக்கிப்பிடித்துக் கொண்டு அடித்து விழுந்து கொண்டு இறங்குவோர் யாருமே அவனது கூச்சலுக்குச் செவிசாய்க்கவில்லை. மோத இடமில்லாமல் வெறும் காற்றோடு உலகப்புதினம் பற்றிய கூச்சல் சங்கமமாகி விடுகிறது.
உச்சி வேளை வரை ஓடி ஓடி வியாபாரம் செய்தும் முதல் நாளைய வியாபாரத்தில் அரைவாசி கூட அவனுக்கு நடக்கவில்லை. இரண்டு மணியளவில் மிஞ்சிய ப்ேபரைக் கொண்டு போய் வாடிக்கைக் கடையிலே கொடுத்துவிட்டு ‘கமிஷன்’ காசைக் காக்கிக் கால்சட்டை பாக்கட்டுக்குள் போட்டுக் கொண்டு ஆறுதலாக வீட்டுக்குப் போனான்.
காசும் உள்ளமும் கிலுகிலுக்கவில்லை.
முதல்நாளைய இறைச்சிக் கறியோடு சோற்றைக் குழைத்துச் சாப்பிடும் போதுகூட ஆறுமுகத்துக்கு அந்தச் செத்துப் போன பெட்டையின் நினைவுதான்.
‘அவளைப் போல இண்டைக்கும் ஆரெண்டாலும் செத்துப் போனால்…… நாளைக்கு நல்ல யாவாரம் செய்யலாம். இல்லாட்டி இரவிலையும் போய் பாட்டுப் புத்தகம் விற்கவேணும். பாட்டுப் பத்தகம் வித்து நாளைக்கு காசுகாட்டா விட்டால் கடைக்காரன் மிஞ்சுகிற பேப்பரை திருப்பி எடுக்க மாட்டான்.
துருவுபலகையில் இருந்த படியே மகனின் முகத்தை கூர்ந்து பார்த்துக்கொண்டிருந்தாள். அந்தப் பிஞ்சு முகத்திலே வெத்திலை நரம்புகளாக கிளை விட்டிருக்கும் சிந்தனை ரேகைகள் தெளிவாகத் தெரிந்தன: வாடல் வெற்றிலையாகச் சுருண்டு கிடக்கும் மகனது முகத்தைப் பார்க்க அவளுள்ளம் குமைந்தது.
சாப்பிட்டு முடிந்தவுடன் காக்கிக் காற்சட்டை பாக்கட்டுக்குள் இருந்த கொஞ்சக் ‘கமிஷன்’ காசை எடுத்துத் தாயிடம் கொடுத்துவிட்டு உடனே வெளியே கிளம்பிவிட்டான்.
அடுத்த நாள் தீபாவளி.
யாருடைய சாவிலோ எழுந்த கொண்டாட்டம்!
தாய்க்கு புதுச்சேலை வாங்க காசு கொண்டு வருகிறேன்’ என்று காலையில் மகிழ்ச்சியோடு சொல்லிவிட்டு வியாபாரத்துக்குப் போனவன் வரும்போது… அதைப் பற்றித்தாய் கவலைப்படவில்லை.
வெம்மை அவிந்து போய்க்கொண்டு இருந்தது.
ஆறுமுகம் பாட்டுப் புத்தகக் கட்டுகளோடு மீண்டும் தனது தொழில் மேடையில் ஏறிவிட்டான்.
“ஆலயமணி……. சுமைதாங்கி.”
அவன் குரல் உறுதியாக ஒலித்தது. இயந்திர இயக்கம் ஏதோ வேகத்தோடு சுழன்று சுழன்று வியாபாரம் செய்கிறான். திரும்பத் திரும்பக் கத்தி வரண்டு போகும் தொண்டையை எச்சிற் கூட்டி நனைக்கக்கூட ஓய்வில்லாமல் வாய் அலறுகிறது.
‘நாளையிண்டைக்குத் தீபாவளி. அம்மாக்கு என்ரை காசிலை ஒரு லங்கா சீலை வாங்கிக் குடுக்க வேணும். நானும் ஒரு கறுப்புக் காற்சட்டை தைச்சுக் கொண்டு இந்தப் பீத்தல் காக்கிச் சனியனுக்குப் பெஞ்சன் குடுக்க வேணும். தீபாவளிக்கு நல்ல படமெல்லாம் வருகுது. பார்க்கவேணும். நினைவு வேகத்தை மறிக்கவில்லை.
“பாசம்….. நெஞ்சில் ஓர் ஆலயம்.”
தீபாவளிக்காக புது உடுப்புகளும் சாமான்களும் வாங்கிக் கொண்டு வருபவர்களுக்கு முன்னால் ஓடி ஓடி போய் கத்தினான். அவர்களுக்கு பாடத் தெரியுமோ இல்லையோ பத்துப் பத்துச்சதம் கொடுத்து ஒன்றிரண்டு புத்தகங்கள் வாங்கிக் கொள்கிறார்கள்.
அவளது பாக்கெட்டில் கனம் ஏறியது. திருவிழாக் காலங்களில் கோயில்களில் கடைசியாகக் கொளுத்தப்படும் ‘வாணக் கோட்டையைப் போல் கடைசி பஸ்கள் நாலாபக்கத்தாலும் கிளம்பிக் கொண்டிருந்தன. ஆறுமுகத்தின் நம்பிக்கையின் கடைசி அணுவும் அந்த பஸ் சில்லுகளோடு ஒட்டிக் கொண்டு தானிருந்தது.
அதிகாலையிலேயே அவன் குரல் வழக்கம் போல் கேட்கத்தொடங்கிவிட்டது. அதிகாலை பஸ்களிலே வந்து குவிந்த சனமெல்லாம் புடவைக் கடையை நோக்கிப் படையெடுத்ததே தவிர அவனுடைய சத்தத்துக்குச் செவி கொடுக்கவில்லை. ஒன்றிரண்டு பேர் கொஞ்சம் செவியைச் சரித்தனர்.
மீன்குஞ்சு மாதிரி ஆறுமுகத்தின் மன விளிம்புக்கு ‘அந்த’ நினைவு அடிக்கடி நீந்தி வந்து மூச்சுவிட்டது.
‘சீ…. அந்தப் பெட்டையை மாதிரி நேற்றும் ஆரும் இஞ்சினேக்கை செத்திருந்தால் இண்டைக்கு என்ன கலாதியாய் யாவாரம் செய்யலாம்? பத்து மணிக்குள்ளை காற்சட்டையும் எடுத்துக்கொண்டு, இறைச்சியும் வாங்கிக்கொண்டு வீட்டை போடுவனே!’
நினைவுக்கு மேலாகப் பழகிப் போன பாட்டு.
கூச்சல்
பெருமூச்சு
அம்மாட்டை எட்டு ரூவாய் குடுத்திருக்கிறன். இண்டைக்கு எப்பிடியெண்டாலும் சீலை எடுத்துப்போடுவா. எனக்காக ஒரு வேளை எடுக்காமல் விட்டுவிடுவாவோ? சீ… சீ….. தலையிலை அடிச்சல்லே சத்தியம் பண்ணிச் சொல்லிப் போட்டு வந்தனான்.
புதிய பஸ் அங்குள்ள தியேட்டரடியில் திரும்புவதைக் கண்டு உடனேயே அதை நோக்கி ஓடினேன். பழையபடி இயந்திர முழக்கம். இறங்குபவர்கள் மனிதனைத்தான் மதிக்க வேண்டாம், செய்தியையாவது மதிக்கக்கூடாதா? ஆறுமுகத்துக்கு முகம் கூம்பிவிடுகிறது.
வெய்யில் உச்சியைத் துளைத்துக் கொண்டு போய் பாதத்துக்கூடாக நிலத்தில் அவனை ஒட்ட வைத்தது. செய்தியை விட சத்தத்தை முதலாக்கி காற்சட்டைக்கும் இறைச்சிக்கும் வேண்டியளவு காசு சேர்த்துவிட்டான்.
இனி?
வாங்க வேண்டியவற்றை வாங்கிக்கொண்டு வீட்டுக்குப் போகவேண்டியதுதான். நாளைக்க விடிந்தால் தீபாவளி புடவைக் கடைப்பக்கம் ஓடியவர்களெல்லாம் சினிமா தியேட்டர் பக்கம் விழுந்தடித்து ஓடினார்கள்.
ஆறுமுகத்துக்கு ஒன்றும் விளங்கவில்லை. அவனும் அவர்களோடு சேர்ந்து ஓடினான். இடையில் ஒருவர் விஷயத்தை மற்றவர்களுக்கு பற்ற வைக்கிறார்.
“ஆரையோ காறடிச்சுப் போட்டுது.”
மறுநாளைய வியாபாரத்துக்கு நல்லதொரு செய்தி முதல் கிடைத்துவிட்டதாக ஆனந்தம் ஆறுமுகத்துக்கு கார்கள் இடதுபுறம் திரும்புவதற்காக கட்டப்பட்ட முக்கோண வடிவசீமெந்து மேடையைச் சுற்றி சாவைக் காண ஆசைப்படும் மக்கள் கூட்டம் மறுநாள் எல்லோரும் பத்திரிகையிலே ஆவலோடு பார்க்கப்போகிற செய்தியை, நேரில் கண்டமாதிரிச் சொல்லிப் பத்திரிகை விற்கலாம். என்ற ஆவலோடு கும்பலைத் துளைத்துக்கொண்டு உள்ளே நுழைந்த ஆறுமகம்…….
பச்சை லங்கா சேலை சிவப்பாய் மாறிப்போய் பக்கத்திலே கிடக்கும் கோலத்தோடு…. சாவைச் சொல்லி வியாபாரம் செய்ய மறுநாள் அவன் வரவில்லை.
துருவன். பரராஜசிங்கம்
இளம்வயதிலேயே அமரராகிவிட்ட துருவன் பரராசிங்கம் சொற்ப கதைகளே எழுதியுள்ளபோதிலும் மனதைக் கவரக் கூடியனவாக அவையுள்ளன. ஈழநாட்டு இதழ்களில் மரபு. வியாபாரம்’ என்றிரு சிறுகதைகளை எழுதியுள்ளார். ஈழத்தின் நல்ல சிறுகதைகளின் வரிசையில் சேர்க்கப்பட வேண்டிய சிறுகதைகளில் ஒன்று ‘வியாபாரம்” ஆகும். பரராஜசிங்கம் சிறுகதைகள் அண்மையில் வெளிவரவுள்ளன.
– 20.01.1963, ஈழநாடு.
– ஈழநாடு சிறுகதைகள் (தொகுதி-1), முதல் பதிப்பு: 2008, பண்பாட்டலுவல்கள் திணைக்களம், வட மாகாணம், திருகோணமலை.