விநாயகர் உகந்தது

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: ஈழநாடு
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: January 4, 2026
பார்வையிட்டோர்: 706 
 
 

(1965ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

சதை போட்டு மதர்த்த சரீரமுடைய ஒருவன் ‘கொலு கொலுக் கிழவனாகித் தசையும் தோலும் முறுக்கிழந்து மடிப்பு விழுந்து காணப்படுவது போல் அந்தக் கிழட்டுப் புளி நின்றது. நிலத்திற்குள் சுழியோடும் அதன் முரட்டு வேர்கள் அடிமரத்தில் நிலத்திற்கு மேலே மிதந்து தெரிவதால், அவை அதற்கு பாதங்கள் அமைத்தாற் போல் தோன்றின. கிளைத்துப் பிரிந்து போகும் இரு பெரும் வேர்களின் நடுவே ஒரு கல். அக்கல் மீது குப்பையையும், குருவிகளின் எச்சங்களையும், சுமந்து கொண்டு விநாயகப் பெருமானின் பழைமையான சிலை ஒன்று இருக்கிறது. ஐங்கரனான அவரின் ஒரு கரம் உடைந்து போய் விட்டது. கவனிப்பாரற்று இருந்த அக்கணபதிக்குப் புளியமரம் ஒதுக்கிடம் கொடுப்பதுடன் தனது பழுத்த இலைகளையும், பூக்களையும் ஓயாது அவர் மேல் சொரிந்து தன்னைப் பெருமையுடன் நோக்கி நின்றது.

இதனால் அங்கு குப்பை மண்டிக் கிடந்தது.

கிராமத்தை அடுத்த நெடும் பனங்காடொன்றுக்கு அப்பால் தொலைவாக தட்டத் தனியே அந்த மூப்படைந்த புளி கம்பீரமாகக் காட்சி அளித்தது. முறுக்கேறிய தனது கிளைகளைப் பரக்க விரித்துக் கொண்டு நின்ற அப்புளியமரம் துாரப்பார்வைக்கு, முரட்டுத் தேகமுடைய பரட்டைத் தலையன் ஒருவன் வெறிகொண்ட நிலையில் யாரையோ வஞ்சந் தீர்ப்பதற்கு அசையாத நிலையில் எதிர்பார்த்துக் கொண்’டிருப்பது போலத் தோன்றியது.

வேளா வேளைக்குப் பூஜை, திதிகள் தவறாமல் திருவிழா முதலிய வைபவங்கள் நடைபெறும் பெரிய ஆலயங்களுக்குப் பக்தர்கள் சென்று தங்கள் அன்பு வழிபாட்டைச் செலுத்தி உருகி நின்றார்கள். ஆனால் அந்தப் புளியடிப் பிள்ளையாரை ஒரு பக்தனாவது கவனிக்கவில்லை.

சில நாட்களில், ஒரு பிச்சைக்காரி தனது பத்து வயதிற்குட்பட்ட இரண்டு பெண் குழந்தைகளுடனும் பிச்சையெடுக்க நகரத்திற்குப் போவதற்குக் குறுக்குப் பாதை பிடித்து பிள்ளையார் இருக்கும் புளியடியால் போகத் தொடங்கினாள். ஏகாங்தியாக மழை வெயிலெல்லாவற்றையும் அனுபவித்து அமைதியுடன் தன்னைப் போல் வறுமைக் கோலத்திலிருக்கும் பிள்ளையார், கலங்கிய, அனாதரவான தனது வேண்டுதலைச் செவிமடுப்பார் என்று அவளுக்கொரு நிம்மதியான நம்பிக்கை பிறக்க, தன் பிச்சைக் கோலத்தை நீக்கி நல்ல வாழ்வைத் தரவேண்டுமென்று பல நாட்களாக அழுதுபுலம்பித் தொழுது வந்தாள். பிள்ளையாரும் அப்படியே மௌனமாக இருந்து வந்தார். அவளுக்கும் நல்ல காலம் பிறக்கவில்லை.

அவளுக்கு முப்பதைந்து வயதிருக்கும். உழைத்து உணவு போட்ட கணவன் சடுதியாக இறந்துவிட, உற்றார் பெற்றாரற்ற அவளும் பிள்ளைகளும் தனித்துவிட்டனர். சாதுவான கணவனைத் தான் நினைத்தபடி ஆட்டிவைத்து, வேளா வேளைக்கு ருசியான கறிகளுடன் சமைத்து ஊதாரித்தனமாக கொட்டிக் குதறிச் சாப்பிட்டு, வருவோர் போவோர்க்கு கொடுத்துச் சாப்பிட்டதே மிச்சம்மென்று கண்ட அவள், இரவல் காணியிலே ஒரு குடிசையில் வசித்தாள். அவளிடம் சாப்பிட்டுத் தங்கள் பணத்தை மிச்சம் பிடித்த ‘பணக்காரர்’ கூட அவளை இப்போது ஓரக் கண்ணாலும் பார்ப்பதில்லை. கணவன் உழைத்துப் போடச் சொகுசாக இருந்து சாப்பிட்டு வந்த அவளுக்கு வெயிலில் காய்ந்து கஷ்டப்பட்டு ஏதாவது வேலை செய்து சம்பாதித்துப் பழக்கமில்லை. இனியாவது அதை அவள் பழக்கத்திற்கு கொண்டு வர எண்ணவில்லை. ‘வயிற்றுப் பாட்டை’ப் பார்க்க பிச்சையெடுக்கும் தொழிலையே பிள்ளைகளுடன் மேற்கொண்டாள்.

கணவன் இருக்கும் போது வாழ்ந்த வாழ்வையும் இப்போதைய இரப்பு நிலையையும் புளியடிப் பிள்ளையாரிடம் தொடர்ந்து முறையிட்டு வந்த அவள், ஒரு நாள் பிச்சைக்குப் போனவிடத்தே தன்னை ஒரு வீட்டிலே பொய் வேடம் பூண்ட திருடியென்று அவமதித்துத் துஷித்த சோகமிகுதியால் பிள்ளையார் முன்பு போய் ஒப்பாரி வைத்து அழுதே விட்டாள்!

அன்றிரவு அவள் கனவிலே நந்தியின் மைந்தனான துங்கக்கரிமுகத்து துாமணி, மின்னெறி சடாமுடியுடன் திருமேனியில் பால்வெண்ணீறு திரிபுண்டரமாகப் பள பளக்க, அரையில் கட்டிய கலிங்கம் தங்க நிறத்தில் ஜொலிக்க, மெல்லிய கருநீல உத்தரியத்தைப் பவளமேனியிலே போர்த்தி, ஒரு கையை இடுப்பிலே கொடுத்தபடி தோன்றினார். ஆகா! அந்தப் புளியமரத்துப் பிள்ளையாரா இவ்வளவு அழகுக் கோலத்துடன் காட்சி கொடுக்கிறார். நிலை கெட்டுப் போனவள், நெஞ்சம் உருக உடல் நெக்குருகிப் போனாள்.

பிள்ளையார் கொவ்வைச் செவ்வாய் திறந்து பேசத்தொடங்கினார். “குழந்தாய் உனக்கு நல்ல காலம் வந்து ஆனந்தமாகக் குறைவின்றி வாழவேண்டுமென்று உன் நன்மைக்காக மட்டும் நீ என்னை வணங்குகிறாய். குப்பையும், குருவிகளின் எச்சமும் எனக்கு மேலே குவிந்து மூடிவிட புளியடியிலிருந்து நான் அவலப்படுவதை நீ உணரவில்லையே, முதலில் நானிருக்கும் புளியடியைத் துப்புரவு செய்து என வேதனையைப் போக்கு” என்று சொல்லிவிட்டு மறைந்தருளினார்.

திடுக்குற்று விழித்த அவளுக்கு ரோமம் சிலிர்த்தது. அந்த ஒளிவடிவத்தின் ரமணீயநாதம் அவளின் செவியை விட்டகலாத மனப்பிரமையிலே குமைந்திருந்தாள்!

அன்று காலை பிச்சைக்குப் போக முன்பு புளியடியில் தேங்கி மக்கிக்கிடந்த குப்பையெல்லாவற்றையும் பெரிய விளக்குமாறு கொண்டு போய் கூட்டிக் குவித்து, கூட்டிய இடத்திற்குத் தண்ணீரும் தெளித்தாள். குவித்த புளியஞ் சருகு ஒரு புறம் குவியலாகக் கிடந்தது. அதை அங்கே விட்டால் பின்பும் அசுத்தமாகிவிடுமென்று சமீபத்தில் உள்ள தன் வீட்டிலேயே கொண்டு போய்க் கொட்டினாள். இப்படியே ஒரு மாதத்திற்கு மேலாக ஒவ்வொருநாளும் செய்துவர, புளியஞ் சருகு வீட்டிலே பெரும் குவியலாக வளர்ந்துவிட்டது.

ஒரு நாள் கமக்காரன் வயலுக்கு நல்ல பசளையென்று இருபது ரூபா கொடுத்து வாங்கினான். பிச்சையெடுத்த அவளுக்கு கூட்டி ஒதுக்கிய குப்பை கை நிறைய பணத்தைக் கொடுத்ததும் அவள் உள்ளக் குளிர்ச்சியுடன் கொஞ்ச நாட்களுக்கு பிச்சைக்கு போகமலிருந்து அதை வைத்துச் சாப்பிடலாமென்று நினைத்தவளாய் அன்று இரண்டு மூன்று கறிகளுடன் சமையல் செய்து பிள்ளைகளுடன் வயிறு குளிரச் சாப்பிட்டாள்.

ஆனால் அன்றிரவோ புளியடிப் பிள்ளையார் கோபாவேசத்துடன் சொப்பனத்தில் தோன்றி “அற்ப குணமுள்ளவளே! பாதகி! வஞ்சகி! உனக்கு எப்படித்தான் நல்ல காலம் வரும்? எனது புளியஞ் சருகை உன்னுடையது போல் விற்று நீ மட்டும் சாப்பிட்டாயே அந்தப் பணத்தில் எனக்கு ஏதாவது தர நினைத்தாயா? நன்றி கெட்டவளே, நினைத்துக் கொள் நாளை மறுதினம் விடியும் முன்பாக இருபத்தைந்து பால் அப்பம் சுட்டுக் கொணர்ந்து எனக்கு நீ படைக்க வேண்டும். இவ்வாறு படைப்பது ஒருவருக்கும் தெரியக் கூடாது. என் சொல்லை மீறினால்……” என்று உறுக்கிச் சொல்லியபடியே தன்கையிலுள்ள துறட்டையை உயர்த்தி ஆட்டிக்கொண்டு துதிக்கையைத் தூக்கி யானைப் பிளிறல் பிளிற…. அந்தர்த்தியானமானார்.

படுக்கையிலிருந்து கூச்சலிட்டுக் கொண்டு விழித்தெழுந்தாள். பிச்சைக்காரி. அங்கு அந்தத் தரித்திரக் குடிசையையும் எண்ணெய் வரண்டதால் கருகிய கைவிளக்கும் சூனியத்தில் குழைந்திருந்தன. பிள்ளையாரே, பிள்ளையாரே என்று விநாயகரின் நாமாவளியைப் பதற்றத்துடன் உச்சரித்துக் கொண்டிருந்தாள். மோதகத்தை விரும்பும் பிள்ளையார் அப்பத்தைக் கேட்டது அவளுக்கு அச்சத்துடன் வியப்பையும் கொடுத்தது.

குப்பை விற்ற பணத்தில் செலவானது போக எஞ்சிய பணத்தில் பிள்ளையார் குறிப்பிட்ட நாளன்று விடியப்புறமாக அப்பத்தை சுட்டுக் கொண்டு போய் படைத்து விட்டு, படைத்த அப்பத்தை திரும்ப அவள் பெட்டியில் வைத்து எடுத்துச் செல்லும் போது நன்றாக விடிந்துவிட்டது. வயது முதிர்ந்த கனவான் ஒருவர் தன்வீட்டுப்படலையில் நின்று பெட்டியில் அவள் கொண்டு போவதை விசாரித்தார். விற்பதற்கு அப்பம் சுட்டுக் கொண்டு போவதாக எடுத்தாற் போல் ஒரு பொய்யைச் சொல்லி வைத்தாள். உடனே அவர் தனக்கு ஐந்து அப்பம் தரும்படி காசு கொடுத்து வாங்கியதோடு ஒவ்வொரு நாளும் தனக்கு வாடிக்கையாக தனக்கு அப்பம் தரும்படி முற்பணமுங் கொடுத்தார். அங்கு கூடிய வேறு ஆட்களும் அவளிடம் தங்களுக்கும் வாடிக்கையாக அப்பம் தரும்படி சொல்லி வைத்தார்கள். அப்பம் அனைத்தும் அந்த இடத்திலேயே விலைப்பட்டுவிட, அவளை கையிலே சேர்ந்த காசு அவளைப் பார்த்துச் சிரித்தது. ஒருவரிடம் போய் கையேந்தி பிச்சை கேட்டு அவமானப்படாமல் கௌரவமாக கைநிறைய பணம் கொடுத்த அந்த எதிர்பாரத அப்ப வியாபாரத்தில் அவளுக்கொரு பற்றுப் பிறந்தது.

அவள் அப்ப வியாபாரம் தொடங்க புத்துணர்வு நிறைந்த ஊக்கத்துடன் துணிந்து முடிவு செய்து கொண்டாள்!

அன்றிரவு பிள்ளையார் அவள் கனவில் மீண்டும் காட்சி கொடுத்தார். இளம் பிறைபோன்ற தந்தங்கள் பிரகாசிக்க குமிண் சிரிப்பு கடைவாயில் முகிழ்க்க, சுடர் வீசும் தனது ஞானக் கண்களால் அவளைப் பார்த்து தலையை ஆட்டியபடியே ஓங்கார ரூபியானவர் தோன்றி மறைந்தார். அவளுடைய உண்மையாலும் உழைப்பாலும் பிரணவப் பொருளானவரின் மனம் மலர்ந்து விட்டதுபோலும்! அவளும் அச்சம் அகன்று தொழுதுவந்தாள்.

அதன்பின் இப்போது

அவளிருந்த இரவல் காணி அவளுக்குச் சொந்தமாகிவிட்டது. அங்கே சிறிய குடிசை இருந்த வீட்டில் அடக்கமாக ஒரு நல்ல வீட்டை இன்று பார்க்கலாம். புளியடியிலும் ஒரு சிறிய ஆலயம் மிளிர்கின்றது. அங்கிருக்கும் பிள்ளையார் சிலை சரித்திரப் பெருமை வாய்ந்ததென்று விழிப்படைந்த ஆராய்ச்சியாளர்கள் பக்கம் பக்கமாக எழுதியவண்ணமிருக்கிறார்கள்.

நவாலியூர் நடேசன்

சமூகத்தொண்டன் சஞ்சிகையில் சிறுகதைகள், கவிதைகள் எழுதியுள்ளார். அதனைத்தொடர்ந்து விவேகி, ஈழநாடு, வீரகேசரி இதழ்களில் எழுதியுள்ளார். ஐக்கியதீபம் என்ற கூட்டுறவுச்சங்க இதழின் ஆசிரியராக இருந்தவர். நாடகத் துறையில் ஈடுபாடு கொண்டவர்.

– 19.12.1965, ஈழநாடு.

– ஈழநாடு சிறுகதைகள் (தொகுதி-1), முதல் பதிப்பு: 2008, பண்பாட்டலுவல்கள் திணைக்களம், வட மாகாணம், திருகோணமலை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *