விட்டு விடுதலையாகி






காலை உணவு பறிமாறத்தொடங்கியிருப்பார்கள். திருமலை குளித்துவிட்டுத் தலையைத் துவட்டிக் கொண்டே பாத்ரூமிலிருந்து வெளியே வந்தார். ’இன்னும் கொஞ்சம் முன்னாலேயே குளித்திருக்கலாம். அவருடைய அறை சிறியதாக இருந்தது. வீட்டிலிருந்த அறையைவிடச் சிறியது. இங்கே வந்து மூன்று மாதங்கள் ஆகின்றன. வீட்டிலிருந்த வசதியை இங்கே எதிர்பார்ப்பது சரியா?….நானும் இப்படி ஒரு முதியோர் இல்லத்துக்கு வரவேண்டியதாகிவிட்டதே’.
அத்தனை பெரிய வீட்டில் தனியாக இருப்பது கஷ்டம்தான். இரு வருடங்களுக்கு மேலாக இருந்து பார்த்தார். எண்பது வயதானாலும் உடல்நலத்தோடுதான் இருந்தார். வீடும் வசதியாகத்தான் இருந்தது. ஆனாலும் ஏதோ ஒரு குறை இருந்துகொண்டேதான் இருந்தது. மனைவியில்லை, பிள்ளைகளும் தன்னுடன் வசிக்கவில்லை என்பது மட்டுமல்ல. இங்கே நடுநடுவில் சந்தேகம் தோன்றும். ‘இதைவிடச் சுதந்திரமாக இருந்திருக்கலாமோ?’ ஆனால் வாழ்க்கை இப்படி குறையும் நிறையுமாகத்தான் இருந்தது இருந்துகொண்டிருக்கிறது. ’இக்கரைக்கு அக்கரை பச்சை’.
மகனும் மருமகளும் கனடாவில் இந்த நேரம் என்ன செய்து கொண்டிருப்பார்கள்? இங்கே காலையாக இருந்தால் அங்கே பகலாக இருக்கக் கூடும். எத்தனையோ முறை போன் பண்ணும் போது சொல்லியிருக்கிறான். அவ்வப்போது ஞாபகம் வைத்துக் கொண்டாலும் பிறகு மறந்து போய்விடுகிறது.
பக்கத்து அறையிலிருந்த முத்துப்பாண்டி இவர் அறையைத் தாண்டிப் போகும் போது குரல் கொடுத்தார். ‘வாங்க, சார். ப்ரேக் ஃபாஸ்ட் சாப்பிடலாம்’. திருமலை சின்ன அலமாரியிலிருந்த வெள்ளைச் சட்டையொன்றை எடுத்து அணிந்து கொண்டார். அணிந்து கொண்டிருந்த கைலியை மாற்றிக்கொண்டு, மெல்லிய பச்சைக் கரை போட்ட வேட்டியை அணிந்து கொண்டார். சாப்பாட்டு அறை பெரியது. முப்பது பேர் அமர்ந்து கொண்டு சாப்பிடலாம். பெண்களும் வருவார்கள். நிலைக்கண்ணாடியில் ஒரு முறை பார்த்துக் கொண்டார். நேற்று ஷேவ் செய்த முகம். போதும். சின்னஞ் சிறிய வெண்முடி வேர்கள் புள்ளிகளாகத் தெரிந்தன.
உணவுக் கூடத்தில் பத்துப் பதினைந்து பேர் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். முத்துப்பாண்டி, மாயத்தேவருடன் அமர்ந்திருந்தார். இப்போதுதான் சாப்பிடத் தொடங்கியிருக்க வேண்டும். இருவரும் அவரைப் பார்த்துப் புன்னகைக்கத்தனர். இன்னொரு நாற்காலியை டேபிளுக்கு அருகில் இழுத்துப் போட்டுக் கொண்டு உட்கார்ந்தார். உணவுப் பொருட்களை வைத்திருக்கும் இடத்தருகில் நின்றிருந்த செல்லப்பா, தண்ணீர் நிறைந்த டம்ளரை அவர் முன் வைத்துவிட்டுப் போனார்.
’இட்லி, சாம்பார் நல்லா இருக்கா? என்று பொதுவாகக் கேட்டார். சாப்பிட்டுக் கொண்டிருந்த இருவரும் ‘உம்’ என்ற சத்தத்துடன் தலையை அசைத்தனர். முத்துப்பாண்டியின் ஒரே மகள் பெங்களூரில் இருக்கிறாள். அவருடைய மனைவி இறந்து எட்டு வருடங்கள் ஆகின்றன. இந்த முதியோர் இல்லத்தில் இருக்கும் ஆண்களில் அவர்தான் சீனியர். ஆறு ஆண்டுகளுக்கு மேலாக இருக்கிறார்.
செல்லப்பா மூன்று இட்லிகளுடன் தட்டை திருமலையின் முன்னால் டேபிளில் வைத்துவிட்டு சாம்பாரை இட்லியின் மேல் ஊற்றினார். ஒரு கிண்ணத்தில் சாம்பாரையும் இன்னொன்றில் சட்னியையும் அருகில் வைத்துவிட்டுச்
சென்றார். தினமும் வரும் அதே தேங்காய்ச் சட்னிதான். தினம் என்று நினைப்பது பேச்சுக்குதானே ஒழிய உண்மையல்ல என்றும் நினைத்துக் கொண்டார். சில நேரங்களில் வெங்காயச் சட்னி, கடலைச் சட்னி என்றும் வரும். ஆனால் இங்கே சாப்பிடும் சலிப்பை யாரிடம் காட்டிக் கொள்ள முடியும்?
வீட்டில் தங்கம்மாள் பறிமாறுவது நினைவுக்கு வந்தது. ‘எது வைத்தாலும் ஏதாவது சொல்றீங்க!’ உணவின் ருசி பற்றி எதாவது சொல்லாமல் அவரால் எதையும் சாப்பிட முடியாது. அது உணவின் தரம், குணம் பற்றிய பேச்சு என்று அவர் மனைவிக்குத் தோன்றும். அதனால் கொஞ்சம் கோபம் கூட வரும். ஆனால், அது ஏதோ பேச வேண்டும் என்ற நினைப்பில் பேசுவது என்று இப்போது தான் கண்டு கொண்டிருக்கிறார். ஏனெனில் இங்கே செல்லப்பாவிடம் எதையும் சொல்வதற்குத் தயக்கம். முதலில் ஏதாவது சொல்லிக் கொண்டுதான் இருந்தார். மற்றவர்கள் எதுவும் சொல்வதில்லை என்பதைக் கவனித்த பின் திருமலையும் உணவு பற்றிப் பேசுவதை நிறுத்திக் கொண்டார். என்ன பேசினாலும் அவர்களுக்குத் தெரிந்ததைத்தான் செய்வார்கள். பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் சாப்பிடத்தான் வேண்டும். மனைவியும் இப்படித்தானே. தெரிந்ததைத்தான் செய்திருப்பாள். தினமும் தான் சொல்லும் ’நொட்டைச் சொல்’ (இந்த வார்த்தை கூட இப்போதுதான் அவருக்குத் தோன்றுகிறது) சொல்லாமல் இருந்திருக்கலாமோ? அதைத் தொடர்ந்து எழுந்த மன இறுக்கத்தைத் தவிர்த்திருக்கலாம். இதுவே மருமகள் பறிமாறினால் தோன்றுமா? என்பது சந்தேகம். அமைதியாகச் சாப்பிட்டு முடித்தார்.
முத்துப் பாண்டியும், மாயத்தேவரும் இவர் சாப்பிடும்வரை உட்கார்ந்திருந்தார்கள். திருமலை சாப்பிட்டு முடிந்ததும் முன் வாசலில் இருந்த பெரிய வரவேற்பறையில் ‘சோஃபா’வில் சாய்ந்து கொண்டார்கள். டிசம்பர் மாதக் காலை நேரம். மேகம் மூடிய வானமாக இருந்தது. இதமான குளிரடித்தது. முத்துப்பாண்டி சோஃபாவில் சாய்ந்து கண்ணை மூடிக் கொண்டிருந்தார். மாயத்தேவர் எழுந்து போய் சிறிய டேபிளில் இருந்த தினமலரைப் பிரித்துப் படிக்க ஆரம்பித்தார். திருமலை காலையிலேயே ‘ஹிந்து’, ’த வயர்’ இரண்டும் படித்துவிடுவார். பிறகு மொபைல் போனில் எதையாவது நோண்டிக் கொண்டிருப்பார். காலை உணவுக்குப் பின் கொஞ்சம் அமைதியாக, ரிலாக்ஸ் ஆக அமர்ந்து பேசிக்கொண்டிருப்பது இப்போது வழக்கமாகிவிட்டது. இன்னும் ஓரிருவர் சேர்ந்து கொண்டபின் அரட்டைக் கச்சேரி சூடுபிடிக்கும். அப்புறம் பேச ஆட்கள் இல்லாவிட்டால் அவருக்குக் கண்ணயர்ந்துவிடும். உண்ட மயக்கம் எல்லோருக்கும் தினமும் இப்படியே கழிந்தது.
முதியோர் இல்லத்தின் வாசலுக்குள் ஒரு நீல நிறக் கார் உள்ளே வந்து போர்டிகோவில் நின்றது. அதிலிருந்து ஒரே குடும்பத்தினர் போல் தோன்றிய ஐந்துபேர் இறங்கினர். அந்த நேரத்தில் வரவேற்பறையில் பத்துப் பதினைந்து பேர் ஆண்களும் பெண்களுமாக உட்கார்ந்திருந்தனர். அனைவருடைய கண்களும் வந்திரங்கியவர்களையே பார்த்துக் கொண்டிருந்தன. யாராவது தெரிந்தவர்களாக இருக்கலாம். தெரிந்தவர்களாக இல்லாமலும் இருக்கலாம். தங்களுக்குத் தெரிந்தவர்களைப் பார்க்க வந்தவர்களாக இருக்கலாம். ஒரு வேளை தங்களைத் தேடிப் புதியவர்கள் யாராவது வரலாம் என்றெல்லாம் அவர்கள் நினைத்துக் கொண்டிருந்தாலும் அது ஒருவகையாக ஏமாற்றம் தரும் எதிர்பார்ப்பு என்பதும் அவர்களுக்குத் தெரிந்தே இருந்தது. இப்படி எதையாவது யோசிப்பதிலும் ஏதோ ஒரு திருப்தி இருக்கத்தான் செய்தது.
அப்போதுதான் விழித்துக் கொண்ட முத்துப்பாண்டியின் கண்கள் கலங்கியதைப் பார்த்த திருமலை, வந்தவர்களை உற்றுக் கவனித்தார். நடுத்தர வயதுப் பெண்ணின் கண்களும் கலங்கியிருந்தன. கணவர் நல்ல உயரம். அம்மாவை விட உயரமாக அப்பாவைவிட குட்டையாக பத்துப் பன்னிரண்டு வயதான ஒரு பையன். அம்மா மாதிரியே ஒரு பெண். எட்டு வயதிருக்கும் இன்னொரு பெண். தூக்கக் கலக்கத்திலிருந்த முத்துப் பாண்டி வேட்டி முனையால் கண்களைத் துடைத்துக் கொண்டு எழுந்து நின்றார். அவருடைய பெண்ணாக இருக்கவேண்டும், அவள் வந்து அவரைக் கட்டிக் கொண்டு, சத்தம் எழாமல் ஏங்கி அழுதாள். திருமலைக்கும் கண்கள் கலங்கின. கூச்சப்பட்டு கண்களைத் துடைத்துக் கொள்ளும் போதுதான் கவனித்தார். அங்கிருந்த பலரும் உணர்ச்சி வசப்பட்டு கண்கலங்கிக் கொண்டிருந்தனர். பிள்ளைகள் அவர்களையே பார்த்துக் கொண்டு நின்றன. பிறகு தாத்தாவின் கைகளைப் பற்றிக் கொண்டனர். அவருடைய மருமகன், கண்களை கலங்குவதைச் சமாளித்துக் கொண்டு, சிரிக்க முயற்சி செய்துகொண்டிருந்தார்.
’புழுக் புழுக்கென்று கண்ணீர் விட்டுருவீங்க. சினிமான்னாலும், வேற எங்காயாவதுன்னாலும் சரி. இங்க ஒருத்தி இத்தன வருஷமாக் கஷ்டப்பட்டுக்கிட்டுருக்கேன்… ஒரு சொட்டுக் கண்ணீர் விட்ருக்கீங்களா?’ தங்கம்மாள் கிண்டலாகக் கேட்டாளா அல்லது வருத்தப்பட்டுக் கேட்டாளா என்பது புரிந்து கொள்ள முடியாத மர்மமாகவே இருந்துவிட்டது. அந்த வார்த்தைகள் மீண்டும் காதுகளில் ஒலித்தது. தங்கம்மா முப்பத்தைந்து வருடங்களுக்கு மேலாக அவருக்காக, குடும்பத்துக்காக மாடாய் உழைத்திருந்தாள். ஆனால் ஒருநாள் கூட அவர் அவளிடம் பரிவாகப் பேசியதில்லை. பொங்கிவந்த உணர்ச்சிகளை அடக்கிக் கொண்டு, அப்புறம் பார்க்கலாம் என்று முத்துப் பாண்டியிடம் ஜாடையாகச் சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்தார்.
எத்தனையோ ஆண்டுகளுக்கும் முன்பு நடந்த பல சம்பவங்கள் நினைவில் ஓடின. அடிக்கடி அவரை அறியாமலே வந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டிருந்தார்.
காலையில் அவர் நன்றாகத் திறந்து வைத்த ஜன்னலில்மூன்று குருவிகள் ‘கீச்சுக்கீச்சென்று விட்டுவிட்டுக் கத்திக் கொண்டிருந்தன. வந்த புதிதில் அது இரச்சலாகத் தெரிந்தது. இப்போதெல்லாம், அந்தக் குருவிகள் ஜன்னலின் வெளிப்புறத்தில் அமர்ந்து சத்தமிடுவதை வேடிக்கை பார்க்கத் தொடங்கிவிட்டிருந்தார். அவற்றின் கீச்சுக்குரல்கள் இல்லையென்றால் காலையில் ஏதோ ஒன்று குறைந்துவிட்டது போல் தோன்ற ஆரம்பித்து விட்டது. கொஞ்ச நேரம் கழித்துக் குருவிகள் எங்கோ பறந்து விடுகின்றன. பிறகு, ஒரே அமைதி. பேசுவதற்குக் கூட யாராவது வந்தால் அல்லது அவர்களுடைய அறைக்கு இவர் போனால்தான் உண்டு. சில நேரங்களில் தோன்றும். இந்தக் குருவிகளில் ஒன்று தங்கம்மாவாக இருக்கலாம். தினமும் தன்னைப் பார்க்க அவள் வந்துவிட்டுப் போகலாம். அப்படி இருந்தால் நன்றாக இருக்கும். அந்தக் கற்பனையே அவருக்கு உணர்ச்சி மேலிட வைத்தது.
2
போன ஜனவரி மாதம் பொங்கலுக்கு அடுத்தநாள் இப்படித்தான் காலையில் தனது வீட்டின் வரவேற்பறையில் உட்கார்ந்திருந்தார். நான்கு படுக்கையறைகள். ஒவ்வொன்றிலும் தனிக் குளியலறை, கழிவறை.. தினமும் எடுப்புச் சாப்பாடு கொண்டுவரும் பையனுக்காகக் காத்திருந்தார். மத்தியானம் ஒன்றே முக்கால் மணியாகிவிட்டது. பொதுவாக ஒரு மணிக்கே கொண்டுவந்துவிடுவான். நேரம் ஆக ஆகப் பொறுமை இழந்து கொண்டே வந்தார். பொங்கலன்று பக்கத்து வீட்டுக் காரர்களிடமிருந்து பொங்கலும் அடையும் காலையிலேயே வந்துவிடும். இந்த வருடம் பக்கத்து வீட்டுக்காரர்கள் இருவரும் வெளியூர்களுக்குப் போய்விட்டனர். சாப்பாடு வரத் தாமதமாவதால் கொஞ்சம் தவித்துப் போனார். எத்தனையோ வருடங்களாகக் காலம் தவறாமல் சமைத்துப் போட்ட தங்கம்மா, வழக்கம் போல மறுபடியும் நினைவுக்கு வந்தார்.
ஒரு வேளை அவர் முதலில் இறந்துபோய் தங்கம்மா இன்னும் உயிரோடிருந்திருந்தால் எப்படி இருந்திருக்கும்? இதுமாதிரி முதியோர் இல்லத்துக்கு வந்திருப்பாளா? தனியாக இருந்திருக்கலாம். பெண்கள் தனியாகவே வீட்டு வேலைகளை பார்ப்பதால், கணவன் இறந்தபின்னும் வீட்டு வேலை செய்வது பெரிய விஷயமல்ல. அதனாலேயே தனியாகவோ அல்லது மகள் வீட்டில் அவளுக்கு உதவி செய்து கொண்டோ இருந்திருப்பாள். இருந்திருக்க வேண்டும்.
பெருநகரத்தின் சந்துகளில் நுழைந்து மகள் வீட்டுக்குப் போவதற்குள் அவருக்கும் போதும் போதும் என்றாகிவிடுகிறது. ரயில்வே ஸ்டேஷனில் இருந்து தொடங்கும் கூட்டமும் கூச்சலும், மனிதர்களை இடித்துக் கொண்டு மனிதர்களும், வாகனங்களும் அவற்றின் இரைச்சலும் அவரை மிகவும் தொந்தரவு செய்யும். காதடைத்துப் போகும், தாகம் எடுக்கும். சின்ன நகரத்தின் இரைச்சல்களே அவருக்குப் பிடிப்பதில்லை. சிற்றறைகளால் ஆன வீடென்னும் ஒன்றிற்குள் நுழைவார். மருமகனுக்கென்றும், மகன்களுக்கென்றும் தனியறை. மகளுக்கும் பேத்திக்கும் தனியறை. அவருக்கென்று வரவேற்பறையில் சாமான்களை ஒதுக்கி வைத்து, ஒரு கட்டிலைப் போட்டு… அவருக்கே ஒரு மாதிரி இருக்கும். இந்தக் குறுகிய இடத்திலிருந்து விடுதலை பெறக் கீழே இறங்கினால், பத்தடிக்குள் மனிதர்களின், இயந்திரங்களின், வாகனங்களின் பெரு நதியின் வெள்ளத்தில், ஒரு சிறு துரும்பாக காணாமல் போய்விடுவோமோ என்று அவருக்குப் பயமாக இருந்தது. வயதாக வயதாக அந்தப் பயம் அதிகமாகிவிட்டது. தான் யாரோ ஒருவனாக அடையாளமற்று இருக்க அவர் ஒருபோதும் மனம் ஒப்பியதில்லை. ஏதோ ஒன்றாக, ஏதோ ஒன்றினால் அடையாளம் பெற வேண்டும் என்றே வாழ்க்கை முழுவதும் விரும்பினார். ஆனால், எந்த அடையாளமும் அற்றுத் தெருவில் கிடக்கும் பிணத்தைப் போல வாழ்வதாகவே எப்போதும் உணர்ந்தார். அந்த வருத்தம் அவரைக் குடைந்து கொண்டே இருந்தது. அது நிறைவேற்யிருந்தால், இப்படி ஒரு சின்ன நகரத்திலிருந்து தொலைவில் உள்ள சிறு கிராமத்தின் தோட்டங்களுக்கு நடுவிலுள்ள முதியோர் இல்லத்தின் அறையொன்றில் தனியாக வாழ நேர்ந்திருக்குமா என்று சந்தேகப்பட்டார்.
எத்தனையோ சாதனையாளர்கள், ஏன் காந்தி கூடக் கடைசி நாட்களில் தான் கட்டியமைத்த கட்சியிலிருந்தும் தேசத்திலிருந்தும், தன்னைக் கொண்டாடிய பெருந்திரளான மக்களிடமிருந்தும் அன்னியமாகிப் போக நேர்ந்ததே! ‘வதைபட்ட நிலையில் இந்த மனிதனை மரணம் வெல்லும்’ என்பது உண்மை.
அம்மா எப்போதோ சொன்ன வார்த்தைகள் நினைவுக்கு வந்தன ‘ நீ பிரதிவாதி பயங்கரம்டா!’ இதையே அவரது நண்பர்களும், உறவினர்களும் வெவ்வேறு வார்த்தைகளில், ‘எதுக்கெடுத்தாலும் எதிர்ப்பேச்சுப் பேசுவ’, ’எல்லாக் கட்சிக்கும் எதிர்க்கட்சி பேசுவ’ என்று அடிக்கடி பேசுவதைக் கேட்டிருக்கிறார். பொதுப்புத்தியில் பொதுவெளியில் உலவுகிற கருத்தை ஆமோதித்து, அல்லது வழிமொழிந்துதான் பேச வேண்டும் என்பதும் ஒரு பொதுப்புத்திதானே! வேறு மாதிரி, தர்க்கத்தின் அடிப்படையில் சிந்திப்பதோ, பேசுவதோ தவறு என்றுதான் அவரிடம் பலர் வாதிட்டிருக்கிறார்கள். ‘ஊரோடு ஒத்துவாழ்’. மனிதர்கள் என்பது கூட்டம் தானா? தனிமனிதனுக்கென்று எந்த ஆளுமையும் கிடையாதா? வயது எண்பதாண்டுகளுக்கு மேல் ஆனாலும் அவருக்குச் சந்தேகங்கள் தீரவில்லை. மற்றவர்கள் அதைத் தீர்க்க விடவில்லை.
அவர் கண் விழித்த போது பதினொரு மணி. மாயத் தேவர் ‘ரொம்ப நேரமாத் தூங்கிக்கிட்ருந்தீங்க’ என்றார். திருமலை எழுந்து பாத்ரூம் போய்விட்டு வந்தார். ஒரு நாற்காலியில் மாயத்தேவர் இருந்தார். திருமலை கட்டிலில் இருந்த போர்வையை மடித்துவைத்துவிட்டு, அதிலேயே அமர்ந்தார்.
மாயத்தேவர் பேச ஆரம்பித்தார். ‘முத்துப்பாண்டியோட மகளும் அவ வீட்டுக்காரரும் வந்திருக்காங்களாம். இன்னைக்குப் பிஸியா இருப்பாரு’ சொல்லிவிட்டு திருமலை ஏதாவது சொல்ல வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் அவரைப் பார்த்தார். கொஞ்ச நேரம் அமைதியாக இருந்த திருமலை ‘எல்லாமே மாறிப்போச்சு. வீட்ல நடககிறதெல்லாம் விடுதியில நடக்குது’ கொஞ்ச நேரம் கழித்து மீண்டும் தொடர்ந்தார் ‘ நானும் எவ்வளவோ சொன்னேன். “வீட்ல இருந்துக்கிறேம்ப்பா. எனக்கு ஒரு பயமும் இல்ல. திடீர்னு சாவு வந்தா என்ன? தனிமைல இருந்து செத்தாலும், எல்லோரோட இருந்து செத்தாலும் அதுக்கப்பற நடக்கிறது நமக்குத் தெரியவா போகுது? யார் பாத்தா என்ன? பாக்காட்டி என்ன? கேக்க மாட்டேன்னுட்டாங்க. உடம்பு சரியில்லேன்னா யாரு பாப்பா?” எண்பது வயதுக்கு மேல யார்பாத்தா என்ன? அவ்வளவு பெரிய வீட்டப் பூட்டிப் போட்டுட்டு இங்க வந்து கிடக்கேன். வசதி இருக்குதான் இங்க. ஆனால் நம்ம வீட்ல உள்ள மாதிரி இருக்க முடியுமா?’
’ஒரே வசதிதான். மணியானா சாப்பாடு கிடைக்கும். யாரையும் கேட்க வேண்டியதில்லை. வீடுன்னா தனியா இருக்கிறமாதிரி உணர்விருக்கும். அங்கேயும் அவ்வப்போது யாராவது வந்துக்கிட்டே இருப்பாங்க. காலையில பேப்பர் படிக்கிறதுக்காக மோகன் வருவாரு. பேசிக்கிட்டிருப்பாரு. ஒண்ணும் குறைச்சல் இல்ல. இல்லைன்னா ஏதாவது படிச்சிக்கிட்டுருப்பேன். இங்கயும் அதுதான் செய்யறேன். அங்கேன்னா ஏதோ உலகத்துக்கு மத்தியில இருக்கிற மாதிரி ஒரு உணர்வு. இங்க ரூமுக்குள்ள பூட்டி வச்ச மாதிரி, ஒரு வசதியான சிறைச்சாலை மாதிரி இருக்கு’.
’உங்க வீட்டம்மா எப்ப?’ மாயத் தேவர் கேட்டார். ‘மூணு வருஷமாச்சு. கொஞ்சம் சுகரு. கொஞ்சம் இழுப்பு திடீர்னு போய்ட்டா’. பெருமூச்சு விட்டார் ‘நம்மளும் என்ன ரொம்ப நாளாவா இருக்கப் போறோம். போகற கட்ட எப்பப் போகப் போகுதோ?’
’இருக்கும் போது சாப்பாடு ஒரு குறைச்சலுமில்ல. என்ன? எப்பவும் சண்டை போட்டுக்கிட்டே இருப்பா. அது ஒரு பேச்சுக்குத்தான்னு இப்பத்தான் தோணுது. அதுவும் இல்லாட்டி எதைப்பத்திப் பேசிட்டிருந்திருப்போம். இப்பப்
பேச்சில்லாமக் கிடக்கிறது போல அப்பயிருந்தே இருந்திருக்கும். சண்டையும் ஒரு உறவுதான். ‘பேச்சு…பேச்சு… எப்பவும் பேசிக்கிட்டே இருப்பா.. எங்கிட்டக் கொஞ்சமாத்தான் பேசுவா. செல்போன எடுத்தா ஒருமணி நேரம் இரண்டுமணி நேரம் பேச்சுத்தான். இப்பத் தோணுது அதுவும் பொழுதுபோக்குத் தானோ?’
’உங்களுக்குப் பரவாயில்லை. பேசிக்கிட்டே இருப்பாங்க போல. என் வீட்டம்மா அதிகமாப் பேசவே மாட்டா. நாந்தான் பேசிப் பழக்கம். அவளும் பேசிக்கிட்டே இருக்கிறா ஆளாயிருந்தா நல்லாயிருக்குமோன்னு இப்ப நினைக்கேன். இப்படித் திடீர்னு போயிடுவான்னு யார் கண்டது? துணைக்கு ஒரு ஆளாவது இருந்திருக்கும்’. இருவரும் கொஞ்ச நேரம் அமைதியாக இருந்தனர்.
’என்னதான் சரின்னு எப்ப நம்ம யோசிக்கிறோம்னே தெரியல. பேசினாலும் கஷ்டம்தான்னு நான் நெனச்சம். பேசாட்டியும் கஷ்டம்தான்னு நீங்க சொல்றீங்க. அதுவும் சரிதான்னு படுது. ஏதேதோ அந்தந்த நேரத்தில தோண்றத செய்றோம். அதோட பேச்சும் சேந்துக்குது. அதைவிட்டா மனுஷனுக்கும் மிருகத்துக்கும் ஒரு வித்யாசம் இல்ல. பேசுறது என்னத்தப் பேசுறோம். உப்புச் சப்பில்லாத, ஒண்ணுக்கும் பெறாத விஷயத்தை பெருசாப் பேசுறோம். இதுக்கு வாயும் பேச்சும் தேவையான்னு தோணுது’
’நீங்க இப்பத் தனியா இருக்கிறதனால இப்படித் தோணுது. கூட்டத்தோட இருந்தாத் தெரியாது’
’எனக்குச் சின்ன வயசில இருந்தே கூட்டமாய்ச் சேர்ந்து காச்சுப் பூச்சுன்னு சத்தம் போட்டாப் பிடிக்காது. நாலைந்து புத்தகமும் ஒரு மரத்தடி அல்லது சாய்வு நாற்காலி இருந்தாப் பாதி நேரத்தைப் போக்கிடுவேன். ஆனால் புத்தகத்தை எடுத்தாலே அவளுக்கும் பிடிக்காது. பேப்பரைக் கொஞ்ச நேரம் பாத்துக்கிட்டிருந்தாலே “அந்தப் பேப்பர்ல் அப்படி என்னதான் இருக்கோ… எடுத்துக்கிட்டு உட்காந்தா வேறு ஒண்ணும் வேண்டாம்… எல்லாம் இருக்க இடத்துக்கு வரணும்…” அப்படீம்பா. இப்பப் புரியுது. அவ செய்யற வேலைய நான் அங்கீகரிக்கல. அவளைக் கவனிக்கல. அதுனால அப்படிப் பேசியிருப்பா’. காலம் கடந்திருச்சு. அவ்வளவுதான் கொடுப்பினை’
இப்படியே பேசிப் பொழுது போய்க்கொண்டிருந்தது.
3
மத்தியானம் சாப்பாடு முடிந்ததும் எல்லோரும் அவரவர் அறைகளில் தூங்கப் போய்விட்டார்கள். இந்த ஊர் வெக்கையில் வயதானவர்கள், அதுவும் நிழலிலேயே நாற்காலியில் அமர்ந்து வேலை செய்த மத்திய வர்க்கத்தினருக்கு வெய்யிலில் எதுவும் செய்ய ஓடாது. திருமலை தன் அறையில் படுக்கையில் சாய்ந்துகொண்டு, எதையோ யோசித்தபடி உறங்க முயற்சி செய்து கொண்டிருந்தார். அவருடைய மகன் நம்பி, ஆப்பிரிக்காவில் கென்யாவில் எண்ணை விநியோகக் கம்பெனியில் வேலை செய்கிறான். மகள் கனடாவில் கணிணியில் எதையோ எழுதிக் கொண்டிருக்கிறாள். பிள்ளைகள் இப்படித் திசைக்கொன்றாகப் போய்விடும் என்று அவர் ஒருநாளும் கனவில் கூடக் கண்டதில்லை. தன் அக்காவை நினைத்துப் பார்த்தாள். அவளும் இறந்து போய் இரண்டு வருடங்கள் ஆகின்றன. பிறந்ததிலிருந்து ஒரே ஊரில் வாழ்ந்து கழித்தவள். திருமலை அடிக்கடி வேலையில் மாறுதல்கள் பெற்று, திருநெல்வேலி, தஞ்சாவூர், மதுரை, திருப்பூர், சாத்தான் குளம் என்று பல ஊர்களில் இருந்தவர். அங்கங்கே நண்பர்கள் உண்டு. போக்குவரத்தும்
உண்டு. ஆனால் ’இங்கே வந்து ஏன் மாட்டிக்கொண்டோம் என்று அவர் அடிக்கடி நினைப்பார்’.
இரண்டு பிள்ளைகளுக்கும் திருமணமாகிப் பிள்ளைகள் இருந்தாலும், கண்காணாத இடத்தில், சட்டென்று கிளம்பிப் போனால் பார்க்க முடியாத இடத்தில் இருப்பது கொஞ்சம் மனதில் வலித்தது. ஆனால் நவீன காலமும், டாலரும் பல இந்தியர்களைப் பல நாடுகளுக்கு அனுப்பிவைக்கின்றன. திரும்பிவிடலாம் என்ற நம்பிக்கையுடன் தான் எல்லோரும் போகிறார்கள். ஆனால் முடியுமா? பிள்ளைகள் இங்கு வந்துதான் என்ன ஆகப் போகிறது என்றும் அவருக்குச் சில நேரங்களில் தோன்றியது. அவரவர் வாழ்க்கை அவரவர்களுக்கு, என்றாகிவிட்ட காலம் இது.
அப்பாக்கள் அதிகார மையங்கள் என்று நவீன பாஷையில் ஏதேதோ பேசுகிறார்கள் பிள்ளைகள். ‘நானெல்லாம் அப்படி யோசித்தேனா?’ அப்பாக்களூம் பிள்ளைகளும் வெவ்வேறு என்று தான் நினைக்காத காலம் ஒன்றிருந்தது. இன்று அப்படி அல்ல. சிறுவர்கள் கூட அவர்களது விருப்பங்களைத் தெளிவாகப் பயமில்லாமல் அப்பாக்களிடம் சொல்லிவிடுகிறார்கள்.
’என்ன வாழ்க்கை இது? முன்பின் தெரியாத பெண்ணைத் திருமணம் செய்து கொண்டேன் . இப்போது என்னவென்றால், பேரன் பேத்திகளுடன் பேசுவதே பெரிய பிரச்சனையாக இருக்கிறது. அவர்களுக்கெல்லாம் தமிழ் நன்றாகப் பேச வருமா? அரைகுறை ஆங்கிலத்தில் பேசினால் தடுமாறுகிறது. ஆனால் எல்லோரும் அதைத்தான் பெருமையாகச் சொல்லிக் கொள்கிறார்கள். நாற்பத்தைந்து வருட காலம் மனைவியுடன் நடத்திய தாம்பத்தியத்தில் சாப்பாடு, துணிமணிகள், வீடுகள், சம்பளம், சினிமா, குழந்தைகள் என்று லௌகிக விஷயங்களில் அதிகப் பிரச்சனைகள் இல்லையென்றாலும், ரசனைகளில் அவருக்கும் அவருடைய மனைவி, தங்கம்மாவுக்கும் எந்த ஒற்றுமையும் இல்லை. அவர் அறிவை, மனிதனை நம்புகிறவர. தங்கம்மா, கடவுளை, அவருடைய அருளை வேண்டிப் பெற்று வாழ்ந்ததாக நம்பினாள். இருவருக்குமிருந்த நம்பிக்கைகளால் எந்தப் பலனும் விளைந்ததாக அவருக்குத் தோன்றவில்லை. காலத்தைக் கடத்தியது தவிர வேறொன்றுமில்லை. மாட்டு வண்டியில் பூட்டப்பட்ட இரு காளைகளைப் போல. வாழ்வில் ஒரே வித்தியாசம், ஒரு மாடு பெண்மாடு, இன்னொன்று ஆண்மாடு. அவ்வளவுதான். இலக்குகளை வைத்துக் கொண்டு காலை முதல் மாலைவரை ஓடிக் கொண்டே இருந்தார்கள். அருகிலிருந்தவர்களின் தனிப்பட்ட நுண்ணுணர்வுகளை, கவனித்ததாகவோ, மதித்ததாகவோ அவர் நினைத்ததில்லை.
அவளைக் கேட்டாலும் இதே பதிலைச் சொல்லியிருக்கக் கூடும். இப்படி எதிரும் புதிருமான இருவர் திருமணம் என்ற இறுக்கத்தின் காரணமாக சேர்ந்தே வாழ்வது கூட அன்புதானோ? அன்பு கடமை என்ற எந்தப் பெயரில் அழைத்தால் என்ன? பெயர்களா முக்கியம்? வார்த்தைகளில் பிடிபடாத ஒரு நிறுவனம் தான் திருமணமோ? அவரவருக்கு அமைந்தபடி வாழ்வதுதான் செய்யவேண்டியதோ?’
அவர் விழித்துக் கொண்ட போதுதான் தான் தூங்கிவிட்டிருக்கிறோம் என்பதே புரிந்தது. நன்றாக இருட்டிவிட்டிருந்தது. வராண்டாவில் வெளிச்சம் தெரிந்தது. சாப்பாட்டு நேரம் ஆகவில்லை. மாலை டீ, சமோசாவை விட்டுவிட்டோம் என்று நினைத்துப் பார்த்தார். வழக்கமாக யாராவது எழுப்பிவிடுவார்கள். இன்று முத்துப் பாண்டியும் தூங்கியிருக்கக் கூடும். கட்டிலில் எழுந்து அமர்ந்தார்.
மணியடித்தால் சாப்பாடு. அதைத்தான் இங்கே அநேகம்பேர் பேசிக் கொண்டிருப்பார்கள். அதுவும் ருசியாகப் போடுகிறார்களாம். அதிலும் அவருக்குச் சந்தேகம் இருந்தது. ‘ருசி’ என்ற ஒன்று தனியாக இருக்கிறதா என்ன? அவரவர் குடும்பங்களில் பழகிவிட்டது. பிறகு ஹோட்டல்கள். ஒவ்வொரு முறையும் நன்றாக இருந்தாலும், கொஞ்சம் வேறுமாதிரி இருந்தால் தானே சலிப்பில்லாமல் இருக்கும்? சாப்பாட்டை நம்பித்தான் நான் இங்கு வந்தேனா?’. அவருக்கு ஒரு வரி ஞாபகம் வந்தது. “சோற்றுக்கோ வந்ததிந்தப் பஞ்சம்.
வீடென்பது என்ன? இங்கே இருப்பது போல் சாப்பாடும், இருக்க இடமும் கிடைத்துவிட்டால் , இது சொர்க்கம் ஆகிவிடுமா? வயதான காலத்தில் உண்பதும், உறங்குவதும் தான் செய்யக் கிடைத்த செயல்களா?
வீட்டில், காதல் என்னும் சிறகை விரித்து இருவர் பறந்தாலும், ஒருவருக்கொருவர் பிடிக்காமலே போய்விட்டாலும், ஒருவருக்குப் பிடித்து, ஒருவருக்குப் பிடிக்காமல் இருந்தாலும் திருமணம் என்பதற்கு சமூகத்தில் இருக்கும் நடைமுறை அர்த்தம் காமமும், லௌகிகமும் தான். உழைத்துவந்தால் ஓய்வெடுக்க ஓரிடம். மனது இளைப்பாறும் இடம். உலகத்தின் மிகச் சிறிய கூட்டணி. எல்லா ஆடம்பரங்களையும் அலங்காரங்களையும் எடுத்துவிட்டால், ஒரு சரணாலயம், ரெஃப்யூஜ் – அடைக்கலமாகும் இடம்.
அப்படியென்றால், பக்கத்து வீட்டுக்காரர், தெருக்காரர், ஊர்க்காரர் எல்லாம் என்ன உறவு? ஜாதியென்றோ, இனமென்றோ மொழியென்றோ வருவது மட்டும்தானா? ஆனால் அதை மீறியும் உறவுகள் இருக்கின்றனவே? எங்கேயோ எப்போது ஒருமுறை நம்மைப் பார்க்கிற ஒருவர், மீண்டும் நம்மைப் பார்க்க முடியாது என்று தெரிந்தே மிகப்பெரிய உதவிகளைச் செய்கிறவர் எந்த வகையில் வருகிறார்?’ அவருக்கு ‘எ ஸ்ட்ரீட் கார் நேம்ட் டிசையர்’ நாடகத்தில் வரும் ஒரு வசனம் அடிக்கடி நினைவுக்கு வரும் “அன்னியர்கள் எனக்கு எப்போதுமே உதவி செய்திருக்கிறார்கள்”. அன்னியர்கள் எல்லோருக்குமே ஏதாவதொரு சமயத்தில் உதவி செய்திருக்கிறார்கள் அல்லவா?
அப்போதுதான் அவருக்குப் பொட்டிலடித்ததுபோல் இருந்தது. அப்படியென்றால், வீட்டில் தான் தனியாக இருந்தால், உதவிகள் செய்ய ஆட்கள் வருவார்கள்தானே? அவர்களுக்கு பிரதி உபகாரமாக தானும் எப்போதாவது எதையாவது செய்யக் கூடும் தானே? அந்த உறவில் எந்த எதிர்பார்ப்புகளும் கிடையாதே? அப்படி ஏன் நான் வீட்டில் போய் வாழக் கூடாது?. அவர்களுக்காக கொஞ்சம் நான் அதிகம் செலவு செய்யக் கூடும். அதனால் என்ன? என்னிடம் இருக்கிறது செலவு செய்வேன். எல்லாவற்றையும் பணத்தால் மட்டுமே அளந்துவிட முடியுமா என்ன? முதியோர் இல்லத்தில் சில வசதிகளுக்காகவே இருந்து, பணத்தை மிச்சப்படுத்தி என்ன செய்யப் போகிறேன்?’
பக்கத்து வீட்டிலிருக்கும் பெரியவர்களும் சிறியவர்களும், தெருவிலிருக்கும் கடைக்காரர்களும், வண்டியில் பொருட்களைக் கொண்டுவந்து தினமும் விற்றுப் பிழைப்பவர்களும் …தெருக்கள் எவ்வளவு சுவராஸ்யங்களைத் தம்முள் வைத்திருக்கின்றன. காதல் கதைகள் முதல், வெட்டுக் குத்து, திருட்டு வரை… எல்லாம் தானே சமூகம் வாழ்க்கை… இப்படி ஒரு முதியவர் இல்லம் என்பது என்ன? எல்லா வசதிகளும் கொண்ட சிறைச்சாலை.
உடனே பயமுறுத்தும் கதைகளைச் சொல்லிவிடுவார்கள். ‘அன்றைக்கு ஒரு பாட்டியை ஒருவன் கொலைசெய்துவிட்டு, நகையைக் கொண்டு போய்விட்டான். ஒரு கிழவரைக் கொலை செய்துவிட்டு, பணத்தைத் திருடிச் சென்றுவிட்டான்.’ இந்தக் கதைகளில் சாகிறவர்கள் என்ன சாகா வரம் பெற்றுவந்தவர்களா? தடுக்கிவிழுந்தால் கூட உயிர் போயிருக்கக்கூடும். நல்ல வேளை ஒரு திருடன் கொலைப்பழியை ஏற்றுக் கொண்டுவிட்டான். நாம் பெரியமனிதர்களாக, கனவான்களாக இருப்பதற்கு அப்படி ஆட்கள் நமக்குத் தேவைப்படுகிறார்கள். இத்தனை வருடங்கள் நாம் கனவான்களாக இருந்ததற்கும், அவர்கள் திருடர்களாக இருந்ததற்கும் முடிவாக ஒரு சமன்பாடு நிகழ்ந்தால் அது கொலையாகத்தான் முடியவேண்டும் என்பதில்லை. அந்தக் கிழவர் அவராகவே பணத்தை வழங்கியிருக்கலாம். அல்லது அந்தக் கிழவி நகையை அவளாகவே வழங்கியிருந்திருக்கக் கூடும். அப்படி ஓர் உறவை நாம் அமைத்துக் கொள்ளவில்லையே!
திருமலை இப்படியெல்லாம் யோசித்ததற்கு விளைவும் இருந்தது. அடுத்த மாதம் முதியோர் விடுதியை விட்டுவிட்டு தன் வீட்டில் தனியாகக் குடியிருக்கத் தொடங்கினார். யாராவது, புதியவர்களும் பழையவர்களும் அவரைப் பார்க்க அவ்வப்போது வந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.
மிகவும் யதார்த்தமான, உணர்ச்சிகரமான கதை.