விட்டில் பூச்சிகள்





(1999ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம் 4-6 | அத்தியாயம் 7-9 | அத்தியாயம் 10-12
அத்தியாயம் – 7

பத்து மணியிலிருந்து எதிர்பார்த்து மூன்று மணிக்கு தான் வந்தான் அசோக். வந்ததும் கூட உடனே அவளை அழைக்கவில்லை. அவனாக கூப்பிட்டால் உள்ளே போனால் போதும் என்ற முடிவோடு இருந்த மஞ்சுவுக்கு ஐந்து மணிக்குதான் அழைப்பு வந்தது. கோபமான முகத்தோடு அவளைப் பார்த்தான் அசோக்.
“பர்சனல் உதவியாளர் என்றால் என்ன அர்த்தம் என்று தெரியுமா மிஸ் மஞ்சு?”
“சார்…” மஞ்சு விழித்தான்.
“நா எப்போ ஆபீஸ் வந்தேன்னு தெரியுமா உங்களுக்கு?”
“மூணு மணிக்கு சார்.”
“மூணு மணிக்கே நா வந்தது தெரிஞ்சும் அஞ்சு மணிக்கு நானா கூப்பிடப்பற…”
“சாரி சார்… நீங்க கூப்பிடாம எப்படி உள்ள வரதுன்னுதான்.”
“ஆபீஸர் உள்ள நுழைஞ்சதுமே அவரோட அருகில் நிற்கணும். அவர் போனப்பறம்தான் போகணும். ஒரு நல்ல பர்சனல் உதவியாளருக்கு அழகு அதுதான். இன்னும் சொல்லப் போனா நா உதட்டுல சிகரெட் வெச்சுக்கிட்டேன்னா லைட்டரோட கிட்ட வந்து கொளுத்தணும். பட் நீங்க பெண்ங்கறதுனால நா அவ்ளோ சீப்பா நடத்த மாட்டேன். பயப்படாதீங்க. ஆபீஸ் வேலைகளில் மட்டும் கிட்ட இருந்து உதவினா போதும். இன்னிக்கு எவ்ளோ நேரமானாலும் இந்த விவரங்களை பேஸிக்கா வெச்சுக்கிட்டு இந்த புராஸக்டை முடிச்சுக் கொடுத்துட்டுதான் போறீங்க. புரிஞ்சுதா.”
மஞ்சு தலையாட்டினாள். அவன் தந்தவிவரங்களடங்கிய கோப்பை எடுத்துக் கொண்டு தன் கம்ப்யூட்டரில் வந்தமர்ந்தாள்.
அவன் கேட்ட விதமாக அதை பக்காவாக தயாரித்து பிரிண்ட் போட்டு முடிக்கும்போது மணி எட்டு.
“வொண்டர்புல்” என்றான் அசோக்.
“எக்ஸலண்ட் பர்ஃபார்மன்ஸ்! ஓர் உங்க கைக்கு ஒரு வைர மோதிரமே போடலாம் மஞ்சு. சாரி உங்க திறமை தெரியாம உங்களை திட்டிட்டேன். தயவு செய்து மனசுல வெச்சுக்கா தீங்க.”
“பரவால்ல சார்” சொல்லும்போதே மனசு பூரிப்பில் பொங்கியது.
அசோக் தன் பர்ஸ் பிரித்து ஐநூறு ரூபாய் தாளொன்றை எடுத்து கவரில் போட்டு அவளிடம் நீட்டினான்.
“என்ன சார்?”
“உங்க ஓவர் டைம் பணம்.”
“நீங்க உங்க பாக்கெட்லேர்ந்து தரீங்க.”
“உங்களுக்கு ஓவர் டைம் கொடுக்கச் சொல்லி அக்கவுண்ட் செக்ஷனுக்கு இன்னும் ஆர்டர் போகலையே அதான். சரி போலாமா, வாங்க உங்களை டிராப் பண்ணிட்டு போறேன்.”
மஞ்சு தயங்கினாள். இவனோடு வீடு வரை போயிறங்கினால் உள்ளே அழைக்க வேண்டி வரும். வீட்டைப் பார்த்து இவன் முகம் சுளித்தால்?
“உங்களுக்கு எதுக்கு சிரமம் சார்?”
“ஒரு சிரமமும் இல்ல. உங்களை அம்போன்னு எப்டி விட்டுட்டு போறது? போற வழில உங்களுக்கு ஏதாவது ஆயிடுச்சுன்னா எனக்கில்ல பழியாகும். இவ்ளோ அழகான பெண் முதல்ல தனியா இந்த இருட்டுல போலாமா?”
அவன் தன் அழகைப் பற்றி புகழ்ந்ததும் சட்டென்று மஞ்சுவின் முகம் சிவந்தது.
”ப்ஸீ… ஏன் சார் பொய் சொல்றீங்க? நானெல்லாம் ஒரு அழகா?”
“இதானே வேணாங்கறது. நீங்க இப்டி சொன்னா தா இன்னும் நாலு முறை நீங்க அழகு அழகுன்னு சொல்லு வேன்னுதானே?”
“அய்யோ அப்டியெல்லாம் இல்ல.”
”ஓகே மஞ்சு. நீங்க கேட்காட்டாலும் இன்னொரு முறை சொல்ல நான் தயார். முதல் முறை உங்களை எங்க வீட்ல வெச்சு பார்த்தப்போ அட நம்ம ஆபீஸ்ல கூட இப்டி ஒரு உலக அழகியான்னு அசந்துட்டேன். சொல்லப் போனா அப்பா என்னை லண்டன்ல இருக்கற பிரான்ச்சைதான் பார்த்துக்கச் சொல்லி வற்புறுத்தினார். நா இந்தியாவை விட்டு போக மாட்டேன்னு சொல்லிட்டேன். அதுக்கு காரணம் தேசப்பற்றுன்னு தப்பா நினைச்சிடாதீங்க. லண்டன்ல என்ன இருக்கு? வேகாத தோசை கணக்குல வெள்ளைக்கார பெண்களோட சேர்ந்து வேலை செய்ய முடியுமா? அதுவும் எந்த ஒரு அழகியோடும் ஒப்பிட முடியாத ஒரு அபூர்வ அழகு மெட்ராஸ் ஆபீஸ்லயே இருக்கும் போது எவனாவது லண்டனுக்கு போவான்றீங்க?”
அவன் பேசப் பேச மஞ்சு தான் எங்கோ பறப்பதை உணர்ந்தாள். காதும் கன்னத்து சதையும் ரத்தம் அதிகரித்து ஜிவ்வென்ற உணர்ச்சியை அதிகரித்தது.
அழகான ஆண் ஒருவனால் புகழப்படுவதை விட பெண்ணுக்கு பெரிய இன்பமும் இருக்குமா என்ன? மந்திரத்திற்கு கட்டுப்பட்டாற் போல் அவனோடு காரில் ஏறியமர்ந்தாள்.
“என்ன மஞ்சு சைலன்ட்டாயிட்டீங்க. ஓ… உங்க அனுமதி இல்லாம உங்க அழகைப் பத்தி பேசறேன் இல்ல வெரி சாரி…”
“அதில்ல…” மஞ்சு லேசாய் பதறினாள். எங்கே அவன் அத்தோடு புகழ்வதை நிறுத்திக் கொண்டு விடுவானோ என்று பயந்தாள். புகழ்ச்சி இனிமையானது. புகழ்ச்சியில் தான் உலகம் இயங்குகிறது. ஒருவரை ஒருவர் புகழ்வது இல்லையெனில் உலகம் இன்னும் கற்காலத்திலேயே இருந்திருக்கும். அதுவும் அழகு புகழப்படும்போது அதை இன்னும் மெருகூட்டிக் கொள்ளத் தோன்றும். நாளைக்கு என்ன உடையணியலாம், எப்படி ஒப்பனை செய்து கொள்ளலாம் என் மஞ்சு இப்போதே யோசிக்க ஆரம்பித்தாள்.
“வீடு எங்கேன்னு சொல்லிட்டு யோசிங்களேன்” அசோக் புன்சிரிப்போடு அவள் சிந்தனையை கலைத்தான்.
தெருமுனையில் இறங்கிக் கொண்டாள்.
“வீட்டுக்கு கூப்பிட்டா வந்துட மாட்டேன்.”
“சாரி எங்கப்பாவும் அம்மாவும் கொஞ்சம் ஓல்டு டைப்.”
“ஆனா இவ்ளோ லேட்டா போனா மட்டும் சும்மார்ப் பாங்களா?”
”ஓவர் டைமாச்சே. பணம் வருமே. அதனால பேசாம இருப்பாங்க.”
“பாவம் மஞ்சு… நீங்க பணத்துக்காக தன் கொள்கைகளை மாற்றிக்கறவங்க கூட எப்டி இருக்கீங்க.”
மஞ்சு பதில் சொல்லவில்லை.
“ஓகே நாளைக்கு பார்ப்போம்”. அசோக் மிக ஸ்டைலாய் வண்டியை ரிவர்ஸ் எடுத்து திருப்பினான்.
”நாளைக்கும் மூணு மணிக்குதான் வருவீங்களா?”
“ஏன் எப்பொ வரணும்?”
“இல்ல ஜஸ்ட் கேட்டேன். எப்பொ வேணா வாங்க உங்க ஆபீஸ். நீங்கதானே பாஸ்.”
அசோக் சிரித்தபடி சென்றான்.
மஞ்சு அவனை சுமந்தபடி வீட்டுக்கு வந்தாள். அம்மாவின் முகத்தில் அவளைக் கண்டதும் பயமும் கவலையும் கரைந்தது.
“ஏம்மா இவ்ளோ லேட்? பயந்துட்டோம் என்னாச் சோன்னு.”
“எதுவும் ஆகாது. இனிமே தினமும் எட்டு மணியாகும்.”
“ஏன் மஞ்சு?”
”ஓவர் டைம் கிடைக்கும்.”
”எதுக்கும்மா? நாங்க தினமும் நீ வர வரைக்கும் கவலைப்படணும். ஊர் ரொம்ப கெட்டு கிடக்கும்மா.”
“அதெல்லாம் எதுவும் ஆகாது. என்னைப் பாதுகாத்துக்க எனக்குத் தெரியாது? சீக்கிரம் வீட்டுக்கு வந்து என்ன செய்யப் போறேன்? என் கூட யார் மூஞ்சி கொடுத்து பேசறீங்க? அதைவிட ஓவர் டைம் செய்துட்டு வந்தா பணத்துக்கு பணம். படுத்தவுடன் தூக்கம்.”
மஞ்சு அலட்சியமாய் தன் அறைக்கு சென்று உடை மாற்றி, முகம் கை கால் கழுவிக் கொண்டு சாப்பிட வந்தாள்.
“எல்லோரும் சாப்ட்டாச்சா?”
“ம்… மது அப்பவே தூங்கிட்டா. அப்பா இத்தனை நாழி காத்திருந்தது இப்பதான் சாப்ட்டு படுத்தார். நா இன்னும் சாப்டல.”
“அப்ப உட்காரேன்” மஞ்சு சொல்ல யசோதாவும் ஒரு தட்டு வைத்துக் கொண்டு அவள் அருகில் அமர்ந்தாள். அம்பத்தூர் போய் சம்பந்தம் பேசி விட்டு வந்ததை எப்படி பெண்ணிடம் சொல்வது என்ற யோசனையோடு சாதம் எடுத்து போட்டாள்.
தானும் போட்டுக் கொண்டாள். சொன்னால் ஏதாவது ஏடாகூடமாக பேசுவாள். அதை விட விடுமுறையன்று ஒருநாள் எதேச்சையாக வருவது போல் அவர்களை வரச் சொல்லி விட்டால் நிச்சயம் பையனின் அழகும், படிப்பும், சம்பாத்யமும் இவள் மனதை மாற்றிவிடும். அதன் பிறகு இவளிடம் மெல்ல பேசினால் எளிதில் சம்மதித்து விடுவாள்.
“நீயே உன் பெண்ணிடம் சொல்லி விடு” என்று ஷண்முகம் பொறுப்பை அவள் தலையில் கட்டி விட்டதால் இத்தனை யோசனைகள். இறுதியில் சொல்வதை விட சொல்லாமல் இருப்பதே நல்லது என்ற முடிவுக்கு வந்தது யசோதாவின் மனம். அங்கேதான் அவள் தவறு செய்து விட்டாள்.
அத்தியாயம் – 8
மறுநாள் அலங்காரத்திற்கு மிக அதிக நேரம் எடுத்துக் கொண்டாள் மஞ்சு. லேசில் திருப்தி கிடைத்து விட வில்லை. நாலைந்து புடவைகள் மாற்றினாள். நாலைந்து முறை முகம் கழுவி மறுபடியும் ஒப்பனை செய்து கொண்டாள். இறுதியாக ரோஜா நிறத்தில் ஒரு மெல்லி ஷிஃபான் சாரியும் அதே நிறத்தில் பின் கழுத்து நன்றாக இறக்கப்பட்ட கையில்லாத ரவிக்கையும் அணிந்தாள். புடவையை பட்டை வைக்காமல் பறக்க விட்டு ஒரு ஓரத்தை மட்டும் தோளில் பின் செய்தாள். ஷாம்பூ குளியலில் கேசம் பம்மென்று பளபளப்பாய் பறந்தது.
முன்னும் பின்னும் திரும்பி கண்ணாடியில் பார்த்துக் கொண்டாள். ஒரு வழியாய் திருப்தி ஏற்பட்ட பின் கிளம்பினாள்.
“சாப்பிடலையா மஞ்சு.”
“வேணாம்மா. சீக்கிரம் போகணும் நான்” செருப்புக்குள் கால் நுழைத்தாள். ஆட்டோ பிடித்து அலுவலகம் வந்தாள்.
சரியாக பதினோரு மணிக்கு அசோக் கம்பீரமாக நடந்து சென்று தன் அறையில் நுழைந்தான். மஞ்சுவின் முகம் அவனைக் கண்டதும் மலர்ந்தது. ஐந்து நிமிடம் கழித்து குறிப்பு நோட்டுடன் அவன் அறைக்குள் நுழைந்தாள்.
”குட்மார்னிங் சார்.’
“வெரி குட்மார்னிங்” நியூஸ் பேப்பரிலிருந்து தலை நிமிர்ந்த அசோக் மறு வினாடி
“வாவ்…” என்றான் விழி விரித்து.
“அசத்தறீங்க! உலக அழகியெல்லாம் உங்ககிட்ட பிச்சை வாங்கணுங்க. சும்மா சொல்லக் கூடாது. தூள்…”
“கடவுளே!” மஞ்சு சிரித்தாள்.
“ஓகே வேணாம். நா பொய் சொல்றேன்னுவீங்க. நாம வேற சப்ஜெக்டுக்கு போயிடுவோம். எனக்கு பர்சேஸ் பைல் கொண்டு வாங்க. நாம கொஞ்சம் டிஸ்கஸ் பண்ணனும்.”
மஞ்சு அலமாரி திறந்து பர்சேஸ் பைல் எடுத்துக் கொண்டு போனாள்.
“உட்காருங்க.நா சொல்ற விவரத்தை எல்லாம் உன்னிப்பா நோட் பண்ணிக்கிட்டு கம்ப்யூட்டர்ல போட்டுக் கொண்டாங்க.”
அசோக் பர்சேஸ் சம்பந்தப்பட்ட பல விவரங்களை வரிசையாக சொல்ல மஞ்சு குறிப்பெடுத்துக் கொண்டாள் நடுநடுவே தன் யோசனைகளையும் அவள் சொன்னபோது அசோக் வியந்து அவளை பாராட்டினான். ஒரு முக்கியமான யோசனையை அவள் கூறியபோது மிகவும் மகிழ்ந்து சட்டென்று அவள் கை பற்றி குலுக்கினான். மஞ்சு திகைத்துப் போனாள். ஒரு ஆணின் கை இத்தனை மிருது வாய் கூட. இருக்குமா என்று வியந்தாள். அவன் அப்படி கை குலுக்கு பாராட்டியது பிடித்திருந்தது அவளுக்கு… ஆயுள் முழுக்க அந்த கையோடு தன் கரம் பிணைந்திருக்காதா என்ற ஏக்கம் வந்தது.
அன்று முழுக்க அவன் கைகுலுக்கியதை பற்றியே நினைத்துக் கொண்டிருந்தாள். அடிக்கடி தன் உள்ளங்கையை விரித்து பார்த்துக் கொண்டாள். கைகுலுக்கிய காட்சியை மீண்டும் மீண்டும் மனக்கண்ணில் ஓட விட்டுப் பார்த்தாள்.
“மஞ்சு உங்களுக்கு போன்” அசோக்கின் குரல் இண்டர்காமில் ஒலித்தபோது மணி பதினொன்று.
மஞ்சு அவன் அறைக்கு வந்து போனை எடுத்தாள்.
“யாரு?”
“மஞ்சு நா அம்மா பேசறேம்மா.”
“என்ன வேணும்?”
“காலேலயே சாப்டாம போனயே. சாப்பாடு கொடுத்தனுப்பட்டா. நம்ம கீழ் வீட்டு கூடைக்காரம்மா வந்திருக்காங்க. அவங்ககிட்ட குடுத்தனுப்பிடறேனே.”
“வேணாம். நா கேண்டீன்ல ஏதாவது வாங்கிக்கறேன்.”
மஞ்சு போனை வைத்தாள்.
“சாரி! வழக்கமா எனக்கு இந்த ரூம்லதான் போன் வரும். இனிமே இங்க பண்ண வேணாம்னு வீட்ல சொல்லிடறேன்.”
“நோ பிராப்ளம் மஞ்சு. அது சரி என்ன சாப்பாடு கொண்டு வரலையா?”
“ஆமா காலேலயே சாப்பிடாம வந்துட்டேன். அதான் அம்மா போன் பண்றாங்க. சாப்பாடு கொடுத்தனுப்ப வான்னு.”
“காலேலயே சாப்பிடலையா? மைகாட் எப்டி பட்னி இருக்கீங்க வெயிட் மஞ்சு. எனக்கு இப்போ வீட்லேர்ந்து கேரியர் வரும். என்னோட உட்கார்ந்து நீங்க சாப்பிடறீங்க.”
“அய்யோ வேணாம் சார்.”
“பேசக் கூடாது” அசோக் உதட்டில் விரல் வைத்து அடக்கினான். சரியாக ஒரு மணிக்கு அவளை அழைத்தான்.
“உட்காருங்க” என்று சாப்பாட்டு மேஜையை காட்டினான். மஞ்சு கூச்சத்தோடு அமர்ந்தாள்.
“கூச்சப்படாம சாப்டுங்க” அசோக் தானே பரிமாறினான்.
“போதும்…போதும்.”
“நல்லா சாப்டுங்க. காலேலயே சாப்டல இல்ல?”
தன் தட்டிலும் சாதமும் குழம்பும் விட்டுக் கொண்டு அவள் எதிரில் அமர்ந்தான். மஞ்சு தலைகுனிந்தபடி சாப்பிட்டான்.
“என்ன மஞ்சு இவ்ளோ வெக்கப்படறீங்க. ப்ரீயா சாப்பிடுங்க. எங்க வீட்டு சமையல் நல்லாகவே இருக்கும்.”
மஞ்சு புன்னகையோடு அவனை பார்த்தாள்.
“உங்களுக்கு சமைக்கத் தெரியுமா?”
“சுமாரா.”
“உருண்டைக் குழம்பு செய்யத் தெரியுமா?”
மஞ்சு விழித்தாள்.
“எனக்கு ரொம்ப பிடிச்ச ஐயிட்டம்,”
“தெ… தெரியுமே.”
“இஸ்இட். அப்ப ஒருநாள் உங்க கையால செய்து கொண்டு வரீங்க.”
“கண்டிப்பா!” மஞ்சு உருண்டைக் குழம்பு என்றால் என்னவென்று யோசித்தாள்.
“அந்த ஊறுகா கொஞ்சம் போடுங்க.” மஞ்சு மெல்ல மெல்ல அவனுக்கு தன் கையால் பரிமாறினாள்.
“என்ன சொல்லுங்க. இப்டி ஒரு தேவதை பரிமாறினா யாருக்குதான் பசி எடுக்காது? உங்களை கட்டிக்கப் போறவன் கொடுத்து வெச்சவன் மஞ்சு.”
“ஏன்…உங்களைக் கட்டிக்கப் போறவ கூடதான் கொடுத்து வெச்சவ.”
“அப்டியா சொல்றீங்க? நிஜமாவா?”
“நிஜம்மாதான்.”
“அது சரி லவ் மேரேஜைப் பத்தி நீங்க என்ன நினைக்கறீங்க?”
“தெரியாது. எதுவும் நினைக்கல.”
“அனுபவமில்லையா?”
“அப்டித்தான்.”
“சரி உங்களை ஒருத்தன் நேசிக்கறதா வெச்சுக்கோங்க அக்ஸெப்ட் பண்ணுவீங்களா? அறைவீங்களா?”
“அது லவ் பண்றவன் யாருங்கறதை பொறுத்தது.”
“என்னைப் போல ஒருத்தன்னு வெச்சுக்கங்க. சரின்னுவீங்களா? சரிதான் போடான்னுவீங்களா?”
மஞ்சு ஒரு கணம் தடுமாறினாள்.
“அது… அது…”
“ஓகே மஞ்சு நா ஸ்ட்ரெய்ட்டாவே கேக்கறேன். எனக்கு உங்களை ரொம்ப பிடிச்சிருக்கு. என் காதலை ஏத்துப்பீங்களா மறுத்துடுவீங்களா?”
மஞ்சு நம்ப முடியாமல் அவனை பார்த்தாள். இவனா… அவளைக் காதலிக்கிறானா? அவ்வளவு அதிர்ஷ்டசாலியா அவள். திகைப்பிலேயே வார்த்தைகள் எதுவும் வரவில்லை. சிலையாக நின்றிருந்தாள்.
“சரி மஞ்சு நீங்க வாயால எதுவும் சொல்ல வேணாம். சம்மதம்னா உங்க கையால உருண்டை குழம்பு செய்து கொண்டு வாங்க. போதும். இல்லாட்டி சாரின்னு ஒரு வார்த்தை எழுதி என் டேபிள்ல வெச்சுருங்க. அப்புறம் தொந்தரவு செய்ய மாட்டேன்.”
மஞ்சு மனசுக்குள் லேசாகிப் பறந்தாள். எப்பேர்ப்பட்ட அதிர்ஷ்டக்காரி அவள்.
மறுநாள் உருண்டைக் குழம்போடு வரத் தீர்மானித்தாள். அவனிடம் எதுவும் பேசாமல் வெளியேறினாள்.
அத்தியாயம் – 9
“அறிவிருக்கா உனக்கு?” ஷண்முகம் இந்த அளவுக்கு கோபித்து யாரும் பார்த்ததில்லை.
“திடுதிடுப்புன்னு வரச் சொல்றதாம். அப்புறமா உண்மையை சொல்றதாம். உம் பொண்ணு என்ன படிக்காத முண்டம்னு நினைச்சயாக்கும்? இல்ல சின்னக் குழந்தையா நீ சொன்னதும் சரின்னு சொல்ல?”
“அதில்லைங்க.”
“எதில்லை? த பார் பெண் பார்க்க வரப் போறாங்கன்னு அவகிட்ட சொல்ல கூச்சமார்ந்துதேன்னு தான் உன்னை சொல்ல சொன்னேன். பயந்துக்கிட்டு இல்ல. இன்னிக்கு வந்து ஒழுங்கா அவகிட்ட சொல்லிடு. இல்லாட்டி மதுவை விட்டு சொல்லச் சொல்லிடறேன். அவ யாரு என்னன்னு கேட்ட பிறகு விவரம் எல்லாம் நா சொல்றேன். புரிஞ்சுதா?”
அம்மா தலையாட்டினாள்.
“ஆமா… என்ன இன்னும் அவளைக் காணும் மணி எட்டய்டுச்சு?”
“ஓவர்டைம் பண்றாளாம். தினமும் எட்டு மணியாகும்னா.”
“ஏன் சம்பாத்யம் பத்தலையாக்கும்? எதுக்குஓவர்டைம்? காலாகாலத்துல வீட்டுக்கு வரதை விட்டுட்டு?”
“தெரியாமதான் கேக்கறேன். இதை ஏன் அவகிட்ட நேர்லயே கேக்கக் கூடாது? அப்பாவுக்கும் பொண்ணுக்கும் நடூல என்ன மத்தளமா?”
“அவ முகம் கொடுத்து பேசினாதானடி ஏதாவது கேட்க? வரா, ரூமுக்குள்ள பூந்துக்குறா. வெளிய வந்து பத்து நிமிஷம் உக்காந்தாதானே?”
“அவ வராட்டி என்ன, நீங்க உள்ள போய் கேக்கறது.”
“பத்து ரூபா சம்பாரிக்கறதுக்குள்ள அவளுக்கு மனுஷங்க வேண்டாமப் போயிட்டாங்க. திமிராய்டுச்சு. அவகிட்ட போய் என் சுயமரியாதையை இழக்க சொல்றயா?”
“அப்போ எக்கேடும் கெட்டு போகட்டும்னு விட்ருங்களேன்.”
“அது சரி அப்டி விட்டுட்டா நாளைக்கு உலகம் நம்பளை இல்ல கேள்வி கேட்கும்.”
“அக்கா வராம்மா” பால்கனியிலிருந்து மது உள்ளே வந்து சொன்னாள்.
“ஏதோ கார்ல வந்து இறங்கறா.”
அம்மாவும் அப்பாவும் பேசுவதை நிறுத்தினார்கள். மஞ்சு யாரிடமும் பேசவில்லை
வழக்கம்போல் அறைக்குள் புகுந்து கொண்டாள். அலுப்பு போக குளித்து நைட்டியணிந்து வெளியில் வந்தாள்.
“சாப்ட வரயா மஞ்சு.’
சாப்பிடும்போது மஞ்சு மெதுவாக கேட்டாள். “ஏம்மா உனக்கு இந்த உருண்டைக் குழம்பு செய்யத் தெரியுமா?”
“தெரியுமே உனக்கு வேணுமா? நாளைக்கு செய்யவா?”
“நீ செய்ய வேணாம் சொல்லிக் குடு. நா செய்யறேன் ஆபீஸ்ல ஒரு சவால் விட்ருக்கேன். நானே செய்து எடுத்துக் கிட்டு வரேன்னு.”
“அதுக்கென்ன காலேல கத்துத் தரேன். நீயேதான் கையேன். சமையலும் மெது மெதுவாக கத்துக்க வேண்டியது தானே. நாளைக்கே கல்யாணமாகிப் போனாலும் முழிக்க வேணாம் பார்.”
“சமையலா நானா?” மஞ்சு சிரித்தான். எப்பேர்ப்பட்டமாளிகையின் மருமகளா நான் செல்லப் போகிறேன். அங்கே சமையலுக்கே பத்து பேர் இருக்கிறார்கள் என்று உனக்குத் தெரியுமா?
“என்ன மஞ்சு சிரிக்கற?”
“ஒண்ணுல்ல ஏம்மா பொம்பளைன்னா சமைக்கப் பிறந்தவளா! எவ்ளோ படிச்சாலும் சம்பாதிச்சாலும் கூட பொம்பளைதான் சமைக்கணுமா?”
“அப்டி சொல்லலை மஞ்சு.”
“சமைக்கக் கத்துக்கடான்னு எந்த ஆம்பளைகிட்டயாவது சொல்றீங்களா?”
“நீ எவ்ளோ பெமினிஸம் பேசினாலும் குழந்தையை நாமதாண்டி சுமந்தாகணும்” மது நடுவில் புகுந்து பேசினாள்.
“அது பிஸிகல் அரேன்ஜ்மெண்ட் மது. அதனால நாம ஆப்போஸிட் செக்சுக்கு அடிமையா?”
“அடிமையில்ல அதுக்காக தொட்டதுக்கெல்லாம் பெமினிஸம் பேசினா வாழ்க்கை வறண்டு போயிடும். விட்டுக் கொடுத்து வாழறதுதான் அன்பை வளர்க்கும்.”
“ஆமா என்ன இவ்ளோ அட்வைஸ்? என்னமோ நாளைக்கு எனக்கு கல்யாணம் போல.”
“ஏன் மஞ்சு உனக்கு கல்யாண வயசாகலையா? ஆயிடுச்சுன்னு நினைச்சில்ல நாங்க உனக்கு வரன் பாத்துட்ருக்கோம்.”
மஞ்சு வெடுக்கென்று நிமிர்ந்தாள். அம்மாவை முறைத்துப் பார்த்தாள்.
“வரன் பார்க்கறீங்களா எனக்கா?”
“ஏம்மா? அது எங்க கடமைதானே?”
“நா கேட்டேனா உங்ககிட்ட கல்யாணம் பண்ணி வைங்கன்னு?”
“பசங்க கேட்டுதான் எல்லாரும் அவங்களுக்கு கல்யாணம் பண்ணி வைக்கறாங்களா மஞ்சு?”
“என் விஷயத்துல எனக்கு எப்பொ தேவையோ அப்பொ நானே கேட்டுக்கறேன் போறுமா? அதுவரை இந்த மாதிரி வரன் பார்க்கற வேலையெல்லாம் வேணாம் புரிஞ்சுதா? என்னைக் கேக்காம எவனையாவது பெண் பார்க்கன்னு வீட்டுக்கு வரச் சொன்னீங்க நடக்கறாதே வேற” மஞ்சு வேகமாய் எழுந்து கை கழுவப் போனாள்.
அவள் பேசியதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த ஷண்முகத்திற்கு அதற்கு மேல் பொறுமையில்லை. கைகழுவி விட்டு தன் அறைக்குள் நுழையப் போன மஞ்சுவை பார்த்தார்.
“ஒரு நிமிஷம் மஞ்சு.”
மஞ்சு அப்படியே நின்று திரும்பினாள்.
– தொடரும்…
– விட்டில் பூச்சிகள் (நாவல்), முதற் பதிப்பு: 1999, கண்மணி வெளியீடு, சென்னை.