விட்டில் பூச்சிகள்

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 14, 2025
பார்வையிட்டோர்: 5,742 
 
 

(1999ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 1-3 | அத்தியாயம் 4-6 | அத்தியாயம் 7-9

அத்தியாயம் – 4

மறுநாள் ஞாயிற்றுக்கிழமையன்று அப்பா மஞ்சுவையே அழைத்துக்கொண்டு வீடு பார்க்கப் புறப்பட்டார். காலை டிபனை சாப்பிட்டுவிட்டு தெருத் தெருவாக காலி வீடு தேடி அலைந்தார்கள். புதிய நகர்களில் கால் கடுக்க நடந்தார்கள். திருவான்மியூரில் மஞ்சுவை ஓரளவு திருப்தி படுத்தும் வகையில் மனஜ வீடு ஒன்று கிடைத்தது. இரண்டு படுக்கையறையும் ஒரு சிறிய முன்னறையும் கொண்ட தனி வீடு சுற்றிலும் கார்டன் இல்லாவிட்டாலும் காம்பவுண்ட் சுவர் இருந்தது. வாடகை மூவாயிரம் என்றார்கள். அதற்கு குறைந்து இதுபோல் நல்ல வீடும் கிடைக்கவில்லை.

“என்ன சொல்ற மஞ்சு?’

“வேற வழி…இதையே முடிப்போம்.” இன்னும் அலுப்பு தீராத குரலில் சொன்னாள் மஞ்சு. இந்த வீடும் கூட அவள் ஆசையை முழுவதும் நிறைவேற்றவில்லை என்பது புரிய அப்பாவின் கவலை கூடியது.

அட்வான்ஸ் கொடுத்துவிட்டு பஸ் ஸ்டாண்ட் நோக்கி நடக்கும்போது குடிசைப் பகுதி ஒன்றை தாண்டி நடந்தார்கள். சின்னச் சின்ன குடிசைகளில் கவலையற்ற மனிதர்கள். குழந்தைகள் தெரு மண்ணில் ஆனந்தமாக அழுக்குத் துணியும் பரட்டைத் தலையுமாக விளையாட, தெருக்குழாயில் சண்டை போட்டபடி பெண்கள் முட்டி மோதி தண்ணீர் பிடித்துக் கொண்டிருக்க, ஒரு சில பெண்கள் அந்த குழாய்க்கு சற்று தள்ளி தெரு அழுக்கிலேயே சோப்பு போட்டு துணி துவைத்துக் கொண்டும் பாத்திரம் தேய்த்துக் கொண்டும் இருந்தனர். குடிசை வாசல்களில் நாடாக் கட்டிலில் அமர்ந்து பீடி பிடித்தயடி ஆண்கள் சிலர் தினத்தந்தியின் சினிமா செய்திகளை சத்தம் போட்டு படித்துக் கொண்டிருக்க குடிசைகளுக்குள் விறகடுப்பு புகைச்சலில் சமையல் தயாரித்துக் கொண்டிருந்தார்கள் பெண்கள். சில தாவணி இளசுகள் பேசும்படம் வைத்துக் கொண்டு தங்கள் ஹீரோக்களைப் பற்றி பேசி சிரித்துக் கொண்டிருந்தார்கள். நாளையைப் பற்றி சிறிதும் கவலைப் படாமல் இன்றைய வினாடியை மகிழ்ச்சியோடு கழிக்கும் ஏழைகளின் உலகம் அது. 

“எப்படிப்பா இவங்கள்ளாம் இந்த குடிசைக்குள் இருக்காங்க?” மஞ்சு வியப்பும் அருவறுப்பும் கலந்த குரலில் கேட்டாள். “இதெல்லாம் ஒரு வாழ்க்கையா? சுகாதாரமே இல்லாம?” 

“அவங்க முகத்துலல்லாம் அந்த கவலை தெரியுதா பார்த்தயா மஞ்சு? சந்தோஷமாதானே இருக்காங்க. நம்பளை விட உசந்தவங்களை பார்த்து ஏக்கப் படறதை விட நம்மளைவிட கஷ்டப்படறவங்களை பார்த்து சமாதானமாறதுதாம்மா நல்லது.” 

“இப்ப என்ன சொல்றீங்க நீங்க? அட்வான்ஸை திருப்பி வாங்கிடலாமா?” 

“அதில்ல மஞ்சு.” 

“அப்பா உங்க கஞ்சத்தனத்தை பார்த்து அலுத்து போச்சுப்பா. இத்தனை நாள் உங்களை சார்ந்து இருந்ததால என் ஆசைகளை அடக்கிகிட்டேன். ஏக்கங்களை மறைச்சுக்கிட்டேன். வேற வழி? நா ஆசைப்பட்டதையெல்லாம் சொன்னா உடனே வாங்கிக் கொடுத்துடவா போறீங்க? நல்ல படிப்பு கொடுக்கணுங்கறது நியாயமான ஆசைதான். அந்த ஆசைல பெரிய ஸ்கூல்ல சேர்த்துட்டீங்க. சினிமாக்காரங்க வீட்டு பசங்களும், கோடீஸ்வர வீட்டு பசங்களும், படிக்கற ஸ்கூல் அது. டாட்டா சுமோலயும், மாருதிலயும், பியட்லயும், பைக்லயும் வர பசங்களுக்கு நடுல பஸ்ஸுல போகணும். இல்ல நடந்து போகணும். ஸ்கூல் போய் சேர்றதுக்குள்ள ஷுஸ் அழுக்காய்டும். மிஸ் திட்டுவாங்க. பசங்க சிரிப்பாங்க. ஒவ்வொரு பசங்களுக்கும் வீட்லேருந்து விதவிதமா டின்னரே வரும்போது எங்க டப்பால ஆறின சாம்பார்சாதம். இல்லாட்டி தயிர்சாதம், அத்தனை பசங்களும் பர்த்டேன்னா அழஅழகா டிரெஸ்ஸும் சாக்லேட் பாக்ஸுமா வரும்போது எங்க பர்த்டே லீவுலதான் வரும்னு பொய் சொல்லி சமாளிப்போம். என்னிக்காவது கலர் டிரஸ்னு அறிவிச்சாங்கன்னா ஏண்டான்னு இருக்கும். அவங்கவங்க பேஷன் பரேடுக்கு போறாப்பல மாடர்ன் டிரஸ்ல அசத்தும்போது சாதாரண டிரஸ்ஸோட போய் கூசிக் குறுகி நிக்கணும். நல்ல செருப்பு கூட இருக்காது கால்ல பாவம்டி அவங்க புவர் போல்ருக்குன்னு ஒருத்தி உச்சு கொட்டுவா. அப்புறம் எப்படி இவளோ பெரிய ஸ்கூல்ல சேர்ந்தீங்கன்னு இன்னோர்த்தி சந்தேகம் கேப்பா. பணக்காரப் பசங்க கிட்டதான் டீச்சர்ஸீம் இளிச்சி இளிச்சு பேசுவாங்க. அவங்க தப்பு பண்ணினா கண்டுக்கக் கூட மாட்டாங்க. நாங்க தெரியாம செய்துட்டா கூட வெளில நிக்கணும். ஏன்னா அவங்கள்ளாம் டொனே ஷன்னா பத்தாயிரம் கூட கொடுப்பாங்களே. நாங்க? பத்து ரூபா கூட கொடுக்க முடியாதே உன்னால? ஒரு சாதாரண ஸ்கூல்ல சேர்ந்திருந்தா எங்க பள்ளிப் பருவம் இன்னும்கூட நல்லார்ந்திருக்கும்னு தோணும்.” 

“எப்பப் பாரு தாழ்வுணர்ச்சில எவ்ளோ கஷ்டப் பட்டோம்னு உனக்கெப்படி தெரியும்? எல்லோரையும் போல வசதியா வாழணும். விதவிதமா உடுத்தணும். வகை வகையா உண்ணனும்னு நினைக்கறதுல என்னப்பா தப்பு. ஆசைப்படறவன் தான் சராசரி மனுஷன். இதெல்லாம் நார்மலான ஆசைதானே? அப்பதான் வேற வழியில்லாம உன் சம்பளத்துக்குள்ள எங்க ஆசைகளை சுருக்கிக்கிட்டோம். இப்பொ என்ன? பத்தாயிரம் சம்பாதிச்சும் கூட பஞ்ச வேஷம் போடச் சொல்றயா?” 

அப்பா மலைத்துப் போனார். இவர்களுடைய பள்ளிப் படிப்பின் பின்னால் இத்தனை 

ஆதங்கங்களா? எதிர்காலம் கருதி பெரிய பள்ளியில் சேர்த்ததற்குப் பின்னால் இத்தனை காயங்களா? பெரிய பள்ளியில் சேர்த்தால் மட்டும் போதுமா அதற்கேற்றாற்போல் மற்ற விஷயங்கள் என்ன செய்திருக்கிறாய் நீ என்று பெண் கேட்பதும் நியாயம் தானே? 

சின்னஞ்சிறு மனசுகளின் ஏக்கம் புரியாமல் என் லட்சியமே பெரிதென்று இருந்து விட்டேனா? இது சரியா தப்பா? 

அப்பா ஒரு நிமிடம் குழம்பினார். எதுவும் பேசாது நடந்தார். 


அதற்கடுத்த மாதம் பால் காய்ச்சி குடித்த கையோடு சாமான் கடத்தினார்கள். பழைய வீட்டிற்கு இது பெரிது தான். மஞ்சு தனக்கென்று ஒரு படுக்கையறை வேண்டும் என்றாள். இன்னொன்றில் அம்மாவும் மதுவும் படுத்துக் கொள்ள அப்பா ஹாலில் படுத்தார். அம்மாவுக்கு ரொம்ப சந்தோஷம். சமையல்கட்டு நவீனமாயிருந்தது. 

“இப்படி ஒரு சமையல்கட்டுல சமைக்கணும்னு எனக்கும் ரொம்ப நாளா ஆசைதான். பழைய வீட்டுல ஒருத்தர் உள்ள போனா ரெண்டு பேர் வெளில வரணும். இப்படி திரும்பினா இது இடிக்கும், அப்படி திரும்பினா அது இடிக்கும்னு இட நெருக்கடி. ஏதோ மஞ்சு புண்ணியத்துல காலை வீசி நடக்கறாப்பல ஒரு சமையற்கட்டு கிடைச்சுதே.” 

அம்மாவும் மஞ்சுவும் ஒவ்வொரு விதமாய் திருப்திபட்டாலும் அப்பாவும் மதுவும் சமநிலையாகவே இருந்தார்கள் புது வீடு பெரிய பாதிப்பு எதுவும் ஏற்படுத்தி விடவில்லை. 

“ஹாலுக்கு நல்லதா சோபா செட் வாங்கணும்” ஒரு வாரம் கழித்து மஞ்சு மெல்ல ஆரம்பித்தாள். 

“நல்ல செட் வாங்கணும்னா எட்டாயிரம் ஆகும். பணத்துக்கு எங்க போக” என்றார் அப்பா. 

“அதுசரி இருந்தா மட்டும் வாங்கிடுவீங்களா என்ன?” மஞ்சு முனகிக் கொண்டே உள்ளே போனாள். 

புது வீடு வந்ததிலிருந்து அவள் அறைக்குள் இருப்பதே சுகம் என நினைத்து விட்டாள். மற்றவர்களிடம் பேசுவதை கூட தவிர்த்தாள். எப்போதும் தாழிட்ட அறையில் ஏதோ படிப்பதும், பாட்டு கேட்பதுமாக இருந்தாள். யாருக்கும் யாரோடும் பேச நேரமில்லாததால் அவள் ஒதுங்கிப் போனது யாருக்கும் வித்தியாசமாக தெரியவில்லை. முதல் மாத சம்பளம் அவள் வாங்கி வந்த அன்றுதான் அந்த வித்தியாசம் ஒரு சின்ன கோடாய்த் தெரிந்தது. அப்பாவுக்கு அது பெரிய அடி. 

அத்தியாயம் – 5

முதல் சம்பளம் வாங்கிய அன்று வழக்கத்தைவிட லேட்டாயிற்று மஞ்சு வீட்டிற்கு வர. அதற்குள் அம்மா பரிதவித்துப் போய் விட்டாள். உள்ளுக்கும் வாசலுக்கும் நடந்து தீர்த்தாள். 

“அத்தனாம் பணத்தோட பஸ்ஸீல ஏறி… பணத்தை பறி கொடுத்திருப்பாளோ… அல்லது அவளையே யாராவது…” 

“சும்மாருடி…” அப்பா கத்தினார். 

“பஸ் ஸ்டாண்டு வரை போய் பார்த்துட்டு வரலாமில்ல? இந்த ஊரில பொண்ணு கடத்தற கும்பல் இருக்குன்றாங்க எனக்கென்னமோ பயமாயிருக்கு.” 

அப்பா கவலையோடு பஸ் ஸ்டாண்ட் போய், இன்னும் அதிக கவலையோடு திரும்பி வந்தார். அம்மா மஞ்சத் துணியில் குலதெய்வத்திற்கு லஞ்சம் முடிந்து வைத்தாள். 

ஒன்பது மணிக்கு மஞ்சு வந்தாள். அவள் பின்னால் மூன்று சக்கர வண்டியில் சில சாமான்களும் வந்திறங்கியது. கட்டில், மெத்தை, அரை டசன் பிளாஸ்டிக் நாற்காலிகள். 

“என்னம்மா இதெல்லாம்?” 

”வாங்கினேம்பா” மஞ்சு வேறெதுவும் சொல்லவில்லை. கட்டிலும் மெத்தையும் நாற்காலிகளும் அவள் அறைக்கு போயிற்று. உடன் வந்த கடை ஆள் கட்டிலை பிக்ஸ் பண்ணிக் கொடுத்தான். மெத்தையை விரித்தான். விலை உயர்ந்த குர்லான் மெத்தை. கட்டிலும் மெத்தையும் படு படுஎன்றது. மனதை மயக்கியது. கட்டிலை ஓட்டி சுவ ரோரம் மூன்று நாற்காலிகள் போட்டாள். மீதம் மூன்றை ஹாலில் கொண்டு வந்து போட்டாள். 

சாப்பிடும்போது அப்பாவிடம் சம்பள கவரை நீட்டினாள். அப்பா எண்ணினார். சரியாக மூவாயிரம் இருந்தது. அப்பா கேட்காததை அம்மா கேட்டு விட்டாள். 

“என்னடி ஒன்பது வரும்னு மூணு கொடுக்கற? ஓ… கட்டிலும் மெத்தையும் வாங்கிட்ட இல்ல… சரிதான் சரிதான்.” 

மஞ்சு எதுவும் பேசவில்லை. அப்பாவும் எதுவும் கேட்கவில்லை. 

மறுநாள் நாலைந்து புது டிரஸ், மேக்கப் சாதனங்கள், சென்ட் பாட்டில், பியூட்டி கிரீம்கள் என்று வாங்கி வந்து தன் அறையில் வைத்துக் கொண்டாள். அதற்கு மறுநாள் அவள் பின்னல் போய் பம்மென்று பாப் தலையாயிற்று. இந்தி நடிகை மாதிரி இரு தோள்களிலும் ஷாம்பு விளம்பரம் மாதிரி பளபளத்த கேசம் வழிந்தது. ஃபேஷியல் செய்யப்பட்ட முகமும், சீர்திருத்தப்பட்ட புருவங்களும், லிப்ஸ்டிக் உதடுகளும் அவள் அழகைப் பல மடங்கு கூட்டியிருந்தன. 

“நமக்கெதுக்கடி இதெல்லாம்? கல்யாணத்துக்கு நிக்கற பொண்ணு இப்டி முடியை வெட்டிக்கிட்டு வரலாமா?” 

“சும்மாரும்மா… இப்டி போனாதான் எங்க ஆபீஸ் மதிக்கும். வழிச்சு வாரிக்கிட்டு போனா பட்டிக்காட்டு பொணமேங்கும். மாசம் பிறந்தா சுளையா பத்தாயிரம் எண்ணி வெக்குது. இப்படித்தான் நான் இருக்கணும்னு அதுமுடி வெடுத்துது. நானும் மாறிட்டேன்.” 

அம்மா வாயடைத்துப் போனாள். சம்பாதிக்கற பொண்ணை கட்டுப்படுத்துவது கடினம் என்று உணர்ந்திருந்த அப்பா எதுவும் பேசவில்லை. 

அதற்கடுத்த மாதமும் மஞ்சுளா நாலாயிரம் ரூபாய் தான் அம்மாவிடம் கொடுத்தாள். 

“இந்த மாசம் என்ன செலவுடி பண்ணின. எதுவும் வாங்கினாப் போல கூட தெரியலையே.” 

“ஏன்?” 

“இல்ல… நாலுதான் தர…” 

“ஏன் பத்தாதா?” 

“அதில்ல…” 

“த பாரும்மா… வீட்டு வாடகைக்கு மூணு. மிச்சம் ஆயிரம். நீ எனக்கு போடற சாப்பாட்டுக்கு. அதுவே அதிகம்தான். ஹாஸ்டல்னா இதைவிட கம்மியாதான் ஆகும்.” 

மஞ்சுளா மிகச் சாதாரணமாக சொல்ல அம்மா ஆணியடித்தாற் போல் நின்றுவிட்டாள். கண்களில் குளம் கட்டிக் கொண்டது. பேசுவது தன் பெண்தானா என்ற சந்தேகம் வந்தது. எதற்கிப்படி சொன்னாள்? இந்த வீட்டை விட்டு வெளியில் போனால் இன்னும் செலவு குறையும் என்கிறாளா? பத்தாயிரம் ரூபாய் சம்பாதிக்க ஆரம்பித்ததும் என்ன வேண்டுமானாலும் பேசலாம். எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் என்கிற நினைப்பா? 

“நில்லு மஞ்சு” அம்மா சொல்ல, மஞ்சு நின்று திரும்பினாள். 

“இப்ப நீ பேசினதுக்கு என்ன அர்த்தம்?” 

“ஏன் உனக்கு என்ன அர்த்தம் புரிஞ்சுது.” 

“இது ஹாஸ்டல் இல்ல மஞ்சு. வீடு.” 

“சரி வீடுதான். அதுக்கென்ன இப்பொ?” 

“முதல் சம்பளம் வாங்கினதுமே முழுசா உங்கப்பாகிட்ட கொடுத்து கால்ல விழுந்து ஆசி வாங்கியிருக்கணும். ஆனா நீ கண்டதையும் வாங்கிட்டு வந்துட்டு மூவாயிரத்தை கடனேன்னு கொடுத்த. சரி சின்ன பொண்ணு தெரியாம செய்திருப்பன்னு விட்டுட்டேன். இந்த மாசமும் இப்டி கணக்கு பார்த்து கொடுத்தா என்ன அர்த்தம்? மரியாதையா வாங்கின சம்பளத்தை உங்கப்பாகிட்ட கொடுத்து அவர் கால்ல விழு.” 

மஞ்சு அம்மாவை புருவம் சுருங்கப் பார்த்தாள். 

“மிரட்டறயா?” 

“மிரட்டல. கண்டிச்சேன். உன்னை கண்டிக்கற உரிமை எனக்கில்லையா?” 

“இருக்கு. ஆன நா கஷ்டப்பட்டு சம்பாதிக்கற பணத்தையெல்லாம் அப்டியே குடுக்க சொல்றதுக்கு பேரு வழிப் பறிக் கொள்ளை…” 

”என்னடி சொன்ன?” அம்மா பளாரென்று அவள் கன்னத்தில் அறைந்தாள். 

“பெத்தவங்ககிட்ட பேசற பேச்சா இது. உன் சாம்பாத்தியத்தை வாங்கி எனக்கா அட்டிகை செய்து போட்டுக்கப் போறேன்? உன் கல்யாணத்துக்குத்தாண்டி சேர்த்து வைப்போம்.” 

“அதையேதான் நானும் செய்யறேன்” அடிபட்ட கன்னத்தை தடவிக் கொண்டு ஆத்திரத்தோடு மஞ்சு சொல்ல அம்மா அயர்ந்து போனாள். அவளை வெறித்துப் பார்த்தாள். 

அழைப்பு மணி ஒலிக்க அப்பாதான் வருகிறார் எனப் புரிந்து கொண்டு மஞ்சு வெறுப்போடு தன் அறைக்கு செல்ல அதுவரை அவர்கள் சண்டையை திகைப்போடு பார்த்துக் கொண்டிருந்த மது, விரைந்து சென்று கதவை திறந்தாள். 

உள்ளே நிலவிய அமைதி வித்தியாசமாக இருக்க அப்பா கேள்வியோடு இருவரையும் பார்க்க மீது எதுவும் சொல்லாமல் நமுவினாள். அம்மா அவருக்கு டிபனும் காப்பியும் எடுத்து வந்தாள். 

“மஞ்சு இன்னும் வரல?” அப்பா சாப்பிட்டபடி கேட்டார். 

“வந்துட்டா” அம்மா சுரத்தின்றி சொல்லிவிட்டு உள்ளே போக அப்பா நிதானமாக தன் டிபனை முடித்து கைகழுவினார். 

மது அவசரமாக அம்மாவிடம் வந்தாள்.”ஏம்மா அப்பாட்ட சொல்லப் போறயா?” 

“பின்னே? அவ எப்டி பேசினான்னு கேட்டல்ல?” 

“போகட்டும் விடு.” 

“அப்போ சொல்லா தன்றயா.” 

”அவரே கேட்டுக்கட்டும். அவ கொடுத்த பணத்தை மட்டும் அவர்கிட்ட கொடுத்துடு. அதுக்கு மேல எதுவா இருந்தாலும் அவர் நேரடியா அவகிட்ட பேசிக்கட்டும். உங்கிட்ட பேசினா மாதிரி அவர்கிட்ட பேசமாட்டா.” 

“அது துணிஞ்ச கட்டை மது. வாய்த்துடுக்கு அதிகம் அவளுக்கு.” 

“பேசும்போது பார்த்துப்போம். நீ இப்போ எதுவும் சொல்லாத.” 

அவள் சொன்னபடி அம்மா மஞ்சு கொடுத்த பணத்தை மட்டும் கொண்டு போய் அவரிடம் நீட்டினாள். 

“எவ்ளோ குடுத்தா?” 

”நாலாயிரம்.” 

அப்பா எதுவும் பேசாமல் பணத்தை வாங்கிக் கொள்ள அம்மாவுக்கு பொறுமை உடைந்தது. 

“மூவாயிரம் வாடகையாம். ஆயிரம் அவ சாப்பாட்டுக்காம். மிச்ச பணத்தை எல்லாம் அவ கல்யாணத்துக்காக அவளே சேர்த்து வெச்சுப்பாளாம். நம்ம பேர்ல அவளுக்கு நம்பிக்கை யில்லையாம்.” 

அப்பா அமைதியாக கேட்டார். கண் மூடி சற்று நேரம் அமர்ந்திருந்தார். பிறகு மதுவிடம் சொன்னார். 

“அவளை கூப்டு மது.” 

மதுமிதா தயக்கத்தோடு அக்காவின் அறை நோக்கி சென்றாள். ஒரு பூகம்பமே வெடிக்கப் போகிறது! கடவுளே எதற்கு இவளுக்கு வேலை கொடுத்தாய்? இந்த வீட்டின் சந்தோஷத்தில் ஏன் கை வைத்து விட்டாய். 

“உன்னை அப்பா கூப்பிடறார்.” 

மது சொல்ல இதை எதிர்பார்த்தாற்போல் மஞ்சு படித்துக் கொண்டிருந்த புத்தகத்தை பட்டென்று மூடி வைத்து விட்டு அலட்சியமாய் அந்து அவர் எதிரில் நின்றாள். 

“உங்கம்மா எல்லாம் சொன்னா மஞ்சு” அப்பா ஏற இறங்க அவளைப் பார்த்தபடி சொல்ல மஞ்சு எதுவும் பேசவில்லை. 

“உங்கம்மா பைத்தியம் மஞ்சு. அவளுக்கு எதுவும் தெரியல. பெத்த பொண்ணுகிட்ட போய் சாப்பாட்டுக்கு காசு வாங்குவாங்களா என்ன?” 

“இந்தாம்மா” அப்பா அவள் கொடுத்த நாலாயிரத்தையும் அவளிடமே நீட்டினார். 

“உன் கழுத்துல ஒரு தாலி ஏறி நீ புருஷன் வீட்டுக்குப் போகிறவரை உன்னை பார்த்துக்க வேண்டியது எங்க கடமை மஞ்சு. உணவுக்கோ, உறைவிடத்துக்கோ பணம் வாங்கிக்கறவன் நல்ல தகப்பனா இருக்க முடியாது மஞ்சும்மா. இந்த பணத்தை நீ ரொம்ப கஷ்டப்பட்டு சம்மாதிச்சிருப்ப. இதை வாங்கி செலவழிக்க எனக்கு கை கூசுது. நீயே வெச்சுக்கம்மா. உன் மனசு நோகும்படியா உங்கம்மா ஏதாவது பேசியிருந்தாலும் எனக்காக அவளை மன்னிச்சிடு.” 

மஞ்சு திகைத்தாள். உடம்பில் ஆயிரம் தேள் ஊர்வது போல் உணர்ந்தாள். அப்பா புதுவிதமாய் தண்டனை கொடுப்பது போலிருந்தது. இனி இந்த வீட்டில் உண்ணும் போதும் உறங்கும்போதும் உறுத்தும். 

அன்றிரவு யாரும் சரியாக உறங்கவில்லை. 

அத்தியாயம் – 6

இன்டென்சிவ் யூனிட்டிலிருந்து வெளியில் வந்த நர்சை நோக்கி ஓடினாள் மது. 

“அப்பாவுக்கு எப்படி இருக்கு நர்ஸ்?” 

“முன்னேற்றம் இல்லம்மா இன்னும் நினைவு திரும்பல.” 

“பார்க்கலாமா அவரை?” 

”உள்ளே போக முடியாது. கண்ணாடி தடுப்பு வழியா பாருங்க.” நர்ஸ் போய்  விட்டாள். 

மது அம்மாவோடு கண்ணாடிச் சுவர் வழியே அப்பாவை பார்த்தாள். அப்பா சலனமின்றி படுத்திருந்தார். அழ ஆரம்பித்த அம்மாவை சமாதானப்படுத்தி வெளியில் அழைத்து வந்தாள் மது. 

“நீ வீட்டுக்கு போயிடும்மா. நா அப்பாவைப் பார்த்துக்கறேன். மஞ்சு தனியா இருக்கா வீட்ல.” 

“நா எப்டிடி அங்க நிம்மதியா…” 

“பிரச்சினையை புரிஞ்சுக்கம்மா. அப்பாவுக்கு எதுவும் ஆகாது. மஞ்சுவுக்கு துணை வேண்டாமா… அவ இருக்கற நிலைமைல அவளும் ஏடா கூடமா ஏதாவது செய்துக்கிட்டா? நீ புறப்படு.” 

மது அம்மாவை வற்புறுத்தி ஆட்டோவில் ஏற்றி வீட்டுக்கு அனுப்பி விட்டு மறுபடியும் வந்து வராண்டா பெஞ்சில் அமர்ந்து கொண்டாள். 

“எப்படியிருந்த வீடு! எத்தனை சிநேகமான தகப்பன்? மஞ்சு ஏன் எவரையும் புரிந்து கொள்ளவில்லை.” 

“ஏம்மா மது… ஓடியா.. உங்கப்பா லேசா கண் திறக்கறார்.” 

நர்ஸ் கத்த மது பாய்ந்தோடிச் சென்றாள். 

அப்பா அவளை அடையாளம் கண்டுகொள்ள மிகவும் சிரமப்பட்டார். கால் நினைவுதான் வந்திருந்தது. 

“அப்பா எப்படிப்பா இருக்கு.. நா மதுப்பா… என்னை பாருங்களேன்.” 

அப்பா சிரமப்பட்டு கண் திறந்தார். ஏதோ பேச அவர் நாக்கு துடித்தது. 

“என்ன சொல்லுங்கப்பா.” 

“மஞ்… மஞ்சு…” அப்பா மறுபடியும் மயக்கத்திலாழ்ந்தார். 

மஞ்சுவை பத்திரமா பார்த்துக்க என்று சொல்ல வந்தாரா? மதுவுக்கு அழுகை வந்தது. வெளியில் வந்து பெஞ்சில் சாய்ந்தமர்ந்து கண்களை மூடிக் கொண்டாள். 

மஞ்சு! என்ன சொல்ல வந்தார் மஞ்சுவைப் பற்றி? மஞ்சு மட்டும் அவரை மதித்து நடந்திருந்தால் அப்பாவை கட்டாய ஓய்வெடுக்கச் சொல்லி சந்தோஷமா வைத்திருக்கலாம். இப்படி ஒரு விபத்தையும் அவர் சந்ததிக்க நேர்ந்திருக்காது. 

மது பெருமூச்சு விட்டாள். 

எல்லாம் விதி என்று சமாதானப்படுத்திக் கொள்ள அவளால் முடியவில்லை. நினைவுகள் மறுபடியும் மஞ்சுவை நோக்கியே சென்றது. 


“ஹலோ மஞ்சு என்ன ரொம்ப டல்லார்க்கீங்க.” 

எம்.டி. அழைக்கிறார் என்று உள்ளே சென்ற மஞ்சு எம்.டின் சேரில் உட்கார்ந்தபடி கேள்வி கேட்ட இளைஞனை வியப்போடு பார்த்தாள். அவன் சிரித்தான். 

“என்னடா யாருன்னே தெரியல. தெரிஞ்சா போல் பேசறானேன்னு ஆச்சரியமாயிருக்கா. என்னை நீங்க பார்த்ததில்ல. உங்களை எனக்கு தெரியும். எங்க வீட்டுக்கு நீங்க வந்தப்பொ பார்த்திருக்கேன். பட் பேசல. அப்பா உங்களைப் பத்தி சொல்லியிருக்கார். ரொம்ப பிரில்லியண்ட்னு. சரி அடிக்கடி சொல்றாரேன்னு உங்களைப் பார்த்து அறிமுகப்படுத்திக்கிட்டு போலாம்னு வந்தா ரொம்ப டல்லார்க்கீங்க நீங்க! வாட் ஹேப்பண்ட் டு யுவர் உற்சாகம்?’ 

மஞ்சு இன்னும் திகைத்தாள். 

“அப்பா என்று இவன் யாரைச் சொல்கிறான். அதுவும் எம்.டி.யின் சேரில் அமர்ந்து கொண்டு? ஒரு வேளை எம்.டி.யின் மகனா? எம்.டி.வீட்டுக்கு மட்டும்தான் அவள் போயிருக்கிறாள்.” 

“யூ ஆர் கரெக்ட் மேடம். யுவர் எம்.டி.இஸ் மை ஃபாதர். ஐ ஆம் அசோக் ஏ டூ  இசட்.” 

மஞ்சு விழி விரித்தாள். “ஏ டூ இசட்? புரியலையே.” 

“அதாவது ஏ டூ இசட் என்னல்லாம் பட்டம் இருக்கோ எல்லாம் எம் பேருக்கு பின்னால் உண்டுன்னு சொன்னேன்.” 

அவன் தன் தோள் குலுக்கி சிரிக்கி, மஞ்சு அவனையே பார்த்தாள். செக்கச் செவேலென்ற தோற்றம். நல்ல உயரம். பம்மென்ற கேசம். உயர்தர உடை,  மேல்நாட்டு சென்ட்டின் மணம், அடர்ந்த மீசைக்கடியில் விஷமச் சிரிப்போடு அழுத்தமான உதடுகள். 

மஞ்சுவின் கனவு நாயகன் இப்படித்தான் இருப்பான். தன் வாழ்க்கையைப் பற்றி அவள் நிறைய கற்பனை செய்து வைத்திருந்தாள். துரத்தி துரத்தி அவளைக் காதலிப்பான் அவன். வெறித்தனமான காதல் அது. உலகத்தில் வேறு எந்த பெண்ணையும் அவன் ஏறெடுத்துப் பார்க்க மாட்டான். கோடி கோடியாய் சம்பாதிப்பவன் அவன். அவளுக்காக உலகத்து ஆபரணங்களையும் பொருட்களையும் வாங்கி தினம் ஒரு பரிசளிப்பான். அவளைத் தன் தேவதையாக நினைத்து கண்ணுக்குள் பொத்தி வைத்திருப்பவன். அவன் அவள்மீது கொண்டிருக்கும் காதலைக் கண்டு உலகத்துப் பெண்களெல்லாம் பெருமூச்சு விடுவார்கள். இப்படியும் ஒரு கணவனா என்று வியந்து போவார்கள். அவன் அவளுக்காக ஒரு அழகிய காதல் மாளிகை கட்டுவான். அதில் சொர்க்க லோகத்தையும் மிஞ்சும் அழகும் அலங்காரமும் கொஞ்சும். தினம் ஒரு காரில் அவனோடு பயணிப்பாள் அவள். அவர்கள் தினம் ஒரு வெளிநாடு செல்வார்கள். நேரம், காலம் மறந்து அவன் அவளை கொஞ்சியபடியே இருப்பான். ஒரு கணமும் அவளைப் பிரிய விரும்பமாட்டான். 

கனவுகளும், கற்பனைகளும் இல்லாவிடில் மனிதவாழ்வு சுவையற்று வறண்டு போயிருக்கும். ஏதோ ஒரு விதத்தில் மனிதருக்கு அவை திருப்திளயிப்பதால் அவர்கள் அமைதியடைகிறார்கள். 

மஞ்சு தன் கனவுக் காதலனோடு தினம் உலகை சுற்றி வந்தாள். கற்பனை சுகத்தில் உறக்கம் தழுவும். விடியும்போது மறுபடியும் நிஜம் தாக்கும் கனவுகள் நிஜமாகுமா என்ற ஏதோ ஒரு விதத்தில் மனிதருக்கு அவை திருப்தியளிப்பதால் அவர்கள் அமைதியடைகிறார்கள். 

மஞ்சு தன் கனவுக் காதலனோடு தினம் உலகை சுற்றி வந்தாள். கற்பனை சுகத்தில் உறக்கம் தழுவும். விடியும்போது மறுபடியும் நிஜம் தாக்கும் கனவுகள் நிஜமாகுமா என்ற ஏக்கத்தோடு தன் கடமைகளை செய்வது வழக்கமாகி விட்டது. ஆனால் இதோ இந்த வினாடி எம்.டி.யின் மகனைப் பார்த்தபோது அவளுக்கு ஏன் தன் கனவு நாயகனைப் பற்றிய நினைவு வந்ததென்று தெரியவில்லை. 

“என்ன மஞ்சு என்ன யோசனை?” அசோக் புன்னகையோடு சிரிக்க, மஞ்சு சட்டென்று நிஜத்துக்கு வந்தாள். 

”உங்களுக்கு என்ன வேணும் சார். எம்.டி.ஏதாவது பைல் கேட்டனுப்பினாரா?” 

“இல்ல ஜஸ்ட் வந்தேன். கொஞ்சம் ஆபீஸ் வேலையும் கத்துக்கன்னு அப்பா சொன்னார். சரி கத்துக்கலாம்னு வந்தேன். இன்னிலேருந்து நீங்க என் பி.ஏ.மாதிரி. எல்லா விஷயத்துலயும் எனக்கு உதவி செய்யறீங்க சரியா?” 

“வித் பிளஷர் சார்.” 

“அதுக்குள்ள சந்தோஷம்னு சொல்லிடாதீங்க, ஒரு வேளை நீங்க லேட் அவர்ஸ் இருக்க வேண்டி வரலாம். யோசிச்சு சொன்னா போதும்.” 

“இதுல யோசிக்க என்ன சார் இருக்கு. வேலைன்னா கொஞ்சம் முன்ன பின்னதான் ஆகும்.” 

“இல்ல… உங்க வீட்ல லேட்டா போனா எதுவும் சொல்ல மாட்டாங்களா?” 

“சொல்ல மாட்டாங்க.” 

”ஆச்சர்யமார்க்கு.” 

“என்னை எதுவும் சொல் அங்க யாருக்கு துணிவில்லை.” 

“ஓஹோ உங்க வீடு அப்பொ எல்லாத்துக்கும் உங்களை நம்பிதான் இருக்குன்னு சொல்லுங்க.” 

“அது…” மஞ்சு சட்டென்று தடுதாறினாள். ‘சல்லிக்காசு தன்னிடமிருந்து அப்பா எதிர்பார்ப்பதில்லை’ என்று சொல்ல நா கூசியது. “ஆமாம்” என்றாள் மெதுவாக. 

“அப்டி சொல்லுங்க” அசோக் சிரித்தான். 

“அப்படி லேட்டாச்சுன்னா உங்களுக்கு ஓவர்டைம் போட்டு பணம் வாங்கிக்கலாம் நீங்க. ஒரு மணி நேரத்துக்கு இருநூறு ரூபா.” 

‘மைகாட்!’ மஞ்சுவிழிவிரித்தாள். இரு நூறு ரூபாய் என்றால் தினம் இரண்டு மணி நேரம் செய்தால்கூட மாதத்திற்கு உபரிப் பணமாகவே ஏழாயிரம் எட்டாயிரம் தேறுமே. 

பணம் கசக்குமா என்ன? மஞ்சு சம்மதத்தோடு தலையாட்டினாள். 


“நீங்க செய்தது சரின்னு தோணுதா உங்களுக்கு?” 

“எதைச் சொல்ற?” 

“அவ குடுத்த காசையும் வேணாம்னு திருப்பிக் கொடுத்துட்டீங்க! எப்டிங்க சமாளிப்பீங்க? வாடகையே மூவாயிரம் முழுங்குமே! எதைக் குறைப்பீங்க? எதைக் கூட்டுவீங்க?” 

அம்மா கவலையோடு கேட்க, அப்பா ஈஸிசேரில் கண்மூடி படுத்திருந்தார். 

‘வாஸ்தவம்தான். எதைக் குறைப்பது, எதைக் கூட்டுவது? எல்லாம் பழைய செலவுதான். வீட்டு வாடகை மட்டுமே கையை கடிக்கக் கூடிய விஷயம். மாதம் மூவாயிரம் என்று எத்தனை மாதம் சமாளிக்க முடியும்? பெண்ணின் அலட்சியப் போக்கு அவர் சுய கவுரவத்தை சுண்டிப் பார்க்கிறதே. என்ன செய்ய? எப்படியாவது சமாளித்து தான் ஆக வேண்டும் கடன்பட்டாவது. ஆனால் ரொம்ப நாள் முடியாது. ஒரு இரண்டு மூன்று மாதம் சமாளிக்கலாம். அதற்குள் அவள் கல்யாணத்தை முடித்து விட்டால் பழையபடி இவர்கள் சிறிய வீட்டுக்கே போய் விடலாம். செலவு கட்டுக்குள் அடங்கி விடும். இப்போதைக்கு இதுதான் நல்ல வழி.’ 

“என்னங்க என்ன யோசனை?” 

“ம்? ஒண்ணுல்ல. மஞ்சு கல்யாணத்தை பத்திதான் யோசிச்சேன்.” 

“அதச் செய்ங்க முதல்ல. பாரமும் குறையும். பணப் பிரச்சனையும் தீரும்.” 

அப்பா தலையாட்டினார். 

“நாளைக்கு வெள்ளிக்கிழமை. அவ ஜாதகத்தை ஒரு காப்பி எடுத்து பூஜைல வெச்சு குடு. தெரிஞ்சவங்க கிட்டல்லாம் சொல்லி வைப்போம்.” 

“இவ படிப்புக்கும் சம்பாத்தியத்துக்கும் நீங்க ஏங்க தேடிக்கிட்டு அலையணும். வீடு தேடியே வரனுங்க வந்துட்டுதானே இருக்கு?” 

“எப்பொ வந்துது? சொல்லவேல்லியே” 

“அது வந்தது. நா சொன்னா வேணாம், இப்பொ அவ கல்யாணத்துக்கு என்ன அவசரம்னுவீங்க. அதான். சொல்லல.” 

அம்மா சாமி படத்துக்கு பின்னாலிருந்து கற்றையாக ஜாதகப் பேப்பர்களை எடுத்து வந்தாள். சிலவற்றில் போட்டோவும் கூட இருந்தது. 

“எல்லாம் ரொம்ப பெரிய இடம் போல இருக்கே எவ்ளோ கேப்பாங்களோ என்னவோ? நம்ம சக்திக்கு தகுந்த வரனா பார்த்தாதான் நம்மால சீர் செய்ய முடியும்.” 

“ஏங்க சக்திக்கு தகுந்ததா பார்க்கலாம். ஆனா நம்ம மஞ்சு படிப்பு சம்பாத்தியத்தை விட அந்த பிள்ளையாண்டான் சம்பளம் குறைச்சலா இருந்தா எப்டிங்க சரிப்படும்?” 

“இப்பொ என்ன செய்யலான்ற?” 

“கொஞ்சம் நல்ல இடமாவே பார்க்கலாங்க. இதோ பாருங்க இந்த பையனை. கம்ப்யூட்டர் என்ஜினீயராம். பதினைஞ்சாயிரம் சம்பாதிக்கறானாம். இன்னும் நல்ல எதிர்காலம் இருக்கால். பேர் சக்கரவர்த்தி. ஒரே பையன். எனக்கு சுத்தி வளைச்சு தூரத்து சொந்தம். அப்பா கிடையாது. அம்மா மட்டும்தான். மார்க்கெட்ல ஒருமுறை பார்த்து வீட்டுக்கு கூட்டிட்டு வந்தேன். மஞ்சுவோட போட்டோ பார்த்தாங்க. அவங்களுக்கு ரொம்ப பிடிச்சு போச்சு. நான்தான் உங்ககிட்டே சொல்லிட்டு வந்து பேசறோம்னு சொல்லியனுப்பினேன். அதுக்குள்ள இந்த பொண்ணு நடந்துகிட்ட விதத்துல. எல்லாமே எனக்கு அலுத்து போச்சு. உங்ககிட்ட சொல்லக்கூட மறந்துட்டேன்.” 

“எங்க இருக்காங்க?’ 

“அம்பத்தூர்ல. பையனுக்கு பெங்களுர்ல வேலை.” 

“அது சரி இவளுக்கு மாற்றல் கிடைக்குமா?” 

“கிடைக்காட்டி விட்டுட்டு பெங்களுர்ல வேற வேலை தேடிக்கறது. இவ படிப்புக்கு வேலை வீடு தேடி வருமேங்க.” 

“அதுவும் சரிதான்” அப்பாவுக்கு திருப்தி ஏற்பட்டது. 

“அப்போ நாளைக்கே அம்பத்தூர் போவோமா? நா ருக்மிணிக்கு போன் போட்டு வரோம்னு தகவல் சொல்லிடவா?” 

“யப்பா…எவ்ளோ வேகம் உனக்கு?” அவர் சிரித்தார் சரி என்று தலையாட்டினார். 

மறுநாள் கணவரும் மனைவியும் பிள்ளை வீட்டுக்கு போனார்கள். சிறிய பங்களா. நேர்த்தியாக அலங்கரிக்கப் பட்டிருந்தது. வரவேற்பறை முழுக்க பள்ளிப் பருவத்திலிருந்து சக்கரவர்த்தி வாங்கியிருந்த கேடயங்களும் கோப்பைகளும், மெடல்களும் மெருகு குலையாமல் வரிசையாக வைக்கப்பட்டிருந்தது. 

சக்கரவர்த்தியின் பெரிய போட்டோவும் ஹாலில் சிரித்தது. மிக கண்ணியமான தோற்றம். 

“அவங்கப்பா செத்துப் போகும்போது சக்கரவர்த்திக்கு ஏழு வயசு. ரொம்ப சிரமப்பட்டு ஒரு லட்சிய மகனா அவனை வளர்த்துட்டேன். நா சொல்றதை எம் பிள்ளை தட்டவே மாட்டான். நீ பார்க்கற பொண்ணை கண்ணை மூடிக்கிட்டு கட்டிக்குவேன்னு சொல்லியிருக்கான். என் மேல அவ்ளோ நம்பிக்கை. உங்க குடும்பத்தோட சம்பந்தம் வெச்சுக்கறதுல எனக்கு ரொம்ப சந்தோஷம். எனக்கோ என் பிள்ளைக்கோ வரதட்சணைங்கற வார்த்தை கூட பிடிக்காது. என் மருமகளுக்குன்னு ஆறு பவுன்ல ஒரு அட்டிகையும், நாலு பவுன்ல வளையலும் செஞ்சு வெச்சிருக்கேன். உங்க சவுகர்யப்படி நகை போட்டு எளிமையா கல்யாணம் செய்து கொடுத்தா போதும். எவர்சில்வர் பாத்திரம் இங்கேயே எக்கச்சக்கமா இருக்கு. எதுவும் வேணாம். சில்வர் கூட வேணாம். உங்க திருப்திக்கு ஒரு குத்துவிளக்கு மட்டும் வேணா கொடுத்தனுப்புங்க போதும். சீர் சினத்தியை விட ரெண்டு பேரும் மனமொத்து வாழறதுதான் முக்கியம்னு நா நினைக்கறேன். என்ன சொல்றீங்க?’ 

பிள்ளையின் அம்மா பேசி முடிக்க ஷண்முகம் வாய் பிளந்தார். நம்ப முடியாமல் அந்த பெண்மணியையே பார்த்தார். இந்த காலத்தில் இப்படியும் மனிதர்களா? இப்படி ஒரு சம்பந்தம் கிடைக்க பூர்வ ஜென்ம புண்ணியம் வேண்டும். மஞ்சு கொடுத்து வைத்திருக்கிறாள். இந்த வீட்டில் அவள் சவுக்கியமாய் வாழ்வாள். அதே நேரம் இந்த தாயை அவள் மரியாதையோடு நடத்த வேண்டும். கடைசி வரை இந்த தாயின் மனதை வேதனைப்படுத்தாது வாழவேண்டும். இருப்பாளா மஞ்சு? அவருக்கு கவலையும் ஏற்பட்டது தன் பெண்ணின் குணத்தை நினைத்தபோது. 

“எப்பொ நீங்க பெண் பார்க்க வரீங்க?’ 

“அடுத்த வாரம் என் கணவரோட திதி வருது. அப்போ அவன் வருவான். வந்ததும் தகவல் சொல்லிட்டு வரோமே.” 

“நல்லதும்மா. நாங்க பண்ணின பாக்கியம்தான் உங்களோட சம்பந்தம் கிடைக்கறதுக்கு.” 

“நீங்களும் உங்க பொண்ணுகிட்ட சம்மதம் கேட்டு வெச்சுக்கங்க. அப்புறம் பொண்ணுக்கு பிடிக்காம…” 

“ஆங்… அதெல்லாம் இல்ல. எம் பொண்ணும் எங்க விருப்பத்தை மீறி நடக்க மாட்டா.” 

சம்பந்தியம்மா வாசல் வரை வந்து வழியனுப்பினாள். 

“எப்டி நம்ம செலக்ஷன்?” யசோதா வரும் வழியில் கேட்டாள். 

“ம் நல்ல இடம்தான் ஆனா நம்ப பொண்ணு குணம் தான் எனக்கு கவலையாயிருக்கு. அவங்க இவளை ரொம்ப நல்லா வெச்சிருப்பாங்க. சந்தேகமேல்ல. ஆனா இவ அவங்களை சந்தோஷப்படுத்துவாளா. சங்கடத்தை கொடுப்பாளான்னு நினைச்சா கவலையார்க்கு.” 

“அதெல்லாம் கவலையே வேண்டாம். தன் கல்யாணத்தை காரணம் காட்டிதானே அவ சுயநலமா நடந்துக்கறா. அந்த கல்யாணமே ஜாம்ஜாம்னு நடந்துட்டா அப்புறம் அவளும் நம்மளைப் புரிஞ்சிப்பா. எப்பேர்ப்பட்ட இடம் தனக்கு கிடைச்சிருக்குன்னு… தெரிஞ்சுக்கிட்டா ரொம்ப சந்தோஷப்படுவாங்க.” 

”பார்ப்போம்” ஷண்முகம் யோசனையோடு தலையாட்டினார். 

– தொடரும்…

– விட்டில் பூச்சிகள் (நாவல்), முதற் பதிப்பு: 1999, கண்மணி வெளியீடு, சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *