கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதை வகை: முதல் அத்தியாயம்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 12, 2025
பார்வையிட்டோர்: 5,686 
 
 

(1999ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 1-3 | அத்தியாயம் 4-6

அத்தியாயம் – 1 

அவன் அவளை ஏற இறங்கப் பார்த்தான். பிறகு கேட்டான் ஆங்கிலத்தில். 

“உன் பெயர்?” 

“மதுமிதா” 

“வயது?” 

“பெண்ணின் வயதும் ஆணின் ஊதியமும் யாரும் கேட்கக் கூடாத விஷயங்கள்.” 

“அது யாரோ ஊதியம் குறைச்சலான ஆணும் இளமையைத் தொலைத்த பெண்ணும் கூறிய பழமொழியாயிருக்கும். என் ஊதியத்தைப் பற்றி சொல்ல நான் தயங்க மாட்டேன்.” 

“அப்படியானால் நானும் கூறத் தயார்தான். என் வயது இருபது.” 

“இதை உங்கள் விண்ணப்பத்தில் ஏன் பூர்த்தி செய்யவில்லை?” 

“சாரி மறந்திருப்பேன்.” 

“இதையே மறக்கும் உங்களிடம் எங்கள் அலுவலகத்தில் எப்படி பெரிய 

பொறுப்புகளை ஒப்படைக்க இயலும்?” 

“மன்னிக்கவும். உங்கள் அலுவலகத்தில் பெரிய பொறுப்புக்கள் பற்றிய 

சிந்தனையில்தான் இச்சிறிய விஷயத்தை மறந்து விட்டேன்.” 

“நல்ல சமாளிப்பு” அவன் சிரித்தான். 

“உங்கள் சிரிப்புக்கு அர்த்தம் எனக்கு வேலை கிடைத்து விட்டது என்று எடுத்துக் கொள்ளலாமா?” 

“அவன் அதற்கும் சிரித்தான். அவளுடைய விண்ணப்பத்தில் அவள் வயதை பூர்த்தி செய்து தன் கைப்பட ஏதோ எழுதினான். பஸ்ஸரை அழுத்தி பவ்யமாக வந்து நின்ற பியூனிடம் அவள் விண்ணப்ப ஃபைலை கொடுத்தனுப்பினான். அதன் பிறகு அவளிடம் எதுவும் பேசாது அவசர கோப்புகள் சிலவற்றை படிக்க ஆரம்பித்து விட்டான். அவள் துடிப்பு அதிகமாயிற்று. என்ன எழுதினான் விண்ணப்பம்மில் என்று தெரிந்து கொள்ள தவித்தாள். அவனோ அவளுடைய தவிப்பைப் பற்றி துளியும் புரிந்து கொள்ளாமல் தன்பாட்டுக்கு ஏதோ வேலையில் மூழ்கிப் போனதைக் கண்டு அவளுக்கு லேசாய் எரிச்சலேற்பட்டது. வாய் திறந்து ஏதாவது சொல்லி விட்டால் என்ன கவுரவம் குறைந்து விடுமாம்? மவுனமாய்க் கழிந்த பத்து நிமிடத்தில் நிறைய நகம் கடித்தாள்.” 

“உங்கள் பிளட் குரூப் என்ன?” அவன் திடீரென்று கேட்கவும் ஒரு வினாடி தடுமாறினாள். 

”ஏ பாஸிடிவ்… எதற்கு கேட்கிறீர்கள்?’ 

“நீங்கள் நகம் கடிக்கும் வேகத்தில் ஒருவேளை தேவை ஏற்பட்டால்… அதற்காகத்தான் கேட்டேன்.” 

அவள் சட்டென்று வாயிலிருந்து விரலை எடுத்தாள். முகம் சிவக்க தலை குனிந்தாள். 

“உங்களுக்கு இன்னும் சற்று நேரத்தில் வேலைக்கான உத்தரவு வந்து விடும். அதுவரை பாவம் அந்த நகங்களை வதைக்க வேண்டாமே.” 

கண்கள் சிரிக்க அவன் சொன்னபோது அவள் அசட்டு சிரிப்போடு நெளிந்தாள். 

“இதை நீங்கள் முதலிலேயே சொல்லியிருந்தால் நான் நகம் கடித்திருக்க மாட்டேன்.” 

“நகம் கடிப்பதை கெட்ட பழக்கம் என்று உங்களுக்கு யாரும் சொன்னதில்லையா?”

“உங்கள் உதடு கறுத்திருப்பதை கண்டால் உங்களுக்கு சிகரெட் பழக்கம் உண்டு என்று நினைக்கிறேன். அது கூடத் தான் கெட்ட பழக்கம்.” 

அவன் முகத்தை மேலே தூக்கி கண்களை மூடி சிரித்தான். அந்த சிரிப்பு 

அவளையும் தொற்றிக் கொண்டது. பியூன் கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்து டைப் செய்த பேப்பரை பைலோடு நீட்டினான். அவன் அதை வாங்கி கையொப்பமிட்டு அவளிடம் நீட்டினான். 

“வாழ்த்துக்கள்.” 

“ரொம்ப நன்றி சார்” அவள் விழிகள் பளபளக்க வாங்கிக் கொண்டாள். 

“நாளை முதல் நீங்கள் சார்ஜ் எடுத்துக் கொள்ளலாம். இன்று ஒருநாள் ஓய்வெடுத்துக் கொண்டு புதுப்பொலிவோடு வாருங்கள்” அவன் எழுந்து தன் கரம் நீட்டினான். அவளும் பதிலுக்கு கரம் நீட்டினாள். 

ஒரு சின்ன குலுக்கலுக்குப் பின் கரங்கள் பிரிந்தன. அவள் விடைபெற்று கதவு  வரை வந்து “உங்கள் பெயர் என்ன என்பதை தெரிந்து தெரிந்து கொள்ளலாமா?” என்று கேட்டாள். 

“பாலசுப்பிரமணியன். ஆபீசில் அனைவருக்கும் பாலு வீட்டில் சுபப்பிரமணியன்.” 

அவள் புன்னகைத்தபடி வெளியேறினாள். 

எட்டரை மணிக்கு அம்மா அப்பாவின் ஆசீர்வாதங்களை சுமந்து கொண்டு புறப்பட்டபோது கூட அவளுக்கு நம்பிக்கையில்லை. எந்தனையோ நேர்முகத் தேர்வுகள், நமுத்துப் போன வெடிகளாய்த்தான் ஆகியிருக்கின்றன. அதுபோல் இதுவும் புஸ்தான் என்ற அவநம்பிக்கையோடு தான் புறப்பட்டாள். அவள் புறப்படும்போது பார்த்துதான் வங்கக்கடல் புயலும் மிக அவசரமாய் கரை கடக்க புறப்பட்டது. காற்றும் மழையும் சீறியது. தகரக் கூரைகள் பறந்து விழுந்து பலரை காயப்படுத்தின. மரங்கள் வேரோடு ஆடி எப்பொழுது விழுமோ என்ற நடுக்கத்தை ஏற்படுத்தியது. காற்றுக்கும் மழைக்கும் பயந்து மனிதர்கள் ஒதுங்கினார்கள். வீதிகள் வெறிச்சிட்டன. உயிருக்குத் துணிந்தவர்கள் ஒரு சிலரைத் தவிர பஸ் ஸ்டாண்டில் ஆள் எவரும் இல்லை. மதுமிதாவின் குடை காற்றுக்குத் தாக்குப் பிடிக்க முடியாமல் பலவித உருவங்களை எடுத்து கம்பிகள் வளைந்து கோரமாய் கிழிந்தது. குடையை மடக்கிக் கொண்டு மழையில் நனைந்தபடி பஸ்சுக்கு காத்திருந்தாள். காற்று ஆளைத் தள்ளியது. தூரத்தில் பச்சை பஸ் தெரிந்தது. கிட்டே வந்து ஏமாற்றியது. அவள் போக வேண்டிய எண் அல்ல. மதுமிதா கடிகாரத்தைக் கவலையோடு பார்த்தாள். இன்னும் ஐந்து நிமிடத்தில் பஸ் கிடைத்தால் குறித்த நேரத்திற்குள் போய் சேர்ந்து விடலாம். தாமதமாகப் போய் மழை என்று சாக்கு சொல்லி இயற்கையின் மீது பழி போடப் பிடிக்கவில்லை அவளுக்கு ஆட்டோவில் செல்லலாம். ஆனால் கைப்பையில் இருப்பது மொத்தமே நாற்பது ரூபாய்தான். அப்பாவின் மாசக் கடைசி, ஆட்டோவுக்கு முற்றுப்புள்ளி வைத்தது. மதுமிதா பஸ் வரும் திசையை கவலையோடு பார்த்தாள். மற்றொரு பச்சை புள்ளி தெரிந்தது. அவசரமாய் முச்சந்தி வினாயகருடன் ஒரு ரூபாய் லஞ்ச பேரம் நடத்தினாள். போனால் போகட்டும் என்பது போல ஒரு ரூபாய் லஞ்சத்திற்கு ஒப்புக்கொண்டு பஸ் அனுப்பினான் வினாயகன். ஈரக்குடை மனிதர்களின் நெரிசலில் கலந்து இன்னும் ஈரமானாள். ஓட்டை மேற்கூரையின் தயவில் பஸ்சுக்குள்ளும் மழை பெய்தது. பஸ் ஸ்டாண்டில் நின்றுகொண்டே நனைவதற்கு இது பெட்டர் என்று தோன்ற, சில்லரையை டிக்கெட்டாய் மாற்றினனாள். இறங்க வேண்டிய நிறுத்தம் வந்ததும் சர்க்கஸ்காரி போல் கும்பலில் பிதுங்கி வெளியே வந்தாள். சற்று தூர நடையில் கம்பெனி பெயர் பித்தளையில் மழை நீராடிக் கொண்டிருக்க நனைந்த கோழியாய் உள்ளே நுழைந்தாள். ரிசப்ஷனிஸ்ட் புருவம் சுருக்கி பார்த்தபோது கோபம் வந்தது. இவள் மட்டும் நனையாமல் எப்படி வந்து சேர்ந்தாள் என்ற கேள்வி குடைந்தது. காட்டன் சுரிதாரும், பாப் தலையும், லிப்ஸ்டிக் உதடுகளும், நெயில் பபாலிஷீம், கட்ஷுவுமாக நுனி நாக்கு ஆங்கிலம் பேசிக்கொண்டிருந்தவளின் அருகில் சென்று இண்டர்வியூ கார்டை நீட்டினாள். ‘வெயிட் பிளீஸ்’ என்ற பதிலைப் பெற்று ரிசப்சனில் அமர்ந்தாள். வேறு எவரையும் காணவில்லை. மொத்தம் எத்தனை பேருக்கு கார்டு அனுப்பப்பட்டதென்ற விவரம் தெரியவில்லை. 

இண்டர்காமில் பேசிய ரிசப்ஷனிஸ்ட் சிலவற்றிற்கு யெஸ்சார் என்றாள். சிலவற்றிற்கு நோ சார் என்றாள். கடைசியாக ஓகே சார் என்றாள். ரிசீவரை வைத்து விட்டு மதுமிதாவைப் பார்த்தாள். அருகில் அழைத்தாள். 

“இண்டர்வியூ இஸ் போஸ்ட்போன்ட், வி வவில் இன்டிமேட் தி டேட் அண்ட் டைம் லேட்டர் ஆன்” என்றாள் வெகு அலட்சியமாக, மதுமிதாவுக்கு மெல்ல ஒரு எரிமலை பொங்க ஆரம்பித்தது. கண்களில் அனல் படர்ந்தது. 

“உங்கள் பாசோடு நான் கொஞ்சம் பேசலாமா ப்ளீஸ்” சுத்தமான ஆங்கிலத்தில் மதுமிதா கேட்க, ரிசப்ஷன் பெண்ணின் கண்களில் அலட்சியம் கொஞ்சம் குறைந்தது. இருந்தாலும் “எதற்காக” என்றாள். 

“அதை அவரிடம்தான் கூற முடியும்” 

”மன்னிக்கவும். அவர் இதை விரும்பமாட்டார். நீங்கள் இண்டர்வியூவுக்கு மட்டுமே வந்திருப்பவர். வேறு எதற்காக நீங்கள் அவரைப் பார்க்கப்போகிறீர்கள் என்பது தெரியாமல் உள்ளே அனுப்ப இயலாது.” 

மதுமிதா அவளை எரித்து விடுவதுபோல் பார்த்தாள். 

“எதனால் இன்று இண்டர்வியூ இல்லை என்கிறீர்கள்?” 

“மொத்தம் பத்து பேர் இன்று வரவேண்டும். புயல் காரணமாக உங்களைத் தவிர வேறு யாரும் வர இயலவில்லை போலும். அதனால்தான் ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது.” 

“இதுபற்றிதான் நான் உங்கள் பாசிடம் பேச வேண்டும்.” 

“என்னவென்று?” 

“அனுப்புவீர்களா, மாட்டீர்களா?” 

“அவர் அதை விரும்பமாட்டார். என்னால் அனுப்ப இயலாது.” 

“ரொம்ப நல்லது. நீங்கள் அனுப்ப வேண்டாம். நானே போகிறேன்” மதுமிதா அவள் உத்தரவை எதிர்பார்க்காமல் சட்டென்று உள்ளே நுழைந்தாள். ரிசப்ஷன் பெண் “ஹலோ ப்ளீஸ்” என்று கோபத்தோடு சுத்த, மதுமிதா திரும்பாமல் முன்னேறினாள். 

எதிர்ப்பட்ட பியூனிடம் பாஸ் ரூம் எதுவென விசாரிக்க அவன் இடது கை நீட்டி சுட்டிக்காட்டினாள். 

ரிசப்ஷனிஸ்ட் அதற்குள் முதலாளியிடம் ஒன்றுக்கு நாலாய் புகார் சொல்லி குற்றம் தன்னுடையதல்லவென்று குழைந்தாள். மதுமிதா அந்த அறைக் கதவைத் திறந்து கொண்டு சீற்றத்தோடு உள்ளே நுழைந்தாள். ஒரு விநாடி திகைத்தாள். வாழ்க்கைத் தலையும் சோடாபுட்டியுமாக ஒரு கிழ பாசை கற்பனை செய்து வந்தவளுக்கு கம்பீரமான ஒரு இருபத்தி எட்டு வயது வாலிபத்தைக் கண்டதும் சட்டென்று கால்கள் பின்னியது. 

அத்தியாயம் – 2 

“யெஸ்” அவன் கண்கள் சிரித்தது. 

“நீங்கள் செய்வது நியாயமா?” சற்று சுதாரித்துக் கொண்டு கேட்டாள். 

“புரியும்படியாக சொல்லுங்கள். அதற்கு முன்னால் உட்காருங்கள். உங்கள் ஈரத்தை துடைத்துக் கொள்ள டவல் ஏதும் வேண்டுமா?’ 

“ரொம்ப நன்றி. ஆனால் உங்களிடம் நான் எதிர்பார்ப்பது டவல் அல்ல.” 

“வேறு என்ன?” 

“நேர்முகத்தேர்வு ஒத்திப் போடப்பட்டதாக அறிந்தேன். அது நியாயமல்ல.” 

“எதனால் அப்படி நினைக்கிறீர்கள்?” 

“பல கஷ்டங்களை கடந்து நான் வந்திருக்கிறேன். ஆனால் வராத மற்ற ஒன்பது பேருக்காக என்னை நேர்முகத்தேர்வு செய்யாமல் அனுப்புவது எந்த விதத்தில் நியாயம்?” 

“ஒரே ஒருவருக்காக எப்படி நடந்த இயலும்? மற்ற ஒன்பது பேரிலும் திறமைசாலிகள் இருக்கலாம் அல்லவா?” 

“மறுக்கவில்லை. காரணமாக மற்றொரு நான் அவர்களை நேர்முகத் தேர்வு செய்யுங்கள். இன்று என்னை முடித்துவிட்டால் நான் பட்ட சிரமங்களுக்கு ஒரு மரியாதை கொடுத்தது போல் ஆகும். வராத ஒன்பது பேரின் மேல் காட்டும் கரிசனத்தில் சிறிதளவாவது கஷ்டப்பட்டு வந்திருக்கும் என் மீது காட்டுவதுதான் தங்கள் மனிதத் தன்மைக்கு அடையாளமாகும்.” 

“இல்லாவிட்டால் நான் மிருகமோ?” 

“என் கண்ணுக்கு அப்படித்தான் தெரிவீர்கள். மற்றொரு நாள் நீங்கள் வைக்கும் இண்டர்வியூவில் நான் கலந்து கொள்ள மாட்டேன். ஒரு வேளை பத்து பேரிலும் மிகத் திறமைசாலியாக நானே இருந்து விட்டால் இழப்பு உங்கள் கம்பெனிக்குத்தான். எனக்கல்ல.” 

அவன் பக்கென்று சிரித்து விட்டான். 

அதன் பிறகுதான் அவன் அவளை ஏற இறங்கப் பார்த்தான். பெயர் கேட்டான். 

அவள் விண்ணப்பத்தை எடுத்து வைத்துக்கொண்டு நேர்முகத்தேர்வு செய்ய ஆரம்பித்தான். ஈர உடையோடு ஏஸி குளிரும் சேர அவள் உதடுகள் அடித்துக் கொண்டது. பதில்கள் நடுக்கத்தோடு வெளிப்பட்டது. பதில்கள் நடுக்கத்தோடு வெளிப்பட்டது. 

“ஏஸியை வேண்டுமானால் நிறுத்தி விடவா” அவன் கேட்டதும் கூச்சமேற்பட்டது. 

“இட்ஸ் ஓ.கே… ஐ வில் மானேஜ்.” 

“நோ பிராப்ளம். அந்த டாய்லட்டில் சுத்தமான டர்க்கி டவல் இருக்கு. முதல்ல உங்க உடம்புலயும் தலையிலயும் இருக்கற அதிகபட்ச ஈரத்தை அதற்கு தானம் பண்ணி விட்டு வாருங்கள். நான் காத்திருக்கிறேன்.” 

அவன் சொன்னதும் மறுக்க முடியாமல் எழுந்து டாய்லட் நோக்கி நடந்தாள். 

பின்னாலேயே வந்து வம்பு செய்வானோ நல்லவன் போல் நடித்து வலை வீசும் ஆண் இவன்? 

கூடவே சந்தேகம் குடைந்தது. முன் ஜாக்கிரதையாக டாய்லட் கதவை தாளிட்டுக் கொண்டாள். ஈரத்தை துடைத்துக்கொண்டு புடவை ஈரத்தை பிழிந்து சரியாக உடுத்திக் கொண்டு சற்று காய்ந்தவளாக வெளியில் வந்த போது அவன் அமைதியாக 

அமர்ந்து கோப்பு ஒன்றில் தலை கவிழ்ந்திருந்தான். ஏஸி நிறுத்தப்பட்டிருந்தது. 

நேர்முகத் தேர்வுக்கான தொழில் நுட்பக் கேள்விகள் தொடர்ந்தது. நுணுக்கமாக அவன் கேட்ட கேள்விகளுக்கு திறமையாக பதில் அளித்தாள். அதன் பிறகுதான் அவன் அவள் பெயரும் வயதும் கேட்டதும் அவள் பதிலளித்ததும் அவன் அப்பாய்ண்ட்மெண்ட் ஆர்டர் அளித்ததும்… 

இயற்கையாக ஒரு வகையில் தனக்கு பெரும் உதவி செய்திருப்பதாகவே தோன்றியது. இந்த சீற்றத்திற்கு பயந்து அவளும் வீட்டிலேயே இருந்திருந்தால் நிச்சயம் வேறு ஒரு நாள் இண்டர்வியூ நடந்திருக்கும். ஆனால் பலத்த போட்டிக்கிடையில் ஒருவேளை வேறு எவருக்காவது இந்த வேலை போயிருக்கும். இவ்வளவு சுலபத்தில் போட்டியின்றி தன் திறமையை நிரூபித்து வேலை பெற்றிருக்க முடியாது. இந்த புயலிலும், மழையிலும் போகத்தான் வேண்டுமா என்று அம்மா காலையில் பயந்தாள். அப்பாதான் தைரியம் சொல்லி அவளை அனுப்பி வைத்தார். போகும்போது அன்னபூர்ணாவில் கொஞ்சம் ஸ்வீட்ஸ் வாங்கிக் கொண்டு போக வேண்டும். 

மதுமிதா சந்தோஷமாக ரிசப்ஷன் ஹால் கடந்த போது ரிசப்ஷனிஸ்ட் அவளை பார்த்த பார்வையில் மெல்லிய பொறாமை படர்ந்திருந்தது. தன்னை மதிக்காது உள்ளே சென்றதுமில்லாமல் வேலைக்கான உத்தரவும் வாங்கி விட்டாளே என்ற ஆச்சரியம் எரிச்சலும் பொறாமையுமாக மாறியிருந்தது. 

வெளியில் இன்னமும் மழை கொட்டிக் கொண்டிருந்தது. காற்று சீறியது. புயல் எப்போது கரை கடக்குமோ? போர்டிகோவில் கொஞ்ச நேரம் நின்றாள். மழை விடும் போல் தோன்றவில்லை. பேசாமல் நனைந்து கொண்டே போய் விடலாமா என்று அவள் யோசித்தபோது கார் ஒன்று அவசரமாக போர்டிகோவில் நின்றது. பியூன் ஒருவன் வேகமாக வந்து கதவைத் திறக்க சற்று முன் அவளை இண்டர்வியூ செய்த பாலசுப்பிரமணியன் உள்ளிருந்து வந்துஏறிக்கொள்ள கார் கதவை பியூன் மூட டிரைவர் வண்டியை கிளப்பினான். 

போர்டிகோ தாண்டிய வண்டி சட்டென்று நின்றது பின்பக்க கருப்பு கண்ணாடி மெல்ல இறங்கி பாலசுப்பிரமணியன் முகம் தெரிந்தது. 

“எந்த பக்கம் போகணும் நீங்க?’ 

“கே.கே.நகர் சார்.” 

“கெட் இன்… போற வழியில ஏதாவது பஸ் ஸ்டாண்டிலே டிராப் பண்ணிடறேன்” 

“ஓ…தேங்க்யூ” மதுமிதா பின் கதவை அவன் திறந்து விட ஏறிக்கொண்டாள். 

டி.வி.எஸ். அருகில் கார் வந்து நிற்கும் வரை அவன் எதுவும் பேசவில்லை. அவன் அப்படி எதுவும் பேசாமல் வந்தது அவளுக்கு கஷ்டமாக இருந்தது. இவன் அழைத்ததும் அல்பத்தனமாய் ஏறியிருக்க வேண்டாமோ என்று தோன்றியது. 

“இங்கேயிருந்து உங்களுக்கு பஸ் இருக்கும்னு நினைக்கறேன்.” 

கார் நின்றதும் சொன்னான். 

“ரொம்ப நன்றி சார்” காரிலிருந்து இறங்கி பஸ் நிறுத்தக் குடையின் கீழ் சென்று நின்றாள். வண்டி வேகமெடுத்துச் சென்று மறையும் வரை பார்த்தாள். ஐந்து நிமிடத்தில் காலியாக ஒரு பஸ் வந்தது. மதுமிதா சந்தோஷமாக ஏறி சவுகர்யமான ஒரு இடத்தில் அமர்ந்தாள். காலியாக செல்லும் பல்லவனில் செல்வதும் தனி இன்பம்தான். பீக் அவர்களில் இது முடியாது. மழையினால் இன்று இவ்வளவு காலியாக இருக்கிறது. 

பில்லர் தாண்டி ஆஸ்பத்திரி ஸ்டாப்பிங்கில் இறங்கி இனிப்புக்கடை ஒன்றில் கால் கிலோ பால்கோவா வாங்கிக் கொண்டாள். மழை சற்று விட்டதும் விரைந்து நடந்தாள். மெயின் ரோட்டிலிருந்து குறுக்குத் தெருக்களில் நடந்து பத்து நிமிடம் நடையில் வீட்டை அடைந்தபோது வீட்டு வாசலில் அக்கம் பக்கத்து ஜனம் கூடியிருந்தது. அத்தனை பேர் முகத்திலும் ஏதோ பதட்டம், அவர்களுக்கு நடுவில் கண்ணீரோடு அம்மா ஏதோ சொல்லிக் கொண்டிருந்தாள். 

அத்தியாயம் – 3 

அவசர அவசரமாய் ஒரு நர்ஸ் ஆக்சிஜன் சிலிண்டரை பொருந்தினாள். சின்னச் சின்ன திரைகளில் ஏதோ வளைந்தும் நெளிந்தும் ஓடியது. இதயத் துடிப்பை ஒரு திரை காட்டியது. டாக்டர்கள் கூடி பேசினார்கள். கண்ணாடி கதவு திறந்து வந்த நர்ஸிடம் ஓடினாள் மதுமிதா. அப்பாவின் நிலை இன்னும் அபாய கட்டத்திலேயே இருப்பதாக தெரிவித்து விட்டு சென்றாள் நர்ஸ். வராண்டா பெஞ்சில் அம்மா தளர்ந்து நடந்து அம்மாவிடம் வந்தாள். 

அம்மா ஆவலோடு அவள் முகத்தை பார்த்தாள் மதுமிதா அம்மாவின் கரத்தை இறுகப பற்றிக் கொண்டாள். 

“கவலைப்பட ஒண்ணு மில்லையம்மா. தைரியமாயிரு. தெய்வம் நம்மளை கைவிட்டுடாது.”  

”பயமார்க்குடி.” 

“நா இருக்கேன். தைரியமாயிரும்மா. மதுமிதா அழுகையை அடக்கிக்கொண்டு அம்மாவை பரிவோடு தன் மடியில் படுக்க வைத்துக் கொண்டாள். சிரிப்பதா அழுவதா என்று புரியவில்லை. எந்த புயலும் மழையும் அவளுக்கு நன்மை செய்திருப்பதாக நினைத்தாலோ அதே புயலும் மழையும் அப்பாவை ரத்தம் சிந்த வைத்திருக்கிறது. அபாயக் கட்டத்தில் அவர் உயிரை ஊசலாட வைத்திருக்கிறது. இதை என்னவென்று சொல்ல? அறைகுறையாய் திறந்திருந்த ஒரு பாதாள சாக்கடையில் வெள்ள ஓட்டத்தினால் திசை தெரியாது நடந்து சென்று விழுந்திருக்கிறார். நல்ல காலம் யாரோ பார்த்தார்களோ. ஆள் உள்ளே விழந்தது தெரிந்ததோ இல்லையென்றால்… நினைக்கவே நடுங்கியது. அப்பாவைத் தேடித் தேடி இவள் ஊரெல்லாம் அலைய,  அவர் சாக்கடைக்குள் பிணமாக மிதந்து கொண்டிருந்திருப்பார். பார்த்தவன் சட்டென்று சத்தம் போட்டு கும்பலை கூட்டி அவசர ஆலோசனை நடத்தி அருகிலிருந்த கடையிலிருந்து கயிறு வாங்கி இடுப்பில் ஒருவன் கட்டிக்கொண்டு உள்ளே இறங்கி, ஊர் கூடி குற்றுயிரும் குலையுயிருமாக அப்பாவை வெளியே எடுக்க அப்பாவின் உடல் முழுக்க காயம். மண்டையில் பலமாய் அடிபட்டிருந்தது. கை எலும்பு முறிந்திருந்தது. நிறைய நீர் குடித்திருந்தார். அருகிலிருந்த ஆஸ்பத்திரிக்கு அவர்களே அழைத்துச் சென்று சேர்ந்தது அப்பாவின் பாகெட் டைரியிலிருந்து விலாசம் அறிந்து ஒரு ஆள் தகவலோடு வர அம்மா பெரியதாய் அழ, ஊர் கூடி விட்டது. மதுமிதாவைக் கண்டதும் அம்மா இன்னும் பெரிதாய் அழுதாள். அவசரமாய் வீடு பூட்டி அவர்கள் ஆஸ்பத்திரிக்கு வந்த போது அப்பா அவசர சிகிச்சை பிரிவில் நினைவின்றி இருந்தார். இப்போது பார்க்க முடியாது என்று விரட்டினார்கள் நர்ஸ்கள். இரவு மணி பதினொன்றைக் கடந்தும் அப்பாவின் நிலையில் முன்னேற்றமில்லை. அம்மா மாங்கல்யத்தை பற்றிக் கொண்டு கந்த சஷ்டி கவசம் சொன்னாள். வேலை கிடைத்ததற்கும் அதற்கும் எத்தனை மகிழ்ச்சியாய் கழிந்திருக்க வேண்டிய நாள்! ஏன் இப்படி? யார் கண் பட்டது?” 

அக்காவையும் அவளையும் வளர்க்க எத்தனை பாடுபட்டார் அப்பா. நாம நடுத்தர வர்க்கம் மது. நமக்கு படிப்பு தான் முக்கியம். படிப்பாலதான் நாம முன்னுக்கு வரணும். நீங்க ரெண்டு பேரும் நல்லா படிக்கணும். அதனாலதான் என் சக்திக்கு மீறி பணம் கட்டி உங்களை முதல் தரமான ஸ்கூல்ல சேர்த்திருக்கேன். ஸ்கூல் படிக்கும் காலத்தில் அப்பா அடிக்கடி சொல்லும் வார்த்தை. ஸ்கூல் பீஸ் வருடா வருடம் ஏறும். அதே நம் அப்பா தன் சொந்தத் தேவைகளை ஒவ்வொன்றாய் குறைத்துக் கொண்டு துண்டு விழும் பணத்தை சமாளிப்பார். 

இப்படித்தான் மாலை காப்பியை நிறுத்தினார். ஸ்கூட்டரை விற்றுவிட்டு பல்லவனில் தொற்றிக் கொண்டார். வாராந்திரம் இஸ்திரிக்கு கொடுப்பதை நிறுத்தினார். கசங்கின சட்டையோடு அலுவலகம் போனார். அப்பா மட்டுமல்ல. அம்மாவும்கூட தன் தேவைகளை சுருக்கிக் கொண்டாள். குழந்தைகள் வரையில் குறையில்லாமல் கொடுத்து வளர்த்தார்கள் என்றும் சொல்லலாம். ரெண்டு பெண்ணும் ஆங்கிலத்தில் பேசிக்கொண்டதை மலர்ந்த முகத்தோடு பார்ப்பார்கள். இருவரும் சண்டை போடும்போது ஆங்கிலம் இன்னும் வேகமாய் வெளிப்படும். சண்டையை விலக்காது பிரமித்துப் போய் வேடிக்கை பார்ப்பாள். அம்மா, அப்பா தான் நடுவில் புகுந்து இருவரையும் விலக்குவார். சமாதானப் படுத்துவார். மொழி என்பது ஒருவரை ஒருவர் திட்டிக் கொள்வதற்கல்ல, புரிந்து கொள்வதற்குத்தான் என்று இதமாய் பேசி சமாதானப் படுத்துவார். அப்பா அவர்கள் இருவர் மேலும் நிறைய நம்பிக்கை வைத்திருந்தார். அம்மாவோ நிறைய கவலை வைத்திருந்தாள். “படிப்பு படிப்புன்னு வாரி இறைச்சுக்கிட்டே இருந்தா எப்படி? கல்யாணத்துக்கு நாலு நகை நட்டு சேர்க்கற வழியும் பாருங்க.” 

அப்பா சிரிப்பார். “படிப்புதாண்டி சொத்து. அதுவே மத்த எல்லாம் கொடுக்கும். இப்பல்லாம் பசங்க படிப்பு பார்த்துதான் கட்டிக்கிறாங்க. நீ ஏன் கவலைப்படற. நம்ப பொண்ணுங்கள கட்டிக்க வீட்டு வாசல்ல வரிசைல வந்து நிப்பாங்க பாரு.” 

“ஆமா… சுயம்வரமே நடத்துங்க! யாரு வேணாம்னாங்க? அப்படியே தேடிக்கிட்டு வரன் வந்தாலும் வெறுங்கையோடவா பொண்ணை அனுப்ப முடியும்.”

“எம் பசங்க படிப்புக்கு பெரிய பெரிய கம்பெனிலேருந்து எட்டாயிரம் தரோம் பத்தாயிரம் தரோம்னு கூப்பிடு வாங்க பாரு. ஒரு மூணு வருஷம் வேலை செஞ்சா போதும். முழுக் கல்யாணமும் ஜாம் ஜாம்னு நடத்தற அளவுக்கு அவங்களே சேர்த்துடுவாங்க. அப்படித்தானே மது?” 

மதுமிதா ஆமாம் என்று உற்சாகமாக தலையாட்டுவாள். ஆனால் அக்காவின் முகம் அப்பா இப்படி கேட்ட போது ஒரு மாதிரி போயிற்று.ஏதோ ஒரு குழப்பம் அவள் முகத்தில் படர்ந்தது. ஒரு நாள் இரவு அக்கா அவளிடம் கேட்டாள். 

“ஏன் மது… அப்பா இப்படி சொல்றது சரின்னு படுதா உனக்கு?” 

“எது?” 

“அதுதான் நம்ம கல்யாணத்துக்கு நாமளே சம்பாரிச்சு சேர்த்துக்கணும்னு சொல்றாரே அது.” 

“ஏன் அதுல என்ன தப்பு?” 

“தப்பில்ல. ஆனா அவருக்கு பொறுப்பு வேணாமா? அதை அவர் தட்டிக் கழிக்கறாப்பல இல்ல?” 

“என்ன மஞ்சுக்கா இப்படி பேசற? அப்பா தன் சக்திக்கு மீறி நம்மை படிக்க வெச்சிருக்கார். தன் பொறுப்பை மறந்திருந்தா படிக்க வெச்சிருப்பாரா? அவருடைய வசதிக்கு ஏதாவது ஒண்ணுதான் செய்ய முடியும். நம்ம படிப்புக்கு செலவழிச்ச பணத்தையெல்லாம் சேர்த்து வெச்சிருந்தா இந்நேரம் நம்ம கல்யாணச் செலவுக்கு மேலேயே சேர்ந்திருக்கும். ஆனா நாம இப்படி படிச்சிருக்க முடியாது. மிஞ்சிப் போனா ஒரு கவர்ன்மெண்ட் ஸ்கூல்ல பிளஸ்டூ முடிச்சிருப்போம். இங்கிலீஸ் பேசத் தெரியாம தாழ்வுணர்ச்சில தவிச்சிட்டிருந்திருப்போம். நாலு பேரோட பழகக் கூட தெரியாம வளர்ந்திருப்போம். ஆனா அப்பா தன் சக்தி முழுக்க செலவழிச்சு நம்மை படிக்க வைச்சுட்டார். அவர் ஒண்ணு கொடுத்துவிட்டார். உலகத்துலேயே பெரிய விஷயம் கல்வி. அதை வெச்சு நாம உலகத்தையே வாங்கிடலாமே. அதைத்தான் அப்பாவும் சொன்னார். அதுல என்ன தப்பு?” 

அவள் இப்படி சொல்லியும் அக்காவின் முகம் மாறவில்லை. 

அதன்பிறகு மஞ்சுவுக்கு ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தில் புரோகிராமர் வேலை கிடைத்தது. மாதம் பத்தாயிரம் சம்பளம். அம்மா வாய் பிளந்தாள். ‘உங்கப்பாவுக்கே அவ்வளவு சம்பளம் இல்லடி’ என்று வெகுளியாய் பேசினாள். மதுமிதா தன் கடைசி வருட கல்லூரி படிப்பில் இருந்தாள். கெமிஸ்ட்ரியில் டாக்டரேட் வாங்கி விட வேண்டும் என்ற லட்சியமிருந்தது அவளுக்கு. தீராத நோய்க்கெல்லாம் புதுப்புது மருந்துகள் கண்டுபிடிக்க வேண்டும் என்ற தாகமும் இருந்தது. 

வேலையில் சேர்ந்த அக்காவுக்கு அப்பா விதம் விதமாய் புது டிரஸ்களும் செருப்பும் வாங்கிக் கொடுத்தார். அம்மா நாளொரு டிபன் வகையறா செய்து கொடுத்தாள். 

முதல் நாள் வேலைக்கு சென்று வந்த பெண்ணிடம் வேலை பற்றி கேட்டார் அப்பா. 

“எனக்குன்னு ஏஸி ரூம், பியூன், நாலு அஸிஸ்டெண்டஸ், ரெண்டு டெலிபோன்ஸ் கிட்டத்தட்ட ராணி மாதிரிதான்.” 

மஞ்சுளாவின் குரலில் கர்வமிருந்தது. அடுத்த வாரத்தில் ஒரு நாள் வேலை முடிந்து 

வீட்டுக்கு வந்தவள் வியர்வை தாங்காதவள் போல் அலுத்துக் கொண்டாள். 

“ஏண்டா வீட்டுக்கு வரோம்னு இருக்கு. நாள் பூரா ஏஸில இருந்துட்டு… வரவர இந்த வெக்கை தாள முடியல.” 

“ஏன் மஞ்சு… என்னமோ ஏஸிலயே பிறந்து வளர்ந்தாப்பல அலுத்துக்கறயே!” 

மதுமிதா கிண்டலடிக்க மஞ்சுவின் முகம் சிவந்தது. 

இன்னொரு நாள் வேறு விதமாய் அலுத்துக் கொண்டாள். 

“எங்க ஆபீஸ்ல எல்லோரும் நம்ம வீடு என்னமோ பங்களானனு நினைச்சிருக்காங்க. இங்க என்னடான்னா ஒரு சோபா செட் கூட இல்ல. நாலு ஸ்டீல் சேர். அதுவும் அங்கங்க பெயிண்ட் போய் துருப்பிடிச்சு, யாரையும் வீட்டுக்கு கூப்டக் கூட வெக்கமார்க்கு. இவ்ளோ சின்னா வீடான்னு கேவலமா நினைப்பாங்க.” 

“ஏங்க்கா இவ்ளோ வருஷமா இந்த வீடு கேவலமா தெரியலையா? புதுசா என்ன இப்பொ மட்டும்?” 

“நேத்து எங்க எம்.டி.வீட்டுக்கு அபீஷியலா போயிருந்தேன். யப்பா! சினிமாலல்லாம் பார்க்கறா மாதிரி என்ன ஒரு பிரமாண்டமான வீடு! ஃபுட்பால் ஸ்டேடியம் மாதிரி ஹால், வாசல் கதவே அம்பதாயிரம் விலையிருக்கும். பர்மா தேக்குல அப்படி ஒரு வேலைப்பாடு. சோபா செட் ஒவ்வொண்ணும் ஆளை முழங்கும். வீடு முழுக்க ஏஸி என்ன வீட்டை சுத்தி கார்டன் என்ன… என்ன… ஊட்டியும் சிம்லாவும் இடம் மாறி வந்துட்டாப்போல… இருந்தா அப்படி ஒரு வீட்டுல இருக்கணும். நமக்கெங்க அதெல்லாம்? அதுக்கு புண்ணியம் பண்ணியிருக்கணும்.” 

லேசான அரைக்கண் செருகலோடு ஆசையும் விரக்தியும் ஒன்றை ஒன்று மிஞ்சிய குரலில் அவள் பேசியபோது அப்பாவின் முகத்தில் கவலை படர்ந்தது. பெண்ணை உற்றுப் பார்த்தார். ஏதோ குறுக்கிட்டு சொல்ல முயன்ற அம்மாவைக் கூட தடுத்து விட்டார். 

“ஏம்ப்பா நாம இன்னும் கொஞ்சம் பெரிய வீடா பார்த்தா என்ன?” மஞ்சுளா கேட்டாள். 

“எவ்ளோ பெரிய வீடும்மா?” 

“ஒரு பெரிய ஹால். ஆளுக்கு ஒரு பெட்ரூம், முன்னால சிட் அவுட், சுத்தி சின்ன கார்டன்.” 

“கிட்டத்தட்ட குட்டி பங்களாம்மா அது.” 

“அப்டி இருந்தாதாம்பா மரியாதை.” 

“வாடகை ஐயாயிரம், ஆறாயிரம் கேப்பானே மஞ்சு! உன்னால முடியுமா? உன் 

சம்பளமே வரி போக ஒன்பதாயிரம் தானே வரும்.” 

“என் சம்பளத்துலயா… இவ்ளோ வாடகையா?” மஞ்சு அதிர்ந்தாள். 

“பின்னே… வேற எப்படிமா நம்பளால முடியும்?”

“இன்னும் எத்தனை நாளைக்குப்பா இப்படி சின்ன இடத்துல அடையறது? பங்களா வேண்டாம். அட்லீஸ்ட் இதைவிட கொஞ்சம் பெரிசா பார்க்கலாம் இல்லையா?” 

“இது குவார்ட்டர்ஸ் மஞ்சு… இதை விட்டுட்டா அப்புறம் கேட்டாகூட கிடைக்காது. உனக்காக இப்போ பெரிய வீடா பார்த்துட்டு, அப்புறம் நீயும் கல்யாணமாகிப் போயிட்டேன்னா பெரிய வீடு எனக்கு பாரமாயிடுமேம்மா.” 

“ச்சட்! எல்லாத்துக்கும் ஒரு புலம்பல்… வாழ வேண்டிய வயசுல சன்யாசி மாதிரி இருன்னு உபதேசம் பண்றதே உங்களுக்கு வாடிக்கையா போச்சு.” 

மஞ்சுளா லேசான குமுறலோடு தன் எரிச்சலை கொட்டிவிட்டு எழுந்து சென்றாள். 

“ஏங்க வாங்கற சம்பளத்துக்கு ஏத்தா மாதிரி வசிக்கிற இடமும் கொஞ்சம் அலங்காரமா இருக்கணும்னு அவ ஆசைப்படறதுல என்ன தப்பு?” 

“அதுக்கில்லடி மறுபடியும் இந்த வீடு கிடைக்காது இதுதான் என்னிக்கும் நமக்கு சாஸ்வதம்.” 

“அதெல்லாம் பொண்ணுங்க பார்த்துப்பாங்க. ரெண்டு பேரும் கை நிறைய சம்பாதிச்சா நாம எதுக்கு சிக்கனம் பிடிக்கணும்? அவ இஷ்டப்படிதான் வீடு பாருங்களேன். நீங்க நினைக்கறா மாதிரி இந்த வீடும் கடைசி வரை இருக்காதுங்க. உங்க ரிடையர்மெண்ட்டுக்கப்புறம் இங்க இருக்கவா முடியும்?” 

அம்மா சொல்ல அப்பா யோசித்தார். 

– தொடரும்…

– விட்டில் பூச்சிகள் (நாவல்), முதற் பதிப்பு: 1999, கண்மணி வெளியீடு, சென்னை.

2 thoughts on “விட்டில் பூச்சிகள்

  1. எதார்த்தமான கதை படித்தால் உலகை வெல்லலாம் என்ற கரு அருமை வாழ்த்துக்கள் அடுத்த பாகம் எப்போது வரும்.

  2. அற்புதமான வாசிப்பு உலகில் மிதந்தேன். இந்த மாதிரி எழுத்தெல்லாம் இப்போ எங்கே போச்சுன்னு ஏக்கமும் வருத்தமாகவும் இருக்கு, அடுத்த பகுதியை வாசிக்க ஆவலாக இருக்கிறேன். வித்யா சுப்ரமணியம் மேடம், நல்ல வாசிப்பு அனுபவத்தைக் கொடுத்தமைக்கு ரொம்ப நன்றிம்மா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *