கதையாசிரியர்:
தின/வார இதழ்: கலைமகள்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 30, 2024
பார்வையிட்டோர்: 720 
 
 

(1932-42-ஆம் வருஷம் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

1

ஆசிரமத்தில் சதானந்தரைக் காணவில்லை. பூஜை அறையிலே பார்த்தேன்; மருந்து வைக்கும் அறையில் பார்த்தேன்; இல்லை. சாயங்கால வேளையில் கோயில் பக்கம் போயிருப்பாரோ என்றால் ஆசிரமத்தை திறந்து போட்டு விட்டுப் போக மாட்டார். தவிர, அவருக்கு கோயிலில்தான் தெய்வம் இருக்கிறது என்ற குறுகிய எண்ணம் இல்லை. எந்த இடத்திலும் அவர் தியானத்தில் அமர்வார்; தேவார திருவாசகங்களைப் பாட ஆரம்பித்து விடுவார் இன்றைக்கெல்லாம் கேட்டுக் கொண்டிருக்கலாம். 

‘காணவில்லையே! எங்கே போயிருப்பார்?’ என்று யுறக்கடைப் பக்கம் போனேன். மூலிகைகளும் புஷ்பச் செடி களும் நிறைந்த சிறு நந்தவனம் அது. வைத்தியத் தொழிலைச் செய்து வந்த சதானந்தர், நல்ல மூலிகை களைத் தம்முடைய ஆசிரமத்திலேயே பயிர் செய்து வளர்த்து வந்தார். பூஜைக்கு வேண்டிய பத்திர புஷ்பங்களுக்குப் போதுமான செடி கொடிகளும் இருந்தன. 

நந்தவனத்தின் ஒரு மூலையில் ஏதோ புகை தெரிந்தது. அந்தப் பக்கத்தில் பார்த்தேன் சதானந்தர் சுள்ளிகளைக் கொண்டு அக்கினி மூட்டிக் கொண்டிருந்தார். அவர் கையில் ஏதோ காகிதம் போன்ற வஸ்து ஒன்று இருந்தது. 

எந்தச் சமயத்திலும் யாதொரு தடையும் இல்லாமல் அவரை அணுகும் உரிமை எனக்கு இருந்தது. நான் மெல்ல அடி மேல் அடி வைத்து அவர் இருக்கும் இடத்துக்குச் சென்றேன். நான் அவர் பின் பக்கமாக நடந்தமையால் அவர் என்னைக் கவனிக்கவில்லை 

நான் அருகிலே சென்று, “என்ன, இந்த வேளையில் இங்கே என்னவோ செய்கிறீர்களே. ஏதாவது ரசவாதம் செய்கிறீர்களோ!’, என்று சிரித்துக் கொண்டே கேட்டேன். 

அவர் திடுக்கிட்டு என்னைத் திரும்பிப் பார்த்தார். இயல்பாகவே அவர் முகத்தில் ஒரு புன்முறுவல் தவழும். ஆனால் அந்தச் சமயத்தில் அந்த நகையைத் தாமே வருவித்துக் கொண்டவரைப் போலத் தோற்றினார். “ஆமாம், ரசவாதந்தான் செய்கிறேன்” என்று சொல்லிய படியே தம் கையிலிருந்த ஒரு பழைய காகிதத்தைத் தீயில் இட்டார். 

“என்னவோ காகிதத்தை அல்லவா கொளுத்து கிறீர்கள்?” என்று ஆச்சரியத்தோடு கேட்டேன். 

”இல்லை; ரசவாதம் தான் செய்கிறேன். ரசவாத மென்றால் உங்களுக்கு இன்னதென்று தெரியுமோ? என்று அவர் கேட்டார். 

“தெரியாமல் என்ன? செம்பைப் பொன்னாக்குவது தானே?” 

“அது சரிதான். ஏன் மற்ற லோகத்தைப் பொன்னாக்கக் கூடாது? பொன்னாவதற்குச் செம்பில் மாத்திரம் என்ன விசேஷம் இருக்கிறது?” என்று பள்ளிக்கூட உபாத்தியாயரைப் போல அவர் கேள்வி கேட்கத் தொடங்கினார். 

”எனக்கு அந்த வியவகாரமெல்லாம் தெரியாது. நீங்கள் அடிக்கடி சொல்லும் தாயுமானவர் பாட்டைக் கேட்டு ரசவாத வித்தை என்று ஒன்று இருக்கிறதாகத் தெரிந்து கொண்டேன். ‘அம்பொன்மிக வைத்த பேரும் நேசித்து ரசவாத வித்தைக்கு அலைந்திடுவர்’ என்று ஒரு பாட்டு வருகிறதல்லவா?” என்று நான் பாடம் ஒப்பித்தேன். “மற்றொரு பாட்டைக் கேட்டதில்லையோ?'”” என்று அவர் கேட்டார். 

“கேட்டதாக ஞாபகம் இல்லையே?” 

*சொல்கிறேன்; கேளுங்கள்” என்று சொல்லி அந்த இடத்திலே அப்படியே சப்பளங் கூட்டி உட்கார்ந்து தம்முடைய மதுர இசையைத் தொடங்கி விட்டார். 

“கருமருவு குகையனைய காயத்தி னடுவுட் 
களிம்புதோய் செம்பனையயான் 
காண்டக இருத்தியே ஞானவனல் மூட்டியே 
கனிவுபெற உள்ளுருக்கிப் 
பருவம தறிந்துநின் அருளான குளிகைகொடு 
பரிசித்து வேதிசெய்து 
பத்துமாற் றுத்தங்க மாக்கியே பணிகொண்ட 
பக்ஷத்தை யென்சொல்லுகேன்.” 

அவர் பாடத் தொடங்கியது முதல் வழக்கம் போல நான் அப்பாட்டில் ஈடுபட்டேன். அவர் மனம் ஒன்றிப் பாடினார்; மெல்ல மெல்லச் சொற்களைச் சுவைத்து இசையினிமை அற்றுப் போகாமல் இணைத்து இணைத்துப் வாடினார். அவர் பாடுகையில் தம்மை மறந்திருந்தார். அங்கே நின்று கேட்ட நானும் என்னை மறந்திருந் தேன். பாட்டை அவர் நிறுத்திச் சிறிது நேரம் மௌன மாக இருந்தார். பாட்டு நின்றது எனக்குத் தெரியாது. கண்ணை மூடியபடியே கேட்டு வந்த எனக்குப் பாட்டு இன்னும் ஒலித்துக் கொண்டுதான் இருந்தது. பாட்டின் இனிமையைப் பூரணமாக அனுபவிக்க அந்த மௌன நிலையும் அவசியமென்றே தோன்றியது. 

”என்ன சொன்னேன்?’ என்று அவர் ஒரு கேள்வி யைப் போட்ட போதுதான் கண்ணைத் திறந்து பார்த்தேன். சதானந்தர் கண்களில் நீர்த்துளிகள் மல்கியிருந்தன.அவர் உள்ளத்திலே பொங்கி எழுந்த இன்பத்தின் திவலைகள் அவை. அப்போது அவர் முகத்திலே தோன்றும் களையே தனியாக இருக்கும்; தாமரை மலர்ந்தது போல இருக்கும். அது பக்தியா ஞானமா, ஆனந்த பரவசமா இன்ன தென்று சொல்லத் தெரியவில்லை. அவர் அனுபவிக்கும் அந்த ஆனந்தத்தில் ஒரு துளி நானும் சுவைத்துப் யார்த்தேன். தம்மை மறந்த மனோலயத்தில் அவர் ஆழ்ந்திருந்தார். என்னையும் ஒரு கணம் ஆழ்த்தி விட்டார். அதைத் தேடிக் கொண்டுதான் நான் அடிக்கடி அவரிடம் வருவது. வேதாந்த தத்துவங்களைச் சொல்லி உண்மை இன்னதென்று நிரூபிக்க அவருக்குச் சக்தி உண்டோ இல்லையோ, மந்திரோபதேசம் செய்யும் தகுதியை அவர் பெற்இருந்தாரா இல்லையோ எனக்குத்தெரியாது. அவரிடம் அந்த விஷயங்களைப் பற்றி நான் பேசியது இல்லை; அவரும் தாமாகப் பேசுவதில்லை. கர்ம மார்க்கம், ஞான மார்க்கம், யோக நெறிகள் இவற்றைப்பற்றி உப நிஷத் துக்கள் முதல் சித்தர் பாட்டு வரையில் மேற்கோள் காட்டி வாதாடும் பண்டித சந்நியாசிகளைப் போன்றவரல்லர் அவர். அவருக்கு வைத்தியம் தெரியும். தேவார திருவாசகங்களிலும் தாயுமானவர் பாடல்களிலும் அருட்பாவிலும் அவர் உருகி ஒரே பைத்தியமாக இருந்தார். அவற்றைப் பாடிப் பாடி அவர் மனம் கரைந்து போய் விட்டது. 

அவர் சங்கீதம் மிக விசித்திரமானது. அதற்குச் சுருதி இல்லை; தாளமில்லை. முதலில்லை; முடிவில்லை ஆனாலும் அது இணையற்ற சங்கீதமாக விளங்கியது. அவர் பாடல் சொல்லும்போது அவருடைய வாக்கும் உடம்பும் மனமும் ஒன்றுபட்டு நிற்கும். பாட்டிலே இசையும் பொருளும் சேர்ந்து இணைந்து உள்ளத்தைக் கவ்வும் கானத்திலே மோனத்தை உண்டாக்குவார்; மோனத்திலே கானத்தைக் காட்டுவார். அவருடைய கானம் தேவகானம்; நேரே உள்ளத்தைத் தொடும் இசையமுதம். 

“என்ன பேசாமல் இருக்கிறீர்கள்? நாம என்ன பேசிக் கொண்டிருந்தோம்?” என்று மீண்டும் கேட்டார். 

அவருடைய இசை வழியே மிக மிக உயர்ந்த வெளி யிலே உடல் பாரம் தெரியாமல் மிதந்து கொண்டிருந்த நான் இந்த உலகத்திற்கு வந்தேன். அவர் கேள்வியைக் காது கேட்டும் அதன் பொருளை மனம் தெரிந்து கொண்டு பதில் சொல்லச் சிறிது நிதானம் வேண்டியிருந்தது. அதுவும் ஒரு ரஸவாதம்தானோ? 

“வந்து விட்டேன். நாமா? நாம் ரஸவா தத்தைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம்” என்று நான் சொன்னதைக் கேட்டு அவர் கலகலவென்று தமக்கு இயல்பான வெண்கலச் சிரிப்புச் சிரித்தார்; “வந்து விட்டேன் என்கிறீர்களே; எங்கே போயிருந்தீர்கள்?” என்று கேட்டு மீண்டும் சிரித்தார். 

‘எங்கேயா! நீங்கள் அழைத்துச் சென்ற ஆனந்த லோகத்திற்கு” என்று சொல்லி நானும் சேர்ந்து. சிரித்தேன். 

“சரி, விஷயத்துக்கு வருவோம். இப்போது தான் எனக்கு நன்றாக ஞாபகத்துக்கு வருகிறது. மறந்து போனதை ஞாபகப் படுத்திக் கொள்வது சிரமமாகத்தான் இருக்கிறது. ஆனாலும் ஞாபகப் படுத்திக் கொண்டு சொல்கிறேன். ரஸவாதம் செய்பவர்கள் செம்பைத்தானே பொன்னாக்குகிறார்கள்?”

“அப்படித்தான் நீங்கள் சொன்னீர்கள்.” 

“செம்பும் பொன்னும் ஒரே மாதிரியான இனம். செம்பிலே உள்ள களிம்பு போய்விட்டால் அது பொன்னாகி விடும். செம்பிற்கு இயல்பாக உள்ள களிம்பைப் போக்கும் வித்தைதான் ரஸவாத வித்தை. அந்த வித்தையைப் பற்றி இப்போது சொன்ன தாயுமானவர் பாட்டு விரிவாகத் தெரிவிக்கிறது. இதில் சொல்லப்பட்ட ரஸவாதத்தைத் தான் நான் செய்கிறேன்.” 

“இதிலே என்னவோ வேதாந்தபரமாக அல்லவா விஷயத்தைச் சொல்லியிருக்கிறார்? இந்த ரஸவாதத்தை நீங்கள் செய்வதென்றால் எனக்கு ஒன்றும் புரியவில்லையே!” 

”செம்பிலிருந்து களிம்பைப் போக்கினால் ரசவாதம் சித்தியாகிவிடும். நான் இந்தச் சிறு தீயில் சற்று நேரத் திற்கெல்லாம் ஒரு பெரிய பந்தமாகிற களிம்பை எரித்து விட்டேன். இனிமேல் நான் பத்தரைமாற்றுத் தங்கம். இதை உருக்கி ஓடச் செய்ய வேண்டியது தான்.” 

“நீங்கள் எப்போதும் பத்தரைமாற்றுத் தங்கந்தான்” என்று சொல்ல எண்ணினேன்; வாய் வரவில்லை. வெறும் முகஸ்துதிக்கும் எங்கள் நட்புக்கும் வெகு தூரம். “இன்னும் விளங்காத உலகத்திலேதான் இருக்கிறேன்” என்றேன். 

இதுவரையில் எனக்கு ஒரு பந்தம் இருந்தது; அந்தப் பந்தம் இந்தக் கணத்தில் நீங்கிவிட்டது. நான் இது வரையில் போலித் துறவியாக இருந்தேன்; இனிமேல் தான் மெய்த் துறவியாகப் போகிறேன். இதுவரையில் நான் பந்தத்துள்ளே சிக்கிச் சிறைப்பட்டிருந்தேன்; இப்போது விடுதலை பெற்று விட்டேன். இதுகாறும் என் கால்களில் ஒரு விலங்கு மாட்டி இருந்தது; இன்று அது தறிபட்டது. இத்தனை காலம் நான் சம்சாரியாக இருந்தேன்; இப் போதுதான் சந்நியாசியானேன். இன்று வரையில் நான் ஓர் அடிமையாய் உத்தியோகம் பார்த்தேன்; இதுமுதல் நான் சுதந்தரம் பெற்றேன்.”

உபநிஷத்து வாக்கியங்களின் மொழிபெயர்ப்பை ஒப்பிக்கிறவர்போல அவர் பேசினார் ; ஆனால் அந்தப் பேச்சிலே வீரம் இருந்தது. ஆவேசம் வந்தவரைப் போல அவர் பேசினார். 

“இன்னும் சந்தேகம் தெளிந்தபாடில்லை” என்று அவர் வீரவாசகத்தினிடையே மெல்லிய தொனியிலே கூறினேன். அது அவர் காதில் விழுந்திருக்கும் என்பது சந்தேகந்தான். 

“இனிமேல் இந்தச் சரீரம் ஓர் இடத்தில் இராது ; ஒரு வேலையைச் செய்யாது. இந்த ஆத்மா அகண்டத்தை நாடிப் போய்க் கொண்டே இருக்கும். முடிவற்ற பிரயாணத்தைத் தொடங்கப் போகிறது. ஆம். முடிய வில்லை; முடிவே இல்லை. முடிவு வந்தால் முடிந்த முடிவு தான்…” 

“இன்றைக்கு இவர் ஏதாவது கஞ்சா கிஞ்சா சாப்பிட்டு இருப்பாரா!” என்ற பைத்தியக்கார எண்ணம் என் மனத்தில் எழுந்தது. அடுத்த கணமே, ‘என்ன பாதகமான நினைவு!’ என்று கன்னத்திற் போட்டுக் கொண்டேன். 

அப்போதுதான் அவர் சிறிது தம் பேச்சை நிறுத்தினார். “எனக்கு ஆவேசம் வந்துவிட்டதாக எண்ணிக் கன்னத்திலே போட்டுக் கொள்கிறீர்களா? அப்படியானால் கற்பூரம் கொண்டு வாருங்கள்” என்று சொல்லிப் பழைய படி சிரித்தார். சிறிது நேரத்திற்குமுன் இருந்த மாற்றம் அந்தச் சிரிப்பிலே இல்லை. 

“என்ன இது! இன்று என்ன ஒருவிதமாக இருக் கிறீர்களே! புரியாத பாஷையில், இதுவரையில் நீங்கள் சொல்லாத வார்த்தைகளைச் சொல்கிறீர்களே! விஷயம் என்ன?” என்றேன்.

”சரி; சொல்கிறேன், வாருங்கள்; உள்ளே போகலாம். பொழுது மறைந்து விட்டது” என்று சொல்லி உள்ளே சென்று தீபத்தை ஏற்றினார். நானும் அவரைத் தொடர்ந்து உள்ளே சென்றேன். 

2

சதானந்தர் ஒரு துறவி, காவி வஸ்திரம் கட்டா விட்டாலும் உண்மையான துறவி. எனக்கு அன்பர். எல் லோருக்குமே அன்பர். எங்கள் ஊருக்கு அவர் வந்து யதினைந்து வருஷங்கள் ஆயின. வந்த புதிதில் அவரைப் பற்றி ஒருவருக்கும் ஒன்றும் தெரியாது. 

அவர் கையில் சிறிது பணம் வைத்திருந்தார். அதைக் கொண்டு அங்கே ஒரு சிறிய குடில் கட்டிக் கொண்டார். அதைத்தான் எங்கள் ஊரினரும் சுற்று வட்டாரத்தில் உள்ளவர்களும் ஆசிரமம் என்று சொல்வார்கள். அங்கே தூய்மை நிலவும். குப்பை என்பது சிறிதும் இராது. அவ்வளவு சுத்தமாக சதானந்தர் அதை வைத்திருந்தார். 

காலையில் ஸ்நானம் செய்து பூஜை செய்வார்; சிறிது நேரம் தியானத்தில் அமர்வார். பிறகு தேவாரம். திரு வாசகம் முதலிய பாடல்களைப் பாட ஆரம்பித்து விடுவார். அவர் செய்யும் பூஜைக்கும் தியானத்துக்கும் காலவரையறை உண்டு. ஆனால் அவர் பாடுவதற்குக் கணக்கே இல்லை. ஒரு மணி காலம் பாடுவார்; இரண்டு மணியும் பாடுவார்; சில நாள் தம்மையே மறந்து மணிக் கணக்காகப் பாடிக் கொண்டே இருப்பார். பகல் ஒரு மணிக்கு ஒரு வீட்டில் இருந்து சாப்பாடு வரும்; உண்பார். பிறகு பரோபகாரமாக மருந்து செய்வதைக் கவனிப்பார். 

அவர் சித்த வைத்தியத்தில் நல்ல தேர்ச்சி உள்ளவர். தினந்தோறும் அவரிடம் நோயாளிகள் மாலை வேளையில் வருவார்கள். அவசரமான சந்தர்ப்பங்களில் அபாயகரமான நோய்க்கு உட்பட்டவர்களைப் பார்க்க வேண்டுமானால் சாலை வேளையில் போய்ப் பார்த்து வருவார். பிறகுதான் பூஜை முதலியன நடைபெறும். 

அவருடைய அன்பு ததும்பும் வார்த்தைகளே நோயை ஒரு பாதி குணமாக்கி விடும். மருந்தின் குணமும் சேர்ந்து கொள்ளும்; மருந்து இல்லாமலே ஸ்நான பானங்களாலும் உணவுப் பக்குவத்தாலும் நோயைத் தீர்ப்பதில் அவருக்கு அதிக ஞாபகம். அந்தப் பக்கத்து ஊர்களில் அந்த சாமியாரைக் குழந்தை முதல் கிழவர் வரையில்யாவருக்கும் தெரியும். எல்லோரும் அவரைத் தெய்வம் போலப் பாராட்டுவார்கள். 

மருந்து செலவுக்காகவும் ஏதோ ஒரு தர்மத்துக்காகவும் அவர் பணம் வாங்குவார்; அதாவது நோய் குணமடைந்த வர்கள் மனமுவந்து தானாகவலிந்து கொடுக்கும் பணத்தைப் பெற்றுக் கொள்வார்; அவராகக் கேட்டு வாங்க மாட்டார். ஏழை எளியவர்களுக்கு எவ்வளவு விலையுயர்ந்த சரக்கானா லும் வாங்கி மருந்து செய்து தர்மத்துக்குக் கொடுப்பார். 

ஒரே ஒரு கட்டுப்பாடு அவர் வைத்திருந்தார். வைத்திய சம்பந்தமாகப் பணம் தந்தால் பெற்றுக் கொள்வதைத் தவிர வேறு ஏதாவது வஸ்துவை யாரேனும் அவருக்குக் கொடுத்தால் பெற்றுக் கொள்ள மாட்டார்; திராட்சைப் பழமானாலும் சரி, கற்பூரமானாலும் சரி, தாமாகவே பணம் கொடுத்து வாங்குவாரேயல்லாமல் பிறரிடமிருந்து வாங்க மாட்டார். யாரேனும் பார்க்க வருபவர்கள் கையுறை யாகப் பழங்கள் கொணர்ந்தால் அவற்றை அருகிலுள்ள குழந்தைகளுக்குக் கொடுத்து விடுவார். 

தமக்குச் சாப்பாடு அனுப்பி வந்த வீட்டிற்கு அவர் மாதந் தோறும் பணம் கொடுத்து வருவதாகக் கேள்வி ஆனால் அதைத் தெரிந்து கொள்ளும் அக்கறை யாருக்கும் இல்லை. அந்த வீட்டுக்காரர் சைவர்: ஏழை; ஏதோ ஒரு பலசரக்குக் கடையிலே குமாஸ்தாவாக இருக்கிறார். குடும்பம் பெரியது- அவர்கள் வீட்டிலிருந்து சாப்பாடு வருவித்து உண்பதென்றால் நிச்சயமாக சதானந்தர் பணம் கொடுத்து விடுவாரென்பதில் என்ன சந்தேகம்? 

அவருக்கு வைத்தியத்தினால் வரும் பணம் சாமான்யமாக ஒரு பெரிய குடும்ப ஸம்ரஷணை செய்வதற்கு ஏற்றதாக இருக்குமென்பது என் மதிப்பு. “அந்தப் பணத்தை அவர் சேர்த்து வைக்கிறாரா? எதற்காகச் சேர்க்கிறார்? ஏதாவது தர்மத்திற்கு அனுப்பு கிறாரா? அப்படி அனுப்பினால் அதை அனுப்பும் சந்தர்ம்பத்தைக்கூட நான் அறிந்ததில்லையே’ என்ற சந்தேகங் களுக்கு முடிவு காண்பது அரிதாக இருந்தது. 

அவர் யாருடைய உதவியையும் ஏற்றுக் கொள்வது இல்லை; அதற்கு விதி விலக்காக இருந்தவன் நான் ஒருவனே. பொருளுதவி செய்வதல்ல; அவர் மருந்து. ஸித்தம் செய்யும்போது நான் உடனிருந்து உதவுவேன் கலுவத்தில் மருந்து அரைப்பேன்; அடுப்பு ஊதுவேன், இந்த மாதிரிக் காரியங்களைப் பிரமாதமான உதவிகள் என்று சொல்வதற்கு எனக்கே வெட்கமாக இருக்கிறது. அவரோடு அதிகமாகப் பழகும் சந்தர்ப்பம் இந்த வகையில் எனக்கு ஏற்பட்டது. 

முன்பே சொன்னேனே: அவர் பழக்கத்தினால் எனக்கு உண்டான பெரிய லாபம் அவர் சொல்லும் பாடல்கதிளக் கேட்டு மெய் மறந்து போகும் ஆனந்தத்தை அனுபவிப்பது தான். மற்ற இடங்களில் அது கிடைப்பதில்லை. ஸ்தல யாத்திரை செய்தாலும், மலைக் குகைக்குச் சென்றாலும் அது கிடைப்பது சந்தேகந்தான். நான் அவர் இசைக்கு அடிமையாகி விட்டேன்; (இசையோடு கலந்த பாடல் பொரு ளில் மயங்கி நின்றேன். அதற்குப் பிறகுதான் அவருடைய மற்ற குணங்கள் என்னை வசீகரித்தன. 

ஒருநாள் அவரைப் பார்த்து, ‘சாமி நீங்கள் எங்கே பிறந்தீர்கள்? உங்கள் பூர்வ வரலாறு என்ன ?” என்று. கேட்டேன் திடீரென்று கேட்கவில்லை. கேட்க வேண்டும் கேட்க வேண்டும் என்று பல நாட்கள் நினைத்து நினைத்துக் கொஞ்சம் கொஞ்சமாகக் துணிவைத் வருவித்துக் கொண்டு கேட்ட கேள்வி அது. 

“அதைப் பற்றி உங்களுக்கு எதற்காகக் கவலை? என்று புன்னகையோடு அவர் சொன்ன பிறகு மீண்டும் அந்தக் கேள்வி கேட்பதையே மறந்து விட்டேன். 

“வைத்தியத் தொழிலிலே எவ்வளவோ பாதகங்கள் செய்ய நேருமே; அந்தத் தொழிலை ஏன் மேற் கொண்டீர்கள்?” என்று கேட்டேன். 

“அந்தத் தொழிலைப் பாதகம் இல்லாமல் செய்யவும் முடியும். மூலிகைகளையும் லோஹங்களையும் வேறு சரக்கு களையும் கொண்டு செய்யலாம்” என்றார். 

எனக்கு வைத்திய விஷயத்தில் சிரத்தையோ பரிசயமோ இல்லை. ஆகையால் அவரோடு பழகினாலும் மருந்து செய்வதைப் பற்றியோ, இன்ன நோய்க்கு இன்ன பாரிகாரம் என்பதைப் பற்றியோ நான் தெரிந்து கொள்ள முயலவில்லை. அவரும் தெரிவிக்கவில்லை. கலுவத்தில் மருந்து அரைக்கும் போது மருந்தரைக்கும் குழவிக்கு அடுத்தபடியாகவே நான் இருந்தேன். எனக்கு வேண்டியது அவர் பாட்டு. அந்தப் பாட்டிலே நான் என் மனோவிகாரங்களையும் கலக்கங்களையும் போக்கிக் கொள்ளும் மருந்தைக் கண்டேன். 

இப்படிப் பன்னிரண்டு வருஷங்களாக அவரோடு நான் பழகி வருகிறேன். என் உடல் வளர்ந்தது. அவர் தாடி வளர்ந்தது. ஆனால் பன்னிரண்டு வருஷங்களுக்கு முன் அவருடைய பூர்வ சரித்திரத்தில் எவ்வளவு தெரிந் திருந்ததோ அவ்வளவுதான் இன்றும் தெரிந்தது. அவர் வாழ்க்கையில் ஒரு மாறுதலும் இல்லை. சூரியன் உதிக் கிறான். அஸ்தமிக்கிறான்; சந்திரன் தேய்கிறான், வளர் கிறான்; பல ஆயிர வருஷங்களாக ஒரே மாதிரி நடந்து வரும் இந்த நிகழ்ச்சிகளிலே என்ன மாறுபாடு இருக்கிறது? ஒன்றும் இல்லை. அந்த இயற்கை நியதியோடு ஒன்று பட்டவரைப் போலவே சதானந்தரும் இருந்தார். அன்று கண்ட கோலம், அன்று செய்த தொழில், அன்று பாடிய பாட்டு, அன்று மெய்ம்மறந்து நின்ற நிலை – எல்லாம் இன்றும் உள்ளன. 

இப்படிச் சென்று கொண்டிருந்த போது அன்றைக்குத் தான் அந்தப் புதிய மாறுதலைக் கண்டேன்; அவரது புதிய பேச்சைக் கேட்டேன்; சிறை, விலங்கு, பந்தம், விடுதலை, சுதந்திரம் என்ற வார்த்தைகளைத் தம்மோடு இணைத்துச் சொன்னார். இவ்வளவு வருஷங்களாக அடக்கி வைத்திருந்த உணர்ச்சி பீறிக்கொண்டு வந்திருக்க வேண்டும். மற்றவர்களானால் அது வெடிக்குண்டு போல வெடித்திருக்கும். சாந்தமே உருவான அவரிடம் அந்த அளவில் உற்சாகம் வெளிப் பட்டதே பெரிது. அதனால் நான் பிரமித்துப் போனேன். ”சொல்கிறேன் வாருங்கள்” என்று உள்ளே அழைத்துப் போகையில் நான் அளவற்ற ஆர்வத்தோடு அவரைத் தொடர்ந்து சென்று, அவர் அமர நானும் அவரருகில் உட்கார்ந்தேன். 

அவர் ஏற்றிய தீபம் பிரகாசித்தது; அதன் எதிரே அவர் கண்களிலும் ஒரு புதிய ஒளி திகழ்ந்தது. கண்ணை நன்றாக விழித்தார். அவர் வெளியிலே ஒன்றையும் பார்க்கவில்லை. தம் உள்ளத்தே எதையோ பார்த்தார் போலும்! ஒரு பெருமூச்சு; சிறிது நேரம் மௌனம். அப்பால் ஒரு புன்னகை பிறகு பேச. ஆரம்பித்து விட்டார்

3

“கொல்லிமலை அடிவரரத்திலே இருக்கிறது புதுப் பட்டி என்னும் கிராமம். எவ்வளவோ காலமாக ஜனங்கள் வாழ்ந்து வந்த பழைய ஊரானாலும் அது என் றைக்கும் புதுப்பட்டிதான், திருவாசகத்தில் சிவபெருமானை  மாணிக்கவாசகர் அப்படித்தானே சொல்கிறார்? அப்பெருமான் பழைய பொருள்களுக்கெல்லாம் பழமை யுடையவராம்; புத்தம் பிதிய பொருளைக் காட்டிலும் புதுமை பெற்றவராம். 

“முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம் பொருளே 
பின்னைப் புதுமைக்கும் பேர்த்துமப் பெற்றியனே”

என்று மாணிக்கவாசகர் பாடுகிறாரே. என்ன அழகான பாட்டு! 

“நீங்கள் புதுப்பட்டியைப் பற்றிச் சொல்ல ஆரம்- பித்தீர்கள்” என்று நான் ஞாபகமூட்ட வேண்டி இருந்தது.


அந்தப் புதுப்பட்டியிலே வைத்தியர் வீடு என்றால் எல்லோருக்கும் தெரியும். பரம்பரையாக அந்த வட்டாரங் களில், போன உயிரை எமன் வாயிலிருந்து மீட்டுக் கொடுக்கும் சாமர்த்தியம் அந்த வீட்டுக்காரர்களுக்கு இருந்து வந்தது. நூற்றுக்கணக்கான ஏட்டுச்சுவடிகள் அந்த வீட்டில் குவிந்து கிடந்தன. அகஸ்தியர், புலிப்பாணி, தேரயர் முதலியவர்கள் இயற்றிய வைத்திய நூல்களில் ஒன்று பாக்கி இராது. 

அந்தக் குடும்பத்தில் வைத்தியநாதம் பிள்ளை என்பவர் காலத்தில் யாரோ ஒரு பெரியவர் அவர்கள் வீட்டுக்கு வந்து சிலகாலம் இருந்தாராம். அதற்கப்புறம் வைத்திய நாதம் பிள்ளை சில புதிய மூலிகைகளைக் கண்டு பிடித்து மிகவும் அபூர்வமான மருந்துகள் சிலவற்றைச் செய்தார். பெரிய பெரிய டாக்டர்களாலும், ஆயுர்வேத வைத்தியர் களாலும் தீராத ஷயம்,குஷ்டம், குன்மம் முதலிய அசாத்திய வியாதிகளைத் தீர்க்கத் தொடங்கி மிகவும் பிர ஸித்தியை அடைந்தார். தாம் செய்யும் வைத்தியத்தில் அவர் தாமாகப் பணம் கேட்பதில்லை. வியாதி தீர்ந்தவர்கள் கொடுப்பதை வாங்கிக் காள்வார். இப்படி இருந்தும் அவருக்கு அளவற்ற செல்வம் குவிந்தது. ஊரில் சிலர் “சாமியார் ரஸவாதம் செய்யச் சொல்லிக் கொடுத்துப் போயிருக்கிறார். அதனால் பணம் சம்பாதிக்கிறார். அதை மறைக்க இப்படிச் சில மருந்துகளைச் செய்து வியாதியைப் போக்கிப்பணம் வாங்குவதாகக் காட்டிக் கொள்கிறார். இல்லாவிட்டால் தம் வாய் திறந்து பணம் கேட்காத இவருக்கு எங்கிருந்து இவ்வளவு பணம் கிடைக்கும்?” என்றும் பேசிக் கொண்டார்கள். 

வைத்தியநாதம் பிள்ளைக்கு அவர்கள் பேசிக் கொண்டது காதில் விழுந்தது. அவர் வாஸ்தவத்தில் வைத்தியம்தான் செய்து வந்தார். ரஸவாதம் என்பதைப் பற்றி அவர் சிந்தனை செய்ததே இல்லை. ஆனால் ஜனங்கள் அவரை ரஸவாதம் செய்பவராக எண்ண தொடங்கியது முதல் அவருக்கு அந்தப் பேச்சை உண்மை யாக்கிவிட வேண்டுமென்ற சபலம் தட்டியது. தம் வீட்டில் இருந்த பழைய சுவடிகளையெல்லாம் துருவித்துருவி ஆராயத் தொடங்கினார். ரஸவாதப் பித்து அவரை மெல்லப் பிடித்துக் கொண்டது. 

மழையில்லை, வெயிலில்லை. காடில்லை, மேடில்லை; இப்படி அவர் மூலிகைகளைத் தேடிப் புறப்பட்டார், நூற்றுக் கணக்கான ரூபாய்களுக்கு ரஸம் வாங்கினார். வைத்தியம் செய்வதில் அவருக்கு இருந்தசிரத்தை மங்கியது. மூலிகைகளைப் பிழிந்து ரஸத்தைக் கட்ட முயல்வதும் பச்சிலைச் சாற்றால் செம்பைக் குளிப்பாட்டிப் புடம்போட்டு பார்ப்பதுமாகவே தம் காலத்தைக் கழிக்கலானார். 

அவருக்குச் சாப்பாட்டுக்குக் குறைவொன்றும் இல்லா விட்டாலும் மேலும் மேலும் வரும்படி வருவது குறைந்து போயிற்று. வைத்தியத் தொழிலை அவர் அடியோடு நிறுத்திக் கொண்டார். ரசவாதப் பித்துப் பிடித்த வைத்திய நாதம் பிள்ளை, பைத்திய நாதம் பிள்ளையென்று ஜனங்கள் சொல்லும்படி ஆகிவிட்டார். 

வைத்தியநாதம் பிள்ளையின் தம்பி வேறு ஒரு கிராமத்தில் இருந்தார். சின்னசாமி பிள்ளை என்பது அவர் பெயர். நல்ல மனிதர். வைத்தியத் தொழிலை ஒழுங்காகவும் அடக்கமாகவும் செய்து கொண்டு வாழ்ந்து வந்தார். அவருக்குச் சகாயமாக அவருடைய மதன் முத்துசாமி இருந்து வந்தான். 

வைத்தியநாதம் பிள்ளைக்கும் ஒரு மகன் உண்டு. சதாசிவம் என்பது அவன் பெயர். அப்பாவுக்கு ரசவாதப் பைத்தியமென்றால் அவனுக்குச் சங்கீதத்திலே பைத்தியம். தகப்பனாருடைய வைத்தியத் தொழில் பிரபலமாக நடந்து வந்தபோது சதாசிவமும் கூட இருந்து எல்லாவற்றையும் கவனித்துக் கொள்வான். அவர் வைத்தியத் தொழிலை விட்ட பிறகு அவனுக்கும் வைத்திய சம்பந்தம் அற்றுப் போயிற்று. வைத்திய நாதம் பிள்ளை அடிக்கடி யாராவது சாமியாரை அழைத்து வந்து உபசாரம் செய்து வீட்டில் சில நாட்கள் வைத்திருப்பார். அந்தச் சாமியார்கள் பண்ணும் அட்டகாசங்களுக்குக் கணக்கு வழக்கே இராது. ஒரு சாமியார் ஐந்து நிமிஷத்துக்கு ஒரு தரம் கஞ்சாக்  புகைவிடுவார். இன்னும் ஒரு சாமியார் ஒரு குடித்துப் நாளைக்குப் பத்து படி பசும்பால் மாத்திரம் சாப்பிடுவார். வேறொருவர் வெண்டைக்காய்ப் பச்சடி பண்ணச் சொல்லி அதை மாத்திரம் உட்கொள்வார். அவலைத் தவிர வேறு ஒன்றையும் தீண்டுவதில்லை என்று ஒருவர் சொல்லுவார். அவருக்கு அவலைக்கொண்டே பலவகை உணவுகள் தயார் செய்ய வேண்டும்; நெய், சர்க்கரை, தேங்காய், ஏலம் முதலியவற்றோடுதான் ! 

இப்படி வரும் சாமியார்களுக்குள் ஒருவர் இருவர் சாதுவாக இருப்பார்கள். ஒரு நாளுக்கு மேல் அவர்கள் தங்கமாட்டார்கள். 

கண்ணிலே பட்ட சாமியார்களை எல்லாம் அழைத்து வந்து ராஜோபசாரம் செய்து அவர்களிடமிருந்து ரசவாத ரகசியத்தைத் தெரிந்து கொள்ள வைத்தியநாதம் பிள்ளை முயன்றார். வந்த சாமியார்களுக்குத் தெரிந்திருந்தால் அல்லவோ அவருக்குச் சொல்ல முடியும்! இலவு காத்த கிளிபோல் அவர் ஏமாந்து போனார். வீண் செல்வால் அவர் திரவியம் கரைந்து கொண்டு வந்தது. 

இந்தச் சந்தர்ப்பத்தில் அவருடைய ஒரே தங்கை விதவைக் கோலத்துடன் வேறு புகலின்றித் தன் தமையனார் வீட்டுக்கு வந்து சேர்ந்தாள். அவள் வரும்போது கொண்டு வந்த ஆஸ்தி அவள் பழம் புடைவைகளும் காது மூக்கில் இருந்த நகைகளும் பதினாலு வயசுள்ள பெண்ணுந்தான். அந்தப் பெண் தங்கம்மாள் என்ற பெயருடையவள். 

வைத்தியநாதம் பிள்ளை வீட்டில் ரஸவாதத்தால் தங்கம் வராவிட்டாலும் அந்தத் தங்கம் வந்து சேர்ந்தாள். தங்கமென்ற பெயர் அவளுக்கு எவ்வகையிலும் தகும். அழகான மேனி, அடக்கமான குணம், தன் நிலையை அறிந்து கொண்டு அதற்கு ஏற்றபடி நடந்து கொள்ளும் சாமர்த்தியம், கஷ்டத்தை வெளிக்காட்டாமல் சகித்துக் கொள்ளும் பொறுமை எல்லாவற்றிலும் அவள் முன் நின்றாள். 

“அண்ணா, என் தங்கத்தை உன்னிடம் ஒப்பித்து விட்டேன்; நீ குடிக்கிற கஞ்சியோ.கூழோ எனக்குப் போதும். இவளை மாத்திரம் கண்ணைக் கசக்காத ஓர் இடத்தில் சேர்த்துவிடு’ என்று தங்கத்தின் தாய் அழுது கொண்டே அடைக்கலம் புகுந்தாள். 

“நீ எதற்காக அழுகிறாய் அம்மா? நீ எனக்கு ஒரு பாரமா? தங்கந்தான் பாரமா? அசடே! அவளுக்கென்ன குறைச்சல்? நான் இருக்கிறேன், உன்னைக் கவனித்துக் கொள்ள, தம்பி இருக்கிறான்; தங்கத்தைக் கவனித்துக் கொள்வான்” என்று அபயமளித்தார் வைத்தியநாதம் பிள்ளை. 

அவர், “தம்பி இருக்கிறான் ; தங்கத்தைக் கவனித்துக் கொள்வான்’ என்ற பேச்சிலே பொடி வைத்துப் பேசினார். அவரும் சரி, தங்கத்தின் தாயும் சரி, அந்தப் பேச்சுக்கு ஒரே விதமான பொருளைத்தான் எண்ணினார்கள்: சதாசிவம் தங்கத்தை மணம் செய்து கொண்டு காப்பாற்று வானென்றுதான், குல வழக்கத்திலே ஊறிப்போன அந்த இரண்டு உள்ளங்களும் நினைத்திருக்கும். ஆனால் அவர் அதைச் சொன்ன மாதிரி நன்றாக இல்லை; நல்ல சூசக மாகப்படவில்லை. அவர் தம் தங்கையைக் கவனித்துக் கொள்வதற்கும் சதாசிவம் தங்கத்தைக் கவனிப்பதற்கும் வித்தியாசம் இல்லையா? இரண்டையும் ஒன்றுக்கொன்று உபமானமாக வைத்துப் பேசுவது போலச் சொன்னாரே; இது எப்படிப் பொருத்தமாக இருக்கும்? அவர் அவளைச் சகோதரி என்ற உறவு பற்றிக் கவனிப்பார். சதாசிவம் தங்கத்தைக் காப்பாற்றுவதற்குக் காரணமான உறவும் அதுதானா? நிச்சயமாக அப்படி ஒருவரும் எண்ணியிருக்க மாட்டார்கள் 


சதாசிவமும் தங்கமும் மிகவும் அன்போடு பழகி வந்தனர். மாசு மறுவற்ற அன்பு அது. அவன் நன்றாகப் பாடுவான். அவர்கள் வீட்டுக்கு வரும் சாமியார்களுள் சில பேர் அவனுக்குத் தேவார திருவாசகங்களைச் சொல்லிக் கொடுத்தார்கள். அவற்றை அவன் இனிமையாகப் பாடுவான். தங்கம் கேட்டுக் கேட்டு மகிழ்வாள். அவனை அவள் அத்தான் முறை வைத்து அழைத்து வந்தாள். “அத்தான், நீ பாடும்போது எனக்கு என் ஞாபகமே இருக்கிறதில்லை. எனக்கு நீ சொல்லும் பாட்டுக்கு அர்த்தம் தெரியாது. ஆனாலும் நீ பாடுகிறபோது ஏதோ மலையின் உச்சிக்குப் போகிற மாதிரி இருக்கிறது என்று அவள் பாராட்டுவாள். அந்தப் பாராட்டு சதாசிவத்தின் உள்ளத்தைக் குளிர்விக்கும். “அதைப் பாடு, இதைப் பாடு” என்று அடிக்கடி அவள் கேட்பாள். சதாசிவமும் பாடிக் காட்டுவான். இந்த உறவு முற்றித் தாங்கள் எதிர் பார்த்தபடி அவர்கள் வாழ்வார்களென்று அண்ணனும் தங்கையும் எண்ணி எண்ணி இன்புற்றார்கள். தங்கத்தின் மனசிலும் அந்த எண்ணம் முளைத்தது. ஆனால் அந்த அப்பாவி சதாசிவம் இருக்கிறானே, அவனுடைய போக்கே தனியாக இருந்தது. தன் தந்தை, அத்தை, தங்கம் என்னும் மூவருடைய உள்ளத்திலும் தான் ஒரு நம்பிக்கையை வளர்த்து வந்ததை அவன் சிறிதும் உணரவில்லை. 

அவனுக்கு வயசாகி வந்ததே யொழிய அதற்கேற்ற லௌகீக ஞானம் ஏற்படவில்லை. தன்னை நோக்கி வளரும் தங்கத்தை அவன் கண்கள் நன்றாக கவனிக்கவில்லை. அவள் உள்ளத்தே வளரும் காதற் போக்கையும் அவன் ஊகித்தறியாத முட்டாளாக இருந்தான். தாயுமானவர் பாட்டும், தேவார திருவாசகமுமே அவனுக்கு இன்பமளிக்கப் போதியனவாக இருந்தன. போதாக் குறைக்குச் சாமியார்களுடைய பழக்கம் வேறு ஏற்பட்டது. 

ஏதோ ஒரு நாள் அவனுடைய முன்னிலையிலே அவன் அத்தை தன் கருத்தை வெளிப்படையாகச் சொல்லி விட்டாள்; “சதாசிவத்துக்கும் தங்கத்துக்கும் சீக்கிரம் முடிச்சுப் போட்டு விட்டால் நான் சந்தோஷமாகச் செத்துப் போவேன்” என்று அவள் சொன்னாள். அந்தக் கல்யாணப் பேச்சிலே கூட அபசகுனம் போல அவள் தான் செத்துப் போவதையும் சேர்த்துச் சொன்னாள். 

அவள் அன்றைக்குச்சொன் ன வார்த்தைகள் சதா சிவத்தின் மனத்திலே உறைத்தன; யாவருடைய உள்ளத் திலும் இருந்த யோசனை அன்றுதான் முதல் முதலாக அவனுக்குத் தெரிந்தது. அதைப் பற்றி யோசிக்கும் மன நிலை முன் இருக்கவில்லை; அதைப் பிறர் கூறவும் இல்லை. அன்றுதான் அவனுக்கு தங்கத்தின் உண்மை யான ஸ்வ ரூபம் தெரிந்தது. பெண்ணென்பது மாயப் பிசாசமென்று சாமியார்கள் மூலமாகத் தெரிந்து கொண்டி ருந்த அவனுக்குத் தன் அருகே ஒரு பிசாசு வளருகின்ற தென்ற விஷயம் அப்போதுதான் தெரிந்தது. அன்றுமுதல் அவன் பட்டினத்துப் பிள்ளையின் பாடல்களை அதிகமாகப் பாடலானான். மாதர்களைப் பழிக்கும் பாடல்களைப் பாடிப் பாடித் தன் மனத்திலே ஒரு வெறுப்பை உண்டாக்கிக் கொண்டான். தங்கத்தோடு சகஜமாகப் பழகுவது போய் அவளைக் கண்டால்வெறுத்து ஒதுக்கும் பழக்கம் அவன்பாற் குடிகொண்டது. 

தங்கம் எதிர்பாராத இந்த மாறுதலைக் கவனித்தாள். அவளுக்கு ஒன்றும் விளங்கவில்லை. ஆனாலும் அவளுடைய தாயும் சதாசிவத்தின் தந்தையும் சீக்கிரத்தில் கல்யாணத்தை முடித்து விட வேண்டுமென்று எண்ணி ஏற்பாடு செய்யத் தொடங்கினர். சதாசிவம் அதை அறிந் தான். “நான் இந்த வீட்டில் இருக்க வேண்டுமானால் கல்யாணத்தைப் பற்றின பேச்சை என்னிடம் எடுக்க வேண்டாம்’ என்று வெட்டொன்று துண்டிரண்டாகச் சொல்லிவிட்டான். அப்போது வந்திருந்த சாமியார் ஒருவர் *5 ( இப்படி மனோ விகாரம் இல்லாத ஒரு பிள்ளையை வற்புறுத்துவது பிசகு” என்று வைத்திய நாதம் பிள்ளையிடம் சொல்லவே, அவர் மேலே தம் குமாரனைத் தொந்தரவு செய்யவில்லை. 

பெண்ணைப் பெற்ற செல்லம்மாள் அடைந்த வருத்தம் சொல்லி முடியாது. அவளுடைய ஜீவாதாரமாக இருந்த நம்பிக்கையே குலைந்து போவதென்றால் அந்தப் பெண் பேதை சகிப்பாளா? சதாசிவத்தினிடம் தனியே கெஞ்சிப் பார்த்தாள்; “தம்பி, உன்னை நம்பித்தானே நான் உயிர் வைத்திருக்கிறேன்? என் தங்கத்தை நான் எங்கே கட்டிக் கொடுப்பேன்!” என்று அழுதாள். 

தங்கம் இந்த இடியைக் கேட்டுக்கதிகலங்கிப் போனாள். சதாசிவத்தைப் பார்க்கும் போதெல்லாம் அவள் கண்களில் ஒரு சோகப் பார்வை தோன்றும். ஆழமறியாத அந்தச் சோகத்தை அவள் வாயால் சொல்ல வலியற்றிருந்தாள். ஆனாலும் அந்தப் பார்வையிலே கொந்தளித்த சோகத்தை கண்ணுடையவர்கள் தெரிந்து கொள்ளலாம். சதாசிவத் திற்குதான் அந்தக் கண் இல்லையே ! ‘முகத்திற் கண் கொண்டு பார்க்கின்ற மூடர்காள், அகத்திற் கண் கொண்டு பார்ப்பதே ஆனந்தம்” என்று திருமந்திரத்தை உரும் போடும் அவனுக்குக் காதலும், அதனை இழப்பதனால் உண்டாகும் சோகமும் எப்படித் தெரியப் போகின்றன! 

நாட்கள் கடந்தன. நம்பிக்கை குலைந்தது. ‘‘இனி அடுத்தபடி செய்ய வேண்டியது என்ன?” என்ற கேள்வி வைத்தியநாதம் பிள்ளையின் கருத்திலே எழுந்தது. தாயும் மகளும் படும் அவஸ்தையைப் பார்த்து அவர் உள்ளம் உருகினார். கடைசித் தடவை பிரயத்தனம் செய்து பார்ப் போமென்று எண்ணிச் சதாசிவத்தினிடம் வந்தார்; “தம்பி, உன் அத்தைக்கு வேறு ஆதரவு இல்லை. இதுவரையில் உனக்கே தங்கத்தைக் கட்டிக் கொடுப்பதாகத் தீர்மானமாக எண்ணியிருந்தோம்; ஆகையால் வேறு இடங்களில் முயற்சி பண்ணவில்லை. இப்போது திடீரென்று நீ மறுத்து விட்டாய். நான் உன் அத்தைக்கு முன்பே வாக்குறுதி அளித்திருக்கிறேன். அதைக் காப்பாற்ற வேண்டாமா?” என்றார். 

“என்ன வாக்குறுதி?”

“நான் செல்லம்மாளைப் பாதுகாப்பதாகவும் நீ தங்கத்தைப் பாதுகாப்பாயென்றும் சொல்லி விட்டேன். இப்போது நீ இப்படி மறுத்துப் பேசுவது நியாயமாக இல்லை.” 

“நீங்கள் என் விஷயத்தில் என்னைக் கேளாமல் வாக்குறுதி அளித்தது நியாயமாகுமா? போகட்டும். இப்போது நீங்கள் கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்று வதில் ஆட்சேபணையே இல்லை. நீங்கள் உங்கள் தங்கை யாகிய என் அத்தையைப் பாதுகாப்பது போலவே நானும் என் தங்கையாகிய தங்கத்தைப் பாதுகாப்பேன்.” 

இந்த வியாக்கியானத்தைக் கேட்டு வைத்தியநாதம் பிள்ளை ஸ்தம்பித்துப் போனார். சதாசிவத்தின் பேச்சைக் கேட்டு வந்தசெல்லம்மாள்; “அட பாவி!” என்று மனத்துள் சொல்லிக் கொண்டாள். மறைவில் நின்றிருந்த தங்கத்திற்கு ஒரு முறை உயிர் போய் வந்தது. 

கடைசியில் வேறு வழியில்லாமல் தங்கத்தை வைத்திய நாதம் பிள்ளை தம் தம்பி மகனாகிய முத்துசாமிக்குக் கல்யாணம் செய்து வைத்தார். ஆசை அழிந்து சோகம் மலிந்த தங்கம் முத்துசாமிக்கு மனைவியாக வாழலானாள், அவள் தாயும் அவளோடு போய் இருந்தாள். இருக்க வாவது! தங்கத்தின் அழுத கண்ணையும், சிந்திய மூக்கை யும் கண்டு கண்டு அவள் அடுத்த மாசமே உயிரை விட்டு விட்டாள். அநேகமாக தங்கத்தின் கல்யாணமும் செல்லம்மாள் சாவும் அடுத்தடுத்தே நிகழ்ந்தன என்றுதான் சொல்ல வேண்டும். 

தங்கம் பஸ்மமாகிக் கொண்டிருந்தாள். வாழ்க்கையில் அவளுக்கு இன்பமே இல்லாமல் போயிற்று. அவள் கணவன் அபினும், கஞ்சாவும் குடித்துக் குடித்து அவளை அடிப் வதும் வருஷத்துக்குப் பத்து மாசம் நாடோடியாகத் திரிவதுமாக இருந்தான். அவள் தகப்பனாரும் காலமாகி விட்டார். தங்கம் பல மாசங்கள் தனியாகவே அந்த வீட்டில் காலங் கழித்தாள். அவள் துக்கத்துக்குத் தூண்டு கோலாக ஒரு பெண் குழந்தை வேறு பிறந்திருந்தது. 

இவ்வளவு கஷ்டத்திலும் அவள் வைத்திய நாதம் வீட்டிற்கு வரவில்லை. வைத்திய நாதம் பிள்ளை ரஸவாதப் பைத்தியத்தால் உடைமை இழந்தார்: உள்ளம் இழந்தார்; கடைசியில் உடலும் இழந்தார்.சதாசிவம் தனியே இருந்தான். அந்தத் தனிமை அவனுக்குப் பிடிக்க வில்லை. இந்தப் பாரத பூமி முழுவதும் சுற்றிவர வேண்டும் என்ற சங்கற்பம் எழுந்தது. 

முன்பே அவன் துறவிதான்; ஓர் ஊரிலே ஒரு வீட்டிலே சிறைப்பட்டுக் கிடக்க அவன் மனம் இடம் கொடுக்க வில்லை. தன் வீட்டை விற்று அந்தப் பணத்தை ஏழை எளியவர்களிடம் வீசிவிட்டுக் கையைத் தட்டிக் கொண்டு வானவெளியே கூரையாக உள்ள வியனுலக வீட்டிற் குடியேற எண்ணியிருந்தான். இந்த எண்ணம் வளர்ந்து முற்றுப் பெறுந் தருணத்தில் தங்கத்தினிடமிருந்து ஒரு ஆள். வந்தான். 

“தங்கம்மா படுத்த படுக்கையாக் கிடக்குது. உங்க கிட்டே ஒரு வார்த்தை சொல்லணுமாம். உயிர் போற வங்க ஆசையை நிறைவேத்தாமப் போனா அது பெரிய பாவம்னு சொல்லச் சொல்லித்து என்று அவன் கூறிய செய்தி சதாசிவத்தின் சிந்தையைக் கலக்கி விட்டது. தங்கமென்ற ஒருத்தி இருக்கிறாளென்பதை அவன் மறந் திருந்தான். இப்போது அவள் மரணாவஸ்தையில் இருக் கிறாளென்பதைக் கேட்டபோது அவன் உள்ளே புதைந்து இருந்த ஏதோ ஓர் உணர்ச்சி கிளர்ந்தெழுந்தது. 

‘போகலாமா, வேண்டாமா’ என்று ஒரு கணம் யோசித்தான்.. தங்கத்தின் பொறுமையும் உத்தமமான குணங்களும் நினைவிலே மிதந்து வந்தன. ஒரு முடிவுக்கு வந்தவனைப் போல் தங்கம் இருந்த கிராமத்தை அடைந்தான். 

அவள் படுத்த படுக்கையாகக் கிடந்தாள். போய்ப் பார்த்தான். அவனுக்கு அடையாளமே தெரியவில்லை. உடம்பு வெறும் எலும்பும் தோலுமா இருந்தது. அவள் ஸம்பூர்ண எழிலோடு விளங்கின போதும் அவளை அவன் பார்த்திருக்கிறான். ஆனால் அப்போது அந்த எழிலைம் பருகும் தாகம் அவன் கண்களுக்கு இல்லை. அவை அவளிடம் குலுங்கிய அழகைக் காண மறுத்தன. இப்போதோ அவன் கண்கன் தங்கத்தின் உடம்பை நோக்கின. அவளுடைய உடலில் ஒவ்வோரங்குலமும் வேதனையால் வெம்பி கருகிக் கிடந்தது. வயசினால் வந்ததல்ல அந்த விகாரம்.

சதாசிவத்துக்கும் இருதயம் உண்டு, உணர்ச்சி உண்டு, முகத்திலே கண்கள் உண்டு என்று அப்போது தான் தெரிய வந்தது. அவள் அழகுருவத்தைக் கண்டு ஸ்தம்பித்துப் போகாத அவன் உள்ளம் அவள் விகார உருவத்தைக் கண்டு உணர்வற்று நின்றது. அவள் தன்னோடு நெருங்கிப் பழகியபோது ஒதுங்கி நின்ற அவன் மனம் அவள் விலகி நின்றபோது அவளை அணுகியது. முன்பு அவள் கண் களிலே தோற்றிய உல்லாச லாகிரியை அவன் ஏறிட்டும் பார்க்கவில்லை. இன்று அந்த லாகிரியெல்லாம் போய் வேதனைகளெல்லாம் தேங்கி நின்ற குழிகளாக இருந்தன அந்த விழிகள். அவை அவன் மனத்தை உருக்கின உலுக்கின; முன்பு செய்த பராமுகத்துக்குத் தண்டனை கொடுப்பதுபோல அவன் உயிரையே வாட்டின! 

அவனுக்கு அப்போதுதான் காதல் என்பது உடலுக்கும். உலகுக்கும், உள்ளத்துக்கும் புறம்பே உயிரில் ஊடுருவி நிற்கும் நுண்பொருள் என்ற உண்மை புலப்பட்டது. 

“தங்கம். என்னை அழைத்தாயாமே” என்று அவன் நடுங்கியபடியே கூறினான். அவளுடைய உள்ளக் கோயிலில் எழுந்தருளியிருந்த அன்புத் தெய்வத்தின் முன் அவன் நடுங்கத்தான் வேண்டியிருந்தது. 

“அத்தான் ! வந்து விட்டீர்களா! நான் உய்ந்தேன்! என் வாழ்வு பழுத்தது. இந்த அபாக்கியவதியின் கடைசி வேண்டுகோளுக்குச் செவி கொடுத்து வந்தீர்களே !……. அவளுக்குப் பேச முடியவில்லை ; மேல் மூச்சு வாங்கியது; உள்ளத்திலே குமுறிக் கொண்டிருந்த துக்கமோ, அவனைக் கண்டதிலே உண்டான ஆனந்தமோ அவள் கண்களில் நீர் வெள்ளத்தைப் பெருக்கியது. அன்புதான் கரைந்து ஊற்றாக வெளிப்பட்டதோ? யார் அறிவார்கள்! 

“என்ன தங்கம்! இப்படி ஆகிவிட்டாய்!” என்று அவன் கேட்டான்; இப்போது அவன் பேச்சிலும் துக்கம் தொனித்தது. ”நீங்களே காரணம்!” என்று அவள் பதில் சொல்லி யிருந்தால் அவன் ஆச்சரியப்பட்டிருக்க மாட்டான்* அவன் எதிர்பார்த்த விடை அதுதான். 

ஆனால் அவள், “இந்த உடம்பு எப்படிப் போனால் என்ன? என் உடம்பு என்ன தல்லவே! உயிருக்கு அழிவு ஏது?” என்று சொல்லும்போது சதாசிவம் விம்மினான். அவன் வேதாந்தம் பேசுவது போய் இப்போது அவளல்லவா பேசுகிறாள்? ஆனால் அவள் வேதாந்தத்தில் எவ்வளவு உண்மை அடங்கியிருந்தது! 

“ஆமாம்; இனிப் பேசப் போவதில்லை; நான் வந்த வேலை முடிந்து விட்டது. இந்த ஒரு நிமிஷமாவது உங்க ளோடு வெளிப்படையாகப் பேசுகிறேன். உங்களை நம்பி நான் என் உடம்பைத் தாங்கினேன். என் ஆசை நிறை வேறவில்லை. பிறகு நான் உடம்பை மறந்து போனேன். உள்ளத்திலே என் காதல் சஞ்சரித்தது. உங்களை அங்கே வைத்துப் பூசித்தேன். எனக்குக் கணவராக வந்தவர் இந்தக் குழந்தை வயிற்றில் இருந்தபோது போனவர் தாம். இன்னும் வரவில்லை. வந்தால்தான் என்ன செய்யப் போகிறார்? இந்தக் குழந்தை பிறந்து இரண்டு வருஷ காலமாகிறது. இவ்வளவு நாள் நான் எப்படியோ உயிரைத் தாங்கி வந்தேன். உங்களைப் பார்த்துப் பேச எனக்கு ஆசை தான். நீங்கள் என் உள்ளத்திலே தான் இருக்கிறீர்களே அதனால் அழைக்க வில்லை. இப்போது அவசியம் வந்து விட்டது. அழைத்தேன். நான் போய் வருகிறேன். இந்த ஜன்மத்திலேதான் நான் தங்களோடு வாழக் கொடுத்து வைக்க வில்லை. அடுத்த ஜன்மத்திலாவது. வாக்கியத்தை முடிப்பதற்கு முன் அவளுக்கு மூர்ச்சை போட்டு விட்டது. அவனுக்குத் துக்கம் பொங்கி வந்தது. கோவென்று அழுது விட்டான். அவன் கண்ணீர் அவள் முகத்தில் விழுந்தது. அவளுக்குச் சிறிது தெளிவு வந்தது.

“அத்தான், என் ஆத்மாவுக்குச் சிறையாக இருக்கும் இந்த உடலை உதறி விட்டால் பிறகு ஆத்மா உங்களோடே தான் சுற்றிக் கொண்டிருக்கும். ஆகையால் எனக்குத் துங்கம் சிறிது கூட இல்லை. என் ஆத்மா இருக்குமிடத்தில் என் குழந்தையும் இருக்க வேண்டும். ஆகையால் இந்தக் குழந்தையை ஏற்றுக் கொள்ளுங்கள்” என்று சொல்லிக் கையைக் காட்டினபடியே மீண்டும் சோர்வடைந்தாள். அவ்வளவு தான். பிறகு சில மணி நேரங்களில் உயிர் போய் விட்டது. 

தங்கத்தின் ஆத்மா உண்மையிலேயே தன்னைச் சுற்றிக் கொண் டிருப்பதாகச் சதாசிவம் உணர்ந்தான். அந்த வீட்டின் மூலையிலே தங்கத்தின் படம் ஒன்று தொங்கிக் கொண்டிருந்தது. அது அவன் கண்ணிற் பட்டபோது அவன் ஆவலாக அதை எடுத்து வைத்துக் கொண்டான். 

குழந்தையையும் எடுத்துக் கொண்டான். 


சதாசிவம் வீட்டை விட்டுப் புறப்பட்டு விட்டான் குடும்பம் ஒன்றும் இல்லாமல் தனித்திருந்தபோது புறப்பட முடியவில்லை. விதியின் விளையாட்டு நேர்மாறாக நடந்து சிரித்தது. தங்கத்தின் படம், அவள் குழந்தை. அவள் நினைப்புப்படி அவள் ஆத்மா – இந்தக் குடும்பத்தை ஏற்றுக் கொண்டு குடும்பியான போது அவன் ‘எல்லாவற் றையும் துறத்து புறப்பட்டு விட்டான். 

4

“கதை முடிந்து விட்டதா?” என்று கேட்டேன்.

“ஆம். முடிந்து விட்டது” என்றார் சதானந்தர். 

“உங்கள் கதையைச் சொல் ல வந்தீர்கள்: அதை ஆரம்பிக்கவே இல்லை. சதாசிவத்தின் கதையை ஆரம் வித்தீர்கள்; அதை முடிக்கவே இல்லை.” 

“இரண்டும் ஒன்றுதான்.” 

நான் எதிர்ப்பார்த்ததுதான் இது; ஆனாலும் அவர் வாய் மூலமாகக் கேட்கும் போது என் உடம்பு ஒரு. குலுங்கு குலுங்கியது. 

“நான் இந்த ஊருக்குப் பன்னிரண்டு வருஷங் களுக்கு முன் வரும்போது இந்த இடம் எனக்குப் பிடித் திருந்தது. நான் ஒரு நாள் அஸ்தமன காலத்திலே இங்கே வந்தேன். எனக்கு இப்போது உணவு அனுப்பி வருகிறார்களே, அந்த வீட்டிலே தங்கினேன். அந்த ஏழைகளிடம் குழந்தையை ஒப்புவித்துவிட்டுக் குழந்தைக்கும் எனக்கும் உள்ள சம்பந்தத்தை யாரிடமும் கூறக் கூடா தென்று சத்தியம் வாங்கிக் கொண்டேன். அந்த வீட்டுக் காரர், தம் தங்கை குழந்தையை விட்டு இறந்து போனதா கவும், அநாதையான அந்தக் குழந்தையை வளர்த்து: வருவதாகவும் சொல்லிக் கொண்டார். 

“அன்பினால் ஏற்பட்ட இந்தப் பந்தத்தில் நான் அகப்பட்டுக் கொண்டேன். குழந்தையைக் காப்பாற்றி ஒப்பிக்க வேண்டியவர்களிடத்தில் ஒப்பிப்பது என் கடமை யென்று எனக்குத் தோன்றியது. அந்தக் குழந்தைக்கு நானே தகப்பனாக இருந்தால் என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்யாவிட்டால் என் ஆத்மாவுக்கு விடுதலை இல்லையென்ற கருத்தினால் நான் இங்கே சிறைப் பட்டேன். வைத்தியத்தில் நான் சம்பாதித்த பணமெல்லாம் அந்த அன்புத் தர்மத்துக்காகத்தான். குழந்தை வளர்ந்து விட்டாள். அவள் செலவுக்கு வேண்டிய பணம் அந்தக் குடும்பத்தாருக்குக் கிடைத்தது. அவர்களுக்கும் உபகாரமாக இருந்தது. கல்யாண ஏற்பாட்டுக்கு வேண்டிய செலவுக்குக் கூட நிறையப் பணம் இருக்கிறது. அந்த உத்தம ஜனங்கள் என்னைக் காட்டிக் கொடுக்காமல் பாரத்தை வகித்துக் கொண்டார்கள். ஒரு நல்ல இடந்தில் பிள்ளைக்கு ஏற்பாடு செய்து இன்றுதான் கல்யாணம் நடைபெற்றது. 

“ஆமாம், எனக்குத் தெரியுமே” என்றேன் நான்?

“என் உள்ளத்துள்ளே குடும்பியாக வாழ்ந்து வந்த நான் இன்று அந்தப் பெண் குழந்தைக்குச் செய்ய வேண்டிய கடமைகளில் இருந்து விடுபட்டேன். இனிமேல் கவலை யில்லை. பறவை போல் திரிந்து வாழ விரும்பிய எனக்கு இருந்த பந்தம் இப்போது விலகி விட்டது. தங்கம்மாளின் ஆத்மா இப்போது பூர்ண திருப்தியை அடைந்திருக்கும். அவள் சாகுந் தருணத்தில் என்னிடம் ஒப்பித்தக் குழந்தையை அக்கினி பகவானுக்கு முன்னே என் பிரதி நிதியான அந்தச் சைவர் மூலமாக ஒருவருக்கு ஒப்பித்து விட்டேன்; நானாக எடுத்து வந்தேனே அந்த படத்தையும் இன்று அக்கினி பகவானிடத்திலேயே ஒப்பித்து விட்டேன்.”

“அதைத்தான் நான் வரும்போது கொளுத்தினீர்களோ?” 

“இப்போது களிம்பு போய் விட்டது. நான் தங்கமாகி விட்டேன்! என்னை இறுகப் பிணித்தருந்த பந்தத்தின் கடைசிப் புரி தங்கத்தின் படத்தைக் கொளுத்திய போது எரிந்து போய் விட்டது. இனிமேல் நான் விடுதலை பெற்றேன். அப்பா ! என்ன பலமான விலங்கப்பா ! அன் பினால் இடப்பட்ட விலங்கை லேசிலே தறிக்க முடிய வில்லையே ! பன்னிரண்டு வருஷம் தவமிருந்து காத்து அல்லவா விடுதலை பெற வேண்டி யிருந்தது! இப்போது நான் உண்மைத் துறவி. விடுதலை யின்பத்தைப் பெற்ற ஐயகோசத்தை எட்டுத் திக்கிலும் என்னுடைய தேவார திருவாசக இசையினால் முழக்கிக்கொண்டு நான் புறப்படப் போகிறேன்.” 

மறுநாள் காலையில் ஆசிரமத்திற்கு வந்தேன். ஆம் அவர் போய் விட்டார். வெறிச் சென்றிருந்தது ஆசிரமம். அதுவரையில் அவருடைய சம்பந்தத்தால் அமைதி நிலவிய இடத்தில் தெய்வீக சோபையோடு திகழ்ந்த ஒவ்வோர் இலையும் ஒவ்வொரு பண்டமும் அவர் பிரிவுக்கு ஆற்றாமல் ‘ஹோ’ என்று கதறும் ஒலியை என் உள்ளம் உணர்ந்தது.

– 1932-42, கலைமகள்.

– கதை சொல்லுகிறார் கி.வா.ஜ., முதற் பதிப்பு: டிசம்பர் 1992, அல்லயன்ஸ் கம்பெனி, சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *