விசித்திர உருளைch2008

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: July 14, 2012
பார்வையிட்டோர்: 7,645 
 
 

“அரசே உங்களுக்கு ஒரு முக்கிய செய்தி கொண்டுவந்துள்ளேன்” நந்தவனத்தில் ஓய்வெடுத்துக்கொண்டிருந்த அரசர் வீரவர்மனிடம் பவ்யமாகச் சொன்னான் தளபதி நரசிம்மன்.

“சொல் நரசிம்மா”

“நம் தேசத்தின் வடக்கு பகுதியில் இன்று திடீரென்று ஒரு மாபெரும் சத்தம் கேட்டது, அங்கே காவற்பணியில்
ஈடுபட்டிருந்த நம் சேவகர்கள் ஓடிச்சென்று பார்த்த போது ஒரு விசித்திர காட்சி தென்பட்டது அரசே!”

“அதென்ன விசித்திர காட்சி நரசிம்மா?” ஆர்வமுடன் கேட்டார் அரசர்.

“இரும்பினால் செய்யப்பட்ட ஒரு பெரும் உருளை விண்ணிலிருந்து பெரும் சத்தத்துடன் விழுந்திருக்கிறது அரசே, நம் வீரர்கள் அருகில் சென்று பார்த்த பொழுது ஒரு சவம் அந்த உருளையின் உள்ளே
கிடந்திருக்கிறது”

“நான் உடனே அந்த உருளையை காண வேண்டும்,நாம் இப்பொழுதே புறப்படுகிறோம்,ரதத்தினை தயார் செய்யுங்கள்”

“உத்தரவு அரசே”

அரண்மனையில் இருந்து புறப்பட்ட ரதம் வடக்குப் பகுதிக்கு சூரிய அஸ்தமணத்திற்கு பின் வந்து சேர்ந்தது.

“அரசே நீங்கள் அருகில் செல்ல வேண்டாம்,என் உள்ளுணர்வு இதில் ஏதோ விஷமம் இருப்பதாக சொல்கிறது” கவலையுடன் சொன்னான் நரசிம்மன்.

“எதிரிகள் என் பெயர்கேட்டாலே காத தூரம் ஓடுவார்கள் என்பதை மறந்துவிட்டாயா நரசிம்மா? இந்த உருளை என்னை என்ன செய்துவிடப்போகிறது, நீயும் என்னோடு வா, உள்ளே என்ன இருக்கிறது என்று ஆராய்ந்துவிடுவோம்”

அரசரும்,நரசிம்மனும் மிகுந்த ஜாக்கிரதையோடு உள்சென்றனர்..

“இதென்ன அரசே நிறைய எண்களும் சில கைப்பிடிகளும் இருக்கின்றன?” வியப்புடன் கேட்டான் நரசிம்மன்.

“விந்தையாக இருக்கிறது நரசிம்மா! இங்கே பார் சிகப்பு வண்ணத்தில் நெருப்பென ஜொலிக்கிறது ஒரு விளக்கு!”

“ஆம் அரசே என் உடைவாளால் அதைக் கீறிப்பார்த்துவிடுகிறேன்” என்றவாறே தன் உடைவாளால் ch2008 என்கிற குறியீடு பொறிக்கப்பட்ட
சிகப்பு விளக்கை தொட்டான் நரசிம்மன்..

பெருத்த சத்தத்துடன் விண்ணில் சிறுபுள்ளியென மறைந்தது
அந்த விசித்திர உருளை.

“தோ பாரு மச்சி டிராமாலேர்ந்து கோமாளி பசங்க நேரா தெருவுக்கு வந்துட்டானுங்க”

தங்களை பரிகாசம் செய்கின்ற சென்னைத் தமிழ்மக்களை கண்டு
திகைத்து நின்றனர் அரசரும், நரசிம்மனும்.

2008ம் ஆண்டு புது வருட கொண்டாட்டத்தில் களைகட்டி இருந்தது
சென்னை.

– Thursday, December 13, 2007

NilaRasigan2 நிலாரசிகன் ஒரு தமிழ்க் கவிஞர் மற்றும் எழுத்தாளர். தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த இவர் கவிதை, சிறுகதை, கட்டுரை மற்றும் விமர்சனங்களை எழுதி வருகிறார். தகவல் தொழில் நுட்பத்துறையில் பணிபுரிந்து வரும் இவரது படைப்புகள் ஆனந்த விகடன், வார்த்தை, உயிர்மை, கல்கி, புன்னகை, அகநாழிகை, நவீன விருட்சம், உயிர் எழுத்து, கல்குதிரை, கொம்பு போன்ற அச்சிதழ்களிலும், கீற்று, கூடல்திணை, அதிகாலை, உயிரோசை, திண்ணை, தமிழோவியம் போன்ற இணைய இதழ்களிலும் வெளியாகி இருக்கின்றன.…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *