வாழ்க்கை





(1985ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
“ஏதோ பிரச்சினைபோல இருக்கு…” என்றார் கடைக்காரர். திரும்பி வெளியே பார்த்தான். சனங்கள் ஓடிக்கொண்டிருந் தார்கள். எதிர்வரிசைக் கடைகளெல்லாம் மளமளவென்று பூட்டப்படுவது தெரிந்தது. பயமும் பரபரப்பும் சுரந்தன.

“இங்கே வா…… அவர் சொல்ல முதலே ஒரு உதவியாள் ஓடி வந்து வாசற் கதவுப் பலகைகளை அடுக்கத் தொடங்கினான்.
“கெதியாத் தாங்கோ…”
“அவசரப்படாம நிண்டு பாத்திட்டுப் போ, தம்பி…”
“இல்லை ஐயா, போயிடலாம்.”
ஒரே ஒரு கதவுப் பலகை மட்டும் போட இருந்தது. ஆளை விலக்கிக்கொண்டு வெளியே வந்தான்.
ஓடுகிறவர்களில் மோதிக்கொள்ளாமல் தெருவைக் கடக்கவேண்டியிருந்தது.
“என்ன பிரச்சினையெண்டு தெரியேல்லைஆனா ஏதோ இருக்கு…” போகிற போக்கில் ஒருவர் சொல்லிக் கொண்டு போனார். தெருவின் பரபரப்பு பயத்தைக் கூட்டியது. எங்கோ ஏதோ சத்தமுங் கேட்டதுபோலிருந்தது. கடைக்குள்ளேயே நின்றிருக்கலாமா? திரும்பிப் பார்த்தான். இப்போது ஒற்றைக் கதவும் மூடப்பட்டிருந்தது.
தன்னையறியாத ஒரு விரைவு உந்தியது. முன்னால் தெரிந்த சந்தியில், மினிபஸ்கள் வேகமாகத் திரும்பிப் போய்க் கொண்டிருந்தன. தூரத்தில், ஒன்றை வழியில் நிறுத்தி அவ சரமாக ஆட்கள் ஏறினார்கள்.
இப்போது பஸ் ஸ்ரான்டுக்குப் போவதை நினைக்க முடி யாது. மற்ற வீதியில் திரும்பி மெல்ல ஓடினான். செருப்பு சங்கடமாயிருந்தது. தான் போகக்கூடிய பஸ் ஏதாவது வரு கிறதா என்று திரும்பித் திரும்பிப் பார்த்தபடி போனான். எல்லாம் ஏற்கனவே போயிருக்க வேண்டும் அல்லது பாதை மாறியிருக்கலாம்.
பின்னால், சனம் ஐதாகிக்கொண்டு வந்தது. தெருத் தொங்கல் அநேகமாக வெறிச்சிட்டிருந்தது.
வயதாளி ஒருவர் கையில் பாரத்தோடு கஷ்டப்பட்டுக் கொண்டு முன்னால் போனார்.
“அங்காலை பிடியுங்கோ……” தான் ஒரு பக்கத்தைப் பிடித்துக்கொண்டான்.
முன்னால் குளத்தடிச் சந்தியில் ஒரு பஸ் ஆட்களை ஏற் றிக்கொண்டு நிற்பதுபோலிருந்தது. அதில் போகக்கூடிய மட்டுக்காவது போகலாம். ஓட முயன்றார்கள்.
சந்திக்கு வந்ததும் வேறும் சில பஸ்கள் தெரிந்தன. கொஞ்சம் ஆறுதலாயிருந்தது. இது கொஞ்சம் பாதுகாப் பான தூரமாயிருக்க வேண்டும். பெரியவர் பார்த்து ஒன் றில் ஏறிக்கொண்டார்.
“மெத்த உபகாரம், தம்பி.”
அவன் பஸ்ஸைக் காணவில்லை. கூடிய பட்சம் தன் பாதை யில் போகக்கூடிய ஒன்றினருகில் நின்றவர்களுடன் நின்று கொண்டான். சனங்களின் பதற்றம் இந்த இடத்தில்- அல்லது இப்போது குறைந்திருப்பது மாதிரி இருந்தது. ஆனால் இன் னமும் விபரம் வடிவாகத் தெரியவில்லை.
பத்து நிமிஷமிருக்குமா?
பார்த்துக்கொண்டு நின்றபோது பஸ்காரர் வந்தார்கள்.
“ஏறுங்கோ ஸ்ரான்டுக்குப் போட்டுப் போவம்”
“ஸ்ரான்டுக்கா?”
“இப்ப ஒண்டுமில்லையாம் அங்கை…பயப்பிடாதையுங்கோ..”
பயமாய்த்தான் இருந்தது. ஆளைப்பார்த்து ஆளும், பஸ்ஸைப் பார்த்து பஸ்சும். வந்த இடத்திற்கே வட்டமடித்து மீண்டும்.
“அது உங்கட போல இருக்குது…” – ஸ்ராண்டுக்கு வந்ததும், கொண்டக்டர் பெடியன் ஏற்கெனவே வந்து நின்ற பஸ்ஸொன்றைக் காட்டிச் சொன்னான்.
அதுதான்.
“சீசீ…காசு வேண்டாமண்ணை…”
இறங்கி மற்றதில் ஏறினான். இருக்க இடமிருந்தது.
இப்போது கடைக்கதவுகள் ஒவ்வொன்றாகத் திறபடத் தொடங்கியிருந்தன. எங்கிருந்தென்றில்லாமல் தெருவில் தலைகள் கூடிக் கொண்டு வந்தன. ஒரு பாட்டும் எங்கோ மெல்ல ஆரம்பித்தது.
– மல்லிகை, 1985.
– இன்னொரு வெண்ணிரவு (சிறுகதைகள்), முதல் பதிப்பு: அக்டோபர் 1988, வெண்புறா வெளியீடு, யாழ்ப்பாணம்.