வால்மீகி ராமாயணச் சுருக்கம்

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: ஆன்மிகக் கதை
கதைப்பதிவு: October 10, 2024
பார்வையிட்டோர்: 6,530 
 
 

(1900ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

கிஷ்கிந்தா காண்டம் | சுந்தர காண்டம் | யுத்த காண்டம்-1

32. அநுமான் இலங்கையினுள் புகுதல்

அந்தச்சிறந்த மகேந்திர மலையிலே, அநேக பெரிய யானைகள் தங்கிய இடத்திலே நின்ற அநுமான் ஒரு மடுவி னிடத்தே நின்ற யானை போல விளங்கினான். அவன் சூரியனுக்கும் தேவேந்திரனுக்கும் வாயு தேவனுக்கும் பிரமதேவனுக்கும் பூதங்களுக்கும் அஞ்சலி செய்து கடலைக் கடக்க நினைத்தான். அவன் பின்பு கிழக்கு நோக்கி தனது தந்தையாகிய வாயுவை வணங்கி, கடலைக்கடந்து தெற்கே போக நிச்சயித்து, உயர்ந் தோங்கினான். அவன் அங்கு நின்று குதிக்க வேண்டி தன்கால்களையும் கைகளையும் ஊன்ற, அந்த மலை ஒரு முகூர்த்தகாலம் அசைந்தது. அப்போது அம்மலையில் பூத்திருந்த மரங்களிலிருந்து பூக் கள் உதிர்ந்தன. அவ்வாறு கீழே உதிர்ந்த நறிய மலர்க் குவைகளால் அந்தமலை மூடுண்டு புஷ்பமயமாய் விளங் கிற்று. அந்தமலை நெரிந்தபோது அதன் குகைகளினுள் ளிருந்து உடம்பு நெரிந்த விலங்குகள் எவ்விடங்களிலும் இரங்கற்குரலால் அரற்றின. அந்த அரற்றொலி பூமியி லும் திசைகளிலும் சோலைகளிலும் பரவிற்று. 

அப்போது ஆகாயத்திலே நின்ற சித்தர்களும் சாரணர்களும் யோகப்பயிற்சியுடைய முனிவர்களும் இந்த மலைபோன்ற அனுமான் மகாவேகத்தோடு சுறாக் களுக்கிருப்பிடமாகிய கடலைக்கடக்கப் போகின்றான். அவன் இராமர்பொருட்டும் வானரர்கள்பொருட்டும் மற் றொருவரும் செய்தற்கரிய செயலைச் செய்து கிட்டுதற்கரிய கடலின் அக்கரையை அடையவிரும்புகின்றான்” என்று சொன்ன சொற் கேட்டது. 

கணையமரம் போன்ற தனது கைகளை அசையாமல் மலையிலூன்றி, இடையை ஒடுக்கி, கால்களை மடக்கி, தோளையும் கழுத்தையும் சுருக்கி, அறிவு ஆண்மை வீர மென்பவைகளை மேற்கொண்டு, மேல் நோக்கிய கண் களாலே தூரத்திலிருந்துதான் செல்லும் வழியையும் ஆகாயத்தையும் பார்த்து, நெஞ்சினுள்ளே மூச்சை அடக்கி, இரண்டு கால்களையும் அசையாமலூன்றி, காது களை வளைத்து மேலெழும்பும் அநுமானுடைய தொடை யின் விசையாலிழுக்கப்பட்டு பெரிய மரங்கள், நெடுவழி செல்லப்புறப்பட்ட சுற்றத்தவனை சிறிதுதூரம்சென்று வழிவிடும் உறவினரைப்போல, ஒரு முகூர்த்தகாலம் அவனைத் தொடர்ந்து சென்றன. அவன் சென்ற விசை யினாற் சிதறுண்ட பூக்களால் அந்தச் சமுத்திரம் அழகிய நக்ஷத்திரங்கள் உதித்த ஆகாயம்போலத் தோன்றிற்று. சமுத்திரத்தைக் கடந்து சென்றபோது அவன் கைம்மூலத் தினின்றும் வந்த காற்று மேகம்போல முழங்கிற்று. அவன் பெயர்த்தும் பெயர்த்தும் மேகக் கூட்டங்களுள் நுழைந்து மறைந்தும் அவற்றினின்று புறப்பட்டுப் பிரகாசமாயும் சந்திரனைப்போலத் தோன்றினான். நாள், கோள், சந்திரன்,சூரியன், தாராகணம் முதலியவற்றால் அணிசெய்யப்பட்ட வாயுமார்க்கத்திலே கருடனைப்போல அதிவேகத்தோடு சென்றான். நூறுயோசனை தூரமும் கடந்தபின் அவன் கரையை அடைந்து நான்குபுறமும் பார்க்கையில் அவன் பலவித மரங்கள் செறிந்த இலங் கைத்தீவையும் மலயமலைச் சோலையையும் கண்டான். ஆகாயத்தை மறைப்பதுபோன்ற பெரிய மேகத்துக்குச் சமானமான தனதுடலை அவன் பார்த்து சிறிது யோசித்து பின்பு தனது உடலைச் சுருக்கி மோகம் நீங்கிய ஆன்மாவைப் போலத் தன் சுவரூபத்தை அடைந்து அநுமான் மூன்றடி யால் உலகத்தை யளந்து மாவலியைச் சிதைத்த வாமனன் போல விளங்கினான். 

அநுமான் ஒருவராலுங் கடக்க முடியாத கடலைக் கடந்து இளைப்பு சிறிதுமின்றி திரிகூட பர்வதத்தின் மேலுள்ள இலங்கையைக் கண்டான். அவன் இலங் கையைக்கிட்டி, அது தாமரைகளும் நீலோத்பலங்களும் நிறைந்த அகழி சூழ்ந்து, அவ்விராவணன் ஏவலாற் கொடிய வில்லைப் பிடித்துத் திரிந்துக்கொண்டிருந்த இரா க்ஷசர்களால் எவ்விடத்தும் நன்றாகக் காவல் செய்யப்பட்டு, அழகிய பொன்மதில் வளைந்து, சரற்காலத்து மேகங்களை யும் நவக்கோள்களையும் நிகர்த்த மாளிகைகள் நிறைந்து, வெள்ளிய உயர்ந்த வீதிகள் சூழ்ந்து, அட்டாலைகள் மிகுந்து, சிறு கொடிகளும் பெருங் கொடிகளும் நெருங்கி, கொடிவேலைகள் செய்யப்பட்ட பொன்மயமான தோரண வாயில்களை யுடையதாகிச் சுவர்க்கலோகம்போல விளங்கக்கண்டான். 

இலங்கை நகரின் வடக்குவாயிலை யடைந்து, “கொடிய ராக்ஷசவேந்தனாகிய இராவணன் கண்ணிலகப் படாமல் நான் எவ்வித உபாயத்தினாலே ஜனகன் புத்திரி யாகிய சீதையைத்தேடுவேன்? ஆன்ம ஞானமுடைய இராமரது காரியங் கேடுறாதபடி அந்தரங்கமான இடத் திலே சீதையைத் தனிமையாக நான் காணுமாறு எப்படி? முடிவிற்கு வந்த காரியங்களும் அறிவில்லாத தூதனிடத் தில் அகப்பட்டாற் காலத்தாலும் இடத்தாலும் மாறு பட்டு சூரியன்முன் எதிர்ப்பட்ட இருள்போல அழிந்து விடும். இது செய்யத்தகும் இது செய்யத்தகாதென்று விசாரித்து நிச்சயிக்கப்பட்ட காரியங்கள் தூதனுடைய மூடத்தனத்தினால் விளங்குவதில்லை. தங்களைப் பண்டிதர் களாக மதிக்கிற தூதர்கள் காரியங்களைக் கெடுத்து விடுவார்கள். இராமருடைய காரியஞ் சித்தியடையும் பொருட்டு நான் எனது ரூபத்தோடேயே உடலைச் சுருக்கிக்கொண்டு இலங்கைக்குள் இராத்திரி வேளையிற் புகுவேன்’ என்று அநுமான் எண்ணி சூரியன் அஸ்த மித்தபின் தனது தேகத்தைச் சுருக்கி, ஒரு பூனையளவான அற்புத தோற்றத்தைக் கொண்டான். அவன் மாலைக் காலம் வந்தவுடன் மலைமுடியிலிருந்து விரைந்து குதித்து அழகிய இலங்கை நகரத்தினுள்ளே பிரவேசித்தான். 

தீபங்களாலும் ஒளிகளாலும் பெரிய மாளிகை களாலும் இருள்போக்கப்பட்டது இராவணனுடைய அந்த நகரம். அப்போது அந்நகரத்தினுள்ளே போகவந்த பெரு வலியுடைய அனுமானை இலங்கைமாது கண்டு, சுயரூபத்தோடு பெருஞ்சத்தமிட்டு “குரங்கே, நீ யார்? இங்கே என்ன காரியமாய் வந்தாய்? உன்னுடைய உயிரிருக் ம்போதே உண்மையைச் சொல்.நான் ராக்ஷசராசனாகிய இராவணனது கட்டளைப்படி ஒழுகுபவள்; ஒருவராலும் வெல்லமுடியாதவள் ; இந்நகரத்தைக் காப்பவள்” என்றாள். இலங்கைமாது சொன்ன வார்த்தையைக் கேட்டு அநுமான் ஒரு மலைபோல அசையாது நின்றான். அவன் விகாரரூபமுடைய அந்த இலங்கைமாதை நோக்கி “இலங் கையினுடைய வனங்கள். உபவனங்கள், காடுகள். பெரிய வீடுகள் ஆகிய இவைகளை நான் பார்க்கவன்றோ வந்தேன்’ என்றான். அனுமான் சொன்ன வார்த்தையை இலங்கை மாது கேட்டு, மிகுந்த கோபங்கொண்டு, குரங்குகளுக்குளிழிந்த, தீய புத்தியுடைய குரங்கே, என்னை வெல்லாது அரக்கர்கோன் பாதுகாப்பிலுள்ள இந்த நகரத்தை உன்னாற் பார்க்க முடியாது” என்று சொன்னாள். 

அவள் பிறகு அச்சந்தரும்படியாகப் பேரொலி  செய்து வேகத்தோடு அநுமானைத் தனது கையினால் அறைந்தாள். அடிப்பட்ட வீரனாகிய அநுமான் ஆர வாரித்து அதட்டிக் கோபத்தினாலே தன்னை மறந்து முட்டி யால் இலங்கைமாதைக் குத்தினான். பெண்ணென்று நினைத்து அநுமான் அவளை அதிகங் கோபிக்கவில்லை. அவ்விராக்ஷசி அந்த அடியினாலே கைகால் உதறிப் பூமி யிலே திடீரென்று விழுந்தாள். அதன்பின் இலங்கை மாது செருக்கு நீங்கி, மிகவும் அச்சமடைந்தவளாய், நாத்தழுதழுத்து, அநுமானை நோக்கி பெருந்தோளுடைய வரே, என் மீது அருள்புரியும்; வானரோத்தமரே, என்னைக் காத்தருளும். பெருவலியுடைய குணவான்கள் நெறி தப்பமாட்டார்கள். நானே இவ்விலங்கை நகர என்னை நீர் உமது பராக்கிரமத்தால் வென்று விட்டீர். வானரோத்தமரே, எனக்குப் பிரம தேவர் கொடுத்த வரம் இன்னதென்று சொல்லுகிறேன். அந்த உண்மையைக் கேளும். ‘நீ ஒரு குரங்கினுடைய பலத்திற்குத் தோற்றுப் போனபோது ராக்ஷசர்களுக்கு கேடுவந்ததென்று அறிந்து கொள்’ என்று அவர் சொன்னார். உம்மைக் கண்டதனால் எனக்கு அந்தச் சமயம் வந்துவிட்டது. ஆகையால் இராவணன் அரசாளும் இந்த நகரத்துள் நீர் போய்ச் செய்ய வேண்டிய காரியங்கள் எல்லாவற்றையும் செய்து கொள்ளும்” என்றாள். 

அநுமான் தனது வலிமையினால் பெரிய இலங்கை மாதை வென்றபின் ஒவ்வொரு வீடாகச்சென்று அங் கங்கே பலவித வடிவமடைந்த உறையுள்களைக் கண்டான். இராசவீதியைச் சூழ்ந்து நிற்கும் ராக்ஷச சேனையையும், அதற்கு நடுவிலே திரியும் அநேக ஒற்றர்களையும், சம்மட்டி எடுத்தவர்களையும், இருப்புலக்கை பிடித்தவர்களையும், தண்டாயுதம் தரித்தவர்களையும் கண்டான். பின்பு பொன்னாற் செய்யப்பட்ட பெரிய தோரண வாயிலை யுடையதாகி மலையினுச்சியிலே கட்டப்பட்டு, புகழ் படைத்ததாகிய இராவணனுடைய மாளிகையைக் கண்டான். அதன் பின்னர் கோட்டை வாயிலைக் கிட்டி அந்தப் புரத்தினுள்ளே பிரவேசித்தான். 

33. சீதையைக் காணுதல் 

அநுமான் நீண்ட கண்களையுடைய சீதையை அந்த மாளிகை எங்குந் தேடித் திரிந்தான். எவ்விடமும் சுற்றிப் பார்த்து அங்கே சிறந்த படிகத்தினாற் செய்து இரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்டு தேவலோகத்தின்கண் ணுள்ளதுபோல விளங்கின ஒரு படுக்கையிடத்தைக் கண்டான். அதன்மீது சிவந்த கண்களும் நீண்ட கைகளும் அழகிய ரூபமுமுடைய இராவணன் படுத்திருந்தான். அவன், பொன்னாடை புனைந்து, ஒளியுள்ள சிறந்த குண்ட லங்கள் தரித்து, மின்னல் செறிந்த செவ்வானம்போன்று விளங்கினான். கிரீடித்துக் களைத்து கள்ளுண்டு ஓய்ந்து அவன் அசைவற்று நித்திரை செய்தான். அந்த வெள்ளிய படுக்கையின்மேலே,திரண்டு, உடலுக்குத் தக்கவைகளா யிருந்த. இராவணனுடைய கைகள் பொன்னாற் செய்த தோள்வளை பூண்டன, இந்திரத் துவசம் போன்றன, ஐரா வதத்தினது கொம்பின் நுனிகள் பாய்ந்த தழும்புகளுள் ளன, வச்சிராயுதம் உராய்ந்து புடைக்கொண்ட தோள்க ளுடையன, விஷ்ணுவின் சக்கரத்தினாலே மோதுண்டன, போட்டுக் கிடந்தன. அவ்விதமான பருத்த தோள்களை யுடைய அரக்கர்கோன் இரண்டு குவடுகளுடைய மந்தர மலைபோல விளங்கினான். 

இராவணனுடைய காலடியில் அவனுடைய பிரியமுள்ள பத்தினிமார்கள், சந்திரன்போன்ற முகமுடையவர்கள், காதில் அழகிய குண்டலந் தரித்து வாடாத மாலை யணிந்தவர்கள் நித்திரை செய்து கொண்டிருந்தார்கள். அப்படிப்பட்ட பள்ளியறையிலே ஒரு தனியிடத்திலே போடப்பட்ட அழகிய படுக்கையின்மேல் ஓரழகிய பெண் முத்துக்களாலும் இரத்தினங்களாலும் இயற்றிய ஆபரணங்களணிந்து படுத்திருந்தாள். அவளை அநுமான் கண்டு அழகும் இளமையும் உடைமையாற் சீதை என்று எண்ணிப் பெருமகிழ்ச்சி அடைந்தான். பின்னர் அந்த எண்ணத்தைப் போக்கிவிட்டு சீதையைப்பற்றி வேறு விதமாக எண்ணினான். ‘சீதை இராமரைப் பிரிந்து உண்ணவும், உறங்கவும், ஒப்பனை செய்து கொள்ளவும், பானங்களைப் பருகவுந் தக்கவளல்லள். தேவேந்திரனாயினும் அந்நிய புருஷனை அவள் அணையமாட்டாள். ஆதலால் இவள் வேறு” என்று அநுமான் நிச்சயித்துப் பான பூமிக்குச் சென்றான். பின்பு அந்தப்புரத்தை அநுமான் ஓரிடமும் விடாது தேடினான்; ஆயினும் அவன் ஜானகியைக் கண்டிலன். அங்குள்ள பெண்களை எல்லாம் கண்ட அநுமான் அதனாலே தனது, தருமம் தவறி விட்டதோவென்று பயந்து பெருஞ்சிந்தனையுற்றான். “பிறன் மனைவியர் நித்திரை செய்து கொண்டிருக்கிற இந்த அந்தப்புரத்தைப் பார்ப்பது எனது தருமத்தை அழித்து விடும். விரும்பிப் பார்க்கவில்லையாதலால் எனது மனம் சிறிதும் வேறுபாடடையவில்லை. இன்ப துன்பத் துறைகளிற் புலன்களைச் செலுத்துவது மனம்; அந்த மனம் எனக்கு நிலையிலிருக்கின்றது. நான் சீதையை வேறு எங்கே தேட முடியும்” என்று நினைத்து மறுபடியும் மிக்க முயற்சியோடு அந்தப்புரத்தைத் தேடலுற்றான்.  

இராவணனுடைய அந்தப்புரத்திலே அநுமான் செல்லாத இடம் நாலங்குலமளவுகூட இல்லை. மதிலின் இடை வழிகள், அருநிழன் மரங்களைச் சேர்ந்த பீடங்கள் துரவுகள், குளங்கள் முதலிய யாவற்றையும் அவன் தேடினான். எங்குஞ் சுற்றி சீதையைக் காணாது சொல்ல லுற்றான் :-“இராமருக்குப் பிரியமான காரியத்தைச் செய்பவனாய் நான் இந்த இலங்கை முழுவதையும் தேடி விட்டேன்! உருப்புக்களெல்லாவற்றாலும் அழகியவைதேகி யைக்கண்டிலேன். சீதை/விதேக நாடி/மிதிலையர் கோமகள்! ஜனகன் திருமகள்! அவள் இந்தத் துராசாரியான இராவ- ணனைக் காமுற்றுச் சேர்வாளா? இராவணன் அவளை எடுத்துக்கொண்டு இராமருடைய பாணங்களுக்கஞ்சி விரைந்து உயரக் கிளம்பும்போது அவள் நழுவி இடையிலே விழுந்து விட்டாள் போலும். இல்லையாயின், இராவணன் எடுத்துக்கொண்டு சித்தர்கள் திரியும் ஆகாய மார்க்கமாகப் போகும்போது அவள் கடலைக் கண்டு பயந்து,விழுந்து விட்டிருக்கவேண்டும். இராவணனுடைய நடையின் வேகத்தாலும் அவனுடைய தோள்களாலே நெருக்கப்பட்டமையினாலும் அந்தத் தடங்கண்ணாள் உயிரைவிட்டிருக்கலாம். இல்லையாயின், அவள் இராவண னுடைய மாளிகையிற் சிறை வைக்கப்பட்டு கூட்டி லடைத்த கிளிபோல வருந்துகின்றாளென்றே எண்ணு கின்றேன். இராமருடைய பத்தினியாகிய புகழ் படைத்த சீதையைக் காணும் வரைக்கும் இந்த இலங்காபுரியை நான் மீட்டும் மீட்டும் தேடுவேன். நான் இனி இங்கேயே உண்டியைச் சுருக்கி ஐம்பொறிகளையுமடக்கி வசிப்பேன். பெரிய மரங்களடர்ந்த அசோக வனமொன்று அதோ தோன்றுகின்றது; அதனை நான் இன்னும் தேடவில்லை.”

இவ்வாறு ஒரு முகூர்த்த காலம் சிந்தித்து கவலையாற் பொறிகள் கலங்கி வாயு குமாரனான் அநுமான் வெகு ஊக்கத்தோடு எழுந்து, 

போற்றி ராகவன் போற்றி யிலக்குவன்
போற்றி ஜானகி போற்றி யுருத்திரன்
போற்றி யிந்திரன் வாயு பொற்றார்யமன்
போற்றி சந்திரா தித்தர் புத்தேளிரே 

என்று இராம லக்ஷ்மணர்களையும் சீதையையும் தேவர் களையும் போற்றி செய்து, சுக்கிரீவனையும் தொழுது. அசோக வனமுள்ள திக்கை முழுதும் நன்றாகப் பார்த்து அங்கே மனத்தைச் செலுத்தி. பின்னர் எண்ணுவானாயினான். 

ஒரு முகூர்த்த காலம் அநுமான் எண்ணமிட்டிருந்து, முதலில் அவ்வசோக வனத்தின் மேல் மனத்தைச்செலுத்தி இராவணனுடைய மாளிகையிலிருந்து மதிலின்மேற் பாய்ந்தான். அவன் மதிலின் மேலிருந்து இளவேனிற் காலத் தொடக்கத்தில் தலை நிறையப் பூத்திருந்த ஆச்சா, அழகிய அசோகம், நல்ல மலர்களுடைய சம்பகம் முதலிய மரங்களைக் கண்டு, உடலெங்கும் மயிர்ப் புளகங் கொண் டான். இலைகள் பொதுளி, சிறந்த கொடிகள் படர்ந்து, நான்கு புறத்தும் பொற்பீடங்கள் சூழ்ந்து விளங்கிய ஒரு பொன்மயமான சிஞ்சுபா மரத்தை அநுமான் கண்டான். இலைகள் செறிந்த, அந்தச் சிஞ்சுபா மரத்தின் மேல் அவன் ஏறி “இராமரைக் காணும் விருப்பத்தாலே துக்கத் தோடு தன்னிஷ்டப்படி இங்குமங்குந் திரிகிற சீதையை நான் இங்கே காண்பேன். இந்தத் தாமரை யோடையும் பறவைக் கூட்டங்கள் தங்கி மிக வழகாக விருக்கின்றது. இங்கே இராமருடைய தேவி ஜானகி நிச்சயமாக வருவாள்; காட்டிலே திரியவல்ல கற்புடைய ஜானகி நிச்சயமாக வருவாள்’ என்று அநுமான் எண்ணி இராம ருடைய தேவியைக் காண வேண்டி மலர் நிறைந்த சிஞ்சுபா மரத்தின் இலைச் செறிவிலே மறைந்து கொண்டு அங்குள்ளவைகள் எல்லாவற்றையும் உற்று நோக்கினான். 

சிஞ்சுபா மரத்தின் மேலிருந்து அநுமான் நிலத்தை முழுவதையும் பார்த்தான். பின்னர் அவன் இராக்ஷசி களுக்கு நடுவிலே அழுக்கடைந்த ஆடையுடுத்து, ஊனின்றி மெலிந்து, அடிக்கடி பெருமூச்சு விட்டுக் கொண்டிருந்த ஓரேழை மாதைப் பார்த்தான். அவள் சுக்கில பக்ஷத் தொடக்கத்திலே தோன்றும் சந்திர கலைபோலக் குற்ற மில்லாதவளாய், அழுக்கடைந்ததான சிறந்த மஞ்சள் புடவையொன்று உடுத்து, புழுதி படிந்து, அலங்காரம் செய்யப்படாது, அதனாலே தாமரையில்லாத தடாகம் போன்று, நாணமடைந்து, துக்கத்தால் வருந்தி,வாட்ட முற்று கண்ணீர் முகத்திலொழுக உணவின்றி மெலிந்து, துயரமும் சிந்தனையும் மிக்கு, இடையீடில்லாத துக்க முடையவளாகக் காணப்பட்டாள். தன் துற்றாரை காணாது இராக்ஷசிகளையே பார்த்திருந்த அந்தப் பெண் தன் னினத்தை விட்டுப் பிரிந்து நாய்களாற் சூழப்பட்ட மான் போலத்தோன்றினாள். அந்தத் தடங்கண்ணாளை அனுமான் நன்றாக நோக்கி தக்க காரணங்களைக் கொண்டு “இவள் சீதையே” என்று எண்ணினான். “வேண்டிய உருவ மெடுக்க வல்ல இராவணன் எடுத்துக்கொண்டு போக நாங்கள் கண்ட பெண் இவளே” என்று அவன் கருதினான். 

அவன் வைதேகியின் அவயவங்களில் அணிந்திருந்தன வென்று இராமர் கூறின அணிகலன்கள் அந்த மரக் கிளை களின் மேல் பிரகாசிப்பதைக் கண்டான். நெடுநாள் அணிந்திருந்தமையால் தேய்ந்து கறுத்திருந்த நல்ல வேலைப்பாடுடைய குண்டலங்களையும், நல்ல வடிவமான சுவதண்டிரமென்னும் காதணியையும், மணியாலும் பவளத்தாலும் செய்த பல வகைப்பட்ட கையணிகளையும் அநுமான் பார்த்து “இராமர் சொன்ன ஆபரணங்கள் இவைகளே என்று நான் எண்ணுகிறேன். அங்கே விழுந்து விட்ட ஆபரணங்கள் ஒன்றும் இங்கில்லை. வானரர்கள் மலையின்மேலே நழுவி விழக்கண்ட பொற் றகடு போன்ற ஒளியினையுடைய பீதாம்பர உத்தரீயமும் ஒல்லென ஒலிக்கும் விலைபெற்ற சிறந்த ஆபரணங்களும் இவள் எறிந்துவிட்டவைகளே. இந்த வஸ்திரம் நெடுநாள் தரித்திருந்தமையால் கசங்கியிருப்பினும், நிறமும் ஒளியும் வானரர்கள் கண்ட அந்த வஸ்திரம்போன்றதென்பது திண்ணம்” என்று எண்ணினான். சீதையைப் பார்த்துக் களிப்படைந்து இராமரை மனத்தில் நினைத்து அவரைப் புகழ்ந்தான். 

34. இராவணன் சீதையை வேண்டுதல் 

அநுமான் பூத்த மரங்கள் செறிந்த அசோகவனத்தில் தேடி வைதேகியைக் கண்டு பார்த்துக் கொண் டிருக்கையில் இரவு கழியச் சிறிது காலம் மாத்திர மிருந்தது. புகழாளனான அரக்கர்கோன் தக்க காலத்தில் எழுந்து, மாலைகள் நழுவி ஆடை நெகிழா நிற்க, சீதையை மனத்தில் நினைத்தான். அவன் மன்மதனாலே சீதையினிடத்து மிகவும் மோகம் மூடப்பட்டுக் காமத்தை மனத்தில் அடக்கமாட்டாதவனாயினான். அவன் ஆபர ணங்கள் அணிந்து கொண்டு மிகவும் வியக்கத் தக்கதா யிருந்த அசோக வனத்தினுள்ளே புகுந்தான். சமீபத்தில் வந்த இராவணனை அநுமான் தழை பரந்த மரத்திலிருந்து தழைகளாலும் மலர்களாலும் தன்னை மூடிக் கொண்டு பார்த்து “இவன் இராவணன்” என்று கருதிக் கீழிறங்கினான். 

அப்போது அரக்கர் வேந்தனாகிய இராவணனைப் பழிப்படையாத அழகான் மிக்க சீதை கண்டு பெருங் காற்றால் அடியுண்ட வாழைபோல நடுங்கினாள். அவள் தன் வயிற்றைத் தொடைகளினாலும் தனங்களைக் கைகளி னாலும் மூடிக் கொண்டு அழுதாள். இராக்ஷசிகள் காவலி லுள்ள சீதையை இராவணன் நோக்கினான். அவள் கடலில் அமிழ்ந்த மரக்கலம் போலத் துக்கமடைந்தாள். தவமேற்கொண்டு இராவணன் செய்த இழிதகவை மனத்தால் இராமருக்குக் கூறி கைகூப்பி யிரந்து கொண் டிருந்த துன்பமுற்ற தேவதைபோலச் சீதைதோன்றினாள். 

சந்தோஷமற்றுக் கண்டோர் இரங்கத்தக்க நிலைமையி லிருந்த சீதைக்குப் பொருள் பொதிந்த இனிய மொழி களால் இராவணன் தனது விருப்பத்தை தெரிவிக்க லாயினான். “தடங்கண்ணாய், நான் உன்னை விரும்புகின் றேன் ; காதலீ, அழகி, யாவர்க்கும் இனியாளே, எனக்கு அருள் செய்.அச்சமுள்ளவளே, பிறர் மனைவியரை விழை தலும் அவர்களை எவ்விதமாவது வலிந்து பிடித்து வரு தலும் அரக்கர்களுக்கியற்கை. ஆயினும் என்னிடத்து விருப்பில்லாத உன்னை நான் தொடமாட்டேன். காமன் தன திச்சைப்படி என்னுடலை வருத்தட்டும். தேவீ, நீ இங்கே பயப்பட வேண்டாம்; காதலீ, என்னை நம்பு; உண்மையாக என்மேல் அன்பு செய்; இவ்வாறு துன்பத் ஏகவேணியாயிருத்தலும், தால் வருந்த வேண்டாம். தரையிற் படுத்தலும், அழுக்காடை தரித்தலும், விசாரப் படுதலும் வீண் பட்டினியிருத்தலும் உனக்குத் தகுந்தன வல்ல. உன்னுடைய இந்த அழகான இளமைப் பருவம் வீணாய்ப் போகின்றதே; விரைந்தோடுகின்ற வெள்ளப் பெருக்குப்போல இது போனால் வராதே. இந்த அறியா மையை ஒழித்து விடு; எனக்கு மனைவியாகு; பற்பல இடங் களிலிருந்தும் கொண்டு வந்த சிறந்த பெண்களுக்கெல்லாம் நீ எனக்கு முதற்றேவியாவாய். நீ நன்றாக அலங்காரஞ் செய்துக்கொண்டு உன்னிச்சைப்படி போகங்களை அனுபவி: குடி: விளையாடு; இந்த நிலங்களையும் தனங்களையும் எவர்க் காயினும் உன்னிஷ்டப்படிக் கொடு. தையால், மரவுரி யுடுத்த இராமனோடு நீ என்ன செய்யப் போகின்றாய். வெற்றி யழிந்து, செல்வம்போய், காட்டிற்புகுந்து, விரதம் பூண்டு, நிலத்திற் படுத்து திரிகின்றான் இராமன்; அவன் உயிரோடிருக்கின்றானோ இல்லையோ என்று ஐயமுறுகின் றேன். கொக்குக்கள் சுற்றிப் பறக்கின்ற கரிய மேகத்தால் மறைக்கப்பட்ட நிலவைப்போல இராமனுக்கு நீ காணப் படவும் மாட்டாய். என் கையில் அகப்பட்ட உன்னை பெற்றுக் கொள்ளற்கும் இராமன் அருகனல்லன். அச்ச முள்ளவளே, உன் அழகிய புன்முறுவலும், அழகிய பல்லும், அழகிய கண்ணும், கருடன் பாம்பினைப் பிடித் துக்கொண்டு போமாறுபோல என் மனத்தை வாரிக் கொண்டு போகின்றன” என்று சீதையை இராவணன் இரந்தான். 

இராவணன் கூறிய வார்த்தையைக்கேட்டு, சீதை ஒரு துரும்பைத் தனக்கும் இராவணனுக்கும் இடைய லிட்டு. புன்முறுவல்கொண்டு விளம்பலுற்றாள் :-“என் னிடத்திலிருந்து உன்மனத்தை மீட்டுக்கொள்; உன் மனை வியர்களிடத்திலே மனதைச் செலுத்து; பாபஞ் செய்த வன் நல்லமோக்ஷத்தை விரும்புதல் போல, நீ என்னை விழைவது தகாது. நற்குலத்திற் பிறந்து, நற்குலத்திற் புகுந்து, ஒருவருக்கு மனைவியாகிய எனக்கு பழிப்புக்கிட மான செய்யத் தகாத காரியத்தைச் செய்தல் அடாது. நான் பிறன் மனைவி: கற்புடையவள்; உனக்கு மனைவி யாகத் தகுந்தவளல்லள்.நீ சான்றோரறத்தைக் கடைப் பிடித்து சான்றோர் ஒழுக்கத்தை மேற்கொள். ஏ நிசாசர, உனது மனைவியர்கள் எவ்வாறு கற்பினைக் காக்கவேண் டுமோ அவ்வாறு பிறர் மனைவியர்களும் கற்பினைக்காக்க வேண்டியவர்களன்றோ? நீ உன்னையே இதற்குபமான மாக வைத்துக்கொண்டு உன்னுடைய மனைவியர்களைக் கூடி இன்பமுறு. இராவண,துன்பமுழக்கும் என்னை நீ இராமரோடு சேர்த்துவிடு. இவ்வாறு என்னை இரகு குலோத்தமனிடத்து கொடுப்பாயானால் உனக்கு நன்மை உண்டாகும்; வேறுவினை செய்வாயானால், நீ மாண்டு போவாய். அரக்க, இராக்ஷசசேனை மாய்ந்து ஜனஸ் தானமும் அழிந்தபோது அவற்றைக் காக்க வலியில்லாத நீ இந்தத் தீத்தொழிலைச் செய்தாய். சிங்கவேறுகள் போன்ற தமையன் தம்பிமார் இருவரும் வெளியே போயிருந்தபோது நீ அவர்களுடைய காவலற்ற ஆசிரமத் துள்ளே புகுந்து, அதம, என்னை எடுத்து வந்தாய். இராம லக்ஷ்மணர்களுடைய மணம்பட்டவுடன், புலியின் மணம் பட்ட நாய்போல நீ அவர்கள் கண்ணுக்கெதிரில் நிற்க வலியுடையையல்லை. எனது நாயகரான இராமர் இலக்ஷ் மணரோடு சேர்ந்து சூரியன் சிறிது நீரைக் காய்ந்தாற் போல, உனது உயிரைத் தமது பாணங்களாற் சீக்கிரம் வாங்கிவிடுவார்” என்று சீதை கூறினாள். 

இராவணன் சீதை கூறிய கடுஞ்சொற்களைக் கேட்டு அக் கண்ணுக்கினியாளுக்கு கொடிய மறுமொழி பகர்த லுற்று “மைதிலீ, நீ இங்கே என்னைக் கூறும் கடுஞ்சொல் ஒவ்வொன்றுக்கும் உன்னைக் கடுங்கொலை புரியத்தகும். நான் உனக்கு குறித்தகாலத்தில் இன்னும் இரண்டு மாத முள; அதற்குள், நல்லாய், நீ எனது கட்டிலில் ஏறிவிடு இரண்டு மாதம் கழிந்தபின் நீ என்னைக் கணவனாகக் கொள்ளாதொழிவாயாயின் உன்னை எனக்குக் காலையுண் விற்காக அடுக்களையில் வெட்டிவிடுவார்கள்” என்று கூறினான். 

பின்னர் இராவணன் அங்குள்ள குரூரமான தோற் றமுள்ள இராசிகளை விளித்து “நீங்கள் எல்லீரும் ஒன்று சேர்ந்து இந்தச் சீதையை சீக்கிரம் எனக்கு வசப் பட்டவளாகச் செய்யவேண்டும். அவளுக்கு. ஒத்துப் போயும், ஒவ்வாது நடந்தும், கொடுத்தல் இன்சொற் சொல்லல் முதலிய உபாயங்களைச் செய்தும், ஒறுக்க முயன்றும் அவளைத் திருப்புங்கள்” என்று கட்டளையிட்டு ஒளியுடைய சூரியனைப்போல பொலிவுற்று விளங்கிய தனது மாளிகைக்குப் போயினான். இராவணன் போய் அந்தப்புரத்தையடைய, பயங்கரமான ரூபமுடைய இரா க்ஷசிகள் சீதையை உறுக்கத்தொடங்கினார்கள். சீதை பயங்கரமான இராக்ஷசிகளாற் பயமுறுத்தப்பட்டுத் தைரியமிழந்து அழுதாள். 

இவ்வாறு அந்தக்கொடிய அரக்கிகள் ஈரமின்றிக் கடுஞ்சொற் கூற ஜனகன் மகள் மிகவும் பயந்து நாத் தழுதழுத்து “மானுடப்பெண் அரக்கனுக்கு மனைவியா தற் குரியளல்லள். என்னை நீங்கள் எல்லீரும் உங்கள் விருப்பப்படி தின்னுங்கள்; நான் உங்கள் சொற்படி செய்யேன்” என்று சொன்னாள். அவள் பூத்திருந்த அசோக மரத்தின் பெரிய கிளை ஒன்றைப் பிடித்துக் கொண்டு கவலையாற் செயலற்று தனது நாயகனை நினைத் தாள். அவ்வாறு நின்ற சீதையினுடைய நீண்ட பெரிய கூந்தல் நடுக்கமுற்று ஓடின பாம்பு போலத் தோன்றிற்று. அவள் பெருமூச்சுவிட்டு, துன்பமேலிட்டு, மனமிடிந்து, வருந்தி, கண்ணீர்விட்டு அழுதாள். 

அவள் ”ஆ இராமா!” எள்றாள்; மறுபடி “ஆ இலக்ஷ்மணா!” என்றாள்; “ஆ மாமீ கௌசலை! ஆ சுமித்திரை!” என்றான். “ஆணுக்காவது பெண்ணுக்காவது காலம் வாராமல் மரணம் வராது என்று பண்டிதர்கள் நன்றாகச் சொன்னார்கள். இந்த உலக வார்த்தை உண்மையே. ஏனெனில், நான் இவ்வாறு கொடிய இராக்ஷசிகளால் இங்கே வருத்தமடைந்து, இராமரைப் பிரிந்து, கவலையுற் றும் இறந்து போகாது ஒரு முகூர்த்தகாலமாவது உயி ரோடிருக்கின்றேனே. நான் முற்பிறப்பிற் செய்த பாவம் எப்படிப்பட்டதோ?. அதனாலன்றோ நான் இந்த மிகக் கொடிய துக்கத்தை அடைந்தேன்! நான் இந்தப் பெரிய துக்கத்திலே முழுகி உயிரை விட்டுவிட விரும்புகின்றேன். 

“இராகவர் அறிவுள்ளவர்; நன்றியறிவுள்ளவர்; அருளுள்ளவர்; ஒழுக்கமுள்ளவர் என்று பெயர் படைத்தவர். அத்தகையாருக்கு என்னிடத்தில் அருளில் லாது போனது. எனது புண்ணியக் கேட்டினாலென்றே எண்ணுகின்றேன். ஜனஸ்தானத்திலே பதினாயிரம் இராக்ஷசர்களைத் தாமே தனிநின்று கொன்றவர்! அவர் ஏன் என்னை அடையாதிருக்கின்றார்? இராமர் திடமான வலியுள்ளவர்; அவர் அரக்கன் பற்றின் தமது பிரிய நாய கியை மீட்டுக்கொள்ளாதிருப்பதற்குக் காரணமென்னோ? அவரைக் கொடிய இராவணன் வஞ்சித்துக்கொன்று விட்டானோ? 

“நான் இங்கிருப்பது அவருக்குத் தெரியாதென்றே எண்ணுகின்றேன். தெரிந்தால், தமக்கு நேர்ந்த அவ மானத்தை அவ்வீரர் பொறுத்திருப்பாரா ? நான் பிடிபட் டதைப்போய் இராமருக்கு அறிவிக்கவல்ல கழுகரசனாகிய சடாயுவையும் இராவணன் யுத்தத்திற் கொன்றுவிட்டான். நான் இங்கிருப்பதை இராமர் அறிவாராயின் கோபமூண்டு இப்போதே தமது பாணத்தினால் உலகத் தில் இராக்ஷசர் இல்லை என்னும்படி செய்துவிடுவார்; நீசனாகிய இராவணனுடைய பெயரையும் புகழையும் நாச மாக்கி விடுவார். விரைவில் இந்த இலங்கை சுடுகாடு போலாகிவிடும். விடுகள் தோறும் இராக்ஷசிகள் துன்பத் திலே முழுகி அழுகின்ற அழுகையைச் சிறிது காலத்திலே நான் கேட்கப் போகின்றேன்; இது நிச்சயம். ஊன் தின்னி களாகிய இந்த அரக்கர்கள் தருமம் அறியார்கள்; என் னைக் காலையுணவிற்கு மெய்யாகவே சமைத்துவிடுவார்கள். எனக்கு யாராவது இங்கே விஷங்கொடுப்பவர்கள் இருந் தால் நான் சீக்கிரமாக யமனைக் காண்பேன்.” என்று சீதை புலம்பினாள். 

கொடிய இராக்ஷசிகள் சீதையை வெருட்டுவதை அங்கே படுத்திருந்த திரிசடை என்னும் இராக்ஷசக் கிழவி பார்த்து “என்னைத்தின்னுங்கள்; ஜனகனுடைய புதல்வீ யும் தசரதனுடைய மருமகளுமாகிய சீதையைத் தொடா தீர்கள். அவளுடைய நாயகனுக்கு ஆக்கமும் இராக்ஷசர் களுக்கு அழிவும் குறித்த கொடிய கனவொன்று இப் போது நான் கண்டேன்; அதனை நினைக்க மயிர் சிலிர்க் கின்றது. இராமர் இலக்ஷ்மணரோடு வெள்ளை வஸ்திரந் தரித்து, வெள்ளை மாலை யணிந்து, ஆயிரம் அன்னங்கள் தாங்கப்பெற்ற யானைத் தந்தத்தாற்செய்த சிறந்த சிM கையில் ஏறி ஆகாசமார்க்கமாக வந்தார். சீதையும் வெள்ளைக் கலை உடுத்து கடல்சூழ்ந்த ஒரு வெள்ளை மலை யின்மேல் ஏறி இராமரைச் சேர்ந்து சூரியனைச் சேர்ந்த ஒளி போல விளங்கினாள். பின்பு இராமர் தம்பி இலக்ஷ்மண ஒளியுடைய ரோடும் சீதையோடும் சூரியன்போன்ற சிறந்த புஷ்பக விமானத்திலேறிக்கொண்டு வடதிசையை நோக்கிச் செல்லக்கண்டேன். இராவணன் புஷ்பக விமா னத்திலிருந்து பூமியில் விழக்கண்டேன். சிவந்த வஸ்திரந் தரித்த ஒரு கறுத்த நிறப்பெண், உடலெல்லாம் அழுக்குப் படிந்தவள், அவனைக் கழுத்திலே கட்டிப் பிடித்து தென் றிசைக் கிழுத்தாள். இவ்வாறே கும்பகர்ணனுக்கும் நிகழக்கண்டேன். இராவணனுடைய பிள்ளைகளெல்லாரும் தலையை மொட்டையடித்து எண்ணெய் வார்த்துக்கொண் டிருக்கக் கண்டேன். அந்தக்கனவில் விபீஷணன் ஒரு வனே வெண்குடையின் கீழ் நிற்கக்கண்டேன். அவன் வெள்ளையாடை உடுத்து வெள்ளைமாலை புனைந்து, வெண் சந்தனம் பூசி, சங்கு முழங்க, துந்துபி ஒலிக்க, ஆடலும் பாடலும் நிகழ. மேகம்போல முழங்கிய நான்கு கொம்பு களையுடைய மலைபோன்ற ஒரு சிறந்த யானையின்மேலேறி நான்கு மந்திரிகளோடு ஆகாயத்திலே நின்றான். இரா வணனாற் காக்கப்படும் இவ்விலங்கையை இராமருடைய தூதனான வலியகுரங்கொன்று எரித்துவிடவுங் கண்டேன். நீங்கள் கடுஞ்சொற் சொன்னது போதும்; இனி இன் சொற் பேசுங்கள்; சீதையைப் பொறுதி கேட்டுக் கொள் ளுங்கள். இதுதான் நீங்கள் செய்யத்தகுந்ததாக எனக் குத் தோன்றுகின்றது. நான் இவ்வாறு கனவுகண்ட சீதை எல்லாத் துக்கங்களும் நீங்கி ஒப்புயர்வில்லாத தன் காதலனை அடையப்போகின்றான். அவளுடைய தாமரை யிதழ் போன்ற நெடியகண் துடிக்கின்றது; அவளுடைய இடத்தோளும் திடீரென்று சிறிது புளகங்கொண்டு துடிக்கின்றது. இவை அவள் நல்ல சமாசாரம் கேட்கப் போகின்றா ளென்பதற்கு நிமித்தமாயிருக்கின்றன. அவ ளது யானைத் துதிக்கை போன்ற சிறந்த தொடை துடிப்பது இராகவர் எதிரில் வந்துவிட்டார் என்பதைக்காட்டுகின்றது.” என்று திரிசடை கூறினாள். 

சீதை இராக்ஷசிகள் நடுவில் அகப்பட்டு இராவண னால் வெருட்டப்பட்டு மனித சஞ்சாரமில்லாத காட்டிலே விடப்பட்ட இளம்பெண்போல அழுதாள். “ஆ இராமா! சத்தியவிரத! நெடுந்தோளாய்! முழுமதி முகத்தாய்! நீர் உயிர்களுக்கெல்லாம் நன்மை செய்பவராயிற்றே! நான் அரக்கர்களால் வதைக்கப்படுவதை நீர் அறியீரோ? உம்மையன்றி வேறு தெய்வமில்லை என்ற என் கொள்கையும் எனது பொறையும், நான் தரையிற்படுத்ததும், தருமந்தவறாது நின்றதும், எனது கற்பும் எல்லாம், நன்றி கொல்பவனுக்குச் செய்த உபகாரம்போல, பயனற்றன வாய்ப் போயின. நான் உம்மைக் காணாது மெலிந்து, நிறம் வெளுத்து,ஏழையாய். உம்மைக்கூடுவேன் என்ற ஆசையும் இழந்துவிட்டேன்; ஆதலால் நான் செய்த தரும மும் எனது கற்பும் எல்லாம் வீணாய்ப்போயின. புண்ணி யங்கெட்ட நான் உம்மிடத்தில் ஆசைகொண்டு, அழிவின் பொருட்டு உம்மிடத்து நெடுங்காலம் என் மனத்தைச் செலுத்தி, வீணாகத் தவங்களையும் விரதங்களையும் அநுட் டித்து, ஆ கெடுவேன்! என் உயிரை விடுகின்றேன். என்று சீதை பலவாறு புலம்பி சிந்தித்து, பின்னியிருந்த தன் கூந்தலைக் கையிற்பற்றி ‘இந்தப் பின்னலைக் கழுத்தி லிட்டுத் தூக்கி விரைவிலே நான் யமன் சந்நிதியை அடை வேன்’ என்று எண்ணி, அந்த மரத்தின் கிளை ஒன்றை பிடித்துக்கொண்டு நின்றாள். 

அப்போது நன்மை குறிப்பனவும், தைரியங் கொடுப் பனவும் நன்மை பயந்தனவுமான பல நற்சகுனங்கள் காணப்பட்டன. வளைந்த இமைகள் சூழ்ந்து, கறுத்து, அகன்று, வெளுத்து, கடை சிவந்த, அவளுடைய அழகிய இடக்கண், மீனாலசைந்த தாமரை மலர்போலத் துடித்தது. அழகமைந்து பருத்துத்திரண்ட அவளது இடத்தோ ளும் துடித்தது. இவ்வித நன்னிமித்தங்களால் சீதை தேற்றமுற்று, காற்றினாலும் வெயிலினாலும் வாடிக்கிடந்த வித்து மழையினாலே தளிர்ப்பதுபோல. மனக்கிளர்ச்சி யடைந்தாள். கொவ்வப்பழம்போன்ற வாயும், அழகிய புருவமும், வளைந்த கண்ணிமையும் கடை குழன்ற கூந்தலும் அழகிய வெண்பல்லுமுடைய சீதையின் முகம் இராகுவின் வாயிலிருந்து விடப்பட்ட சந்திரன்போலப் பிரகாசித்தது. 

ஆண்மையுடைய அநுமான் இராக்ஷசிகள் வெருட் டினதையும், சீதை புலம்பினதையும், திரிசடை இராக்ஷசி களுக்குக் கூறின கனவையும் எல்லாம் கேட்டான். இந் திரனுடைய நந்த வனத்திலுள்ள தெய்வப்பெண்போல அவ்வனத்திலிருந்த சீதையை அநுமான் பார்த்துப் பல ஆலோசனைகள் செய்து சீதைக்குக் கேட்கும்படி இனிய வார்த்தைகளைச் சொல்லத் தொடங்கினான். அவன் “அர சனாவான் தசரதன் என்பான், ரத கஜ துரகமுடையான், புண்ணிய சீலன், மிகுபுகழாளன், நேர்மையாளன். அவ னுடைய அன்புள்ள மூத்த மகனாவான் இராமன் என் பான். அவன் சந்திரன்போன்ற முகமுடையவன்; பேரறி வாளன்; வில்வீரர்களுட்சிறந்தவன். அவன் சத்தியத் தைக்காக்க விரும்பி மூப்படைந்த தனது தந்தையின் சொல்லால் மனைவியோடும் தம்பியோடுங் காட்டுக்குச் சென்றான். அவன் அப்பெருங்காட்டிலே வேட்டையா டித் திரிந்து வேண்டிய உருவமெடுக்கவல்ல வலிய அரக் கர்கள் பலரைக்கொன்றான். ஜனஸ்தானம் அழிந்ததை யும் கரதூஷணர்கள் கொலையுண்டதையும் கேள்வியுற்று இராவணன் கோபங்கொண்டு, காட்டிலே மாயமானை ஏவிவிட்டு, இராமனை வஞ்சனை செய்து, ஜானகியைக் கவர்ந்து சென்றான். இராமன் குற்றமில்லாத தனது தேவியைத் தேடித்திரிகையில் காட்டிலே சுக்கிரீவன் என்பான் ஒரு வானரனை நண்புகொண்டான்.சுக்கிரீவனால் ஏவப்பட்டு வேண்டிய வடிவ மெடுக்கவல்ல வானரர்கள் எல்லாத் திக்கிலும் இராமன் மனைவியைத் தேடுகின்றார் கள். நான், சம்பாதியினுடைய சொல்லால், அந்தத் தடங்கண்ணாள் காரணமாக, நூறு யோசனை அகல முள்ள இந்தக் கடலை வேகத்தோடு கடந்தேன்; இராகவன் கூறிய வடிவும் நிறமும் திருவுமுடையாளை இங்கே கண் டேன்’ என்று சொல்லிவிட்டுப் பேசாதிருந்தான். 

35. சீதை அநுமானைக் காணல் 

சீதை அந்தச் சொற்களைக் கேட்டு மிகவும் ஆச்சரியம் அடைந்தாள். பின்பு அச்சமுற்று முகத்தை உயர்த்திச் சிம்சுபா விருக்ஷத்தைப் பார்த்தாள். தனக்கு இன்பத்தைக் கொடுத்த சொற்களைச் சொன்ன குரங்கு அங்கே மறைந் துக்கொண்டு உருக்கின பொன்போன்ற கண்களோடு விரிந்த அசோக மலர்க்குவைபோல விளங்கி தன்னைக் குறுகி வணக்கத்தோடு நின்ற அனுமானைப்பார்த்து இது கனவோ என்று எண்ணினாள். 

வலியாற் சிறந்த அநுமான் மரத்தினின்றும் இறங்கி, பணிவு தோன்றிய ஏழை வேஷத்தோடு சீதையைக் குறுகி வணங்கி, தலைமேற்கைகூப்பி, இனியசொற்களாற் பேச லுற்று “மாசில்லாதவளே, கசங்கிய பட்டுடுத்து மரத் தின் கிளையைப் பற்றி நிற்கின்றாய்; தாமரை மலர் களையுடையாய்,நீ யார்? தாமரை மலர்களினின்று சிதறு கின்ற நீர்போல உனது கண்களினின்று துன்பத்தினாலே தோன்றிய கண்ணீர் பெருகுவது எதன் பொருட்டு? அழு வதனாலும், பெருமூச்சு விடுவதனாலும், கால் நிலந் தோய் தலாலும், ராஜ லக்ஷணங்கள் அமைந்திருத்தலாலும் நான் உன்னைத் தெய்வப் பெண்ணென்று எண்ணவில்லை. உன்னுடைய அவயவங்களையும் இலக்ஷணங்களையும் பார்த்து உன்னை ஓரரசன் கோப்பெருந்தேவி என்றும் கோமகள் என்றும் எண்ணுகிறேன். இராவணன் ஜன ஸ்தானத்திலிருந்து வலிந்து கவர்ந்துவந்த சீதை நீயாயின், உனக்கு நன்மை உண்டாகுக. உன்னை வினவுவோனுக்கு அதனைச் சொல்லு. உன்னுடைய ஏழைமையாலும், மக் களின் மிக்க அழகாலும், தவவடிவத்தினாலும் நீ இராம ருடைய தேவியாவது நிச்சயம்” என்று கூறினான். 

சீதை அனுமானுடைய சொற்களைச் செவியிற் கொண்டு, இராமருடைய புகழைக் கேட்டுக் களிப்புற்று மரத்தைச் சார்ந்து நின்ற அவனை நோக்கி “பூமியிலுள்ள அரசர்களுக்குள்ளே சிறந்தவனாகிய, பகைவரது படை யைப் பதைக்கவாட்டுந் தன்னுணர்வுடைய தசரதனுக்கு மருமகள் யான். விதேகர் கோனாகிய ஜனகனுக்கு மகள் அறிவுடைய இராமருக்கு மனைவி; சீதை என்று பெயர் கூறப்படுவேன்” என்று கூறினாள். 

அநுமான் சீதையின் வார்த்தையைக் கேட்டு, அவளை ஆற்றுவித்தற்கேற்ற மறுமொழி சொல்லறுற்று “தேவீ, நான் இராமருடைய கட்டளையின்படி உம்மிடத்து வந்த தூதன். இராமர் சுகமேயிருக்கின்றார். அவர் உமக்குத் தமது சுகஞ்சொன்னார். உமது நாயகருக்கு அன்பனும் உடனுறைபவனுமாகிய இலக்ஷ்மணனென்னும் பெருவிற லாளன் சோகத்தால் வாடி உம்மைத் தலையால் வணங்கு கின்றான்” என்றான். சீதை இராம லக்ஷ்மணர்களுடைய சுகத்தைக் கேட்டு மனமகிழ்ந்து, உடலெங்கும் மயிர் சிலிர்த்து, அநுமானை நோக்கி ‘உயிருடனிருந்தார் நூறு வருடம் சென்றாலும் இன்பமெய்துவர் என்னும் சான்றோர் வாக்கு உண்மை என்றே எனக்குத் தோன்றுகிறது என்று சொன்னாள். அதைக்கேட்டலும் அனுமானுக்கு மிகவும் பெரிய சந்தோஷமுண்டாயிற்று. பின்பு நம்பிக்கை உண்டாகி, சீதையும் அனுமானும் ஒருவரோடொருவர் பேசத் தொடங்கினார்கள். 

அவள் அவனை நோக்கி பெருமூச்சுவிட்டு இனியகுர லால் “நீ இராமருடைய தூதனாக வந்தவனாயின் உனக்கு நன்மை உண்டாகுக. நான் உன்னை வேண்டிக்கொள்ளு கின்றேன்; ராமருடைய கதையைக் கேட்பது எனக்குப் பிரியம்; எனது நாயகருடைய குணங்களை சொல்லு.” என்று கூறினாள். அநுமான் செவிக்கினிய சொற்களால் அவளை மகிழ்விப்பானாயினான். அவன் “இராமர் குபேர னைப்போல எல்லா உலகங்களுக்கும் அரசர்; அதி சீக்கிர மாக அவ்வீரர் கோபங்கொண்டு எரிகின்ற அக்கினி போன்ற தனது பாணங்களைச் செலுத்தி இராவணனைப் போரிலே கொல்லப் போகின்றார். அவர் அனுப்பின தூது வனாக நான் உம்மை இங்கு வந்தடைந்தேன். உம்முடைய பிரிவினாலே துன்பம் மீதூர்ந்துள்ள இராமர் உமக்குச் சுகஞ் சொன்னார். சுமித்திரை புத்திரராகிய பெருவிற் லுடைய இலக்ஷ்மணரும் உம்மை வணங்கி உமக்குச் சுகம் சொன்னார். அன்னாய், இராமருக்கு நண்பனான வானர வேந்தன் சுக்கிரீவனும் உமக்குச் சுகம் சொன்னான். இராமர் சுக்கிரீவனோடும் இலக்ஷ்மணரோடும் உம்மை எப்போதும் நினைத்துக் கொண்டிருக்கின்றார். தெய்வா தீனத்தால் நீர் இராக்ஷசிகள் வசமடைந்தும் பிழைத்திருக் கின்றீர். நீர் சீக்கிரத்தில் இராமரையும் இலக்ஷ்மணரை யும் வானரகோடிகளுக்கு நடுவிலுள்ள அளவிலாற்ற லுடைய சுக்கிரீவனையும் பார்ப்பீர்.நான் சுக்கிரீவனுக்கு மந்திரியாவேன்; அநுமான் என்னும் பெயருடைய வான் ரன் ; பெரிய கடலைத் தாவி இலங்கை நகருக்கு வந்தேன். நான் சொல்வதை நம்பும்” என்றான். 

அநுமான் கூறிய இராமன் கதையைச் சீதை கேட்டு இனியகுரலாற் பேசலுற்று “இராமரோடு நீ எவ்வாறு சேர்ந்தாய்? இலக்ஷ்மணரை நீ எப்படி அறிவாய்? வானரர்களுக்கும் நரர்களுக்கும் கூட்டுறவு எங்ஙனம் உண்டாயிற்று? என்று கேட்டாள். சீதை இவ்வாறு சொல்ல அநுமான் இராமருடைய இலக்ஷணங்களை விரி வாக எடுத்துரைத்தான். சீதை இவ்விதமான ஏதுக்களாலே நம்புமாறு செய்யப்பட்டு, தக்க அடையாளங்கள் கொண்டு அனுமானை அறிந்து ஆனந்தக்கண்ணீர் பெருக்கினாள். 

மறுபடியும் மிக்க வலியுள்ள அநுமான் சீதைக்கு நம்பிக்கை உண்டாகுமாறு வணக்கமாக எம்பெரு மாட்டீ, இதோ இராமருடைய பெயர் பொறித்த மோதி ரத்தைக் கண்டருளும். உமக்கு நம்பிக்கைக்காக இராமர் இதனைக் கொடுத்தார்: நான் வாங்கிக்கொண்டு வந்தேன்”. என்று சொன்னான். தனது நாயகன் கையிலணிந் திருந்த மோதிரத்தை சீதை வாங்கிப்பார்த்து தனது நாய கனைக் கண்டாற்போல் சந்தோஷமடைந்தாள்.நீண்டு வெளுத்து கடை சிவந்த கண்களையுடைய அவளது முகம் இராகுவின் வாயினின்று விடப்பட்ட சந்திரன்போல் விளங்கிற்று. பின்னர் அவள் சிறிது நாணமுற்று,நாயக னுடைய செய்தியைக் கேட்டுக் களித்து, மகிழ்கூர்ந்து, அநுமானை நன்மதித்துப் புகழ்ந்தாள். ”வானரோத்தம், நீ ஆண்மையுடையை; ஆற்றலுடையை; அறிவுடையை. ஆதலானன்றே நீ தனியே இந்த இராக்ஷச நகரத்தின் அரணைக்கடந்தனை? வானரத் தலைவ, நான் உன்னை சாதாரணமான வானரனென்று எண்ணவில்லை. ஏனெனில் இராவணனிடத்தில் உனக்குப் பயமுமில்லை ; தடுமாற்றமு மில்லை.நீ என்னுடன் பேசத்தகும். இராமர் துன்பப்பட வில்லையா? அவர் பரிதவியாதிருக்கின்றாரா? அவரைப் பிரிந்து தூரத்தில் வசிக்கும் என்னிடத்து அன்பு நீங்கி விட்டாரா? என்னை இந்த துக்கத்திலிருந்து நீக்குவாரா?” என்று சொல்லிவிட்டு சும்மாவிருந்தாள். 

அஞ்சத்தக்க ஆண்மையுடைய அநுமான். சீதை சொன்னதைக் கேட்டுத் தலையிற் கைகுவித்து மறுமொழி சொல்லலுற்றான். தாமரைக் கண்ணாய், நீர் இங்கிருப் பதை இராமர் அறியார்; இனி என் வார்த்தையைக் கேட்டவுடன் அவர் குரங்குகளும் கரடிகளும் நிறைந்த பெரிய சேனையைக் கூட்டிக்கொண்டு சீக்கிரம் வருவார். வைதேகீ, சுவர்க்கலோகத்தின் உச்சியில் வீற்றிருக்கும் இந்திரன்போல பிரஸ்ரவண மலையின்மேல் வீற்றிருக்கும் இராமரை நீர் காண்பீர். அவருக்கு எப்போதும் உம தெண்ணமே; எப்போதும் துக்கமே. அவர் சிறிதும் வேறொன்றையும் எண்ணுவதில்லை; காதலின் வசப்பட் டிருக்கின்றார். அவருக்கு ஒருபோதும் நித்திரையில்லை. சிறிது நித்திரை கொண்டாலும் “சீதை” என்ற இனிய சொல்லைச் சொல்லிக்கொண்டு எழும்பிவிடுவார். பூவை யோ, பழத்தையோ, அழகிய பொருள் வேறொன்றையோ பார்த்தால் பலமுறை பெரு மூச்சு விட்டு “ஆ காதலீ ” என்று உம்மை அழைப்பார்.” என்று அநுமான் கூறினான். 

சீதை அதுகேட்டு அனுமானுக்கு அறமும் பொருளும் வாய்ந்த வார்த்தைகள் கூறினாள். வானர, நீ சொன்ன வார்த்தை விஷங்கலந்த அமிர்தம் போன்றிருக்கின்றது. கடலில் ஓடி அலைகழிக்கின்ற உடைந்த மரக்கலம்போல இராமர் இந்தத் துக்கத்தின் கரையைக் காணுவது எப் போது? இராக்ஷசர்களைக்கொன்று இராவணனை நாசம் செய்து இலங்கையையும் அழித்து என் நாதர் என்னை எப் போது காண்பார்? அவரை விரைந்து வரச்சொல். இந்த வருஷம் முடிமளவுந்தான் நான் உயிரோடிருப்பேன். கொடிய இராவணனால் எனக்குக் குறிக்கப்பட்ட காலத் திற் பத்தாவது மாசம் இப்போது நடக்கிறது. மிச்சம் இரண்டு மாதந்தான் உள்ளன” என்றாள். 

இராமர் பொருட்டுத் துன்பத்தினாலே மெலிந்து கண் ணீர் விட்டுக்கொண்டு இவ்வாறு கூறின சீதையை நோக்கி அநுமான் சொல்லலுற்றான். “எனது சொல்லைக் கேட்ட வுடனே இராகவர் குரங்குகளுங் கரடிகளும் நிறைந்த சேனையைக் கூட்டிக்கொண்டு வருவார். இல்லையாயின், இந்தத் துன்பத்திலிருந்து நான் உம்மை இப்போதே விடு விக்கிறேன் ; மாசில்லீர், நீர் என் முதுகின்மீது ஏறியரு ளும். ஓமஞ்செய்த அவிசை இந்திரனிடத்து சேர்ப்பிக்கும் அக்கினியைப்போல பிரஸ்ரவணமலையின் மேலிருக்கும் இராமரிடத்து நான் உம்மைச் சேர்ப்பேன். இராமரையும் என்றான். இலக்ஷ்மணரையும் நீர் இதோ காண்பீர் அநுமானுடைய இந்த அற்புதமான வசனத்தைக் கேட்ட சீதை சந்தோஷமடைந்து தேகமெங்கும் புளகங்கொண்டு 16 அநுமான் என்னை எடுத்துக் கொண்டு நெடுவழி போக நீ எப்படி எண்ணுவாய்? இதுதான் உனது குரங்குத் தன்மை என்று எண்ணுகின்றேன்.வானரோத் தம, சிற்றுருவமுடைய நீ என்னைக் கொண்டுபோவதற்கு எப்படி எண்ணுவாய்” என்று சொன்னாள். 

சீதை சொன்னதைக்கேட்டு அனுமான் சீதைக்கு நம்பிக்கையுண்டாகும் பொருட்டு உடலை வளர்க்கத் தொடங்கினான். அவன் மேருமலையும் மந்தரமலையும் போலப் பருத்து, எரிகின்ற அக்கினிபோல ஒளியுடைய வனாகி சீதைக்கு முன்பு நின்றான். பயங்கரமான தோற் றத்தையுடைய அநுமானைச் சீதை பார்த்து “மீண்டு போவதற்கு மாத்திரமன்றி என்னையும் எடுத்துக் கொண்டு செல்வதற்கும் உனக்கு ஆற்றல் உண்டென்று நான் அறிவேன். ஆயினும், பெருமையிற் சிறந்த இராமரது காரியத்தை முடிக்கும் விதத்தை விரைந்து விசாரிக்க வேண்டியது அவசியம். வாநோரத்தம், உன்னோடு போவது எனக்கு முடியாது; வாயுவேகம் போன்ற உனது வேகத்தால் நான் மூர்ச்சை அடைந்து விடுவேன். நான் கடலுக்கு மேலே ஆகாயத்தை அடைந்து வேகமாகச்செல்லுகின்ற உன்னுடைய முதுகிலிருந்து பயத்தினால் விழுந்து விடுவேன். நான் அவ்வாறு கடலில் விழுந்து செயலற்று அதில் வாழுந் திமிங்கிலம்,முதலை, மீன் முதலிய விலங்குகளுக்கு விரைவில் இரையாய் விடு வேன். ஆதலால் உன்னோடு போவதற்கு நான் ஒருப்பட மாட்டேன். வானரோத்தம, மேலும் என்னுடைய பதி விரதத்தன்மையை முன்னிட்டு இராமரல்லாத மற்றொரு ஆண்மகனை நான் தீண்டமாட்டேன். நான் முன் இராவ ணனுடைய உடலைத் தீண்டினது பலாத்காரத்தினா லாயிற்று; காப்பாரின்றி தன்வயமழிந்து செயலற்ற யான் என்ன செய்வேன்? இராமர்வந்து இராவணனை சுற்றத் தாரோடுங்கொன்று என்னை இங்கிருந்து மீட்டுக்கொண்டு போவதுதான் அவர் பெருமைக்குத் தக்கதாயிருக்கும்.” என்றாள். 

அநுமான் அந்த வார்த்தைகளைக் கேட்டு சந்தோஷ முற்று சீதையை நோக்கிக் கூறலுற்றான்.”எம்பெரு மாட்டீ, நீர் சொன்னவைகள் எல்லாம் பொருந்தும்; அவை பெண் தன்மைக்கும் கற்புடைமகளிர் ஒழுக்கத்திற்குந் தக்கவைகளே. அன்னாய், என்முன்னர் நீர் சொன்னவை களையும் செய்தவைகளையும் எல்லாம் ஒன்றும் தவறாமல் இராகவர் கேட்பார்.மாசில்லீர், என்னோடு வரவிரும்பீ ராயின், இராகவர் உம்மை அறியத்தக்க ஓர் அடையாளங் கொடும்” என்று அநுமான் சீதையைக் கேட்டான். 

சீதை அனுமானை நோக்கி “நன்மனமுடைய கௌசலை பெற்ற உலகநாயகரை எம்பொருட்டு தலையால் வணங்கி சுகம் விசாரி. சுமித்திரையின் நற்புதல்வர் மேலான சுகத்தையும் கைவிட்டு இராமரைத் தந்தையாகவும் என்னைத் தாயாகவும் மதிப்பவர். அந்த லக்ஷ்மணர் என்னை இராவணன் எடுத்து வரும்போது காணாமற் போயினார். அவர் பெரியாரைப் பணிபவர்; திருவாளர்: ஆற்றலுள்ளவர் ; அதிகமாகப் பேசாதவர்; அவருக்கு என்பொருட்டாக எனது குசல வார்த்தையைச் சொல்லு. இராமருக்கினிய இலக்ஷ்மணர் எப்போதுஞ் சாது: தூயர் ; வல்லவர். அவரை எனது துக்கத்தை நீக்குபவ ராகச் செய். வானரோத்தம, எனது காரியத்தை முடித் ததற்கு நீ தான் கட்டளைக் கல். உனது உற்சாகத்தினால் இராகவர் என்னைக் குறித்து முயற்சியுடையவராக வேண் டும். எனது நாயகரான இராமருக்குப் பெயர்த்தும் ஒருமாதந்தான் பெயர்த்தும் இது சொல்:- ‘இராகவ. நான் உயிருடனிருப்பேன்; ஒரு மாதத்திற்குமேல் உயிர் வைத்திரேன்; இது நான் சத்தியமாக உமக்குச் சொல்லு கிறேன்’ என்று சொல்லி, பின்னர் ஒரு திவ்வியமான அழ்கிய சூடாமணியை தனது ஆடையிலிருந்து அவிழ்த் தெடுத்து ” இதனை இராமருக்குக் கொடு’ என்று அனுமான் கையிற் கொடுத்தாள். 

அநுமான் அந்த ஒப்பற்ற மணிரத்தினத்தை வாங்கி சீதையைப் பணிந்து, வலம்வந்து, நமஸ்காரஞ்செய்து தலை மேல் கை குவித்துக்கொண்டு ‘வானரர்களும் கரடிகளும் புடைசூழ இராமர் சீக்கிரம் வருவார்; வந்து பகைவர்களை வென்று உமது துக்கத்தை நீக்குவார். ஆதலால், தேவீ, நீர் வருந்தினது போதும்; இனித் துன்பத்தை ஒழித்து விடும். வானர வீரர்கள் ஒரே பாய்ச்சலில் இலங்கையை அடைந்து விடுவார்கள். சந்திரனும் சூரியனும் ஒருசேர உதித்தாற்போல இராம இலக்ஷ்மணர்கள் என் முதுகின் மீதேறிக்கொண்டு உம்மை வந்து சேருவார்கள். இலங்கை நகருட்புகுந்து அதனை அழித்துவிடப் போகின்றார்கள். இரகுநந்தனர் இராவணனை இராக்ஷசக் கூட்டங்களோடு கொன்று உம்மை மீட்டுக்கொண்டு தமது நகருக்குத் திரும்புவார். ஆதலிற் சிறிது ஆற்றியிரும். உமக்கு நன்மை உண்டாகின்றது. காலத்தை எதிர்பார்த்திரும். எரிகின்ற அக்கினிபோன்ற இராமரைச் சீக்கிரத்தில் பார்ப்பீர்” என்று மறுமொழி சொன்னான். அநுமான் சொன்ன வார்த்தையைக் கேட்டு சீதை “அநும, இனிய மொழி கூறுகின்ற உன்னைக்கண்டு, மழைபெய்யப்பெற்றுப் பாதி முளைத்த பயிருற்ற நிலம்போல நான் மகிழ்கிறேன். நான் கொடுத்த அடையாளத்தையும் இராமருக்குக் கொடு. காகத்தின் ஒரு கண்ணைப் போக்கிவிட அவர் அம்பு செலுத்தியதையுஞ் சொல்லு” என்றாள். இவ்வாறு சீதை வார்த்தையைக் கேட்டு, மிக்க வலியுள்ள அநுமான் சீதையை தலையால் வணங்கிப்போதற்கு முயன்றான். 

36. அநுமான் அசோகவனம் அழித்தல் 

சீதை நன்மொழி கூறி வாழ்த்த அநுமான் அவ் விடத்தை விட்டுப் புறப்பட்டுப்போய் எண்ணலாயினான். “சீதையைக் கண்டுகொண்டேன்; நான் செய்ய வேண் டிய காரியம் இன்னுஞ் சிறிதிருக்கின்றது. அக்காரியத்திற்கு முதன் மூன்று உபாயங்களையும் விட்டு நான்காம் உபாயந்தான் தக்கதாக தோன்றுகின்றது. இன்சொற் சொல்லல் இராக்ஷசர்களிடத்திலே பயன்படமாட்டாது; அது குணமுடையவருக்கு நியமித்தது; பொருளுடையவ ரிடத்திலே கொடுத்தல் பொருந்தாது; வலிமிக்கவர்கள் வேறுபடுத்தலால் சாத்தியப்படமாட்டார்கள். ஒறுத்தல் ஒன்றுதான் இங்கே பொருந்துமென்று எனக்குத்தோன்று கின்றது. ஒரு வினைசெய்தற்கு ஏவப்பட்ட ஒருவன் அந்த வினைக்கொரு கேடுமின்றிப் பலவினைகளை முடிப்பானாயின் அவனே வினை செய்தற்குரியவனாவன். அந்தக் கொடியோ னுடைய இந்தப் பூஞ்சோலை இந்திரனுடைய நந்தவனம் போன்று சிறந்து கண்ணையும் மனத்தையும் கவரும் வனப் பினதாய், பலவகை மரங்களும் கொடிகளுஞ் செறிந்திருக் கின்றது. உலர்ந்த காட்டிலே பற்றின அக்கினிபோல நான் இந்த வனத்தை அழிப்பேன். வனம் அழிந்த பின் ராவணனுக்குக் கோபம் உண்டாகும்” 

அநுமான் இவ்வாறு எண்ணி வாயுவைப்போல கோபங்கொண்டு, தனது காலின் வேகத்தாலே மரங்களை அடிபாறச் செய்ய மரங்கள் முறிந்த சத்தத்தினாலும் பறவைகளினொலியினாலும் இலங்கையில் வாழ்பவர் யாவ ரும் பயந்து நடுநடுங்கினார்கள். பறவைகளும் விலங்குகளும் பயந்து வெருண்டோடிக் கூச்சலிட்டன. அரக்கர்களுக்குக் கொடிய துர்ச்சகுணங்கள் உண்டாயின. பின்பு பேழ் வாயரக்கிகள் நித்திரைவிட்டெழுந்து அந்த வனம் அழிந் ததையும் அங்கொரு குரங்கு நிற்பதையுங் கண்டார்கள். பெருவிறலும் பெருவலியுமுள்ள அநுமான் அவர்களைப் பார்த்து அவர்கள் அஞ்சும்படியான பெரிய வடிவங் கொண்டான். அரக்கிகள் இராவணனிடம் சென்று கொடிய பயங்கரமான ரூபத்தையுடைய அநுமானைப் பற்றி சொல்லத் தொடங்கினார்கள்:- “அரச, அசோக வனத்தின் நடுவிலே அளவில்லாத ஆற்றலுடையதாகிய பெரிய குரங்கொன்று வந்து சீதையோடு பேசிக்கொண் டிருக்கின்றது.ஆச்சரியப்படத்தக்க உருவமுடைய அந்தக் குரங்கு பலவகை மிருகங்கள் நிறைந்துள்ள உன்னுடைய அழகிய பிரமதா வனத்தை அழித்துவிட்டது. சீதை தானாக இருப்பது அழகிய தளிர்களும் மலர்களும் நிறைந்த ஒரு பெரிய சிஞ்சுபா மரத்தினடி. அந்த மரத்தை அந்தக் குரங்கு அழிக்கவில்லை. அந்தக் கொடிய குரங்குக்கு நீர் தக்க தண்டனை கொடுக்க வேண்டும்.” 

இராக்ஷசிகள் சொன்ன வார்த்தையைக் கேட்டு இரா வணன் மிக்கவலியுடைய கிங்கரர் என்னும் அரக்கர்களை அநுமானைத் தண்டிக்கும்படி ஏவினான். அவர்கள் அதிக வேகமாகச் சென்று, விளக்கின்மேல் விழுகின்ற விட்டிற் பூச்சிகளைப்போல தோரணவாயிலின் மேலிருந்த அநுமான் மேல் விழுந்தார்கள். அவர்கள் பலவித தண்டாயுதங்களி னாலும், பொற்பூணிட்ட பரிகாயுதங்களினாலும், சூரியன் போன்ற ஒளியுடைய அம்புகளினாலும் அநுமானை அடித்தார்கள். அப்போது அனுமான் வாலைச் சுழற்றிப் பூமியிலடித்துப் பெருஞ்சத்தமிட்டான். பின்னர் ஒரு பெரிய வடிவமெடுத்து உரத்த சத்தமாக “பெருவிற லுடைய இராமர் வெல்க ; மகா பலமுடைய இலக்ஷ்மணர் வெல்க ; இராமராற் காப்பாற்றப்பட்ட அரசன் சுக்ரீ வன் வெல்க. கோசலர்கோன் இராமன் குற்றமில் செய் கையோனுக்கு அடியேன் யான்; வாயுவின் புத்திரன்; பகைவர் படையை யழிப்பவன்; அநுமானென்போன். மரங்களையும் மலைகளையும் ஆயிரமாயிரமாக எடுத்து வீசும் எனக்கு ஆயிரம் இராவணர்களும் யுத்தத்திலே நிகராகமாட்டார்கள். நான் இராக்ஷசர்கள் எல்லாருங் காண இலங்கையை அழித்து சீதையைப் பணிந்து என் வேலைகளை முடித்துக்கொண்டு போகப்போகின்றேன்” என்று கூவினான். அந்த வீரத்தொனியைக் கிங்கரர்கள் கேட்டுப் பயந்தார்கள். 

பின்னர் அநுமான் மண்டபத்தின் கண்ணுள்ள பொன்மயமான நெடிய தூணொன்றை விரைந்து பிடுங்கி அதனைப் பலவிதமாகச் சுழற்றினான். அப்போது அதிலே நெருப்புண்டாகி அந்த மண்டபம் பற்றி எரிந்தது. அநு மானுடைய செயல்களை கேள்வியுற்ற இராவணன் தன் மனவெண்ணத்தை வெளிப்படுத்தாமல் நல்ல ஆலோசனை செய்தான்.”அதன் செய்கைகளினால் நான் அதனைக் குரங் கென்று எண்ணவில்லை. ஆண்மையுள்ள பெரிய குரங்கு. களை நான் முன்னர் கண்டிருக்கின்றேன்; வாலி, சுக்ரீவன் மிக்க வலிவுடைய சாம்பவன், சேனாபதி நீலன், துவிவி தன் என்று அவர்கள் பலருளர். அவர்கள் ஒருவரிடத்தி லும் இந்தக் கடுவேகமும்; வலியும், ஆண்மையும், புத்தியும், பலமும், உற்சாகமும், வேண்டிய உருவமெடுக்கும் வன் மையும் இல்லை. இது குரங்குருவமெடுத்த ஒரு பெரும் பூதமே. ஆதலால் பெருமுயற்சி செய்து இதனைப் பிடிக்க வேண்டும்” என்று சொன்னான். 

பின்பு இராவணன் தன் மனத்தை திடப் படுத்திக்கொண்டு, இந்திரனுக்குச் சமானமான இந் திரசித்துவை ஏவினான். இந்திரசித்து தந்தை சொன்ன வார்த்தையைக் கேட்டு, யுத்தத்திற்குப் போக இசைந்து, அவனை வலம் வந்தான். பின்னர் அவன் சுற்ற மித்திரர்கள் போற்ற யுத்தத்தில் உற்சாகங்கொண்டு போருக்குப் புறப்பட்டான். வில்வீரர்களுட் சிறந்தவனும், படைத்தொழில் பயின்றவனும் அஸ்திரவித்தை அறிந்தவர்களுட் சிறந்தவனுமான இந்திரசித்து பெரிய வில்லையும் கூறிய நுதியுடைய அம்புகளையும் எடுத்துக் கொண்டு தேரின்மேலேரி அநுமானிருந்த இடத்திற்குப் போனான். அவனுடைய தேரோசையையும் வில்லின் நாணோசையையுங் கேட்டு அநுமான் மிக்க சந்தோஷ மடைந்தான். விரைந்து வந்த இந்திரசித்துவை அனுமான் கண்டு பேரொலிசெய்து வேகமாக உடல் பருத்தான். இந்திரசித்து வில்லைக்கையிலெடுத்து இடிபோல முழங்கும்படி நாணொலி செய்தான். வேகமுடையவர்களும் போர்த் தொழில் பயின்றவர்களுமான அனுமானும் மேகநாதனும் கண்டோர் மனத்தை எல்லாம் கவரத்தக்க சிறந்த யுத்தஞ் செய்தார்கள். இந்திரசித்து அநுமானுடைய செயல் களிலே தன் மனத்தைச் செலுத்தி அவனைக் கொல்லு வது அரிதென்று கண்டு அவனைப் பிடிப்பது எப்படி என்று எண்ணி அநுமான்மேல் பிரமாஸ்திரத்தை ஏவினான். 

பிரமாஸ்திரத்தால் கட்டுண்ட அநுமான் கை கால் கள் தொழிற்படுதலின்றிப் பூமியிலே விழுந்தான். பின்னர் அநுமான் பிரமமந்திரத்தால் அபிமந்திரிக்கப்பட்ட பிரமாஸ்திரத்தையும் பிரமன் கொடுத்த வரத்தையும் நினைத்தான்.”இந்த அஸ்திரத்தாற் கட்டுண்டதனாலே எனக்கொரு பயமுமில்லை. பிரமனும் இந்திரனும் வாயுவும் என்னைக் காக்கின்றார்கள். இராக்ஷசர்கள் என்னைப் பிடிப்பதனாலே எனக்கு இராவணனைக் கண்டு பேசுவ தாகிய பெரிய நன்மை உண்டாகும்; ஆதலால் அவர்கள் என்னைப் பிடிக்கட்டும்” என்று நிச்சயித்து செயலற்றுக் கிடக்க அவனை இராக்ஷசர்கள் சணற்கயிற்றினாலும் பின்னிய மர நாரினாலுங் கட்டினார்கள். 

அரக்கர்கள் அனுமானைக் கயிற்றினாற் கட்டவே அஸ் திரத்தின் கட்டு அவிழ்ந்துவிட்டது. ஏனெனில் பிரமாஸ்தி ரத்தின் கட்டு வேறொன்றின் கட்டோடு உடனுறையாது. அநுமான் தான் அஸ்திரத்தினின்று விடப்பட்டதை வெளியிலே காட்டவில்லை; இராக்ஷசர்களாலே இழுக்கப் பட்டுங் கட்டப்பட்டும் வருந்தினான். அவனை அரக்கர்கள் கையினாலுந் தடியினாலும் அடித்து இராவணன் முன் இழுத்துக் கொண்டுபோனார்கள். அனுமானும் ஒளியும் வலியுமமைந்து எரியுஞ் சூரியனைப்போல விளங்கிய இரா வணனைக் கண்டான். சிறப்புடன் வீற்றிருந்த இராவணனைக் கண்ணுற்ற அநுமான் அவனுடைய பெருமை யாலே மயங்கி எண்ணலுற்றான். ஆகா! என்ன உரு வம்! என்ன தைரியம்! என்ன விறல்! என்ன ஒளி! இவனுக்குச் சர்வலக்ஷணங்களும் எவ்வாறு அமைந்திருக் கின்றன ! இவன் செய்த அதர்மம் பெரிதாயிராது போனால் இவன் இந்திரனுக்கும் தேவலோகத்துக்கும் இறைவ னாவானே ” என்று அரக்கர்கோனது பெருமையை அநு மான் பலவாறு கருதினான். 

உலகங்களை அழுவித்த இராவணன் தன் முன்னின்ற அநுமானைப் பார்த்து சந்தேகமுற்று “நான் முன் கைலாச மலையைப் பிடுங்கினபோது என்னைச் சபித்த நந்திபக வானே குரங்கு வடிவமெடுத்துக் கண்கூடாக இங்கு வந் தாரோ? அல்லது வாணாசுரனோ?” என்று எண்ணினான். பின்னர் அவன் கோபமுற்று, கண் சிவந்து, முதன் மந்திரி யாகிய பிரகஸ்தனைப் பார்த்து ”இவன் எங்கிருந்து வந் தான்? என்ன காரணமாக வந்தான்?” என்று இந்தத் துஷ்டனைக்கேள்’ என்று சொன்னான். இராவணன் சொன் னதைக் கேட்டு, பிரகஸ்தன் அநுமானை நோக்கி “வாழி வானர; நீ பயப்படாதே; மனத்தைத் தேற்றிக்கொள். உண்மையைச் சொன்னால் உன்னை விட்டுவிடுவார்கள். என்ன காரணத்தினால் நீ இராவணேசுரனுடைய நகரத் துட் பிரவேசித்தாய்?” என்று கேட்டான். இவ்வாறு வினவப்பட்ட அநுமான் நான் சாதியில் வானரன். என் சுயரூபத்தோடேயே இங்கு வந்தேன். இராக்ஷசேந்திர னுடைய தரிசனங் கிட்டாமையாலே நான் இது செய் தேன். இராக்ஷசேந்திரனுடைய தரிசனத்துக்காகவே நான் வனத்தை அழித்தேன். தேவர்களாலும் அசுரர்களாலும் அஸ்திரபாசங்களினால் என்னைக் கட்டமுடியாது. இந்த வரத்தை நானும் பிரமனிடத்திலிருந்தே பெற்றேன். நான் ஓர் இராஜகாரியமாக உன்னை அடைந்தேன். பேராற்ற லுடைய இராமன் தூதனென்று என்னை நீ அறிந்து கொள். அரசனே, நான் சொல்லும் இந்த நல்ல வார்த்தை யைக் கேட்கவேண்டும். 

“அரக்கர்கோவே, நான் சுக்கிரீவனுடைய ஏவலால் உன்னிடம் வந்தேன்; வானரவேந்தன் உனக்குக் குசலஞ் சொன்னான். சுக்கிரீவன் சொன்ன வார்த்தைகள் அறத் தோடும் பொருளோடும் இயைந்தன: இம்மைக்கும் மறு மைக்கும் நன்மை பயப்பன; அவற்றைக்கேள். அரசனாவான் தசரதனென்பான் கஜரத துரகமுடையவன்; உல கத்திற்குத் தந்தைபோ லினியவன்; இந்திரன் போன்ற ஒளியுடையவன். அவன் மூத்த குமாரனாவான் இராம னென்பான் பெருந்தோளன்; இன்பத்தைச் செய்பவன்; பெரியவன். அவன் தந்தை ஏவலாலே தம்பி லக்ஷ்மண னோடும் மனைவி சீதையோடும் புறப்பட்டு தண்டகா வனத்தை அடைந்தான். அவனுடைய மனைவி சீதை; பதிவிரதை; விதேக நாட்டிற் கரசனாகிய ஜனகன் புத்திரி. அவள் காட்டிலே காணாமற் போய்விட்டாள். இராமன் தம்பி இலக்ஷ்மணனோடு மனைவியைத் தேடிக்கொண்டு வந்து, ரிசியமூக பர்வதத்தை அடைந்து, சுக்கிரீவனைத் தலைப்பட்டான். அவனுக்கு சுக்கிரீவன் சீதையைத் தேடு வதாக வாக்குச்செய்தான். சுக்கிரீவனுக்கு அவன் வானர ராச்சியத்தைக் கொடுப்பதாக வாக்குச்செய்தான். பின் னர் அவன் போரில் வாலியைக்கொன்று சுக்கிரீவனை வானரர்களுக்கும் கரடிகளுக்குந் தலைவனாக்கி அரசு புரிய வைத்தான். வானரர்களுட் சிறந்த வாலியை நீ முன்னர் அறிவாய்.  அவனைப் போரிலே இராமன் ஓரம்பினாற் கொன்றான். வானரவேந்தன் சுக்கிரீவன் தன் வாக்குத் தவறாதபடி விரைந்து சீதையைத் தேடுமாறு திக்குகளெல் லாம் வானரர்களை அனுப்பியுள்ளான். அந்த வானரர்கள் நூறு, ஆயிரம், பத்துலக்ஷம் என்னும் கணக்காகத் திக் குகளெங்குங் கீழும் மேலும் ஆகாயத்திலும் தேடுகின்ற னர். நான் அநுமான் என்பவன்; வாயுவின் புத்திரன்; சீதையின் பொருட்டு நூறுயோசனை அகலமுள்ள கடலைக் கடந்து அவளைக் காணவேண்டி இங்குவந்தேன். எங்குந் திரிந்து உன்னுடைய வீட்டில் அவளைக்கண்டேன். 

“நீ அறம்பொருள்களை அறிந்தவன்; தவங்களை உரிமை யாக்கிக் கொண்டவன்; பேரறிவாளன்; உனக்கு பிறர் மனைவியைச் சிறைப்படுத்துவது தகாது. உன்னையெர்த்த அறிவாளர்கள் அறத்திற்கு மாறாயினவும் கேடு பயப்பன வும் அடியோடழிப்பனவுமான கருமங்களிலே தலையிடார் கள். ஆதலால்,முக்காலத்தும் நன்மை பயப்பதும் அறமா யுள்ளதும் பொருளோடியைந்ததுமான இந்த வார்த் தையை நன்கு மதி. இராமனுக்குச் சீதையைத் திருப்பிக் கொடுத்துவிடு. இல்லையேல் உன் அதர்மத்தின் பயனை விரைவில் அடையப்போகின்றாய். இதிற் சந்தேகமில்லை. 

“ஜனஸ்தானத்தின் அழிவையும் வாலியின் வதையை யும் அறிந்து; இராமனுக்குஞ் சுக்கிரீவனுக்குமுள்ள நட் பையும் நோக்கி, உனக்கு நன்மையைத் தெரிந்துகொள். நானே இந்த இலங்கையை ரதகஜ துரகங்களோடு தனியே அழிக்கவல்லேன்; ஆனால் இராமருக்கு அது கருத்தன்று. அவர் வானரர்களுக்குங் கரடிகளுக்கும் முன்னிலையிற் சீதையை வருத்திய பகைவர்களை தாமே அழித்து விடுவ தாகச் சபதஞ் செய்திருக்கின்றார். நேராக இந்திரன்றானும் இராமருக்குத் தீங்குசெய்துவிட்டு சுகமடைய மாட்டான். பின்னர் உன்போலியர்களுக்குச் சுகம் உண்டா வது எப்படி? நீ எவளைச் சீதை என்றும் உன் வசத்தி லிருக்கிறாள் என்றும் எண்ணுகின்றாயோ அவளை இலங்கை முழுவதையும் அழிக்கவந்த காலராத்திரி என்று அறிந்துகொள். சீதை வடிவமைந்த காலபாசத்தை நீ கழுத்திலே மாட்டிக்கொண்டது போதும். இனி உனக்கு ஒத்ததை அறிந்துகொள். சீதையின் கற்பினாலே தகிக்கப் பட்டும். இராமருடைய கோபத்தினாலே நெருக்கப்பட்டும் இந்த நகரம் அட்டாலைகளோடும் வீதிகளோடும் எரிகின்றது பார். உன்னுடைய நண்பர்களையும், மந்திரிகளையும், சுற்றத்தாரையும், சகோதரர்களையும், பிள்ளைகளையும், அன்பர்களையும். வாழ்வுகளையும், மனைவியர்களையும் அழிவு செய்யாதே. அரக்கர்கோவே, நான் சொல்லும் உண்மை வார்த்தையைக் கேள். உலகங்கள் யாவற்றிற்கும் அர சரும் அரசர்க்கரசருமாகிய இராமருக்கு இவ்வித தீங்கு செய்துவிட்டு நீ பிழைப்பது அரிது” என்று அநுமான் கூறினான். 

அநுமான் சொன்ன வார்த்தையைக் கேட்டு இரா வணன் கோபமீதூர்ந்து அவனைக்கொல்லும்படி கட்டளை யிட்டான். கொடிய இராவணன் தூதுவந்துசொன்ன அநுமனைக் கொல்லும்படி கட்டளையிட்டதற்கு விபீஷ ணன் உடன்படவில்லை. இராவணன் கோபமுற்றிருப்ப தையும் அவன் கட்டளை முடியப்போவதையும் பார்த்து தமையனை வணங்கித் தான் சொல்லவிரும்பிய சொற்களை ஆராய்ந்து மிகவும் இனிதாகச் சொல்லலுற்றான். 

“இராக்ஷசேந்திர,பொறுத்தருள்: கோபத்தை விட்டு விடு; தயைசெய்து நான் சொல்வதைக் கேள்; பூவுலகி லுள்ள பெருமை சிறுமைகளை அறிந்த நல்ல அரசர்கள் தூதர்களைக் கொல்லமாட்டார்கள். அரக்கர்கோவே, தயை செய், பகைவர்களை அழிப்பவனே, வெல்லற்கரி யானே, இவ்விடத்தில் எது தக்கது எது தகாதது என்று ஆராய்ந்து தூதனுக்குத் தண்டனை விதி.உறுப்புகளைக் குறைத்தல், கசையாலடித்தல், முண்டிதஞ் செய்தல், உடம்பில் அடையாளஞ் செய்தல் என்பவைகளே தூதர்களுக் குச் சொன்ன தண்டங்கள். தூதர்களுக்குக் கொலைத் தண் டனை கேட்டதேயில்லை. இந்த வானரனைக் கொல்லுவதில் ஒரு குணத்தையும் நான் காணவில்லை. இவன் நல்லவ னானாலுமாக கெட்டவனானாலுமாக; இவன் பிறரால் அனுப் பப்பட்டு அவர்கள் கருத்தைச் சொல்பவன்; பிறருடைய தூதன்; இவனைக் கொலைசெய்வது தக்கதன்று” என்றான். 

37. அநுமான் இராமருக்குச் செய்தி சொல்லல் 

விபீஷணன் சொன்ன வார்த்தையைக்கேட்டு மிக்க வலியுள்ள இராவணன் இடத்துக்கும் காலத்துக்கும் ஏற் கத் தன் தம்பிக்கு மறுமொழி சொன்னான். “நீ நன்கு சொன்னாய். தூதனைக் கொல்லுவது பழிப்புக்கிடமானது. குரங்குகளுக்கு வாலே பிரியமான ஆபரணமாயிருக்கின் றது. இவனுடைய வாலைச் சீக்கிரஞ் சுட்டுவிடுங்கள், இவன் சுடுபட்ட வாலோடு போகட்டும்’ என்று இரா வணன் கட்டளையிட்டான். இராவணனுடைய கட்டளை யைக் கேட்டுக் கோபங் கன்றின இராக்ஷசர்கள் அநு மானுடைய வாலிலே பழந்துணிகளைச் சுற்றினார்கள். வாலிலே துணி சுற்றும்போது அநுமான் காட்டிலே காய்ந்த விறகிற்பற்றிய தீப்போலவளர்ந்தான். பின்னர் அவர்கள் அதனை எண்ணெயால் நனைத்து நெருப்பைக் கொளுத்தினார்கள். அவனைப் பிடித்துக்கொண்டு இராக்ஷ சர்கள் சந்தோஷத்தோடு சென்றார்கள். 

அனுமானுடைய வாலிலே அக்கினி பற்றி எரிந்த போது இராசிகள் சீதைக்கு அந்த வருத்தமான செய்தியைச் சொன்னார்கள்.”சீதாய், உன்னோடு பேசிக் கொண்டிருந்த சிவந்த முகத்தையுடைய குரங்கை வாலிலே நெருப்பை கொளுத்தித் தெருவில் இழுத்துத் திரிகின்றார்கள்’ என்று அவர்கள் சொன்னார்கள். தன் உயிரையே பறித்தாற்போன்ற கொடுமையான அந்த வசனத்தைக்கேட்டுச் சீதை துக்கம் மேலிட்டு அக் கினியைப் பிரார்த்தித்தாள். “என்னிடத்திலே நாயக னைப் பணிதலும், தவ்வொழுக்கமும், கற்பும் இருக்கு மாயின் நீ அநுமானுக்குத் தண்ணென்றிருக்கவேண்டும். என்னை நல்லொழுக்க முள்ளவளாகவும் தம்மை அடைய வேண்டுமென்னும் விருப்பமுள்ளவளாகவும் அந்தத் தரும வான் எண்ணி யிருப்பாராயின் நீ அனுமானுக்குத் தண்ணெண் றிருக்கவேண்டும். சத்தியந் தவறாத சுக்கிரீவன் என்னும் பெரியோன் இந்தத் துக்கக்கடலிலிருந்து என் னைக் கரையேற்றுவானாயின் நீ அநுமானுக்குத் தண் ணென் றிருக்கவேண்டும்” என்று சீதை வேண்டிக்கொண் டாள். உடனே அனுமானது வாலிற்கொளுத்தின அக் கினி அழன்று வலமாகச்சுவாலித்து மான் கன்றுபோன்ற கண்களையுடைய சீதைக்கு அநுமான் சுகத்தைச் சொல் வதுபோலப் பற்றி எரிந்தது. 

இவ்வாறு வாலெறிந்தபோது அநுமான் சிந்தித்தான். “எரிகின்ற இந்த அக்கினி ஏன் என்னை எங்குஞ் சுட வில்லை? பெருஞ் சுவாலைவிட்டு எரிகின்றதே; ஏன் என்னை இது வருத்தவில்லை? சீதையினுடைய அருளினாலும் இராக வருடைய பெருமையினாலும் என்னுடைய தந்தைக்குத் தான் நண்பனானதாலும் அக்கினி என்னைச் சுடவில்லை” என்று அவன் எண்ணினான். வேகமாக மேலே பாய்ந்து கர்ச்சித்தான். பின்னர் அவன் இராக்ஷசர்கள் நெருங்காதிருந்த மலைமுடி போலுயர்ந்த நகர வாயிலை அடைந்தான். அவன் ஒரு கணப்பொழுதில் மலைபோலப் பருத்து மறுபடி மிகவுஞ் சிறிய ரூபத்தை அடைந்து தன் மேலுள்ள கட்டுக்களை நழுவும்படி செய்தான். மீட்டும் மலைபோல வளர்ந்து நாற்புறமும் பார்த்து தோரணவாயி லிலே இருந்த இருப்பெழுவை எடுத்து அங்கிருந்த காவலர்க ளெல்லாரையும் அதனாலடித்துக் கொன்றான். 

பின்னர் அக்கினிபற்றிய வாலினாலே, மின்னலோடு கூடிய மேகம்போல விளங்கி அநுமான் இலங்கையி லுள்ள வீடுகளின் முகட்டில் ஏறித்திரிந்தான். விபீஷனுடைய வீடொழிந்த மற்றை ஒவ்வொரு மாளிகைகளிலும் வீடுகளிலும் மிகுந்த செல்வர்களுடைய செல்வங் களெல்லாவற்றையும் கொளுத்தினான். பின்னர் அந்த வீரன் எல்லா வீடுகளையுங் கடந்து இராக்ஷசாதிபனான ராவணனுடைய வீட்டை அடைந்தான். பலவித இரத் தினங்களால் அணிசெய்யப்பெற்று, சகல மங்களங்களும் நிறைந்து, மேருமலையும் மந்தரமலையும் போல விளங்கிய அந்தச் சிறந்த மாளிகையிலே, தன் வாலில் எரிந்து கொண்டிருந்த அக்கினியை வைத்துவிட்டு, யுகாந்த காலத்து மேகம்போல அநுமான் கர்ச்சித்தான். உருத் திரன் முன்னாளிலே முப்புரங்களையும் எரித்ததுபோல வேகமுடைய பெரிய அநுமான், இலங்கையை எரித்தான். 

சிறந்த அரக்கர் கூட்டங்களெல்லாம் அங்கே ஒருங்கு சேர்ந்து, “இவன் வச்சிராயுதந் தரித்த தேவர்களுக் கரசனான இந்திரனோ? கண்கூடாக வந்த யமனோ? வருணனோ? வாயுவோ? உருத்திரனோ? அக்கினியோ? சூரியனோ? குபேரனோ? சந்திரனோ? இவன் வானர னல்லன்? காலனே. எல்லாவற்றையும் படைத்து எல்லா வற்றிற்குந் தந்தையாயுள்ள நான்முகப் பிரமனுடைய பெருங்கோபமே வானரரூபமெடுத்து அரக்கர்களை அழிக்க வேண்டி இங்கு வந்ததுவோ? அல்லது ஈறில்லாததும் உருவமில்லாததும் நினைத்தற்கரியதுமான விஷ்ணுவின் பெரிய வலியே அரக்கர்களை அழிக்கவேண்டி குரங்குருவ மெடுத்து இப்போது வந்ததோ?” என்று சொல்லிக் கொண்டார்கள். இலங்கை இராக்ஷசர்களோடும் ரதகஜ துரகங்களோடும், பறவைக்கூட்டங்களோடும் மிருகங்க. ளோடும் மரங்களோடும் விரைந்து எரிந்தது. அநுமான். இலங்கை முழுவதையுங் கொளுத்திவிட்டுத் தன்வாலைக் கடலிலேதோய்த்து அதிற் பற்றியிருந்த தீயை அணைத் தான். பின்பு அநுமான் ஆகாயத்திலே திரியுஞ் சாரணர் கள் “என்ன ஆச்சரியம்! அநுமான் செய்த வேலையை யார் செய்யமுடியும்? அரக்கர்களுடைய வீடுகளிற் கொடிய அக்கினியை நன்றாகக் கொளுத்திவிட்டான். இந்தநகரம் அட்டாலைகள் மதில்கள் தோரண வாயில் களோடு எரிந்துவிட்டது; சீதை மாத்திரம் எரியவில்லை; என்ன ஆச்சரியத்துக்குமேல் ஆச்சரியம் இது என்று சொன்ன வார்த்தையைக் கேட்டான். அதன்மேல் அவன் தனது எண்ணங்களெல்லாம் முற்றி, சீதை இறக்கவில்லை என்று அறிந்து, அவளை நேராகப் பார்த்துவிட்டுக் திரும்பிப்போக எண்ணினான். 

அவன் பின்பு சிஞ்சுபாமரத்தினடியிலிருந்த சீதையை வணங்கி தெய்வாதீனத்தால் நான் உம்மை இங்கு உயி ரோடு பார்க்கப்பெற்றேன்” என்று சொன்னான்.பின்பு போகப்புறப்பட்ட அநுமானைச் சீதை அடிக்கடி பார்த் துத் தனது நாயகன் மீதுள்ள அன்பால் “வீர, காரியத் தை முடிப்பதற்கு நீ ஒருவனே போதும். உன்னுடைய வலியின் பெருமை புகழத்தக்கது. ஆயினும் பகைவர் வலி யை நாசஞ் செய்யுங் காகுத்தருடைய பெருமைக்கு அவரே தமது சரங்களால் இலங்கையை நிறைவித்து என்னை அழைத்துக்கொண்டு போவது தக்கதாகும். போரிற் சிறந்த அவருடைய ஆண்மை அவருக்குத் தகுந்ததாய் முடியும்படி நீ செய்ய வேண்டும்’ என்று சொன்னாள். காரணத்தோடு பொருந்தியும் பொருளமைந்து மிகுந்த அந்த மெல்லிய சொல்லைக்கேட்டு அநுமான் “காகுத்தர் சீக்கிரமாக வருவார் ; அவர் வானரவீரர்களுங் கரடித் தலைவர்களும் புடைசூழ வந்து பகைவரைப் போரிலழித்து உமது துன்பத்தை ஒழித்துவிடுவார்” என்று சொல்லிச் சீதையைத் தேற்றி, போதற்குத் துணிந்து, அவளைப் பணிந்தான். 

பின்னர் அவன் இராமரைப் பார்க்கவேண்டுமென்ற ஆசைமிக்கு கடல் போல விளங்கிய ஆகாயத்திலே வருத்த மின்றிப் பாய்ந்து போனான். அநுமான் அந்த மேகக் கூட்டங்களுள் அடிக்கடி நுழைந்து மறைந்தும் அவற்றி னின்று வெளிப்பட்டுப் பிரகாசித்துஞ் சந்திரன் போலச் சென்றான். அவன் கொஞ்சத்தூரஞ்சென்று மேகம் போன்ற பெரிய மகேந்திர மலையைப் பார்த்து மேக முழக்கம்போன்ற தனது பேரொலியினால் பத்துத்திக்கும் நிறையும்படி செய்தான். 

அநுமான் வரவை நோக்கி முன்னரே கடலின் வடகரையிலிருந்த வானர வீரர்கள் காற்றுக் கொண்டுவந்த அநுமானுடைய மேகமுழக்கம்போன்ற முழக்கத்தைக் கேட்டு அவனைக் காணும் உற்சாகமுடையவர்களானார் கள். வானரர்களுக்குட் சிறந்த ஜாம்பவன் மனமகிழ்ச்சி யடைந்து வானரர்களெல்லாரையும் அழைத்து “எல்லா விதத்தாலுங் காரியங்களை முடித்துக்கொண்டே வருகின் றான் அநுமான். இதிற் சந்தேகமில்லை. காரியம் முடியா விடின் இவ்வாறு சத்தமிட மாட்டான்” என்றான். பின்பு அநுமான் மரங்கள் அடர்ந்த மகேந்திரமலையின் உச்சியில் இறங்கினான். வானரத்தலைவர்களெல்லாரும் அநுமானை வந்து சூழ்ந்தார்கள்; அநுமானுக்குப் பழங்களையும் கிழங்குகளையும் உபாயனங்களாகக் கொண்டுவந்து கொடுத்து வெகுமானஞ் செய்தார்கள். 

அநுமான் ஜாம்பவன் முதலிய பெரிய வானரர்களை யும் இராஜகுமாரனான அங்கதனையும் வணங்கினான். பின்னர் அவன் அங்கதன் ஜாம்பவன் முதலியவர்களுடைய நன் மதிப்பையும் மற்றை வானரர்களுடைய அருளையும் பெற்றுக் “கண்டேன் சீதையை” என்று சீதையைக் கண்டதைச் சுருக்கமாகத் தெரிவித்தான். அநுமான் சொன்ன பொருள் பொதிந்த அமுதம் போன்ற “கண் டேன்” என்ற சொல்லைக் கேட்டு வானரர்களெல்லாங் களிப்படைந்தார்கள். அந்த வார்த்தையைச்சொன்ன அநுமானை அங்கதன் நோக்கி வானரவீரர்கள் யாவருக்கும் நடுவிலே புகழ்ந்துபேசினான். அவன் ”வீர,அகன்ற கடலைக் கடந்து மறுபடி திரும்பி வந்த உமக்கு வலியி லாவது வீரத்திலாவது சமமானவர்கள் ஒருவருமில்லை. இராமரிடத்திலே நீர் வைத்திருக்கும் அன்பென்ன! உம் முடைய வீரமென்ன! உம்முடைய திட்பமென்ன! இராமர் பத்தினியாகிய புகழ்படைத்த சீதையை நீர் தெய்வாதீனத்தாற் கண்டீர். இனிச் சீதையைப் பிரிந்த துன்பத்தினின்றும் இராமர் தெய்வாதீனத்தால் நீங்குவர்” என்று சொன்னான். 

பின்பு வானரர்கள் எல்லாரும் மனமகிழ்ந்து மகேந்திர மலையைவிட்டு அநுமான் முன்புபோக அவன் பின்னே பாய்ந்துப் போனார்கள். இராமரைப் பார்க்க விரும்பினவர் களாய், அங்கதனையும் அநுமானையும் முன்னிட்டுக் கொண்டுவந்து,மனமகிழ்ந்து, களிகூர்ந்து, இராமருக்குஞ் சுக்கிரீவனுக்குஞ் சமீபத்தில் இறங்கினார்கள். அதன்பின் அநுமான் இராமரைத் தலையால் வணங்கிச் சீதை நெறி தவறாமலுங் கற்பழியாமலும் இருப்பதைத் தெரிவித் தான். அது கேட்டுச் சுக்கிரீவன் தன் சொல் நிச்சய மாயிற்றென்று அநுமானிடத்தில் மகிழ்ச்சியடைந்தான்; இலக்ஷ்மணரும் மகிழ்ச்சியுற்று களிப்படைந்த அநுமானை நன்குமதித்துப் பார்த்தார். பின்பு பகைவரை வாட்ட வல்ல இராமரும் மகிழ்ச்சியாற் களிகூர்ந்து அநுமானை மிக்க நன்மதிப்போடு பார்த்தார். 

சீதை உயிரோடிருப்பதைக் கேட்டவுடன் இராமர் மறுமொழி சொன்னார். “வானரர்காள், சீதாதேவி எங்கே இருக்கின்றாள்? என்னிடத்தில் எவ்வாறிருக்கின்றாள்? என்று அவளைப்பற்றி எல்லாவற்றையும் எனக்குச் சொல்லுங்கள்’ என்றார். இராமருடைய வார்த்தை யைக்கேட்டுச் சீதாதேவியைத் திக்குநோக்கித் தலையால் வணங்கி, தான் அவளைக்கண்ட வரலாற்றை அநுமான் கூறலாயினான். 

“நான் சீதையைக் காணவேண்டுமென்று இச்சை யால் நூறுயோசனை அகலமுள்ள கடலைத் தாவி அவளைத் தேடிக்கொண்டு சென்றேன். அங்கே தென்திசையிலே கடலின் தென்கரையிலே தீயவனான இராவணனுடைய  இலங்கை என்னும் நகர் உளது. அங்கே இராவணனுடைய அந்தப்புரத்திலே நான் சீதையைக் கண்டேன். அவள் ஒன்றாகப் பின்னிய சடை தரித்து,ஏழையாய், உம்மையே நினைத்துக்கொண்டு இருக்கின்றாள்.அவள் தரையிலே படுத்து, பனிக்கால வரவால் வாட்டமடைந்த தாமரை மலர்போல நிறம் பசந்து, இராவணனிடத்திலே வெறுப் புற்று,உயிர்விடத் துணிந்தவளா யிருக்கின்றாள். அதன் பின் அவள் என்னோடு வார்த்தையாடினாள். நான் அவளுக்கு எல்லாச்செய்திகளையுஞ் சொன்னேன். அவள் சித்திரகூட மலையிலே உமது முன்னிலையிலே நடந்த காகத் தினுடைய செய்தியை என்னிடத்தில் அறிகுறியாகச் சொன்னாள்.’வாயுபுத்திர, நீ இங்கே கண்டவைகள் யாவற்றையும் மக்களுட்சிறந்த இராமருக்கு அறிவிப் பாயாக. நான் பேணிக்காத்து வைத்திருந்த இந்த மணியை அவருக்குக்கொடு. நான் மிக்க ஒளியுள்ள இந்தச் சூடாமணியை வெகு கவனமாகக் காப்பாற் றினேன். ஒரு மாதத்துக்குமேல் அரக்கர் கையில் அகப் பட்ட யான் உயிர்வைத்திரேன்’ என்று தருமந் தவறா மல் உடன்மெலிந்துள்ள சீதை என்னிடஞ் சொன்னாள்.” என்று அநுமான் சொன்னான். அவன், அரசகுமாரர்களிரு வரும் ஆறுதலடைந்தது தெரிந்து கொண்டு, சீதை கொடுத்த சூடாமணியை இராமரிடங் கொடுத்துச் சீதை சொன்னவைகளை எல்லாம் முறையாக முழுதும் சொன்னான். 

இவ்வாறு அநுமான் சொல்ல, இராமர் அந்தச் சூடாமணியை மார்போடணைத்துக்கொண்டு சுக்கிரீவனுக் குச் சொல்லலுற்றார். “கன்றினிடத்துள்ள அன்பினாற் பசுவின்பால் பெருகுவதுபோல, என்னுடைய மனமும் இந்தச் சிறந்த சூடாமணியைக் கண்டு உருகுகின்றது. நான் இதனைக்கண்டு இப்போதே அவளை அடைந்தவன் போல எண்ணுகின்றேன். வைதேகி ஒரு மாதம் உயிரோடிருப்பாளாயின் நெடுங்காலம் வாழ்வாள்; நான் அவள் இன்றி ஒரு கணப்பொழுதும் உயிரோடிரேன். அநுமான், சீதை என்ன சொன்னாள்? அதனை உண்மையாக எனக்குச்சொல்லு; நோயாளி மருந்தினாற் பிழைப்பது போல் நான் அதனாலன்றோ உயிரோடிருக்கின்றேன் என்று கேட்டார். இராமர் இவ்வாறு சொல்ல, அநுமான் அவருக்குச் சீதை சொன்னவைகள் யாவற்றையும் விவரமாக உரைத்தனன்.

– தொடரும்…

– வால்மீகி ராமாயணச் சுருக்கம் (நாவல்), முதற் பதிப்பு: 1900, கே.மகாதேவன், பிரசுரகர்த்தர், விஜயதசமி, 17-10-1953.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *