வால்மீகி ராமாயணச் சுருக்கம்
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: ஆன்மிகக் கதை
கதைப்பதிவு: October 4, 2024
பார்வையிட்டோர்: 5,732
(1900ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
பாலகாண்டம் | அயோத்தியா காண்டம் | ஆரணிய காண்டம்
9. இராமருக்கு பட்டங்கட்டத் தசரதர் விரும்புதல்
பரதர் சத்துருக்கனனை அழைத்துக்கொண்டு கேகய தேசத்திற்குச் சென்ற பிறகு அவர்களைப்பற்றித் தசரதர் நினையாத நாளில்லை.ஏனெனில், அவர் தமது தேகத்தில் தோன்றிய நான்கு கைகள்போல் விளங்கிய தம் குழந்தை கள் நால்வரிடத்திலும் ஒரேவிதமான அன்பும் ஆதரவும் வைத்திருந்தார். ஆனால், இராமர் கொஞ்சம் அதிகமான அன்புக்கு இடமானார்; ஏனெனில், பிராணிகளுக்குள் பிரம தேவர் எவ்வாறு சகல உத்தமகுணங்களுக்கும் இருப்பிட மானவரோ அவ்வாறே இராமரும் இந்நால்வர்களுள்ளும் வெகு விசேஷ குணங்கள் பொருந்தியவராக இருந்தார்.
இராமர் தநுர்வேதத்தில் உத்தமமான புகழ்பெற்றவர்; அதிரத வீரர்களெல்லாராலும் தம்மைவிட மேன் மை பொருந்தியவராக ஒப்புக்கொள்ளப்படுவர்; சத்துரு வந்தபின் பார்த்துக்கொள்வோம் என்றிருப்பவரல்லர்; தாமாகவே தைரியமாக சத்துருவை நாடிச்சென்று போர் செய்யும் பெருமை தங்கியவர்; அவ்விதம் செல்லும்போ தெல்லாம் தமது சேனைகளை அணிவகுத்து ஒருவித அபா யத்துக்கும் உள்ளாக்காமல் நடத்தி சத்துரு சமூகத்திற் புகுவதில் வெகு திறமையுடையவர்; யுத்தத்தில் கோபத்தைக் கொண்டவர்களான தேவர்கள் அசுரர்கள் இவர்களாலுங்கூட அணுகக்கூடாத பராக்கிரமம் பொருந்தியவர்; அசூயை யில்லாதவர்; கோபத்தை வென்றவர்; செருக்கு அற்றவர்; துவேஷபுத்தி யில்லாதவர்; ஒரு பிராணியையும் அவமானப் படுத்துபவரல்லர்; சமயத்துக்குத் தக்கபடி ஒருபொழுதும் அற்பராக நடக்கமாட்டார். இராமர் இவ்வாறு சிலாக்கியமான சகல குணங்களும் பொருந்தியவராய் விளங்கினார். அவர் பொறுமையிற் பூமிதேவிக்குச் சமமாகவும், புத்தியில் பிருகஸ்பதி போல வும், வீரத்தில் இந்திரனுக்கு ஒப்பாகவும் பிரகாசித்து வந் தார். இம்மூவுலகத்திலும் உள்ள ஒவ்வொருவரும் அவரிடம் அன்புவைத்து வந்தார்கள். பகலில் பதினைந்து நாழிகையளவில் சூரியபகவான் தனது சகல கிரணங்களாலும் எவ்வாறு ஜ்வலிக்கிறானோ அவ்வாறு முற்றிலும் சிலாக்கியமான குணங்களால் இராமர் விளங்கினார். அவரைப்பார்த்து, “இவ்வளவு குணங்களும், பலபராக்கிரம மும், போரில் ஒருவராலும் வெல்லப்படாத தன்மையும், பொருந்திய உலகத்தைக் காப்பாற்றும் வல்லமையும் லோகபாலர்கள் போன்ற இவர் நமக்கு நாயகராக ஏன் ஆகக்கூடாது” என்று பூதலமடந்தை கருதியவண்ணம் இருந்தாள்.
தம்முடைய புதல்வன் இவ்வளவு அதிகமான ஒப் பற்ற நற்குணங்களோடு கூடியிருப்பதை தசரதமன்னர் அறிந்து, தமக்குள் தாமே “நாம் உயிருடனிருக்கும் பொழுதே நமது இராமன் ஏன் இராஜாவாகக் கூடாது. ஏன் நாம் இந்தப் பாக்கியத்தை நடத்தி நமது கண்ணால் பார்க்கலாகாது. இவனை இந்த இராச்சியத்தில் பட்டாபி ஷேகம் பண்ணிவைத்து அதன்பின் நான் சுவர்க்கலோகஞ் சேருவேன்’ என்று நினைத்தார். உடனே அவர் தமது மந்திரிமார்களை சபையிற் சேர்த்து அங்கு எல்லாரும் வந்து உட்கார்ந்தவுடன், எல்லாருடைய க்ஷேமத்தையும் நிலை நிறுத்துகின்றதும், எல்லா ருடைய மனத்தையுங் களிக்கச் செய்கின்றதுமான சமாசாரத்தை சபைமத்தியில் சொல்லத் தொடங்கினார். நானும் எனது முன்னோர்களுமான அரசர்கள் விசால மான இந்த இராச்சியத்தை குழந்தையை ரக்ஷிப்பது போல் பரிபாலனம் பண்ணினது உங்களுக்கெல்லாந் தெரிந்த விஷயமே. நான் எனது சிரமத்தைக் கொஞ்ச மேனும் லக்ஷ்யம் பண்ணாமல், என்னாற் கூடியமட்டும் எனது முன்னோர்கள் ஏற்படுத்திய நெறியில் நின்றுக் கொண்டு எப்பொழுதும் குடிகளை ரக்ஷித்துவந்திருக்கின் றேன். வெண்குடைக் கீழிருந்து உலகத்தைக் காப்பதி லேயே என் ஆயுள் முழுவதையும் கழித்து இப்பொழுது நான் நரை (முதுமைப் பருவம்) அடைந்திருக்கிறேன். எனக்கு இப்பொழுது அநேகமாயிரம் பிராயங்களாயின. இனிமேல் கொஞ்சம் இளைப்பாற வேண்டுமென்ற எண் ணம் வந்திருக்கிறது. ஆகையால் இவ்வதிகாரத்தில் இராமனுக்கு இளவரசுப் பட்டஞ் சூட்டி நானும் கொஞ்ச காலம் கவலையற்றிருக்க எண்ணுகிறேன். எவ்வாறு இந்தக் காரியத்தை நிறைவேற்றி வைக்க வேண்டுமோ அவ்வாறு ஆலோசித்துச் சொல்ல வேண்டும்” என்றார்.
தருமத்தையும் அர்த்தத்தையும் நன்றாய் உணர்ந்த தசரத மன்னருடைய வார்த்தையைக்கேட்டு, அவருடைய அபிப்பிராயத்தை நன்றாயறிந்துகொண்ட அங்கிருந்த எல்லா வேதியர்களும், மன்னவர்களும், நாட்டார்களும், ஊரார்களும், எல்லாருஞ் சேர்ந்து ஆலோசித்துத் தங்க ளுக்குள்ளும் தனித்தனியாக ஆராய்ந்து எல்லாருமாக ஒரேவிதமான அபிப்பிராயம் அடைந்து முதியவரான தசரதரைப் பார்த்து, “அரசரே, அநேகமாயிர வருஷங் கள் இராச்சிய பரிபாலனம் பண்ணி தாங்கள் முதிர்ந்த வயதை அடைந்திருக்கிறீர்கள் என்பது நிச்சயம். ஆகையால் தாங்கள் இந்தக்ஷணமே இராமரை இளவரசராகப் பண்ணி அவருக்குப் பட்டாபிஷேகம் செய்துவைக்க வேண்டுமென்று நாங்கள் வெகு ஆவல் கொண்டிருக் கிறோம். வேந்தே, தங்களுடைய புத்திரருக்குச் சிறந்த கல் யாணகுணங்கள் பல இருக்கின்றன. இவரொருவரே உலகத்தில் சிறந்த சத்புருஷர்: சத்தியத்தையும் தருமத் தையும் முக்கியமாகக் கொண்டவர்; பொறுமை யுடைய வர்: யாவரையும் சமாதானப் படுத்துபவர் ; இனிமை யாகவே பேசுபவர்; நன்றியறிவுள்ளவர்: ஜிதேந்திரியர் மென்மையான தன்மையுடையவர்; மனவுறுதிபூண்டவர்; எப்பொழுதும் வணக்கமுள்ளவர்; பொறாமைக்கு இடங் கொடாதவர்; எல்லாப் பிராணிகளுக்கும் இனியவையும் உண்மையுமான வார்த்தைகளையே உரைப்பவர்; மிக்க கல்வி கேள்விகளையுடைய பிராயம் முதிர்ந்த பிராமணர் களை வழிபடுபவர் : நகரத்து ஜனங்களை எல்லாம் தமது ஜனங்களைப் போல் மிக்க அன்புடனே பலவாறு க்ஷேமம் விசாரித்து வருவார். ஜனங்கள் விசனப்படும்போது தாமும் விசனப்படுதலும், அவர்கள் சந்தோஷப்படும் போது தாமும் சந்தோஷப்படுதலும் ஆகிய இயல்புள்ளவர். சௌரிய வீரிய பராக்கிரமங்களால் உலகத்தைக் களிக்கச் செய்கிறவர்: பிரஜைகளைப் பாதுகாக்கும் வகையை உள்ளபடி யறிந்தவர்; ஆசையை வென்றவர்; இப்படி எல்லாக் குணங்களும் நிறைந்து லோகபாலர்க்குச் சமானராயுள்ள இராமரை பூமி தானே தனக்குக் கொழுநராக விரும்புகிறாள். தங்கள் நாடு நகரங்களி லுள்ள மனுஷ்யர்களான நாங்களும் தெய்வங்களைப் பிரார்த்தித்துக்கொண்டுவருகிறோம். ஆகையால் அரசரே, தாங்கள் எல்லாருடைய அபிப்பிராயத்தையும் தங்களுடைய மூத்த குமாரருக்கு முடிசூட்டுவதால் நிறை வேற்றிவையுங்கள்” என்றார்கள்.
அச்சபையார்களெல்லாரும் அவ்வாறு சொல்ல தச ரதர் அவர்களுடைய க்ஷேமத்தை மேன்மேலும் கருதியவ ராய் அவர்களை நோக்கி “ஆச்சரியம் ! நான் வெகு ஆனந் தத்தை யடைந்துவிட்டேன். எனது பாக்கியத்துக்கு ஒப் பான பாக்கியமும் உண்டோ? நீங்கள் எல்லாரும் எனது மூத்த குமாரனான இராமனை எப்பொழுது யுவராஜாவாக செய்ய சம்மதித்தீர்களோ அப்பொழுதே எனது விருப் பங்கள் எல்லாம் நிறைவேறின” என்று அன்போடு சொன்னார்.
இவ்வண்ணம் அங்கு வந்திருப்பவர்களிடம் மரியாதை யாகச் சொல்லிவிட்டு, அவ்விடத்திலிருந்த அந்தணர்க ளெல்லாருங் கேட்டுக்கொண்டிருக்க, வசிஷ்டர் வாம தேவர் என்ற இரண்டு குருக்களையும் பார்த்து அரசர். “இந்த மாதமோ ரமணியமான வெகு நல்ல சித்திரை மாதமாயிருக்கிறது; சோலைகள் புஷ்பங்களால் நிறைந் திருக்கின்றன. நீங்கள் வெகு சீக்கிரமாக இராமனுக்கு முடிசூட்டும் உத்ஸவத்துக்கு வேண்டிய எல்லாப்பொருள் களையும் உடனே சேர்த்திடலாம்’ என்றார். பிறகு சுமந்திரரை நோக்கி ஐயா, நமது ராமனை சீக்கிரம் அழைத்து வாரும்” என்றார். சுமந்திரரும் “அப்படியே என்று சொல்லிச் சென்று அரசருடைய கட்டளையின் படி இராமரை அழைத்துக்கொண்டு வந்தார்.
தமது சமீபத்தில் வணக்கத்துடன் வந்து பேர் சொல்லி நமஸ்கரித்து அஞ்சலிபந்தம் பண்ணிக்கொண்டு நிற்கும் தமது குமாரரை தசரதமன்னர் பார்த்து அவரது கைகளைத் தமது கைகளால் பற்றி எடுத்து அணைத்துக்கொண்டு ஆனந்த பரவசரானார். பிறகு புன் னகையுடன் அவரைப்பார்த்து காசியபமாமுனி தேவேந் திரனைப் பார்த்துச் சொல்லுவது போல, “எனது தகுதி யான மூத்த பட்டஸ்திரீ வயிற்றில் எனது மூத்த குமாரனாகச் சகலவித உத்தம குணங்களோடும் தகுதி யாகப் பிறந்திருக்கும் நீ என்னுடைய கண்ணுக்குக் கண் என்பது சொல்லவும் வேண்டுமோ? ராம, நான் வெகு காலம் என் இஷ்டப்பிரகாரம் அநேகவித போகங்களை அனுபவித்து இப்பொழுது முதுமைப் பருவம் அடைந்து விட்டேன். தேவதைகள், ரிஷிகள், பிதிருக்கள். அந்த ணர்கள், ஆத்மா இவர்களுக்கெல்லாம் நான் நிறைவேற்ற வேண்டிய கடன்களை நிறைவேற்றிவிட்டேன். இன்றைத் தினம் நமது குடிகளெல்லோரும் உன்னை அரசனாக அடைய வேண்டுமென்பதில் தங்களுக்கிருக்கிற ஆவலைத் தெரிவித்துவிட்டார்கள். ஆகையால் உன்னை இளவரச னாகப் பட்டாபிஷேகம் செய்யப்போகிறேன்” என்றார். இராமரும் அப்படியே நடந்துகொள்ளச் சித்த ராய் தந்தையை வணங்கி விடை பெற்றுத் தமது மாளிகைக்குச் சென்றார். அங்ஙனம் தமது மாளிகைக் குச் சென்றவுடன் அவர் தமது தகப்பனார் கட்டளையைத் தெரிவிப்பதற்கு தமது தாயாருடைய அந்தப்புரத்திற்கு ஏகினார். அவளை நோக்கி அம்மா, எனது பிதா குடிகளை ரக்ஷிக்கவேண்டும் என்று எனக்குக் கட்டளை செய்திருக் கிறார். நாளை எனக்குப் பட்டாபிஷேகமாம்” என்றார் இதை கௌசல்யை கேட்டவுடன் இதுதான் தானும் வெகு நாளாக மனத்தில் வைத்திருந்த வேண்டுகோளா கையால் ஆனந்தக்கடலில் முழுகி, கண்களில் ஆனந்த பாஷ்பம் ததும்ப, தமது மகனைப்பார்த்து, “குழந்தாய். நீ நீடூழிகாலம் வாழ்வாயாக; ஏதாவது இடையூறு இருப் பினும் அது நசித்துப்போகட்டும். நீ எப்பொழுதும் என் பந்துக்களையும் சுமித்திரையின் சுற்றத்தார்களையும் சந்தோஷப்படுத்திவைப்பாயாக” என்றாள்.
இவ்வண்ணம் தமது தாய் சொல்லி முடித்தவுடன், இராமர் தமது அருகில் கைகூப்பிக்கொண்டு வெகு வணக் கத்துடனுஞ் சந்தோஷத்துடனும் நிற்கும் தமது தம்பி லக்ஷ்மணரைப் பார்த்து புன்னகையுடன் “லக்ஷ்மணா, என்னுடன் நீயும் இந்தப் பூமியைப் பரிபாலனம் பண்ணு வாய். நீ யார்? எனது இரண்டாவது ஆத்மா. ஆகை யால் இந்தப் பட்டமும் உன்னை அடைந்துவிட்டது. என்று சொல்லி, பின்பு தமது தாயாரை வணங்கி அவர் களிடம் விடைபெற்று, சீதைக்கு விடைகொடுப்பித்து அவளுடன் தமது மாளிகைக்குத் திரும்பிவந்தார்.
10. கைகேயிக்கு கூனி உபதேசம்
அந்நகரத்தவரனைவரும் பொழுதுவிடிந்தவுடன் பட் டாபிஷேகத்தின் பொருட்டு பட்டணத்தை அலங்கரிக் கத் தொடங்கினார்கள். நாற்சந்திகளிலும், வீடுகளிலும் ஜனங்கள் ஒருத்தருக் கொருத்தர் இராமருடைய பட்டா பிஷேகத்தைப்பற்றிப் பேசிக்கொண்டிருந்தார்கள்.
கைகேயிக்கும் அவள் சுற்றத்தார்க்கும் வேலைக்காரி யாயும், தாய் தகப்பன்மார் இன்னாரெனத் தெரியாத வளாயும், சிறுபிராயம் முதல் கைகேயியுடன் இருப்பவ ளாயுமிருக்கும் மந்தரையென்பவள் வெண்மதியை யொத்த மாளிகையின் உபரிகையின்மேல் தற்செயலாக ஏறினாள். அயோத்திமாநகரத்திலுள்ள இராஜவீதி களெல்லாம் நன்றாக ஜலந்தெளிக்கப்பட்டு புஷ்பங் களால் அலங்கரிக்கப்பெற்று விளங்குவதை அவள் அங்கிருந்தபடி கண்டாள். தெருக்களெல்லாம் பதாகை களாலும் விலையுயர்ந்த கொடிகளாலும் விளங்கிக் கொண்டு நின்றன. எங்கே பார்த்தாலும் எல்லா ஜனங் களும் சந்தோஷப்பட்டுக் கொண்டிருந்தார்கள்.
இவ்வாறு விளங்கும் அயோத்திமாநகரைப் பார்த்து மந்தரை வெகுவியப்படைந்தாள். அதன்மேல் அவள் தனது சமீபத்தில் வெண்பட்டு உடுத்திக்கொண்டும் தன்னைப்போல் வெகு ஆச்சரியத்துடன் கண்களை விழித்த படியே பார்த்துக்கொண்டும் நின்ற மற்றொரு தாதியைப் பார்த்து, ‘இன்று ஜனங்கள் எல்லாரும் இவ்வளவு சந்தோஷப்பட்டுக் கொண்டிருக்கக் காரணம் என்னவோ?’ என்று கேட்டாள். அந்தத் தாதி இதைக்கேட்டு வெகு சந்தோஷத்துடன் இராமருக்கு நடக்கப்போகிற பட்டா பிஷேகத்தைப் பற்றி அக்கூனியிடம் “புஷ்ய நக்ஷத்திரத் தில் நமது அரசராகிய தசரதர் கோபத்தை வென்றிருக் கும் ராமருக்கு இளவரசுப் பட்டஞ் சூட்டப்போகின்றார் என்றாள்.
இவ்வாறு அவள் சொன்னதை கேட்டுக் கொடிய எண்ணமுடைய கூனி, படுத்துக்கொண்டிருந்த கைகேயி யினது முன்பாக நின்று, அவளைப் பார்த்து “புத்தியற்ற வரே, எழுந்திரும்; உமக்கு வரப்போகிற அபாயம் இன்னதென்று தெரியாமல் ஏன் இப்படிப் படுத்திருக்கி றீர். உம்முடைய அதிருஷ்டம் கோடைக் காலத்து வெள்ளம்போல் நிலையில்லாதது. தீர்த்தற்கரிய பெரிய நாசம் உங்களுக்கு வந்துவிட்டது. தசரதர் தமது புதல் வாராகிய இராமருக்கு இளவரசுப் பட்டஞ் சூட்டப் போகின்றார். அம்மா, உங்களையும் உங்கள் குமாரரையும், உங்களை அடுத்திருக்கும் என்னையும் காப்பாற்றவேண்டும் என்றாள். மந்தரை இவ்வாறு சொன்னதை கைகேயி கேட்டு அழகியதோர் ஆபரணத்தை அவளுக்குக் கொடுத்தாள். அதன் பின் னர், அம்மாதுசிரோமணி வெகுகளிப்புடன் மந்தரையைப் பார்த்து “மந்தரே, நீ இன்று சொன்ன சமாசாரம் கேட்க வெகு ஆனந்தமாக இருக்கிறது. எனக்கு இராமன் என்றும் பரதன் என்றும் வித்தியாசம் ஒருபொழுதுங் கிடையாது. ஆகையால், இராமனுக்குப் பட்டாபிஷே கம் ஆகப்போகிறது என்று வெகு சந்தோஷப்படுகிறேன்” என்றாள்.
மந்தரை. இவ்வாறு கைகேயி சொன்னதைக் கேட்டு, அதிக வெறுப்புக்கொண்டு, அவள் தனக்கு வெகுமதி யாகக் கொடுத்த அணியை வீசி எறிந்து, வெகு துக்கத்துடனும் கோபத்துடனும் அவளை நோக்கி, “நீங்கள் மடமையால் சமயமல்லாத சமயத்திற் சந்தோஷங் கொண்டிருக்கின்றீர்கள். உங்களை துக்கக் கடலின் நடுவில் இருப்பவர்களாக நீங்கள் அறிந்து கொள்ளவில்லை. கௌசல்யைக்குப் பாக்கியம் பிறந்துவிட்டது; நீங்கள் கைகளைக் கூப்பிக்கொண்டு அவள் முன்னர் அடிமைபோல் நிற்கப்போகின்றீர்கள். இப்பொழுது இராமர் பட்டத்துக்கு வரப்போகின்றார். அவருக்குப்பின் அவர் மகன். இராமர் பட்டத்துக்கு வந்துவிட்டாரானால் உங்கள் புத்திரர் பட்டத்துக்கு வருவதிலிருந்து விலக்கப்பட்டவராவார். இராமர் இராச்சியத்தைப் பெற்றுக்கொண்ட பிறகு பயமில்லாமல் தாம் அரசாளும் பொருட்டு பரதரை வேறு தேசத்துக்காவது அல்லது வேறு லோகத்துக்காவது நிச்சயமாக ஒட்டிவிடப்போகின்றார். ஆகையால் தேகயராஜன் வீட்டிலிருந்தபடியே உங்க ளுடைய குமாரராகிய பரதர் காட்டுக்கு ஓடிவிடுதல் நல்ல வழி: இதுதான் எனக்கு நல்லதாகத் தோன்றுகிறது: உங்களுக்கும் க்ஷேமம்’ என்று வற்புறுத்திக் கூறினாள்.
இவ்வாறு மந்தரை சொல்லக் கேட்டவுடன் கைகேயி, தனக்கு வந்த கோபத்தால் முகம் துடிதுடிக்க வெகு உஷ்ணமாக பெருமூச்சுவிட்டு, மந்தரையைப் பார்த்து, “இன்றைத்தினமே இராமனை இவ்விடத்திலிருந்து சீக்கிர மாகக் காட்டுக்கு நான் அனுப்பிவிடுகிறேன். எனது புத்திரனான பரதனுக்குக்கே இளவரசுப்பட்டம் இதோ சூட்டி வைக்கிறேன். எவ்வித உபாயத்தால் இவ்விரண் டையும் எளிதிற் செய்து முடிக்கலாம்? இராமன் ஒரு பொழுதும் இராச்சியத்தை அடையக் கூடாது; பரதனே அடையவேண்டும். ஆலோசித்துப்பார்’ என்றாள்.
இப்படிக் கைகேயி சொல்ல மந்தரையானவள், “முற் காலத்தில் தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் ஒரு யுத்தம் நடந்தபோது அதில் தேவேந்திரனுக்கு சகாயம் பண்ண உங்களுடைய நாயகராகிய தசரதர் ராஜரிஷிகளுடன் உங்களையும் அழைத்துக்கொண்டு சென்றார். திமித்துவச னுடன் பெரும்போர் புரிந்தார். அதில் அவர் விரணப் பட்டு மூர்ச்சை அடைந் திருக்கும்பொழுது அவரை நீங் கள் போர்க்களத்திலிருந்து எடுத்துப்போய் ரக்ஷித்தீர்கள். அவர், மூர்ச்சை தெளிந்தததும் கண்விழித்துப் பார்த்து, தம்மைக் காப்பாற்றினதற்காக சந்தோஷமடைந்து உங்களுக்கு இரண்டு வரங்கள் வேண்டிக் கொள்ள விடை கொடுத்தார். இப்பொழுது நீங்கள் ‘இராமர் பதினான்கு வருஷம் காட்டிற்குப்போய் வசிக்கவேண்டும்’ என்றும் ‘பரதருக்குப் பட்டாபிஷேகஞ் செய்து வைக்க வேண்டும் என்றும் இரண்டு வரங்கள் கேளுங்கள். அரசர் உங்களுக் காக பிராணனையும் விட்டுவிடுவார். அங்ஙனமாக அவர் உங்களுடைய சொல்லையா தட்டப்போகின்றார்? இராமர் பதினான்கு வருஷகாலம் வனத்தில் வசித்து திரும்பி வருவதற்குமுன்பே,பரதர் சினேகிதர்களுடன் வேரூன்றி யவராய் ஆட்சியை வகிப்பர்.” என்றாள்.
கைகேயி, வெகு சந்தோஷமும் ஆச்சரியமுமடைந்து, மந்தரையைப் பார்த்து, “கூனி, நீ இவ்வளவு சாமர்த்திய முள்ளவள் என்பது இதுவரையில் எனக்குத் தெரியாது. எனது காரியத்தில் நீ ஒருத்திதான் எப்பொழுதும் நன்மையையே தேடிக்கொண்டு இருக்கின்றாய்.நீ சொல் லாவிடின் இவ்விஷயம் என்னால் அறியமுடியாது. இராமன் காட்டிற்குப் போக பரதன் பட்டமடைந்த வுடன், நான் ஆணிப்பொன்னாற் செய்தமாலையால் உன்னை சூட்டுகின்றேன். மிகநல்ல அணிகளையுஞ் செய்து கொடுக் கின்றேன்.” என்றாள். இவ்வண்ணம் உற்சாகப்படுத்தப் பட்டவளாயும், சௌபாக்கியத்தாலுண்டான மதத்தாற் செருக்குக் கொண்டவளுமான கைகேயி மந்தரையுடன் தனது கோபகிருகத்தைச் சேர்ந்து வெறுந்தரையிற் படுத் துக்கொண்டு. மந்தரையைப்பார்த்து, “அடி கூனி, இராமனைக் காட்டிற்கு அனுப்பிப் பரதனுக்கு முடிசூட்டி வைத்தால் நான் பிழைப்பேன். இல்லாவிடின் நான் இங்கு எனது பிராணனை விட்டிடுவேன். இராமனுக்குப் பட்டா பிஷேகம் ஆய்விட்டதென்றால் என் பிராணனும் அப் பொழுதே முடியவேண்டியதுதான்’ என்று நீ அரசனிடம் சொல்லுவாய்” என்றாள்.
11. கைகேயி வரங்களை வேண்டுதல்
தசரத மன்னர், ஸ்ரீராமர் பட்டாபிஷேகத்துக்கு வேண்டுவனவற்றை விரைவிற் சித்தஞ்செய்யும்படி கட்டளையிட்டு, கைகயியினுடைய மாளிகைக்குள் இராகுவை கொண்ட ஆகாயத்திற் சந்திரன் நுழைவது போல் முதலிற் புகுந்து அங்கு அவளைக் காணாமல் வருத்த மடைந்து, ‘கைகேயி எங்கே’ என்று வினவ, வாயில் காப்பவள் தனது கரங்களைக் கூப்பிக்கொண்டு அச்சத் தோடு “சுவாமி, தங்களுடைய தேவியார் ஏதோ ஒரு காரணத்தால் வெகு கோபங்கொண்டு கோபவறைக்குட் புகுந்திருக்கின்றார் என்றாள். அதைக்கேட்டு அரசர், வெகு துன்பமுற்று, தனது வழக்கத்துக்கு விரோதமாய் தரையின் மீது வெகு துக்கப் பட்டவளாகப் படுத்துக் கொண்டிருக்குங் கைகேயியைக் கண்டார்.
பிறகு கலங்கின உள்ளத்துடன் அவளைத் தமது கை களால் தடவிக்கொடுத்து, அவளைப்பார்த்து, அவள் விசனப்படுங் காரணத்தை விசாரிக்கலாயினார்.”தேவி, நீ என் பேரில் யாது காரணத்தாற் கோபம் அடைந்திருக் கின்றாயோ, அது எனக்குத் தெரியவில்லை.உன்னை யாவர் நிந்தித்தார்கள்? அல்லது அவமானம் பண்ணினார்கள்? சமர்த்தர்களாயும் மனமுவந்தவர்களாயு மிருக்கும் அநேக வைத்தியர்கள் என்னிடத்தில் இருக்கின்றார்கள். உனக்கு ஏதாவது நோய் என்றால் உடனே சொல்லு; நான் உன் இஷ்டப்படி நடப்பவன். நீ சொல்லுவதற்குப் பிரதி கூலமாய் ஒருநாளும் நடக்க நான் பொறேன். என் பிரா ணனைக் கொடுத்தாவது உனது வேண்டுகோளை நான் முடித்து வைக்கின்றேன். இதைப்பற்றி எனது புண்ணி யத்தின்மேலும் சத்தியம் பண்ணுகின்றேன் ”என்றனர்.
மோகவலையிற் சிக்கி இவ்வாறு தன்னை விசாரித்து நின்ற அந்த உலக பாலகரைப் பார்த்து கைகேயி “சுவாமி, என் உள்ளத்தில் ஒரு எண்ணம் இருக்கின்றது. அதனை முடித்துக் கொடுக்க தங்களுக்குக் கருத்திருந் தால், தாங்கள் சத்தியம் பண்ணிக் கொடுங்கள்” என்று கேட்பதற்கே அச்சமுண்டாகும்படி கூறினாள். தசரதர், புன்னகைகொண்ட கைகேயின் தலையைத் தமது கைகளால் தூக்கி மடியில் வைத்துக்கொண்டு, புன்னகையுடன் அவளைப்பார்த்து, “கருவமடைந்தவளே, உன்னை யன்றி மடந்தையரிற் சிறந்தவர் எனக்கு இவ்வுலகத்தில் ஒருவருமில்லை. ‘புருஷசிங்கமாகிய அந்த இராமன் ஒரு வனைத் தவிர மனிதரில் உயர்ந்தவரொருவருமில்லை என்பது உனக்குத் தெரியாதா? பகைவரால் வெல்ல முடியாதவனாயும் முக்கியனாயும் மகாத்மாவாயும் உனக்கு உயிர்வாழ்வினுஞ் சிறந்தவனாயுமிருக்கும் இராமன் மேற் சத்தியம் பண்ணி உன் இஷ்டத்தை முடித்து வைக்கின்றேன். அதை நிறைவேற்றிவைப்பதாக நான் இதுவரையி லுஞ் செய்திருக்கும் புண்ணியங்களை.யெல்லாங் கொண்டு சபதம் பண்ணுகின்றேன் என்றார்.
இவ்வாறு தசரதர் சொன்ன சொல்லைக் கேட்டுக் களித்து, தனது காரியத்திலேயே கருத்துவைத்த கைகேயி சந்தோஷ மடைந்தவளாய், “முன்னொருகாலத்தில் தேவர் களுக்கும் அசுரர்களுக்கும் ஒரு யுத்தம் நடந்ததன்றோ ! அது தங்கள் ஞாபகத்தில் இருக்கின்றதா? அந்தப்போரில் தங்களுடைய உயிர் ஒன்றைத்தவிரத் தங்களுடைய பலம் முழுவதையும் அசுரர்கள் வாங்கிவிட்டார்கள். அக்காலத் தில் இரவும் பகலும் கண்ணிமையாமல் நான் தங்களைப் பாதுகாத்தேன். அந்த உபகாரத்திற்கு ஈடாக நான் வேண் டும் இரண்டு வரங்களைக் கொடுக்கின்றேன் என்று தாங் கள் எனக்கு அப்பொழுது வாக்குத்தத்தம் பண்ணினீர் கள். இப்பொழுது அவைகளை நான் அடைய விரும்புகின் றேன். முதலாவது, இராமனுடைய பட்டாபிஷேகத்திற் காக எவ்வெப் பொருள்கள் சித்தப்பட்டிருக்கின் றனவோ, அவைகளைக்கொண்டு பரதனுக்குப் பட்டாபிஷேகம் பண்ணிவைக்கவேண்டும். இரண்டாவது இராமன் பதி னான்கு வருஷம் தண்டகாரணியத்தில் மரவுரி மான்றோல் உடுத்து சடை யணிந்துகொண்டு முனிவன்போல் வாழ வேண்டும். இன்றைத்தினமே இராமன் காட்டிற்குப் போவதை நான் என்னுடைய கண்களாற் பார்க்க வேண்டும்.” என்றாள்.
தசரதர், இவ்வண்ணம் வெகு கொடுமையாக கைகேயி சொன்னதைக் கேட்டு, ஒன்றும் சொல்லத் தோன்றாமல் சிந்தாசாகரத்தில் முழுகி முகூர்த்தகாலம் பரிதபித்தார். பின்னர் நல்லறிவை அடைந்து, வெகு துக்கப்பட்டவராகி கைகேயியைத் தமது கண்ணால் எரித்துவிட எண்ணங் கொண்டவர் போன்று ஒரு பார்வை பார்த்து, வெகு கோபத்துடன் அவளை நோக்கிச் சொல்லலாயினார் :-“கொடுந்தன்மை யுடையவளே, கூடா வொழுக்கமுடையவளே, இந்தக் குலத்தை நாசம் பண்ண வந்தவளே, மகாபாவி, உனக்கு இராமன் என்ன தீங்குசெய்தான்? அல்லது நான்தான் என்ன செய்தேன்? இராமன் உன்னை தனது பெற்ற தாயைப் போல் எண்ணி நடந்து வருகின்றானே ! அவனையே கெடுக்கும் வண்ணம் நீ இவ்வாறு யத்தனிக்கின்றாயே! ஒருகால் கௌசல்யையை நீக்கிவிட்டாலும் விட்டுவிடுவேன்? அவ் வண்ணமே எனது சம்பத்தையும் சுமித்திரையையும் பிராணனையும் விடு என்றாலும் விட்டிடுவேன்; என் னிடத்தில் எப்பொழுதும் அன்பும் ஆதரவுங் காட்டிக் கொண்டு என்னையே அடைக்கலமாக அடைந்திருக்கும் இராமனை நான் உயிருடன் இருக்கும்போது எப்படி விடுவேன்? ஒருகால், சூரியனில்லாமல் உலகம் வாழும்; தண்ணீரில்லாமற் பயிர்கள்வளரும்; இராமன் இல்லாமல் எனது தேகத்தில் உயிர் ஒரு பொழுதும் தங்கமாட்டாது. ஆகையால் அடிபாவி, இந்தக் கெட்ட எண்ணத்தை விட்டிடு. கடல் சூழ்ந்த இந்நிலவுலகத்தில் எவ்வளவு பொருள் கிடைக்கின்றதோ அஃதெல்லாவற்றையும் நான் உனக்கு இதோ கொடுக்கின்றேன்; இராமன் விஷயமான கோபத்தைவிட்டிடு. உன்னைக் குறித்து எனது கைகளைக் கூப்புகின்றேன். உன்னுடைய பாதங்களில் விழுகின் றேன். நீதான் இராமனுக்குப் புகலிடம். என்னைவீணாகப் என்று பலவாறு பாவத்திற்கு உள்ளாக்காதே வேண்டினார்.
இவ்வாறு துக்கத்தால் மிகவும் பரிதபித்துக்கொண் டும். கதறிக்கொண்டும், அறிவே இல்லாமற் புரண்டு கொண்டு மிருக்குந் தசரதரைப் பார்த்து கைகேயியான வள், அதிக கோபமடைந்தவளாய், அரசே, முதலில் ஒரு வரத்தைக் கொடுத்துவிட்டு அதன்பின் ‘ ஐயோ! கொடுத்துவிட்டேனே !” என்று நீர் மனம் வருந்தினால் இனி உம்மை ‘உண்மையுள்ளவர்’ என்று உலகத்தில் எங்ஙனம் சொல்லிக்கொள்ளுவீர்? தருமத்தை அறிந்த அரசரே, உம்மைப் போன்ற மகாராஜர்கள் உம்மைச் சூழ்ந்து நின்று இந்த விஷயத்தைப்பற்றி உம்மை விசாரிக் கத் தொடங்கினால் அவர்கள் முன்பாக நீர் எவ்வாறு விடை சொல்வீர்? நான் கேட்டுக்கொண்டது நியாயமோ. அநியாயமோ, நன்றாக இருக்கின்றதோ. இல்லையோ, நீர் சொன்ன சொல்லை மட்டும் தவறக்கூடாது. நீர் மாத் திரம் இராமனுக்கு பட்டங் கட்டிவைத்தால் உமது கண் முன்பாகவே விஷத்தைக் குடித்து உமது காலில் விழுந்து எனது உயிரை மாய்த்துவிடுவேன் என்று சொல்லி ஓய்ந்தாள்.
அரசர் அதிகமாகப் பேசுதற்கு சக்தியற்றவராய் மெதுவாகக் கைகேயியைப் பார்த்து, இப்பொழுது, பரதன் அரசாள வேண்டுமென்றும், இராமன் காட்டிற் குப் போகவேண்டு மென்றும் வரங்கேட்கும்படியாக உனக்கு என்ன பயம் வந்தது? உனது நாயகனுடைய நன்மையையும், உலகத்தினது க்ஷேமத்தையும், பரதனு டைய நல்வாழ்வையும், நீ விரும்பி யிருப்பாயாயின் இந்தக் கெட்ட எண்ணத்தை விட்டுவிடு. நீக்கித் தான் அரசனாவதற்கு ஒரு பொழுதும் விரும்பான்; பரதன் இராமனை ஏனெனில், பரதன், இராமனிலும் அதிக தரும சிந்தை யுள்ளவன். உன்னுடைய கெட்ட எண்ணத்திற்கு நான் உடன்படமாட்டேன்.” என்று கூறி தசரதர் அவளுடைய காலின் கீழ் நோயாளி போல விழுந்தார்.
12. தசரதர் இராமரைக் காட்டிற்கு அனுப்ப சம்மதித்தல்
இக்ஷ்வாகு வம்சத்து மன்னரான தசரதர் இவ்வண் ணம் சோகத்தால் தவித்துக்கொண்டு மயக்கமடைந்து பூமியிற் புரண்டுகொண்டிருக்கும்பொழுது, அந்தப் பாவி கைகேயி பின்னரும் அவரை நோக்கி “பெரியவர்கள் சத் தியம் என்பதை உத்தமமான தருமம் என்று சொல்லு என்பது எல்லோராலும் அடை யத்தக்க பரம்பொரு ளன்றோ! சத்தியத்தில்தான் தருமம் வேதம். சத்தியத்தாலேதான் நற்பயன் கைகூடுவதும்; தங்கி நிற்கின்றது. சத்தியந்தான் ஒருநாளும் அழியாத ஆகையால் உமக்குத் தருமவழியில் ஒழுக மனமிருந்தால் சத்தியத்திற்கு கட்டுண்டு நடக்கவேண்டும். நான் கேட்ட வரத்தை எனக்குக் கொடுத்து விட்டீர்: இனி அதை நிறைவேற்றிவைப்பீர். என்னுடைய ஏவுதலால் அந்தத் தருமத்தைச் சரியாய் நடத்துவதனிமித்தம் உமது புத்திரனான இராமனைக் காட்டிற்கு அனுப்பும்! அனுப்பும்!! அனுப்பும்!!! மூன்றுதரஞ் சொல்லிவிட்டேன். பெரியீர், நீர் சொன்னவண்ணம் இராமனை இன்று காட் டிற்கு அனுப்பாவிடில், உபேக்ஷித்த உமது காலின்கீழ் எனது உயிரை விடுகின்றேன் என்றாள்.- அரசர் இங்ஙனம் கைகேயி சொல்லச் சொல்ல, கசையால் தூண் டப்பட்ட உயர்ந்த குதிரைபோல் வருந்தி, அவளை நோக்கி, “தருமமாகிய கயிற்றாற் கட்டுண்டேன். எனது அறிவும் போய்விட்டது. வெகுதருமசீலனாயும் எனது அன்பிற்குப் பாத்திரனாயுமிருக்கும் இராமனைப் பார்க்க விரும்புகின்றேன்” என்றார்.
இங்கு இவ்வண்ணமிருக்க, இரவுங் கழிந்து சூரிய னும் உதயமானவுடன் சுமந்திரர் வழக்கம்போல் அரசரை நாடிச்சென்று அவரிருப்பிடஞ்சேர்ந்து, அஞ்சலி பந்தஞ் செய்துகொண்டு ‘இரவோ கழிந்தது; இனி எழுந்திருந்து செய்யவேண்டிய காரியங்களைச் செய்யுங்கள்.” என்று தோத்திரம் செய்தார். சுமந்திரர் இவ்விதமாகச் சொன்ன பொருள்பொருந்திய நயச்சொல்லைக் கேட்டவுடன். தசரதருடைய துக்கம்மீட்டும் புதிதாகப் பொங்கிற்று.அவர் சோகத்தால் ஒரு வார்த்தை சொல்லுவதற்கும் சக்தியே இல்லாமலிருந்தார். மன்னவர் அவ்வாறிருக்கையில், ஆலோ சனையில் சமர்த்தையான கைகேயி சுமந்திரரைப்பார்த்து “சுமந்திரரே, நீர் சென்று புகழ்பெற்ற அந்த இராமனை இங்கு அழைத்துவாரும். உமக்கு மங்களம் உண்டாகுக; ஒன்றும் ஆலோசிக்க வேண்டாம்” என்றாள்.
சிறிது. நேரம் கழித்து மன்னவரும் இவ்வாறு சொன்ன வுடனே, சுமந்திரர் தலையால் வணங்கி, பெரிய நன்மை வந்துவிட்டதென்று நினைத்தவராகி அவ்விடம் விட்டுப் புறப்பட்டு, ஜனங்கள் நிறைந்து நிற்கும் அந்தப்புரத்து வாயிலைக் கடந்து நல்ல விரிப்புப் பரப்பப்பட்டிருந்த பொற்கட்டிலில் இராமர் நல்ல ஆடையாபரணங்கள் அணிந்துகொண்டு. குபேரன்போல் வீற்றிருக்கக் கண் டார். இராமர் சித்திராதேவியுடன் கூடியிருக்குஞ் சந் திரன்போல் விளங்கினார். வணக்கத்தையுடைய சுமந்தி ரர், இராமரைக் கண்டு வணங்கி அஞ்சலி பந்தஞ் செய்து கொண்டு இராமரைப் பார்த்து க்ஷேமத்தை வினவி, “ராம், கௌசலை உம்மைப் பெற்றதால் வெகு பாக்கிய சாலி. உம்மை உம்முடைய தகப்பனார் கைகேயியுடன் பார்க்க விரும்புகின்றார். விரைவாக அவ்விடம் வரவேண் டும்’ என்றார். இதைக் கேட்டவுடன், புருஷசிரேஷ்ட ராயும் மிக்க காந்தியை யுடையவராயு மிருக்கும் இராமர், சுமந்திரரைக் கொண்டாடி, தமது தந்தையாரின் கட்ட ளைப்படி நடப்பதற்கு விரைந்து, தமது மனைவியைப் பார்த்து, “சீதே, சந்தேகமில்லை; என்னுடைய பிதாவும் மாதாவும் எனது பட்டாபிஷேக விஷயமாக ஏதோ ஆலோ சனை செய்துக்கொண்டிருக்கின்றார்கள். கண்ணழகுடை யவளே, எனக்கு நன்மை செய்ய விரும்பினவராயும், மிகச் சமர்த்தையாயும், நான் பொருளைப் பெறுவதில் விருப்பை யுடையவராயும், எனது மாதாவாயுமிருக்கும் கைகேயி, தமது கணவருடைய அபிப்பிராயத்தை நன்றாக அறிந்து கொண்டு சந்தோஷமடைந்து, எனது அபிஷேகத்தை சீக்கிரமாக நடத்திவைக்க அரசரைத் தூண்டிக்கொண்டிருக்கின்றார்.” என்றார்.
பின்பு சீதைக்கு செல்ல விடைகொடுத்து விட்டு சுமந்திரருடன் அம்மாளிகையை விட்டுப் புறப்பட்டார். லக்ஷ்மணர் இரதத்தின் பின் புறத்தில் ஏறிக் கையில் வெண்குடை சாமரம் இவைகளைப் பிடித்துக்கொண்டு தமது தமையனாரை வெயில் முதலியவற்றினின்று காப் பாற்றினார். இராமர் ஆங்காங்கு தம்மைக்குறித்து நண் பர்கள் கூறுகின்ற ஆசிகளைப் பெற்றுக்கொண்டு சென் றார். பின்பு தந்தையா ரிருக்கும் அந்தப்புரத்திற்குள் போனார்.
விலையுயர்ந்த ஒரு ஆசனத்தில் கைகேயியுடன் இருந்த தமது தந்தையாரது முகம் வெகு பரிதாபகரமான நிலை மையில் இருப்பதை இராமர் கண்டார். அவர் தமது தந்தையாரது சரணாரவிந்தங்களில் வெகு வணக்கத்துடன் முதலில் நமஸ்காரம் பண்ணி அதன் பிறகு கைகேயியின் பாதங்களில் வந்தனஞ்செய்தார். இவரைக் கண்டவுடன் எளிய தசரதர், “ஏ ராம!’ என்று சொல்லி. நீர் நிரம்பிய கண்களையுடையவராய் இவரைப் பார்த்தற்கும் பேசுதற் கும் வல்லவராகவில்லை. ஒரு நாளிலும் அவ்வாறு இராத தமது தந்தையார் அன்று அவ்வாறு இருந்ததையும், மனத்தில் பயத்தை உண்டாக்கும் அவருடைய உருவத்தை யுங் கண்டு இராமர் காலினால் ஒரு சர்ப்பத்தை மிதித்த வர்போல் நடுங்கிவிட்டார். பின்பு கைகேயியைப்பார்த்து, “அறியாமையாலேனும் நான் எனது தந்தைக்குக் குற்றம் பண்ணின தில்லையே! ஏன் என் தந்தை கோபித்துக் கொண்டிருக்கிறார்? அதைச் சொல்லும். அவரை சமா தானப்படுத்தும்.என் தந்தையாரின் மனத்திற்கு மகிழ்ச் சியை உண்டாக்காமலும், அவருடைய சொற்படி நடவா மலும், அவர் என்மேற் கோபிக்கவும் நான் ஒரு இமைப் பொழுதும் பிழைத்திருக்கமாட்டேன் என்றார். மகாத்துமா வாகிய இராமர் இவ்வண்ணங் கேட்க, கைகேயி சற்றே னும் வெட்கமில்லாமல் தனக்கு நன்மையைத் தரும் மொழியை கம்பீரமாகச் சொல்லத் தொடங்கினாள். “ராம, அரசருக்கு ஒருவித கோபமும் இல்லை. அவருக்குத் துக்கமும் இல்லை. ஆனால் அவருடைய மனத்தில் ஒன் றிருக்கின்றது. அதை உனக்குப் பயந்து வெளியிடாதிருக் கின்றார். அரசர் உன்னைப் பார்த்துச் சொல்லப்போகின் றது, உனக்கு நன்மையைத் தருவதோ தீமையைத் தரு வதோ, எப்படி யிருந்தாலும், அவர் சொல்லை வீணாக்கா மல் அவசியும் செய்வேனென்று நீ ஒப்புக்கொள்ளுவாயா கில், நானே அதைச் சொல்லுகின்றேன்” என்றாள். இவ் வாறு இவள் சொன்னதைக் கேட்டு, இராமர், மிகவும் மனம் நொந்து, தமது தந்தையாருடைய எதிரில் அவளைப் பார்த்து, ‘சீ!சீ!! என்னைப் பார்த்து இவ்வாறு நீர் சொல் லக் கூடாது. என்னை ‘நெருப்பில் குதி’ என்றாலும் உடனே குதிப்பேன். ‘விஷத்தைக் குடி’ என்றாலும் குடிப் பேன். ‘சமுத்திரத்தில் முழுகு’ என்றாலும் முழுகிவிடுவேன். ஆகையால், அம்மா, தந்தையாருடைய கருத்தைச் சொல்லும்; அவசியம் நான் செய்து முடிக்கிறேன். பிரதிஜ்ஞை செய்கின்றேன். இதுவரையிலும் இராமன் இரு வகையாகச் சொன்னதேயில்லை” என்றார். நேர்மை யுடை யவரும் சத்தியத்தைக் கூறுகின்றவருமான இராமரைப் பார்த்து. மகாபாவியாகிய கைகேயி, தனது எண்ணத்தை வெளியிடுபவளாய், “முன்னொரு காலத்தில் தேவர்களுக் கும் அசுரர்களுக்கும் உண்டான சண்டையில் பாணத் தாற் புண்பட்ட உனது தந்தையாரை நான் காப்பாற் றினபடியால், அவர் எனக்கு இரண்டு வரங்கொடுத்தார். அவைகளில் ஒன்றால் ‘பரதனுக்குப் பட்டாபிஷேகஞ் செய்துவைக்கவேண்டும்’ என்றும் இரண்டாவதால் ‘இன் றைத்தினமே இராமன் தண்டகாரணியத்திற்கு போக வேண்டும்’ என்றும் கேட்டுக்கொண்டேன். நீ உன்னை யும் உனது தந்தையையும் உண்மையில் நடப்பவர்களாக செய்யவேண்டுமென்று எண்ணினாயாகில் பதினான்கு வருஷகாலம் நீ தண்டகாரணியத்தில் வாழ்ந்து வரக்கட வாய். உனது தந்தையாரின் சொற்படி நடந்து, அவரை யும் சத்தியத்தின் கரையை அடைந்தவராகச் செய்து வைப்பாயாக” என்றனள்.
இவ்விதமாக மரணத்துக்கொப்பான கடுஞ் சொற் களை கைகேயி சொல்லக் கேட்டு, பகைவெல்லும் வலி படைத்த இராமர்,சற்றும் வருத்தமடையாது அவளைப் பார்த்து, இது ஒன்றுதான் என் மனத்தை மிகவும் வருத்துகின்றது; என்னிடத்தில் நேராக என் தந்தையார் பரதனுக்குப் பட்டாபிஷேகஞ் செய்துவைக்கவேண்டும். என்று ஏன் சொல்லக்கூடாது? நானே சீதையையும் இராச்சியத்தையும் உயிரையும் பொருளையும் ஒருவருடைய ஏவலுமில்லாமல் மனமுவந்து எனது சகோதரர்களுக்குக் கொடுத்துவிடுவேன். உமது வாக்கைக் காக்கும்படி உம் முடைய வேண்டுகோளை நிறைவேற்றிவைக்கும்பொருட்டு அரசர் என்னை ஏவினால் பரதனுக்கு நான் கொடுப்பதைப் பற்றிக் கேட்கவேண்டுமோ? ஆகையால் நீர் இனி அர சரைத் தேற்றிவைப்பீராக. எதற்காக அவர் தலை குனிந்து தரையில் தாரையாகக் கண்ணீர் வடிக்கவேண் டும்? இக்கணமே நான் இங்கிருந்து தண்டகாரணியத்தில் எனது தந்தையார் ஆஜ்ஞைப்படி பதினான்கு வருஷகாலம் வசிக்கச் செல்கின்றேன்” என்றார்.
இவ்வாறு இராமர் சொன்னதைக் கேட்டுத் தசரதர் சிறிதும் பொறுக்கக்கூடாத துக்கத்தினால் வாய்விட்டுப் பேச நா வெழாமல் உரத்த சத்தத்துடன் அழுதார். இரா மர் தசரதரையும் கைகேயியையும் வலம்வந்து நமஸ்காரஞ் செய்து’ இச்சங்கதியை தமது தாயாருக்குத் தெரியப் படுத்த அவள் மாளிகைக்கு சென்றார். நான்கு பக்கத் திலுமிருந்த செல்வவான்களான ஜனங்களுள் ஒருவராவது சத்தியவாதியாயும் காந்தியுடையவராயு மிருக்கும் இராம ரது முகத்தில் ஒருவிதமான விகாரத்தையும் அறியவில்லை.
கௌசலை தனது புத்திரனுடைய நன்மையை நாடி ஸ்ரீமந்நாராயண மூர்த்திக்குப் பூஜை பண்ணிக்கொண் டிருந்தாள். இராமர் தாயாரைப்பார்த்து தமது கைகளைக் குவித்துக்கொண்டு “அம்மா, இப்பொழுது ஒரு பயம் வந் திருக்கிறது இப்பயம் உமக்கும் சீதைக்கும் லக்ஷ்மண னுக்கும் அதிகமாக துக்கத்தைத் தரும். மகாராஜர் பரதனுக்கு இளவரசு பட்டத்தைக் கொடுத்து என்னை தண்டகாரணியத்தில் ரிஷிபோல் வசித்திருக்கக் கட்டளை யிட்டார். ஆகையால் நான் ஜனங்களில்லாத காட்டில் ஆறெட்டு வருஷம் வசிக்கப்போகின்றேன்” என்றார்.
அவள், அதைக் கேட்டவுடன், காட்டில் கோடரியால் வெட்டப்பட்ட ஆச்சாமரத்துக் கிளைபோலவும், ஆகாயத்தி னின்று தவறி வீழ்ந்த தேவதைபோலவும் பூமியில் திடீர் என்று விழுந்தாள். பின்பு சௌக்கியத்தையே அனுபவிக் கத் தக்கவளாயும் துக்கத்தால் மெலியவளாயு மிருக்கும். கௌசலை, இராமரைப் பார்த்து, லக்ஷ்மணரும் கேட்கும் வண்ணம் சொல்லலுற்றாள். “என் மைந்த,.ராகவ, நீ எனக்குத் துக்கம் விளையும்படி பிறவாமலே இருந்தால், பிள்ளைபெறாத நான், பிள்ளையின்மையால் உண்டாகுந் துக்கத்தைவிட வேறு துக்கத்தைக் காணாமல் இருக்கலாம். பிள்ளாய், புத்திரப் பேறு அற்றவளுக்கு ஒரே துக்கம். அதென்ன வென்றால், ‘புத்திரனில்லை’ என்பதுதான். அதைப்பார்க்கிலும் வேறு ஒரு துக்கமும் அவளுக்கு இல்லை. கணவருடைய அநுகூலத்தினால் உண்டாகுஞ் சிறப்பை யும் சௌக்கியத்தையும் முன்னர் ஒரு பொழுதும் நான் கண்டதேயில்லை. இராமனாலாவது சுகத்தைக் காணலா மென்று நினைத்திருந்தேன். உனக்கு உபநயநஞ் செய்த பின்னர் இந்தப் பதினேழு வருஷங்களாக “எப்பொழுது என்னுடைய துக்கம் போகப்போகின்றது? எப்பொழுது உன்னுடைய பட்டாபிஷேகத்தை நான் காணப் போகின் றேன்” என்று காத்திருந்தேன். இந்தத் தீராத்துக்கத்தை ஒரு கணமேனும் பொறுக்க முடியாது. நீ இன்றி இனி நான் பிழைத்திருப்பது வீண்” என இவ்வண்ணம் பலவா. றாகக் கௌசலை புலம்பினாள்.
இராமர் மறுபடியும் கௌசல்யையைப் பார்த்துத் “அம்மா, காட்டுற்குப்போக எனக்கு விடைகொடுத்து அனுப்புவீர். எனக்கு ஸ்வஸ்த்யயனம் பண்ணும். நான் காட்டுக்குச்சென்று அங்கு என் தந்தை சொற்படி வாசம் பண்ணி, அவர் வாக்கை உண்மையாகச் செய்துவிட்டு, இந்நகரத்திற்குத் திரும்பி வருவேன்” என்றார்.
13. இராமர் விடை எடுத்துக்கொள்ளல்
கௌசல்யை, இராமர் தமது தந்தையின் கட்டளையை நிறைவேற்றுவதற்கு நிச்சயித்திருப்பதைக் கண்டு கண் களில் நீர் ததும்ப அவரைப் பார்த்து, “பனிக்காலம் நீங் கினபின்பு காட்டுத்தீ புதரை எரிப்பதுபோல், உன்னை விட்டுப் பிரிந்த பிறகு எனக்கு உண்டாகும் பொறுக்க முடியாத பெரிய துக்காக்கினியானது என்னை மெலியச் செய்து கொளுத்தும். ஆகையால் கன்றினைத் தொடர்ந்து பசு போவதுபோல். நானும் உன்னைத் தொடர்ந்து வரு வேன்’ என்று கூறினாள். புருஷ சிரேஷ்டரான இராமர் இவ்வண்ணம் வெகு துக்கத்துடன் சொல்லும் தம் தாயா ரைப்பார்த்து, “மனைவி தனது கணவனை விட்டுவிடுவது வெகு கொடிய பாதகமன்றோ! எல்லாராலும் மிகவும் பழிக்கப்பட்ட இப்பாதகத்தை நீர் மனத்திலும் எண்ணக் கூடாது. எனது தந்தை எதுவரையில் இவ்வுலகத்தில் உயிருடனிருக்கிறாரோ, அதுவரையில் நீர் அவரிடம் பணி விடை செய்துகொண்டு இருக்கவேண்டும். இதுதான் தருமங்களுள் உத்தமமான தருமம்”. உயிருடன் இருக்கிறவரையில் மனைவிக்கு அவள் கணவன்தான் தெய் வம்; அவன் தான் பிரபு. நான், ஆரண்ணியத்துக்குப் போன பிறகு என்னை விட்டுப் பிரிந்த துக்கத்தால் அரசர் மெலிந்துவிடாதபடி ஜாக்கிரதையாய் காப்பாற்றி வாரும்” என்றார்.கௌசலை, கண்களில் நீர் தாரைதாரை யாகப் பெருக, இராமரைப் பார்த்து, “என் வீரசிங்கமே, நீ காட்டுக்குப்போய், க்ஷேமமாகத் திரும்பிவந்து மிக அழகிய நல்ல உன் வாக்குகளால் என் மனத்தைக் களிக் கச்செய்வாய்” என்றாள்.
பின்பு இராமர் கௌசலையால் ஸ்வஸ்தியயனஞ் செய் யப்பட்டவராய் தமது மாளிகைக்குட் புகுந்தார். சீதை, துக்கத்தால் மெலிவடைந்தவரும் சிந்தையாற் கலங்கிய இந்திரியங்களை யுடையவருமான கணவரைப் பார்த்து, தனது ஆசனத்தினின்று எழுந்து நடுநடுங்கி நின்றாள். அவளைக் கண்டவுடன் இராமர் மனதிலிருந்த துக்கத்தைப் பொறுக்க முடியாதவரானார் ; அதனால் அத்துயரம் வெளிப்பட்டது; இதைக்கண்ட சீதை அபிஷேகஞ் சித்தமா யிருப்பதா லுண்டாகவேண்டிய அபூர்வமான முகத்தின் நிறமும், மகிழ்ச்சியும் காணப்படவில்லையே!! இதென்ன?” என்று வினவிப் புலம்ப, இராமர், அவளைப் பார்த்து, “சீதை, எனது தந்தையார் என்னைக் காட்டுக்கு அனுப்புகிறார்.கேள், சத்தியசந்தரும் எனது தந்தையு மான தசரத சக்கரவர்த்தியார், முன்னொரு காலத்தில், எனது தாயாரான கைகேயிக்கு இரண்டு வரங்களைக் கொடுத்திருந்தார். எனக்குப் பட்டாபிஷேகம் பண்ணி வைக்க அரசர் சித்தராகவிருந்த இப்பொழுது, அவ்வரங் களைக் கைகேயியம்மா கேட்க, என் தந்தையார், தருமத் தால் வெல்லப்பட்டார். அதனால், நான் மூதினான்கு வருஷகாலம் தண்டகவனத்தில் வசிக்கவேண்டும்.எனது தந்தையார் : பரதனுக்கு இளவரசுப்பட்டங் கட்டப் போகிறார். நான் உன்னைப்பார்த்துவிட்டு காட்டுக்குப் போக் வந்தேன். நீ உன் மனத்தைத் தைரியம் பண் ணிக்கொண்டு. இவ்விடத்தில் வசித்திரு. நான் புறப்பட்டு எனது தந்தை சொல்லைக் காப்பாற்ற இப்பொழுதே காட்டுக்குப் போகிறேன்” என்றார்.
சீதை இதைக்கேட்டு சொல்லலானாள்: “எனது நாதரே, தந்தை, தாய், சகோதரன், புத்திரன், மருமகள் ஆகிய இவர்களெல்லாரும் தங்கள் தங்கள் புண்ணிய பாவங்களின் பயனைத் தாங்களே தனிமையில் அநுபவிக் கிறார்கள். புருஷசிரேஷ்டரே. மனைவி ஒருத்திதான் தனது கணவன் செய்த புண்ணிய பாவங்களின் பயனைப் பகுத்துக்கொண்டு அநுபவிக்கிறாள். ஆகையால், ‘காட்டில் வசிக்கவேண்டும்’ என்று உங்களுக்குக் கொடுக் கப்பட்ட கட்டளை எனக் கு ங் கொடுக்கப்பட்டது தான். ஆகையால் மனிதர்களால் கிட்டுதற்கரிய காட் டுக்குத் தாங்கள் இப்பொழுது புறப்பட்டால், நான் புற்களையும் முட்களையும் மிதித்துக்கொண்டு தங்களுக்கு முன் நடந்து போவேன். தினந்தோறும் தங்களுடன் கூடிக்கலந்து விளையாடி தங்களுக்குச் சந்தோஷத்தை யுண்டாக்கப்போகிறேன். இவ்வாறு பதினாயிரம் வருஷங் கழித்தாலும் அதை நான் அறியேன். இவ்வாறிருப்பதை விட்டுச் சுவர்க்கத்தில் வசிப்பது எனக்கு இஷ்டமன்று என்றாள்.
இராமர், காட்டிலிருக்குங் கஷ்டங்களை நினைத்து, சீதையைத் தம்முடன் அழைத்துப்போகத், துணியாமல், கண்ணீருடன் நிற்கும் அவளுக்கு நல்லவார்த்தை சொல்லி அவளைக் காட்டுக்குப்போவதிலிருந்து திருப்பும்பொருட்டு அவளைப் பார்த்து, சீதே, காட்டில் வெகு சங்கடங்க பார்த்து,சீதே, ளிருக்கின்றன. அவைகளை நான் சொல்லுகிறேன், கேள். காட்டில் சுகலேசமுங் கிடையாது; துக்கந்தான் உள்ளது. குகைகளில் வசிக்குஞ் சிங்கங்களின் கர்ச்சனை கள், மலையருவிகளின் ஒலியால் வளரப்பெற்று, கர்ண கடோரமாய்க் கேட்கும்: ஆகையால், காட்டில் துன்பம் வெகு அதிகம். நிர்மாநுஷமான காடுகளில் அச்சமில்லா மல் மதித்து விளையாடிக்கொண்டு திரியும் அநேக மிருகங் கள் மனிதர்களைக் கண்டால் துரத்திக்கொண்டு வரும்; ஆகையால், காட்டில் துன்பம் வெகு அதிகம். காடுகளில் முதலைகளுடன் கூடியனவும் சேற்றினையுடையனவும் மதயானைகளாலுந் தாண்டமுடியாதனவுமான நதிகள் இருக்கின்றன; ஆகையால்,காட்டில் துன்பம் வெகு அதிகம். நடக்கிற இடங்களெல்லாம் கொடிகளாலும் முட்களாலும் அடர்ந்திருக்கும் : எங்குப் பார்த்தாலும் காட்டுக்கோழிகள் பயங்கரமாகக் கூவிக்கொண்டிருக்கும்; சில இடங்களில் குடிக்கச் சிலம் அகப்படாது; சில இடங் களில் வழியேயிராது; ஆகையால் காட்டில் துன்பம் வெகு அதிகம். பகலெல்லாம் அலைந்து களைத்து, மரங் களிலிருந்து தானாக உதிரும் சருகுகளையுடைய தரையிற் படுத்து உறங்கவேண்டும்; ஆகையால் காட்டில் துன்பம் வெகு அதிகம். இரவும் பகலும் மரத்திலிருந்தே விழுங் கனிகளைப் புசித்து ஐம்புலனை யடக்கி வேறொன்றை நினைக்கும் ஆசையற்று இருக்கவேண்டும்; சலபங்களும், தேள்களும், புழுக்களும், காட்டீக்களும், கொசுக்களும் வருத்தும் ; ஆகையால், வனம் முழுமையும் துன்பமே. ஆகையால், நீ வனத்துக்கு வரவேண்டாம். உனக்கு வன வாசம் ஒவ்வாது. நான் நன்றாக ஆலோசித்துச் சொல்லு கிறேன்: வனத்தில் வெகுவித பயங்களிருக்கின் றன” என்றார்.
இவ்வாறு இராமர் சொல்லியதைக் கேட்டுச் சீதை. துக்கமடைந்து கண்களில் நீர்பெருகத் தனது கணவரைப் பார்த்து, “தாங்கள் எடுத்துக்கூறிய வனவாச துக்கங் களெல்லாம் தங்களிடத்தில் அன்பு வைத்திருக்கும் என்னால் பார்க்கப்பட்டவைகளாய், இன்பங்களாகவே தோன்றுமென அறியக்கடவீர்கள். பெரியவர்கள் கட் டளைப்படி நான் தங்களுடன் புறப்படத்தான் வேண்டும். தங்களை விட்டுப் பிரிந்தால் என் பிராணன் போய்விடும். தங்கள் சமீபத்தில் நான் இருந்தால், என்னைத் தேவர் களுக்கெல்லாந் தலைவனான இந்திரபகவானாலும் தனது தேஜஸால் ஒன்றுஞ் செய்யமுடியாது. ‘கணவனை விட்டுப் பிரிந்த ஸ்திரீ பிழைத்திருக்கமாட்டாள்’ என்று அநேக தரம் தாங்கள் எனக்கு உபதேசித்திருக்கிறீர்கள். தவம் புரிதலும் காட்டில் வசித்தலும் சுவர்க்கத்திலிருத்தலும் எனக்கு தங்களுடன் தான் வேண்டும். தங்களை நான் அநுசரித்து நடந்தால் எனக்குச் சிறிதேனும் வருத்தமுண் டாகாது.இலையோ, கனியோ, கிழங்கோ, அதிகமோ. குறைவோ எப்படியிருந்தாலும், தாங்கள் கைகளால் எடுத்துவந்து கொடுப்பதே எனக்கு அமிருதரஸமாகும். தாய், தகப்பன், வீடு இவைகளொன்றையும் நினையேன். நான் கஷ்டப்பட்டு போற்றத்தக்கவளாக இருக்க மாட்டேன். வனத்திற்கு உடன்வர அஞ்சாது நிற்கும் என்னை தாங்கள் அழைத்துக்கொண்டு போகாவிடில் இன்றைய தினமே விஷத்தை நான் குடித்துவிடுவேன்.” என்றாள்.
சீதை இவ்வாறு சோகத்தால் பரிதபித்துக்கொண்டு, பலவாறு எளிமையாகப் புலம்பி, தனது கணவரைத் தழு விக்கொண்டு, ஆயாசத்தை யடைந்தவளாய் ஸ்வரத் தோடு கதறத் தொடங்கினாள். சீதையை இரகு நாதர் தமது கைகளால் தழுவிக்கொண்டு தேறுதலடையப் பின் வருமாறு மொழியலானார் “உனக்கு துயரம் விளை வதாயிருப்பின் நான் ஸ்வர்க்கத்தையும் விரும்பேன். சுயம் புவான கடவுளுக்கு எவ்வாறு ஒருவரிடத்திலிருந்தும் அச்ச மில்லையோ அவ்வாறே எனக்கும் அச்சமில்லை. நீ என் னைப் பின்தொடர்ந்து காட்டிற்கு வந்து என்னுடன் தரு மங்களைச் செய்வாய். நீ என்னுடன் காட்டுக்கு வருவ தாக நிச்சயஞ்செய்தது எனது குலத்துக்கும் உனது குலத் துக்கும் ஒத்ததாயிருக்கிறது. நாயகியே, நீ கணவனை அநுசரித்து நடக்குங் கருத்தை மிகக் கொண்டிருக்கின்றாய்; வனவாசஞ் செய்தற்கு சாதனமான காரியங்களைத் தொடங்குவாய். சீதே, உன்னுடனன்றி சுவர்க்கலோகத் திலிருக்கவும் எனக்கு ஆசையில்லை” என்றனர்.
முன்னமே அவ்விடம் வந்து காத்திருந்த லக்ஷ்மணர் இவ்வண்ணம் இராமருக்கும் சீதைக்கும் நடந்த சம் பாஷணையைக் கேட்டு தமக்குவந்த துக்கத்தை சகிக்க முடியாதவராய், கண்களில் நீர் ததும்ப,மிக்க விரதத்தையுடைய தமையனாரது கால்களை உறுதியாகப் பிடித்துக்கொண்டு அவரையும் சீதையையும் நோக்கி பின்வருமாறு சொல்லலானார்:-” மான்களாலும் யானை களாலும் நிரம்பிய காட்டுக்குப் போகவேணுமென்று தாங்கள் நிச்சயித்துவிட்டால். நானும் என்கையில் விற்பிடித்து தங்களுக்கு முன்பாகவும் பின்பாகவும் நடந்துகொண்டு காட்டுக்குத் தங்களுடன் வருவேன். நான் தங்களைவிட்டுத் தேவலோகத்தை யடைவதையும் சாவில்லாத வாழ்வையும் விரும்பேன்; எல்லா வுலகங் களுக்கும் அரசனாய் ஆள்வதிலும் எனக்கு விருப்பமில்லை. நான் கையில் பாணத்தோடு கூடின விற்பிடித்து, மண் வெட்டியையும் சிறு கூடையையும் எடுத்துக்கொண்டு, தங்களுக்கு வழிகாட்டிக் கொண்டு தங்கள் முன்னே நடந்து போவேன். தினந்தோறும் கிழங்குகள் பழங்கள் இன்னுந் தவசிகள் புசிக்கும் காட்டிலுண்டாகும் இனிய உணவுகள் ஆகிய எல்லாவற்றையுங் கொண்டுவந்து தங்களுக்குக் கொடுப்பேன். தாங்களும் சீதையும் சந் தோஷமாகத் தாழ், வரைகளில் விளையாடலாம். தாங்கள் விழித்திருக்கும்பொழுதுந் தூங்கும் பொழுதும் தங்க ளுக்கு வேண்டிய எல்லாவற்றையும் என் பேறாகச் செய் வேன்” என்றனர்.
இராமர் இப்படி லக்ஷ்மணர் சொன்னதைக் கேட்டு வெகு சந்தோஷமடைந்து தமது தம்பியைப் பார்த்து லக்ஷ்மணா, சீக்கிரம் எல்லா நண்பர்களிடமும் விடை பெற்று என்னுடன் காட்டிற்கு வா. ஜனகமகாராஜன் யாகம்பண்ணின பொழுது வருணபகவான் எனக்குத் தாமாகவே கொடுத்த வெகு பயங்கரமான தோற்றமுள்ள திவ்விய விற்களிரண்டும், ஒருவராலும் பிளக்கக்கூடாத கவசங்களிரண்டும், வற்றாத அம்புக் கூடுகளிரண்டும், சூரியனைப்போல விளங்கும் பொன்னாற் செய்த வாள்களி ரண்டும் கொடுத்தாரே; அவைகளை நமது குருவீட்டில் பூஜை செய்து வைத்திருக்கிறேன் ; விரைவில் அவைகளை யும் எடுத்துக்கொண்டு வா என்றார்.
இராமலக்ஷ்மணரிருவரும் மிக்கபொருள்களை அந்த ணர்களுக்கு தானஞ் செய்துவிட்டு சீதாதேவியுடன் தங்கள் தந்தையைப் பார்க்கச் சென்றார்கள். இவர்கள் கால்நடையாக வீதியில் நடப்பதை அந்நகரத்துச் சனங்கள் கண்டு, சோகத்தால் மனந்தடுமாறி பலவாறு சொல்லலானார்கள். “எவள் முன்பு ஆகாசத்திற் சஞ்ச ரிக்கும் பிராணிகளாலும் பார்க்க முடியாதவளோ அச் சீதை இராஜவீதியில் நிற்கும் ஜனங்களால் இப்பொழுது பார்க்கப்படுகின்றாள். நமக்குத் தோட்டங்கள் கழனிகள் வீடுகள் ஒன்றும் வேண்டாம்; தருமபிரபுவாகிய இராம ருக்கு வருஞ் சுகதுக்கங்களை உடனிருந்து அநுபவித்துக் கொண்டு அவர்பின் நடந்து செல்வோம் என்றார்கள்.
இவ்வண்ணம் பலர் பலவாறாக சொல்லிக்கொண் டிருந்தவற்றை யெல்லாங்கேட்டும், இராமருடைய மனம் கொஞ்சமேனுங் கலங்கவில்லை. அவர் வெகு தூரத்தி லிருந்து கைலாயமலையின் சிகரம்போல் விளங்கும் தமது தந்தையின் மாளிகையை நோக்கி நடந்தார். இராமர் வணக்கமுள்ள வீரர் பலர் தங்கியிருக்கும் அரச மாளிகை யிற் புகுந்து வாட்டமடைந்திருக்குஞ் சுமந்திரரை சிறிது தூரத்திற் கண்டார்.
இராமர் தமது தந்தையின் மாளிகை சேர்ந்தவுடன் அங்கிருந்த சுமந்திரரைப்பார்த்து. “நான் வந்திருப்பதை எனது பிதாவினிடந் தெரிவியும்’ என்றார். இவ்வண் ணம் இராமர் சொல்ல, சோகத்தாற் கலங்கின மனத்தை யுடைய சுமந்திரர், அம்மாளிகையினுள் விரைவாகச் சென்று பெருமூச்சு எறிந்துகொண்டு தசரதமன்னவர் வீற்றிருப்பதைக் கண்டார். பின்பு வெகு பயத்துடன் நாக்குளற “வேந்தே, தங்கள் குமாரராயும் புருஷசிங்க மாயும் உண்மை தவறாதவராயுமிருக்கும் இராமர் வாயி லில் வந்து காத்திருக்கிறார். தமது மித்திரர்களிடம் விடை பெற்றுக்கொண்டு தங்களைக் கண்டு விடைபெற்றுப் போக வந்திருக்கின்றார். தங்கள் குமாரரைக் காட்டுக்குப் போகுமுன் தாங்கள் பாருங்கள். தங்களுக்கு மங்கள் முண்டாகுக ” என்றார்.
அரசர், “சுமந்திரரே, சீக்கிரஞ் சென்று எனது மனைவிமாரெல்லாரையும் அழைத்து வாரும். தருமத்தின் வடிவாகிய என் குமாரனை எனது எல்லா மனைவிமார் களோடும் கூடிப்பார்க்க ஆசைப்படுகிறேன்” என்றார். முந்நூற்றைம்பது பெண்டுகள் அரசர் கட்டளைப்படி கௌசலையைச் சூழ்ந்துகொண்டு அரசர் வீட்டை நோக் கிச் சென்றார்கள். தசரதர் இவர்கள் வந்ததைப்பார்த்து சுமந்திரரை நோக்கி சுமந்திரரே, எனது குழந்தையை அழைத்துவாரும்” என்றார். அவரும் அப்படியே சென்று இராமர் லக்ஷ்மணர் சீதை இம்மூவரையும் அங்கு அரசர் சமீபத்தில் விரைவில் அழைத்து வந்தார்.
மிக்க துக்கத்தை யுடையவராயும் மனைவியராற் சூழ்ப்பட்டவராயு மிருக்குந் தசரதர் தூரத்திலிருந்தே கைகளை கூப்பிக்கொண்டுவரும் தமது குமாரரைக் கண்டு தமது ஆசனத்தினின்று விரைவாக எழுந்திருந்து அவ ருக்கு எதிரே துரிதமாய் ஓடினார்; தமது அறிவு தப்பி மிக்க சோகத்தை அடைந்தவராய் பூமியில் மூர்ச்சித்து விழுந்தார். பின்பு இராமர் ஒரு முகூர்த்தத்தில் பிரஜ்ஞையடைந்த தசரதரைப் பார்த்து அஞ்சலி பந்தம் பண்ணிக்கொண்டு “எல்லார்க்கும் ராஜாவான எங்கள் மகாராஜாரே, தங்களிடம் தண்டகாரியணத்துக் குப்போக விடைபெற வந்தேன். எங்களை கடாக்ஷிக்க வேண்டும். லக்ஷ்மணனும் சீதையும் என்னுடன் கூடவே காட்டுக்குவர விடை யளிக்கவேண்டும். வரவேண்டாம்’ என்று அநேகவிதமாக அவர்களுக்குச் ‘ காட்டுக்கு சொல்லியும் அவர்கள் அவ்வாறிருக்க விரும்பவில்லை. எல்லோருக்கும் சோகப்படாமல் அநுமதி கொடுத்து அனுப்பும்” என்றார். தசரதர் இவ்விதமாக தமது குமாரர் காட்டுக்குச் செல்ல விடைபெறக் காத்திருப் பதைப் பார்த்து, இராகவா, நான் வரத்தை கொடுத்ததால் வஞ்சிக்கப்பட்டேன். அதனால் கைகேயிக்கு என்னை நீ மறுத்து அயோத்திமாநகருக்கு மன்னனாகு வாய்’ என்றார். இங்ஙனம் தசரதர் சொல்ல தருமத்தில் நிலை நின்ற இராமர், “தங்களை நான் பொய்யராகச் செய்யக்கூடாது; ஆகையால் நான் காட்டில் வசிக்கின் றேன்.நான், தங்களது ஆணை என்ற காரணத்தினால் தான் பட்டங்கட்டிக்கொள்ள உடன்பட்டேன்; எனது மனத்தில் விருப்பமுற்றேனும் இன்பத்தை எண்ணியே னும் இராச்சியத்தை நான் அங்கீகரிக்கவில்லை. தந்தை தெய்வங்களுக்கெல்லாம் மேலான தெய்வம்’ என்றன்றோ சாஸ்திரங்களுங் கூறுகின்றன; புருஷசிரேஷ்டரே, ஆகை யால், நான், தங்கள் சொல்லை தெய்வத்தின் கட்டளை என நினைத்தே நிறைவேற்றுகின்றேன். பதினான்கு வருஷம் முடிந்தவுடன் நான் இங்கு வரத் தாங்கள் என்னைப் பார்ப்பீர்கள்; இத்துக்கத்தை விட்டிடுங்கள் ‘ என்றார்.
மகாபாகுவான தசரதர். சிறிது நேரஞ் சோகத்தால் மயக்கமடைந்து இராமரைக் குறித்தே சிந்தித்தவராய்ப் புலம்பலானார். “நான் முன் ஜன்மத்தில் அநேக பசுக் களைக் கன்றுகளினின்று பிரித்திருப்பேன்; அல்லது அநேக பிராணிகளை இம்சித்திருப்பேன்; அதனால்தான் இப்பொழுது நான் இவ்விதமான அவஸ்த்தைக்கு உள்ளா. னேன்.” என்று சொல்லி, நீரால் மறைந்த கண்களை யுடையவராய், ”இராம’ என்று ஒருதரங்கூவி அதன் பிறகு வாய்திறக்க திறனற்றவரானார். சீதை நமஸ் கரிக்க கௌசல்யை அவளைக் கைகளால் அணைத்துக் கொண்டு உச்சிமோந்து, ” பதிவிரதைகளுக்கு பரிசுத்தி செய்பவனான கணவனொருவனே விசேஷமானவன். ஆகை யால் காட்டுக்குப் போகின்ற என் குமாரனான இராமனை நீ அலட்சியம் பண்ணாதே. கணவன் செல்வம் படைத்த வனாக இருந்தாலும் பணமற்றவனாக இருந்தாலும், அவன் தான் உனக்குத் தெய்வம்’ என்றாள்.
இவ்வாறு தனது மாமியார் சொன்ன அறத்தோடும் அருத்தத்தோடுங் கூடிய சொற்களைக்கேட்டுச் சீதை கை களைகூப்பிக்கொண்டு தனது எதிரே நிற்கும் மாமியாரை நோக்கி, “தங்கள் உத்திரவுப்படியே எல்லாவற்றையுஞ் செய்கிறேன். நான் கணவரிடத்தில் நடந்துகொள்ள வேண்டிய விதத்தைத் தெரிந்திருக்கிறேன்; இப்பொழுது தங்களிடமிருந்து அதைக்கேட்டு மிருக்கிறேன். சந்திரனை விட்டு ஒளி நீங்காததுபோல நான் நன்னெறியை விட்டு நீங்கேன்’ என்றாள். இவ்வாறு மொழிந்த மனோகரமான சொற்களைக்கேட்டு கௌசலை வெகு சுத்தமான குண முள்ளவ்ளாகையால் உடனே துக்கத்தாலும் சந்தோஷத் தாலும் கண்ணீரை வடித்தாள்.
மிக்க தருமாத்துமாவாகிய இராமர் அஞ்சலி பந்தம் பண்ணியவராய் மிகவுங் கௌரவிக்கப்பட்டு தமது தாய்மார்களின் மத்தியிலிருக்குங் கௌசலையைப் பிரதக்ஷி ணஞ்செய்து சொல்லலுற்றார்:-“அம்மா, நீங்கள் அதிக துக்கத்தால் என் தந்தையை அலட்சியம் பண்ணாமலிருக்க வேண்டும். நான் அரணியவாசம் பண்ணவேண்டிய காலம் சீக்கிரமாக முடிந்துவிடும். ஒரு தூக்கம் தூங்கி விழிக்குமளவிற்குள் நீங்கள் இப்பதினான்கு வருஷமும் ஓடிப்போக காண்பீர்கள்” என்றார்.
14. இராமர் முதலிய மூவரும் வனம்புகுதல்
அதன்பிறகு, இராமர் லக்ஷ்மணர் சீதை இம்மூவரும் தசரதருடைய நிலைமையைக் கண்டு பரிதபித்து, கூப்பிய கையை யுடையவர்களாய். அவருடைய தாள்களில் வணங்கி அவரை வலம்வந்தார்கள். தருமப்பிரபுவாகிய இராமர் அவரிடம் விடைபெற்றுக்கொண்டு துக்கக்கட லில் மூழ்கினவராய் சீதையுடன் தமது தாயான கௌச லையை அபிவாதனஞ்செய்து நின்றார். அவர் வணங்கின பின்பு, லக்ஷ்மணர் கௌசலையை அபிவாதனஞ் செய்து, பின்பு, தமது தாயான சுமித்திரையின் பாதங்களில் நமஸ் காரஞ் செய்தார். சுமித்திரை லக்ஷ்மணரைப் பார்த்து அழுதுகொண்டே உச்சிமோந்து அவருடைய நன்மையின் பொருட்டு பின்வருமாறு சொல்லலானாள்:-“புதல்வனே, இராமனைத் தசரதராகவும், சீதையை நானாகவும், அரணி யத்தை அயோத்திமாநகராகவும் கருதுவாய்; குழந்தாய் சுகமாகப் போய்வா”என்றாள்.
அதன்பிறகு, வெகு வணக்கத்தையுடையவராயும் விந யத்தை யறிந்தவராயு மிருக்குஞ் சுமந்திரர், இராமரைப் பார்த்து அஞ்சலியுடன் கூடியவராய், “இராஜகுமாரரே, மிகு புகழ்படைத்தவரே, இராமரே இரதத்தில் ஏறுங் கள்; உங்களுக்கு க்ஷேம முண்டாகுக; எங்குப்போகவேண் டுமென்று எனக்குக் கட்டளை யிடுகிறீர்களோ, அங்கு ஒரு நொடியில் நான் கொண்டு போய்விடுகின்றேன்,” என்று சொன்னவுடன் சீதை சூரியன்போற் பிரகாசிக்கும் அந்த இரதத்தின்மேல் வெகு குதூகலத்துடன் முதலில் ஏறி னாள். இராமலக்ஷ்மணர்களும் அந்த இரதத்தில் விரைவாக ஏறினார்கள். இராமர் லக்ஷ்மணர் இவ்விருவரும் ஆயுதக் கூட்டங்களையும்,கவசங்களையும், தோலாற் கட்டப்பட்ட கூடை மண்வெட்டி இவைகளையும் இரதத்தின் மத்தியில் வைத்திட்டு சீதையுடன் இரதத்தில் வீற்றிருந்ததை சுமந்திரர் பார்த்து வாயுவேகமாகப் போகுஞ் சிறந்த குதிரைகளை வேகமாக ஓட்டினார், முதுவேனிற் பருவத் தால் மெலிந்தவர் புனலை நாடி ஓடுவதுபோல இராம் விரஹதுக்கத்தால் மிகத்துயரடைந்த பாலரையும் முதிய வரையுமுடைய அந்நகரம் இராமரை நாடி ஓடத்தலைப் பட்டது.
இராமர் தமது கைகளைக் கூப்பிக்கொண்டு நகர் நீங் கினபொழுது ஸ்திரீகளின் அந்தப்புரத்தில் வெகு பரி தாபமான பெரிய சத்தமுண்டாயிற்று. இம்மாதிரியாக அந்தப்புரத்திலிருந்துண்டாகும் கோரமான எளிய புலம் பல்களை புத்திரசோகத்தாற் பரிதபித்துக்கொண்டிருக் கும் தசரதர் கேட்டு பின்னும் அதிகமான சோகக்கடலில் முழுகி நின்றார். வெளிப்புறப்படும் இராமராலுண்டான் தூளிகள் எவ்வளவு காலம் வரையிற் புலப்பட்டனவோ அவ்வளவு காலம்வரையில் தசரதர் தமதுகண்களைத் திருப்பவேயில்லை. இராமர் போவதாலுண்டான தூளி யுங் காணப்படாதபொழுது தசரத மன்னவர் பீடை யையடைந்த சரீரத்தோடு மிகவுந் துக்கித்தவராய் பூமி யில் விழுந்தார். அவரைத் தூக்குவதற்காக கௌசலை அவருடைய வலக்கையை அநுசரித்தாள்; கைகேயி அவருடைய இடக்கையை அநுசரித்தாள். நியாயத்தை யும் தருமத்தையும் வணக்கத்தையும் கைவிடாத தசரத மன்னவர் இராமவிரகத்தால் துன்புற்ற பொறியையுடை யவராய் கைகேயியைப்பார்த்து, “கைகேயி, நீ என்னு டைய அங்கங்களைத்தொடாதே. நீ கெட்ட வொழுக்க முடையவள். உன்னை நான் பார்க்கவிரும்பவில்லை.நீ என் மனைவியுமல்லை; பந்துவுமன்று; பரதன் இவ்விராச் சியத்தை யடைந்து மகிழ்ந்தால் எனக்காக அவன் செய் யும் தர்ப்பணம் முதலிய சடங்குகள் என்னைச் சேர வேண்டா” என்றார். அதன்பிறகு துயரத்தால் வாட்ட மடைந்த கௌசலை அங்கமெல்லாம் புழுதி மண்டியிருக் கும் தமது பர்த்தாவை எழுந்திருக்கச்செய்து அவருடன் சென்றாள்.
ஜனங்கள், சத்தியவிரதத்தை கைக்கொண்டிருந்த ராமரிடம் மிக்க அபிமானம் வைத்தவர்களாய் அவர் அரணியவாசஞ் செய்யப்போகும்பொழுது கூடவே சென் றார்கள். அவர் ஜனங்களை அன்புடன் பார்த்து, அவர் களைத் தமது மக்களைப்போல எண்ணி அன்புடன் “அயோத்தியில் வசிக்கும் நீங்கள் என்னை சந்தோஷப் படுத்துவதனிமித்தம் என்னிடத்து வைத்திருக்கும் பிரீதி யையும் வெகுமதியையும் மிகுதியாக பரதனிடஞ் செலுத்தவேண்டும்.” என்றார். பருவத்திலும், அறிவிலும் தவத்திலும் முதிர்ந்த அந்தணர்கள் கிழத்தன்மையால் நடுங்கிய தலையினராய்த் தூரத்திலே நின்று, “ஓ ! ஓ! விரைவுள்ள உத்தமஜாதிக்குதிரைகளே, இராமனை வகித்துக்கொண்டு போகாதேயுங்கள்: நில்லுங்கள்; தலைவ னிடத்தில் நன்மை செய்பவராக இருங்கள்” என்று கதறினார்கள். இராமர் இவ்வாறு அந்தணர்களெல்லாம் வெகு பரிதாபமாக அரற்றக்கேட்டு இரதத்தை விட்டுக் கீழிறங்கினார். அவர் லக்ஷ்மணருடனும் சீதையுடனும் மெல்லக் காலினாலேயே நடந்தார்.
இராமர் இரம்மியமான தமசை நதிக்கரையைச் சேர்ந்து சமீப தேசத்தில் பட்டணத்து ஜனங்களுடன் அவ்விரவு வசித்தார். இரவில் இராமர் எழுந்திருந்து உறங்கும் பட்டணத்து சனங்களைப் பார்த்து, வெகு புண்ணிய லக்ஷணங்களுடன் கூடிய தம்பியான லக்ஷ் மணரை நோக்கி “லக்ஷ்மணா, நம்மிடத்தில் மிக்க அன்பு வைத்து காதலிகளிடத்திலும் அன்பு நீங்கியவர்களும்’ மரங்களினடிகளில் தூங்குபவர்களுமான இவர்களை இப் பொழுது பார். லக்ஷ்மணா, இவர்களெல்லாரும் என்னைக் காட்டுக்குப் போகாமல் ஊருக்குத் திருப்பி யழைத்துப் போகத் தீர்மானித்திருக்கிறார்கள். இவர்கள் பிராணனை விட்டாலும் விடுவார்களேயல்லது தங்களுடைய உறு தியை மட்டும் விடமாட்டார்கள். ஆகையால் நாம் இவர் கள் தூங்கும்பொழுதே மெல்ல எழுந்திருந்து இரதமேறி அச்சமில்லாத வழியிற்செல்லுவோம்” என்றார். பின்பு இராமர் பட்டணத்துச் சனங்களை வஞ்சிக்கக் கருதிய வராய், சுமந்திரரைப்பார்த்து, “சாரதியே, நீங்கள் இரத மேறி வடக்கு முகமாக ஒரு முகூர்த்தகாலம் வேகமாகச் சென்று, பிறகு இரதத்தைத் திருப்பிக்கொண்டு வாருங் கள். பட்டணத்துச் சனங்கள் நான் போகும் வழியை அறியாவண்ணம் சாக்கிரதையுடன் செய்யுங்கள்” என் றார். சுமந்திரர் இராமர் சொன்னவண்ணஞ்செய்து, வேற்றுவழியால் இராமரிடந் திரும்பிவந்து, இரதங் கொணர்ந்துவந்ததை அறிவித்தார். பிறகு இராமர் லக்ஷ்மணர் சீதை இம்மூவரும் பிரயாணத்தின் மங்களத்தின் பொருட்டு வடக்குமுகமாக நிறுத்தப்பட்ட இரதத்தி லேற, சுமந்திரர் அந்த இரதத்தைத் தவசிகள் வசிக்குங் காட்டை நோக்கி யோட்டினார்.
இரவு கழிந்து பொழுது விடிந்தவளவில் நகரத்துச் சனங்கள் தூங்கி யெழுந்து, இராமரைக் காணாமற் சோகம் மேலிட்டதால் செய்தொழிலற்றவர்களாய், மனம் முறியப் பெற்றார்கள். நல்லமனத்தையுடைய அவர்கள் எளிமையை யடைந்தவர்களாய், எளிய வார்த்தைகளைப் பரஸ்பரஞ் சொல்லலானார்கள்: “நம்முடைய தூக்கம் பழிக்கத்தக்கது; ஏனெனில் நாம் அத்தூக்கத்திற்கு வசப் பட்டபடியாலன்றோ இராமரை இப்பொழுது பார்க்கமுடி யாமற் போயிற்று” என்று பலவகையாக சொல்லிக் கொண்டு, கைகளை உயர்வெடுத்து, துக்கத்தால். கன்று களை யிழந்த பசுக்கள்போல புலம்பினார்கள். பிறகு அவர்கள் இரதம்போன சுவட்டால் வழியைப் பிடித்துச் சென்று இரதச்சுவடு மறைய,மீண்டும் மிக்க துயரமடைந் தவர்களாய், அயோத்திமாநகருக்கு திரும்பிவந்து சேர்ந் தார்கள்.
அவர்கள் தம் தம் வீட்டை யடைந்து பெண்டுகள் பிள்ளைகள் இவர்களாற் சூழப்பட்டு, நீர்நிறைந்த முகங் களையுடையவர்களாய் அழுதார்கள். வீட்டுக்குத் திரும்பி வந்த தம் தம் கணவர்களை,மனைவியர் அழுதுகொண்டு மாவெட்டிகளால் யானைகளைக் குத்துவதுபோல் கொடுஞ் சொற்களால் பழித்து “எவர்கள் இராகவரைப் பார்க்க வில்லையோ, அவர்களுக்கு வீடுகளாலாவது மனைவியா லாவது பொருளாலாவது பிள்ளைகளாலாவது வேறுவகைச் சுகங்களாலாவது என்ன பயன்?” என சொல்லிக்கொண்டு யமனிடத்தினின்று பயத்தையடைந்தவர்கள்போல் அல றினவர்களாய் துக்கத்தால் பரிதவித்துக் கதறினார்கள்.
இராமரும் தமது தந்தையின் கட்டளையை நினைத் துக்கொண்டு நகரத்து சனங்களைவிட்ட அவ்விராத்திரி யின் மிகுதிப் பொழுதிலேயே வெகுதூரஞ் சென்றார். விசாலமாயும் அழகியதாயுமுள்ள கோசலநாட்டைக் கடந்தபிறகு, கூப்பியகையராய் அயோத்தியையிருக்குந் திசையை நோக்கி, “ககுஸ்தவம்சத்து மன்னவர்களால் இரட்சிக்கப்படுபவளே, நகரங்களுட் சிறந்தவளே, உன் னிடத்தில் நான் விடை கேட்டுக்கொள்ளுகிறேன். உன் னுடைய நாலு மருங்கிலும் வசித்துக்கொண்டு உன்னைப் பாதுகாக்குந் தெய்வங்களிடத்திலும் நான் விடை கேட் டுக் கொள்ளுகிறேன்; நான் என் வனவாசத்தை நிறை வேற்றி, தந்தையார் சொல்லை மெய்யாகப் பண்ணுவதால் அவர்கடனைத் தீர்த்து, தாய்தந்தையர்களுடன் சேர்ந்த வனாய் மறுபடி உன்னைப் பார்ப்பேன்” என்றார். பிறகு இராகவர் சுவர்க்க பூமி பாதாளங்களிற் செல்லுவதும், நிர்மலமான நீரையுடையதும், பாசி நீங்கியதும் புண்ணிய மானதும், முனிவர்களாற் சூழப்பெற்றதுமான கங்கை யைப் பார்த்தார். சமீபத்திலுள்ள அழகிய ஆச்சிரமங் களால் விளக்கப்பட்டதும், விஷ்ணுபகவானுடைய திரு வடியிலிருந்து தோன்றியதும், பாபமற்றதும், தன்னில் மூழ்குபவரது பாவத்தைப்போக்குவதும், சிவபெருமானது சடைமுடியிலிருந்து பெருகுவதும், நீர்ப்பறவைகள் ஒலித் துக் கொண்டிருக்கப்பெற்றதும், சமுத்திரத்தின் பட்ட மகிஷியுமான அக்கங்கையை சிருங்கபேரபுரத்தை நோக் கிச் செல்லும் இராமர் அடைந்தார்.
இராமர் பொழுது விடியுஞ் சமயத்தில் லக்ஷ்மணரை நோக்கி, “காமத்தை விளைக்கும் இரவு பெரும்பாலுங் கழிந்தது. அருணனுதிக்குந் தருணமும் கிட்டிற்று. குழந் தாய், சமுத்திரத்தை நாடி வேகமாகச் செல்லும் இக்கங் கையை நாம் கடப்போம்” என்றார். அதன் பிறகு இராம் லக்ஷ்மணர்கள் கவசமணிந்து தூணிகளையுங் கத்திகளையுந்தரித்துக்கொண்டு வில்லாளிகளாய் சீதையுடன் கங் கையை யடையும் வழியாகச் சென்றார்கள்.
சுமந்திரர் இராமரை வணக்கத்துடன் கிட்டிக் கூப்பிய கையராய், “எனக்கு என்ன கட்டளை யிடுகிறீர்கள் ?” என்று கேட்க, இராமர் கங்கைக்கரை வரையில் நீங்கள் இரதமோட்டி வந்தீர்களன்றோ! இனி, இரதத்தை விட்டுக் கால்களினாற் பெருங் காட்டிற்போவேன். ஆகையால் நீங் கள் திரும்பிவிடலாம். நீங்கள் மகாராஜாவை என் பொருட்டு வணங்கி, ”நானும் லக்ஷ்மணனும் சீதையும், அயோத்தியை விட்டுவந்து துயரப்படாது காட்டில் வசிக்கிறோம். பதினான்கு வருஷங்கழிந்தவுடனே யாவரும் லக்ஷ்மணனையும் என்னையும் சீதையையும் பார்க்கப்போகி றீர்கள். அன்றியும் கௌசலையிடத்தும் மகாராஜரிடத்தும் சீதை நான் லக்ஷ்மணன் ஆகிய மூவரும் சொன்னதாக வணக்கத்தையுஞ் சொல்லவேண்டும். சேர்ந்தவுடனே நீங்கள் பரதனை வரவழைத்து அவனுக்கு அங்கு போய்ச் இளவரசு பட்டாபிஷேகம் பண்ணிவைக்கவேண்டும். என்னுடைய சிறிய தாயாரான கைகேயியம்மா, பட்ட ணத்தையடைந்த உங்களைப் பார்த்து “இராமன் காட்டை யடைந்தான்” என்று விசுவாசமடைவர்’ என்றார்.
பிறகு இராமர் தமக்கும் லக்ஷ்மணருக்கும் ஜடை செய்தார். சுமந்திரருக்கும் தமது பரிவாரங்களுக்கும் விடை கொடுத்து விட்டு, மரக்கலத்தில் வீற்றிருந்தவராய், அதனைச் செலுத்தும்படி நாவிகர்களுக்குக் கட்டளை யிட்டார். அது கங்கையின் நடுவை யடைந்தவுடன் குற்றமற்ற சீதை கங்கையை நோக்கி, ‘தேவி, மூன்று பிரிவாகப் பிரிந்து மூன்று வழியிலோடுகின்ற நீ பிரம லோகத்தினின்று தோன்றினாய்; இவ்வுலகத்தில் சமுத்திர ராஜனுடைய பார்யையாகவுங் காணப்படுகின்றாய். அழகியே. இவ்வாறு புகழ் பெற்ற உன்னை நான் நமஸ் கரிக்கிறேன்; துதிக்கிறேன். ஆண் புலியான இராமர் மங்களமாகத் திரும்பி வந்து இராச்சியத்தை யடைந்த பொழுது உனக்கு விருப்பத்தைச் செய்யும் பொருட்டு அந்தணர்களுக்கு நூறாயிரம் பசுக்களையும் வஸ்திரங்களை யும் மநோஜ்ஞமான அன்னத்தையுங், கொடுப்பேன். தேவீ, நகரத்தை மீண்டுமடைந்த, நான் நியமத்தை யுடையவளாய் ஆயிரங் கள்ளுக் குடங்களாலும் மாம்ச மாகிற உணவினாலும் உன்னைப் பூஜிப்பேன். உன் நதிக் கரையிலிருக்குந் தேவதைகளெல்லாரையும் புண்ணிய தீர்த்தங்களையுங் கோயில்களையும் பூஜிக்கிறேன்” என்றாள்.
இராமர் தென்கரையை யடைந்து தமது தம்பியுட னும் சீதையுடனும் மரக்கலத்தை விட்டு இறங்கி நடக்க லானார். பின்பு மகாபாகுவான இராமர் லக்ஷ்மணரைப் பார்த்து, ”நீ, ஜனங்களிருக்குமிடத்திலும் ஜனங்களில் லாத இடத்திலும் பாதுகாப்பவனாக இருக்க வேண்டும். இதற்கு முன் பார்த்திராததும் ஜனங்களற்றதுமான காட்டிற். பாதுகாப்பு அவசியஞ் செய்யத் தக்கது. லக்ஷ்மணா, நீ முன் நட; உன் பின்னே சீதை வருகிறாள். நான் உன்னையும் சீதையையும் பாதுகாத்துக் கொண்டு உங்களிருவர்க்கும் பின்னே வருகிறேன். ஆணேறே, இக் காட்டில் நம்மில் ஒருவரையொருவர் தாம் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்” என்றார். அவ்வில்லாளிகளிருவரும் சுகமாக நடந்து சூரியன் அஸ்தமனமரகும் வேளையில், கங்கையும் யமுனையுஞ் சந்திக்குமிடத்துக்கு சமீபத்தி லிருக்கும் பரத்துவாஜ முனிவருடைய ஆச்சிரமத்தின் அருகை யடைந்தார்கள். ஆச்சிரமத்தை யடைந்து சிஷ்யர்களின் கூட்டத்தால் சூழப்பட்ட பரத்துவாஜ முனிவரை அபிவாதனம் பண்ணினார். இராமர் அம் முனிவரிடத்தில் தங்களைப்பற்றி, ”நாங்களிரு வரும் தசரதருடைய பிள்ளைகள். இராமன் என்றும் லக்ஷ்மணன் என்றும் எங்களுடைய பேர். இவள் என் மனைவி. விதேக வம்சத்தில் பிறந்தவள்; ஜனக மகா ராஜாவினுடைய மகள்’ என்று தெரியப்படுத்தினார்.
பரத்துவாஜர் இராமருடைய வார்த்தையைக் கேட்டு அவரை நோக்கி தருமத்துடன் கூடிய இவ்வார்த் தையைச் சொன்னார்: “ககுஸ்த குலத்தில் உதித்தவரே, ஐம்பொறிகளாலும் அறிய வொண்ணாத தங்களை எப் பொழுதும் தியானித்துக் கொண்டிருக்கும் யான், வெகு காலத்திற்குப் பின்பு இங்கு என் கண் முன்பே வரக் காண்கிறேன்! தாங்கள் காரணமின்றி காட்டுக்கு ஓட்டப் பட்டதைக் கேள்விப்பட்டேன். ரகு குலக் கொழுந்தே, நீங்கள் எங்கு வசிக்கப் போகின்றீர்களோ, அம்மலை இங்கிருந்து பத்துக் குரோச தூரத்திலிருக்கிறது. கந்தமா தனம் என்ற பருவதத்தை யொத்தது; சித்திரகூடம் என்று பிரசித்தி பெற்றது; ஒருவன் அதன் சிகரங்களைத் தூரத்திலே காணினும் புண்ணியத்தையே செய்கிறான். அவனுடைய மனம் பாவத்தை எண்ணாது” என்றார்.
இராஜ குமாரர்கள் இரவை அவ்வாசிரமத்திற் போக்கிப் பின்பு பரத்துவாஜ மகாரிஷியை வணங்கி அம் மலையைக் குறித்துப் போகச் சித்தரானார்கள். பின்பு சீதையுடன் அவர்கள் அழகியதும் மனத்தைக் கவர்வது மான சித்திரகூட மலையைச் சேர்ந்தார்கள். பிறகு அம் மூவரும் வால்மீகியின் ஆச்சிரமத்தை யடைந்து அம் மாமுனிவரை அபிவாதனம் பண்ணினார்கள். அறத்தை யறிந்தவரான அம்மகர்ஷி மகிழ்ச்சி யடைந்தவராய் அவர் களைப் பூஜித்து, “வீற்றிருக்கலாம்” என்று கூறி நல் வரவை வினவினார். இராமர் தம்மை முறைப்படி வால்மீகிக்கு அறிவித்து, லக்ஷ்மணரைப் பார்த்து, “ஸௌம்ய, லக்ஷ்மணா, உறுதியாயும், சிறந்தனவாயுமிருக்கும் மரப் பலகைகளைக் கொண்டு வா; வசிக்குமிடத்தைச் செய். இங்கு வசிக்க வேண்டுமென்று என் மனம் விரும்புகின் றது” என்று கூறினார். லக்ஷ்மணர் இராமருடைய சொல்லைக் கேட்டு அநேக விதமான மரங்களைக் கொண்டு வந்து பர்ணசாலையை நிருமித்தார். இராமர் ஸ்நானஞ் செய்து நியமத்துடன் கூடியவராய் வாஸ்து சாந்தி முடிவதற்கு எவ்வளவு மந்திரங்களை ஜபிக்க வேண்டுமோ அவ்வளவு மந்திரங்களையும் ஜபித்தார். பிறகு பரிசுத்தராய் வாஸ்து தேவதைகளைப் பூஜித்து வசிக்கக் கட்டின இடத்திற் புகுந்தார்; மிக்க பராக்கிர மத்தை யுடைய இராமருக்கு மனத்தில் மகிழ்ச்சி உண்டாயிற்று.
15. தசரதர் இறத்தல்
சுமந்திரர் விடைபெற்று குதிரைகளை இரதத்திற் பூட்டி மூன்றாம் நாள் மாலைப் பொழுதில் அயோத்தியை யடைந்து அது ஆனந்தமற்றிருப்பதைக் கண்டார். முகத்தை மூடிக் கொண்டு ராஜ மார்க்கத்தின் நடுவால் தசரத மன்னவரிருந்த மீனையை யடைந்தார். ஏழு கட்டுக் களையுங் கடந்தார். எட்டாவது கட்டில் புத்திர சோகத் தால் வாட்டமடைந்த அரசரைப் பார்த்தார். அச்சுமந் திரர், வீற்றிருந்த தசரத மன்னவரை யணுகி, அவரை வணங்கி, இராமருடைய சொல்லை அவர் சொன்ன வண்ணமே தெரிவித்தார்.தசரதர், அதை மௌனத் தோடு கேட்டு, குழப்பமடைந்த மனமுடையவராய், இராமர் விஷயமான சோகத்தாற் பீடிக்கப்பட்டு மூர்ச்சை யடைந்து பூமியில் விழுந்தார்.
பின்பு உபசாரங்களினால் மூர்ச்சை தெளிந்தவராய் தம்மைக் கிட்டின சுமந்திரரைப் பார்த்து மிக எளிய வராய், “எனது தருமாத்துமாவாகிய இராமன் எந்த மரத்தினடியை யடைந்து வசிக்கிறான்? ஸூதரே, மிகவுஞ் சுகியான அந்த இராகவன் எதை உண்கிறான்? இராமன் என்ன சொன்னான்? லக்ஷ்மணன் என்ன சொன்னான்? சீதை என்ன சொன்னாள்?” என்றார். இவ்வாறு அரசரால் ஏவப்பட்ட சுமந்திரர் கண்ணீரால் தழுதழுத்துத் தடையை யடையுஞ் சொல்லால் கூறத் தொடங்கினார்: மகாராஜாவே,இராமர் தருமத்தையே பார்த்தவராய், “சுமந்திரரே, வணங்கத் தக்கவராயும் மகாத்துமாவாயும் புகழ் பெற்றவராயுமிருக்குந் தந்தையாருடைய திருவடி கள் அஞ்சலி பண்ணி என்னுடைய வார்த்தையால் தலையால் வணங்கத் தக்கவை; அந்தப்புரத்திலிருக்கும் எல்லோரும் முறைப்படி என் வணக்கத்தையும் என் க்ஷேமத்தையும் சொல்ல வுரியர். என்னுடைய நமஸ்காரத் தையும் க்ஷேமத்தையுஞ் ஜாக்கிரதையையும் என் தாயாராகிய கௌசலையிடத்திற் சொல்லி அதன் பின்பு பரதனுக்கு என் க்ஷேமத்தைச் சொல்லி அவனிடத்தில், “எல்லாத் தாய்மார்களிடத்திலும் முறைப்படியே நடப்பாய். நீ இளவரசனாக இருந்து கொண்டு இராச்சியத்திலிருக்கும் மன்னவரைப் பாதுகாப்பாய். புத்திரனிடத்தில் அதிக அன்பு வைத்திருக்கும் என் தாயை உன் தாயான கைகேயியைப்போல் பார்த்துக்கொள்ள வேண்டும். என்று பரதனிடஞ் சொல்லுங்கள்” என்று சொன்னார். மகாராஜரே, இவ்வாறு சொல்லிக் கொண்டே செந்தாம ரைக் கண்ணரான இராமர் மிகக் கண்ணீர் வடித்தார்.
“லக்ஷ்மணரோ மிகச்சினந்தவராய் பெருமூச்செறிந்து கொண்டு, “அரச குமாரரான இந்த இராமர் எந்த அபராதத்தினால் நாட்டிலிருந்து ஓட்டப்பட்டார்? நானோ மகா ராஜரிடத்தில் தகப்பன் முறையைக் காணவில்லை; எனக்குச் சகோதரரும், தலைவரும், தகப்பனாரும், சுற்ற மும் இராகவரே” என்றார். மகாராஜரே, ஜானகி என் னிடத்தில் ஒன்றுஞ் சொல்லவில்லை. வாட்டமடைந்த முகத்துடன் அவள் தனது கணவரையும், புறப்படும் என்னையும் பார்த்துக் கண்ணீர் விட்டாள்” என்றார்.
இவ்வாறு சுமந்திரர் சொன்னதைக் கேட்டு தசரதர் தழுதழுத்ததாயும் மிகவும் எளிமையை யுடையதாயுமிருக்கும் வாக்கினால் சுமந்திரரை நோக்கிப் பின்வருமாறு மொழியலானார்:-“குலமுறையாக வந்த கொடிய எண் ணத்தையுடைய கைகேயியால் ஏவப்பட்ட நான் ஆலோ சனையில் வல்லவர்களான பெரியவர்களுடன் சேர்ந்து எண்ணினேனில்லை. சினேகிதர், மந்திரிமார், நகரத்தவர் இவர்களுடன் சேர்ந்து ஆலோசியாமல் மோக பரவசனாய் செய்துவிட் ஸ்திரீக்காக இத்தொழிலை சாகசமாய்ச் டேன். இவ்வாறன்றி இவ்விசனம் இக்குலத்தை யழிப்ப தற்காகக் காரணங் கூற முடியாத விதியால் விளைந்ததே. என்னை இப்பொழுதே இராமனிடத்திற் கொண்டு போய் விடும்; பிராணன் என்னைவிட்டுப் போக விரும்புகின்றது” என்று சொல்லி, ஹா ராமா! ஹா! லக்ஷ்மணா! ஹா பதி விரதா தருமத்தைக் கைவிடாத சீதையே! துக்கத்தால் நாதனற்றவன்போல் மாளும் என்னை நீங்கள் அறிகின்றி லீர்கள்!!!” எனப் பலவாறு பிரலாபித்தனர். அதன் பிறகு பேய் பிடித்தவன்போல மிகப் புரளுபவளும் உயிர் போனவள் போன்றவளுமான கௌசல்யை பூமியில் விழுந்து சுமந்திரரைப் பார்த்து “எங்கு இராமன் இருக் கிறானோ, எங்கு சீதை இருக்கிறாளோ, எங்கு லக்ஷ்மணன் இருக்கிறானோ, அங்கு என்னையும் யழைத்துச் செல்லும்” என்றாள்.
தசரதர் மேலும் சொல்லலானார். “கௌஸல்யே, கண்ணால் உன்னைக் காண்கின்றிலேன்; என்னுடைய ஸ்மிருதியும் அழிந்துவிடுகின்றது; யமதூதர்கள் என்னை விரைவிக்கின்றனர். இதைவிட மிகத் துக்கமானது என்ன இருக்கிறது? உண்மையில் பராக்கிரமத்தையுடையவனும் தருமத்தை யுணர்ந்தவனுமான இராமனைப் பிராணன் போகுஞ் சமயத்திற் காண்கின்றிலேனே! நதியின் வேகம் அதன் கரையை யறுப்பதுபோல இச்சோகம் அநாதனும் அறிவற்றிருப்பவனுமான என்னை மெலியச் செய்கின்றது. ஐயோ! இராகவனே, ஆ! மகாபாகுவே, ஆ ஆ! என் துக்கத்தைப் போக்குபவனே, ஆ! தந்தை மீது அன்பு வைத்தவனே, ஆ! எனக்கு நாதனே, ஆ!புதல்வனே, நீ இப்பொழுது எங்கிருக்கின்றாய்? அந்தோ! கௌசல்யே, நான் சாகப்போகின்றேன்; ஆ! பதிவிரதா தருமத்தைக் கைவிடாதிருக்கும் சுமித்திரையே, ஆ ஆ! கொடிய வளே, எனக்குப் பகையே, கைகேயி,குலத்தைக் கெடுக்க வந்தவளே” என இவ்வாறு கூறுக் கோசலையின் முன் னிலையிலும் சுமித்திரையின் முன்னிலையிலும் தசரத மன்னர் துக்கித்துக்கொண்டே பிராணனுடைய முடிவு காலத்தை யடைந்தார்.
பிறகு அமைச்சர்கள் தசரதரைத் தழுவிக்கொண்டு புலம்புபவளும் துயரத்தால் மெலிந்தவளுமான கௌசலை யை அங்கிருந்து வேற்றிடத்திற்குக் கொண்டுபோனார் கள். அம்மந்திரிமார் வசிஷ்டர் முதலியோரது கட்டளை யால் எண்ணெய் நிரம்பிய கடாரத்தில் அரசரை யிட்டுப் பின்பு மக்களைக் காத்தல் முதலிய அரசருடைய தொழில் களைச் செய்தார்கள். மகாத்மாவாகிய மன்னரை யிழந்த அயோத்திமாநகரம் சந்திரனில்லாத இரவுபோலவும் கணவனில்லாத பெண்போலவும் விளக்கமற்றிருந்தது. கண்ணீர்விட்டுக் கலங்கும் ஜனங்களையுடையதும் ஹா ஹா என்று புலம்பும் குலப்பெண்களுடன் சேர்ந்ததுமான நகரம் முன்போல விளங்கவில்லை.
இரவுகழியச் சூரியோதத்தின் பின்பு மார்க்கண்டே யர், மௌத்கல்யர். வாமதேவர், காச்யபர், காத்யாயநர், கௌதமர், ஜாபாலி, இவ்வந்தணர்களும், மந்திரிகளும், சபையை அடைந்து அரசருடைய முக்கிய புரோகிதரான வசிஷ்டமாமுனிவரை நோக்கித் தனித்தனிபேசலானார்கள்; ” நமது அரசர் புத்திரசோகத்தால் மரணத்தை யடைந்த வளவில் நமக்கு நூறு வருஷங்கள்போலத் தோன்றின இரவும் துயரமாய்ச் சென்றுவிட்டது. அரசரும் சுவர்க் கத்தை யடைந்தார்; இராமரும் காட்டை யடைந்தார்; லக்ஷ்மணரும் இராமருடனேயே சென்றார் ; பரதசத்துருக் கனர்களும் கேகய நாட்டில் ராஜகிருஹம் என்ற அழகான நகரத்தில் மாதாமகனுடைய வீட்டில் இருக்கின்றார்கள். இப்பொழுதே இங்கு இக்ஷ்வாகு வமிசத்திற் பிறந்த இராமர் முதலிய நால்வரில் ஒருவர் மன்னவராக ஏற்படுத் தப்படட்டும். அரசனில்லாத இராச்சியம் நிச்சயமாய் நாசமடையு மன்றோ! பார்வை தேகத்தின் தீமையைக் கடிந்து நன்மையைச் செய்ய எப்பொழுதும் முயற்சிசெய் வதுபோல், சத்தியத்துக்குந் தருமத்துக்குங் காரணமான அரசனும் நாட்டின் தீமையைக் கடிந்து நன்மையைச் செய்ய எப்பொழுதும் முயல்கின்றான். அரசன் தான் சத்தியத்தையும் தருமத்தையும் நடத்துவிப்பவன். அரசன் தான் நற்குலத்திற் பிறந்தவருடைய குலாசாரத்தை நடத்துவிப்பவன். அரசன்தான் தாயுந் தந்தையும். அரசனே மனிதர்களுக்கு நன்மையைப் புரிபவன் என்றார்கள்.
வசிஷ்டர் அவர்களுடைய சொல்லைக் கேட்டு ” இங்கு வாருங்கள், ஸித்தார்த்தனே, விஜயனே, ஜயந்தனே, அசோ கனே, நந்தனனே. துயரத்தை விட்டவர்களாய், என்னு டைய கட்டளையால் பரதரிடத்தில் “தங்களை நோக்கிப் அமைச்சர்களெல்லோரும் க்ஷேமத்தைக் புரோகிதரும் கூறுகின்றனர். வேகமாய்த் தாங்கள் வரவேண்டும்; காலங் கடந்த தொழிலொன்று தங்களுக்கு இருக்கிறது’ என்று இதைச் சொல்லுங்கள். நீங்கள் அவரிடத்திற் சென்று, காட்டுக்குப் போனதையும், தந்தையான இராமர் தசரதர் மாண்டதையும், இரகுவின் குலத்துக்கு வந்திருக் குங் குறைவையும் சொல்ல வேண்டாம்” என்றார்.
அத்தூதர்கள் விரைவாகச் சென்று அழகியதும் பகைவர்களால் கிட்டக்கூடாத அகழியை யுடையதுமான ‘ராஜகிருஹம்’ என்ற பட்டணத்திற்புகுந்து, கேகய தேசத்து மன்னவராலும் அவருடைய புதல்வரான யுதா ஜித்தாலும் சம்மானிக்கப்பட்டவர்களாய், பரதருடைய பாதங்களில் வணங்கி, அவரைப் பார்த்து, “புரோகிதரான வசிஷ்டரும் மந்திரிமார்களெல்லோரும் தங்களை நோக்கி க்ஷேமத்தைச் சொல்லுகின்றனர். வேகமாய்த் தாங்கள் வரவேண்டும்” என்றார்கள். பரதர் பயணத்தில் விரைந்தவராய் மாதாமகனிடத்திலும் மாமனிடத்திலும் விடை பெற்றுச் சத்துருக்கனருடன் தேரிலேறிப் பட்டார். பரதர் வழியில் ஏழிரவுகளைக் கழித்து எட்டா புறப் வது நாட் காலையில் தம்மெதிரில் அயோத்தியையைக் கண்டு தமது சாரதியைப்பார்த்து பின்வருமாறு சொல்ல லானார்:-“சார தியே, புகழ்படைத்த இந்நகரம் அரணிய மாய்விட்டதர்க எனக்குத் தோன்றுகின்றது. இங்கு சிவிகை முதலியவைகளும் குதிரைகளும் காணப்படவில்லையே! பிரதான மனிதர்கள் முன்போல் யானைகளும் புறப்படவும் உட்புகவுங் காணவில்லையே! ஏதோ அநிஷ் டத்தைத் தெரிவிப்பனவாயும் கொடியன வாயும் பார்க்கும் பொழுதே துக்கத்தை யுண்டாக்குவனவாயுமுள்ள பல வகை கெட்ட சகுனங்களைக் காண்கின்றேன் ; அதனால் எனது மனம் துயரப்படுகின்றது. ஏன் காரணமின்றி விரைவாக நான் அழைக்கப்பட்டேன்? எனது மனம் கெட்டதை எண்ணுகிறது. எனது தன்மையும் அழிகின் றதுபோலும்’ என்று சொல்லிக்கொண்டு அபசகுனங்களைக் கண்டு மனம் நொந்து அரண்மனையிற் புகுந்தார்.
பின்பு பரதர் தந்தையார் மாளிகையில் தமது தந்தையைக் காணாமல் தமது தாயைக் காண அவள் மாளிகையை நோக்கிச் சென்றார். கைகேயி லிருந்து வந்து சேர்ந்த புதல்வரான பரதரைக் கண்டு வெளியூரி கட்டியணைத்து உச்சி மோந்து க்ஷேம சமாசாரம் வினவ பரதர் மாதாவினிடத்தில் எல்லாவற்றையுஞ் சொல்லி அரசருடைய வாக்கியத்தைக் கொண்டுவந்தவர்களான தூதர்கள் என்னை விரைவித்ததனால் நான் முன்னே வந்துவிட்டேன். பொன்னாலாகிய அலங்காரம் அமைந்த தும் படுக்கவுரியதுமான தங்களுடைய மஞ்சம் தகப்ப னாரையின்றி யிருக்கிறது. அவரைப் பார்க்கவேண்டு மென்ற விருப்பத்துடன் இங்கு வந்தேன்; அம்மா. கௌசலையாரின் மாளிகையில் அவர் இருக்கின்றாரா?” என்றார். அரசர் நிலையை அறியாதவரான பரதரை நோக்கி கைகேயி ”அரசரும் மகாத்மாவும் தேஜஸ்வியும் யாகஞ்செய்தவரும் நல்லவர்களுக்கு புகலிடமுமான உன் தகப்பனார் எல்லாப் பிராணிகளு மடையுங் கதியைத் தாமுமடைந்தார். மகாத்துமாவும் மிகவுத்தமருமான அம்மன்னவர், “ஹா! ராமா,ஹா ! ஸீதா, ஹா! லக்ஷ் மணா, என்று புலம்பிக்கொண்டே பரலோகஞ் சென்றார். புதல்வ, நான்தான் இராமனுடைய பட்டாபிஷேகத்தைக் கேள்வியுற்று உனது பிதாவினிடத்தில் உனக்கு இராச்சி யத்தையும் இராமன் காட்டுக்குப் போவதையும் வேண்டி னேன். அவரும் தாம் முன்கொடுத்திருந்த வரத்தின்படி அவ்வாறே செய்தார், இராமனும் சீதையுடனும் லக்ஷ் மணனுடனும் காட்டுக்கு அனுப்பப்பட்டான். பெரும் புகழ் பெற்ற அம்மன்னவரும் அன்பனான தமது புத்திர னைக் காணாமல் புத்திரசோகத்தாற் பரிதவித்தவராய் இறந்தார். அரச நீதியை யுணர்ந்தவனே, நீ இப்பொழுது அரசைக் கைப்பற்றுவாய்” என்றனள்.
பரதர் தந்தை இறந்ததையும் உடன்பிறந்தவரிரு வர் காட்டுக்குப் போனதையும் கேட்டு துக்கத்தால் எரிக்கப்பட்டவராய் பின்வருமாறு சொல்லலானார் “தந்தையில்லாமலும் தந்தைக்குச்சமானரான உடன்பிறந் தவரில்லரமலும் நாசமாய்ப் போய்ப் புலம்பும் எனக்கு இங்கு இராச்சியத்தால் என்ன பயன்? எனது தந்தையார் நெருப்பைக் கட்டிக்கொண்டு அறியாதிருந்தார். எனக்குத் தீங்கையாலோசிப்பவரே, மன்னவர் உம்மால் கூற்றுவனுக் குக்கொடுக்கப்பட்டார். புதல்வனுடைய நன்மையிலேயே அன்புகொண்ட உம்மை நிறைவேறின விருப்பினராகச் செய்யேன். சகலபந்துக்களுக்கும் அன்பரும் மாசற்றவரு மான தமையனாரைக் காட்டிலிருந்து அழைத்துவரப் போகிறேன். நான் இராமரைத் திருப்பிக் கொண்டுவந்த பிறகு விளங்குகின்ற ஒளியுள்ள அவர்க்கு நிலையான மனத்தினால் அடியனாகப் போகிறேன். நீர் அக்கினியி லாவது பிரவேசியும் ; தண்டகையிலாவதுபுகும்; கழுத்திற் கயிற்றையாவது கட்டிக்கொள்ளும்; உமக்கு வேறொரு கதியில்லை என இவ்வாறு கோபமடைந்தவராய், பாம்பு போற் பெருமூச்சுவிட்டு, தோமரத்தாலும் அங்குசத் தாலும் குத்தப்பட்ட யானை காட்டுப் பள்ளத்தில் விழு வதுபோல் பூமியில் விழுந்தார்.
16. பரதர் சபதம்
வெகுநேரங் கழிந்தபின்னர் எழுந்திருந்து அறிவை யடைந்து சத்துருக்கனருடன் கௌசலையின் மாளிகையை நோக்கிப் புறப்பட்டார். பின்பு பரத சத்துருக்கனர்கள் கௌசலையைக் கண்டு துயரமடைந்து, துயரத்தினால் தோன்றிய வருத்தத்தினால் பூமியில் விழுந்து அறிவிழந்த வளும், புலம்புபவளும், பூஜிக்கத்தக்கவளும், நன்மனத்தை யுடையவளுமான அவளை, புலம்புதலோடு வெகு வருத்தப் பட்டுக் கிட்டி கட்டி யணைத்துக்கொண்டார்கள். மிகவுந் துக்கித்தவளான கௌசலை பரதரை நோக்கி, “இராச் சியத்தில் ஆசையுள்ள உன்னால் பகையற்ற இராச்சியம் அடையப்பட்டது. என் புதல்வன் எங்கே தவம்புரிகி றானோ அங்கு நீயே என்னை அழைத்துப்போதல் தக்கதே அது எனக்கு இஷ்டந்தான்” என்றாள்.
இவ்வாறு கொடிய வார்த்தைகளால் பயமுறுத்தப் பட்டவரான பரதர் விரணத்தில் ஊசியினால் வருத்தப் பட்டவர்போல் மிக்க வேதனையை அடைந்தார். பிறகு அவர் அஞ்சலியுடன் கௌசலையைப் பார்த்து “ஆர்யே, பட்டாபிஷேகம் முதலியவைகளைப்பற்றி யறியாதவனும் குற்றமற்றவனுமான என்னை ஏன் பழிக்கின்றீர்கள்? இராகவரிடத்தில் மிகுதியாகவுள்ள உறுதியான என் அன்பை தாங்கள் அறிவீர்களே” என்று சொல்லி கண வனையும் புத்திரனையு மிழந்த கௌசலையை சமாதானப் படுத்தி துக்கத்தாற் பீடிக்கப்பட்டவாாய் விழுந்தார்! கஷ்டம்! அப்போது சோகத்தாற் பரிதாபமடைந்த பரத ரை நோக்கி கௌசலை, “புதல்வனே, எனக்குத் துக்கம் மீண்டு முண்டாகிறது. நீ சபதஞ் செய்து என் பிராணனை வருத்துகிறாய்.என் புதல்வனே, உனது மனம் லக்ஷ்மணன் மனம்போல் தெய்வாதீனமாய்த் தருமத்தினின்று தவறாது நிற்கின்றது; உண்மையான பிரதிக்ஞையையுடைய நீ ஸத்துக்கள்டையுங் கதியை யடைவாய்” என சொல்லி, தமையன் மேல் அன்புவைத்தவரும் மகாபாகுவுமான அவரை மடியில் வைத்துக் கட்டி யணைத்துக் கொண்டு, மிக்க துயரப்பட்டவளாய்ப் புலம்பினாள்.
முனிவர்களி லுத்தமரான வசிஷ்டர், கைகேயியின் புத்திரரான பரதர் இவ்வாறு துயரத்தாற் பரிதபித்து நிற்க, அவரைப்பார்த்து, ராஜகுமாரரே, மிக்க புகழ் பெற்றவரே, இனி சோகத்தை விட்டிடுங்கள். உங்களுக்கு மங்கள முண்டாகுக.. தக்ககாலத்தில் மன்ன வரை சுவர்க்கத்தை யடைவிக்குஞ் சிறந்ததான கருமத்தைச் செய்திடுக என்றார். பரதர் வசிஷ்டருடைய வார்த்தையைக் கேட்டு தைரியமடைந்தவராய் பிரேதத்துக்குச் செய்யவேண்டிய எல்லாக் கருமங்களையுஞ் செய்தார்.
பிறகு பொழுது விடிந்தவுடன் பதினான்காம் நாள் அரசனையேற்படுத்திப் பட்டாபிஷேகஞ் செய்யுமவர்கள், ஒன்றுகூடிப் பரதரைப் பார்த்து, ”மூத்த குமாரராகிய இராமரையும் மகாபலம் பொருந்திய லக்ஷ்மணரையும் காட்டுக்கு அனுப்பிவிட்டு நமக் கெல்லாஞ் சிறந்த குரவ ரான தசரதமன்னவர் சுவர்க்கஞ் சென்றார். ராஜ குமாரரே, மிக்க புகழுடையவரே, தாங்கள் இப்பொழுது எங்களுக்கு அரசராகவேண்டும். இந்த ராஜ்யம் நாயக னற்றிருந்தும் தெய்வச் செயலால் குற்றஞ்செய்யாமலிருக்கிறது. ராஜ குமாரரே, இரகுவம்சத்திற் பிறந்தவரே, பட்டாபிஷேகத்திற்கு உரிய பொருளை சித்தமாக வைத்துக் கொண்டு அமைச்சர் முதலிய ராஜாங்கத்தவர் களும் பட்டணத்தவர்களும் தங்களை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.” என்றார்கள்.
விரதம்பூண்ட பரதர், பட்டாபிஷேகத்துக்கு உரிய எல்லாப் பொருள்களையும் வலம்வந்து, அந்தச் சனங்க ளெல்லாரையும் பார்த்து, “எப்பொழுதும் நமது குலத் தில் ஜ்யேஷ்டனுக்கே அரசு தக்கது. ஆகையால், ஜனங் களே, சமர்த்தர்களான நீங்கள். இவ்வாறு சொல்ல உரிய வரல்லீர்கள். எனக்கு முன் தோன்றியவரும் தமையனாரு மான இராமர் நமக்குத் தலைவர். நான் அவருக்குப் பிரதி நிதியாகப் பதினான்குவருஷங் காட்டில் வசிப்பேன். சதுரங்கமென்ற மிக்க பலத்துடன்கூடிய சேனை சித்த மாகட்டும். இராமருக்கு பட்டாபிஷேகஞ் செய்வதற் காக அபிஷேகத்திற்கு உரிய இவ்வெல்லாப் பொருள் களையும் முன்னிட்டுக் கொண்டு காட்டுக்குச் செல்வேன். அவ்விடத்திலேயே அவருக்குப் பட்டாபிஷேகம் செய்து யாகசாலையிலிருந்து திரேதாக்கினியைக் கொண்டு வருவது போல் காட்டிலிருந்து அவரை அழைத்துவரப் போகி றேன்.’ என்று மறுமொழி கூறினார். ஜனங்களெல் லோரும் இராமரைக் குறித்து இவ்விதமான வார்த்தை யைக் கூறும் பரதரைப்பார்த்து தாமரையில் வசிக்கும் லக்ஷ்மிதேவி இவ்விதமாகப்பேசுந் தங்களை யணைந்து வசிக் கட்டும். தாங்கள் அரசருடைய குமாரரான இராமரிடத் தில் பூமியைக் கொடுக்க விரும்புகிறீரன்றோ” என்றார்கள். பின்னர் தமக்கு சமீபத்திலிருந்த சுமந்திரரை நோக்கி, சுமந்திரரே, நீங்கள் சடிதியில் சென்று, என் கட்டளையால் விரைவில் யாத்திரையைப்பற்றி கட்டளையிட்டுச் சைநியத்தையும் அழைத்துவாருங்கள்’ என்றார். பரத ரால் இவ்வாறு சொல்லப்பட்ட சுமந்திரர் மகிழ்ச்சியோடு அவருடைய விருப்பத்திற்குத் தக்கவாறு அவர் கட்டளைப் படி உத்திரவிட்டார். இராமரை யழைத்துவரும் பொருட் டுக் கட்டளையிட்ட சைநியத்தின் யாத்திரையைக் கேட்டு பட்டணத்தோர்களும் சேனைத்தலைவர்களும் மிகவுஞ் சந்தோஷமடைந்தார்கள்.
பிறகு பரதர் எழுந்து காலைப்பொழுதில் சிறந்த தேரிலேறி. இராமரைக் காணவேணுமென்ற ஆவலால் விரைவிற் புறப்பட்டார். அவருடைய மந்திரிமார் புரோ கிதர்களெல்லாம், சூரியபகவானுடைய இரதத்தை யொத் தனவும் குதிரைகள் பூட்டப் பெற்றனவுமான இரதங்களி லேறி, அவருடைய முன்புறத்திற் சென்றார்கள். முறைப் படி சித்தமான ஒன்பதினாயிரம் யானைகளும், அறுபதி னாயிரம் இரதங்களும் பலவகைப் படைகளையுடைய வில்லாளிகளும், பின்தொடர்ந்தனர். நூறாயிரங் குதிரை கள், குதிரைக்காரர்களுடன் கூடியனவாய், சத்திய சந்தரும் ஜிதேந்திரியரும் இராமரை நோக்கிச் செல்பவரு மான பரதரைப் பின்தொடர்ந்து சென்றன. கைகேயியும் சுமித்திரையும் கௌசலையும் பிரகாசிக்கும் வாகனமேறி இராமரைத் திருப்பியழைத்துவரும்பொருட்டுச் சென்றார் கள். சனங்க ளெல்லோரும் மகிழ்ந்தவர்களாய் இரா மரை நாடிச் சென்றார்கள். சிருங்கிபேரபுரத்துக்குச் சமீபத்தில் சக்கரவாகப் பறவைகளால் விளக்கமுற்ற கங்கைக்கரையைச் சேர்ந்து எல்லா மந்திரிமார்களையும் பார்த்து, “எனது சேனையை அதன் விருப்பத்தின்படி எல்லாப் பக்கங்களிலும் தங்க விடுங்கள். இப்பொழுது சிரமமடைந்த நாம் நாளைத்தினம் இந்நதியைக் கடப் போம். சுவர்க்கத்தையடைந்த மன்னவரது மேலிடத்திலடைந்த உடம்பின் சுகத்திற்காக நதியிலிறங்கி ஜலங் கொடுப்பதற்கு விரும்புகிறேன் என்றார் பரதர்.இவ் வாறு சொல்ல, மந்திரிமார்கள், “அப்படியே என்று சொல்லி அச்சேனைத் தலைவர்களை அவரவரின் விருப்பின் படி வெவ்வேறாக இருக்க வைத்தார்கள்.
அங்கு கங்கைக் கரையிலேயே அவ்விரவு வசித்து, காலையில் எழுந்து மைத்திரமென்ற முகூர்த்தத்தில் பிரயாகை என்ற வனத்தை யடைந்து, பரதர், பரத்து வாச முனிவரது ஆச்சிரமத்தைக் கண்டு, புரோகிதராகிய வசிஷ்டரை முன்னிட்டுக்கொண்டு, காலால் நடந்துச் சென்றார். பின்பு பெருந் தவசியாகிய பரத்துவாசர், வசிட் டரைக் கண்டவுடன், சீடர்களைநோக்கி, அருக்கியங் கொண்டு வாருங்கள் ‘ என்று சொல்லிக்கொண்டு ஆசனத்திலிருந்து எழுந்தார். மிக்க தேஜஸ்வியான அவர், வசிட்டரைச் சேர்ந்து, பரதரால் அபிவாதனஞ் செய்யப் பட்டவராய், அவரைத் தசரத குமாரரென்று அறிந்தார். முறைப்படி பரத்துவாசர், பரதர், சத்துருக்கனர்களுக்கு அருக்கியத்தையும் பாத்தியத்தையும் பழங்களையுங் கொடுத்து க்ஷேமத்தை வினவி, இராச்சியத்தைக் காக்கும் நீர் இங்கு வரக் காரணமென்ன? இதை முழு வதும் என்னிடத்திற் சொல்லும். என் மனம் தெளிவு பெற வில்லை என்றார்.
இப்படிப் பரத்துவாசராற் சொல்லப்பட்ட பரதர் கண்களில் நீர் ததும்ப, “நான், என் தமயன் இராம ருடைய தாளில் அபிவாதனஞ் செய்யவும், அவரிடத்து நல்லவார்த்தைச் சொல்லவும், அவரை அயோத்திக்குத் திருப்பி யழைத்துப்போகவும் வந்தேன். தாங்கள் என்னைப்பற்றி இவ்வாறறிந்து என்னிடத்து அருள்புரிய வேண்டும். பகவானே, மன்னவரான இராமர் இப்பொழுது எங்கிருக்கிறார்? எனக்குச் சொல்லுங்கள்” என்று மறுமொழி கூறினர். பரத்துவாசர் அருளோடு பரதரைப் பார்த்து இராமர் சீதையுடனும் லக்ஷ்மண ருடனும் வசிக்குமிட மறிவேன். சித்திரகூட மகாபருவதத் தில் உமது தமையனார் வசிக்கிறார்.நாளை அவ்விடத் திற்குப் போவீர். இன்று மந்திரிகளுடன் இங்கு வசியும்.’ என்றனர்.
பரத்துவாசமுனிவர் பிறகு கைகேயியின் புத்திர ரான பரதரை விருந்தினருக்குச் செய்யவேண்டிய சத்கா ரத்தின் பொருட்டு வேண்டினார். அதிதி பூஜையைப் பெற்ற பரதர், அவ்விரவில் பரிவாரத்துடன் வசித்து, பின்பு இராமரைக் காணவேணுமென்ற விருப்பத்தால் பரத்வாசரை யடைந்து அஞ்சலி பந்தம் பண்ணிக் கொண்டு முனிவரை நோக்கி, அவரைச் சேவித்து வினவ லானார்: ”பகவானே, தங்களால் மிகவும் திருப்தி செய் விக்கப்பட்டு, நிறைந்த சைநியங்களும் வாகனங்களையு முடைய நான், மந்திரிகளுடன் சுகமாக வசித்தேன். இராமருடைய ஆச்சிரமத்தை எனக்குச் சொல்லுங்கள். அதற்கு வழியெது? இங்கிருந்து அது எவ்வளவு தூரத்தி லுள்ளது?” என்று கேட்டார்.
மகாதேஜஸ்வியான பரத்துவாசர், ‘பரதரே,இரண் டரையோசனை தூரத்துக்கப்பால் நிர்மாநுஷமான காட் டில் அழகிய குகைகளையும் காடுகளையுமுடைய சித்திர கூடமென்ற பருவதம் இருக்கிறது. சிறியீர். அவ்விடம் பர்ணசாலை இருக்கிறது; அங்குதான் இராகவரைக் காண்பீர் என்றனர். பரதர் அபிவாதனஞ் செய்து, அம்முனிவரிடத்தினின்றும் ஆசீர்வாதமடைந்து அவரை வலம்வந்து, அவரிடம் விடைபெற்று சைநியத்தை நோக்கி சித்தமாகும்படி கட்டளை யிட்டார்.
17. பரதர் இராமரைக் காணுதல்
ஸ்ரீமானான பரதர் வெகு தூரம் வழிகடந்து மந்திரி களிற் சிறந்தவரான வசிஷ்டரைப் பார்த்து, “என்னால் பரத்துவாசரிடத்திலிருந்து எவ்வாறு கேட்கப்பட்டதோ அவ்வாறே காணப்படுகின்றது இவ்விடத்தின் வடிவம். ஆகையால் நாம் பரத்துவாசமாமுனிவர் சொன்ன இடத்தை நிச்சயமாயடைந்துவிட்டோம். இது சித்திர கூடமலை: இது மந்தாகினீ நதி. இதோ கொஞ்சந்தூரத் தில் கார்மேகம்போற் கறுத்த காடு விளங்குகின்றது. சேனையிற் சேர்ந்தவர்களில் தக்கவர்கள் இராமலட்சு மணர்களை காட்டில் காணுமாறு தேடட்டும்; புறப் படட்டும் என்றார். பரதருடைய வார்த்தையைக் கேட்டு ஆயுதபாணிகளும் சூரர்களுமான புருஷர்கள் அக் காட்டிற் புகுந்தார்கள் ; பின்பு புதையையுங் கண்டார் கள். அவர்கள் தூமசிகையைக் கண்டு திரும்பி வந்து பரதரை நோக்கி, “மனிதரில்லாத இடத்தில் நெருப்பு இராது; ஆகையால் இவ்விடத்திலேயே இராமலட்சு மணர்க ளிருப்பது நிச்சயம்.’ என்றார்கள். பரதர் அவர் களுடைய மனத்திற்குப்பிடித்த வார்த்தையைக் கேட்டு அச்சைனியங்க ளெல்லாவற்றையும் நோக்கி, “நீங்கள் சத்தஞ்செய்யாமலிருங்கள். இங்கிருந்து இனிமேற் செல்லவேண்டாம். நானும் சுமந்திரரும் வசிஷ்டருமே செல்லப்போகின்றோம்” என்றார். பின்பு இவ்வாறு சொல்லப்பட்ட அவர்களெல்லோரும் அங்கேயே நான்கு பக்கத்திலும் இருந்தார்கள். பரதரும் தூமசிகையிருந்த இடத்தில் கண்வைத்தார்.
அங்கு வெகு நாள் வசித்தும் அப்பருவதத்தையும் அங்குள்ள வனத்தையும் புதியவற்றைப்போலக் கண்டு மகிழ்பவருமான இராமர், காலைக்கடனை முடித்தபின்பு, சீதையை மகிழ்விக்கவும். அதனால் தமது மனம் மகிழவும் விருப்பங்கொண்டு, சசீதேவிக்கு இந்திரன் காண்பிப்பது போல் தமது மனைவிக்குச் சித்திரகூடத்தைக் காட்டி, “மங்களகரையே, இராச்சியத்தை விட்டு வந்ததும் அன்பர் களை விட்டிருத்தலும் இரமணியமான இப்பருவத்தைப் பார்க்கும் என்னுடைய மனத்தை வருத்தவில்லை. நான் உன்னுடனும் லக்ஷ்மணனுடனும் இங்கு அநேக வருஷம் வசிப்பேனேயானால் அப்பொழுதும் துக்கம் என்னை வருத்தாது. நான் இந்த வனவாசத்தால் தந்தை யின் வாக்கை உண்மையாக்குதலும் பரதனுடைய பிரியத் தைச் செய்தலும் என்ற இரண்டு பயனடைந்தேன்” என்றார்.
அதன் பிறகு இராமர் சித்திரகூடபருவதத்தை விட் டுப் புறப்பட்டு அழகிய நீரையுடைய இரமணியமான மந் தாகினி நதியை சீதைக்குக் காண்பித்து அவளைப்பார்த்து “மனமொத்தவளே, சித்திரகூடவாசம் பட்டணத்தில் வசிப்பதினும் மிக்க இன்பந் தருகின்றது; மந்தாகினியின் தோற்றம் உன்னைக் காண்பதினும் அதிக சுககரமானது. தவம், ஐம்பொறி யடக்கல், மனத்தைவெல்லல் இவைக ளுடன் பொருந்தியவர்களும் மாசற்றவர்களுமான சித்தர் களாற் கலக்கப்பட்ட நீரையுடைய மந்தாகினியில் என் னுடன் ஸ்நாநஞ்செய்வாய்.நன்மடந்தாய், தோழியுடன் நீரில் மூழ்குவதுபோல என்னுடன் மந்தாகினி நதியில் மூழ்குவாய்.தருமாத்மாவான லக்ஷ்மணனும் என் கட்டளை யில் நிற்கின்றான்; வைதேகி, நீயும் எனக்கு அநுகூலை; ஆகையால் நீவிரிருவரும் எனக்கு மகிழ்ச்சியை விளைவிக் கின்றீர்கள். முக்காலமும் இந்நதியில் உன்னுடன் ஸ்நா நஞ் செய்து, தேன், கிழங்கு,கனி இவைகளைப் புசிப்ப தால். எனக்கு அயோத்தியின்மேலும் விருப்பமில்லை; இராஜ்யத்தின்மேலும் விருப்பமில்லை” என்று மிக்க அன் போடு மேலும் சொல்லிக்கொண்டு, கண்ணுக்கு மைபோற் கறுத்துத் தோன்றுஞ் சித்திரகூடத்திற் சஞ்சரித்தார்.
பரதர் தமது சைன்யத்தை நிறுத்திவிட்டு பெருங் கானகத்தில் தாள்களினாலேயே புகுந்தார். சித்திரகூட மலையிலுள்ள பூத்திருக்கும் ஆச்சாமரத்தின்மீது ஏறி இராமராச்சிரமத்திலிருக்கும் அக்கினியினது உயரவெழும் பும் புகையைக் கண்டார். அதைப் பார்த்து ஸ்ரீமானான பரதர், “இங்கு இராமர்” என அறிந்து, சுற்றத்தார்க ளுடன் ஆநந்தத்தாற் பரவசரானார். சமுத்திரத்தின் கரையை யடைந்தவன் போலவும் ஆனார்.
பின்பு பரதர் ஒரு முகூர்த்தத்தில் சித்திரகூடத்தை யடைந்து பெரியதும் மனோகரமானதுமான பர்ணசாலை யைக் கண்டார். ஒரு முகூர்த்தகாலம் உற்றுநோக்கி, பின்பு தமது குரவரும், பர்ணசாலையில் வீற்றிருப்பவரும், ஜடா மண்டலதாரியும் மான்தோல் தரித்தவரும், மரவுரியுடுத்த வருமான இராமர், தருப்பை பரப்பப்பட்ட பூமியில், சீதையுடனும் லக்ஷ்மணருடனும் வீற்றிருக்கக் கண்டார். “சுகத்திற்கு. உரிய இராமர் என்பொருட்டு இத்துக் கத்தை யடைந்தார். உலகத்தவராற் பழிக்கப்படுவதான கொடிய என்னுடைய உயிர் பழிக்கத்தக்கதே’ என புலம்பி எளிமையையடைந்து, முகத்தில் வேர்வைநீர் வடிய, இராமருடைய திருவடிகளை யடையாமல் விழுந் தார் ! சத்துருக்கனரும், புலம்பிக்கொண்டு இராமர் திரு வடிகளை வணங்கினார். இராமரும் அவ்விருவரையும் அணைத்துக்கொண்டு கண்ணீர் வடித்தார்.
இராமர் பிறகு பரதரை உச்சிமோந்து கட்டிக் கொண்டு தமது மடிமேல் வைத்து வெகு அன்புடன் கேட்கலானார்:”குழந்தாய், நீ காட்டுக்கு வந்தபடியால் கேட்கிறேன்; உனது தந்தை எங்கே போனார்? அவர் உயி ருடனிருக்க நீ காட்டுக்கு வருதல் தக்கதன்று. எளியவ ராய் லோகாந்தரத்தை யடையாமலிருக்கின்றாரா? யாகஞ் செய்ய உரியவனே, சிறியவனான உன்னுடைய உறுதி யான இராச்சியம் கைசோராமலிருக்கின்றதா? குழந்தாய், சத்தியத்திற் பராக்கிரமமுள்ள தந்தைக்கு பணிவிடை செய்கின்றனையா? தம்தம் தொழிலைச் செய்வதில் கருத் தூன்றியவர்களும் ஐம்புலன்களையு மடக்கியவர்களும் உத் தமர்களும் வெகு உத்ஸாகத்தோடு கூடியவர்களுமான ஆயிரக் கணக்காயுள்ள பிராமணர் க்ஷத்திரியர் வைசியர் இவர்களால் எப்பொழுதும் சூழப்பெற்றதும், பலவகை யான கோயில்களாற் சூழப்பட்டதும், வித்துவான்கள் நிரம்பியுள்ளதும், மிக்க மகிழ்ச்சியை யடைந்ததும், வள முள்ளதுமான அயோத்திமா நகரை அதனுடைய பேர் சத்தியமாம்படி நீ இரட்சிக்கிறாயா? இரகுவம்சத்தவனே, முதியவர்களையும் சிறுவர்களையும் சிறந்த வித்துவான்களை யும் தானம், அன்பு, இனியபேச்சு ஆகிய இம்மூன்றினா லும் வசப்படுத்திக்கொள்ளுகிறாயா? குருக்களையும்,பெரி யவர்களையும், தவசிகளையும், தெய்வங்களையும் விருந்தினர் களையும், நாற்சந்திகளிலுள்ளனவும் தெய்வங்களுக்கு வசிக்குமிடமுமான விருக்ஷங்களையும், யாகம் முதலியவற் றால் அவ்வுலக வின்பத்தை இவ்வுலகத்திலேயே பெற்ற அந்தணர்களையும் வணங்குகிறாயா? தருமார்த்த காமங் களைப் பிரித்து காலத்தில் நடத்துகிறாயா?”
இராமருடைய வார்த்தையைக் கேட்டு பரதர், “தருமத்தைக் கைவிட்ட என்னை ராஜதருமம் என்னசெய்யும்? ஆணேறே, அரசரே, ‘மூத்தகுமார னிருக்கும்பொழுது இளையவன் அரசனாவதில்லை’ என்ற சாசுவதமான தருமம் நம் முன்னோரிடத்திலிருந்தது. வளமுள்ள அயோத்திக்கு என்னுடன் வாருங்கள். நம்முடைய இக்குலத்தின் நன் மைக்காகத் தங்களை யபிஷேகஞ் செய்துகொள்ளுங்கள். தாங்கள் சீதையுடனும் லக்ஷ்மணனுடனும் புறப்பட்ட மாத்திரத்தில், அரசர் துக்கத்தாலும் சோகத்தாலும் மேலிடப்பட்டவராய் சுவர்க்கத்தைச் சேர்ந்தார். புருஷ ரிற் சிறந்தவரே, எழுந்திருங்கள்; தந்தையாருக்கு ஜல கிரியையைச் செய்யுங்கள். நானும் இந்தச் சத்துருக்கனனும் ஸபிண்டீகரணம் வரையிலுஞ் செய்யவேண்டிய எல் லாக் கிரியைகளையும் முன்னமே பண்ணிவிட்டோம். இராகவரே, இஷ்டரால் கொடுக்கப்பட்ட ஜலம் பித்ரு லோகத்தில் என்றும் குறையாததாகின்ற தென்றன்றோ சொல்லுகிறார்கள்; தாங்களே தந்தைக்கு இஷ்டர்” என்று கூறினார்.
இராகவர் தகப்பனாரின் மரணத்தைப்பற்றி பரதர் சொல்லைக்கேட்டு அறிவிழந்தவரானார். சோகத்தால் மெலி வடைந்து பூமியில் விழுந்த இராமரின்மேல் உடன் பிறந் தவர்கள் தண்ணீர் தெளித்தார்கள். இராமர் மீண்டும் அறிவையடைந்து, கண்களினால் நீரைச் சொரிந்துகொண்டு பரதரைப்பார்த்து, “அகோ! பரத, குற்றமற்றவனே, நீ பயன் கைகூடப்பெற்றவன்; எதனால் மன்னவர், பிரேத காரியங்களெல்லாங் கிட்டினவளவில், உன்னாலும் சத் துருக்கனாலும் கௌரவிக்கப்பட்டாரோ. நான். பிர தான புருஷனற்றும் ஆகுலத்தை யடைந்தும் அரசனில்லா மலு மிருக்கும் அயோத்தியை வனவாசத்தினின்று திரும் பின பின்பும் அடைய விரும்பேன்’ என வெகு தருமத் துடன் கூடிய சொற்களைக் கூறினார்.
இராமர் இவ்விதமாகப் பரதரைப்பார்த்துச் சொல்லி துயரத்தால் தபிக்கப்பட்டவராய் பூர்ண சந்திரன் போன்ற முகத்தையுடைய மனைவியிடஞ் சென்று சீதே, உன் மாமனார் மரணமடைந்தார். லக்ஷ்மணா, தந்தையை யிழந்தவனாகின்றாய். பரதன் துக்கமுண்டாம்படி தந்தை சுவர்க்கமடைந்தாரெனச் சொல்லுகிறான்’ என்றார். சீதை மாமனார் இறந்ததைக் கேட்டு நீர் நிறைந்த கண்களால் தனது கணவரை பார்க்க முடியாதவளாக இருந்தாள். பிறகு இராமர் உடன் பிறந்தவர்களுடன் மந்தாகினி தீரத்தினின்று சிறிது தூரங்கடந்து தனது தந்தைக்குப் பிண்ட பிரதானஞ் செய்தார். சீதையுடன் புலம்புகின்ற அவ்வுடன்பிறந்தவர்களுடைய ஒலியால், பருவதத்தில் எதிரொலியுண்டாயிற்று. அப்பேரொலியையறிந்து பரத ரின் சைநியத்திலுள்ளவர்கள் அச்சமடைந்தவர்களாய் பின்பு “பரதர் இராமரைச் சேர்ந்தாரென்பது திண்ணம்” என்று பேசினார்கள். இராமரைக்காண ஆவல் கொண்ட வர்களாய் விரைவாய் ஆச்சிரமத்தை நோக்கிச் சென்றார்கள். வசிஷ்டர் தசரதருடைய மனைவிமார்களை முன் னிட்டுக்கொண்டு சென்று ஆகாசத்திலிருந்து நழுவி விழுந்த தேவஜாதியிற் பிறந்தவனைப் போன்ற இராமரை ஆசிரமத்திற் கண்டார்.
எல்லாவிதமான போகங்களையு மொழித்த இராம ரைப் பார்த்து தாய்மார்கள் சோகத்தால் மெலிந்தவர் களாய் வருத்தமுற்றுக் கூக்குரலிட்டுக் கண்ணீர் விட் டார்கள். இராமர் எழுந்திருந்து அவர்களுடைய அழ கிய பாதங்களில் வணங்கினார். லக்ஷ்மணரும் அந்தத் தாய் மார்களெல்லாரையுங் கண்டு துக்கித்தவராய், இராமர் நமஸ்காரம் பண்ணின பிறகு தாமும் அபிவாதநஞ் செய் தார். சீதையும் மாமியாரான அவர்களுடைய பாதங் களில் வணங்கி, துக்கித்தவளாய், நீர் நிறைந்த கண்களை யுடையவளாய், அவர்கள் முன்னின்று கொண்டிருந்தாள். கௌசலை வனவாசத்தாலிளைத்து எளிமையை யடைந்து துக்கத்தால் வருந்துஞ் சீதையை தாய் மகளைக் கட்டி யணைப்பதுபோல கட்டியணைத்துக்கொண்டு, “விதேக ராஜருடைய மகளாயும் தசரத மன்னருக்கு மருகியாயும் இராமனுடைய மனைவியாயுமிருந்து நிர்மானுஷமான இக் காட்டில் எவ்வாறு துக்கத்தை யடைந்தாய்! உன் முகத் தைப் பார்க்கும் என்னை சோகாக்கினி நெருப்பு தான் இருக்குமிடத்தை யெரிப்பதுபோல் மிகவு மெரிக்கிறது” என்று கூறினாள். இராமர் துயரத்தால் வருந்துந் தமது தாயார் இவ்விதமாகப் பேசிக்கொண்டிருக்கும் பொழுது வசிஷ்டருடைய திருவடிகளைக் கிட்டி வணங்கினார்.
லட்சுமணருடன் கூடிய இராமர் தம்பியைத் தம் மேல் மிக்க அன்புடையவராக அறிந்து, “நீ, ஜடையையும் மரவுரியையுந் தரித்து இராச்சியத்தை விட்டிட்டு எந்த காரணத்தினால் இத்தேசத்திற்கு வந்தனையோ அதைக் கேட்க விரும்புகிறேன். கிருஷ்ணாஜினம் ஜடை இவை களைத் தரித்தவனாய் எதற்காக இத்தலத்திற் புகுந்தாய்? அதெல்லாவற்றையும் நீ சொல்ல வுரியாய்” என்று வினவி னார். மகாத்மாவான காகுத்தரால் நன்றாய்க் கட்டித் தழு விக்கொண்டு இவ்வாறு மீண்டுங் கேட்கப்பட்ட பரதர் அஞ்சலி செய்துகொண்டு, “இப்பொழுதே தேவேந்திரன் போல் இராச்சியத்தால் அபிஷேகம் பண்ணிக்கொள்ளுங் கள். மந்திரிமார் முதலிய இந்தப்பிரகிருதிகளனைவரும், கைம்பெண்களான தாய்மார்களும், தங்கள் சமீபத்தை யடைந்திருக்கின்றார்கள்: ஆகையால் அருள்புரிய வுரியீர். இராச்சியத்தைத் தருமத்தாலடையுங்கள்; நண் பர்களை விருப்ப மடைந்தவர்களாகச் செய்யுங்கள். தலைவ ரான தங்களால் நிறைந்த பூமி தலைவனற்றிருத்தலை யிழந்ததாகட்டும்” என்று சொல்லி நீர்நிறைந்த கண்ணின ராய், இராமருடைய திருவடிகளை மீண்டும் முறைப்படி பிடித்துக்கொண்டார்.
இராமர் மதித்த யானையோல் அடிக்கடி பெருமூச் செறியும் தமது தம்பி பரதரைக் கட்டியணைத்து,”நற் குலத்திற் பிறந்தவனும், சத்துவகுணத்தை மிகுதியாக வுடையவனும். பராக்கிரமசாலியும், நல்லொழுக்க முள்ளவனுமான உன்னைப்போன்றவன் இராச்சிய விஷயமாக, மூத்தவனுக்கெதிரா யிருத்தலாகிற பாபத்தை எவ்வாறு செய்வான்? சத்துருக்களை யடக்கு பவனே, உன்னிடத்தில் நுண்ணிய குற்றத் தையும் நான் காணவில்லை.நீ பிதா கொடுத்த பாகத்தை உள்ளபடி யனுபவிக்கவுரியாய். நான் பதினான்கு வருஷம் தண்டகாரணியத்தை யாச்சிரயித்தவனாய், மகாத்மாவாகிய தந்தையாரால் கொடுக்கப்பட்ட பாகத்தை யனு பவிப்பேன். அவருடைய கட்டளையை மீறுதல் எனக்குத் தக்கதன்று ; எப்பொழுதும் அக்கட்டளை உன்னாலும் மேற்கொள்ளத்தக்கதே; அவர்தாம். நமது பந்து” என சொல்லி நின்றார்.
தார்மிகரான பரதர், இராமர் இவ்வாறு பொரு ளோடு கூடிய வார்த்தையைச் சொல்லி நின்றபின்பு, அற நெறியிற் பிழையாத விசித்திரமான வார்த்தையைக் கூற லானார்:-“நான். பரிசுத்தமானதும் பெரியவர்களா லநுஷ்டிக்கப்படுவதுமான தொழிலையே செய்யும் தசரத ரிடத்தினின்று பிறந்து, தருமத்தையும் அறிந்து, உலகத் தார் வெறுக்கும் அதருமகாரியத்தை எவ்வாறு செய் வேன்.? மிக்க அறிவினரே, க்ஷத்திரியர்களுடைய முதல் தருமம் குடிகளைப் பரிபாலனம் பண்ணக்கூடிய அபிஷே கஞ் செய்துகொள்ளுவதன்றோ! கண்ணுக்குத் தோன் றுஞ் சுகத்துக்கும் பரலோகத்துக்குஞ் சாதனமான குடி களைக் காத்தலாகிற தருமத்தைக் கைவிட்டு, அப்பிரதி யட்சமான பயன் விளைவையுடையதும்,நிர்ணயிக்கப் பட்ட லக்ஷணமற்றதும், காலாந்தரத்தில் பயனை விளை விப்பதும், க்ஷத்திரியன் முதலில் அனுஷ்டிக்க வேண்டு மென்று ஒருவராலும் அறுதியிடப்படாததுமான தவசி களின் தருமத்தை எந்த க்ஷத்ரியன் அனுஷ்டிப் பான்? சிரமத்தை விளைக்குந் தருமத்தைச் செய்ய தாங் கள் விரும்புவீர்களேயானால் முறைப்படி நான்கு வரு ணங்களையும் பாதுகாத்துச் சிரமத்தை யடையுங்கள். இவ் விடத்திலேயே வசிஷ்டமகா ரிஷியுடன்கூடிய மந்திர மறிந்த ரித்விக்குகள், மந்திரிமார் முதலிய பிரகிருதிகளுட னொன்றுசேர்ந்து, பட்டாபிஷேகத்தைத் தங்களுக்கு முறைப்படிநடத்தட்டும். நான் தங்களைத் தலையால் வேண்டிக்கொள்ளுகிறேன்” என்றார்.
பின்பு இராமர் மறுபடியும் இவ்வாறு சொல்லும் பரதைரைப்பார்த்து, “உடன்பிறந்தவனே, முற்காலத் தில் உனது தாயரை மணம்புரிந்து கொண்டபொழுது, நமது தந்தையார். உனது பாட்டனாரிடம் ‘தங்கள் பெண்வயிற்றிற் பிறக்கும் புத்ரனுக்கு இராச்சியத்தைக் கொடுக்கிறேன்’ என்று பிரதிஜ்ஞை பண்ணினார்.உனது தாய் உனக்கு இராச்சியமும் எனக்கு வனவாசமும் ஆக இரண்டுவரங் கேட்டார்; மன்னவர் இரண்டுவரத்தை யும் கொடுத்தார். அதனால் நான் ஒருவராலுந் தடுக்க முடியாதவனாய் சீதையுடனும் லக்ஷ்மணனுடனும்’ இக் காட்டை யடைந்தேன்; அரசரிற் சிறந்தவனே, நீயும் ‘அப்படியே’ என்று ஒப்பி வெகுசீக்சிரமாக பட்டாபி ஷேகஞ் செய்துகொள்வதனால் தந்தையைச் சத்தியவாதி யாகச் செய்ய வுரியை. பரதனே, நீ மன்னவரைக் கடனிலிருந்து நீக்கிவை; தாயையும் களிக்கச்செய்” என்றார்.
18. பரதர் பாதுகைப் பெற்றது
வசிஷ்டர் இராமரைப் பார்த்து அப்போது கூறலா இவ்வுலகத்தில் பிறந்த புருஷனுக்கு மூன்று குர வர்களுண்டு; காகுஸ்தரே, அவராவார். ஆசிருயரும் தந் தையும் தாயும். சத்துருக்களைத் தவிக்கச் செய்பவரே, நானோ தகப்பனாருக்கும் தங்களுக்கும் ஆசிரியன். தாங் கள் என் சொல்லைச் செய்து முன்னோர் சென்ற வழியைக் கடவாதிருங்கள். இராகவரே, இரக்கின்ற பரதருடைய பேச்சுப்படி நடந்து அடைந்தவர்க்கு வசப்பட்டிருத்த லாகிற குணத்தைக் கடவாதிருங்கள்.” ‘இவ்வாறு மதுர மாகக் குருவாகிய வசிஷ்டராற் கூறப்பட்டவராய், இரா மர் வசிஷ்டரைப் பார்த்து, “தசரத மன்னவர் என்னைப் பெற்ற தந்தை; அவர் எனக்கு இட்ட கட்டளை பொய் யாகமாட்டாது” என்றார். பின்பு பரதர், சபையோர் களே, மந்திரிமார்களே. பட்டணத்தவர்களே, கேளுங்கள். நான் பிதாவினிடத்தில் இராச்சியத்தை வேண்ட வில்லை. ‘இவ்வாறு செய்யும்’ என்று தாய்க்குங் கட்டளை யிடவில்லை. மகா தருமஜ்ஞரும் பெரியவருமான இராமர் காட்டுக்குப் போக நான் மனமொப்பவுமில்லை. அவசியம் இராமர் காட்டில் வசிக்கவேண்டுமென்றும் அவர் பித்ரு வாக்கியபரிபாலனம் பண்ணவேண்டுமென்றும் நீங்கள் எண்ணுகிறீர்களேயானால், நானே அவருக்குப் பதிலாகக் காட்டில் பதினான்கு வருஷம் வசிப்பேன்” என்றனர்.
அங்குச் சேர்ந்த மகரிஷிகள் ஒப்பற்ற காந்தியை யுடைய அவ்வுடன்பிறந்தவர்களின் மயிரைச் சிலிர்ப்பிகிக் குஞ் சேர்க்கையைப் பார்த்து ஆச்சரியமடைந்தவரானார் கள். அதன் பிறகு ராஜரிஷிகளும் தேவரிஷிகளும் கந் தருவர்களும் சீக்கிரம் இராவணனுடைய வதத்தை விரும் பினவர்களாய் ஒற்றுமையை யடைந்து இராச சார்த்தூலராகிய பரதரைப் பார்த்து, ‘நற்குலத்திற் பிறந்தவரே, மிக்க அறிவுடையவரே, நல்லொழுக்க முடையவரே, மிக்க புகழ்படைத்தவரே, பிதா நற்கதி ‘யடையவேணுமென்று கருதுகின்றீரேயானால், இராமருடைய வார்த்தையை யங்கீகரிக்கவேணும்.நாங் கள் இராமரைத் தந்தையின் கடனை நீக்கியவராயிருக் கும்படி எப்பொழுதும் விரும்புகின்றோம்” என்று சொல்லி தம்தம் கதிகளை யடைந்தார்கள். நல்லவற்றையே யறிய மவரான இராமர் அவ்வழகிய வார்த்தையால் மகிழ்ந்து மலர்ந்தமுகத்துடன் அவர்களைப் பூஜித்தார். பரதர் மெய்நடுங்க இராமரைப்பார்த்து, அஞ்சலிபந்தம் பண் ணிக்கொண்டு, ”காகுஸ்தரே. நானொருவனாக இந்தப் பெரிய இராச்சியத்தை இரட்சிக்க வல்லமையுள்ளவ னன்று. பெரியவரே, பொன்னினாலலங்கரிக்கப்பட்ட பாது கைகளைத் தாள்களினால் ஏறுக: இவைகள் எல்லாவுல் கத்தின் யோகக்ஷேமங்களைச் செய்யும்” என்றார்.மிக்க தேஜஸ்வியான அந்த மனிதப்புலியானவர் பாதுகைகளிலேறி யிறங்கி மகாத்மாவான பரதருக்கு அப்பாதுகை களைக் கொடுத்தார்.பரதர், பாதுகைகளை வணங்கி, இராமரை நோக்கி, “வீரரே, நான் பதினான்கு வருஷ காலம், ஜடைதரித்து, மரவுரி யுடுத்து, பலங்களையும் மூலங்களையும் உணவாகக்கொண்டு, தங்கள் பாதுகை யிடத்தில் இராச்சிய தந்திரத்தைவைத்து, பதினான்கு வரு ஷம் நிரம்பின பின்பு அடுத்தவருஷத்து முதல்தினத்தில் தங் களைக் காணாவிடின், அக்கினியிற் புகுவேன்” என்றார். இராமர் அப்படியே யென்று பிரதிஜ்ஞைபண்ணி அவரை அன்புடன் தழுவியணைத்து சத்துருக்கனரையுந் தழுவி பரதரைப்பார்த்து,தாயான கைகேயியைக் காப்பாற்று; அவர்மேல் கோபங் கொள்ளாதே. இரகுவம்சத்திலுத்த வனே, என்னாலும் சீதையாலும் ஆணையிடப்பட்டிருக் கிறாய்” எனக் கூறி, நீர்கொண்ட கண்ணினராய் தம் விடை கொடுத்தார்.
அதன்மேல் பரதர் பாதுகைகளை தலையின் மேல் வைத்துக்கொண்டு அயோத்தியில் விரைவிற் புகுந்தார். பிறகு பரதர் தமது தாய்மார்களை அயோத்தியில் விட்டிட்டு, சோகத்தால் தாபமடைந்தவராய், பெரியோர் களைப் பார்த்து, “நான் இப்பொழுது நந்தி கிராமத்திற் குப் போக உங்களெல்லாரிடத்திலும் விடைகேட்டுக் கொள்ளுகிறேன். இராமரைப் பிரிந்ததாலுண்டாகுந் துக்கத்தை அங்குப் பொறுப்பேன்” என்றார். மகாத்மா வாகிய பரதருடைய அழகிய வாக்கியத்தைக்கேட்டு எல்லாமந்திரிகளும் புரோகிதாரகிய வசிஷ்டரும்,பர தரே, தமையனாரிடத்து அன்பால் தாங்கள் சொன்ன மிகக் கொண்டாடத்தக்க சொல் தங்களுக்கே தக்கது” என்றார்கள்.
அதன்பின்பு பரதர் நந்திகிராமத்திற் புகுந்து சீக்கி ரம் இரதத்தைவிட்டுக் கீழேயிறங்கித் தமது குரவர்களைப் பார்த்து, ”எனது தமையனாராற் கொடுக்கப்பட்ட இந்த இராச்சியத்தினுடைய யோகக்ஷேமங்களை நடத்துபவை பொன்னாலலங்கரிக்கப்பட்ட இப்பாதுகைகளே” என்று சொன்னார். அதன் பின்னர் பரதர் தமக்குப் பதிலாக ராமரால் அளிக்கப்பட்ட அம்மரவடிகளைத் தலையால் தாங்கி, துக்கத்தால். தபித்துக்கொண்டு, மந்திரிமார் முதலான பிரகிருதிகளெல்லாரையும் நோக்கி, இவ்விரு பாதுகைகளும் எனது பெரியவருடையன; இவைகளுக்குக் குடை முதலியவைகளைச் சீக்கிரம் பிடியுங்கள். எனது பெரியவருடைய இப்பாதுகைகளால் இராச்சியத்தில் தருமம் தங்குகின்றது. எனது தமையனார் என்மீதுள்ள அன்பால் மரவடியாகிற இந்தப் பிரதிநிதியை யளித்தார். நான் இராமருடைய – வரவை யுத்தேசித்து இப்பிரதி நிதியைக் காப்பேன்” என புலம்பி நந்திகிராமத்தில் மந்திரிகளுடன் மரவுரியுடுத்து சடைமுடிதரித்து முனி வேஷம் பூண்டு அரசு புரிந்தார்.
பின்பு இராமர், ரிஷிகள் போனவளவில், இவ்வி டத்தில் நான் பரதரைக் கண்டேன்; நகரத்தார்களு டன் தாய்மார்களையுங் கண்டேன். நித்தியம் என் நினைவு அவர்களைப் பின் செல்கின்றது எனப் பல காரணங்களை யாலோசித்து வேறு இடத்திற்குத் செல்வோமென் றெண்ணினார்.
– தொடரும்…
– வால்மீகி ராமாயணச் சுருக்கம் (நாவல்), முதற் பதிப்பு: 1900, கே.மகாதேவன், பிரசுரகர்த்தர், விஜயதசமி, 17-10-1953.