கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதை வகை: முதல் அத்தியாயம்
கதைத்தொகுப்பு: ஆன்மிகக் கதை  
கதைப்பதிவு: October 2, 2024
பார்வையிட்டோர்: 7,596 
 
 

(1900ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

பண்டித நடேச சாஸ்திரி முகவுரை

இப்பூதலத்தின்கண் பண்டித பாமர ரஞ்சகமாய், கற்பனைக் களஞ்சியமாய், நவரசம் நிறைந்ததாய், சொல்லினிமை பொருளினிமை யுள்ளதாய், கேட்போர்க்குத் தெவிட்டாத தேன்போன்றதாய், படிப்போர் உள்ளத்தைக் கொள்ளை கொள்வதாய், ஷண்மதஸ்தர்களும் ஏத்திப் போற்றத் தக்கதாய், பிறமதஸ்தர்களும் கொண்டாடுதற் குரியதாய், உலக வியல்புகளை உள்ளங்கை நெல்லிக் கனிபோல் மிகத் தெளிவாக எடுத்துக் காட்டுவதாய்,கம் பீரமான நடையுடையதாய், நம்முன்னோரின் நாகரிகச் சிறப்புக்குப் பெரிய திருஷ்டாந்தமாய் ஸம்ஸ்கிருதபாஷையில் விளங்கும் கிரந்தம் யாதென்றால், அது வால்மீகி மகாரிஷி அருளிச்செய்த ஸ்ரீமத் ராமாயணமேயாகும். பரமாத்ம ஸ்வரூபியாகிய ஸ்ரீ ராமபிரானது சரித்திரம் இராமாயணம். அது இதிகாசங்களிரண்டில் ஒன்று. மற்றோர் இதிகாசம் ஸ்ரீ மகாபாரதம். மகாபாரதம் உண்டாவதற்கு வெகு காலங்களுக்கு முன் இராமாயணம் தோன்றி எழுத்தில் ஏற்படுத்தப்படாமல் வேதம்போல் ஜனங்களுக்குள் அத்தியயனை ரூபமாய் விளங்கிவந்ததென்றும், இராமாயணத்தில் கூறப்பட்டிருக்கும் விஷயங்கள் மகாபாரதத்திலிருக்கும் விஷயங்களைக் காட்டிலும் பழமையான விஷயங்களென்றும் தெரிகிறது. 

இராமாயணம் வேதத்தைப்போலவே சிறப்புற்ற வைதிக நூல். வேதப்பொருள் அநேகம் அதில் அடங்கியிருக்கின்றன. இது காரணங்கொண்டே அதைப் பாராயணத்துக்கு யோக்கியமானதென்று எல்லோரும் கொண்டாடுகிறார்கள். 

இராமாயணத்தை லௌகிகமாய் ஆராயுங்கால் நம் நாட்டார் தினந்தோறும் அதைப்பற்றிப் பேசாத நேரமு முண்டோ? அக்கதை தெரியாத மனிதரும் உளரோ? அதை வாசியாத குடும்பந்தானுண்டோ? “இராமர் என்றால் பாவம்போம், சீதை என்றால் துக்கம்போம்” என்று ஒவ்வொரு தாய்மாரும் தாலாட்டுகிறதை நாம் பிரதிதினமும் கேட்கவில்லையா? “இராமாயண கதை இன்பம்; அதைக் கேட்டிடில் அகன்றிடும் துன்பம்” என்று வழங்குவதை அறியாதவரெவர்? இவைகளா ஜனங்களுக்கு அதனிடத்தில் எவ்வளவு மதிப்பு ஏற்பட்டிருக்கிறதென்பதை ஊகித்துக்கொள்ளலாம். 

இராமாயணத்தின் முக்கிய கருத்து என்னவெனில், உத்தம புருஷர்கள் உத்தம ஸ்திரீகள் இவர்களுடைய சரித்திரத்தை எடுத்தெழுதி உலகத்தாருக்கு நற்போதனை செய்ய வேண்டுமென்பதே. இதனை ஸ்ரீ வால்மீகி மக ரிஷி ஸ்ரீ நாரதமுனிவரிடம் கேட்ட கேள்வியாலேயே அறிந்துகொள்ளலாம். அதன் நடைக்காகவும் கம்பீர அபிப்பிராயத்துக்காகவுமே அதைப் பிறதேசத்தவரும் மிகவும் மேலாக மதித்துக் கொண்டாடுகிறார்கள். தரும சாஸ்திரங்களிற் சொல்லப்பட்ட நீதிகளெல்லாம் அதன் கதையில் விளங்குகின்றன. தெய்வபக்தி, மாதிருபக்தி, பிதிருபக்தி, ஆசாரிய பக்தி, சத்தியம், பொறுமை, ஜீவகாருண்ணியம், வர்ணாசிரம தருமம், மாதர் ஆடவர் தருமம், பதிவிரதா தருமம், சகோதர வாஞ்சை, நட்பு, பெரியோரிடத்தில் மரியாதை, விருந்தோம்பல், செய்ந் நன்றி யறிதல், செங்கோல், இராஜ தந்திரங்கள், அன்பு, தயை, நடுநிலைமை, நன்மை தீமையின் பயன், சரணமடைந்தோரைக் காப்பாற்றும் உத்தம குணம் முதலிய மேலான நீதிகள் அதில் வெகு அழகாக எடுத்துக் காட்டப்பட்டிருக்கின்றன. 

இவ்வளவு மாண்புள்ள இச்சிரேஷ்ட காவியம் சில வருஷங்களுக்கு முன்வரை வெகு பக்தி சிரத்தையுடன் பலராலும் படனம் செய்யப்பட்டு வந்தது. ஒருமுறை ஆதியோடந்தமாய் அர்த்தத்துடன் வாசித்து முடிக்க அவரவர் சக்திக்குத் தக்கபடி ஆறு மாதம் முதல் ஒரு வருஷம் வரை செல்லும். நான்கு மாதங்களிலும் சிலர் முடித்திருக்கிறார்கள். எந்த இடத்தில் எப்படிப்பட்டவர் படித்தாலும் எட்டு மிரண்டும் அறியாத இளம்பிள்ளைகள் ஸ்திரீகள் முதல் மகாபண்டித சிரோமணிகள் ஈறாகச் சகல ஜனங்களும் இக்கதையை வெகு நேரம் விழித்திருந்து மிக்க பக்தி சிரத்தையுடன் கேட்பது வழக்கம். அதனால் தான் நம் தேசத்தில் பலர் கையெழுத்தும் வைக்கத்தெரியாத நிரக்ஷரகுக்ஷிகளாயிருப்பினும் விவேக சூனியராயிரார்கள். நம் தாய்மாரும் பாட்டிமாரும் எத்தனை சமயங்களில் இராமாயண திருஷ்டாந்தங்கள் கூறியுக்தி புத்தியாய் நாம் அதிசயிக்கும் வண்ணம் ஆலோசனை சொல்லக் கேட்டிருக்கிறோம். நம் நாட்டு அறிவு விருத்திக்கும் சன்மார்க்கத்துக்கும் இராமாயண பாரத இதிகாசங்களே முக்கிய காரணம். அறிவின் பயனெல்லாம் ஜனங்களின் மன இருளைப் போக்கித்தருமமும் சத்தியமுமான வழியிலே நடத்துவதில் அடங்கும். இந்த நுட்பம் அறிந்தே திரிகாலஞானிகளாகிய நம் பெரியோர்கள் இவ்விதிகாசத்துக்கு இவ்வளவு கௌரவம் கொடுத்துவந்தார்கள். 

இவ்வினிய கிரந்தத்தை எல்லோரும் அறியவேண்டியது அவசியம். ஸம்ஸ்கிருத அப்பியாசமில்லாதவர்கள் பிறர் உதவியைக்கொண்டே அறியவேண்டியிருக்கிறது. ஆகையால் இதனை மொழிபெயர்த்தால் பலருக்கும் உபயோகமாயிருக்குமென்று கருதிப்பரோபகார சிந்தையுடன் மொழிபெயர்க்கத் தொடங்கினோம். நம் தேச அபிவிருத்தியையும் சன்மார்க்க அபிவிருத்தியையும் கருதிய ஸ்திரீ புருஷாகள் அனைவரும் இளையோராயினும் முதியோராயினும் இப்புத்தகத்தை ஒரு பூஷணமாக எண்ணி படித்து இம்மகா கிரந்தத்தின் அருமை பெருமையைப் பாராட்டி ஆனந்திப்பார்களே யானால் நாமும் நம் பெருமுயற்சி பயனடைந்ததாகக் கருதுவோம். அவர்களும் சகல போகங்களும் அனுபவித்து இராமகிருபையால் சுகமுறுவர்கள் என்பது திண்ணம். “ஸர்வேஜநாஸ் ஸு கிநோ பவந்து” “ததாஸ்து.” 

திருவல்லிக்கேணி
1900 டிசம்பர்மீ 1உ.
ச. ம. நடேசி சாஸ்திரி. 

பிரசுரகர்த்தர் குறிப்பு 

சுமார் ஐம்பது வருஷங்களுக்கு முன் வால்மீகி ராமாயணத்தின் பாலகாண்டம் பண்டித S.M.நடேச சாஸ்திரியாரால் வசன நடையில் மொழி பெயர்க்கப்பட்டு, மஹாமஹோபாத்யாய உ.வே.சாமிநாதய்யரால் பார்வையிடப்பட்டு, எனது தந்தையார் வே.கல்யாணராம ஐயரால் பிரசுரிக்கப்பட்டது. பின்னர் யுத்தகாண்டம் முடிய மற்ற ஐந்து காண்டங்களும் சாஸ்திரியாராலும் தி.த.கனக சுந்தரம் பிள்ளையாலும் மொழி பெயர்க்கப் பட்டு, ஸ்ரீமான் ஐயராலும், வை.மு.சடகோபராமானு ஜாசாரியாராலும், வை.மு.கோபால கிருஷ்ணமாசாரியாராலும் முறையே பார்வையிடப்பட்டு வெளியாயின. சில காண்டங்கள் மற்றும் ஒரு முறையும், சில பன்முறையும் அச்சிடப்பட்டு இதுகாறும் சுமார் 25,000 பிரதிகள் வெளி வந்துள்ளன. 

இக்காலத்தில் இப்பெருங் காவியத்தை முன்போல் அச்சிடுவது சிரமசாத்தியமானது. அதற்குக் காரணங்களில் காகிதத்தின் விலை யேற்றமும் அச்சுக்கூலியில் உயர்வும் முக்கியமானவை. மேலும் வாரப் பத்திரிகைகளும் மற்றப் பத்திரிகைகளும் மேலிட்டதனாலும் Novel எனப் பட்ட நவீன கதைகள் அதிகமானதினாலும், ராமாயணக் கதையை சாவதானமாக ஆதியோடந்தம் வரை வாசிப்பவர்கள் குறைவு. 

ஆனால், ஸ்ரீ நடேச சாஸ்திரியார் தமது முகவுரையில் சொல்லியதுபோல நம் நாட்டார் பாலர் விருத்தர் யாவரும் ராமாயணக் கதையைப் படித்து அதனுள்ள கருத்துக்களை யறிந்து நல்வழியில் ஒழுகவேண்டியது என்பது அத்யாவச்யம். இவ்வுத்தேசத்திற்கிணங்க இச்சுருக்கத்தை வெளியிடலானேன். இச்சுருக்கம் எல்லாருக்கும் திருப்தி யளிக்குமென்று எண்ண முடியாது. வேறு சில பகுதிகளை சேர்க்கலாமென்று எண்ணுபவர் பலர் இருக்கலாம். சில பாகங்களை ஒதுக்கியிருக்கலாமென்பவரும் சிலர் இருக்கலாம். வால்மீகியின் காவ்யத்தின் காம்பீர்யத்தை அனுபவிக்க வேண்டுமானால் வடமொழியில்தான் வாசிக்க வேண்டும். அதற்கு அடுத்தபடியாக வடமொழியின் விசேஷ பகுதிகளை யனுசரித்து இச்சுருக்கம் அநேகருக்கு உபயோகமுள்ளதாய் இருக்குமென்றும், திருப்தியளிக்குமென்றும், பள்ளிக்கூடங்களில் பாடப்புத்தகமாக உபயோகப்படக் கூடுமென்றும் பிரசுரிக்கலானேன். 

இச்சுருக்கத்தை பூரணமாய் செய்யுமாறு உத்திரகாண்டத்தின் சுருக்கமும் செய்வித்து சேர்த்திருக்கின்றேன். 

விஜயதசமி
17—10—1953. 
K. Mahadevan. 
பிரசுரகர்த்தர். 


பாலகாண்டம் | அயோத்தியா காண்டம்

1. கதைச் சுருக்கம்

உலகமும் பல்லுயிருமொன்றிநிரைந்தோங்கி யிலகும் பகவன் திணையடி மறவா வால்மீகி முனிவர், தவம் வேதாத்தியயனம் இவைகளை எப்பொழுதும் செய்கின்ற வரும், கற்றறிந்தவர்களுள் உத்தமரும், முனிவர்களிற் சிறந்தவருமாகிய நாரதரைப் பார்த்துக் கேட்கலானார்:- ஐயா முனிவரே, இக்காலத்தில் இவ்வுலகத்தில் எல்லா விதமான சிறந்த குணங்களும் பொருந்தியிருக்கும் உத்தம புருஷன் ஒருவன் இருக்கின்றானா? பராக்கிரமசாலியும், தருமங்களை அறிந்தவனும், நன்றி மறவாதவனும், உண் மையையே பேசுகிறவனும், விரதங்களை அனுஷ்டிக்கத் தவறாதவனும், குலாசாரத்தை விடாமல் நடக்கின்றவனும், எல்லாப் பிராணிகளுக்கும் நன்மை செய்கிறவனும், கற்றுணர்ந்தவனும், சாமர்த்தியமுள்ளவனும் எல்லாரா லும் விரும்பத்தக்க அழகுள்ளவனுமாகிய உத்தமன் ஒருவனை நீர் கண்டதுண்டா? தைரியமுள்ளவனாகித் தன் கோபத்தைத் தன்வசப்படுத்தியுள்ள புருஷன் யார்? மிகுந்த காந்தியுள்ளவனும், அசூயை யில்லாதவனும் யாவன்? போரில் எவன் கோபங்கொண்டால் தேவர்களும் நடுங்குவார்களோ அவன் யாவன்? இப்படிப்பட்ட நற்குண நற்செய்கைகளுடன் கூடிய ஒருவனைப்பற்றி நான் உங்களிடம் கேட்க மிகவும் விரும்புகிறேன். மகா முனிவரே. இவ்வாறுள்ள ஓர் மனிதனை நீர்தாம் அறிய வல்லவர் என்று கூற, மூன்று உலகங்களையும் அறிந்த நாரத மகாமுனிவர் வெகு சந்தோஷமடைந்து பின்வருமாறு சொல்லத் தொடங்கினர்:- 

“முனிவரே, கேளும். நீர் எடுத்துக்கூறிய நற்குணங்கள் எல்லாவற்றையும் ஒருவனிடத்தில் காண்பது அரிது. ஆயினும் நான் அறிந்து சொல்லுகிறேன். இத்தனை நற்குணங்களும் பொருந்திய புருஷர் ஒருவர் இருக்கிறார்; அவர் இக்ஷ்வாகு வமிசத்தில் பிறந்து இராமர் என்னும் பெயருடன் விளங்குகிறவர்;கௌஸல்யை என்னும் மாது சிரோமணியின் குமாரர்: நீர் குறித்த நற்குணங்கள் மிக்க எல்லாம் அவரிடம் குடிகொண்டிருக்கின்றன, மிக்க அடக்கமுடையவர்; வெகு பராக்கிரமசாலி; மிகுந்த காந்தியுள்ளவர்; உறுதியுள்ளவர்; எல்லாரையும் தம் வசத்தில் அடக்கியாளுகிறவர்; புத்திமான்; நீதி தவறாது நடப்பவர்; வாக்குஸாமர்த்திய முள்ளவர்; நிறைந்தவர்; சத்துருக்களை அழிப்பவர் ; உயர்ந்த தோள் கள், திரண்டுருண்ட கைகள், சங்குபோன்ற கழுத்து, தசைப்பற்றுள்ள கன்னங்கள், விசாலமான மார்பு, பெரிய தனுசு, தசைப்பற்றால் மறைந்த தோளெலும்பு இவைகளை முழங் யுடையவர்; பகைவர்களை அடக்கியாளுகிறவர்; கால் வரையில் தொங்குகிற கைகள், அழகான தலை, அழகான நெற்றி, அழகான நடை இவைகள் அமைந்தவர்; சரியான உயரம், சரியாயமைந்த உறுப்புகள், எல்லாரும் நேசிக்கும்படியான நிறம் இவைகள் பொருந்தியவர்; வெகு பிரதாபமுள்ளவர்; உயர்ந்தமார்பு, விசாலமான கண் கள் முதலிய சகல சாமுத்திரிகா லக்ஷணங்களும் நிறைந் தவர் ; அவருடைய தேகத்தில் சுபலக்ஷணங்கள் யாவும் தவறாது விளங்குகின்றன. தருமத்தை அறிந்தவர்; சத்திய சந்தர்; பிரஜைகளுடைய நன்மையில் எப்பொழுதும் நோக்கமுடையவர் : நல்லோரை வளர்ப்பவர்; தீயோரை யழிப்பவர்; மிக்க கீர்த்தி பெற்றவர்; நல்லறிவுடையவர்; நல்லொழுக்கமுள்ளவர்; தம்மை அடைந்தவர்களுக்கு வசப்பட்டு நடப்பவர்; அவர்களைப் பாதுகாப்பதிலே கவலை கொண்டவர்; பிரமதேவருக்கொப்பானவர்; சகல பாக்கியமும் நிரம்பியவர்; சகல சனங்களுக்கும் இஷ்டரா யிருப்பவர்; இவ்வுலகத்திலுள்ள பிராணி சமூகங்களையும் வருணாச்சிரம தருமங்களையும் தமது குலாசாரத்தையும் தமது சனங்களையும் பாதுகாப்பவர் : வேதங்கள் வேதாங் கங்கள் இவைகளின் தத்துவங்களை அறிந்தவர்; தநுர் வேதத்திலும் தேர்ச்சியடைந்தவர்; ஒவ்வொரு சாஸ்திரத் தின் உண்மையையும் உள்ளபடி கண்டறிந்தவர்; ஞாபக சக்தி யுடையவர் ; மேல் மேல் விஷயங்கள் விளங்கப் பெற்ற ஞான விசேஷமுடையவர்: வெகு யோக்கியர்; பெருந்தன்மையுடையவர்; வெகு சமர்த்தர் ; நதிகளெல் லாம் சமுத்திரத்தை நாடிச் செல்வதுபோல நல்லவர்கள் எப்பொழுதும் தம்மை நாடித் தொடரப்பெற்றவர்; எல் லாராலும் மரியாதை பண்ணத்தக்கவர்; எல்லாரிடத்தும் சமமாக நடப்பவர்; எப்பொழுதும் அன்புள்ள பார்வை யுடையவர் ; பராக்கிரமத்தில் விஷ்ணுவுக்கும், சந்தோஷ முண்டாக்குவதில் சந்திரனுக்கும் ஒப்பானவர்; கோபத் தில் பிரளய காலத்து அக்கினியையும், பொறுமையில் பூமி தேவியையும், கொடையில் குபேரனையும் நிகர்த்தவர்; உண்மைக்கு அவரைத் தருமதேவதையின் அவதாரமாகவே சொல்லலாம்.  
 
“இவ்விதமான குணங்களையுடையவராய், தவறாத பராக்கிரமமுள்ளவராய், எல்லாவித உத்தம குணங்களும் அமைந்தவராய், குடிகளுக்கு நன்மையைச் செய்பவராய் விளங்கிய இராமரை அவருடைய தந்தையாராகிய தசரதர் கண்டு களித்து, குடிகளுக்கு நன்மை செய்யும் பொருட்டு, மூத்த குமாரராகிய அவருக்கு அன்போடு யுவராஜ பட்டாபிஷேகம் செய்து வைக்க இச்சித்தார். இராமருடைய பட்டாபிஷேகத்துக்காக எல்லா உபகரணங்களும் சித்தமாகவிருந்ததை தசரதருடைய மனைவி யாகிய கைகேயி பார்த்து, முன்னமே தனக்குக் கொடுப்பதாகத் தனது புருஷன் சொல்லியிருந்த வரங்களைக் கேட்கலானாள். அவை யாவையெனில், இராமன் காட்டுக்குப் போகவேண்டும்; அவனுக்குப் பிரதியாகப் பரதன் இளவரசாகவேண்டும் என்பனவாம். சத்தியத்தால் கட்டுண்ட தசரதர் மறுக்க வழியில்லாமல் கைகேயி கேட்ட வரத்தின்படி தமது அன்புள்ள புத்திரரான் இராமரைக் காட்டுக்கனுப்பும்படி நேர்ந்தது. அவருடைய மிக்க அன்புள்ள தம்பி லக்ஷ்மணர் அவரைப் பின்தொடர்ந்தனர். அவருடைய பிராணநாயகியும், எப்பொழுதும் நன்மையையே செய்பவளுமான சீதை, சந்திரனை உரோகிணி பின்தொடர்வதுபோல அவரைத் தொடர்ந்து காடு சென்றாள். 

“தேவர்களையும் கந்தர்வர்களையும்போன்ற இராமர் முதலிய அந்த மூவரும் ஒரு வனத்திலிருந்து மற்றொரு வனமாக அநேக வனங்களைக் கடந்து அநேக நதிகளையும் தாண்டிப் பரத்துவாஜ மகாரிஷியின் சொற்படி சித்திர கூடம் என்னும் மலையை அடைந்து அவ்விடத்தில் அழகான ஒரு பர்ணசாலை அமைத்துக்கொண்டு சுகமாக வசித்திருந்தார்கள். 

“இங்ஙனம் இராமர் சித்திரகூடஞ்சேர, தசரதர் புத்திரசோகத்தால் வருந்தி “இராமா ! இராமா!” என்று புலம்பிக் கொண்டு சுவர்க்கமடைந்தார். அவர் மரித்தபின் மகாபலசாலியான பரதர், வசிஷ்டர் முதலிய பெரியவர் களால் ஏவப்பட்டும் தாம் பட்டத்தை ஒப்புக்கொண்டு அரசாளக் கொஞ்சமேனும் இஷ்டமில்லாதவராயிருந்தார். அவ்வீரர் இராமரைத் தேடி வனத்திற்குச்சென்று அவ ருடைய பாதத்தில் விழுந்து அவரருள் பெறக்கருதினார். இராமர் தமது தந்தையின் கட்டளையை நிறைவேற்றக் கருதி இராச்சியத்தின்மேல் ஆசை வைக்கவில்லை. ஆனால். தமக்குப் பிரதிநிதியாகத் தமது பாதுகைகளை பரதருக்குக் கொடுத்து அவரை அரிதில் திரும்பிப்போகச் செய்தார். பரதர் தமது எண்ணம் நிறைவேறப் பெறாமலே திரும்பி வந்து இராமருடைய பாதுகைகளைத் தினந்தோறும் நமஸ் கரித்துக்கொண்டு இராமர் திரும்பிவருவதை எதிர் பார்த் தவராய் நந்திக்கிராமத்திலிருந்து இராச்சிய பரிபாலனம் செய்யலானார். 

“இராமர் தண்டகாரணியத்திலே அவ்விடத்துள்ள அரணிய வாசிகளுடன் வசித்துக் கொண்டிருக்கும்போது அசுரர்களையும் ராக்ஷஸர்களையும் வதைப்பதற்காக வழி தேடிக் கொண்டிருந்த அநேக முனிவர்கள் அவரிடம் வந்து சேர்ந்தார்கள். இராமர் அவர்களைக் கொல்லக்கருதிய முனிவர்களுடைய வேண்டுகோளை அங்கீகரித்தார். 

“அவர் அங்கு வாசஞ்செய்து கொண்டிருக்கும் பொழுதுஜனஸ்தாநமென்னும் இடத்திலேவசித்துக்கொண் டிருந்தவளும் தான் வேண்டியபடி வடிவங்கொள்ள வல் லவளுமான சூர்ப்பணகை யென்பவள் அங்கபங்கம் பண் ணப்பட்டாள். உடனே, சூர்ப்பநகையின் சொற்களால் ஏவப்பட்டுப் போருக்கு வந்த கரன், தூஷணன், திரிசிரன் முதலிய ராக்ஷஸர்களையும்,அவர்களுடன் வந்த பதினாலா யிரம் வீரர்களடங்கிய அவர்களுடைய பெரிய சேனையை யும் இராமர் யுத்தஞ்செய்துக் கொன்றார். 

“இவ்விதமாய் அங்கு நடந்த தனது பந்துக்கள் வதை யைக் கேட்டு இராவணன் கோபத்தால் கண் மூடப்பட்ட வனாய் மாரீசன் என்ற அரக்கனை அழைத்துக் கொண்டு இராமருடைய ஆச்சிரமத்துக்குச் சென்றான். இராவணன் மாரீசனுடைய மாயையால் ராம லக்ஷ்மணர்களை அவர்கள் வசித்துக்கொண்டிருந்த இடத்தை விட்டு வெகுதூரம் போகச்செய்து ஜடாயு என்ற கழுகுகளினரசனைக் கொன்று சீதையைக் கவர்ந்தோடினான். ஜடாயு மாண்டு கிடப்பதைப் பார்த்தும் சீதையை இராவணன் எடுத் தோடியதைக்கேட்டும் இராமர் சோகத்தால் பரிதபித்துக் கொண்டு தமது ஐம்புலன்களும் கலங்கியவராய்ப் புலம்பினார். 

“பின்பு அவ்விடம் விட்டுப் புறப்பட்டுப் பம்பை என்னும் ஓடையின் கரையை அடைந்து அங்கு அநுமான் என்ற வானர சிரேஷ்டனுடைய சிநேகத்தைப் பெற்றார். அநுமானுடைய வார்த்தையின் மூலமாய் இராமர் சுக்கிர வனிடன் சேர்ந்தார். சுக்கிரீவன் அன்போடு அக்கினி சாட்சியாக இராமருடன் சிநேகஞ்செய்தான். அந்த வானர ராஜனும் தன் மனக்குறை நீங்கும் என்ற நம்பிக் கையால் தன் துக்கங்கள் எல்லாவற்றையும் இராமரிடம் கூறினான். இராமர் வாலியை வதைசெய்வதாக ஒப்புக் கொண்டார். சுக்கிரீவன் பிறகு கிஷ்கிந்தைக்குள் பிரவேசித்து வாலியிருந்த குகையை நாடிச்சென்று தைரிய மாய்க் கர்ச்சிக்க, அதைக்கேட்டு வாலி வெளியில்வந்து சுக்ரீவனுடன் கைகலந்தான். அவ்விடத்தில் வாலியை இராமர் ஒரே பாணத்தால் கொன்றிட்டார். 

இராமர் கிஷ்கிந்தை ராச்சியத்திற்குச் சுக்கிரீவனை அரசனாக முடி சூட்டினார். அவன் உடனே வானரசைநியங்களை யெல்லாம் வரவழைத்துத் திக்குகள் தோறுஞ் சென்று சீதையிருக்கு மிடத்தைத் தேடிவரக் கட்டளையிட்டான். இவ்விதமாய் உத்தரவு பெற்றுப் போனவர்களில் அதி பலசாலியான அநுமான் சம்பாதியின் சொற்படி நூறுயோஜனை அகலமுள்ள தக்ஷிண சமுத் திரத்தை ஒரே பாய்ச்சலில் கடந்து இராவணனால் அர சாளப்பட்ட இலங்காபுரியை அடைந்து அங்கு அசோக வனத்தில் இராமரையே தியானித்துக் கொண்டிருந்த சீதையைக் கண்டான். அவளிடம் அநுமான் தான் இராம ரிடமிருந்து வந்தவன் என்பதற்குரிய அடையாளத்தைக் காட்டி, இராமர் செய்துகொண்டிருக்கும் முயற்சிகளைத் தெரிவித்துச் சீதாதேவியைத் தேறுதல் செய்து அவ் வசோக வனத்தின் வெளிவாயிலைச் சிதைக்கலானான். பின்பு சீதாதேவி நீங்கலாக இலங்கை முழுவதையும் தீயிட்டுக் கொளுத்தி, இராமரிடம் சந்தோஷ சமாசாரத்தைச் சொல் லும் பொருட்டு திரும்பினான். 

“பின்பு இராமர் சுக்கிரீவனுடன் கடற்கரை சேர்ந்து சேது என்னும் அணையை நளனுடைய உதவியால் கட்டி அதன் வழியாய் இலங்கையை அடைந்தார். அங்கு யுத்தத்தில் இராவணனை வதை செய்து அரக்கர் மன்ன வனாக விபீஷணருக்கு முடிசூட்டி இராமர் அயோத்தி மாநகர் சேர்ந்து இராச்சியத்தைச் சீதையோடு பெற்றுக் கொண்டார். 

“அவர் இவ்வாறு திரும்பி வந்ததுமுதல் ஜனங்கள் சுகத்தையும், சந்தோஷத்தையும் அடைந்து தனிகர்களும், தர்மிஷ்டர்களும், நோயற்றவர்களும், கவலை இல்லாதவர் களுமாய், துற்பிக்ஷபயமில்லாமல் வாழ்ந்து வந்தார்கள். இராமர் பதினோராயிரம் ஆண்டு இராச்சிய பரிபாலனம் பண்ணிவிட்டுப் பின்பு பிரமலோகம் சேர்வர். 

சொல்வன்மையுள்ள வால்மீகிமகாமுனிவர் நாரதர் சொன்ன வாக்கியத்தைக் கேட்டு வியப்புற்று இந்தச் சரித் திரத்தைத் தமக்குச் சொன்னதற்காக மாணாக்கர்களோடு நாரதரைப் பூஜித்தார். அந்த சமயத்தில், பிரமதேவர் வால்மீகி மகாரிஷியை பார்ப்பதற்கு அவ்விடம் வந்தார். அவரைக் கண்டதும், வால்மீகிமுனிவர் எழுந்து மிக்க வியப்புற்று மனமொழிகளை அடக்கிக் கொண்டு கைகளைக் கூப்பிநின்றார். பிரமதேவர் ஓர் ஆசனத்தில் வீற்றிருந்து கொண்டு வால்மீகி முனிவரைப் பார்த்து சிரித்துக் கொண்டே “ஐயா, இராமருடைய சரித்திரம் முழுவதை யும் நாரத முனிவரிடம் கேட்டபடி சுலோக ரூபமாக இயற்றி உலகத்தில் பிரசித்தஞ் செய்யவேண்டும். இது வரையில் உமக்குத் தெரியாமலிருந்தது இனி உள்ளது உள்ளபடி உமக்குத் தெரிந்துவிடும். என்னுடைய அநுக் கிரகத்தால் நீர் செய்யப்புகும் காவியத்தில் சொல்லப்படும் சொற்களில் ஒன்றாவது பொய்க்காது. மனத்தைக் களிப் பிக்கும் புண்ணிய கதையான இராமாயணத்தைச் செய்யுள் ரூபமாக நீர் செய்யக் கடவீர். உலகத்தில் மலைகளும் நதிகளும் உள்ளவரையில் நீர் செய்யப்புகும் இரா மாயணக் கதை விளங்கி நிற்கக்கடவது’ என்று சொல்லி அநுக்கிரகித்துத் தாம் வீற்றிருந்த ஆசனத்தி லிருந்த படியே மறைந்தார். 

யோக நிஷ்டையில் வால்மீகி முனிவர் இவ்வாறு முன்பு நடந்த விஷயங்களை உள்ளங்கை நெல்லிக்கனி போலத் தெளிவாகக் கண்டார். இவ்விதமாய்த் தம்முடைய யோகபலத்தால் எல்லா விஷயங்களையும் அறிந்த பின் அந்த மகா முனிவர் இராமருடைய சரித்திரத்தை இயற்றத் தொடங்கினார். 

இராமர் இராச்சியத்தை அடைந்ததன் பின்னரே இந்தச் சொற்சுவையும் பொருட்சுவையு முள்ள ராமாயண காவியத்தை வால்மீகிமாமுனிவர் ஏழு காண் டங்களாக இருபத்துநாலாயிரம் சுலோகங்கள் அடங் கியதும் ஐந்நூறு சருக்கங்களை யுடையதுமான ஒரு கிரந்தமாக இயற்றினார். 

2. கோசலராஜ்ய்ச் சிறப்பு 

சரயூ என்னும் நதியின் கரையில் கோசலம் என்ற ஒரு பெரிய தேசமுண்டு. அது தனதானியங்களால் எப்பொழுதும் செழித்திருக்கும். அதிலுள்ள ஜனங்கள் எப்பொழுதும் சந்தோஷத்தோடு செழித்திருப்பார்கள். அந்தத் தேசத்தின் பிரதான நகரம் அயோத்தி என்பது. அது உலகமெல்லாம் கீர்த்திபெற்ற நகரம். தேவலோகத்தை இந்திரன் ஆளுவதுபோல் அந்த அயோத்தியை மகாத்துமாவும் இராச்சியத்தை விருத்திபண்ணு கிறவருமான தசரதமகாராஜா ஆண்டு வந்தார். 

அவர் காலத்தில் அந்நகரத்திலுள்ள குடிளெல்லாம் வெகு சந்தோஷமுடையவர்களாயும், தரும சிந்தையுள்ள வர்களாயும்,அநேக சாஸ்திரங்களை யுணர்ந்தவர்களாயு மிருந்தார்கள். ஒவ்வொருவரும் தமக்கிருக்கும் பொருளைக் கொண்டு மனத் திருப்தியடைந்து பிறர் பொருளின்மேல் சிறிதேனும் ஆசையென்பதில்லாமல், சத்தியம் தவறாதவ ராயிருந்தனர். அந்நகரத்தில் இல்லை என்ற சொல்லே யில்லாமல் ஒவ்வொருவரும் எல்லாப்பொருள்களையும் அடைந்தவராயிருந்தார்கள். ஒவ்வொரு வீட்டிலும் பசுக் கள், குதிரைகள், தனம் தானியம் ஆகிய இவைகள் நிறைந்திருந்தன. நெறி நீங்கிய நடத்தையுள்ளவர்கள் அவ்விடத்தில் ஒருவருமில்லை. தேடிப் பார்த்தாலும், கண் களுக்கு அருவருப்பான தோற்றமுள்ள உருவம் அவ்வூரில் அகப்படாது. அற்ப குணமுள்ளவர்களும், படியாத பாமரர்களும். ஈசுவரனில்லை என்று நாஸ்திகவாதம் பண்ணுபவர்களும் அங்கு மருந்துக்குங் கிடைக்கமாட் டார்கள். அப்பட்டணத்தில் வசித்த ஒவ்வொரு புரு ஷரும் ஒவ்வொரு மாதரும் உத்தமரும் உத்தமியுமாய்த் தருமங்களை நடத்திக்கொண்டும் நல்வழியில் நடந்துகொண் டும் இருந்தனர். அவ்வூரில் ஒவ்வொரு வீட்டிலுமிருந்த அந்தணர்கள் .தங்கள் ஐம்புலன்களையும் வென்றவர் களாய், தங்கள் காரியங்களைச் சரிவர நடத்திக்கொண்டு, தானம் அத்தியயனம் முதலிய ஒழுக்கங்கள் தவறாதவர் களா யிருந்தார்கள். நான்கு வருணத்தார்களும் தங்கள் தங்கள் தொழிலை தைரியத்துடனும் சந்தோஷத் டனும் செய்துகொண்டு நெடுங்காலம் வாழ்ந்திருந்தார்கள்; பிள்ளை பேரன் முதலிய சந்ததிகளுக்கு ஒரு விதமான குறைவுமின்றி தமது மனைவிகளோடு என்றும் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். 

தசரத மகாராஜருக்கு எட்டு முக்கிய மந்திரிகளிருந் தார்கள். அவர்கள் பெயர் திருஷ்டி, ஜயந்தர், விஜயர். சித்தார்த்தர், அர்த்தசாதகர், அசோகர், மந்திரபாலர், சுமந்திரர் என்பனவாம். இவர்களன்றி மிகுந்த நம்பிக்கை யுள்ள இரண்டு முக்கிய புரோகிதர்களும் உண்டு. அவர் கள் குலகுருவாகிய வசிஷ்ட மகரிஷியும், வாமதேவ மக ரிஷியும். 

3. இராமாவதாரம் 

இவ்வளவு நீதியோடும் பராக்கிரமத்தோடும் அர சாண்டிருந்த தசரதமகாராஜர் அநேகவித தருமங்கள் செய்தும் புத்திரபாக்கியம் இல்லாமலிருந்தார். பலவாறு ஆலோசனை செய்து முடிவில் அவர் “புத்திர சம்பத்தை யடையும் பொருட்டும் ஏன் அசுவமேதயாகம் பண்ணக்கூடாது என்று கருதினார். புத்திரகாமேஷ்டி சம்பந்தமாய் நடந்த பிரஸ்தாபங்களையெல்லாம் கேட்டு சுமந்திரர், தசரதர் ஏகாந்தத்தில் இருந்தபொழுது அவ ரைப் பார்த்து “விபண்டகர் குமாரரான ரிசியசிருங்கர் உமக்கு புத்திரர்கள் உண்டாகும் யாகத்தைச் செய்து வைப்பார்” என்று சனத்குமாரர் சொல்லியதை நானிப் பொழுது உமக்குச் சொன்னேன்” என்றார். 

சுமந்திரர் வாக்கியத்தைக் கேட்டு தசரதர் வெகு சந்தோஷமடைந்து வசிஷ்டராகிய தமது குருவினிடம் எல்லா விஷயங்களையுஞ் சொல்லி விடைபெற்றுக் கொண்டு அங்கநாடடைந்தார். அங்கு உரோமபாதருக் கருகில் தமது தபோமகிமையால் பிரகாசித்துக்கொண்டு தழல்போல் விளங்குகிற ரிசியசிருங்கரை தரிசித்தார். உரோமபாதர் தசரதரைக் கண்டதும் ஆநந்தமடைந்து வெகுவித மரியாதை செய்தார். தசரதர் ஏழு எட்டு நாள் அங்கநாட்டில் வாசம்பண்ணி ஒருநாள் உரோமபாதரை நோக்கி “என் மித்திர ரத்தினமே! உமது புத்திரி சாந்தை தன் கணவருடன் என்னுடைய நகரத்துக்கு வர வேண்டும். நான் யாகம் ஒன்று நடத்தப்போகிறேன். அதை நடத்திவைக்கும்படி நீர் ரிசியசிருங்கரிடம் சொல்ல வேண்டும்” என்று கேட்டுக்கொள்ள, உரோமபாதர் ரிசிய சிருங்கரைப் பார்த்து “நீர் பத்தினி சகிதராய் அயோத்தி போய் யாகத்தைச் செய்விக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்ளுகிறேன்” என்று சொன்னார். அவ்வாறு செய் வதில் தமக்குச் சந்தோஷமே யல்லது வேறில்லை என்று அம்முனிவரும் ஏற்றுக்கொண்டார். பின்பு தமது மனை வியை கூட அழைத்துக்கொண்டு ரிசியசிருங்கர் பிரயாண மானார். ரிசியசிருங்க மகாமுனிவர் முன்செல்ல, நான்கு பக்கங்களிலேயும் சங்கம் துந்துபி என்ற மங்கள வாத்தி யங்கள் கோஷிக்க, தசரதர் அயோத்தியில் பிரவேசித்தார். 

ஓர் அரசனாலாவது சுலபமாகச் செய்துமுடிக்கக் கூடா ததும், பாவத்தைப் போக்குவதும், சுவர்க்கத்தை பெறு விப்பதுமான மிகச் சிறந்த அசுவமேதத்தை தசரதர் சரி யாகச் செய்து முடித்தவுடன் ரிசியசிருங்கரை நோக்கி “என் வம்சத்தை விருத்தி செய்விக்கும்படியான சடங்கை செய்தற்கு உரியவர் நீரே” என்றார். அதற்கு அவர், “அப்படியே ஆகட்டும்; உமது குலத்தை நிலைநிற்கச்செய்ய நான்கு சத்புத்திரர்கள் உமக்கு உண்டாவார்கள். உம் முடைய மநோரதமாகிய புத்திர லாபத்திற்காக, அதர் வண வேதத்தில் சொல்லியிருக்கும் மந்திரங்களுடைய பலத்தால் இன்னமொரு யாகம் பண்ணிவைக்கிறேன்” என்று சொல்லி, உடனே அந்த யாகத்தையும் செய்யத் தொடங்கி மந்திர சாஸ்திர விதிப்படி அக்கினியில் ஓமம் செய்யலானார். அப்பொழுது நேரில் நின்று அவிர்ப்பாகங் களைப் பெற்றுக்கொள்ளும்பொருட்டு தேவர்களும், கந்தர் வர்களும், சித்தர்களும் மகரிஷிகளும் அங்கு வந்து கூடி னார்கள். அவர்கள் எல்லாரும் அவ்விடத்தில் ஒரு சபையாகச் சேர்ந்து, உலகத்தை சிருஷ்டித்தவரான பிரமதேவ ரைப் பார்த்துப் பின்வருமாறு சொன்னார்கள்:”பிரம தேவரே, உம்மிடமிருந்து வரம் பெற்றதனால் அதிக பராக் கிரமசாலியான இராவணன் என்னும் அரக்கன் எங்களை யெல்லாம் வருத்துகிறான். அவனையடக்க எங்களில் ஒரு வராலும் முடியவில்லை. அப்பாவியரக்கனால் எங்கள் எல் லாருக்கும் உண்டாகும் பயத்துக்கு அளவேயில்லை. ஆகை யால் அவனைக்கொல்ல எப்படியாவது நீர் ஓர் உபாயந் தேடவேண்டும் “இப்படி எல்லாத் தேவர்களும் சொன்ன தைக்கேட்டு பிரமதேவர் சிறிது நேரம் ஆலோசித்து பின் வருமாறு சொல்லலானார்.” அந்த துராத்துமாவை வதைப் பதற்கு உபாயம் ஒன்று முன்னமே தானாய் அமைந்திருக் கின்றது. அவன் வரங்கேட்ட காலத்தில் கந்தர்வர்களா லும், யக்ஷர்களாலும், தேவர்களாலும், அசுரர்களாலும், ராக்ஷஸர்களாலும் தனக்கு மரணம் சம்பவிக்கக்கூடா வண்ணம் வரமளிக்கவேண்டும் என்று கேட்டுக் கொண் டான். அப்படியே ஆகட்டும் என்று நானும் வரமளித் தேன். மனிதரால் தனக்கு மரணம் உண்டாகாமலிருக்க வேண்டும் என்று அவன் அலக்ஷ்யத்தால் கேட்கவில்லை. அதுதான் இப்பொழுது நமக்கு உபாயம். மனிதரால் இராவணன் மாய உபாயந் தேடவேண்டும் இதைத்தவிர நமக்கு வேறு மார்க்கமில்லை” என்றார். 

இவ்வண்ணம் ஒருவித நம்பிக்கையைச் சுட்டி பிரம தேவர் சொன்னதைக் கேட்டு அங்கிருந்த தேவர்களும், முனிவர்களும் மிக்க சந்தோஷத்தை அடைந்தார்கள். அத்தருணத்தில், அங்கே, மிகவும் விளங்குகின்ற திரு மேனியுடன் விஷ்ணுபகவான் வந்தனர். தேவர்களெல் லாரும் அவருக்கு சாஷ்டாங்க தண்டன் சமர்ப்பித்து எழுந்து ஸ்தோத்திரம் பண்ணி,” ஐயா, விஷ்ணு பக வானே, உலகங்களினுடைய க்ஷேமத்தின் பொருட்டே நாங்கள் இப்போது உம்மை ஒரு காரியத்துக்காகத் தூண்டுகிறோம்; தருமங்களை அறிந்தவராயும், உதாரகுணமுடையவராயும், மகாமுனிவர்க் கொப்பான தேஜோமய ராயும் தசரதர் என்னும் அரசர் ஒருவர் அயோத்திமா நக ரத்தில் அரசாட்சி செய்துகொண்டிருக்கிறார். நாணம், செல்வம், புகழ் என்பவைகளே உருக்கொண்டு வந்தாற் போல மூன்று மனைவிகள் அவருக்கிருக்கிறார்கள். நீர் அந்த மூன்று பெண்மணிகளுடைய வயிற்றில் உம்மை நான்கு பாகமாகப் பண்ணிக்கொண்டு மனிதரூபமாக பூலோகத்தில் அவதாரம்பண்ணி, உலககண்டகனும் தேவர்களால் வெல்ல முடியாதவனுமான இராவணனைப் போர்செய்து கொல்லவேண்டும். தேவசத்துருக்களர் யிருக்கிற இராவணாதியரைச் சங்கரிக்க நீர் மநுஷ்யாவ தாரம் செய்யவேண்டும்” என்று பலவிதமாகப் புகழ்ந்து பிரார்த்தித்தார்கள். 

இவ்வாறு தேவர்கள் பிரார்த்தித்தவுடனே, தேவ தேவரும் ஸர்வலோக சரண்யருமான திருமால் “தேவர் களே, உங்கள் பயத்தை விட்டுவிடுங்கள். இன்று முதல் உலகத்துக்கு க்ஷேமம் வந்துவிட்டது என்று நிச்சயமாய் எண்ணுங்கள். உங்களுடைய நன்மைக்காக இராவணனை பேரன்மார்கள், மற்றைத் அவனுடைய பிள்ளைகள், தாயாதிகள், பந்துக்கள், சினேகிதர்கள், மந்திரிகள் முத லான எல்லாருடனும் நான் வதைசெய்கிறேன். அவன் வெகு குரூரனாய்த் தேவர்களையும் ரிஷிகளையும் உபத்திர வம் பண்ணிக்கொண்டிருக்கிறான். நான் ஒரு மானிடனாய் பூலோகத்தைப் பரிபாலித்துக் அவதாரம் பண்ணி கொண்டு பதினோராயிரம் வருஷகாலம் வாசம்பண்ணப் போகிறேன்” என்றார். 

இவ்விதம் தேவர்களுக்கு வரங் கொடுத்துவிட்டு திருமால் தாம் மநுஷ்யராக அவதரிப்பதைப்பற்றிச் சற்று ஆலோசித்து உடனே தாம் நான்கு அம்சமாய் தசரதரைத் தந்தையாகக்கொண்டு தோன்றுவதாக நிச்சயித்தார். 

திருமால் மறைந்தவுடனே, தசரதர் ஒமம் பண்ணி முடித்த யாககுண்டத்திலிருந்து மிக்க காந்தியுடன் ஒரு பெரிய உருவம் வெளிப்பட்டது. உலகத்தில் எக்காலத் திலும் பார்த்திராத மிக்க பலமும் வீரியமும் அதனிடங் காணப்பட்டன. வெள்ளி மூடி மூடப்பட்டதும் தேவ லோகத்துப் பாயசம் நிரம்பினதுமான பெரிய தங்கக் கிண் ணம் ஒன்றை, தனது அன்புள்ள மனைவியையே மாயை யால் அவ்வுருவாக்கிக்கையிற் பிடித்ததற்கொப்பாய்ப் பிடித்துக்கொண்டு வந்தது. அவ்வண்ணம் தோன்றிய அவ்வுருவம் தசரதமகாராஜாவைப்பார்த்து “ஓ வேந்தே, ஓ பிரமதேவரிடமிருந்து உமது சந்நிதிக்கு வந்த புருஷன் நான்” என்றது. அதைக்கேட்டு அரசர் தமது இரு கை களையும் கூப்பி அதற்கு நமஸ்காரஞ்செய்து, “ஸ்வாமி, உமது வரவு நல்வரவாகுக. நான் உமக்கு என்ன செய்ய வேண்டும்? கட்டளையிட்டபடி நடந்துகொள்ளக் காத் திருக்கிறேன்” என்றார். அவ்வாறு அவர் சொன்னதைக் கேட்ட அவ்வுருவம் தசரதரைப் பார்த்து “மன்னவரே, தேவர்களை நன்றாய் ஆராதித்த பாக்கியத்தால் நீர் இப் பொழுது இந்தப் பொருளைப் பெற்றீர். இந்த தேவ லோக பாயசத்தைக் கைப்பற்றும். இதன் மூலமாகவே நீர் புத்திரப்பேறும், மற்றைப் பாக்கியமும், ஆரோக்கிய மும் ஆகிய இவைகளை அடையப்போகிறீர். இதை உமக்கு உரிய மனைவிகளிடங் கொடுத்து உண்ணச் சொல்லும். அவர்கள் வயிற்றினின்றும் உமக்குப் புத்திரர்கள் பிறப் பார்கள். எந்தக் குறையை நீக்குதற்கு நீர் இவ்வளவு சிரமப்பட்டு யாகம் பண்ணினீரோ அந்தக்குறை உமக்கு நீங்கிவிடும்” என்றது. உடனே தசரதர். “உமது உத்திர வின்படியே செய்கிறேன்” என்று சொல்லி, தேவர்களால் நிருமிக்கப்பட்ட அந்தப் பாயசம் அடங்கிய பொற் கிண் ணத்தை அன்போடு கைபற்றித் தமது சிரத்தின்மேல் வைத்துக்கொண்டார்; வெகு ஆச்சரியமாய்த் தோன்றித் தமக்கு ஆனந்தத்தை அளித்த அவ்வுருவை வணங்கி, மிக்க களிப்புடன் அதனை அடிக்கடி பிரதக்ஷிணஞ்செய்தார். 

பிறகு பாயசத்தை எடுத்துக்கொண்டு அந்தப்புரத் துள் புகுந்து கௌஸல்யையைப் பார்த்து ‘உனக்குப் புத் திரபாக்கியம் உண்டாகும்; இப்பாயசத்தை நீ கைப்பற்று என்றார். அப்படிச் சொல்லி, தாம் கொண்டுவந்த பாய சத்தில் பாதியை அவளுக்கு கொடுத்தார்; எஞ்சிய பாய சத்தில் பாதியைச் சுமத்திரைக்குக் கொடுத்தார்; நின்ற பாயசத்தில் பாதியைக் கைகேயிக்குக் கொடுத்தார்; அதன் பின் மிகுந்து நின்ற பாயசத்தைக் கொஞ்சநேரம் ஆலோ சனை செய்து சுமித்திரைக்குக் கொடுத்தார். அந்தத் தேவ பாயசத்தைப் புசித்த சிறுகாலத்துக்குள் அவர்கள் கர்ப்ப வதிகளானார்கள். அவர்களுடைய தேஜசு அக்கினிபோல வும் சூரியன்போலவும் விளங்கிற்று. 

நாராயணமூர்த்தி அந்த மகாத்துமாவான தசரத மன் னவரிடம் புத்திரராய் அவதாரம் பண்ணச் சென்றவுடன் பிரமதேவர் தேவர்களெல்லாரையும் பார்த்து “சொன்ன சொல்தவறாத வீரரான விஷ்ணுபகவான் நமக்கெல்லாம் நன்மை செய்யும் பொருட்டு பூலோகத்தில் அவதாரஞ் செய்கின்றாரன்றோ. அவருக்கு நாம் சகாயம் பண்ண வேண்டுமே. அதன் பொட்டு நீங்கள் எல்லாரும் பல பராக்கிரமசாலிகளான அநேகரை உண்டாக்கவேண்டும். மாயைகளை அறிந்தவர்களாகவும், சூரர்களாகவும், காற்றுக்கொப்பான வேகமுள்ளவர்களாகவும், நீதிகளை யுணர்ந்தவர்களாகவும், புத்திமான்களாகவும் விஷ்ணு வுக்கு ஒப்பான சக்தியுள்ளவர்களாகவும், எவராலும் வதஞ் செய்யக் கூடாதவர்களாகவும்; சகல  உபாயங்களையும் அறிந்தவர்களாகவும், சிங்கங்கள்போலப் பலமுள்ளவர்களாகவும், அழகான மேனியுள்ளவர் களாகவும், எவ்வித அஸ்திரங்களையும் தெரிந்தவர் களாகவும், அமிருத முண்டவர்போல் அழியாத ஆயுள் பொருந்தினவர்களாகவும், வாநரவுருவங் கொண்ட புத்தி ரர்களை உலகத்தில் உண்டாக்கக் கடவீர்கள். நானும் அவ்வாறே முன்னொரு காலத்தில் ஜாம்பவான் என்ற கரடிவேந்தனை உண்டாக்கியிருக்கின்றேன்” என்றனர். 

பிரமதேவர் அவ்வாறு கட்டளையிடலும் தேவர்கள் எல்லாரும் அவருத்தரவின்படியே வாநரரூபமாக அநேக வம்சங்களை உண்டாக்கினார்கள். இந்திரனுக்குப் பிள்ளை யாய் மகேந்திர மலைக்கொப்பான வாலி யென்ற சிறந்த வாநரவீரன் இவ்வுலகத்தில் பிறந்தான். சூரியன் மைந் தனாய்ச் சுக்கிரீவன் ஜனித்தான். பிருகஸ்பதியின் பிள்ளை யாய், எல்லா வாநரர்களிலும் அதிக புத்தி நுண்மையுள்ள தாரன் என்ற வீரன் தோன்றினான். குபேரனுடைய புதல்வனாய்க் கந்தமாதனன் என்பவன் பிறந்தான். விசுவ கர்மாவினிடமிருந்து நளன் என்னும் வாநரன் தோன்றி னான். அக்கினி பகவானிடமிருந்து, அனலைப்போல் விளங் குகிற அழகான நீலன் உண்டானான்; வாயுதேவனிடம். வச்சிரத்துக் கொப்பான சரீரமுள்ளவனாகவும் கருடனுக் கொப்பான வேகமுள்ளவனாகவும் அநுமான் தோன்றி னான். அவர்கள்தாம் வாநரசேனைத் தலைவர்களாயும், தங் களுக்கு இஷ்டமான உருவங்கொள்ளவல்லவர்களான வெகுகீர்த்தி பெற்ற வாநரப் போர்வீரர்களாயும் உலகத் தில் பல நூறாயிரக் கணக்காக வந்து தோன்றி தாங் களும் வாநர சேனைத் தலைவர்களை உண்டாக்கினார்கள். மேகக்கூட்டங்களுக்கும் மலைச்சிகரங்களுக்கும் ஒப்பான வர்களாய், பயங்கரமான சரீரமுள்ளவர்களாய், மகாபலசாலிகளாய், வாநரவீரர்கள் இராமருக்கு உதவிசெய்ய உண்டானார்கள். 

 யாகம் முடிந்து ஆறுருத்துக்கள் கழிந்தபின் பன்னிரண் டாம் மாதத்தில் கொஸல்யை சித்திரை மாதத்து சுக்கில பக்ஷ நவமி திதியில், புனர்வசு நக்ஷத்திரத்தில், கர்க்கடக லக்கினத்தில், ஐந்து கிரகங்கள் உச்சமாய் நிற்க, லக்கினத்தில் சந்திரனும் குருவும் சேர்ந்திருக்க, எல்லாராலும் வணங்கப்படுகிறவரும் ஜகந்நாதரும் ஸர்வ லக்ஷணங்களும் பொருந்தியவருமான விஷ்ணு பகவானுடைய பாதி அம்ச மாய் இக்ஷ்வாகு வமிசம் விளங்கத் தோன்றிய இராமர் என்ற குழந்தையைப் பெற்றாள். வெகு சத்தியசந்தனும், எல்லா நற்குணங்களையு முடையவனும் விஷ்ணுவின் அம் சத்தில் நான்கில் ஒரு பங்கு அம்சமுள்ளவனுமான பரதனைக் கைகேயி பெற்றாள். வீரர்களாயும் எல்லா அஸ்திர வித்தைகளிலும் வல்லவர்களாயும் விஷ்ணு பகவானுடைய அம்சமாயும் விளங்கும் லக்ஷ்மணன், சத்துருக்கினன் என்பவர்களைச் சுமித்திரை பெற்றாள். களங்கமற்ற புத்தியையுடைய பரதன் புஷ்யநக்ஷத்திரத்தில் மீன லக்கினத்திலே ஜனித் தான். லக்ஷ்மணனும், சத்துருக் கினனும் ஆயிலிய நக்ஷத்திரத்தில் கர்கடலக்கினத்தில் பிறந்தார்கள். 

இவ்வண்ணம், மகாத்துமாக்களாயும், நற்குணமுள் ளவர்களாயும், ஒருவருக்கொருவர் சமமான அழகுள்ள வர்களாயும் நான்கு குமாரர்கள் பூரட்டாதி நக்ஷத்திரங் கள் போல் அதிககாந்தி பொருந்தியவர்களாகத் தசர தருக்குப் பிறந்தார்கள். அவர்களுடைய ஜன்மதினத்தில் கந்தருவர்கள் மதுரமாகப் பாடினார்கள்; அப்ஸரகணங் கள் கூத்தாடினார்கள். எங்கே பார்த்தாலும் அந்தத் தினம் ஒரு பெரிய உத்ஸவ தினமாயிருந்தது. தசரதர் அன்றைத்தினம் பிராமணர்களுக்குக் கோதானமும், சுவர்ணதானமும், ஆயிரக்கணக்காகச் செய்தார். 

குழந்தைகள் பிறந்து பதினொருநாள் சென்றபின்பு மகாராஜா தமது குழந்தைகளுக்கு வெகு சிறப்பாக நாமகர ணம் செய்யலானார். மூத்த குமாரனுக்கு இராமன் என்றும், கைகேயினிடம் பிறந்தவனுக்குப் பரதன் என்றும், சுமித் திரையின் குழந்தைகளிவருக்கும் லக்ஷ்மணன் சத்துருக் கினன் என்றும் வசிஷ்ட முனிவர் வெகு அன்புடன் பெயரிட்டார். 

அப்புதல்வர்களுள் மூத்தவரான இராமர், த்வஜம் போல விளங்குபவராய் தமது தந்தையின் சந்தோஷத் தைப் பெருகச் செய்துகொண்டு பிரமதேவர்போல எல்லா ருக்கும் வேண்டியவராயிருந்தார். அவர் வில்வித்தை யிலும் தந்தை சொற்படி நடப்பதிலும் கீர்த்திபெற்றவர். எல்லா அழகும் நிரம்பப்பெற்ற லக்ஷ்மணர் இளமைமுதல் தமது தமையனாராகிய இராமரிடம் அதிக அன்பும், எப் பொழுதும் அவருக்குப் பணிசெய்யுங் கருத்தும் உள்ள வராய் அது விஷயமாய்த் தமக்கு உண்டாகும் சிரமத்தைச் சிறிதும் நினையாதவராயிருந்தார். இராமருடைய பிரா ணனே வெளியில் உருவெடுத்து வந்ததுபோல் லக்ஷ்மணர் விளங்கினார். இராமரில்லாமல் அவருக்கு நித்திரையும் வராது. லக்ஷ்மணருக்கு இளையவரான சத்துருக்கினரும் இவ்வாறே பரதரிடம் அதிக அன்பும் விசுவாசமும் வைத்து, தமது பிராணனுக்கு மேலாகப் பரதர் தம்மை எண்ணும்படி செய்து கொண்டார். திக்பாலகர்களான தேவர்களைப் பிரமதேவர் படைத்து அதனால் எவ்வண் ணம் ஆனந்தக் கடலில் முழுகினாரோ அவ்வண்ணம், இவ்வருமைப் புத்திரர்களைத் தாம் பெற்றதனால் தசரத மகாராஜாவும் வெகு சந்தோஷமடைந்தார். 

4. தாடகையின் வதை 

இவ்விதமான புத்திரர்களைத் தாம் அடைந்த சந்தோ ஷத்தை முற்றும் அனுபவிக்க, அவர்களுக்கு தகுந்த பெண்களைப் பார்த்து விவாகம் பண்ணிவைக்க வேண்டு மென்று, தசரத மகாராஜர் தமது புரோகிதர்களோடும் பந்துக்களோடும் ஆலோசித்தனர். அவ்வாறு அவர் மந்திரிகள் சூழ ஆலோசித்துக்கொண்டிருக்கும் சமயத்தில் மிக்க தேஜசுள்ள’ விசுவாமித்திரமகாமுனிவர் வந்து சேர்ந்தார். அரசர் அம் முனிவரை வணங்கி வெகுமரியாதை யுடனும், விசுவாசத்துடனும் வசிஷ்டர்மூலமாக அவருக்கு அர்க்கியங்கொடுத்தார். அவ்வாறு விதிப்படி கொடுக்கப் பட்ட அர்க்கியத்தை முனிவர் பெற்றுக்கொண்டு இராஜா வைப்பார்த்து அவருடைய க்ஷேமலாபங்களைக் குறித்து விசாரித்தார். அதன்பின் அம்முனிவர் வசிஷ்டர் முதலான ரிஷிகளைப்பார்த்து அவர்களுடைய யோகக்ஷேமத்தை விசாரித்தார். அவருக்கு வேண்டிய உபசாரஞ்செய்து முடித்து அரசர் அவரைப்பார்த்து வெகு ஆனந்தத்துடன் வணக்கமாய் “முனிபுங்கவரே, இன்று நீர் இங்குவர நான்பெற்ற பாக்கியமானது அமிருதங் கிடைக்கப் பெற்றால் எவ்வண்ணமிருக்குமோ அவ்வண்ணமிருக் கின்றது; மழையில்லாமல் தவிக்கும் தேசத்தில் மிகுதி யாக மழை பெய்தால் எவ்வித சந்தோஷ முண்டாகுமோ அவ்வித சந்தோஷம் எனக்கு உண்டாயிருக்கின்றது புத்திரபாக்கியமில்லாதவனுக்கு தனக்குச் சரியான மனையிடம் புத்திரோற்பத்தியானால் அவனுள்ளம் எப்ப டிக் களிக்குமோ அப்படி என் மனம்ஆனந்தமடைகிறது; பெரிய உத்ஸவத்தால் எவ்விதமான சந்தோஷமுண்டா குமோ அவ்விதமான சந்தோஷத்தை நான் அடைகிறேன்; உமக்கு எந்தக் காரியம் எந்த விதமாய் முடியவேண் டுமோ, அந்தக்காரியத்தை அந்த விதமாகவோ நான் மகிழ்ச்சியோடு செய்து முடிக்கக் காத்திருக்கிறேன்’ என்றார். 

இவ்வாறு அரசர் அன்புடன் எல்லாரும் ஆச்சரியப் படும்படி தம்மைப் பார்த்துச் சொன்னதை விசுவாமித்திரர் கேட்டு மகிழ்ந்து, பின்வருமாறு அரசரை நோக்கிச் சொல்லுகின்றார்: :-“இராஜ சிங்கமே,உயர்ந்த குலத்தில் உதித்து வசிஷ்டரைக் குருவாக அடைந்து விளங்கும் உமக்கேயல்லது உலகத்தில் வேறு மன்னவர்க்கு இவ்வகை உபசார வார்த்தைகள் சொல்லத்தெரியுமோ? நல்ல பேறுபெரும்பொருட்டு நான் ஒரு யாகம் ஆரம்பித் திருக்கிறேன்; அதற்கு விகாதஞ்செய்ய, மாயாருபங் கொள்ள வல்ல மாரீசன், சுபாகு என்னும் இரண்டு ராக்ஷ ஸர்கள் தலைப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் வெகு பல பராக்கிரம முள்ளவர்கள். யாகமோ பெரும்பாலும் முடிவுபெறும்படியான நிலைமையிலிருக்கிறது. அவ்விரு வரும் அதைக்கெடுக்க யாகபூமியில் கூடைகூடையாக மாம்சங்களையும், குடங்குடமாக இரத்தத்தையும் கொண்டுவந்து சொரிகிறார்கள்.கோபங்கொண்டு அவர் களைச்சபிக்க எனக்கு புத்திவரவில்லை. இந்த விஷயத் தில் என்னைக்காக்க உமது மூத்த குமாரரான இராமரை உம்மைக்கேட்டு அழைத்துக் கொண்டுபோக வந்திருக் கிறேன். அவர் பக்கக் குடுமி வைத்துக்கொண்டிருக்கிற சிறு குழந்தை என்றாலும் ஒப்பற்ற சாமர்த்தியம் உடைய வர். அவர் என்னால் பாதுகாக்கப்பட்டு என்னுடைய ஆச் சிரமம் சேர்ந்ததும், அந்த ராக்ஷஸர்களால் உண்டாகும் இடையூற்றைத் தமது திவ்விய தேஜோமகிமையால் நீக்குவார் என்பது திண்ணம். இராமரையல்லது வேறு மகாத்து யாரும் அவர்களை வதைசெய்ய முடியாது. மாவும் சத்திய பராக்கிரமருமான இராமரை உண்மையாய் அறிந்தவன் நான் ஒருவன் ; வசிஷ்டரொருவர்; மற்றும் தவம் புரிந்தவர்களும் இராமரை உள்ளபடி கண்டறிந் திருக்கிறார்கள். அரசரே, இது விஷயமாய் வேண்டுமானால் நீர் வசிஷ்டர் முதலான பெரியவர்களுடைய அபிப்பிராயத் தையும் கேட்கலாம்’ என்றார். 

விசுவாமித்திரர் வாக்கியத்தைக் கேட்டு தசரதர் சிறிது நேரம் ஒன்றுந் தெரியாதவராயிருந்து, பின்பு மூர்ச்சை தெளிந்தவுடன் முனிவரைப் பார்த்து ‘முனிபுங் கவரே, செந்தாமரைக் கண்ணனான என் குழந்தை இரா மனுக்கு இன்னும் பதினாறு பிராயங்கூட ஆகவில்லையே. அவனை ராக்ஷஸர்கள் முன் நின்று போர் புரிய வல்லன் என்று நான் எவ்வாறு நினைக்கக்கூடும்? நானோ அக்ஷௌ கிணிக் கணக்காயுள்ள சேனைக்குத் தலைவனாயிருக்கின்றேன். அப்படி நிறைந்த சேனையோடுநானே நேராக  வந்து அவ்வரக்கர்களுடன் போரிடுகிறேன். இராமனைப் பிரிந்து நான் ஒரு நிமிஷங்கூட என் பிராணனை வைத்தி ருக்கமாட்டேனே ; ஆதலால்,ஒ முனி ரத்தினமே,என் குழந்தையை அழைத்துப் போகவேண்டாம். அவ்வரக் கர்கள் யாவர்? விஷயங்களெல்லாவற்றையும் விவர மாகச் சொல்லவேண்டும் ” என்று தசரதர் கேட்டார். 

அதற்கு விசுவாமித்திர முனிவர் ‘புலஸ்தியர் வமிசத் தில் பிறந்த இராவணன் என்னும் பெயருடைய ஒரு ராக்ஷஸனிருக்கின்றான். அவன் பிரமதேவரிடம் பல வரங்கள்பெற்று மூன்று உலகங்களையும் எப்பொழுதும் தைரியமாய் எதிர்த்து மிகவும் உபத்திரவம் செய்து கொண்டு வருகின்றான். அவனுடைய ஏவுதலால் சுபாகு, மாரீசன் என்ற கொடிய பராக்கிரமமுள்ள இரண்டு ராக்ஷஸர்கள் எப்பொழுதும் யாகத்தைக் கெடுப்பதிலேயே நோக்கமுள்ளவர்களாக இருக்கின்றார்கள். என்றார். அதைக் கேட்ட தசரதர் திகைத்து “ஐயோ,அந்த இராவ ணனுக்கு எதிரில் நின்று நான் போர் செய்ய வல்லனல் லேன். அவனுடனாவது, அவன் சைநியத்துடனாவது, போர் செய்ய என்னால் முடியாது. மாமுனிவரே, என் குழந்தை களையோ அல்லது என் சைநியங்களையோ அழைத்துக் கொண்டு சென்றாலும் என்ன செய்யமுடியும்? தேவர்களுக்கொப்பானவனும், போர்  என்பதை இன்னு மறியாதவனுமான என் குழந்தையைக் கொடேன்” என்றார். 

புத்திரவாஞ்சையால் தசரதர் இவ்விதமாய் வெகு மநோவியாகுலத்துடன் குழறிக்கொண்டு சொன்ன சொல்லை விசுவாமித்திரர் கேட்டு கோபாவேசங் “நான் கேட்டதைத் கொண்டு வேந்தரைப் பார்த்து தப்பாமல் கொடுப்பதாய் முதலில் சொல்லிவிட்டு இப் பொழுது இப்படித் தவறிச் சொல்லுகிறது உமக்குத் தரும மன்று. இது இரகுவம்சத்தரசர்கள் கொண்ட நோன்புக்கே விரோதமான காரியம். இப்படிச் சொல்வது உமக் குத் தகுதியாகுமானால் நான் வந்தவழியே திரும்பிச்செல்லு கிறேன்.” என்று கூறினர். அப்பொழுது தைரியசாலி யான வசிஷ்டமாமுனிவர் தசரதரைநோக்கி 66 மகா ராஜாவே, நீரோ இக்ஷ்வாகு வமிசத்தில் பிறந்து இரண் டாவது தருமதேவதை போல விளக்குகின்றீர் ; மநோ தைரியத்தையும், நல்ல நோன்பையும் கைப்பற்றியிருக்கும் நீர் உமது குலாசாரத்தை இப்பொழுது விட்டுவிடுவது நியாயமன்று.”இன்னபடி நடக்கிறேன் ” என்று வாக்குக் கொடுத்தால் அதற்கேற்றபடி நடக்கவே வேண்டும். அப்படி நடவாத பக்ஷத்தில், செய்த தருமங்களெல்லாம் பலனில்லாதனவாம். ஆதலால் இராமனை அனுப்பும். அஸ்திரசஸ்திர வித்தைகளில் இராமன் தேர்ந்தவனா னாலும் இல்லை என்றாலும் விசுவாமித்திரருடைய பாது காப்பிலிருக்கிறவரையில் அவனை ஒருவராலும் ஒன்றுஞ் செய்யமுடியாது : அக்கினி சக்கரம் அமிருதத்தைக் காப் பதுபோல விசுவாமித்திரர் இராமனைக் காக்கும்பொழுது அரக்கர் அவனை என்ன செய்ய முடியும்? இராமன் அவருடன் புறப்பட்டுப் போவதில் கொஞ்சமேனும் உமக்கு அச்சம் வேண்டாம் என்றார். 

இவ்வாறு வசிஷ்டர் சொல்லியதைக் கேட்டு தசரதர் இராம லக்ஷ்மணர்களை ஒருவிதமான கவலையுமில்லா மல் மனப்பூர்வமாய் விசுவாமித்திரரிடம் ஒப்பித்தார். முத லில் விசுவாமித்திரர் நடந்தார். அவருக்குப்பின் கையில் வில்லைப் பிடித்துக்கொண்டு இராமர் சென்றார். அவருக் குப் பின் விற்பிடித்த கையராய் லக்ஷ்மணர் போயினார். 

அரையோஜனை தூரம் வழி நடந்து அவர்கள் சரயு நதியின் தென்கரை சேர்ந்தார்கள். அப்பொழுது விசுவா மித்திரர் அன்புடன் இராமரை அழைத்துப் பின் வரு மாறு சொல்லலானார்:- “குழந்தாய், சீக்கிரம் ஆசமனம் பண்ணு. கால விளம்பஞ் செய்யவேண்டாம். எல்லா மந்திரங்களும் அடங்கிய பலை அதிபலை என்னும் இரண்டு வித்தைகளை நான் உனக்கு உபதேசிக்கிறேன். அவைகளை நீ பெற்றுக்கொள். உனக்கு அவைகளின் மகிமையால் களைப்புத்தோன்றாது; பிணி அணுகாது; உடம்பு வாடாது; நீ நீ தூங்கினாலும் சோர்ந்திருந்தாலும் அரக்கர்களால் உனக்கு ஒருவித அபாயமும் உண்டாகாது; இவ்வுலகத்தி லும் மற்றவுலகங்களிலும் உன் புஜபலத்துக்கு ஒப்பான வீரன் ஒருவனும் -இருக்கமாட்டான்”. இவ்வாறு விசுவா மித்திரர் சொல்லலும், இராமர் விதிப்படி ஆசமனம் பண்ணி வெகு ஆசாரத்துடனும் சந்தோஷத்துடனும் அம் முனிவரிடமிருந்து அந்த வித்தைகளை உபதேசம் பெற்றுக் கொண்டார். 

பொழுது விடிந்தவுடன் தாணு ஆச்சிரமத்தை விட்டு விட்டு இராமலக்ஷ்மணர்களும், விசுவாமித்திர மகரிஷி யும் தங்கள் தங்கள் நித்திய கருமங்களை முடித்துக் கொண்டு கங்கை நதிக் கரைக்குவந்து அதைக் கடந்து தென்கரை சேர்ந்து அப்பால் நடக்க ஆரம்பித்தார்கள். அவர்களே திரில் வெகு விசாலமாயும் பயங்கரமாயும் ஜன ஸஞ்சாரமுமில்லாத ஓர் அரணியம் காணப்பட்டது. அதைப்பார்த்தவுடன் இராமர், முனிவரை நோக்கி “இவ் வனத்தின் பெயர் என்ன? எங்கே திரும்பினாலும் அரசும், புரசும், வில்வமும், தேக்கும், பாதிரியும், இலந்தையும், ஆகாயத்தை அளாவி நிற்கின்றனவே!” என்றார். உடனே விசுவாமித்திர முனிவர் இராமரை நோக்கி “கேள் குழந் தாய், இக்கொடியவனம் இன்னாருடையது என்பதைச் சொல்லுகிறேன். முற்காலத்தில் தேவர்களால் உண் டாக்கப்பட்ட வெகு சுபிக்ஷமான மலதம், கரூசம் என்ற இரண்டு நாடுகள் இவ்விடத்திலிருந்தன. பின்பு ஒரு காலத்தில் இவ்விடத்தில் ஒரு யக்ஷிணி பிறந்தாள். அவள் ஆயிரம் யானை பலமுள்ளவள். நினைத்த உருவங்கொள்ள அவளுக்கு வல்லமையுண்டு. அவள் பெயர் தாடகை அவள் சுந்தன் என்ற அரக்கனை மணந்தாள். பலத்தில் இந்திரனுக்கு ஒப்பான மாரீசன் என்னும் அரக்கன் அவ் விருவருடைய குமாரன். தாடகை இந்தப் பிரதேசத்தை நாடோறும் நாசஞ் செய்துகொண்டே யிருக்கின்றாள். அவளிப்பொழுது நமக்கு அரையோஜனை தூரத்தில் நமது வழியை மறைக்கப்போகிறாள். நாமும் அவளிருக்கும் காட்டு வழியாகத்தான் அவசியம் போகவேண்டும். அந் தத் தீய செய்கையுள்ள ராக்ஷசியை உன் புஜபலத்தால் நீதான் வதைக்கவேண்டும்.நீ தாடகையைப் பெண்பால் என்று கருதி அவளை வதைப்பதில் அருவருப்பு வைக்கக் கூடாது. பெண்பாலைக் கொல்லுவது வீரர்களுக்கு அநீதி என்றாலும், நீ இராஜகுமாரனாகையால் நான்கு சாதியார் களுடைய க்ஷேமத்துக்காக இக்காரியத்தைச் செய்தே தீரவேண்டும். ஏதாவது ஒரு காரியஞ்செய்வதனால் ஜனங்களுக்கு நன்மை உண்டாகுமானால் அக்காரியம் கொஞ்சம் கெடுதலாயிருந்தாலும், சிறிது நியாயமும் தரும மும் இல்லாமலிருந்தாலும் அதை அரசன் அவசியம் செய்ய வேண்டும் என்பது முறை. உலகத்தைப் பாதுகாத்தலையே நோன்பாகக்கொண்ட அரசர்களுக்கு இதுதான் குலா சாரம்” என்றார். 

இவ்விதமாக விசுவாமித்திரர் தைரியமாய்ச் சொன் னதைக் கேட்டு இராமர் தமது இருகரங்களையுங் கூப்பிக் கொண்டு முனிவரைப் பார்த்து “எனது தந்தையார் இட்ட கட்டளையின்மேல் நான் வைத்திருக்கிற விசுவாசத்தாலும்,  கௌரவத்தாலும், இக்கட்டளை கெளசிகரிடும் கட்டளை என்பதாலும். நீங்கள் என்ன சொன்னாலும் விசாரியாமலே செய்யக் காத்திருக் கிறேன். அயோத்தியில் நாம் புறப்படும்பொழுது பல பெரியோர்கள் முன்னிலையில் என்னிடம் என் தந்தையா ராகிய தசரத மகாராஜர் ‘விசுவாமித்தர மாமுனிவர் என்ன சொல்லுகிறாரோ அது உன்னால் அவசியம் செய்யப்படவேண்டும்’ என்று கட்டளையிட்டிருக்கிறார். அது தள்ளத்தக்கதன்று. ஆகையால் நான் என் தந்தை சொற்படி தங்கள் கட்டளையை மேற்கொண்டு தாட கையை வதைக்கிறேன்” என்றார். 

இப்படிச் சொல்லி முடித்து இராமர் தமது கையால் வில்லின் மத்தியை உறுதியாகப் பற்றி நன்றாக நாணேற்றி நாணைத் தெறித்தார். தாடகை அவ்வொலி யைக் கேட்டு திகைத்து வெகு கோபங்கொண்டு சத்த முண்டான திக்கை நோக்கி ஓடிவந்தாள். அவள் வெகு மாயைவல்லவளாகையால் உடனே வேண்டியபடி அநேக வித உருவங்கொண்டு ஆகாயத்தில் மறைந்து நின்று மாயையால் மயக்குபவள்போல பலவிதமாக இராச குமாரர்களோடு போர்செய்ய ஆரம்பித்து, கல்மழை பொழிந்துகொண்டு வெகு பயங்கரமாய்ப்போர் புரிந் தாள். மேலும், ராமரையும், லக்ஷ்மணரையும் ஒரே அறையில் அழிக்கக் கருதி இடியிடிப்பதுபோல் கர்ச்சித்துக் கொண்டு ஓடிவரும்பொழுது நேராக அவள் மார்பைக் குறித்து இராமர் ஒரு பாணம் விடுத்தார். அவளும் பூமியில்விழுந்து மாண்டாள். 

இராமர் செய்த பராக்கிரமமான காரியத்தைப் பார்த்து விசுவாமித்திரர் ஆனந்தமடைந்து இராமரை உச்சிமோந்து “அப்பா, என் இராமா. நாம் இன்றிரவு இங்கேயே வசிப்போம். நாளைக் காலையில் நமது ஆச்சிர மம் போவோம்” என்றார். அப்பொழுது முதல் அவ் வனத்தில் உபத்திரவம் சிறிது மில்லாமல் நீங்கிவிட்டபடி யால் அது குபேரனுடைய சைத்திரரதமென்ற உத்தி யானவனம்போல் அழகியதாய் விளங்கிற்று. 

5. விசுவாமித்திரர் யாகம். 

அவ்விரவு கழிந்ததும் விசுவாமித்திரர் புன்னகை யுடன் இராமரைப் பார்த்து வெகு இனிமையாகப் பின் வருமாறு சொல்லலுற்றார்:-“பெருங் கீர்த்தி பெற்ற அரசகுமாரனே, நீ செய்த காரியங்களால் நான் சந்தோஷ மடைந்திருக்கிறேன். உனக்கு எக்காலங்களிலேயும் க்ஷேமமுண்டாவதாக. என் மனதிலுண்டான சந்தோஷத் தினால் நான் உனக்கு அநேக அஸ்திரங்களை உபதேசஞ் செய்கிறேன். உனக்குச் சத்துருக்களாக அசுரர்கள், கந் தருவர்கள், உரகர்கள் இவர்களுடன் தேவர்கள் சேர்ந்து வந்து போரில் உன்னை எதிர்த்தாலும், நீ அவர்களையெல் லாம் அடக்கி வெற்றிகொள்வாய். புஜபராக்கிரமமமைந்த இராமா, இவ்வஸ்திரங்கள் யாவும் தங்களுக்கிஷ்டமான உருவங்கொள்ள வல்லமையுள்ளவை ; வெகுபலமுள் ளவை. சடிதியில் நீ இவைகளை என்னிடமிருந்து பெற் றுக்கொள் என்று சொல்லி வீசுவாமித்திரர் விதிப்பிர காரம் இராமருக்கு எல்லா அஸ்திரங்களையும் அன்போடு உபதேசித்துக் கொடுத்தார். 

அஸ்திரங்களை அவ்வாறு விசுவாமித்திரரிடமிருந்து அடைந்த பிறகு வெகு சந்தோஷமாய் தமது முகம் விளங்க இராமர் வழிநடக்கும் பொழுது ஒரு பர்வதப் பிர தேசத்துக்குச் சமீபத்தில் மேகம்போல் விளங்குகின்ற அழகான ஒரு சோலையைக் கண்டு “முனிவரே, இது யாருடைய வனம்? பார்க்கப் பார்க்க மனம் ஆனந்த மடைகிறது. இது ஓர் ஆச்சிரமமென்று நினைக்கிறேன். தங்கள் வனம் எங்கிருக்கிறது?நித்தியம் யாகஞ் செய்கிற வர்களைச் கெடுத்துக்கொண்டும், அநேக பாபஞ்செய்து கொண்டுமிருக்கிற அந்தச்சண்டாளர்கள் எங்கிருக்கிறார் கள்? எந்த வனம்போய் நான் அந்த ராக்ஷசர்களை வதை செய்யவேண்டுமோ அந்த வனம் எது?’ என்று வினாவினார். 

இராமர் இவ்விதம் கேட்கவே, வெகு தேஜஸ்வியான விசுவாமித்திரர் அவரைப் பார்த்துப் பின்வருமாறு விஸ் தாரமாகச் சொல்லத் தொடங்கினர்:-“மகாதபஸ்வியான காசியபர் இங்கு தமது தவத்தின் சித்தியை அடைந்த படியால் இதற்குச் சித்தாச்சிரமம் என்று பெயராயிற்று. விஷ்ணுபகவான் அதிதி வயிற்றில் வாமனாவதாரம் செய்து, எல்லாவிதமான சோர்வுகளையும் போக்கும் இந்த ஆச்சிரமத்தில் முதலில் வாசஞ்செய்தார். அந்த வாமனாவதாம் பண்ணின விஷ்ணுவினிடம் பக்தி பண்ணிக் வைத்து, நான் இப்பொழுது இங்கு வாசம் கொண்டிருக்கின்றேன். இந்த ஆச்சிரமத்தைத் தான் ராக்ஷ சர்கள் அடிக்கடி உபத்திரவம் பண்ணிக்கொண்டிருக்கி றார்கள். இவ்விடத்தில் நீ அவ்வரக்கர்களைக் கொல்ல வேண்டும். நாம் இப்பொழுது ஒப்புயர்வற்ற இந்தச் சித் தாச்சிரமத்தில் பிரவேசிப்போம்” என்று சொல்லி அம் முனிவர் இராமலக்ஷமணர்களுடன் தமது ஆச்சிரமத்தினுள் வெகு சந்தோஷமாய்ப் புகுந்து விளங்கினார். 

அக்குமாரர்கள் ஒரு முகூர்த்த நேரம் அங்கு இருந்து தங்கள் களைப்பை நீக்கிக்கொண்டு அதன்மேல் எழுந்தி ருந்து அஞ்சலிபந்தம் பண்ணிக்கொண்டு விசுவாமித்திர முனிவரைப்பார்த்து “இப்பொழுதே நீர் யாகம் செய்யத் தொடங்கலாம். இந்த இடத்தின் பெயர் சித்தாச்சிரம மன்றோ. அது உண்மையா யிருக்கும்படி உமது யாகம் சித்திபெறும். உமது சொல் உண்மையாக முடியும்” என் றார்கள். அவர்கள் சொன்னதைக்கேட்டு மிகுந்த சந் தோஷமடைந்து விசுவாமித்திரர் யாகஞ்செய்யத் தொடங் கினர். இராஜ குமாரரிருவரும் சுகமாய் அன்றிரவு தூங்கி காலையில் எழுந்து காலை ஜபதபங்களை நிறைவேற்றி, ஓமஞ்செய்துகொண்டிருந்த விசுவாமித்திரரிடம் வந்து வணங்கி நின்றார்கள். 

காலமும் இடமும் அறிந்து அவைகளுக்குத் தகுந்தபடி பேசுவதில் வல்லவர்களான அவ்வரச குமாரர்கள் அங் கிருந்த ரிஷிகளெல்லாரும் சொன்னபடி நித்திரையின்றி வெகு முயற்சியுடன் வில்லேந்தியவர்களாய் யாகம் நடக் கும் அந்த ஆச்சிரமத்தை ஆறு நாள் இரவும் பகலும் காத் துக் கொண்டிருந்தார்கள். ஆறாம் நாள் வந்ததும் இராமர் லக்ஷ்மணரை நோக்கி “வெகு ஜாக்கிரதையாய்ப் பார்த்துக் கொண்டிரு” என்றார். 

அரக்கர்களுடன் போரிடத் துடித்துக் கொண்டு இராமர் அவ்வாறு சொல்ல, விசுவாமித்திரருடன் ரித்து விக்குகளாகிய முனிவர்களும், யாக குண்டம் கொழுந்து விட்டெரிய, விதிப்படி மந்திர பூர்வமாக ஓமம் பண்ணி னார்கள். அப்படி யாகம் நடக்கும்பொழுது ஆகாசத்தில் எல்லாருடைய உடம்பும் மயிர்க் கூச்செறிய ஒரு பெரிய அட்டகாசமுண்டாயிற்று. மாரீசன். சுபாகு என்ற அரக்க ரிருவர் மற்ற அரக்கர்களுடன் கோர தோன்றி யாக பூமியில் இரத்தத்தை குடங் குடமாய்க் ரூபத்தோடு கொட்டினார்கள். வேதியில் இரத்தத்தைக் கண்டு வேகங் கொண்ட இராமர் மாரீசன் மார்பை நோக்கி அதிக பலமும் பிரகாசமுமுள்ள மாநவாஸ்திரத்தை மிக்க கோபத்தோடு விடுத்தார். யோசனை தூரத்துக்கப்பால் தூக்கிக் கொண்டு போய் அது அவனை ஒரு நூறு சமுத்திரத்தில் தள்ளி விட்டது. திவ்வியமான ஆக்கிநே யாஸ்திரம் ஒன்றை தமது வில்லில் தொடுத்து அதனால் சுபாகுவை ஆச்சிரமத்துக்கு வெளியில் விழச் செய்தார். வாயவியாஸ்திரத்தைப் பிரயோகித்து மற்ற அரக்கர் களையும் கொன்றிட்டார். உபத்திரவம் ஒழிந்து யாகம் முடிந்ததும் விசுவாமித்திர மகாமுனிவர் இராமரைப் பார்த்து “நீர் செய்த உபகாரத்தால் என் யாகம் நன்றாய் நிறைவேறிற்று.நீர் பிதிரு வாக்கிய பரிபாலனம் நன்றாகச் செய்தீர். உம்முடைய மகத்தான பராக்கிரமத்தால் இந்த இடம் உண்மையாய்ச் சித்தாச்சிரமம் என்ற பெயரை உறுதியாக்கிக் கொண்டது” என்று சொல்லிக் கொண்டாடினார். 

ஏற்றுக் கொண்ட காரியத்தைச் செய்துமுடித்த இராம லக்ஷ்மணர்கள் அன்றிரவு வெகு சந்தோஷமாகக் கவலையற்று நித்திரை செய்தார்கள். பொழுது விடிந்ததும் அவர்கள் எழுந்திருந்து காலைக் கடன்களை முடித்துக் கொண்டு விசுவாமித்திரரும் மற்ற ரிஷிகளும் இருந்த இடத்துக்கு வந்து சேர்ந்தார்கள். அக்கினிபோல் மிக்க ஒளியோடு விளங்குகிற விசுவாமித்திர மாமுனிவரை வந்தனம்பண்ணி வெகு கம்பீரமாயும் மதுரமாயும் “நாங்க ளிருவரும், நீர் கட்டளையிடும் வேலையைச் செய்யக் காத் திருக்கிறோம். இன்னும் எங்களாலாக வேண்டியவை என்ன, கட்டளையிடலாம்” என்றார்கள். இதைக் கேட்டு, விசுவாமித்திரர் அங்கிருந்த மற்றை மகாரிஷிகளுடனே இராமலக்ஷ்மணரைப் பார்த்து “மிதிலை நகரத்து மன்னவ ரான ஜநகமகாராஜர் வெகு பிரசித்தமான யாகமொன்று செய்ய யத்தனிக்கின்றார். நாங்கள் அவ்விடம் போகிறோம். நீங்களும் அங்கு எங்களுடன் வரவேண்டுமென்று கேட்டுக் கொள்ளுகிறோம். அங்கு வெகு ஆச்சரியமான ஒரு தனுசு இருக்கிறது. தேவர்கள், கந்தருவர்கள், அசுரர்கள், ராக்ஷசர்கள். மானிடர்கள் ஒருவராலும் நாணேற்ற முடியாம லிருக்கிறது. நீர் எங்களுடன் புறப்பட்டு வர வேண்டும். யாகத்துக்கு போனது போலவுமிருக்கும். ஆச்சரியகரமான தனுசையும் பார்க்கலாம்” என்று சொன்னார். இப்படிச் சொல்லி முடித்து விசுவாமித்திரர் இராச குமா ரர்களைத் தம்முடன் அழைத்துக்கொண்டு வன தேவதைக ளிடம் விடை பெற்றுக் கொண்டு முனிவர் கூட்டத்தோடு புறப்பட்டார். 

வெகு தூரம் கடந்து மத்தியான காலம் நெருங்கும் பொழுது எல்லா ரிஷிகளாலும் வணங்கப்படும் சிறந்த நதியாகிய கங்கையைக் கண்டார்கள். அந்தப் புண்ணிய தீர்த்தத்தில் அவர்கள் எல்லோரும் விதிப்படி நீராடித் தேவர்களையும் பிதிருக்களையும் தர்ப்பணங்களால் திருப்தி பண்ணி வைத்து, அக்கினி ஹோத்திரம் முதலிய கடன்களை முடித்து அதற்கு நிவேதனம் செய்யப்பட்ட அவிஸ்ஸை அமிருதத்துக்குச் சமானமாக எண்ணிப் புசித்து வெகு சந்தோஷமடைந்தவர்களாய் இரவை அவ்விடம் கழித்தார்கள். பொழுது விடிந்து விடவே ஸ்நானஞ் செய்து தமது காலைக் கடன்களைச் சரிவர முடித்த மாமுனியைப் பார்த்து இராமர் “இரவு நல்ல விஷயத்தில் இனிதாகக் கழிந்தது. தங்களிடமிருந்து அவசியம் கேட்க வேண்டியவை பலவற்றைக் கேட்டோம். தாங்கள் சொன்ன இந்த வரலாறு முழுவதையும் சிந்திக்கச் சிந்திக்க இரவு கணம்போலக் கழிந்துவிட்டது. இப்பொழுது சீக்கிரமாக இந்தப் புண்ணிய நதியாகிய கங்கையைத் தாண்டுவோம்” என்றார். அதைக் கேட்ட விசுவாமித்திரர் முனிக் கூட்டங்களோடும் இராம லக்ஷ்மணர்களோடும் அந்த நதியைச் சீக்கிரமாகத் தாண்டினார்.வடகரை சேர்ந் ததும் தம்மைப் பார்க்க வந்த ரிஷிகளுக்கு மரியாதை செய் தனுப்பினார். பின்பு கங்கைக் கரையில் கொஞ்சம் சிரம பரிகாரஞ் செய்துக் கொண்டு இரவை அவ்விடத்தில் கழித்து மறுநாள் புறப்பட்டு வடகிழக்காக நடந்து மிதிலைக்குச் சமீபத்தில் ஜநக மகாராஜாவின் யாகசாலைக்கு இராமர் லக்ஷ்மணர் விசுவாமித்திரர் மூவரும் வந்து சேர்ந்தார்கள். ஜநகமகாராஜா விசுவாமித்திரர் தமது யாகத்துக்காக வந்த செய்தியைக் கேட்ட வுடன் மிகுந்த ஆனந்தமடைந்து தமது புரோகிதர சதாநந்தரை முன்னிட்டுக் கொண்டு ரித்துவிக்குகள் எல்லாரும் தொடர்ந்து வர அர்க்கியம் பாத்தியம் முதலான. உபசாரங்களுடன் வெகு வணக்கமாய் முன் சென்று விசுவாமித்திரருக்கு உபசாரம் பண்ணினார். அம்முனியும் அவர் செய்த உபசாரங்களைப் பெற்றுக்கொண்டு அவரை ஆசீர்வதித்து அதன் பிறகு அவர் யோக க்ஷேமத் தையும் யாகம் இடையூறில்லாமல் நடந்தேறி வருகிறதா என்பதையும் விசாரித்தார். பிறகு ஜநகர் விசுவாமித்திர ரைப் பார்த்து ‘முனிவரே, இன்றுதான் என் யாகம் முடிவு பெற்றதென்று சொல்ல வேண்டும். தாங்களிங்கு வரும்படியான பாக்கியம் பெற்றேன். தாங்கள் எப் பொழுது என் யாக பூமியை நாடி வந்தீர்களோ அப் பொழுதே என் மநோரதங்கள் யாவும் நிறைவேறின். மிகுந்த அழகும், கம்பீரமும், இளமைப் பருவமும் உள்ள வர்களாயிருப்பினும் வில்லில் தேறின போர் வீரர்களாய் காணப்படுகின்ற குமாரர்கள் யார்?’ என்றார்.ஜநகர் இப்படி விசாரிக்க விசுவாமித்திரரும் தசரதராஜ குமாரர்க ளுடைய வைபவத்தையும் அவர்கள் சித்தாச்சிரமம் வந்த தும், அதன் காரணமும், அங்கு அரக்கர்களைக் கொன்ற தும், அவர்கள் யாத்திரையும், மிதிலையிலிருக்கும் அதிசய மான வில்லைப் பார்க்க வந்ததுமாகியவற்றையும் ஒன்றும் விடாமல் எடுத்துக் கூறினார். 

6. விசுவாமித்திரர் வரலாறு

அவ்வாறு விசுவாமித்திரர் சொன்னதைக் கேட்ட லும், கௌதமருடைய மூத்த குமாரரும் மகாதபசியும் வெகு காந்திபொருந்தியவருமான சதாநந்தர் என்ற ஐந்த மகாராஜருடைய புரோகிதர் மிக்க ஆச்சரியமடைந்து இராமரும் லக்ஷ்மணரும் வெகு சுகமாக உட்கார்ந்திருக்கப் யார்த்து “இராமா, தங்கள் வரவு நல்வரவாகுக. ஏதோ எங்களுடைய புண்ணியத்தால் தாங்கள் எக்காலத்திலும் வெற்றி பொருந்திய விசுவாமித்திர ரிஷியை கூட அழைத்துக்கொண்டு இங்கு வந்திருக்கிறீர்கள். இந்தக் கௌசிகமகாமுனிவரது பலத்தையும் சரித்திரத்தையும் உள்ளபடி சொல்லுகிறேன்; கேளும். 

“கீர்த்திபெற்ற காதியின் குமாரர் தான் மகாகாந்தி யுடன் கூடிய இவ்விசுவாமித்திரர். இவரும் பல்லாயிர மாண்டு இவ்வுலகத்தை அரசாண்டு வந்தார். ஒரு சமயத் தில் இவர் தமது சமுத்திரம்போன்ற சேனையை அழைத் துக்கொண்டு உலகத்தை வலஞ் செய்து வருவதற்காகப் புறப்பட்டார். அநேக ஆச்சிரமங்கள் முதலியவற்றைச் சுற்றிக்கொண்டு நல்ல மரங்களாலும், பூஞ்செடிகளாலும் கொடிகளாலும் நிறைந்த வசிஷ்ட மாமுனிவருடைய ஆசிரமத்தை அடைந்தார். கிழங்கையும், பழத்தையும், புசித்துக்கொண்டும், வாலகில்லியர்கள் வைகானசர்கள் என்ற அநேக ரிஷிகள் மனத்தை அடக்கிக் கோபத்தை யொழித்து ஐம்பொறிகளை வென்று மந்திரங்களை ஓதிக் கொண்டும் ஓமங்களை நடத்திக்கொண்டு மிருக்கக் கண்டார். 

”விசுவாமித்திர மகாராஜர் இவ்விதமாய் விளங்கின ஆச்சிரமத்தைக்கண்டு மனங்களித்து அதனுட்சென்று வசிஷ்ட முனிவரை வெகு மரியாதையுடன் வணங்கினார். வசிஷ்டரும் “உமது வரவு நல் வரவாகுக’ என்று அவரை உபசரித்து அவருக்கு ஆசனம் அளித்து அவரை உட்காரக் கேட்டுக்கொண்டார். அவரும் அப்படியே உட்கார்ந்ததும் கிரமப்படி வசிஷ்டர் அவருக்குக் கந்தமூல பலங்கள் கொண்டுவந்து கொடுத்து உபசாரம் செய்தனர். விசுவாமித்திரரும் அவரிடமிருந்து எல்லா மரியாதைகளையும் பெற்றுக்கொண்டு அவருடைய யோகக்ஷேமத்தைப்பற்றி விசாரித்தார். 

“இப்படிப் பேசிமுடிந்ததும் வசிஷ்டமாமுனி விசுவர்மித்திரரை பார்த்துப் புன்னகையுடன் “மகாராஜாவே, நான் தங்களுக்கும் தங்களுடைய சைனியத்துக்கும் விருந் தளிக்க கருத்துக்கொண்டிருக்கிறேன்.எங்களுக்கு எல்லாம் மன்னவரன்றோ தாங்கள். அரசனுக்கு விருந்தளிப்பது எங்களுக்கு முக்கிய காரியமன்றோ” என்றார். அதன்மேல், விசுவாமித்திரரும் “அப்படியே ஆகட்டும். தங்கள் இஷ்டம் எப்படியோ அப்படியே நடத்துங்கள்” என்று அங்கீகரித் தனர். அரசர் இவ்வாறு ஒப்புக்கொண்டவுடன், தமது மந்திரபலத்தால் எல்லாவித சித்தியையும் பெற்ற வசிஷ் டர் வெகு சந்தோஷத்துடன் தம்மிடத்திலிருந்த புண்ணி யத்தின் வடிவமாகவிளங்கும் காமதேனுவை வரவழைத்து அதனிடம் “எனது அருமையான காமதேனுவே, என் மநோபீஷ்டத்தைச் சீக்கிரம் நிறைவேற்றி வைப்பாயாக. நானோ இவ்வரசருக்கும் இவருடைய சேனை முழுவதுக்கும் விருந்தளிக்க எண்ணங்கொண்டிருக்கிறேன். அதை ஒரு குறைவுமின்றி நீ நிறைவேற்றிக் கொடுக்கவேண்டும். வெகு உயர்ந்த விருந்து இவர்களுக்கு அளிக்க வேண்டும். அறுசுவையுண்டியும் இவர்கள் ஒவ்வொருவருடைய இஷ் டப்பிரகாரம் கொடுத்து இவர்களைத் திருப்தி பண்ணி வைக்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டனர். 

“இவ்வாறு வசிஷ்டரால் கேட்டுகொள்ளப்பட்ட காம தேனுவும் யாருக்கு எது இஷ்டமோ அந்தப்பிரகாரம் விருந் துக்கு வேண்டிய பண்டங்களைக் குவிக்க ஆரம்பித்தது.இவ் வண்ணம் வசிஷ்டர் அளித்த விருந்தினால் விசுவாமித்திர ருடைய சேனை முழுவதும் வெகு திருப்தியை அடைந்தது. விசுவாமித்திர மன்னரும் அவரது மந்திரிகளும் வெகு திருப்தி அடைந்தார்கள். 

அதன் பிறகு அவர் ஆனந்தமடைந்து வசிஷ்டரைப் பார்த்து “வேதியமணியே, நான் உமக்கு விருந்தளிப்பது போக நீர் எனக்களித்த விருந்தால் நான் வெகுதிருப்தி அடைந்துவிட்டேன். ஆனால் நான் கேட்டுக்கொள்ளு கிறது ஒன்றிருக்கிறது. நான் நூறாயிரம் மாடு உமக்குக் கொடுக்கிறேன். அவைகளை நீர் ஒப்புக்கொண்டு இந்தச் சபலை என்னும் காமதேனுவை எனக்குக் கொடுத்துவிட வேண்டும். சபலை என்பது பசுக்களுக்குள் இரத்தினம் என்று எண்ணப்படுகிறது. அரசன் இரத்தினங்களுக்கு யஜமானன் என்றன்றோ சாஸ்திரம் கூறும் ” என்றார். இவர் இப்படிச் சொல்லலும், வசிஷ்டர் “வேந்தே. நூறாயிரமல்ல, நூறுகோடிப் பசுக்கள், மிகப் பல வெள் ளிப் போர்கள் தாங்கள் கொடுத்தாலும் சபலையை நான் கொடுக்கப்போகிறதில்லை. இதுவே எனது எல்லா. ஆஸ்தி, எனது பிராணன், எனது தர்சம் என்ற சடங்கு. எனது பூர்ணிமாஸச் சடங்கு, தக்ஷிணையுடன் கூடிய எனது யாகம். அதிகமாகப் பேசுவதில் பயனென்ன. வேண்டும் பொருள்களை யெல்லாம் உண்டாக்கும் இக் காமதேனுவை நான் கொடேன்” என்றார். 

“வசிஷ்டமாமுனி இவ்வாறு சபலையைக் கொடுக்க மாட்டேன் என்று சொல்லிவிடவே. விசுவாமித்திர மன்னர் அதைப்பலாத்காரமாக இழுத்துக்கொண்டுபோக ஆரம்பித்தார். இவ்வண்ணம் இழுக்கப்பட்ட காமதேனு அரசருடைய வேலைக்காரர்களிடமிருந்து உதறிக்கொண்டு வசிஷ்டர் காலின்கீழ் வந்து கதறி வெகு துயரத்துடன் “வேதியரே, ஏனென்னை கைவிட்டு அரசருடைய ஆட்கள் இழுத்துக்கொண்டு போகும்படி செய்தீர்கள்” என்றது. இதை வசிஷ்டர் கேட்டு “அம்மா!நான் உன்னைக் கைவிட்டதாக ஒருநாளும் எண்ண வேண்டாம். நீ எனக்கு ஒருவிதமான குற்றமும் செய்யவில்லையே. அந்த அரசரோ தமது பலத்தின் செருக்கால் உன்னை இழுத்துக்கொண்டு போகிறார். என்னுடைய பலம் அரசருடைய பலத்துக்கு நிகராகுமா? அவரோ வேந்தர் வெகு பல பராக்கிரமம் பொருந்தியவர்” என்றார். 

“இதைக் கேட்டு, சபலை வெகு வணக்கத்தோடு வசிஷ்டரைப் பார்த்து “அரசர்கள் பலம் அந்தணர் களுடைய பலத்துக்கு ஒப்பானதாக ஒருவரும் சொன்ன தில்லையே. வேதியர்களுடைய பலம் வெகு வெகு அதிகம் என்றன்றோ எல்லாரும் சொல்லுகிறார்கள். அரசர்களுடைய பலத்துக்கு மேலானதன்றோ பிராமண பலம். உங்கள் பலத்திற்கு ஒருநாளும் தம் சைனியத்துடன் விசுவாமித்திரர் நிகராகமாட்டார். நீங்கள் உங்க ளுடைய வேதிய மகிமையை என்னிடத்தில் ஏவி விட் டால் ஒரு நொடியில் நான் வேண்டிய ப்டைகளை உண்டாக்கி இந்த மன்னவனுடைய செருக்கையும் பலத் தையும் குலைக்கிறேன். என்றது. இதை வசிஷ்டர் கேட்டு “சரி,சத்துரு சேனையை வதைக்க நீ சேனையை உண்டுபண்ணு” என்று அநுமதிசெய்ய, சபலை என்ற காமதேனுவும் ஒரு நொடியில் அவ்விதச் சேனையை உற்பத்தி பண்ணலாயிற்று. அது ஒரு முக்காரம் போடவே அதிலிருந்து நூற்றுக்கணக்காக “பல்லவர் கள்’ என்ற போர்வீரர்கள் உண்டாகி விசுவாமித்திரர் கண்முன்னே அவருடைய சேனைமுழுவதையும் நாசம் பண்ணினார்கள். 

“இவ்வண்ணம் தமது சைனியம் நாசமடைந்ததைப் பார்க்க விசுவாமித்திரருடைய செருக்கும் உத்ஸாகமும் குலைந்து போய்விட்டன. மகனொருவனை “நீ நமது இராச்சியத்தை அரசநீதி தவறாது ரக்ஷித்துவா” என்று கட்டளையிட்டுவிட்டுத் தாம் தவம்புரியக் காட்டுக்குச் சென்றார். 

“ஓராயிர வருஷகாலம் ஒருவருடனும் பேசாமல் வாய் திறவா நோன்பைக் கைக்கொண்டு அதிகோரமான் நிஷ்டையிலிருந்தார். அதன் மேல் கட்டைபோல் அசை வற்று நிஷ்டையில் நின்றார். இப்படி இவரிருக்கும்போது வெகுவித இடையூறுகள் இவர் நிஷ்டையைக் கெடுக்கச் சம்பவித்தன. அவ்வளவிலும் இவர் கோபத்துக்கு இடமே கொடுக்கவில்லை. இப்படி ஓராயிரம் வருஷம் உணவின்றித் தவஞ் செய்து அதன் பிறகு ஒருநாள் சிறிது அன்னம் உண்ண வேண்டும் என்று கருத்து கொண்டார். அப்படியே அவர் புசிக்க உட்காரும்போது அவர் தவத்தை எவ்விதத்திலாவது கெடுக்க வேண்டும் என்று எண்ணங்கொண்ட இந்திரன் ஒரு ஏழைவேதி யனாக உருவங்கொண்டு அங்கு வந்து அவர் புசிக்கப் போகும் அன்னத்தைத் தனக்கு வேண்டுமென்றான். அதற்காக அவன் மேல் கோபங்கொண்டு தமதுதவத்தை இழந்து விடாமல் தமக்கு எவ்வளவு பசியிருந்த போதி லும் அதைப் பாராட்டாது தமது அன்னத்தைத் தாம் உண்ணாமலே அவனுக்குக் கொடுத்துவிட்டார். அவனைப் பார்த்து ஒரு வார்த்தையும் சொல்லவில்லை. மறுபடி மௌனியாய் ஆயிரம் வருஷகாலம் மூச்சுவிடாமல் தவம் புரிந்தார். 

“அப்போது பிரமதேவர் தேவர்களுடன் விசுவா மித்திரரிடம் சென்று அம்மகாத்துமாவைப் பார்த்து இனிய வார்த்தையால் ஒ பிரமரிஷியே, நீர் செய்த தவத்தால் நாங்கள் எல்லாரும் திருப்தியடைந்தோம். உமது நிஷ்டையால் நீர் பிரமரிஷிப்பட்டம் பெற்றீர். நான் தேவகணங்களுமிசைய உமக்கு நீண்ட ஆயுள் அளிக் கிறேன். இதை நீர் இனிமையாக ஒப்புக்கொள்ளும். இனி நீர் உமது இஷ்டப்படி இருக்கலாம் என்றார். இதைக்கேட்டு வெகுசந்தோஷமடைந்து விசுவாமித்திரர். தேவர்களையும் பிரமதேவரையும் வணங்கி “கருணாகரக் கடவுளே, எனக்குப் பிரமரிஷிப்பட்டமும் நீண்ட ஆயுளு முண்டென்பது நிச்சயமானால் எனக்கு வேதங்களை ஓதி வைக்க யோக்கியதையும் வைதிக காரியங்களை நடத்தி வைக்கத் தகுந்த பதவியும் தாங்கள் அளிக்கவேண்டும். க்ஷத்திரிய வேதங்களையும் பிராமண வேதங்களையும் அறிந்தவர்களில் முதல்வராய் விளங்கிக் கொண்டு பிரம் ரிஷியாயிருக்கும் பிரமபுத்திரரான வசிஷ்ட முனிவருங் கூட என்னைப் பிரமரிஷி யென்று ஒப்புக்கொள்ள வேண் டும்” என்றார். பிரமதேவரும் ‘அப்படியே’ என்று கூறித் தேவர்களும் தாமுமாக எவ்வளவோ நல்லவார்த்தை சொல்லி முனி சிரேஷ்டரான வசிஷ்டரை வரவழைத்தார். வசிஷ்ட ரிஷியும் விசுவாமித்திரரும் ஒருவர்க்கொருவர் அன்பர்களானார்கள். வசிஷ்டரும் “விசுவாமித்திரர் தமது கோரிக்கைப்படி பிரமரிஷியே என்றார். விசுவா மித்திரரும் தமது பிரதிஜ்ஞையை நிறைவேற்றித் தமது விருப்பம் முடியப்பெற்று வசிஷ்டருக்கு நமஸ்காரஞ் செய்தார்; உலகத்தில் தவத்தை நிலைநிறுத்திக்கொண்டு சஞ்சரிக்கலானார். 

“ஒ இராஜகுமாரா, இவ்வண்ணம் பிரமரிஷிப்பட்டம் பெற்றவர் இம்மாமுனிவர்.” இங்ஙனம் விசுவாமித்திர ரைப் பற்றிச் சதாநந்தர் சொல்லி நிறுத்தினார். விசுவா மித்திர மாமுனியும் இராம லக்ஷ்மணருடன் தம்முடன் வந்த ரிஷிகளால் ஆராதிக்கப்பட்டுத் தமது விடுதியில் சௌக்கியமாக அன்றிரவு தங்கிருந்தார். 

7. இராமர் வில்லை முறித்தல் 

பிறகு பொழுதுவிடிதலும் ஜநகமகாராஜர் தமது காலைக் கடன்களைச் சரியாக நிறைவேற்றி இராம லக்ஷ் மணர்களையும் விசுவாமித்திர மாமுனியையும் வர¢ வழைத்து உபசரித்தார். அவ்விருவரையும் மாமுனிவ ருடன் விதிப்படி அரசர் அர்ச்சித்து விசுவாமித்திரரை நோக்கி “பகவானே என்ன வேலை யிடுகின்றீர்களோ அதைச் செய்யக் காத்திருக்கிறேன். என்னை ஏவுங்கள்” என்றார். இப்படி அரசர் சொல்லக் கேட்டலும் முனிவர் “தசரத குமாரர்களாகிய இவ்விருவரும் உலகத்தில் புகழ் பெற்ற க்ஷத்திரிய வீரர்கள். உங்களிடத்தி லிருக்கும் வில்லைப் பார்க்க விருப்பமுள்ளவர்களாக இருக்கிறார்கள். ஆகையால் அவர்கள் இங்கிருந்து திரும்பிப் போகுமுன் அவர்களுடைய ஆசையை நிறைவேற்றி வைக்க வேண்டும்” என்றார். 

இதைக் கேட்டு ஜநக மன்னர் பின்வருமாறு மறு மொழி சொல்லலானார்:-“கேளுங்கள். தேவதேவருடைய தனுசு தான் இப்பொழுது எங்கள் வம்சத்தில் ஒப்பித்து வைக்கப்பட்டிருக்கின்றது. அதன் பிறகு ஒரு சமயத்தில் நான் யாகம் பண்ணுமுன் என் யாகபூமியை ஒரு கலப்பை யால் உழும்போது அந்த உழுத பூமியிலிருந்து ஒரு பெண் மணி உண்டானாள். அதனாலேயே அவளுக்கு சீதை என்று பெயர் வைத்தேன். அவளும் இவ்வண்ணம் ஆச் சரியமாகப் பிறந்து வெகு அழகாக வளர்ந்துகொண்டு வரு கிறாள். அவளை மணம்புரிய விரும்பி அநேக வேந்தர்கள் என்னை வந்து கேட்டார்கள். நான் யாரொருவர் இந்த வில்லை வளைக்கிறாரோ அவருக்குத்தான் இந்தப் பெண் ணைக் கொடுப்பேன் என்று உறுதிசொல்லி இந்தத் தனு சைச் சீதையைக் கல்யாணம் பண்ணும் பணயமாக வைத் திருக்கிறேன். இதைக்கேட்டு இந்தச் ‘தனுசின் பலத் தைச் சோதிக்க, பலபராக்கிரமம் பொருந்திய அநேக மன்னர்கள் மிதிலையை நாடி வந்தார்கள். நான் அவர் களுக்குத் தனுசைக் காட்டினேன். அவர்களால் அதை அசைக்கக்கூட முடியவில்லை. இந்த ஆச்சரியமான வில்லை நான் அவசியம் இராம லக்ஷ்மணர்களுக்குக் காட்டு கிறேன். இராமர் இந்தத் தனுசை வளைத்து நாணேற்றி விடுவாரானால், வெகு அதிசயமாகப் பிறந்து விளங்கிக் கொண்டிருக்கும் சீதையை அவருக்கு நான் கொடுப்பேன்” என்றார். 

பிறகு ஜநகர் தமது மந்திரிகளைப் பார்த்து ‘நல்ல கந்த புஷ்பங்களைக் கொண்டு அர்ச்சித்துப் பூஜையில் வைக்கப்பட்டிருக்கும் நமது தனுசை இங்கு வரவழையுங் கள்’ என்று கட்டளை யிட்டார். தனுசு கொண்டு வரப் பட்டதும் விசுவாமித்திரர் இராமரை நோக்கி “குழந்தாய். வில்லைப் பார்” என்றார். மகரிஷியின் சொற்படி இராமரும் தனுசைப் பார்த்து “நானிதை என் கையால் தொடலாமா? இதை எடுத்து நாணேற்றிப் பார்க்கட் டுமா?” என்றார். அதைக் கேட்டு அரசரும் முனிவரும் “அப்படியே செய்க; அதற்கு ஆக்ஷேபமுண்டோ” என் றார்கள். முனிவர் கட்டளைப்படி, வெகு அலக்ஷ்யமாகத் தமது இடக் கையை வில்லின் மத்தியில் வைத்து அதை இராமர் வெளியில் எடுத்து நாணேற்றும்பொருட்டு இழுக் கும்பொழுது அந்த வில் மத்தியில் இரண்டு துண்டாக முறிந்தது. அப்பொழுது பேரிடி முழக்கம்போல் அதி லிருந்து ஒரு பெரிய சத்தம் எழும்பிற்று. மலை பிளந்தாற் போன்ற அந்த முழக்கத்தைக் கேட்டு பூமி கிடுகிடு என்று நடுங்கிற்று. அந்தச் சத்தத்தால் ஜநகர் விசுவாமித் திரர் இராமர் லக்ஷ்மணர் இவர்கள் நீங்கலாக மற்ற எல்லா ஜனங்களும் கலக்கமுற்றுத் திகைப்படைந்து மூர்ச் சித்துக் கீழே விழுந்தார்கள். 

எல்லாரும் மூர்ச்சை தெளிந்தெழுந்த பிறகு பயம் நீங்கிய ஜநகர் தமது கைகளைக் கூப்பிக்கொண்டு விசுவா மித்திரரைப் பார்த்து “பகவானே, தசரத மைந்தரான இராமருடைய பராக்கிரமத்தைக் கண்டறிந்தேன். வெகு ஆச்சரியமாகவும் ஒருவராலும் எண்ணக்கூடாததாகவும் இருக்கிறது. எனது குழந்தை சீதை இராமரை மணந்து என் குலத்தின் கீர்த்தியை விளங்க வைக்கப்போகிறாள் என்பதில் ஆக்ஷேபமில்லை. இப்பொழுதே தங்களுடைய கட்டளையைப் பெற்றுக்கொண்டு எனது மந்திரிகள் இரத மேறி அயோத்திக்குப் போகவேண்டும். இராமர் வில்லை வளைத்ததையும், அதன் மூலமாகச் சீதையை விவாகஞ் செய்துகொள்ளும்படி நேர்ந்த செய்தியையும், தெரிவித்துத் தசரதரை உடனே அழைத்துவரவேண்டும்’ என்றார். அதற்கு விசுவாமித்திரரும் இசைய, ஜநகரும் தமது முக்கிய மந்திரிகளைக் கூப்பிட்டு அவர்களிடம் சமாசாரங் களைச் சொல்லி தசரதரை அழைத்து வரும்படி அனுப்பினார். 

இவ்வாறு ஜநகமகாராஜாவால் கட்டளையிடப்பட்ட தூதர்கள், தாங்கள் ஏறிவந்த குதிரைகள் வாயில் நுரையைத் தள்ளித் தளர்ந்துபோக அதிவேகமாய் மூன்றுநாள் இரவும் பகலும் வழிகடந்து அயோத்திமாநகரம் சேர்ந் தார்கள். உடனே அரண்மனைக்குள் சென்று தசரதமன்ன ரைக்கண்டு அவர்கள் அஞ்சலி செய்துகொண்டு வெகு வணக்கத்துடன் மதுரமாக “மகாராஜாவே! மிதிலை நக ரத்து அரசரான எங்கள் ஜநகர் எல்லாருடைய க்ஷேம் சமாசாரத்தையும் விசாரித்து இந்த சந்தோஷ சமாசா ரத்தை விசுவாமித்திரர் நியமனப்படி தங்களிடம் சொல்லி வரத் திட்டஞ்செய்தார். அது என்னவென்றால் “என் வில்லை எவன் வளைக்கின்றானோ அவனுக்கு என் பெண்ணை விவாகஞ்செய்து கொடுப்பேன் என்று நான் செய்து கொண்ட உறுதிப்பாடு தங்களுக்கு நன்றாகத் தெரியு மன்றோ. அதே வில்லை இப்பொழுது இங்குத் தாமாக வந்த தங்கள் குழந்தையான இராமர் வளைத்து நாணேற் றினார். அதனால் என் குழந்தையைக் கல்யாணம் பண்ணிக் கொள்ள யோக்கியதைபெற்றுவிட்டார். அந்தப் பலமான வில்லை அவர் ஒரு பெரிய சபை நடுவில் இரண்டாக முறித் தெறிந்தார். எனது வாக்குத்தத்தத்தை நிறைவேற்றும் பொருட்டு இராமருக்கு என் குழந்தையை விவாகம்செய்ய வேண்டும். இவ்வாறு என் கோரிக்கையை நிறைவேற்றிக் கொள்ள தங்களுடைய அநுமதி கிடைக்க வேண்டும். ஒரு நொடியில் தாங்கள் தங்கள் உபாத்தியாயர்கள், மந் திரிகள், மனைவிமார்,குடிகள் முதலிய எல்லோருடனும் வந்து குழந்தைகளுடைய கல்யாணத்தைப் பார்த்து களிக்க வேண்டும். இவ்விரு குழந்தைகளுடைய பல பராக் கிரமத்தையும் கண்டு கண்கள் குளிர வேண்டும் என்ப தாம்” என்று தூதர்கள் சொல்லி முடித்தார்கள். 

இவ்வண்ணம் தூதர்கள் சொல்லியதைக் கேட்ட தசரதரும் பரமானந்தமடைந்து வசிஷ்டர் வாமதேவர் முதலிய ரிஷிகளையும் எல்லா மந்திரிகளையும் பார்த்து ‘இது உங்களுக்கெல்லாம் சம்மதமாக இருந்தால் கால தாமதமின்றி சீக்கிரம் புறப்பட்டு நாம் அவருடைய நகரத்துக்குப் போவோம்” என்றார். மந்திரிகளும் அங்கி ருந்த எல்லா ரிஷிகளும் “உடனே புறப்பட வேண்டும். ஏற்ற சம்பந்தம் வாய்த்தது” என்றார்கள். தசரதமன்ன ரும் வெகு சந்தோஷமடைந்து “நாளை நாம் சம்பந்தியின் ஊருக்குப் புறப்படுவோம்” என்றார். 

இரவு நீங்கிய பின் தசரத மன்னர் தம்முடைய புரோகிதர்கள் உறவினர்கள் முதலானவர்களுடன் சுமந் திரரைப் பார்த்து “இன்று முதலில் நமது கருவூலக்காரர் கள் யதேஷ்டமாய் இரத்தினங்களையும் பணங்களையும் எடுத்துக்கொண்டு நல்ல காவலாளர் சூழ்ந்துவர புறப் பட்டுப் போகட்டும். நமது சதுரங்க சேனையும் சீக்கிரம் நடக்கட்டும். நமக்கு முன்னம் நமது குருக்களாகின்ற வசிஷ்டர், வாமதேவர், ஜாபாலி, காசியபர், நீண்ட ஆயு ளுள்ள மார்க்கண்டேயர், காத்யாயனர் முதலான பிராம ணோத்தமர்கள் பிரயாணப்படட்டும். சீக்கிரம் எனது இரதம் சித்தமாகட்டும். காலம் தவறக்கூடாது. ஜநக ருடைய தூதர்கள் துரிதப்படுகிறார்கள்” என்றார்.இம் மாதிரி அரசர் கட்டளையிடலும் அவரது சைனியமும் அவருடைய குருக்கள் முதலான எல்லாரும் புறப்பட் டார்கள். அரசரும் தமது இரதத்தில் ஏறிப்பிரயாண மானார். நான்கு நாள் வழிச் சென்று இவர்கள் எல்லாரும் விதேக நகரம் சேர்ந்தார்கள். 

தசரத மன்னரை ஜநகமகாராஜர் எதிர்சென் றழைத்து மனம் பூரித்து தேனொழுகும் மொழியால் “மகா ராஜரே, பிரயாணம் சிரமமில்லாமலிருந்ததா? எனது பெரும் பாக்கியத்தால் தாங்கள் இங்கு வரும்படி நான் பெற்றேன். தங்கள் பல பராக்கிரமம் பொருந்திய இரண்டு மைந்தர்களைக் கண்டு மனம் பூரியுங்கள். அவர்க ளுடைய வல்லமையின் பலந்தான் தாங்கள் இங்கு வந்த தற்குக் காரணம். வெகு காந்தி பொருந்தியவரும் முக்காலங்களையும் அறிந்தவருமான வசிஷ்டமாமுனிவரை எனது புண்ணியத்தால் நானின்று பார்க்கும்படியான பாக்கியம் பெற்றேன். அவரை உத்தமர்களான அந்த ணர்கள் சூழ்ந்து நிற்பது இந்திரனை தேவர்கள் சூழ்ந்து நிற்பதுபோல விளங்குகிறது. புருஷ சிங்கமே, எனது யாகம் விரைவில் முடிந்துவிடுகிறது. அது நிறைவு பெற்ற வுடன் நாம் நமது குழந்தைகளுடைய கல்யாணங்களை முடிக்கலாம்” என்றார். 

இவ்வாறு எல்லா ரிஷிகள் மத்தியிலும் ஜநகர் சொன்ன வார்த்தையைத் தசரதர் கேட்டு தாமும் பேசு வதில் வெகு புத்திமானாகையால் “தானங் கொடுத்தால் வாங்கமாட்டோம் என்று ஒருவரும் சொன்னதாக நாம் இது வரையில் கேட்டதில்லை. நீங்கள் செய்யப் போகிற தானமோ கன்னிகாதானம். ஆகையால் தங்களுடைய சொல்லை ஒரு பொழுதும் தட்டாமல் நாம் நடத்தி வைப்போம்” என்று உத்தரமளித்தார். 

ஜநகரும் வெகு சந்தோஷமடைந்து அஞ்சலி பந்தம் பண்ணிக் கொண்டு “வில்லை ஒடித்த பராக்கிரமத்தால் விலைக்கு வாங்கப்பட்ட சீதையை இராமருக்கும். ஊர்மிளையை லக்ஷ்மணருக்கும் கொடுக்கிறேன்” என்றார். ஜநகர் இவ்வாறு சொல்லி முடித்ததும் மாமுனியான விசுவாமித்திரரும் வசிஷ்டருமாக அந்த வீரரைப் பார்த்து பின் வருமாறு சொல்லானார்கள். “புருஷ சிங்கமே, இக்ஷ்வாகு குலமும், நிமி குலமும் இவ்வுலகத்தில் மிகக் கீர்த்தி பெற்ற குலங்கள். இவ்வளவு பிரசித்தமான குலங் கள் வேறு கிடையா. இந்த வமிசங்களுக்கு ஒப்பாக வேறு ஒரு வமிசத்தையும் சொல்ல முடியாது. அன்றியும், இராம லக்ஷ்மணர்கள், சீதை ஊர்மிளை இவர்களுக்குத் தகுந்த நாயகர்கள், சம்பத்திலும், அழகிலும், குணத்திலும் ஒவ்வொரு பிள்ளையும் ஒவ்வொரு பெண்ணுக்குத் தகுதி யானவர். இந்த சுபகாலத்திலேயே இன்னும் சில சுபங்ககள் சேர்ந்து நடக்கும்படி நாம் ஒரு விஷயம் தெரிவிக்கிறோம். வெகுதர்மிஷ்டராயும், தங்கள் தம்பியாயுமிருக்கிற இந்தக் குசத்துவச மன்னவருக்கு அழகில் ஒப்பற்ற இரண்டு குமாரிகள் உளரன்றோ. அவ்விருகுழந்தைகளையும் தசரதர் குழந்தைகளாகிய பரதனுக்கும், சத்துருக்கினனுக்கும் இதே பந்தலில் கல்யாணம் செய்து கொடுக்கும்படி கேட்டுக் கொள்ளுகிறோம் என்றார். 

இவ்வாறு வசிஷ்ட முனிவருடைய அனுமதியுடன் விசுவாமித்திரர் சொன்ன வாக்கியத்தை ஜநக மகாராஜர் கேட்டு அவ்விரு மகாரிஷிகளையும் பார்த்து அஞ்சலி பந்தம் பண்ணிக்கொண்டு “இவ்வண்ணம் இரு முனி மாணிக்கங் கள் இந்தச் சம்பந்தத்தை கூட்டிவைக்க ஏற்பட்ட பொழுது எமது குலம் வெகு பாக்கியம் பெற்றதென்பதை நான் சொல்லவும் வேண்டுமோ! தாங்கள் சொல்லும் சொல்லை நாங்கள் தட்டினதுமுண்டோ? அதற்கென்ன ஆக்ஷேபம்” என்றார். இவ்வாறு ஜநகர் சொன்னதைக் கேட்டு தசரதர் வெகு ஆனந்தமடைந்து அவ்விரு சகோ “உங்கள் இருவருடைய உத்தம தரரையும் பார்த்து நீங்கள் வெகு குணங்கள் வருணித்து முடியாதவை. பாக்கியசாலிகள்” என்றார். 

8. சீதா விவாகம் 

பொழுது விடிந்ததும் தசரதர் தமது நித்திய கடன் களை சாஸ்திரப் பிரகாரம் செய்து முடித்து தமது குல தெய்வங்களான முனிவர்களை முன்னிட்டுக் கொண்டு விவாகசாலைக்கு வந்து சேர்ந்தார். உடனே ஜநகரும் வசிஷ் டரைப் பார்த்து “முனி ரத்தினமே, மற்ற முனிவர்க ளுடன் இராமருடைய கல்யாண ஹோமாதிகளை ஆரம் பித்து நடத்துங்கள்” என்றார். வசிஷ்டரும் “அப்படியே’ என்று சொல்லி விசுவாமித்திரர் சதாநந்தர் முதலியரிஷிக ளுடன் அந்தக் கல்யாண மண்டபத்தில் உட்கார்ந்தார். அந்த மணப் பந்தலின் மத்தியிலே வெகு அழகாக ஒரு மேடையை சாஸ்திரப் பிரகாரம் அமைத்து அந்த வேதியை கந்த புஷ்பங்களாலும் இழைக் கோலங்க ளாலும் அந்த முனிவர்கள் அலங்கரித்தார்கள். வசிஷ்டர் விதிப் பிரகாரம் வேதியைச் சுற்றி தருப்பைப் புல்லைப் பரப்பினார்; அதன்மத்தியில் சாஸ்திரோக்தமாய் ஓமத்தை வளர்த்து கல்யாண மந்திரத்தை ஜபித்தனர். 

இச்சமயத்தில் ஜநகமன்னர் ஸர்வாபரண பூஷிதை யாய் விளங்கும் தமது பெண்மணியான சீதையை அக்கி னிக்கு முன்பாக இராமரெதிரில் கொண்டு வந்து நிற்கச் செய்து இராமரைப் பார்த்து மிகச் சந்தோஷமாக பின் வருமாறு சொல்லினர்:-“என் பெண்ணாகிற இந்தச்  

சீதையை உம்முடைய ஒவ்வொரு தருமங்களையும் கூட நின்று நிறைவேற்றி வைக்க நான் உமக்கு தானம் பண்ணுகிறேன். உமக்கு எப்பொழுதும் க்ஷேமமுண்டாகக் கடவது. இதோ அவளுடைய கையை உமது கையால் இவள் எப்பொழுதும் தனது புருஷன்தான் தனக்குக் கதி என்று கருதுங் குணமுள்ளவள். எப்பொழுதும் உமது நிழல்போல் உம்மை ஒருநாளும் விட்டுப் பிரியாத மனைவியாகக்கடவளென்று ஆசீர்வாதம் பண்ணு கிறேன்” என்று சொல்லி இராமர் கையில் மந்திரஞ் சொல்லி நீரை வார்த்து தம் பெண்ணாகிய சீதையைக் கன்னிகாதானம் பண்ணின அச்சமயத்தில் ரிஷிகளும் தேவர்களும் “வெகு சிலாக்கியமான விவாகம்; வெகு அழகான கல்யாணம்” என்று எங்கே பார்த்தாலும் புகழ்ந்தார்கள். ஆகாசத்தில் தேவதைகள் துந்துபி வாத்தியம் முழங்கினார்கள். புஷ்ப மாரியும் பொழிந்தது. 

இவ்வண்ணம் கையில் மந்திரஜலத்தை விட்டு சீதையை ஜநகர் தானஞ்செய்து அந்த ஆனந்தத்தால் தேகமும் மனமும் பூரித்து லக்ஷ்மணரை நோக்கிச் சொல்ல லுற்றார். “லக்ஷ்மணரே, இலக்கினம் தவறக்கூடாது. சீக்கிரமாக வாரும். எனது குழந்தை ஊர்மிளையின் கையை உமது கையால் பற்றும்’ என்றார். அதன்பின், பரதரைப் பார்த்து “உமது கரத்தால் மாண்டவியின் கரத்தைப்பற் றும்” என்று சொன்னார். அப்புறம், சத்துருக்கினரை ஜநகர் அழைத்து “சுருதகீர்த்தியின் கரத்தை உமது கரத் தால் பற்றும்” என்றார். “நீங்கள் நால்வர்களும் வெகு தீரர்கள்; வெகு யோக்கியர்கள்; நற்குண நற்செய்கை பொருந்தியவர்கள்; இப்பொழுது உங்கள் நால்வர்களுக் கும் விவாகம் நடக்கவேண்டும்; காலதாமதம் ஆகலாகாது” என்று சொன்னார். இவ்வண்ணம் ஜநகர்,சொல்லவே. வசிஷ்டரும் ‘நல்லவேளை தப்பிவிடும், சீக்கிரம்’ என்று சொல்லிக்கொண்டு நிற்க, ராஜகுமாரர்கள் நால்வரும் அந் நான்கு ராஜ குமாரிகளையும் கையாற்பற்றி ஹோமாக் கினியையும் ஜநகரையும் வலம்வந்து அப்படியே ரிஷிகளை யும் அந்தணர்களையும் சூழ்ந்துசென்று கல்யாணச் சடங்கு களை விதிப்படி ஒன்றும் விடாமல் செய்து முடித்தார்கள். பெரிய மலர்மாரி வெகு ஒளியுடன் ஆகாயத்தினின்று பொழிந்தது. பலவகை வாத்தியங்களும் முழங்கிக்கொண் டிருக்க அவ்வரச,குமாரர்கள் தங்களுடைய மனைவிமார் களுடன் அக்கினியை மூன்று முறை வலம்வந்து தங்களு டைய மனைவிகளையும் அழைத்துக்கொண்டு தங்கள் விடு திக்குச் சென்றார்கள். 

இரவு கழிந்தவுடன், விசுவாமித்திரமாமுனிவர் தசர தர் ஜனகர் இவ்வரசர்களிடம் விடைபெற்றுக்கொண்டு இமயகிரிக்குச் சென்றார். தசரதரும் மகாத்துமாக்களான தமது குமாரர்களாலும் வேதியர்களாலும் ரிஷிகளாலும் சூழப்பட்டவராய் தமது சேனையும் வேலைக்காரர்களும் உடன் செல்ல தாம் பிரயாணமானார். 

வெகு வேகமாக எல்லாரும் அயோத்தி வந்து சேர்ந் தார்கள். தம்மை எதிர்கொண்டழைக்க வந்த குடிகளுட னும் பிராமணர்களுடனும் தசரதமன்னர் தமது பரிவாரங்களோடு தமது பட்டணத்தில் புகுந்தனர். அவர் செல் வக் குழந்தைகளும் அவருடன் தொடர்ந்து சென்றார்கள். அந்நகரில் இமய பருவதம்போல் விளங்கும் தம் அரண் மனையில் அவர் பிரவேசித்தார்; அங்கு எல்லாராலும் மரி யாதை செய்யப்பட்டு வெகு சந்தோஷத்தை அடைந்தார். கௌசல்யை, சுமித்திரை, கைகேயி முதலிய இராஜஸ்திரீ களும் இன்னும் மற்றுமுள்ள பெண்பாலர்களும் தங்க ளுடைய நாட்டுப்பெண்களான சீதை, ஊர்மிளை, மாண்டவி, சுருதகீர்த்தி இவர்களை ஆலத்தி எடுத்து அரண் மனைக்குள் அழைத்து அணைத்துக்கொண்டு ஆனந்தித்தார்கள். 

இந்நான்கு அரசகுமாரர்களும் யுத்த வித்தையை முன்னரே அடைந்து, தங்களுக்குச் சரியான மனைவிமார் களையும் பெற்று, ஒருவிதக் குறைவுமின்றி சகல சம்பத்துடனும் சிநேகிதர்களோடு எப்பொழுதும் தங்களுடைய தகப்பனாரான தசரதருக்கு பணிவிடைகள் செய்து கொண்டு செளக்கியமாக வாழ்ந்துவந்தார்கள். இப்படிச் சிலநாள் சென்ற பிறகு தசரத மன்னரானவர் தமது மகன் பரதனைக் கூப்பிட்டு அவனைப்பார்த்து ”குழந்தாய். உனது மாமனும் கேகய ராசாவின் குமாரருமான யுதாஜித் உன்னை அழைத்துப்போகக் கருதி இங்குவந்திருக்கிறார். நீயும் போய்வரலாம்” என்றார். இவ்வாறு தமது தந்தை விடைகொடுக்கவே, பரதன் சத்துருக்கினனோடு கேகய நாடு சென்றான். 

பரதன் சென்றபின்பு இராமர் லக்ஷ்மணனுடன் தெய் த்துக் கொப்பான தங்களுடைய தந்தைதாய்களுக்கு பணிவிடை செய்துகொண்டு அவர்களுக்குச் சந்தோஷ முண்டாகும்படி நடந்துகொண்டும் வந்தார். அரசர் உத்தரவுப்படி எப்பொழுதும் குடிகளுக்கு ஒருவித க்ஷேமக் குறைவும் இல்லாமல் வெகு ஆதரவாயும் அன்பாயும் இரா மர் இராச்சிய காரியங்களை நடத்தினார்.இராமர் நடந்து கொண்ட விஷயத்தைப்பார்த்து அவரது தகப்பனார் மிக்க மனமகிழ்ச்சி யடைந்தார். அந்நகரத்திலிருந்த பிராமணர் கள் வைசியர்கள் மற்றக் குடிகள் எல்லாரும் திருப்தி யடைந்தார்கள். 

வீட்டில் இராமர் சீதையிடம் வெகு அன்பாயும் ஆதர வாயும் இருந்து வெகு சௌக்கியங்களை அனுபவித்தார். சீதாதேவியும் தனது பக்தியாலும் விசுவாசத்தாலும் ரூபத்தாலும் இராமருடைய சுகத்துக்கும் சந்தோஷத்துக் கும் முக்கிய காரணமாக இருந்தாள். அவள் எல்லாவித மான உத்தம குணங்களும் பொருந்தியவளாக இருந்தாள். இராமருக்குச் சீதையினிடம் உள்ள அன்பினும் இருமடங் காக சீதைக்கு இராமரிடம் அன்பு நிகழ்ந்தது. 

– தொடரும்…

– வால்மீகி ராமாயணச் சுருக்கம் (நாவல்), முதற் பதிப்பு: 1900, கே.மகாதேவன், பிரசுரகர்த்தர், விஜயதசமி, 17-10-1953.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *