வாய்மையுடைமை




(1951ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
வாய்மை யென்னும் மொழி வாயின் தன்மை யெனச் சொற்பொருள் தரும். வாயின் தன்மை என்ன? உண் மையே பேசுவது. ஆகவே வாய்மை யென்பது உண்மை எனப் பொருள்பட்டு நிற்கின்றது.
மக்கள் எப்பொழுதும் எச் செய்தியிலும் உண்மை யைக் கைக் கொண்டு, எவருக்கும் தீங்கிழைக்காத வண்ணம் பேசுவதும் காரியங்களைச் செய்வதும் முதன் யினும் முதன்மையாகும்.

வழிப்போக்கன் ஒருவன் சாலைவழியே அடுத்த நக ருக்குச் செல்கின்றான். அவன் எதிரேவந்த ஒரு சிறுவனை நோக்கி, “அடுத்த நகர் எவ்வளவு தொலைவு? ” என்று கேட்கின்றான். அந்நகர்த் தொலைவு ஆறு மைலாயிருக்க, அச்சிறுவன், “அஃது இரண்டு மைல்” என்று பொய் சொல்லுகின்றான். மிக்க தொலைவிலிருந்து வரும் அவ்” வழிப்போக்கன் தொலைவு சிறிதேயென்று மனவெழுச்சி கொண்டு வழிநடக்கின்றான். சிறுவன் உண்மையைச் சொல்லியிருந்தால், வழிப்போக்கன் அவ்விடத்திலேயே சிலநேரம் தங்கியிருந்து, இளைப்பாறி உணவுண்டு, பிறகு உடல் நலத்துடன் குறித்த நகர் சென்று சேர்ந்திருப்பான். சிறுவன் சொல்லைநம்பி, ஒரே மூச்சாக நடந்து செல்வா னானால், அவன் ஊக்கங்குறைந்து மனம் நொந்து, இளைப் புங் களைப்புமடைந்து, மிகைநடையால் கைகால்கள் நொந்து து வருந்துவான். அல்லது அதுவே நோயாய்ப் பல நாட்கள் படுக்கையிலேயே கிடப்பான். இதற்கெல்லாங் காரணம் அச்சிறுவனுடைய குறும்புத்தனமாகிய பொய்ம் மொழியே !
ஒரு பள்ளிக்கூடத்து மாணாக்கனாகிய இராமன் என் பவன் பந்தொன்று வைத்திருக்கின்றான். அவனுடன் விளையாடிக்கொண்டிருந்த முருடனும் வாயாடியுமாகிய உடன் மாணவன் கண்ணன் என்பான் அப்பந்தினைக் கவர்ந்துகொள்ள எண்ணி, அது தன்னுடையதென்று வாதாடி, இராமனை வலியச் சண்டைக்கிழுக்கின்றான். கண் ணன் தன்னிடம் அச்சங்கொண்டிருக்கும் நகுலன் என்ப வனை நடுவனாக அழைத்துக் கொள்கின்றான். இந்நகுலன் உண்மையை யறிந்திருந்தும், கண்ணனுடைய திட்டுக்குங் குட்டுக்கும் அஞ்சி, அப்பந்து கண்ணனுடையதே யென்று சான்று பகரின், அவன் பந்துக்குரியவனாகிய இராம் ரம னுக்குப் பெருந்தீங்கு செய்கின்றவனாகின்றான். இத்தறு வாயில் இராமன் தன் பந்தைப் பிடித்தபிடி விடாமற் பற் றிக்கொண்டிருக்கின்றான். கண்ணனோ அதனை வலுகட் டாயமாக இராமனிடமிருந்து பிடுங்கிக்கொள்ளப் பார்க் கின்றான். இதனால் அவ்விருவருக்கும் சொற்போர் கைப் போர் விளையும். இச்செவ்வியில் ஆசிரியர் வந்து, அவ் வழக்கை முதலில் தொடங்கினவன் யார் என்று நகுலனைக் கேட்கின்றார். அப்போதும் நகுலன் இராமனே அதனைத் தொடங்கினானென்று மறுபடியும் பொய்யே சொல்லுகின்றான். இவ்வாறு ஒன்றுக்கு இரண்டு பொய் சொல்லி இராமனுக்குக் கொடுந் தீங்கிழைத்தவனாகின்றான் நகுலன்.
உலக நடவடிக்கைகளில் பொய் பேசுவதனால் மேற் சொன்னதற்கு மேல் இன்னும் பெரிய பெரிய கேடுகள் நேரிட்டு விடுகின்றன. ஒருவன் இன் ன்னொருவன்மேல் பொய்ச்சான்று கூறி, அவன் உயிரையே போக்கடிக்கின் றான். வஞ்சனையால் பிறர்க்குக் கேடிழைக்க எண்ணிச் சில தீவினையாளர் மெய்போலப் பொய் பேசி, அவர் தம் நற்பேரினையும் சொத்துக்களையும், இன்னும் அவர் அக் கறைகொண்ட செய்திகளையும் பாழ்படுத்துகின்றனர். ஆகையினாலே இவ்வுலகில் நல்லவன் என்று பேர் படைக்க விரும்புகின்றவன் இளமையிலிருந்தே உண்மை ஒன்றையே பேசப் பழகிக்கொண்டு வரவேண்டுமென்பது வெள்ளிடைமலை.
ஒரு சிறுவன் ஒரு குற்றமோ எதிர்பாராத தவறோ செய்துவிடுகின்றான், பெற்றோர் அதனைப்பற்றிக் கேட்டால் அவர்தம் தண்டனைக்கு அஞ்சித் தான் அதனைச் செய்ய வில்லையென்று மறுத்து உறுதிப்படுத்தி விடுகின்றான் பெற்ற மனம் பித்தாகையால் அவர்கள் அதனை நம்பிவிடு கின்றார்கள். பொய் சொல்லியே தண்டனைக்குத் தப்பித்துக் கொண்டு வந்துவிடுவது அவனுக்கு ஒரு வழக்கமாய் விடுகிறது. இதன் விளைவு கடைபோக எவ்வாறாகி விடுகிற தென்றால்,-இவன் பொய்யன் பொய்யன்’ என்று எல்லோராலும் வெறுத்துத் தள்ளப்பட்டுப் போய்விடுவது மல்லாமல், இவன் சொல்வதெல்லாம் பொய்யே யென்று எண்ணி எவரும் அவன் பேச்சில் நம்பிக்கை வைப்பதே யில்லை.
ஏதோ ஒன்றைப் பெறுவதற்குப் பொய்சொல்வது குற்றத் தண்டனையினின்றும் தப்பித்துக்கொள்ளப் பொய் சொல்வதைக் காட்டிலும் மிகுகேடானது. ஒரு பிள்ளை யின் தாய், அவனுக்கு ஞாயிறுதோறும் இரண்டணாக் கொடுப்பது வழக்கம் அப்பிள்ளை ஒரு ஞாயிறன்று தாயினிடம் அப்பணத்தைப் பெற்றுக்கொண்டு, மறைவில் தந்தையினிடஞ் சென்று, “அப்பா! அம்மாளிடம் துட் டில்லையாம், இன்று அவர் பணம் கொடுக்கவில்லை,” என்று சொன்னால், மானக்கேடான பொய்யாகும்; மேலும் அவ் வாறு சொல்லிப் பெற்றுக்கொண்ட பணம் திருடின பணமே யாகும்.
தான் தப்பித்துக்கொள்ளவோ, பகையினாலோ ஒரு வன் இன்னொருவனைப் பற்றிப் பொய்பேசுவது இன்னும் பொல்லாத மானக்கேடான செய்கையாகும்.
மக்கள் அசட்டையினாலோ, பதற்றத்தினாலோ, கற் யனையாகவோ பொய் சொல்லி விடுவதுண்டு. “மக்களிற் சிலர் பிறரை வஞ்சிக்கவேண்டுமென்பதன்று; ஆனால் உண் மையிற் பற்றுக்கொள்ளாமல் பொய் பேசுகின்றனர்,” என் கின்றார் பேரறிஞர். ஜான்சன் எவ்வகையிலும் பிழை படுத லின்றி இருக்கவேண்டும் என்பதிற் போதுமான கவலை மக்கட்கில்லை. ஒன்று திட்டமாய் உண்மையா அன்றா என்பதை எண்ணிப்பாராமலே, வாயில் வரும் எதனையும் பிறர்மன முவக்கச் சொல்லிவிடுகின்றனர். பெரும்பான் மையாகத் தட்டார், கன்னார் முதலிய கைவினையாளர்கள் தங்களிடம் ஒருவர் ஒருவேலை செய்துதர நாள் குறித்துக் கொடுத்தால், அவர்கள் அக்குறித்த நாளுக்குள் அவ்வேலை. முடியுமோ, அல்லது அதனை முடிக்க முடியுமோ, என்ப தனை யெண்ணிப்பாராமலே, அதனை அந்நாளில் முடித்துக் கொடுத்துவிடுவதாகக் கொடுத்தவர்க்கு முகவிச்சைபேசி யனுப்பிவிடுவது வழக்கமாக இருக்கின்றது.
சிலர் பிறர்க்கு வியப்புண்டாக்கவேண்டுமென்பதொன் றையே மனததிற்கொண்டு ஒரு சிறு செய்தியை மிகைப் படுத்திப் பாரித்துக் கூறுகின்றனர். ஒருரில் ஒரு மக்கட் கூட்டத்தைக் கண்டு ஊர் பிடிக்காத கூட்டம் என்பது, மழை சிறிது மிகையாகப் பெய்ததால் வெள்ளம் ஓடுகின் றது என்பது, ஒரு காட்டில் இரண்டொரு புலியைக்கண்டு காடெல்லாம் புலி யென்பது, ஒரு பெரிய பணக்காரன் வீட்டைப்பற்றி அவன் வீட்டில் அமபாரம் அம்பாரமாகப் பொன்னிருக்கிற தென்பது, சிறிது அழகான பெண்ணைப் பற்றி அவள் இரம்பை, மேனகை யென்பது, சிறிது மேன் மையாகக் கற்றவனைப்பற்றி அவன் படிக்காத நூல்களில்லை யென்பது, பின்வருஞ் சில செய்திகளை முன்னறிவினால் முன்னெடுத்துச் சொல்லும் ஒரு பெரியோனைக் கடவுளே யென்பது-இவைகளும் இவைபோன்றனவும் பொய்யே யாகும். உண்மையின மேன்மையை யுணர்ந்தவன் எவ னும் இவ்வாறெல்லாம் வாய்மொழியைப் பெருக்கிப் பேச மாட்டான்.
சிலர் உள்ளொன்றும் புறம் ஒன்றுமாகப் பேசுகின்ற னர். அதனைக் கூர்மையுடன் உன்னிப்பார்க்கப் பச்சைப் பொய்யே யென்று கருதவேண்டி யிருக்கின்றது. சிலர் அத்தகைய பேச்சுக்களிற் சொற்குற்றமில்லை யா தலால், அது நீதிக்கு மாறானதென்றும், தீவினையிற் சேருமென் றும் நினைப்பதே யில்லை. இது மயக்க அறிவினால் உண்டா கும் கொள்கையே. பிறரை ஏமாற்ற இரு பொருள் படப் பேசுவது பொய்யிற் சேர்ந்ததே. இத்தகைய பேச்சுக்கள் வஞ்சனையும் தீவினையுமாகும் என்பதில் ஐயப்பாடே யில்லை.
உலகச்செயற் பொறுப்புக்களில் உண்மையென்பது மிகவும் முதன்மையானது. நம்மைப் பற்றியதும் பிறரைப் பற்றியதுமான எவ்வகைச் செயல்களிலும் உண்மையைக் கடைப்பிடித் தொழுகவேண்டும். சான்றுகளான் மெய்ப் பிக்கப்படாத எக்கொள்கையையும் சரியானதென்று நாம் கண்ட மனத்திற் கொள்ளக்கூடாது. உண்மையென்று வைகள் உலகை உயர்த்தும், பொய்யென்று கண்டவைகள் உலகைத் தாழ்த்திவிடும்.
1. ஏக்பப்புக்காட்டிய இடைப்பையன்
காட்டுப்புறமாக இருந்த ஓரூரில் சில ஆட்கள் ஒரு வயலில் வேலைசெய்துகொண்டிருந்தனர். சிறிது தொலைவில் மறைவி லிருந்த ஒரு புல்வெளியில் ஓர் டைப்பையன் ஆட்டுமந்தை மேய்த்துக் கொண்டிருந்தான். இருந்தாற்போலிருந்து அவன், ‘புலி புலி’ யென்று கூச்சலிட்டான் அண்டை வயலில் இருந்த ஆட்கள் ஓடிவந்து பார்க்கப் புலியுமில்லை,ஒன்றுமில்லை. உடனே அவர்கள் சிறிது சினங்கொண்டு அப்பையனை நோக்கி, ‘ஏன் கூச்சலிட்டாய்?” என்று கேட்க, அவன், “வெறும் விளையாட்டுக் காக, என்று சிரித்தான். பிறகு அவ்வாட்கள் அவனைத் திட்டி, “இனிமேல் அப்படிச் யெய்யாதே, முட்டாளே!’ என்று சொல்லி வேலைக்குப் போய்விட்டார்கள்.
இரண்டொரு நாட்கள் பொறுத்து மறுபடி அப்பையன் அவ் வாறே கூச்சலிட, அவ்வாட்கள், “அறியாப் பிள்ளையாயிற்றே’ யென்று ஓடிவந்து பார்க்க, புலியொன்றுங் காணாமல், இடைப் பையனை நோக்கி, “பட்டிப்பயலே ! இனியும் நீ இப்படிச் செய்வா யானால், நீ படப்போகிற பாட்டைப்பார்,” என்று சினந்து பேசி -விட்டுப் போய்விட்டார்கள்.
நாலைந்து நாட்களுக்குள்ளாக மக்களையே கொன்று தின்னும் புலியொன்று மந்தையை நோக்கிவர, பையன் “ஐயோ புலி, ஐயோ புலி!” என்று இரண்டு தடவை கத்தினான். அவர்கள் இவன் பொய் சொல்கிறவ னென் று எண்ணி அன்று வரவில்லை. அஃது அவனைக் கொன்று தின்றுவிட்டுப் போய்விட்டது. ஆதலால், பொய் சொன்னதனால் அவன் புலி வாயிலிருந்து காபாற்றப்படா மல் இறந்தான். எனவே விளையாட்டாகவேனும் பொய் சொல்லு தல் கூடாது.
2. கருண துரியர்
ஓரூரில் கருணன், துரியன் என்னும் இரண்டு உடன்பிறந்த ஆண் பிள்ளைகள் இருந்தனர். அவர்கள் இருவரும் ஒருநாள் டுப் யின் பக்கத்தில் படுத்துகிடந்த பயிரி என்னும் நாயுடன் விளையா டிக்கொண்டிருந்தனர். அப்போது அவ்விரு பிள்ளைகளின் கால் பட்டு அடுப்பின்மேலிருந்த பாற்பானை கீழே விழுந்துடைய, பால் அட்டிலெல்லாங் கொட்டிப்போயிற்று. உடனே கருணன் துரியனை நோக்கி, “வா, இதனைத் தாயாரிடஞ் சொல்லிவிடுவோம்,” என்று கூப்பிட்டான். துரியன் தயங்கி நிற்க, அவனைச் சட்டைசெய்யா மலே கருணன் புறக்கடைத் தோட்டத்திற்கு ஓடினான். அடுக்களை யறையிலேயே தயங்கியிருந்த துரியன், தாயாரிடம் என்ன சொல்லித் தப்பித்துக்கொள்ளலாம் எண்றெண்ணியபடியே நின்று கொண்டிருந்தான். அதற்குள்ளாகத் தாயாரும் அவ்வறைக்கு வந்துவிட்டாள். பாற்பானை உடைந்துபோய்ப் பால் சிதறிச் செறிந்திருந்ததைக்கண்டு, ஆங்கிருந்த துரியனை நோக்கி அவள், துரியா ! இது யார் வேலை?” என்றாள். துரியன் நடுக்கங்கொண்டு, வாய் குழறி, “அம்மா! பயிரி பாற்பானையைத் தள்ளி யுடைத்து விட்டோடிப் போயிற்று” என்றான். உடனே அவள் பயிரியைக் கூப்பிட்டுப் பிரம்பெடுத்து அதன் தலைமேல் அடிப்பதற்கு நோக்க, அது போகாமல் எதிர்த்து உறுமிற்று ! இத்தறுவாயிற் கருணனும் தாயாருக்குத் தெரியாமல் தோட்டத்திலிருந்து அவ்வறைக்கு வந்தான். வந்ததும், அவளிடம் முன்னடந்த செய்தியை நடந்த படியே சொன்னான் அப்போது தந்தையாரும் அவ்வறையில் நுழைந்தார். நுழைந்தவர் நடந்தவைகளை யெல்லாம் நன்கு தெரிந்து கொண்டனர்.
தெரிந்துகொண்டபின் தந்தையார், பிரம்புகொண்டு துரியனை அடிமேலடி யடிக்க, அவன் அழுதுகொண்டே, “அப்பா! இனி யான் பொய் சொல்லவுமாட்டேன்; இந்த அடியும் படமாட்டேன்! என்னை மன்னித்து விட்டுவிடுங்கள், என்று தேம்பித்தேம்பி, வாய்குழறித் தெத்தித்தெத்திப்பேசினான்.
தந்தையார் கருணனைக் கூப்பிட்டு, “நீ உண்மை பேசினாய், இனிப் பயிரிக்குக் கருணன் என்று பெயரிடுகின்றேன்; அஃது உன் னுடையதாகவேயிருக்கட்டும்,” என்று சொல்லிவிட்டு, மனைவியினி டம், “பயிரி என்னும் நாய் எப்படிக் கருணனாயிற்று’, என்று ஊரார் கேட்டால் அவர்கட்கு இவ்வரலாற்றை யெடுத்துக் கூறு; அவர்கள் பொய்பேசும் பிள்ளைக்கும் மெய்பேசும் பிள்ளைக்குமுள்ள வேறு பாட்டினைக் நன்கறியட்டும்,’ என்று சொல்லிவை வத்தார்.
3. விழலியாற் கெடவணிகன்
ஒரு நகரில் பெரிய வணிகன் ஒருவனிருந்தான். அவன் தீவி னைப் பயனாற் பொருட்கேடடைந்து, பெருங் கடனாளியாய்விட்டான். அவன் எஞ்சிய பொருளைக் கடன்காரர்களுக்கு வீதப்படி. பங்கிட்டுக் கொடுக்க, அவர்களில் ஐயுற்ற இருவர் தவிர, ஏனையோர் அவனுக்கு விடுதலைச் சீட்டளித்துவிட்டனர்.
இஃது இவ்வாறிருக்க, இக்கடனாளியின் பெண் ஒருத்தி ஒரு. நாள் ஓர் அஞ்சல் வண்டியிற் பயணஞ் செய்துகொண்டிருந்தாள். அவ் வண்டியில் அவள் தன் தந்தையின் விடுதலைச் சீட்டளிக்காத இரு கடன்காரரும் உடனிருந்தனர். அஃதறியாத அப்பெண் தன் தந்தை ஒரு பெருஞ்செல்வர் என்றும், அவர்தம் வாழ்க்கை ஓரரச வாழ்க்கை போன்றதென்றும், அவர்தம் அரண்மனையில் காவலாட் களும் வேலைக்காரர்களும் பற்பலர் என்றும், இன்னும் அவர்தம். உணவு உடைகளைப்பற்றியும் பெருமிதமாகப் பேசிக்கொண்டு வந்தாள்: இப்பெண்ணின் வாய்ப்பேச்சினாலேயே அவள் இன்னா. ளென்றறிந்துகொண்ட அவ்விரு கடன்காரர்களும் அவ்வணிக னுக்கு விடுதலைச் சீட்டளிக்க அறவே மறுத்துவிட்டதுந் தவிர அவனைப்பற்றி நகரெல்லாம் பழித்தும் இழித்தும் பேசிக்கொண்டு வந்தனர். ஆகவே அவ்வணிகன் தன் பெண்ணின் வீண்பெருமைப் பேச்சினால் அந்நகரில் மேன்மையிழந்து, தாழ்மை யுழந்து ஆயுள் வரையில் அல்லல் வாழ்க்கையே அடைந்திருக்க வேண்டிய தாயிற்று.
உண்மையிலிருந்து சிறிது மாறுபடுவதும் இடுக்கண் விளைவிக்குமென்டதை நாம் இதனாலறிகின்றோமல்லவா
4. உண்மை எலினி
ஸ்காத்துலாந்து நாட்டில் எலினி யென்னும் ஒரு பெண் இருந் தாள்.நீதி நூற்களையும் அன்புநூற்களையும் படித்துக்கொண்டிருப் பதையே தன் மனத்துக்கினிய தொழிலாகக்கொண்டவள். அவள்பெற்றோர் விண்ணேகினர். சிறிய தங்கை யொருத்தி இருந்தாள்; எலினி வயலில் உழைத்துத் தன் தங்கையைக் காப்பாற்றி வளர்த்து வந்தாள். அத்தங்கை பெரியவளானபோது, கொலைத்தண்டனை யடையத்தக்க குற்றமொன்றச் செய்துவிட்டாள். ஆனால் தான் செய்த குற்றத்தை யாரிடமாவது மறைவாகக் குற்றவாளி சொல்லி விட்டிருந்தால் அது மன்னிக்கப்படுமென்பது அந்நாட்டு நீதி. எலினி தன் தங்கை தன்னிடம் ‘தான் செய்த குற்றத்தை ஒத்துக் கொண்டதாகச் சொன்னாள்,’ என்று சான்று கூறினால் அவள் தங்கை அத்தண்டனை யடையமாட்டாள். ஆனால் அவள் அவ்வாறு செய்வதற்கு மன மொவ்வாதவளானாள். அவளுக்குத் தங்கைமேல் அன்பு பெரிதே ! ஆனாலும் தெய்வத்துக்கு அஞ்சுபவளும், நீதி நூற்கள் பயின்றவளும் ஆகிய அவளுக்கு இஃது எலுமோ! அவள் நீதி மன்றத்திலும் தன் தங்கை அக்குற்றத்தைப்பற்றித் தன்னிடம் ஒன்றுஞ் சொல்லவில்லை யென்றே சான்று பகர்ந்தனள். ஆகையால் கொலைத் தண்டனை உறுதிசெய்யப்பட்டுவிட்டது.
என் செய்வாள் எலினி ! தன்னருமைத் தங்கை கொலைபடுவ தைக் காண மனங்கொள் வாளா? மனவெழுச்சிகொண்டு தன்னாலா வதைச் செய்ய எண்ணினாள் எலினி. அவள் உடனே கால்நடையா கவே முப்பது காவதம் சென்று, இலண்டன் நகரடைந்து, அரசியை நேரிற்கண்டு, தன் தங்கையின் செய்தியை நடந்தபடியே சொல்லி, மன்னிப்புக்கு மன்றாடினாள். அவள்தன் மன்றாட்டு அரசப் பெருமாட்டியால் ஒப்புக்கொள்ளப்படவே, அவளுடைய தங்கை புத்துயிர் பெற்றாள்.
எலினியின் உண்மைத் தன்மையையும், அன்புழைப்பையும் பற்றி அந்நாட்டுக் கவியரசராகிய ஸ்காத் (Sir Walter Scott) என்பவர் தமது சிறந்த நூலொன்றிற் புகழ்ந்தெழுதியுள்ளார்.
க. பொய்யே பேசும் உதடுகள் ஆண்டவனுக்கு அருவருப்பு; மெய் பேசுபவையோ அவருக் குக் களிப்பு.
உ. பொய்ச்சான்று தண்டனை கொடுக்காமற் போகாது; பொய்பேசுகின்றவன் அழிந்து போவான்.
ங. முட்டாளா யிருப்பவன் ஒருகால் சீர்படுவான்; பசப்புப் பேச்சுக்காரனோ சீர்படுவதருமை.
ச. பிள்ளைகள் பொய்க்கு அஞ்சி மெய் பேசுவார்க ளானால், அவர்கள் அறிவாளிகளென்று அவர் தம் சொற்களில் நம்பிக்கை வைக்கலாம். -நீதி மொழிகள்.
ரு. வாய்மை யெனப்படுவ தியாதெனின் யாதொன் தீமை யிலாத சொலல். [றுந்
சு. தன்னெஞ் சறிவது பொய்யற்க; பொய்த்தபின் தன்னெஞ்சே தன்னைச் சுடும். -வள்ளுவர்.
– நல்லொழுக்கப் பாடம், முதற் பதிப்பு: ஏப்ரல் 1951, திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், லிட், திருநெல்வேலி.
![]() |
சேலை சகதேவ முதலியார் (1874 - ஜூலை 28, 1953) தமிழ்ப் பாடநூல்களை எழுதிய முன்னோடிகளில் ஒருவராக அறியப்படுகிறார். திருநெல்வேலி சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தின் பதிப்பாசிரியராகவும், செந்தமிழ்ச்செல்வி இதழின் ஆசிரியராகவும் இருந்த மணி திருநாவுக்கரசு கோரியதற்கு இணங்க பள்ளி மாணவர்களுக்கு எளிதாக புரியும் வண்ணம் சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தின் வெளியீடுகளான கழகத் தமிழ்ப்பாட வரிசையில் ஆறு நூல்களை சேலை சகதேவ முதலியார் செம்மை படுத்திக் கொடுத்தார். அந்நிறுவனம் வெளியிட்ட…மேலும் படிக்க... |