வாணிகப் பரிசிலன்






(2021ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“முருகா…” என்று சொல்லிக் கொண்டே கோயிலில் நுழைந்தான் சரவணன். பிள்ளையார் சன்னிதியை மும்முறை வலம் வந்து சன்னிதிக்கு முன் நின்றான்.
பிள்ளையாருக்கு தீபம் காட்டிக் கொண்டு வந்த குருக்களிடம், “கருவறையில சாமி பளிச்சினு தெரியலையே” என்றான்.
“ஆமாம்.., கோயில்ல விளக்கு வெளிச்சம் போதவில்லை” என்றார் குருக்கள்.
”சாமி… நான் சன்னிதியில ஒரு டியூப் லைட் போட்டுத் தரட்டுமா” என்று சரவணன் கேட்க, “போடுப்பா, உனக்கு புண்ணியமாகப் போகும்” என்றார் குருக்கள்.
கோயிலின் அருகில், ‘சரவணா எலக்ட்ரிகல்ஸ்’ என்ற கடை வைத்திருந்தான் சரவணன். சொன்ன படியே சுவாமி சன்னிதியில் இரு நாட்களில் டியூப் லைட் பொருத்தினான். சரவணனுக்கு மிகுந்த மனத் திருப்தி.
அடுத்த நாள் கோயிலினுள் நுழைந்த சரவணனுக்கு அதிர்ச்சி. “என்ன சாமி… டியூப் லைட் போட்டும் பிள்ளையார் சரியாத் தெரியலையே?” என்றான். குருக்கள் சிரித்தார்.
“சரவணா… நீ போட்டிருக்கிற டியூப் லைட்டைப் பார். டியூப் லைட் மேலே, உபயம்ன்னு போட்டு, கடை பெயர், விலாசம், போன் நம்பர் எல்லாம் எழுதியிருக்கே. அதையும் மீறிண்டு வெளிச்சம் வெளியில வருமா” என்று கேட்டார்.
“தப்புதான் சாமி… டியூப் லைட் போடணும்னு நினைச்சபோது கடை பேரை போடறதா இல்லை. கடைக்கு விளம்பரம் பண்ணினால் வியாபாரத்துக்கு நல்லதுன்னு கூடியிருந்தவங்க, சொன்னாங்க. யோசிக்காம பண்ணிட்டேன்” என்றான் சரவணன்.
“புகழ், புண்ணியம் கிடைக்கும்னு எதிர்பார்த்து தானம் பண்றவங்களை, ‘அறநிலை வணிகன்’, ‘வாணிகப் பரிசிலன்’னு பண்டைய இலக்கியமான புறநானூறு இடித்துரைக்கிறது”.
– மங்கையர் மலர், ஜூலை 05, 2021.
![]() |
பொறியியல் பயின்று, அரசுத் துறை, பொதுத் துறை, தனியார் குழுமங்களில் பணி புரிந்து, பின்பு, 15 ஆண்டுகளாக கணிதமும், தர்க்கமும் கற்பித்து வந்தேன். “யு-டியூப் – ஸ்வாமிமேடிக்ஸ்” என்ற சேனலில், சுலப கணிதம் குறித்து ஆங்கிலத்தில் விளக்கி வந்தேன். கோவிட் ஊரடங்கு என்னை கதை, கட்டுரை, எழுத ஊக்கம் அளித்தது. கதைகள், கட்டுரைகள் வெளியான இதழ்கள் - தினமலர்-வாரமலர், கலைமகள், அமுதசுரபி, தினமணி, சிறுவர்மணி, கதிர், நம் உரத்த சிந்தனை,…மேலும் படிக்க... |