கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 21, 2025
பார்வையிட்டோர்: 3,798 
 
 

நான் அரசுக் கடனில் அந்த ஸ்கூட்டரை வாங்கியிருப்பதை யும் சுமார் ஒரு மாத காலத்திற்கும் மேலாக அதைத் தான் பயன்படுத்திக் கொண்டிருக்கிறேன் என்பதையும் தீர்மானமாக அறிந்த வேளையில் தான் சங்கரன் சார் அதை என்னிடம் கேட்டார்.

“சுந்தரம் சார், உங்க சைக்கிள் சும்மா இருந்தா கொஞ்சம் கொடுங்களேன்.”

மனிதன் சுகத்திற்குப் பழகக் கூடாது. சில வசதிகளை இடையில் அனுபவிக்க நேரிட்டால், பின்பு பழசை நோக்கி நகரவே மனசு வருவதில்லை . அவர் சொன்னது போல் சைக்கிள் சும்மாவே தான் இருந்தது. வண்டி வாங்கிய பிறகும் ஒரு சில தினங்கள் சைக்கிளில் ஆபீஸ் போய் வந்திருந்தேன் நான். அந்த நாட்களில் கால், தொடை வலி அதிகமாகி, உடல் நோவில் லீவு போட்டு, ரெஸ்ட் எடுத்தது தான் மிச்சம். அதிலிருந்து சைக்கிள் பக்கம் தலைவைத்துப் படுப்பதில்லை.

டவுனுக்குப் போகும்போதெல்லாம் வண்டியில் போகலாமென்றும், அருகிலுள்ள கடை கண்ணிக்குப் போக சைக்கிளை உபயோகிக்கலாம் என்றும் விமலா சொல்லியிருந்தாள். அதுவும் சாத்தியமில்லாமல் போயிற்று. வீட்டு வாசல்படி இறங்கினால் வண்டியில் தான் கால் வைப்பது என்று ஆகி போனது. ‘விர்’ ரென்று பறக்கும்போது தெருவில் உள்ளவர்களெல்லாம் அந்த வாகனத்தோடு சேர்த்து என்னை அறிந்து கொண்டதும், சிலர் வழக்கமாக ‘விஷ்’ பண்ணுவதும், வண்டி வந்தபின்னால், தானே கிடைத்த ஒரு கௌரவம் என்பதாக உணரப்பட்டதால், வெளியே என்றால் சைக்கிளில் செல்வது என்பது அறவே நின்று போயிற்று.

தெரு வழியே போகையிலும், வருகையிலும் சைக்கிள் திண்ணையில் தூங்குவதையும், வீட்டிற்கும் ஓரிரு முறை வந்து சென்றபொழுதில் அழுக்கும் தூசியும் ஏறி அது கேட்பாரற்றுக் கிடப்பதையும் கண்ணுற்று. அதன் பின்பும் பல நாட்கள் கழிந்த பொழுதிலேயே சங்கரன் இதைக் கேட்டிருக்கிறார் என்று தோன்றிற்று.

எனக்கே அந்தக் சைக்கிள் மீது ஒரு மாற்றாந்தாய் மனப்பார்வை வந்து போனதை நன்றாகவே உணர்ந்திருந்தேன் நான். சுமார் பதினைந்து வருடங்களுக்கு முன்னால், அந்த வண்டி, என் கைக்கு வந்தது என்று நினைவு. அப்பொழுது நான் திருச்சியில் வேலையாகி ஒரு லாட்ஜில்ரூமெடுத்துத் தங்கியிருந்தேன். நண்பர் கணேசன் மதுரையிலிருந்து பஸ்ஸின் ‘டாப்பில் போட்டுக் கட்டி எனக்காக அதை எடுத்து வந்திருந்தார். வெறும் முந்நூறு ரூபாயோ என்னவோ தான் கொடுத்ததாக நினைவு. இன்று வரை அது எனக்கு உழைத்திருக்கிறது.

“எதுவுமே உபயோகமில்லேன்னா மரியாதை இல்லை தான்” இதைச் சங்கரன் சொன்ன அன்று. “அதென்ன பேச்சு, நாம் எப்படியோ வச்சிட்டுப் போறோம். இவருக்கென்ன அதனால?” என்ற விமலாவை அடக்கினேன் நான்.

அந்த சைக்கிளின் தற்போதைய பராமரிப்பு நிலையைப் பற்றிக் குத்திக் காட்டி விட்டுப் போனதாகத்தான் அவளாள் உணர முடிந்தது. ஆனால் அவர் ஏதோ மனம் நொந்து போய்ப் பேசுவதாய் எனக்குப் பட்டது.

மனிதர் சமீபத்தில் தான் அரசுப்பணியிலிருந்து ஓய்வு பெற்றிருந்தார். நான்கு பெண்கள். ஒரு பையன் கடைசி. (ஆண் பிள்ளைக்குத் தவமிருந்து முதல் நாலும் பெண்ணாய் போயிற்றாம்- கஷ்டம்!) ஒன்றுக்குக் கூட கல்யாணம் ஆனபாடில்லை. குதிர் குதிராய் அத்தனையும் நின்று கொண்டிருந்தன. ஒருவர் சம்பாத்தியத்தில் ஏழு ஜீவன்களின் காலம் கழிந்திருக்கிறது. நிரந்தரப்பற்றாக் குறை. கடன் தொல்லைகள். அந்த ஆதங்கங்களின் வெளிப்பாடு தான் அவை.

ஐம்பத்தி எட்டு வயதுக்கு மேல் சைக்கிளை மிதித்துக் கொண்டு எங்கு சுற்றப் போகிறார்? ரொம்பவும் யோசனை செய்து, தவிர்க்க இயலாத தேவையாக இதை உணர்ந்து தான் கேட்டிருக்கிறார் என்று தோன்றியது எனக்கு. சும்மா கிடப்பதற்கு அவருக்காவது பயன்படட்டுமே என்று நினைத்தேன் நான். ஆனால் விமலாவை எப்படித் திருப்திப் படுத்துவது என்று என் மனம் குறுகுறுத்தது.

“ஏங்க, உங்க அம்மா வழிக்கு அந்த சங்கரன் மாமாவோட ஒய்ஃப் ஏதோ நெருங்கின சொந்தம் வரும் போலிருக்கே?” என்று சொல்லிக் கொண்டே வந்து நின்றாள் விமலா. இது தான் நல்ல சமயம் என்று விஷயத்தைச் சொன்னேன். பதில் ஒன்றுமில்லை. மௌனம் காத்தாள். இஷ்டமில்லை போல்.

அன்று அலுவலகம் விட்டு வந்த போது சைக்கிள் இல்லாதது வியப்பைத் தந்தது. அந்தச் சங்கரன் வந்தார். அவராகவே ஒரு துணியைக் கொண்டு வந்து, சைக்கிளை வராண்டாவுக்கு இறக்கித் துடைக்க ஆரம்பிச்சார். அப்புறம், “எடுத்திட்டுப் போறேன். சார் வந்தா சொல்லிடுங்கோன்னார். நீங்க ஏற்கனவே சொல்லியிருப்பீங்களோன்னு, நானும் சும்மா இருந்திட்டேன்.” என்றாள் விமலா. இதில் அவளுக்கு திருப்தி தானா இல்லையா என்பதை அவளது பேச்சிலிருந்தோ, அதன் பாவங்களிலிருந்தோ எதுவும் என்னால் உணரமுடியவில்லை .

ரொம்பவும் உரிமையோடு சங்கரன் இதைச் செய்திருப்பதாய்த் தோன்றியது. அந்த அளவுக்கான பழக்கம் அவருக்கும் எனக்கும் இருந்தது. அந்த ஏரியாவில் வீடு கட்டுவதற்காக நான் ப்ளாட் பார்க்க வந்த போது “வாங்க சார், நான் காண்பிக்கிறேன்…” என்று இழுத்துப் போய் கைவசம் இருந்த சில வரை படங்களை வைத்துக் கொண்டு விளக்கிச் சொல்லி, இடங்களைக் காண்பித்தவர் அவர் தான்.

பணியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு இந்த வேலையில் ஈடுபட்டிருப்பதாக அப்போது அவர் சொன்னார். “ரியல் எஸ்டேட் பிஸினஸ் பண்ணிட்டிருக்கேன்” என்று அவர் மெப்பனையாகச் சொன்ன போது, எனக்குச் சிரிப்பு தான் வந்தது. அந்த பிஸினஸ் பண்ணுபவரிடம், தான் புரோக்கராக இருப்பதைச் சொன்னால் அவரது முன்னாளைய அட்மி னிஸ்டிரேடிவ் ஆபீஸர்’ ராங்கின் கௌரவம் பாதிக்கப்படக் கூடும் என்று நினைத்தாரோ என்னவோ? அவர் என்னுடன் பழக ஆரம்பித்த ஆரம்ப நாட்கள் அவை என்பதால் அதை நான் பொருட்படுத்தவில்லை. அவரது பேச்சு, பழகும் தன்மை எல்லாமே அவரது வாழ்வின் பற்றாக்குறை மற்றும் இயலாமையின் வெளிப்பாடகாவே எனக்குத் தோன்றியது.

ஏனோ அதையெல்லாம் மட்டும் அவரால் மறைக்க முடியவில்லை. முப்பத்தி எட்டு வருஷம் சர்வீஸ் போட்டவர். முழுப் பென்ஷன் வாங்கும் ஆசாமி. ஆனால் சர்வீஸ் காலத்திலேயே ஒன்றிரண்டு பெண்ணைக் கூடக் கரையேற்ற முடியவில்லை என்ற ஆதங்கம் அவரிடம் நிறையத் தென்பட்டது.

“பாய் சர்வீசுலயே வேலைக்கு வந்தவன் நான் டிபார்ட்மெண்ட்ல வெகு சீக்கிரம் அட்மினிஸ்டிரேடிவ் ஆபீஸர் ராங்குக்கு ரீச் பண்ணின முதல் ஆள் நான் தான். இன்னும் ஒரு வருஷம் மட்டும் இருந்திருந்தா, ஜாயின்ட் டைரக்டர் ஆகியிருப்பேன். இப்பல்லாம் எவனெவனோ வர்றான் ப்ரமோஷன்ல. சீனியாரிட்டின்னு ஒண்ணு இருக்கிறதால, குறிப்பிட்ட வருஷம் கழிஞ்சவுடனே, பதவி உயர்வுன்னு வந்து உட்கார்ந்திடறாங்க. ஆனால் அந்தப் போஸ்ட் இவங்களால கௌரவப்படுதான்னா, இல்லை. ஒரு பதவியிலே நாம் உட்கார்ந்தா, அதனால நமக்கும் ஸ்டேட்டஸ் உயரணும். அந்தப் பதவிக்கும் கௌரவத்தை ஏற்படுத்தணும். அது தான் பெருமை. அதெல்லாம் இப்ப யாரு கவனிக்கிறாங்க. சீட்ல வந்து உட்கார்ந்து, டேபிள் டிராயரைத் திறந்து வைக்க வேண்டியது. சாயங்காலம் ஆச்சுன்னா எவ்வளவு விழுந்திருக்குன்னு பார்க்க வேண்டியது. அப்படியெல்லாம் நானும் இருந்திருந்தா, இந்நேரம் என் நாலு பெண்களையுமே கரை சேர்த்து, நிம்மதியா இருந்திருப்பேன். நான் ஒரு கிறுக்கன்.. ட்யூட்டி, லாயல்டி, சின்சியாரிட்டின்னு பேசியே என் பொழுதைக் கழிச்சிட்டேன்.”

அவரது குணாதிசயத்திற்கும், நடவடிக்கைகளுக்கும், புரோக்கர் வேலை எப்படிப் பொருந்தி வருகிறது என்பது எனக்குச் சந்தேகமாகவே இருந்தது. புரோக்கர் கமிஷன் என்று கேட்டால் கூட எவனும் இவருக்குத் தருவானா என்பது சந்தேகமே. சில பேரிடம் பேசிப் பார்த்த வகையில் “சாமி, ரொம்ப நல்ல டைப்… அம்புட்டு இம்புட்டுன்னு அடம் பிடிக்கல்லாம் மாட்டாரு.. பர்சன்டேஜ் பேசமாட்டாரு.. கொடுத்ததை வாங்கிடுவாரு…” என்றார்கள். “கொடுக்காவிட்டாலும் கேட்கமாட்டாரு” என்பதை நானாகவே சொல்லிக் கொண்டேன்.

அவர் காண்பித்த பல இடங்களில் ஒன்று கூடத் திகையவில்லை எனக்கு- வேறு ஒரு புரோக்கர் மூலம் தான் இடம் அமைந்தது. “எப்படியோ, உங்களுக்கு ஃபஸ்ட் கிளாஸ் இடம் அமைஞ்சதே அதுவே போதும் எனக்கு.” என்று சொல்லிக் கொண்டே கிரஹப்பிரவேசத்திற்கு வந்து போனார் சங்கரன். ஒரு விஷயம். சங்கரன் சாராய் இருந்தால் புரோக்கர் கமிஷன் மிஞ்சியிருக்கும், அல்லது கொஞ்சம் குறையக் கொடுத்திருக் கலாம். மற்றப்படி எல்லோரும் பொறாமை கொள்வது போல், பஸ் ஸ்டாண்டிற்கும், மார்க்கெட் மற்றும் கடைகளுக்கும் அருகில் இருப்பது போல் தான் இடத்தைப் பிடித்து, வீட்டைக் கட்டியிருந்தேன் நான்.

இப்பொழுது கூட நான் தமாஷாகக் கேட்பதுண்டு, “என்ன சங்கரன் சார். நீங்க காண்பிச்ச இடத்திலே ஸ்கூலோ பூங்காவோ, கோயிலோ எதையுமே காணோமே? எல்லாமே வீடால்ல மாறிப்போச்சு” என்பேன்.

“அதுவா! அதெல்லாம் பிளாட்டுகளை விற்கிறதுக்காக, ஜனங்களை உற்சாகப்படுத்தவும், இடத்தை சீக்கிரம் கிரையம் பண்றதுக்காவும் சொல்ற வார்த்தைகள்; கையாள்ற வழிகள் கொஞ்சம் முன்னப் பின்னதான் இருக்கும் எல்லாம்…”

“முன்னப் பின்னவா? சுத்தமாவே எதையும் காணோம்வோய்!” அதற்கு மேல் பதில் வராது அவரிடம். முன்னாளைய ட்யூட்டி ஹானஸ்ட் அட்மினிஸ்டிரேடிவ் ஆபீசருக்கு அந்த இடத்தில் வாய், தானே அடைத்துக் கொள்ளும். நம்மைத் தவிர வேறு யாராவது இப்படிக் கேட்டு வந்து நின்றால் ஆபத்து தான் என்று எனக்கு தான் அடித்துக் கொள்ளும். ஒரு நல்ல, ஒழுக்கமான அப்பாவி என்பதே சங்கரன் சாரைப் பற்றிய எனது முடிவாகும். அவரைப் பற்றிய ஒரு புகார் என காதுக்கு வந்த போது கூட இந்த அப்பாவி மனுஷனுக்கு எதுக்கு இந்த புரோக்கர் வேலை என்று தான் பரிதாபப்பட்டது என் மனம்.

“எங்க சார் இத்தனை அவசரம்?” என்று அன்று காலையில் – பார்த்த அவரை வழி மறித்துக் கேட்டேன் நான்.

“வள்ளுவர் நகர்ல உங்களுக்குக் காண்பிச்சேனோல்லியோ – அந்த இரண்டு பிளாட்டுக்கும் இன்னைக்குத் தான் விடிமோட்சம்… ரிஜிஸ்ட்ரேஷன்… அதுக்குத்தான் போயிண்டிருக்கேன். இடம் கிடைச்சா போதும்னு ரோட்டுக்கு ஒண்ணே கால் சென்ட் போயிடும்னு சொல்லியம். பரவாயில்லைன்னு அள்ளிண்டு போயிட்டான் மனுஷன். காரியத்தை முடிச்சு கமிஷனை வாங்கப் பார்ப்போம்….” சொல்லிக் கொண்டே வண்டியை அழுத்தினார் சங்கரன்.

சைக்கிள் பளிச்சென்றிருந்தது. துடைத்து எண்ணெய் போடப் பட்டிருப்பது தெரிந்தது. என்னென்னவோ அலங்காரப் பொருட்களை எல்லாம் வாங்கி மாட்டியிருந்தார் சங்கரன். “போகட்டும்… நம்மாலான உதவி..” என்று மனம் தானே

கழிவிரக்கம் கொண்டது எனக்கு. ஒரு வாரம் முன்பு விமலா சொல்லியிருந்தாள்.

“ஏங்க, அந்த சைக்கிளைப் பார்த்தீங்களா? அந்த மாமி தான் அதை ஒட்டலை. மத்த எல்லாரும், அந்தப் பெண்கள் உள்பட அத்தனை பேரும் இஷ்டத்துக்கு அடிக்கிறா அதை. சொந்த வண்டின்னாக் கூட யாரும் இப்படி யூஸ் பண்ணமாட்டாங்க! இரவல் தானே வாங்கியிருக்கோம்கிற கரிசனை வேண்டாம்! ஏதாச்சும் நூறோ, இருநூறோ கொடுத்து உங்களை சரிக்கட்டிடப் போறார்! வேண்டாம்னு சொல்லி வண்டியைத் திரும்ப வாங்கிடுங்கோ… வீட்ல மத்த சாமானோட அதுவும் ஒண்ணா கிடந்துட்டுப் போறது!”

விமலா சொல்லியிருந்தாளேயொழிய, என் மனம் அதற்கு ஒப்பவில்லை. மிஞ்சிப் போனால் அந்த வண்டி, வாங்கிய அதே முந்நூறுக்கு மேல் இன்று தேறாது. இந்தக் காசைவிட ஒருவரோடு அது நாள்வரை கொண்ட பழக்கம் எனக்கு முக்கியம். அனுதினமும் முகம் பார்த்து, பரஸ்பரம் நலம் விசாரித்துப் பிரியும் அன்பு எனக்கு முக்கியம். எடுத்தேன், கவிழ்த்தேன் என்று அப்படி விட்டேற்றியாகப் பேசிட என்னால் முடியாது. சங்கரன் சாரை நினைத்த போது இப்படித்தான் என்னால் முடிவுக்கு வர முடிந்தது.

எட்டு கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் ரிஜிஸ்ட்ரேஷன் ஆபீசுக்கு ஏன் இப்படி வேகுவேகென்று சைக்கிளை மிதிக்கிறார், பஸ்ஸில் போக வேண்டியது தானே? இந்த வயதிலும் சின்சியாரிட்டி கொஞ்சமும் குறையவில்லை. தனது வருமானத்தைப் பற்றிக் கவலை கொள்ளாமல், ஏற்றுக் கொண்ட வேலையைச் செவ்வனே செய்து முடிக்க வேண்டும் என்பதில், அவருக்குள்ள வேகம் கிஞ்சித்தும் குறையாமல் அப்படியே இருந்தது. எதிர்காலத்தைப் பற்றிக் கணிப்பு எதுவும் இல்லாமல் வதவதவென்று குழந்தைகளைப் பெற்று விட்டு இப்பொழுது காலம் போன கடைசியில் அல்லல் பட்டு மாய்வதாகவும் தானறியது. ஒன்றொன்றாய்க் கிளப்பி நாலு பெண்களையும் என்றைக்குத் தள்ளி விட்டு ஓயப் போகிறார் என்று மலைப்பாய் இருந்தது.

அன்று மாலை வீடு திரும்பிய போது “என்னங்க, சேதி தெரியுமா?” என்று வந்து நின்ற போது, நான் சற்று அதிர்ந்துதான் போனேன்.

“சங்கரன் மாமாவுக்கு ஆக்ஸிடென்ட் ஆயிடுத்தாம். ஆரப்பாளையம்கிட்டே பஸ் இடிச்சு, உள்ளே விழுந்துட்டாராம் சக்கரம் ஏறி, கால்ல பலமான அடியாம். ஐயோ பாவம் போயும் போயும் நம்ம வண்டில போகும் போதா இப்படியாகணும். ஜி.கே.ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணியிருக்காளாம்… வாங்கோ, போய்ப் பார்த்திட்டு வருவோம்…!”

நானும் விமலாவும் உடனடியாகக் கிளம்பி அன்று சங்கரன் சாரைப் பார்த்துவிட்டுத் திரும்பியபோது கொஞ்சமும் மனசு சரியில்லை எங்களுக்கு. தனக்கு முற்றிலும் பொருந்தாத ஒருவேலையை வலிய ஏற்றிக் கொண்டு, அதன்பாற்பட்டு அவர் இப்படி இழுத்து விட்டுக் கொண்டு விட்டதாகவே என் மனம் வேதனைப்பட்டது.

“மாமா கேட்டவுடனே, மறுக்காம, மனசோட தூக்கிக் கொடுத்தேள் நீங்க.. ஆனா அவருக்கு இப்படி ஆகணும்னு இருக்கா? பகவான் கொடுத்த கால் இருக்குன்னு, வீசி நடந்திருந்தா இப்போ இந்த அவஸ்தை உண்டா? எல்லாம் தலைவிதி. லிபி. அழுத்தம் திருத்தமா நெத்தில எழுதியிருக்கு.” சங்கரனின் மனைவி இப்படிப் புலம்பினார்.

“எங்களுக்கு யார் இருக்கா சொல்லுங்கோ… நீங்க தான் உதவி செய்யணும்…” என்ற அவர்களின் புலம்பல் தாளாமல், நஷ்ட ஈட்டை எதிர்நோக்கி, மறுநாளிலிருந்து போலீஸ் ஸ்டேஷனுக்கு அலைய ஆரம்பித்தேன் நான்.

இரு சக்கரங்களும் டயர் ஏறி நசுங்கி, எட்டாம் நம்பரைப் போன்ற வடிவத்தில் – அங்கே மூலையில் சார்த்தி வைக்கப்பட்டிருந்தது என் சைக்கிள்.

– ஓம்சக்தி, 1997.

உஷாதீபன் 1987 முதல் உஷாதீபன் என்கிற புனை பெயரில் எழுத ஆரம்பித்த இவர் தனது எழுத்துப் பணியை இன்றுவரை தொடர்ந்து கொண்டிருக்கிறார். வார, மாத இதழ்களிலும் இலக்கியச் சிறு பத்திரிகைகளிலும் இவரது கதைகள் வெளி வந்துள்ளன. அச்சு மற்றும்இணைய இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இயற்பெயர் கி.வெங்கட்ரமணி. திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு நகரைச் சொந்த ஊராகக் கொண்டவர். 1951 ல் பிறந்த இவர், தமிழ்நாடு அரசு வேளாண் பொறியியல் துறையில் கண்காணிப்பாளராகப்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *