வழிக்குவந்த மயிலப்பன்
(1955 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
ஓர் ஊரிலே மயிலப்பன் என்னும் பெயருடையவன் ஒருவன் இருந்தான். அவனுக்கு வாழ்க்கை நடத்து வதற்குப் போதிய அளவு செல்வம் இருந்தது. ஒவ் வொருவரும் ஊருடனும் உலகத்துடனும் ஒத்து வாழ வேண்டியது கடமையாகும். அவ்வாறில்லாமல் பிரிந் திருந்தாலோ அல்லது தான் மட்டும் தனித்திருந் தாலோ பல வகையான இடையூறுகள் நேரிடுவது திண்ண ம்.
மயிலப்பன் ஊரவர்களுடனே சேர்ந்து, நன்மை தீமைகளிலே கலந்து வாழ விரும்பவில்லை. தனியாக இருந்தால் ஊரவர்களுடைய தொல்லையில்லாமல் இருக்கலாம் என்று எண்ணினான். ஊரையடுத்துச் சிறிது தொலையில் வீடு கட்டிக்கொண்டு அங்குத் தனி யாக வாழத் தொடங்கினான். சிலர் தனியிடத்தில் குடியிருத்தல் தக்கதல்ல வென்றும், கள்ளர்களாலும் பிறவற்றாலும் தொல்லையுண்டாகுமென்றும் அறி வுறுத்தினார்கள். மயிலப்பன் அவைகளைக் கேட்க வில்லை. தன் மனப் போக்கின்படி தான் எண்ணிய இடத்தில் வீட்டைக் கட்டிக்கொண்டு நன்மை தீமை முதலிய எதிலுங் கலந்து கொள்ளாமல் இருந்தான்.
ஒருநாள் சில கள்ளர்கள் மயிலப்பனுடைய வீட் டிலே புகுந்து அகப்பட்டதைச் சுருட்டிக்கொண்டு சென்றதுடன் மயிலப்பனையும் வீட்டிலிருந்தவர்களை யும் நன்கு புடைத்துவிட்டுச் சென்றார்கள். அவன் வீட்டில் ஒன்றுமே எஞ்சாமல் கொள்ளை போய்விட் டது. அவன் இரைச்சல் போடவும் முடியவில்லை. ஊரார்கள் அயர்ந்து உறங்கிக்கொண்டிருந்த நேர மாகையால் அவர்களுக்குத் தெரியாமல் போய்விட்டது. அதன் பிறகு மயிலப்பன் ஊருக்குள் வீட்டைக்கட்டிக் கொண்டு எல்லோருடனும் ஒட்டி வாழலானான்.
“ஊருடன் கூடி வாழ்” (இ – ள்.) ஊருடன் – ஊரவர்களுடனே, கூடி – சேர்ந்து, வாழ் – வாழ்வாயாக.
– கருப்பக்கிளர் சு.அ.இராமசாமிப் புலவர், ஆத்திசூடி விளக்கக் கதைகள் (இரண்டாம் புத்தகம்), முதற் பதிப்பு: டிசம்பர் 1955