கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமலர்
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: December 14, 2012
பார்வையிட்டோர்: 16,058 
 
 

“”கமலா! நாம் ஆற்றில் கண்டெடுத்த குழந்தை வளர்ந்து பெரியவனாகி விட்டான். இரண்டு கண்ணும் இல்லை என்ற ஒரு குறையை தவிர வேறு குறை இல்லை. வளர்ந்து இருபது வயது வாலிபனாய் எவ்வளவு அழகாக இருக்கிறான் பார்த்தாயா! எல்லார் போலவும், ஓடவும், ஆடவும், விளையாடவும் செய்கிறான். எக்காரணத்தைக் கொண்டும் நம் கண்ணனுக்கு, நாம் எடுத்து வளர்த்த குழந்தை அவன் என தெரியக்கூடாது!”

“”அதற்காகத்தானே நாம் ஊர்விட்டு, ஊர்வந்து வாழ்கிறோம் அத்தான்!” என்றாள் கமலா.
ValarppuMaganகண்ணனை ஆற்றிலிருந்து எடுத்து வந்த நாள்முதல், காளியப்பனுக்கு சரியான யோகம். காடுகரை வாங்கி விவசாயம் பார்த்து, நல்ல செழிப்புடன் வாழ்ந்து வந்தனர் காளியப்பனும், கமலாவும்!

கண்ணனுக்கு வயது 20. தன் வயது வந்த பையனோடு ஓடி ஒளிந்து விளையாடுவான். ஒருநாள் கண்ணன் காட்டில் போய் விளையாடும்போது, திசைமாறி நடுக்காட்டுக்கு சென்று விட்டான். நண்பர்களும், அவனை தேடிப் பார்த்துவிட்டு சோர்வுடன் வீடு திரும்பினர். அப்போது, காட்டில் இரண்டு திருடர்கள் கண்ணனை பார்த்துவிட்டனர்.

“”அண்ணே! அவன் கழுத்தில் தங்கச் செயின் கிடக்கிறது. அவனை அடித்துப்போட்டுவிட்டு, நாம் செயினை பறித்துக்கொண்டு ஓடிவிடுவோம்!”
ஒரு திருடன், அருகில் கிடந்த பெரிய கல்லைக்கொண்டு, கண்ணன் தலையில் அடித்தான். தலையில் ரத்தம் பீரிட்டு, மயக்கமாகி கீழே விழுந்தான் கண்ணன்! தங்கச் செயினை பறித்துக்கொண்டு, இரண்டு திருடர்களும் ஓடி மறைந்தனர். கண்ணனுக்கு மயக்கம் தெளிந்ததும், “நம்மை யாரோ அடித்துவிட்டு செயினை பறித்துக்கொண்டு போய்விட்டனர். இங்கு விபூதி வாடை வருகிறதே! அருகில் ஏதேனும் கோவில் இருக்கலாம்… சென்று பார்ப்போம்!’ என்று நினைத்து, சிறிதுநேரம் சென்றதும், கோவில் அருகில் வந்துவிட்டோமென நினைத்தான்; தட்டுத்தடுமாறி தான் நடந்தான்.

திடீரென, அவன் எதிரில் ஒரு சிலை தென்படவே, அதைக் கட்டிப்பிடித்தான். தலையில் வடிந்த ரத்தமெல்லாம், சிலையிலும் வடிந்தது. அடுத்த சில வினாடிக்குள், சிலை உயிர்பெற்று ஒரு தேவதையாக ஆனது!

“”மானுடனே! நான் தேவலோகத்துப் பெண். என்னை ஒரு ரிஷி, கோபத்தால் கல் சிலையாக்கி, இந்தக் கோவிலில் வைத்துவிட்டு சென்றுவிட்டார். போகும்போது, ஒரு வாலிபனின் ரத்தம் உன் சிலையில் தெளித்தால் தான், நீ மீண்டும் உயிர்பெருவாயென சொல்லிவிட்டுப் போனார். என் சாபம் முடிந்தது. நீ கேட்கும் வரத்தைக் கேள், நான் தருகிறேன்!”

“”தாயே! எனக்கு பிறவியிலேயே இரண்டு கண்களும் கிடையாது. எனக்கு கண் கொடுத்தாலே போதும்!” என்றான் கண்ணன். அடுத்த கனமே கண்ணனுக்கு பார்வை கிடைத்தது.

“”அம்மா! என்னை இந்த உலகத்தை பார்க்க வைத்த தெய்வமே! உன்னை என் ஆயுள் பூராவும் வணங்கிக் கொண்டிருப்பேன்.”

“”கண்ணா! நான் இன்னும் கொஞ்ச நேரத்தில் மறைந்துவிடுவேன். அதற்குள் உனது பிறப்பை சொல்கிறேன்!”

“”சொல்லுங்கள் அம்மா!”

“”நீ ஒரு ராஜகுமாரன். நீ பிறக்கும்போது உனக்கு கண் இல்லை என்பதால், உன் தாயை ஏமாற்றி, உன்னை ஆற்றில்விட்டார் உனது தந்தை. ரத்தினபுரி மன்னர் ராஜேந்திரவர்மன் தான் உனது தந்தை. உன் தாயின் பெயர் ராஜலட்சுமி. உன் கழுத்தில் மயில் மச்சம் இருக்கும். அதுதான் உனது அடையாளம்…” இப்படி சொல்லிக்கொண்டு இருக்கும்போது தேவதை மறைந்தது!

தன் ஊரை தேடிப்பிடித்து சென்றான் கண்ணன். அம்மாவையும், அப்பாவையும் பார்த்து, “”எனக்கு கண் கிடைத்துவிட்டதும்மா!” என, அவர்களை கட்டிப்பிடித்து ஆனந்தம் அடைந்தான். கண்ணனுக்கு கண் கிடைத்தது தெரிந்ததும், அவனது நண்பர்கள், ஊர் மக்கள், அவனை பார்க்க கூட்ட கூட்டமாக வந்தனர்.

“”இரண்டு நாட்கள் சென்றதும், “”அப்பா! ரத்னபுரி எங்கே இருக்கிறது?” என்றான் கண்ணன்

“”பத்து ஊர்கள் நடந்துசென்றால் ரத்தினபுரி தான். ஏன் கேட்கிறாய்?” என்றார் தந்தை.

“”நாளை அங்கு சென்று, ராஜாவை சந்திக்க வேண்டும். நீங்களும் என்னுடன் வாருங்கள்!” என்றான்.

அப்பாவையும், அம்மாவையும் கூட்டிக்கொண்டு, ரத்தினபுரி அரண்மனைக்குச் சென்றான். அரண்மனை சேவகர்களிடம் அனுமதி பெற்று, அரசரை காணச் சென்றான். அங்கே, அரசரும், அரசியாரும், சபையோர்களும் இருந்தனர்.

“”வாலிபனே! உன் தந்தையும், தாயையும் கூட்டி வந்திருக்கிறாயே… உனக்கு என்ன வேண்டும்?”

“”எனக்கோர் உண்மை தெரிய வேண்டும்!”

“”என்ன உண்மை?”

“”பல வருடங்களுக்கு முன் உங்களுக்கு ஒரு குழந்தை பிறந்தது! அதற்கு கண் இல்லை என்று தெரிந்ததும், அவமானம் தாங்க முடியாமல், அரசியாருக்குத் தெரியாமல் ஆற்றில் விட்டுவிட்டீர்கள்… அது உண்மையா?”

“அது உனக்கு எப்படி தெரியும்?”

“”நீங்கள் ஆற்றில் போட்ட குழந்தையே நான்தான்!”

“”நீ பொய் சொல்கிறாய். என் மகனுக்கு கண்களே கிடையாது…”

“”கண் தெரியாதது உண்மைதான். ஆனால், இரண்டு தினங்களுக்கு முன்தான் எனக்கு கண்பார்வை கிடைத்தது!”

“”என் மகனுக்கு மயில் மச்சம் உண்டு. அது உனக்கு இருக்கிறதா?”

மச்சத்தை காட்டினான் கண்ணன். மச்சத்தை பார்த்த அரசியார், “”மகனே…” என்று கட்டி அணைத்து நெற்றியில் முத்தமிட்டாள்.

அரசன் அரசியாரைப் பார்த்து, “”பொறு…! இவன் நம்மை ஏமாற்றப்பார்க்கிறான்!” என்றான்.

அருகில் இருந்த தாய், தந்தையர், “”அரசே! கண்ணன் சொல்வது சத்தியமாக உண்மை! இரண்டு தினங்களுக்கு முன் தான், ஒரு தேவதையால் எங்கள் மகனுக்கு கண் கிடைத்தது. அந்த தேவதைதான், தாங்கள் தான் அவனின் தந்தை என்றும் சொல்லியது. நீங்கள் குழந்தைக்கு போட்டிருந்த உடைகளையும், மோதிரங்களையும் இன்னும் பத்திரமாக வைத்திருக்கிறோம்!”

“”அப்படியா! அதை எடுத்து வாருங்கள்!”

அரண்மனை குதிரையில் அவர்களை அனுப்பி, சிறிது நேரத்திற்குள் வந்தனர். உடைகளையும், மோதிரத்தையும் அரசனிடம் காண்பித்தனர்.

“”மகனே! நீ தான் எனது உண்மையான மகன். அரசர் தான், நீ காணாமல் போய்விட்டாய் என என்னை நம்ப வைத்துவிட்டார்!” என்றார் அரசி.

“”மகனே! உனக்கு கண் இல்லை என்ற காரணத்தால், நான் தான் உன்னை ஆற்றில் விட்டேன்… அந்தப் பாவத்திற்கு, எனக்கு வேறு வாரிசே இல்லையடா… மகனே! இனி நீ எங்கள் கூடவே தான் இருக்க வேண்டும்!” கெஞ்சினார் அரசர்.

“”அரசர், அரசியாரே! நீங்கள் இருவரும் என்னை பெற்றிருக்கலாம். ஆனால், ஆற்றில் என்னை இவர்கள் கண்டெடுக்கும்போது, எனக்கு கண் இல்லை என தெரிந்தும், என்னை கண்ணாக பாவித்து, கண்ணன் என பெயரிட்டு, என்னை இத்தனை ஆண்டுகளாக வளர்த்த இவர்கள்தான் எனக்கு உண்மையான தாயும், தந்தையும். உங்கள் ராஜ வாழ்க்கை எனக்கு வேண்டாம். இவர் களுடன் தான் நான் இருப்பேன். வாருங்கள் அப்பா, அம்மா… நம் வீட்டிற்கு செல்வோம்!”

மகாராணி திடீரென ஒரு வாளை உருவி, “”மகனே! நீ எங்கள் கூட இருக்கவில்லை என்றால், உன்னை பெற்ற தாயை இனி உயிருடன் நீ பார்க்க முடியாது!”

“”தாயே! உங்கள் கூடவே இருக்க வேண்டுமென்றால், என் விருப்பப்படி நீங்கள் நடக்க வேண்டும்!”

“”உன் விருப்பத்தை சொல்!”

“”இதோ… என்னை பெறாமல் பெற்று வளர்த்த அம்மாவும், அப்பாவும் என் கூடவே இருக்க வேண்டும்!”

“”ஓ… இதுதானா! அவர்கள் உயிர் உள்ளவரை, உன் கூடவே இந்த அரண்மனையில் இருக்கட்டும்!”

பெற்ற மனமும், வளர்த்த மனமும் மகிழ்ச்சியடைந்தது!

– ஜூன் 11,2010

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *