கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: May 28, 2025
பார்வையிட்டோர்: 769 
 
 

(2019ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அந்தக்காட்டின் ஒரு சிறுகுன்றின் பாறை மீது இளவரசர் சிம்பா அமர்ந்திருந்தது. அது காலை வெயிலின் கதகதப்பில் இதமாகக் குளிர் காய்ந்து கொண்டிருந்தது. குன்றின் கீழ் சமவெளிப் பகுதியில் மான்களும் வரிக்குதிரைகளும் மேய்ந்து கொண்டிருந்தன. மூடிக் கிடந்த பனிப்போர்வையின் ஊடாகக் கதிரவனின் கதிர்கள் துளைத்து கொண்டிருந்தன. இளவரசர் சிம்பாவின் அருகே மதியூகன் மந்தியன் நின்று கொண்டிருந்தது.

சிம்பா மந்தியனிடம், “இந்தக் காட்டில் மிகவும் வலிமையானவன் நான்தானே?” என்று கேட்டது.

“இதிலென்ன சந்தேகம்! நீங்கள்தான் இந்தக் காட்டில் வலிமையானவர்!” என்றது மந்தியன். “அப்படி என்றால் என்னால் செய்ய முடியாத செயல்னு ஒன்றும் இல்லை அப்படித்தானே?” என்றது சிம்பா.

சிம்பாவிற்கு ஆறு வயது ஆகிறது! தோற்றப் பொலிவுடனும் வயதிற்கே உரித்தான இளமைச் செறுக்குடனும் அது இருந்தது. இளவரசராகிய அது விரைவில் பட்டத்து ராஜாவாக முடிசூட்டிக் கொள்ள இருந்தது. அது நல்லது கெட்டது தெரிந்து கொள்ள வேண்டும். அனுபவ அறிவை பெற வேண்டும் என்பதற்காக வயதில் மூத்த மந்தியனை அதன் ஆலோசகராக சிங்கராஜா நியமித்திருந்தார்! அதனால் மந்தியன் எப்போதும் சிம்பாவோடு ஒட்டிக் கொண்டிருக்கும்!

சிம்பாவின் கேள்விக்கு மந்தியன், “அப்படிச் சொல்ல முடியாது! வலிமை என்ற வார்த்தையின் பொருள் ஒவ்வொரு உயிரினங்களின் தேவை யைப் பொறுத்து வேறுபடும்!” என்றது!

“என்ன சொல்றீங்க மந்தியாரே?” என்ற சிம்பா எழுந்து சென்று மொட்டைப் பாறையின் விளிம்பில் நின்றபடி ஓங்கி கர்ஜனை செய்தது. சமவெளியில் மேய்ந்து கொண்டிருந்த அனைத்து மிருகங்களும் மிரண்டு போய் கால்கள் பிடறியில் தெறிக்க ஓடி ஒளிந்தன. மரங்களில் இருந்த பறவைகள் கிறீச்சிட் டபடி வேற்றிடம் தேடிப் பறந்தன.

“என்னோட கர்ஜனைக்குக் இந்தக் காடே அதிருது! அப்படின்னா நான்தான வலிமையானவன்! என்னை விட வலிமையானவங்க இந்தக் காட்டுல வேறு யார் இருக்க முடியும்?” என்றது சிம்பா. அதற்கு மந்தியன் பதில் ஏதும் சொல்லாமல் மவுனமாகப் புன்னகைத்தது.

ஒருநாள் சிம்பாவும் மந்தியனும் காட்டில் உலாச் சென்று கொண்டிருந்தன. அப்போது பாதையை விட்டு சற்றே உள்ளடங்கி இருந்த பனைமரம் ஒன்றை மந்தியன் சுட்டிக் காட்டியது. அந்த ஒற்றைப் பனைமரத்தில் ஏராளம் கூடுகள் தொங்கிக் கொண்டிருந்தன.

“இதெல்லாம் என்ன?” சிம்பா கேட்டது.

“இது தூக்கணாங்குருவிக் கூடு!” என்ற மந் தியன் தரையில் உதிர்ந்து கிடந்த கூடு ஒன்றை எடுத்து சிம்பாவிடம் கொடுத்தது. நீண்ட குழல் போன்ற வடிவம், உள்நுழையும் இருவாய்கள், உள்ளே அறை போன்ற அமைப்புக்கள் என அந்தக் கூடு சிம்பாவை ரொம்பவே வசீகரித்தது. “இது ரொம்ப அழகா இருக்குல்லே!’ என்றது சிம்பா!

“தூக்கணாங்குருவி தன்னோட ஜோடிப் பறவைக்காகவும் குஞ்சுகளுக்காகவும் இந்தக் கூட்டைக் கட்டுது! இதுக்காக நாணல் புல்லை தேடி கொண்டாந்து அது கூட்டை நெய்யுது! நாணல்புல் ஈரத்துல லேசுல ஊறாதுங்குறதுனால மழைகாலத்துல கூட கூடு நைந்து போகாம இருக்கும்! கூட்டை மரத்தோட கிளைகளின் நுனிகள் கிட்டத்தட்ட பிடிமானம் இல்லாமத் தொங்குற மாதிரிதான் குருவி கட்டும்! அந்த மாதிரி கட்டுறது எதிரிங்க தொல்லைல இருந்து தப்பிச்சு பாதுகாப்பா இருக்குறுததுக்கு உதவுது! கூட்டை அழகா நெய்யுறதுனால இதுக்கு தையல்குருவின்னும் ஒரு பெயர் உண்டு!” என்றது மந்தியன்!

“கேட்க ரொம்ப சுவராசியமா இருக்கு!” என்றது சிம்பா!

”இதுல இன்னொரு சுவராசியமும் இருக்கு! குருவி களிமண்ணை எடுத்துட்டு வந்து கூட்டோட உட்புறத்துல பூசி அதுல மின்மினிப் பூச்சிகளைக் கொண்டாந்து பதிச்சு வைச்சுரும்! இதுனால இரவு நேரத்துல குஞ்சுகளுக்கு கொஞ்சம் வெளிச்சமும் கதகதப்பும் கிடைக்கும்!” என்றது மந்தியன்!

‘”அற்புதம்!” என்றது சிம்பா!

சிம்பாவும் மந்தியனும் தொடர்ந்து நடந்து சென்று கொண்டிருந்தன. சிம்பா தூக்கணாங்குருவியின் திறமையை மனதிற்குள் வியந்தபடி சென்றது.

அப்போது மந்தியன் சிம்பாவிடம், ”சிம்பா! நீங்க இந்;தத் தூக்கணாங்குருவி மாதிரி எனக்கு ஒரு கூடு செஞ்சு தர முடியுமா?” என்று கேட்டது.

சிம்பா சட்டென்று நிமிர்ந்தது!

“குருவி மாதிரி என்னால எப்படி கூடு கட்ட முடியும்?” என்று கேட்டது!

“நீங்கள் வலிமையானவர்தானே? உங்கள் வலிமையால இதை சாதிக்க முடியாதா?” கேட்டது மந்தியன்!

”முடியாது! குருவிக்கு மரத்தோட கிளைகளல்ல வசிக்க வேண்டிய அவசியம் இருக்கு! எனக்கு அப்படி என்ன அவசியம் இருக்கு? நான் குகைகளில் விசிப்பவன்?” என்றது சிம்பா!

“இதைத்தான் சொல்ல வந்தேன்!. வலிமைங்குறது, ஒவ்வொரு உயிரினங்களோடத் தேவையைப் பொறுத்து வேறுபடும்!” என்றது மந்தியன்!

சிம்பா மவுனமாக இருந்தது!

மந்தியன் தொடர்ந்து, “ஒரு குருவி கூட்டை எளிதாக் கட்டிரும்! எறும்பு புற்றை எளிதா உருவாக்கிரும்! ஒரு சிங்கத்தால குருவி மாதிரி கூட்டையோ, எறும்பு மாதிரி புற்றையோ உருவாக்க முடியாது! ஆனா ஒரு சிங்கம் திறமையா வேட்டையாடும்! அது குருவிக்கும் எறும்புக்கும் முடியாது! சிங்கத்துக்கு வேட்டைதான் தொழில்! மனுஷங்க கிட்டே கடப்பாரைன்னு ஒரு கருவி இருக்கும்! அது இரும்புனால் ஆன வலிமையான ஆயுதம்தான்! அதை வைச்சு கடும் பாறையப் பிளக்க முடியும்! ஆனா பஞ்சைப் பிரிக்க அது உதவாது! அதுனால் தேவையைப் பொறுத்துதான் வலிமைங்குறது! வெறும் உடல்வலு மட்டுமே வலிமை கிடையாது! நானே வலியவன்னு சொல்றது கூட ஒருவித அறியாமைதான்!” என்றது மந்தியன். சிம்பா மந்தியனின் வார்த்தைகளில் இருந்த உண்மையை ஏற்றுக் கொண்டபடி மவுனமாக நடந்து சென்றது.

– தினமணி, சிறுவர்மணி 9-11-2019.

மா.பிரபாகரன் எனது பெயர் மா.பிரபாகரன். மதுரையில் வசித்து வருகிறேன் சித்த மருத்துவத்தில் பி.எஸ்.எம்.எஸ் இளங்கலைப் பட்டம் பெற்றவன்@ அரசு மருத்துவர். கடந்த ஆறு ஆண்டுகளாக சிவகங்கை மாவட்டத்தின் மாவட்ட சித்த மருத்துவ அலுவலராகப் பணியாற்றி ஜீலை - 2024 இல் பணியிலிருந்து ஓய்வு பெற்றேன். பெரியவர்களுக்கான எனது படைப்புகள் தினமணிகதிரில் பல வெளிவந்துள்ளன. சிறுவர்களுக்கான எனது முதல் படைப்பு சிறுவர்மணியில் 2006 ஆம் ஆண்டு வெளியானது. எனது சிறுவர் சிறுகதைகள் குழந்தை…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *