கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 3, 2025
பார்வையிட்டோர்: 12,281 
 
 

முப்பது வயதாகியும் இன்னும் தங்கள் மகன் பிரகாஷூக்கு திருமணமாகவில்லையே என்று கவலைப் பட்டனர் பிரகாஷின் பெற்றோர்.

இத்தனைக்கும் பார்க்க மூக்கும் முழியுமாக சினிமா கதாநாயகன் போல் இருப்பான் பிரகாஷ். நல்ல படிப்பு;  பெரிய உத்தியோகம்.  அலுவலக காரிலேயே அவனை அழைத்துச் சென்றும் பின்பு வீட்டுக்கு கொண்டு வந்து விடுவதுமாக  ஏற்பாடு.  நல்ல வசதி படைத்தவன். 

ஆனால் கல்யாணப் பேச்சை எடுத்தாலே முகம் சுருங்கி கடு கடுவென்று அப்பால் சென்று விடுவான் பிரகாஷ். தங்களுக்குப் பிறகு மகனை கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொள்ள ஒருவள் வரவேண்டாமா என்று பிரகாஷ் பெற்றோர் ஏக்கமும் வேதனையும் அடைந்தனர்.

அன்று தரகர் பெண்ணின் புகைப்படத்துடன் ஒரு ஜாதகம் கொண்டு வந்து கொடுத்தார். பெண் பெயர் நந்தினி. படிப்பு பி.இ. பார்க்க பாந்தமாயிருந்தாள். வயது 28. பெண் வீட்டாரும் வசதியுள்ளவர்கள்  என்று தரகர் சொன்னார். 

பிறகு ஜாதகப் பொருத்தம் பார்க்கையில் அம்சமாக இருந்தது. அதில் காணப்பட்ட குறிப்புகளும் திருப்திகரமாக இருந்தன. இவற்றை அறிந்த பிரகாஷ் அரை மனதுடன் தலையசைத்தான். 

புகைப்படத்தில் காணப்பட்ட பிரகாஷ் பெண் வீட்டாரை வெகுவாக  கவர்ந்தான்.  மேலும் அவனுடைய ஜாதகம் தங்கள் பெண் ஜாதகத்துடன்  கன கச்சிதமாக பொருந்தியிருந்தது. ஜாதக விளக்கங்க ளும் மனதுக்குப் பிடித்துப் போக மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கத் தயாரானர் பெண்ணின் தந்தை. 

இருபத்தெட்டு வயதாகியும் தங்கள் பெண்ணுக்கு இன்னும் கல்யாணம் குதிரவில்லை என கவலைப்பட்டுக் கொண்டிருந்த நந்தினியின் பெற்றோர் ஒரு வழியாக இப்போது நல்ல இடம் கிடைத்து பற்றி அளவில்லா மகிழ்ச்சி கொண்டார்கள். 

அதன்படி பெண் பார்க்கும் படலம் முடிந்து, நிச்சயத்தாம்பூலம் நடந்து ஒரு வழியாக பிரகாஷ், நந்தினியின் திருமணமும் அமோகமாக நடந்தேறியது.  

பிறக்கும்போதே வலது கால் சூம்பிப் போயிருந்தது பிரகாஷுக்கு. அதைப்போல் இடது கால் சூம்பிப் பிறந்தவள் நந்தினி. மாற்றுத் திறனாளிகளான இவர்களுக்கு எப்படி திருமணம் நடக்கப் போகிறதோ என்று கவலைப் பட்டுக் கொண்டிருந்தனர்  இவர்களின் பெற்றோர்கள். அவர்களின் கவலை தீரும் விதத்தில் நல்லபடியாக மணமக்கள் ஜோடி சேர்ந்ததில் களிப்புற்று மனதார இறைவனுக்கு நன்றி செலுத்தினார்கள். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *