வறுத்த வித்து






(1968ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
நகரத்தின் சன சந்தடிகளையும், ஆரவாரங்களையும் விட்டுத் தொலைதூரத்தில், ஒதுக்குப்புறமான கிராம மொன்றிலே சத்தியேந்திரர் தமது ஆச்சிரமத்தை அமைத்துக்கொண்டபொழுது அவரைத் தெரிந்தவர்க ளெல்லாம் அவரின் செயல் ஏற்றது என்றே முடிவுக்கு வந்தனர். பகட்டையும் புகழையும் என்றைக்குமே விரும்பாத மகாசாதுவான அவர், துறவாசிரமத்தை ஏற்றுக்கொண்டு சத்தியேந்திரரானபோது எவ்விதம் அவரைத் தங்கள் நெஞ்சங்களிலே வழிபட்டுப் போற்றி னார்களோ, அதுபோலவே இன்றும் அவரை அவர்கள் போற்றத் தவறவில்லை.
“சத்தியேந்திர சுவாமிஜியின் ஆச்சிரமத்திற்கு இன்று சென்றிருந்தோம். சூழவர விழுதுகள் விட்டு வளர்ந்து நிற்கும் ஆலமரங்கள். பச்சைக் கம்பளம் விரித்தது போன்ற பசிய புல்வெளி. அதன் எல்லையிலே வரம்பு கட்டியது போன்ற பலவகைப் பூஞ்செடிகள், இவற்றின் நடுவிலே சிறியதொரு குடிசை. சாணகத்தால் மெழுகிய தரையும், செம்மண் தீற்றிய சுவரும் பொருந்திச் சுவாமிகளின் நெஞ்சம் போலவே பரிசுத்தமாய் அது விளங்குகிறது. கிராமத்தின் வயல்களிலும், தென்னந் தோப்புக்களிலுமிருந்து மெல்லெனத் தவழ்ந்து வருங் காற்று, தமது பஞ்சு பொதித் தாடியை வருடத் தமது குடிசையின் முன்னிருக்கும் ஆலமரத்தின் கீழ்ச் சந்தியேந் திரர் நிட்டை கூடியிருந்த காட்சி, எங்களை வேதகாலத் திற்கே இழுத்துச் செல்வது போன்றிருந்தது. நாங்கள் மெய்ம்மறந்த நிலையிலே சுவாமியின் கால்களிலே வீழ்ந்து நமஸ்கரித்தோம்.”
இதே பாணியில் சந்தியேந்திரரைப் பற்றியும் அவர் அமைத்துக்கொண்ட ஆச்சிரமத்தைப் பற்றியும் தாந் தாம் நேரிற் சென்று கண்டுவந்த அனுபவங்களைப் பத் திரிகை நிருபர்கள், விவரமாகவும், அழகாகவும் வருணித் திருந்தார்கள். இவற்றை வாசித்தவர்களுடைய நெஞ் சங்கள் சத்தியேந்திரரின் நினைவுகளால் நிறைந்து கனிந்ததற்கும், மானசீக அஞ்சலிகளை அவர்கள் கணக் கின்றிச் செலுத்தியதற்கும் சொல்லவா வேண்டும்?
இச்செய்திகள் வெளியான நாளிலிருந்து சத்தியேந் திரர் வசித்த கிராமத்திற்கு அதிர்ஷ்டம் அடிக்கத் தொடங்கிவிட்டது. நாட்டின் பல திசைகளிலுமிருந்து அவரைக் காண்பதற்கும், அவரின் அறிவுரைகளைக் கேட் பதற்கும் மக்கள் திரள்திரளாக வரலாயினர்.
பிரதான பஸ் வீதியிலிருந்து ஒற்றையடிப் பாதை ஒன்றே சத்தியேந்திரரின் ஆச்சிரமத்திற்கு ஆரம்பத்தில் இருந்தது. இப்போது கிராம மன்றம் அந்த ஒற்றை யடிப் பாதையை விசாலமாக்கித் தார் போட்டு அகல மான வீதி ஒன்றை அமைத்துக் கொடுத்தது. வீதியின் ரு மருங்கிலும் வருவோரின் வசதிக்காகக் கடைகள், விடுதிகள் ஆரம்பிக்கப்பட்டன. சில நாள்களில் மின் சாரத் தொடர்பும் ஏற்படுத்தப்பட்டது.
இவ்வாறு அமைதியை நாடிவந்த சத்தியேந்திர ரைச் சூழ்ந்து பழையபடி சந்தடிகளும் ஆரவாரமும் ஏற்பட்டபொழுது அவரின் உள்ளத்திலே எத்தகைய எண்ணங்கள் ஏற்பட்டிருக்கும் என்று நாம் சுலபமாக ஊகித்துவிடலாம்.
ஆனால், துறவிகளும், ஞானிகளும் எந்த வேளையில் எவ்விதம் சிந்திப்பார்களென்று நாம் ஊகித்துப் பார்ப் பனவெல்லாம் சரியா என்பது வேறு விஷயம்.
சந்தியேந்திரரின் தியான நேரம் குறையலாயிற்று. நாளின் பல மணித்தியாலங்களை அவர், தம்மைத் தரி சிக்க வருவோருக்குக் காட்சி கொடுப்பதிலும், அறி வுரைகள் அளிப்பதிலுமே கழிக்க வேண்டியிருந்தது.
அவருடைய குடிசை விசாலமாக்கப்பட வேண்டிய நிலை ஏற்பட்டபொழுது கிராம மக்களே முன்வந்து ஓர் அழகான ஓட்டு வீட்டைக் கட்டிக் கொடுத்தனர். இதற் காக இரண்டொரு ஆலமரங்கனைத் தறிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டதையும் அவர்கள் பொருட்படுத்த வில்லை.
சத்தியேந்திரரின் உள்ளத்திலே இந்தச் செயல் எத் தகைய விளைவை ஏற்படுத்தியிருக்கும் என்று சொல்ல முடியாதிருந்தது.
வழக்கம்போல அவருடைய முகத்திலே என்றும் மாறாத புன்னகையே தவழ்ந்த வண்ணம் இருந்தது.
அவருக்கு இப்பொழுது பல சீடர்கள். அவர்களின் அதிகாரம் வேறு அங்குக் கொடிகட்டிப் பறந்தது. வரு பவர்களைக் காக்க வைப்பதும், சுவாமிஜியின் அருகில் செல்லவிடாது தடுத்து நிறுத்தி வைப்பதும், அவர்களுக் குத் தனியான ஓர் இன்பத்தை அளித்தன.
சுவாமிஜியின் புகழ் வளர்ந்ததுபோலவே, அவரின் தரிசனத்திற்கான இடையூறுகளும் வளரலாயின.
அவரின் தரிசனத்துக்காய்க் காத்துக் கிடந்து எப் பொழுதோ அருமையாக அவரைக் கண்டு அவரிடம் விபூதி, பிரசாதம் பெற்றவர்களுக்குக் கூட நாட்டில் பெருமதிப்பு ஏற்பட்டது.
அவர்கள் சுவாமியின் மகிமைகளை வானளாவப் புகழலாயினர். பத்திரிகைகள் சுவாமியைப் பல நிலை களிலே படமெடுத்துப் போட்டுப் புகழோடு பணமும் சம்பாதிக்கலாயின. அவரின் வாழ்த்துச் செய்தி என்ற பெயரிலே அவரது சீடர்கள் எழுதியனுப்பும் செய்தி களைத் தங்களின் ஆண்டு மலர்களிலே வெளியிடுவதையே பெரும் பாக்கியமாய்க் கருதிப் பத்திரிகைகள் தவம் கிடந்தன.
சினிமா நட்சத்திரங்கள், அரசியல்வாதிகள், பத் திரிகைக்காரர்கள், பிரமுகர்கள் என்று சமுதாயத்தின் பலதுறைகளைச் சேர்ந்தவர்களும் அவரை நாடி வந்து தத்தம் முயற்சிகளுக்கு அவரின் ஆசியை நாடி நின்றனர்.
‘நான் இம்முறைத் தேர்தலிலே வெற்றி பெறு வேனா?’ •எனக்கு இவ்வாண்டு பதவி உயர்வு கிடைக் குமா ?’ ‘எனது படம் நூறு நாள் ஓடி வெற்றி விழாக் கொண்டாடுமா?’ என்று இவர்கள் கேட்கும் கேள்வி களுக்கெல்லாம் சுவாமிஜி பதில் இறுக்க வேண்டியவ ரானார்.
சிலவேளைகளிலே அவருக்கு எரிச்சல் மூண்டுவிடும். அவர் கண்டபடி வாயில் வந்தவாறெல்லாம் தம்மை நாடி வருபவர்களை நோக்கி ஏசத் தொடங்கிவிடுவார். அந்த ஏச்சுப் பேச்சுக்கு இலக்கானவர்கள், அவரின் அத்தகைய பேச்சுக்களுக்கும் தமக்குத் தோன்றியவாறு தத்துவ விளக்கமும், வியாக்கியானமும் செய்து திருப் திப்படலாயினர் !
தாம் புதிதாக வாங்கிய பெறுமதி வாய்ந்த காரிலே சுவாமி வெள்ளோட்டம் செல்ல வேண்டும். தமது புது மனையிலே சுவாமி வந்து விருந்தயர்ந்து ஆசி கூறிச் செல்ல வேண்டும். தமது பிள்ளைகளின் திருமண, ருது சாந்தி வைபவங்களுக்கு அவர் எழுந்தருளி ஆசி கூற வேண்டும்.
இந்நிலையில் சுவாமியை நாடிப் பிரமுகர்கள் வந் ததுபோலப் பிரமுகர்களை நாடிச் சுவாமி செல்ல வேண் டிய கட்டமும் ஏற்பட்டது. தமிழும், சைவமுங் கற்ற பண்டிதர் ஒருவர் திருவெம்பாவைப் பாடல் அடியான,
‘தானே வந்தெம்மைத் தலையளித்தாட் கொண்டருளும்’ தண்ணளியாளர் எனத் தலைப்பிட்டுச் சுவாமி யின் புகழ்ப் புராணத்தைக் கற்பனை நயங்கள் மலியத் தீட்டி வெளியிட்டார்.
அதிலிருந்து சுவாமி ஐந்தாங் குரவர் நிலைக்குத் திடீரென உயர்த்தப்பட்டார். மக்கள் மனத்தில் நினைப் பவற்றையெல்லாம் அறியவல்ல மகான் என்றும், அற் புதங்கள் பல நிகழ்த்தும் அண்ணல் என்றும் அவரின் பெயர் அடிபடலாயிற்று.
‘அடேய்! நீ ஏன் இப்பொழுது இங்கே வந்தாய்? உன் தாய் வீட்டிலே உயிருக்கு மன்றாடுகிறாளடா’ என்று ஒரு நாள் நான் சுவாமியிடம் போனபொழுது உரைத்தார். உடனேயே பதற்றப்பட்டுக்கொண்டு நூறு மைல் தொலைவிலுள்ள என் அன்னையை நாடிக் காரில் ஓடினேன். அங்கு என் தாய் எனக்காகவே காத்திருந்தவள் போன்று என் மடியிலே தலை வைத்துச் சிவனடி சேர்ந்தாள்’ என்று ஒருவர் கண்ணீரும் கம் பலையுமாகச் சொல்வார். இன்னொருவர் சுவாமி ஒரே சமயத்தில் இரண்டிடங்களில் தரிசனங் கொடுத்த தாற் பரியத்தைச் சான்றுகாட்டி நிரூபிப்பார்.
இப்படியாகத்தானே சுவாமி சத்தியேந்திரரின் புகழ் நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாய் வளர்ந்துகொண்டிருந்தது.
(2)
அவரை, ‘அவன்’ என்பதா ‘அது’ என்பதா என்று யாருக்கும் தெரியவில்லை. பரட்டைத் தலை, சிக்குப் பிடித்த பெருந்தாடி, உடம்பெல்லாம் ஒரே அழுக்கு மயம், அரையிலே ஒரு கோவணந்தான் ஆடை.
சத்தியேந்திர சுவாமியின் கிராம ஆச்சிரமத்தி லிருந்து இருபத்தைந்து மைல் தொலைவிலுள்ள முரு காலயம் ஒன்றிலே இந்த வினோதப் பிராணி உலாவி வந்தது.
கோயிற் பூசை நடக்கும் வேளைகளிலே இதனைக் கோபுர வாசலிலே தவறாது காணலாம். இது திருநீறு பூசுவதையோ, குளிப்பதையோ யாருங் கண்டதில்லை. சுவாமியின் சந்நிதி முன் நின்று இது ஆடுவதும், பாடு வதும், கோ கோ என்று கொக்கரிப்பதும் பல வேளைகளில் சுவாமியைத் தரிசிக்க வருவோர்க்கும் இடைஞ்ச லாகிவிடுதலும் உண்டு.
அந்த வேளைகளில் வெறிபிடித்த நாயை அடித்துக் கலைப்பதுபோல அந்த உருவத்தை அவர்கள் துரத்தி விடுவார்கள். அது, ஏதோ புதுமை கண்டதுபோலப் பேய்ச் சிரிப்புச் சிரித்தபடி அந்த இடத்தைவிட்டு ஓடிப் போகும்.
சொறி நாய்கள், காகங்கள் இவற்றோடு சேர்ந்து எச்சில் இலைகளைக் கிளறுவதும் கண்டதையெல்லாம் அள்ளித் தின்பதும், கண்ட இடத்திலே உடம்பைப் புரட்டிவிட்டுக் குறட்டை விடுவதும் அதற்குப் பிடித்த விடயங்கள்.
ஒருநாள் அது எதையோ யோசித்துவிட்டு நடை யாய் நடந்து சந்தியேந்திரரின் ஆச்சிரமத்திற்கு வந்து சேர்ந்தது.
அவரின் ஆச்சிரமத்து வாசலிலே வந்து நின்று “அடேய் சத்தியேந்திரா! அமுக்கு மூடமே! வாடா வெளியே. உங்கே என்ன செய்துகொண்டிருக்கிறாய்?” என்று கரடியாய்க் கத்தியது.
சத்தியேந்திரசுவாமி தியான மண்டபத்திலே வீற் றிருந்த அடியவர்க்குக் காட்சி கொடுக்கின்ற வேளை அது. அந்நேரத்திலே இப்படி ஒரு கதறலா ? சத்தி யேந்திரர் கூட வியப்படைந்து தமது பேச்சைச் சிறிதே நிறுத்தினார்.
அவரின் சீடர்களின் விழிகளிலே நெருப்புப் பொறி பறந்தது: அவர்கள் ஓட்டமாய் ஓடி வெளியே வந்து அந்த விநோதப் பிறவியைப் பிடித்துச் சாத்துப்படி வழங்கினார்கள்! அடிக்க அடிக்க அந்தப் பிராணி எக் காளமிட்டுச் சிரித்தபடி சத்தியேந்திர சுவாமியைக் கண்டபடி ஏசிக்கொண்டிருந்தது. வாய், நெஞ்சு, கால் கைகளிளெல்லாம் இரத்தம் வழிய வழிய அது தன் வசைபுராணத்தைத் தொடர்ந்து நடத்திக்கொண்டே யிருந்தது.
சத்தியேந்திரருக்குப் பொறுக்கவில்லை. அவர் வெளியே ஓடி வந்தார். வழக்கமான அவரது சாந்தம், அன்பு எல்லாம் உள்ளடங்கச் சீற்றமே தாமாகி அவர் வந்த கோலம் ‘திரிபுராந்தகரையே’ நினைவுபடுத்தியது.
வந்தவர் தம்மை நோக்கிச் சிரித்தபடி நின்ற அந்த உருவத்தின் முகத்தை, விழிகளை ஒரே ஒருகணந்தான் தோக்கினார்…
ஒரே ஒரு கணந்தான்…
அடுத்த கணம் அவரது உடலைப் போர்த்திருந்த காஷாய உடை நழுவிக் கீழே விழுந்தது. ஒரே ஓட்ட மாக ஓடிச் சென்று அந்த வடிவத்தின் காலடிகளிலே விழுந்தார். “சுவாமி! என்னை மன்னித்துக் கொள்ளுங் கள். என் சிறையிலிருந்து என்னை விடுவியுங்கள். என் கண்களைத் திறந்து விடுங்கள்” என்று அவர் கதறியழுத போது எல்லாரது வாய்களும் அடைத்துப்போய்விட்டன.
உருவம் அங்கு நெடுநேரம் நிற்கவில்லை. வந்த வழியே திரும்பி ஓடிற்று.
சத்தியேந்திரர் தமது அரைத் துணியையும் அவிழ்த் தெறிந்துவிட்டு அதனைத் தொடர்ந்து ‘சுவாமி! சுவாமி!” எனக் கதறியபடி ஓடலானார்.
– வீரகேசரி, 1968-12-04.
– கடல் (சிறுகதைகள்), முதற் பதிப்பு: 1972-6-27, நண்பர் வெளியீடு, யாழ்ப்பாணம்.