கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: July 10, 2024
பார்வையிட்டோர்: 1,274 
 
 

சூத்திரர்களை கால்களாகவும், நிற்கும் தொடை முதல் இடை வரை வைசியனாகவும், சத்ரியனை வீரமார்பாகவும், தலைதூக்கி முகம் கட்டும் பிராமணனை கீரிடமாகவும் கொண்டு தோற்றமளித்தது அந்த விழா மேடை. “இதில் உயர்ந்தோர், தாழ்ந்தோர், என்றோ? உயர்வில் தாழ்ந்தோர் என்றோ?, தாழ்வில் உயர்ந்தோர் என்றோ,? பாகுபாட்டுக்கு வித்திடவில்லை”…. “ஒரு வகையில் இறைவனுக்கு இணையான இவர்? …..” “சிக்கலான கணக்குகளுக்கு பயன்படுத்தப்படும் சூத்திரங்கள் போல, சிக்கலான உறவுகளுக்கு பெயர் போனவர்கள் சூத்திரர்கள்?….”, “பணத்தையும் குணத்தையும் ஒன்றாக தராசில் வைத்து, எதையும் பொரளாதார எடை மட்டுமே போடும் வைஷியர்கள்?……..”, “மக்களால் ஏற்றுகொள்ளபட்ட முதல் இறைத்தூதர்?…” “ஏற்கனவே உச்சத்தில் உள்ள அந்தணனை இன்னும் உயர்த்துவது எதற்கு?.. அந்தரத்தில் தொங்க விடவா?……….” “எதையும் இதயதுடிப்புக்கு மட்டுமே ஆட்படுத்தி உணர்ச்சிகர முடிவுகளை மட்டுமே எடுக்கும் சத்ரியர்கள்?…..” என இவற்றை உள்ளடக்கிய சொற்றொடர்களை கோவமாகவும், கேளிக்கையாகவும், உணர்ச்சி பொங்கியும்,வஞ்சபுகழாகவும் வெவ்வேறு புலவர், அறிஞர் பெருமக்கள் ஆற்றிய சொற்பொழிவுகள், மேடை பேச்சுகள் எல்லாம், எதிரே அமர்ந்திருந்த அந்த பொதுமக்களை பாதிக்கவே இல்லை. இதற்கு முன்னும் பின்னும் என்ன பேசினார்கள் எனபது அவர்களுக்கு மட்டுமே வெளிச்சம்.

மிகுதியான கூட்டமாக இல்லையென்றாலும் பகுதியான கூட்டத்தில் பல பகுதிகள் இருந்தன. மேடையில் வீற்றிருக்கும் எல்லா வர்ணத்தாருக்கும் கிட்டத்தட்ட சமனான கரவொலிகளும் கூச்சல்களும் கிடைத்ததே அவர்கள் ஒற்றுமைக்கு சாட்சி. ஆனால் மேற்கூறியவர்களை தந்திரத்தோடு தரம் பிரித்த சாணக்ய வம்ச வழியான குப்தசாரன் “என்னவாம் நம்ம ஊராங்கஞலுக்கு…? மற்றொரு விவசாயி மகன் வேலன் “நம்ம அக்னி வியாசருக்கு விருது விழாவாம்யா” சாரன் “ஓ…ஹோ… நம்ம.. அக்னி வியாசரா… அந்த அளவுக்கு போய்டீங்களா .. என்ற எள்ளி நகையாடியவனின் மனதில் பிராமணன் போற்றபடுதலை விரும்பாத அந்தணன் இருந்தான். ஏதோ திட்டம் போட்டவனாய் சாரன், “டேய் முனியாண்டி மவனே, எங்கடா உங்கப்பன்” னு கேட்கிறான். வேலன் “அவரு வயல்ல.. விவசாயம் பாத்திட்டு இருப்பாரு”. சாரன், “ஆங்.. பத்தியா.., இப்போ அந்த மேடைய பாரு”. வேலன் “ம்..னு மேடையை பார்த்து யோசிக்கிறான். சாரன், புரியுதா? வேலன் ம்ஹும் னு தலை ஆட்டுகிறான். சாரன், நாம இல்ல பாருடா. வேலன், நாமதான் இங்க இருக்கோமே… னு வெகுளிச்சிரிக்கிறான். சாரன், “அட மடையா இப்டி சொன்னா உனக்கு புரியாது, இங்க வா” னு இழுத்திட்டு போய் கீத்து சந்தில் சோம பானத்தில் கொஞ்சம் சொரணையும் நிறைய புரளியும் ஊத்தி விடுகிறான்… மீதி மேடையிலே….

உள்ளங்கால் முதல் உச்சந்தலை வரை ஒரேமாதிரி இயங்கும் குருதி போலத்தான் எங்கள் அன்பும் …னு பேசிக்கொண்டிருக்கும்போது, வேலன் போதையில் “யோவ் நிருந்துங்கய்யா உங்க சொற்ப…பொழிவ.. உளறிக்கொண்டு மேடையருகே வருகிறான். அவையில் அனைவருக்கும் அதிர்ச்சி. “யார் இவன் என் இப்டி பண்றான்” னு ஒருவருக்கொருவர் முனுமுனுத்து கொண்டனர். அதில் ஒருவர், டேய் முனியாண்டி மவனே.. ஏன்டா பிரச்சினை பண்ற? வேலன், ஆளாளுக்கு முனியாண்டி மவன் முனியாண்டி மவன்-ங்ரிங்க அப்புறம் ஏன் எங்கப்பன இதுக்கு… இங்க… கூப்பிடல?னு கூச்சல் போடுகிறான். மற்றொரு மேடையன், டேய் உங்கப்பன் என்ன அவ்ளோ பெரிய ஆளா? னு அடிக்க கை ஓங்குகிறார். இருவர், மூவர் என கூச்சலிடுகின்றனர்

அதுவரை நடப்பதை அமைதியாக பார்த்திருந்த அக்னி வியாசர் “கொஞ்சம் பொறுமையா இருங்க அவையோரே, அவர் என்ன சொல்ல வர்றார்னு கேட்போம்” என்கிறார். மேடையில் ஒருவருக்கொருவர் பார்த்துகொண்டு அமைதியாகின்றனர். அக்னி, “ம் சொல்லுங்கள் தம்பி” னு தொடர வைக்கிறார். கூட்டத்தோடு கூட்டமாக கத்திய வேலன் தனித்து பேச தயங்குகிறான், பின் ஏதோ பேச முயற்சித்து தடுமாறி பின் கனைத்தவாறு “ எதுக்கு நானு… எனக்கா., நான் பேசலன்னா … வியாசரே…அக்னி வியாசர் பெருமானே… நீ.. நீர்… நீரின்றி அமையா உலகு போல், விவசாயி இல்லா மேடை எதற்கு? அப்புறம் னு உளறிகொண்டே … வில்லை தேடும் அம்பாக அவன் தொனியில், விடையை தேடினார் வியாசர்… இத்துடன் குப்த சாரனுக்கு நன்றி கூறி னு கீழே விழுகிறான் வேலன்.

கனக்கச்சிதமாக காட்டிகொடுத்த வேலனை திட்டிகொண்டே மேடையருகே ஓடி வந்து சாரன், மன்னியுங்கள் அவையை அலக்கழித்ததற்கு என்று வேலனை எழுப்பி இழுத்துகொண்டே ..இந்த சிறுவனை… என ஏதோ செய்ய முற்படும் சாரணை பார்த்து , வியாசர் “அர்த்த சாஸ்திரம் எழுதிய அந்தண மரபினரே!, நீங்கள் ஏதும் கூற விரும்புகிறீர்களா? னு கேட்கிறார். அதற்குள் மேடையர்கள் கோரசாக, “இல்லை.. இல்லை.. வேண்டாம் வியாசரே! அதெல்லாம் தேவையில்லை” என எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். சூழ்நிலை அனைவருக்கும் புரிந்துவிட்டதை உணர்ந்த சாரன் வேலனை ஓரங்கட்டிவிட்டு அவர் எதிர்பார்த்ததுபோல் மேடை ஏறுகிறார்.

சாரன், அனைவருக்கும் வணக்கம், வேலன் உளறினாலும், அவன் சொல்ல வந்தது நியாயம்தானே,னு வியாசரை பார்க்க அவர் “சற்று நேரடியாகவே கூறுங்கள்” என்கிறார். “எதற்காக இந்த விழா” னு ஏற்பாடு செய்தவர்களை பார்த்து சாரன் கேட்கிறார். அவர்கள் கடுங்கோபத்துடன் இருந்தாலும் வியாசர் மேடையில் இருப்பதால் சற்று அமைதி காக்கின்றனர். நெருடலாக உணர்ந்தாலும், வியாசர், “அவர் அர்த்தமில்லாமல் கேட்க மாட்டார் பதில் கூறி வாருங்கள்.. என வியாசர் பணிக்கிறார். அதன்படி ஒருவர் “ நான்கு வேதங்களையும், பஞ்ச பூதங்களால் தன்னுள் இயக்கி நான்மறைவேதனாக விளங்கும் நம் அக்னி வியாசர், தான் கற்ற, வேதங்களில் சொல்லப்பட்ட அரியநற்கருத்துக்களை, வாழ்வியலை, உபதேசங்களை… அனைத்து மக்களுக்கும் எளிதில் புரியும் வகையில் எடுத்துரைக்கும் இச்சிறப்பு மிக்க அவர் வாழ்க்கையை பாராட்டி அதை அங்கீகரிக்கும் விழா, இதில் நீர் பகுதி பெறாமல் இருப்பதே தவறு, அதை மீறி எங்களை கேள்வி வேறு கேட்கிறாய், அதற்கு நீ பதில் பெறவும் காரணகர்த்தாவாக அக்னி வியாசர் இருப்பதுதான் அவர் சிறப்பு”. என பொறுமை மிகுந்த கோவத்துடன் சொல்லி முடிக்கிறார். அசட்டு சிரிப்புடன் சாரன், சிறப்பு உண்மையிலேயே சிறப்பு நான் மறுக்கவே இல்லை, ஆனால் பஞ்சபூதம், நான்மறை, முக்காலம், ஈரினமாக வாழும் ஒருவன்தான் விவசாயி. இவன் ஏட்டில் கற்றவன் அல்ல, படும்பாட்டில் கற்றவன், மேலும் அதை உணர, உணர்த்த விரும்பாத வாழ்வியல் அவன். அவனை நாம் சிறப்பிக்காமல்…னு பேசிகொண்டிருக்கும்போதே, வியாசர் ஏதோ யோசனையில் மூழ்கிறார்.

ஒருவர் குறுக்கிட்டு, “சாரனே! நீர் தேவை இல்லாமல் குழப்பம் விழைவிக்கிறீர், அதை பற்றி பேசும் மேடை அல்ல இது. சாரன், “அப்படியென்றால், விவசாயம், விவசாயி பற்றி பேச நீர் மேடை அமைத்து தருகிறீரா?. அனைவரும் மௌனம் பேசுகின்றனர். “விலை வைப்பவனுக்கு எங்கே தெரிய போகிறது? விளைவிப்பானின் துயரம்?” விவசாயி பற்றி பேச எந்த மேடையும்.., ஏன் எந்த மேதையும்கூட தயாராக இல்லை, உயிருக்கு ஆதாரமான உணவை உற்பத்தி செய்பவனை பற்றி, ஒருவன் சொல்லி ஒருவன் அறிவதென்பது உயிருள்ளவருக்கே இழுக்கு. நாம் பல பிரிவினைகளை சந்தித்தாலும் உணவால் ஒன்றே. நான் அதிகம் பேச விரும்பவில்லை, மூத்தகுடி விவசாயியான, முனியாண்டி விவசாய பிரதிநிதி. ஆயிரம் கூறினாலும் அக்னி வியாசரே நீர்! ஏட்டு சுரக்காய், முனியாண்டி நாட்டு சுரக்காய்… நன்றி…. னு கூறிவிட்டு கிளம்புகிறார். அவையை அதிர்ச்சி சூழ்ந்ததது.

மௌனம் கலைத்து, சாரன் அந்த இடத்தை விட்டு மறையும் முன் உடனடியாக எழுந்து வியாசர், “இந்த விருதை நான் மனபூர்வமாக பெற்று கொள்கிறேன், இந்த மேடையில் வீற்றிக்கும் அனைத்து வர்ணத்தாரையும் கௌரவிக்க, ஆனால் இந்த விருதை கௌரவிக்கவேண்டுமானால், அது விவசாயி முனியாண்டியை அடைந்தால்தான் முடியும். மேலும் அதற்கு நாம்தான் அவரை தேடி சென்று அவர் வேலை செய்யும் வயலிலேயே விருதை வழங்கினால்தான் அது திருப்திகரமாக இருக்கும்.” என வியாசர் கூறியதை புரிந்துகொண்ட சிலர் அவருடன் பயணித்து, வயல்காட்டில் சேற்றில் இறங்கி முனியாண்டிக்கு விருது வழங்கினார்கள். அதை வாங்கி வரப்பில் வைத்துவிட்டு, “இத கொடுத்ததுக்கு நன்றி, ஆனால் விருதை கொடுத்தற்கு, விதையை கொடுத்திருந்தால் நாமும் வளர்ந்திருப்போம்” னு அவர் முனுமுனுத்தபடி தனது வேலையை தொடர்கிறார்..

“நான், வைஷ்யானோ, சூத்திரனோ, பிராமணனோ, சத்ரியனோ ஏன் சாணக்யனோ கூட அல்ல, குறைந்தபட்சம் இவர்களின் வரிசைகளையாவது மாற்ற, வர்ணங்கள் அற்ற வண்ணங்கள் பூசிக்கொள்ள முயலும் சாதாரண கலைஞன் மற்றும் விவசாயம் தெரியாத விவசாயி மகன்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *