வர்க்கம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: August 2, 2026
பார்வையிட்டோர்: 104 
வாசிப்பு நேரம்: 16 நிமிடங்கள்

(1992ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

வாசுதேவன், பூங்காவுக்குள் நுழைந்தவுடனேயே, அவர் பார்வையில், காலியாக இருந்த பெஞ்சுதான் முதலில் பட்டது. காலி பெஞ்சைப் பார்க்கையில் தான் மனசு எவ்ளவு அற்பத்தனமாக சந்தோஷம் கொள்கிறது? எதற்குச் சந்தோஷப்படுவது, எதற்குத் துக்கப்படுவது என்று தெரிந்து கொள்ளாத விவஸ்தை கெட்ட மனசு. பஸ் ரெயில்களில் ஜன்னல் ஓர இருக்கை, சினிமாவில் அடுத்தவன் கை உரசாத ஓரநாற்காலி, ஒட்டலுக்குப் போனால் கிழிசல் இல்லாத நுனி இலை போன்ற அற்பங்களுக்கு அலை பாய்க்கிறது மனசு. 

ராஜ சிம்மாசனம் போல நன்கு சாய்ந்து சௌகர்யமாக அமர்ந்துகொள்ள ஏதுவாக இருந்தது அந்த பெஞ்சு. சிமெண்டால் ஆனது. நிழலில் இருந்ததால், குளிர்ச்சி வேறு பிரும்மானந்தமாக இருந்தது. ‘கிருஷ்ணா… முகுந்தா’ என்று முனகியபடி சம்மணம் போட்டு அமர்ந்து கொண்டார். பின்னால், அவருக்குக் குடை பிடிப்பது போல மஞ்சள் கொன்றை மரம் கவிந்து கொண்டிந்தது. காற்று, ஐஸ்கிரீம் சாப்பிட்ட குழந்தை முத்தம் கொடுத்தது போல சில்லென்றிருந்தது. தெரு, இரண்டு சாரியிலும் கொன்றை மரங்களாக வளர்ந்து தெவில் வெயிலே விழாமல் அடித்துக் கொண்டிருந்தது. 

நிழலும், காற்றும் வாசுதேவனின் பிரக்ஞையை மழுங்கடித்தாற் போல் இருந்தது. இதைத்தான் ‘அஜம்’ என்றார்கள் போலும். ஆட்டைப் போன்ற அசமந்தத் தனம். ஆடு, என்ன அப்படி அசமந்தமாகவா இருக்கிறது. மனுஷ்யர்கள் மட்டும் அப்படி என்ன புத்திமான்கள்? தூரத்தில் தெரு எல்லையில், கவர்னர் மாளிகைக்கு எதிராகப் பதினோரு மணி வெயில் பளீரிட்டுக் கொண்டிருந்தது. அவர் பார்த்துக் கொண்டிருக்கும் போதே, அந்த வெள்ளை வெயில் சுருள் காகிதம் போல் திரண்டது. சிந்திக் கிடக்கும் கறுப்பு மை போன்றிருந்த தார் ரோட்டை அது ஒற்றி எடுப்பது போல அவருக்குப்பட்டது. வெயிலையே உற்றுப் பார்த்துக் கொண்டி ருந்தமையால் அவர் கண்கள் மயங்கின. காலையில் சாப்பிட்ட மோர் சாதம் காரணமாகவோ அவரது கண்களின் இமைகள் கனத்து உறக்கத்தின் முதல் படியை அவர் தொட்டு, இரண்டாம் படியைத் தாவிக் கொண்டிருந்த அற்புத கணத்தில் அவர் உறக்கம் கலைந்தது; கலைக்கப்பட்டது. 

மனுஷர்களைத் தேடி வந்து துன்பம் செய்யவென்றே சில பிரகிருதிகள் இருக்கத்தானே செய்கிறார்கள். வாசுதேவன் எதிரே கைத்தடியை ‘மண்ணில் ஊன்றிக் கொண்டு அதன் பலத்தால் அதன் மேல் சரிந்தபடி, கண்ணாடி வழியே அவனை பூதக் கண்களால் உற்றுப் பார்த்தபடி ராமாச்சார் நின்று கொண்டிருந்தார். சுக்கை வெயிலில் போட்டு வதக்கிய தேகம். வம்புக்கு அலைகிற துருதுருத்த வெற்றிலை வாய். முண்டகம் செய்த உச்சி மண்டையில் நாலைந்து மயிர் குடுமியாகப் பறந்து கொண்டிருந்தது. மஞ்சள் காரிகத் துண்டால் மார்பை மறைத்திருந்தார். அவரது கரிய உடம்பின் நிறத்திலும் கரியதாய் இருந்தது அவர் அணிந்திருந்த பூணூல். 

“என்னடா வாசுதேவா?… எப்படி இருக்கே?” என்று வயதுக்குச் சற்றும் பொருந்தாத இடிக்குரலில் கேட்டார், ராமாச்சார். 

இந்தச் சனியன் இங்கே எப்படி என்று நினைத்தபடி, மேல் மரியாதை நிமித்தம் சம்மணம் இட்டிருந்த காலைத் தொங்கவிட்ட படி, “சும்மாத்தான், மாமா… சித்தே சிரமபரிகாரம் பண்ணிக் கலாம்னு…” என்றார் வாசுதேவன். 

“இன்னும் ஆலையைத் திறக்கலையாடா? சோத்துக்கு என்ன பண்றேள். எல்லாரும்?” 

“இன்னும் திறக்கலை, மாமா. சாப்பாட்டுக்கு சிரமம்தான். அங்கையும், இங்கையும் புரட்டி, அண்டாவையும் குண்டானையும் அடகு வச்சு, ஒப்பேத்திண்டிருக்கேன்.” 

ராமாச்சார் தலையை இடது கையால் தடவிக் கொண்டார். அவரது மோதிர விரலிலும், சுண்டு விரலிலும் போட்டிருந்த சிவப்பு வைர மோதிரங்கள், வாசுதேவனுக்குக் கண்ணில் தென்பட திடுமென அவருக்கு எரிச்சல் மூண்டது. 

“என்ன பிழைப்போ போ. பிராமணனா பொறந்துட்டு ஆலை வேலையும் கூலி வேலையும் செஞ்சுண்டு வயித்தைக் கழுவிக் கனும்னு உன் தலையிலே எழுத்து. அதுவும் இல்லாமே, லங்கணம் போட்டிண்டு இருக்கியோன்னோ…” 

வாசுதேவனுக்கு சுருசுருவென்று எரிச்சல் ஏறியது. அது குரலில் தென் படாதபடிக்குச் சகஜமாகச் சொன்னார். 

“பெரியவா, நீங்களே தர்ப்பையைத் தூக்கி எறிஞ்சுட்டு, கறுப்புக் கோட்டைப் போட்டுண்டு, வக்கீல்னு நீட்டி முழக்கிண்டு கோர்ட் கோர்ட்டா ஏறி, வியாஜ்ஜியம் பேசறேன்னு பொய்யைச் சொல்லிண்டு, கள்ளன், திருடன், கேப்மாரிப் பயல்களோட காசை வாங்கிச் சீவிச்சுண்டுதானே மாமா பெரிய மனுஷாள் ஆனேள்… அப்புறம் நான் மட்டும் ஏன் ஆலையிலேயே பஞ்சு புடுங்கற உத்தியோகம் பண்ணப்படாது? இவ்வளவு பேசறேளே… உங்க பிள்ளை என்ன பண்றார்? ‘பாட்டா’விலே, வர்றவன் போறவன் காலைப் புடிச்சு செருப்பை மாட்டிண்டுதானே ஜீவனம் பண்றார். பேண்ட்டும் சர்ட்டும் போட்டுண்டா அது சக்கிலியன் வேலை இல்லேன்னு ஆயிடுமா? இதே சக்கிலியனை நாமதானே நாலு அடி தள்ளி நில்லுடான்னு சொன்னோம். இப்போ நாலு காசு கிடைக்குதுன்னு தெரிஞ்சப்போ, நாமதானே செருப்பை மாட்டி விடப் போறோம். பிராமணன் என்ன பிராமணன். நமக்கு என்ன கொம்பா முளைச்சிருக்கு?’ 

ராமாச்சார், வாசுதேவனை உற்றுப் பார்த்தார். தன் கைத்தடியை இரு கைகளாலும் இறுக்கிப் பிடித்துக் கொண்டார். சமாதானம் பேசுகிறார்போல அவர் சொன்னார். “ஏதோ சொல்லணும்னு தோனித்து, சொன்னேன். சொந்தக்காரா, உன் பொண் ஜாதி அலமேலு என்னோட ஒண்ணுவிட்ட தங்கை பொண்ணு அந்த அபிமானத்துல கேட்டேன்…” 

வாசுதேவனுக்குப் பேச்சை மாற்ற வேண்டும் என்று தோன்றியது. 

“இந்த வேகாத வெய்யல்லே, இங்க எங்க மாமா வந்தேள்?” 

“அதோ அந்த மூல பெஞ்ச்சுல தான் என்ன மாதிரி ரிடையர்டு கிழங்கள் உக்காந்துண்டு வம்பளக்கிறது. நேரம் போகணுமோல் லியோ. வயசாயிடுச்சுன்னாலே சனியன், தூக்கம் வரமாட்டேங்ற கறது. ஒரே தூக்கம்தான் வரணும் இனி பெருமாள் மனசு வக்க மாட்டேங்கறாரே, வரட்டா… அலலுே எப்படி இருக்கா?” 

“நன்னா இருக்கா மாமா…” 

“குழந்தைகளை கூட்டிண்டு ஒரு நா ஆத்துப் பக்கமா வரப்படாதா?’ 

“வர்றேன் மாமா.” 

ராமாச்சார் தரையைக் காலால் தேய்த்தபடி நடந்து போனார். வாசுதேவனுக்கு மனசுக்கு நிம்மதியாய் இருந்தது. கிழம். இனி, தன் பேச்சுக்கு வராது என்ற நினைப்பே அவருக்குச் சந்தோஷமாக இருந்தது. 

வாசுதேவனின் மனம் சாந்தப்பட்டிருந்தது. நிதானமாக அவரால் யோசிக்க முடிந்தது. ராமாச்சார் சொன்னது பொய் யில்லையே. அவர் உண்மைதான் சொன்னார். வாசுதேவன் வேலை செய்து கொண்டிருந்த பஞ்சாலையை அடைத்துத் தான் போட்டி ருந்தார்கள். போனஸ் தகராறு என்று விவகாரம் ஆரம்பித்தது. தொழிலாளர்கள் உள்ளிருப்பு வேலை நிறுத்தம் செய்தார்கள். அப்புறம் உண்ணாவிரதம் இருந்தார்கள். ஆலை சொந்தக்காரன் மில்லை அடைத்தான். தொழிலாளர் கோர்ட்டுக்கு விவகாரம் சென்றது. கோர்ட் சொன்னத் தீர்ப்பை முதலாளி ஏற்கவில்லை. அவன் இன்னும் பெரிய கோட்டுக்குச் சென்றான். அரசாங்கம் தலையிட்டது. அரசு தீர்ப்பைத் தொழிற்சங்கங்கள் ஏற்க மறுத்தன. பேச்சுவார்த்தை நடந்து கொண்டே இருந்தது. 

பேச்சு… பேச்சு…இடையறாத பேச்சு நடந்து கொண்டேயிருந்தது. ஆள் ஆளுக்குப் பேசிக் கொண்டேயிருந்தார்கள். வாசுதேவன் உட்கார்ந்திருக்கும் இடத்திலிருந்து கவர்னர் மாளிகை தெரிந்தது. அம்பாசிடர் கார்களும், மாருதி வேன்களும் உள்ளே போயும். திரும்பியவாறும் இருந்தன. அதிகாரிகள் என்கிற மேலோர்கள் கவர்னரிடம் பேசவும். பேசுவதைக் கேட்கவும்போய் வந்து கொண்டி ருந்தனர். திடுமென ராமாச்சாரியிடம் இது பற்றிக் கேட்க வேண்டும் என்று அவருக்குத் தோன்றியது. ‘பிராமணனை உள்ளிட்ட எல்லா வர்ணத்தவரையும் அடக்கிய சுமார் மூவாயிரம் குடும்பங்களை வாழ வைப்பதற்காகப் பேசிக்கொண்டிருக்கிற இந்த அதிகாரிகள் என்ன ஜாதி மாமா? இவர்கள் பிராமணர்களை விட உசத்தி என்று வைத்துக் கொள்வீரா என்று கேட்க வேண்டும். ராமாச்சாரின் முகம் அஷ்டகோணலாவதைக் கற்பனையாகவே கண்டு சந்தோஷம் அடைந்தார் வாசுதேவன். 

கவர்னர் மாளிகையிலிருந்து சிவப்பு விளக்கு இருக்கும் கார் ஒன்று வெளிப்பட்டது. பெரிய அதிகாரியாக இருக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டார். இந்த ஊரில் சோட்டா அதிகாரிகள் கூட சிவப்பு விளக்கு உள்ள காரைப் பயன்படுத்துகிறான்கள். உள்ளே இருப்பவன் எவனாக இருந்தால் என்ன? ஆலைத் தொழிலா ளர்களைப் பற்றித்தான் பேசிவிட்டு வருவான்களாக இருக்கும். ஊரில் இப்போது பெரிய பிரச்சினை இதுவாகத்தானே, இருந்தது. 

வாசுதேவன் மனம் சாம்பியது. 

கஷ்டம், இன்ன ரூபத்தில்தான் வரும் என்று சொல்ல முடி கிறதா, என்ன? தட்டுத் தடுமாறிக் கொண்டு நடந்து கொண்டிருந்த குடும்பம் அது. அவர், அவர் மனைவி அலமேலு, பெரியவனும் +2 படிப்பவனும் ஆன நாணா. சின்னவள் எட்டாவது படித்துக் கொண்டிருக்கும் ஹரிணி எண்பது வயது கடந்த கண் பார்வை சுத்தமாகப் போய் படுத்த படுக்கையாகக் கிடக்கும் அவர் அம்மா என்று அவருக்குக் குடும்பம் இருந்தது. பிடிப்பு எல்லாம் போக அவர் கையில் மாசம் ஆயிரத்து அறுநூறு வந்து விழுந்து கொண்டி ருந்தது. கடந்த பல மாசங்களாக அந்தச் சம்பள வரவு நின்றுதான் போயிருந்தது. தொடக்கத்தில், சினேகிதர்கள், அப்புறம் தெரிந்தவர் கள் எல்லோரிடமும் அவர்கள் இரக்கத்தையும், பரிதாபத்தையும் பயன்படுத்திக் கொண்டு கடன் வாங்கினார். ‘இதோ, அடுத்த மாதம் ஆலை திறக்கப் போகிறார்கள்’ என்று அவர்களிடம் அவர் சொன் னார். அவர்களும் நம்பினார்கள். அப்புறம் அந்தப் பொய்யையே திரும்பத் திரும்பச் சொல்வதில் அவருக்கே சலிப்புண்டாகி விட்டது. நண்பர்களின் மனைவிமார்கள், புருஷர்கள் வீட்டுக்குள் இருக்கும் போதே அவரிடம் இல்லை என்றார்கள். சிலர், வசமாகச் சிக்கிக் கொள்ள நேர்ந்த போதோ, நாலாம் தர ‘தண்ணி காபி’ கொடுத்து அவரை உபசரித்தார்கள். அலமேலு வீடு அப்படி ஒன்றும் ஐவேஜி உள்ளதல்ல. ஏதோ அவர்களால் முடிந்த மட்டுக்கு அவர்கள் கொடுத்து உதவினார்கள். ஒரு கட்டத்துக்குப் பிறகு அதுவும் நின்றது. இது போன்ற சந்தர்ப்பத்துக்கென்றே பெண்கள் நகை அணிந்து கொண்டிருக்கிறார்கள். அலமேலுவிடம் அப்படி ஒன்றம் பெரிதாக நகை இருந்ததில்லை. அரைப் பவுனில் கம்மல், கால் பவுனில் மூக்குத்தி, தாலியில் ஒட்டிக் கொண்டிருந்த அரைக்கால் பவுன் எல்லாம் எத்தனை நாள் தாக்குப் பிடிக்கும். 

காலட்சேபம், ரொம்ப ஆச்சர்யமான விஷயமாக இருந்தது, வரவர. 

வாசுதேவனைப் பற்றி மட்டுமல்ல. அவர் தோப்பனார் வரத தேசிகனைப் பற்றிக் கூட ராமச்சாருக்கு மரியாதை இல்லாமல் தான் இருந்தது. இத்தனைக்கும் வரததேசிகன், சமஸ்கிருதத்திலும், ஆங்கிலத்தி லும் பெரும் புலமை பெற்றவராக இருந்தார். இப்போது பார்சல் சர்வீசில் பெரும் புகழ் பெற்றிருக்கும் கம்பெனியின் தொடக்கக் கால ஊழியர்களில் அவரும் ஒருவர். அக்கம்பெனியில் அவர் சேரும் போது அவர் வயது பதினாறு. நெற்றி முழுக்க அடைத்துக் கொண்டு பாதம் சாத்திக் கொண்டு தம்முன் நின்ற இளைஞன் வரத்தேசிக னைக் கண்ட முதலாளி சுந்தரம் ஐயங்காருக்கு ஆட்சேபம் எதுவும் இருக்க முடியாதுதான். கம்பெனியில் சேர்த்துக் கொண்டார். வரததேசிகனுக்கு அக்கம்பெனி ஜீவனோபாயம்தான். ஆத்ம லாபத் துக்கு அவர் சாஸ்திர ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தார். நாலாயிரத் தைப் பிழையறச் சிறப்பாகப் பதிப்பித்தார். தேசிகனுக்கு ஆண்டா ளில் அபாரமான பிரீதி இருந்தது. ஆண்டாளை இங்கிலீசிலும் ஆக்கினார். சுந்தரம் ஐயங்காரே, தேசிகனை ஒரு நாள் அழைத்து “தேசிகன், உன்னை என் கம்பெனியில் வச்சுக்கறது எனக்குத்தான் பெருமை, ரொம்ப உசத்தியான காரியம் பண்ணிண்டு இருக்கே. லோக ஷேமார்த்தம், இப்படி சில பேர் இருந்தாத்தான் மழை பெய்யும். அந்த வேலைகளுக்குக் குந்தகம் இல்லாமல், ஆபீஸ் வரதானா வரலாம். இல்லேன்னாலும் ஒண்ணும் பாதகமில்லை. சம்பளம் மாசம் முதல் தேதி ஆத்துக்கு வந்துடும். உன் கைங்கர்யத் துக்குப் பணம் எவ்வளவு வேண்டுமானாலும் கேஷியரிடம் வாங்கிக்கோ..” என்றார். முதலாளியின் இந்த உதாரத்தை ஒரு நாளும் தேசிகன் பயன்படுத்திக் கொள்ளவில்லை விடுமுறை நாட்கள் தவிர, மற்ற நாட்களில் முதல் நபராக ஆபீசுக்கு வந்து கடைசி நபராக வீடு திரும்பினார், அவர். 

தேசிகனுக்கு பகவான் ஒரு பிள்ளையும், நாலு பெண்களையும் தந்தார். பெண்களை நல்ல இடமாகப் பார்த்து கல்யாணம் பண்ணி வைத்தார். பிள்ளை வாசுதேவனைக் குறித்துத்தான் அவருக்கு நிரம்ப வியாகூலம். அவனுக்கு வேதத்திலோ. பள்ளிப் படிப்பிலோ ஆர்வம் இல்லாமல் இருந்தது. கடற்கரைச் சறுக்கு மரத்தில் விளையாடி, பீரங்கிப் பள்ளத்தில் குதித்துத் தாண்டி, தென்னந் தோப்புக்களில் சுற்றித் திரிந்து வீணே காலத்தைக்கழித்தான். பத்தாம் வகுப்பு வரும்போது பிள்ளைக்கு வயது இருபதுக்கும் மேலே ஆகிவிட்டி ருந்தது, குரல் கனத்து கருகருவென்று மீசைக் கருத்து பெரிய ஆண் பிள்ளையாக வேஷ்டி கட்டிக்கொண்டு வாட்ட சாட்டமாக இருந்தான் அவன். அவனை என்ன பண்ணுவது என்று யோசிக்கத் தொடங்கினார் அவர். ஒருநாள் அவனைக் கூப்பிட்டுச் சொன்னார், “வாசுதேவா எதையாவது படித்து கற்று, வாழ்க்கைக்கான ஜீவனோ பாயத்தைத் தேடிக்கொள்ள வேணுமேடா, குழந்தை எனக்குப் பிறகு நீ என்ன பண்ணுவாய்., அதுவே எனக்குப் பெரிய விசாரமாச்சு. வேதம் படிக்க முடியலைன்னா பரவாயில்லை ஆண்டாளையாவது வரப்பண்ணு.” 

அப்பா அடித்துச் சொல்லியிருந்தால், வாசுதேவன் ஒரு கால், ஆண்டாளை வாசுதேவன் வெறுத்து விட்டிருப்பார். அப்பாவின் கனிவு அவரைத் தொட்டது. பூஜை அறையும் அப்பாவின் படிப் பறையுமாக இருந்த அறை அலமாரியிலிருந்து, அப்பா ஆண்டாள் பாசுரங்கள் அடங்கின புத்தகத்தை எடுத்து வாசுதேவனிடம் கொடுத் தார். “இது சாதாரண புத்தகம் இல்லை. பொக்கிஷம் ஆண்டாளைப் படித்தவர்க்கு வேறு எதுவும் வேண்டாமாயிடும் குழந்தை.” 

அப்பா, அதை அவர் கையில் அளித்து விட்டு, ஒரு கணம் கண்மூடி நின்றுவிட்டுச் சொன்னார்: 

“தொழுது முப்போதும் உன்னடி வணங்கித்
தூமலர் தூய்த் தொழுதேத்துகின்றேன்.
பழுதின்றிப் பார்க்கடல் வண்ணனுக்கே.
பணிசெய்து வாழப் பெறாவிடில் நான்
அழுதழுது அலமந்து அம்மா வழங்க. 
ஆற்றவும் அது உனக்கு உறைக்கும் கண்டாய்…”

புரிந்தும் புரியாமலும் அந்தச் சிறு புத்தகத்தை வாசுதேவன் அப்பாவிடம் இருந்து பெற்றுக் கொண்டார். அவ்வப்போது வாசிக்கவும் தொடங்கினார். இந்தச் சமயத்தில்தான் பீட்டர் அல்ஃ போன்ஸ் அப்பாவிடம் மாணவராக வந்து சேர்ந்தார். கிறிஸ்தவரான அவருக்கு, நாலாயிரத்தில் பெரும்பகுதி நெட்டுருவாகியிருந்தது. வைஷ்ணவம் பற்றிய ஆராய்ச்சியில் அவர் ஈடுபட்டிருப்பதாகவும், அவரைப் பற்றி உலகில் பல பாகத்தவர்களும் அறிந்திருந்தார்கள் என்று சாப்பிடும் வேளையில் அப்பா அம்மாவிடம் சொல்லிக் கொண்டிருந்ததை வாசுதேவன் கேட்டான். அவனுக்கு ஆச்சர்யமாக இருந்தது. அந்த மனிதருக்கு என்னத்துக்கு இந்த வீண் வேலை என்றுதான் நினைக்கத் தோன்றியது. ஞாயிற்றுக்கிழமை காலை வேலைகளில் சுருக்கமாக உடுத்திக் கொண்டு சர்ச்சுக்கு ஆனந்த மாகப் போகக் கடமைப்பட்டவருக்கு, மண்டையை உடைக்கும் இந்தப் பாட்டுக்கள் எதற்கு என்றுகூட பட்டது. ஆனால், பீட்டர் அப்படியானவராகத் தோன்றவில்லை. உண்மையான சிரத்தையோடு அவர் வந்து போய்க் கொண்டிருந்தார். அப்பாவின் படிப்பறையைக் கடந்து போக நேரும் போதெல்லாம், அவர்கள் சம்பாஷனை வாசுதேவனுக்குக் கேட்கும். உற்றார்களை செய்வேனும் யானே என்னும் உற்றார்களை அழிப்பேனும் யானே எனும் பாடலையோ அல்லது ஆறாயிரப் படியையோ விவாதித்துக் கொண்டிருப்பார்கள். அதுகூடப் பிரச்சினை அல்ல: பிரச்சினை எப்போது எழுந்ததெனில் பீட்டர் அல்போன்ஸ் சில சமயங்களில் வீட்டில் சாப்பிட நேர்ந்த போதுதான். காலை பதினோரு மணிக்கு வரும் பீட்டர், சமயங்களில் மதியம் பலகாரம் அப்பாவுடன் சாப்பிட ஆரம்பித்தார். “சுவாமி… நீங்கள் டிபனை முடியுங்கள். நான் காலாற நடந்து போய்க் கோமளா விலாசில் காபியோ, பலகாரமோ சாப்பிட்டுட்டு வருகிறேன்” என்று பீட்டர் நாகரிகமாகச் சொன்னாலும், அப்பா அதை அனுமதிக்கவில்லை. சாப்பிடுகிற வேளையில் இரண்டு கவளம் இருந்தால், ஒன்றை நானும் பகிர்ந்து கொள்வோம்” என்று அப்பா சொல்லிவிட்டார். இரவுகளில் இது நேர்ந்தது. இரண்டு ரசிகமணிகள் உட்கார்ந்து பேசத் தொடங்கினால் நேரமும் நாளும். ஏது? நடுக்கூடத்தில் இலை போட்டு அவர்கள் இருவரையும் அமரவைத்து அம்மா பரிமாறினாள். சாப்பிடும் போது அவர்கள் ஆழ்வார்கள் விஷயமாகத்தான் பேசினார்கள் என்பதை வாசுதேவன் கேட்க நேர்ந்தது. ஒருமுறை பீட்டர் அல்ஃபோன்ஸ் அப்பாவிடம் சொல்லிக் கொண்டிருந்தார். 

“சுவாமி… இங்கிலீஷிலும்’ ஃபிரஞ்சிலும் நிறைய கவிஞர்களை, உலகம் பூராவும் இருந்து எழுதினவர்களை நான் படித்திருக்கிறேன். மகாகவிகள் தாம் அவர்கள் என்றாலும், நம் ஆண்டாள் மாதிரி, அந்தக் காலத்துப் பண்பாட்டை உத்தேசித்தால் அவளுக்குச் சமானமாக நிற்பவர்களை நான் இன்னும் காணவில்லை.” 

அப்பா அதைக் கேட்டு, வாஸ்தவம்தான், அல்போன்சு சத்தியத்தை, அவள் தனக்கு நிஜமாக இருந்து எழுதின பாசுரமா யிற்றே அதுகள் அதனால்தான், ரெண்டு கலைக்காரர்களுக்கும் அவள் பொதுவாக இருக்கிறாள்” என்றார். ஒருமுறை, அருகாக அமர்ந்து அப்பாவும், அல்ஃபோன்சும் சாப்பிட்டுக் கொண்டிருக் கையில், இதே ராமாச்சார், கையில் விசிறியோடு உள்ளே நுழைந்தார். “அடி அலமேலு… என்ன வெக்கை போ… ஐப்பசி மாசத்திலும் இப்படியிருக்குமோ” என்றவாறு வந்தவர். அவர்கள் இருவரும் அருகருகாக அமர்ந்து உண்பதைப் பார்த்ததும் மின் கம்பியைத் தொட்டது போல அதிர்ச்சியடைந்தார். சடக்கென்று திரும்பி, பேயை நிஜத்தில் பார்த்தவரைப் போல, இரண்டு தாவாகத் தாவித் தெருவை அடைந்தார். கொதி ஏறிய நீர் தளபுளக்காமல் இருக்குமா? தெருத் தெருவாகவும், வீடு வீடாகவும் சென்று பேசத் தொடங்கினார், ராமாச்சார். 

“என்ன அநியாயம் பாருங்கோ… கலிகாலம்னா… மாடு திங்கற கிறிஸ்துவனைப் பக்கத்தில் வச்சுண்டு. அவனுக்குச் சமதையா உக்காந்துண்டு சாப்பிடறாரே இந்த தேசிகன். என் இந்த இரு கண்ணாலேயே பார்த்தேனே சுவாமிகளே… இந்த பிராமணன் அந்த அனாசாரம் பிடிச்சவனுக்கு ஊட்டி விடறதும், அவன் ஆம்படையா அசடாட்டம் ஈன்னு இளிச்சுண்டு விழுந்து விழுந்து உபசாரம் பண்ணறதும், கண்ணாறாவி போங்கோ… இது என்ன அக்ரகாரமா, இல்லே பறத்தெருவா? மழை பெய்யல்லே, மழை பெய்யல்லேன்னு ராசாங்கத்தார் தலையாலே முட்டிக்கிறாளே, மழை பெய்யுமாங் காணும்… மசுருதான் பெய்யும்’ அலமந்து போனார் ராமாச்சார். மாமிகள் மூலமாக அம்மாவுக்குச் சேதி வந்து, அம்மா அப்பாவிடம் இது பற்றி பிரஸ்தாபித்தார். “அப்படியா” என்று விட்டு அப்பா சொன்னார். 

“அல்போன்ஸ் மாடு திங்கறவராமா? ராமாச்சார் மாதிரி மனுஷர்கள், மனுஷர்களையே அடித்துத் தின்கிறார்களே. இதுக்கு அது உசத்தி, அல்ஃபோன்ஸ் மாதிரி புத்திமான் ஈனசாதிக்காரன்னா, இங்கிருக்கிற பிராமணர்கள்லாம் சண்டாளர்கள் தாம் வேறென்ன?” 


சம்மணம் போட்ட கால் மரத்தாற், போலிருக்கவே, வாசு தேவன் எழுந்து, சித்தே காலாற நடக்கலாம் என்று நடக்கத் தொடங் கினார். இரு பக்கங்களிலும் இருந்த மஞ்சள் கொன்றை மரங்களினால் மறைக்கப்பட்ட வெயில், பணக்கார உறவுக்காரன் வீட்டுக்குள் நுழைகிற ஏழையைப் போல, தயங்கித் தயங்கியே வீதிக்கு வருவதாய் இருந்தது’ மழைக்காலத்து மாலை வானம் மாதிரி, நிழல் சுருண்டு, சோம்பேறியைப் போல் திகைத்து விழித்துக்கொண்டு. வெயிலில் உறைந்த வெற்றிலை எச்சல் மாதிரி, கட்டி தட்டிப் போய், முகப்பருக் கன்னம் மாதிரி சமானம் இழந்து, எருமை மாட்டுக்குச் சொறி வந்தாற்போல, கருமையே கருமைக்குள் வெளுத்து, புகை ஏறிய வெள்ளைச் சுவர் மாதிரி விகாரப்பட்டுக் கிடந்தது. 

வாசுதேவன் ஆயி மண்டபத்தைக் கடந்து, வணிகர் அவைப் பக்கமாக நடக்கத் தொடங்கினார். இரு பக்கமும் இருந்த சிமெண்ட் பெஞ்சுகளும் நிரம்பி வழிந்தன. சைக்கிளில் வந்தவர்களும், பிற வாகனங்களில் வந்தவர்களும், கால் நடையாக வந்தவர்களும், அழுக்கு வேஷ்டிகள், காஷாய வேஷ்டிகள், பையில் காசில்லாத பேண்ட்டுகள், சில்லறைகள் குலுங்குகிற சர்ட்டுகள், வம்பளக்க என்றே வந்த வாய்கள், வம்புகளிலிருந்து தப்பிக்க வந்த வாய்கள் என்று விதவிதமான மனிதர்கள் அங்குக் குழுமி இருந்தார்கள். அன்று ஞாயிற்றுக்கிழமையும் இல்லை திங்கள் கிழமை. சனி, ஞாயிறு என்று இரண்டு விடுமுறை நாட்களுக்குப் பிறகு வந்த வேலை நாள். மதியம் பனிரெண்டு மணி ஆனாலும் பூங்கா நிறைந்து வழிகிறது. சிவப்பு விளக்கு எரியும் காரில் உயர் அலுவலர்கள், கோப்புகளோடு கவர்னர் மாளிகைக்குப் போய்க் கொண்டும் வந்து கொண்டும் இருக்கிறார்கள். பேச்சு… பேச்சு… உருப்படியற்ற விருதாப் பேச்சு… மக்கள் பணத்தில் ஹாயாக குளிர்சாதன அறைக்குள் அமர்ந்து கொண்டு வெட்டிப் பேச்சு வெட்டிப் பேச்சையே எழுத்தில் பதித்து வைத்த வெட்டிக் கோப்புகள். 

வியர்த்தம். 

வணிகர் அவைக்கு முன்பாக சிலை நாட்டப்பட்டிருந்தது. நடந்துகொண்டிருந்த வாசுதேவன் ஒரு கணம் நிற்கிறார். இது என்ன புது சிலை என்பதாகக் கவனித்தார். தலைவரின் சிலையாக இருக் குமோ என்று ஒரு கணம் தடுமாறினார். இல்லை. அது தலைவரின் சிலை அல்ல. சாமி விக்ரகம் மாதிரி இந்தது. எப்போது வந்தது என்பதாக அதன் அருகில் சென்றார். அது சில வருஷங்களாகவே அங்குதான் இருந்தது. வாகூர், அதனை ஒட்டிய பிரதேசங்களில், வீடு கட்டவோ, கிணறு வெட்டவோ பள்ளம் தோண்டுகையில் நியை சிலைகள் கிடைத்தன. ஒரு காலத்தில் கோயிலுக்குள் வழி பாட்டுக்குரியவையாக இருந்தன சிலைகள், கோயில் மக்களாலோ, பிறசமயத்தாராலோ அழிகையில் மண்ணுக்குள் புதைகின்றன. அப்படித் தோண்டிக் கிடைத்தவற்றில். சில சிலைகளைக் காட்சிப் பொருள்களாகப் பூங்காவுக்குள் வைத்திருந்தார்கள். 

ஆச்சரியத்தால் ஈர்க்கப்பட்டவராகச் சிலையின் அருகில் சென்றார் வாசுதேவன். விஷ்ணுவின் சிலை அது. நின்ற திருக் கோலம். அயனும் சிவனும் தேடிக் கண்டடையாத பாதம், என்பத னைக் குறிக்க விக்ரகத்தின் காலடியில் அன்னமும், நெருப்பும் சிறு புள்ளிகளாகச் சித்திரிக்கப்பட்டிருந்தன. முத்தும், மணியும், வயிரமும், பொன்னும் சேர்த்த மோதிரங்களை அணிந்த, அவைகளையும் மிஞ்சும் ஒளிபடைத்த அழகிய நகங்கள் வெளித் தோன்றும் பாதங்கள்; வெள்ளித் தண்டைகள் அணிந்திருந்த கணைக்கால்கள்; முழந்தாளிட்டு நெய்யிலும், வெண்ணெய்யிலும் அலைந்ததால், காய்ப்பேறிய முழந்தாள்; பேய்ச்சி முலை சுவைத்துக் கொன்று, இரணியன் மார்பைக் கீண்ட தொடை; உடுக்கை நாணும் இடை; ஓடும் நதியே போலப் படுத்துக் கிடந்த சமன் வயிறும், அதன் மத்தியின் உந்திச் சுழி, நதியின் நீர்ச்சுழல் போன்று இருக்க, பெரிய அளவுப் புத்தகத்தின் விரித்த இரு பக்கங்களைப் போல அகல மார்பும், பலமும் வீரமும் திரண்டாற் போல உருவெடுத்த இரு கோள்களும், தும்பிக்கைகள் போலும் தாழ்ந்த தூக்கிய சங்கமும் சக்கரமும் ஏந்திய கைகளும், மலர்ந்த தாமரையும் அல்லியும் விரல் முளைத்து மடங்கியது போன்ற உள்ளங்கைகளும் புறங்கைகளும் அண்ட கோளங்களை அடக்கி விழுங்கிய கண்டமும் கற்பூரம் நாறுமோ கமலப் பூ நாறுமோ என்று கோதை வியந்த குமிண் சிரிப்பு வாயும், அறத்தினோர்க்கு ஈரமும், அல்லாதவருக்கு எரி நெருப்பும் பொழியும் கண்களும், நறுக்கின ஓலை மாதிரி நெற்றியும், ஜகஜோதி யாய் ஒளி உமிழும் கிரீடமும் கொண்டு நின்ற அந்தத் திருவுருவைப் பெரியாழ்வாரைப் போல அனுபவித்துக் கொண்டு நின்றார், வாசுதேவன். அப்பா இருந்தால் எப்படியெல்லாம் இந்தப் பெருமானை அனு சந்தித்திருப்பார் என்று நினைத்துக் கொண்டார். 

பெருமாள் திருமேனி மேல் யாரோ ஒரு நபர், அவர்தோளின் மேல் அழுக்குத் துண்டைப் போட்டிருந்தார். கரித் துணி போலும் அது. அருவருப்பால், ஒரு குச்சியைத் தேடி எடுத்து அதை அப்புறம் தள்ளிப் போட்டார். என்ன அழகான வேலைப்பாடு இந்தப் பெருமாள்! கண்ணும், மூக்கும், முகவாயும் எவ்வளவு திருத்தம். ரொம்ப உசத்தியான கலைஞன் ஒருத்தனின் கைவேலை அது என்பது நிச்சயம். 

என்ன சுழிப்பு இது? அவன் மனுஷாளை உருவாக்குகிறதும், மனுஷாள் அவனை உருவாக்குகிறதும் சுற்றிச் சுழன்று கொண்டு வரும் இந்தச் சிருஷ்டி வட்டத்தை நினைத்து வியந்தார் அவர். காக்கையின் எச்சம் விக்ரகத்தின் உச்சந்தலையில் இருந்து வழிந்து கன்னத்தில் கோடு இழுத்து, அதுவும் காய்ந்து விட்டிருந்தது. 


அலமேலு கொணர்ந்து தந்த பாலில்லாத டீயைக் குடித்து முடித்தார், வாசுதேவன். ஆரம்பத்தில் ரொம்பச் சிரமமாகத்தான் இருந்தது அவருக்கு. நுரைத்துப் பொங்கும் வறுத்து அறைத்த காபிப் பொடியில் திக்காகப் பாலைவிட்டு, அடி நாக்கில் கசக்கக் காபி குடித்தவர்தான் அவர். வாசு வீட்டுக் காபி நண்பர்கள், உறவினர்கள் வட்டத்தில் பிரக்யாதி பெற்றிருந்ததும் உண்மைதான். வாசுதேவனின் ஆலைத் தொழிலாளி நண்பர்கள் எத்தனை பேர், அந்த காபிக் கென்றே அவர் வீட்டுக்கு வந்து அரட்டை அடித்துக் காபி குடித்துச் சென்றிருக்கிறார்கள். அதெல்லாம் அந்தக் காலம். அதாவது ஆலை நடந்துகொண்டிருந்த காலம், மாசா மாசம் சம்பளம் வந்து கொண்டிருந்த காலம். 

மொட்டை மாடி ஒண்டுக் குடித்தனம் அவருடையது. மாடி யின் கடைசிப் போர்ஷன். ஆகவே, இதர குடித்தனக்காரர்கள் யாரும் அவரண்டை வந்து தொந்தரவு கொடுக்கச் சாத்தியமில்லை. அது அவருக்கு மிகுந்த ஆறுதல் தந்த விஷயம். மாடிக் கைப்பிடிச் சுவரில் முதுகைச் சார்த்திக் கொண்டு உட்கார்ந்திருப்பது அவருக்கு மிகவும் பிடித்த விஷயம். சற்று தூரத்தில் அவர் மகள் அமர்ந்து பரீட்சைக் குப் படித்துக் கொண்டிருந்தாள். 

தெரு மின்சார விளக்கு எரியத் தொடங்கியிருந்த சில நிமி ஷங்களில், காளிமுத்து வந்து, சேர்ந்தார். காளிமுத்து, ஆலையில் அவருடன் வேலை செய்யும் சகா. 

“வாய்யா” என்று அவரை வரவேற்றார் வாசுதேவன். 

பக்கவாடு பிய்ந்த பாயை எடுத்து வந்து போட்டாள் அலமேலு. காளிமுத்து அதைப் பிரித்து அமர்ந்து கொண்டார். 

“என்ன ஆச்சு?’ 

“பேச்சு வார்த்தை நடந்துகிட்டுதான் இருக்கு. சட்ட சபைக் குள்ளேயே, சீஃப் செக்ரடரியும், தொழிற் சங்கக்காரர்களும் பேசிக் கொண்டிருக்காங்க. அநேகமா, ஆலைத் திறக்கிற வரைக்கும் அடுத்த மாசத்திலேந்து அரைச் சம்பளம் கொக்கலாம்னு முடிவு பண்ணி யிருக்காங்களாம். 

வாசுதேவனுக்கு இத்தகவலைக் கேட்டு மிகவும் சந்தோஷமாக இருந்தது. படித்துக் கொண்டிருந்த பெண் படிப்பதை நிறுத்தி அவர்களைப் பார்த்தாள். வாசலில் நின்றுகொண்டு காளிமுத்துவின் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த அலமேலு, இரண்டடி முன்னே வந்து, “அடுத்த மாசம்னா ? ஒரு மாசம் முடிஞ்சதும், சம்பளம் போடுவாங்களாமா?” என்று அவனிடம் கேட்டாள். 

காளிமுத்து அவளிடம், “ஆமாண்ணி…” என்றான். அலமேலு மனசுக்குள், அரைச் சம்பளம் வருகிற அந்த நாளைக் கணக்கு பண்ணத் தொடங்கினார். 

“இது என்ன பொட்டலம்?” என்று வாசுதேவன் கொண்டு வந்திருந்த பொட்டலத்தைப் பார்த்துக் கேட்டார். 

“கோதுமை, இன்னைக்கு சட்டமன்றம் போயிருந்தேனா. பக்கத்துல, வா டீ குடிக்கலாம்னு நம்ம கணேசன் கூப்பிட்டான். கடையில் வச்சு, நம்ம சகலை கோவிந்தனைப் பார்த்தேன். இன்னும் ஆலை திறக்கலையா, ரொம்பக் கஷ்டமா இருக்குமேன்ட்டு, வா வீட்டாண்டை கோதுமை தர்றேன்னாரு. உடனே சைக்கிள்ளே சுத்துக்கேணிக்குப் போயி வாங்கியாந்தேன்.” நம்ம வீட்டுக்குப் பாதி போக, உனக்கும் கொஞ்சம் கொண்டாந்தேன். காளிமுத்து அலமேலு விடம் ‘இந்தாங்க அண்ணி’ என்று அப்பொட்டலத்தைத் தந்தான், அலமேலு மறுபேச்சு பேசாமல் அந்தப் பொட்டலத்தை வாங்கிக் கொண்டாள். 

“வாயேன்… வெளியே போய் வரலாம்” என்று அழைத்தான் காளிமுத்து. 

அவர்கள் இருவரும் தெருமுனையில் இருந்த டீக்கடைக்கு வந்தார்கள். 

“ரெண்டு டீ போடுப்பா. ஒன்னு சர்க்கரை கம்மி ஐயருக்கு. எனக்கு வழக்கம் போல” என்றான் காளிமுத்து. 

“அப்புறம் எப்படி இருக்கே- வாசுதேவா?” 

“ரொம்பச் சிரமம். இரண்டு வேளைதான் சாப்பிடறது அதுக்கும் நாலு நாளா பழுது வந்துடுச்சி. இன்னி ராத்திரிக்கு என்ன பண்ணறதுன்னு இருந்தேன். தெய்வம் மாதிரி நீ கோதுமையோட வந்தே.” 

“அப்புறம் வாசு; நம்ம மாணிக்கம் பெண்ஜாதி தூக்கு மாட்டிக் கிட்டாளாம், எவகிட்டயோ கடன் வாங்கியிருக்கா. நாணயமானவ தான். ஆலை சாத்தியாச்சுல்ல. அவதான் என்ன பண்ணுவா. கடன்காரி வீட்டு வாசல்லே வந்து சத்தம் போட்டிருக்கா. அவமானம் தாங்காமே. மாட்டிக்கிட்டா.” 

“போயிட்டாளா?” 

“உம்.” 

அவர்கள் மௌனமாக டீயைக் குடித்தார்கள். காளிமுத்து டீக்குச் சில்லறை கொடுத்தான். ரெண்டு ரூபாயை வாசுவிடம் நீட்டினான். 

“உனக்குச் சிரமமாக இருக்குமே…” 

“அது இருக்கட்டும். பாத்துக்குவோம்.” 

காளிமுத்து சைக்கிளில் ஏறிச் சென்றான். 

அலமேலு கோதுமை தோசை வார்த்திருந்தாள். வெங்காயத் தைக் கடித்துக் கொண்டு அவர்கள் சாப்பிட்டார்கள். பூங்காவில், தாம் பெருமாளைப் பார்த்த சங்கதியை வாசு அலமேலுவிடம் சொன்னார். 

“அடடா… பெருமாள் முகத்தில், காக்கை எச்சம் விட்டிருந்தா, அதைப் பார்த்துட்டு சும்மா வந்திட்டேளா… ஒரு சொம்பு ஜலம் வாங்கி அதை அலம்பி இருக்கப் படாதா?” 

“சொம்புக்கு எங்கே போறதுடீ? எதிருக்கு வணிகர் அவைன்னு ஒரு ஆபீசு. பக்கத்துல ஒரு சாராயக்கடை, பிராந்திக்கடைதான். அதுக்கும் பக்கத்துல ஒரு போலீஸ்காரன் வீடு. எங்கே போயி ஜலம் கேக்கறது?” 

“நாளைக்கு ஆத்திலேந்து ஜலம் எடுத்துப் போயி, அதை அலம்பி விட்டுட்டு வாங்கோ…” என்றாள் அலமேலு. 

மறுநாள் காலை கோதுமைச் சோறு சாப்பிட்டு வாசுதேவன் வெளியே கிளம்புகையில், ஞாபகமாகச் சொம்பை எடுத்துக் கொடுத்தாள் அலமேலு. அதை எடுத்துக் கொண்டு கிளம்பி மிஷன் வீதி வழியாக அவர் வந்து கொண்டிருக்கையில், அவரது ஆலைத் தோழர்களில் ஒருவனான சோமு அவரை எதிர்ப்பட்டான். 

“வாசு, எங்கே கிளம்பிட்டே?” என்றவன் அவர் கையில் இருந்த செம்பைக் கவனித்தான். “இப்படியா பண்ணறது? என்னதான் கஷ்டம் ஏற்பட்டாலும், நம்ம துன்பத்தை வெளியிலே காட்டிக்க லாமா? ஒரு பையில் கொண்டு போ, வாசு. எந்தக் கடையிலே அடகு வைக்கப் போறே? இதே ரோட்ல, குசக்கடைத் தெருவுக்கு பக்கத்திலே ஒரு சேட்டு இருக்கான்… ரூபாய்க்கு மூணு வட்டிதான். அவன்கிட்ட போ..” என்றுவிட்டு அவன் கிளம்பினான். போனவன், சடக்கென்று பிரேக் போட்டு நின்று, “நம்ம ஊட்டுப் பொருளு அந்தச் சேட்டுகிட்ட தான் ஏராளமா இருக்கு. வேணும்னா எம் பேரைச் சொல்லு” என்றபடி போய்ச் சேர்ந்தான். 

பூங்காவுக்குத்தானே என்று சட்டை இல்லாமல், மேல் துண் டோடு கிளம்பி இருந்தார், வாசுதேவன். வெறும் செம்பைத் தூக்கிப் போறதில் இப்படி ஒரு அர்த்தம் இருப்பது அறிந்து, மேல் துண்டை எடுத்துச் செம்பை மூடிய படியே சமுத்திரக் கரையை அடைந்தார். செம்பை நன்கு அலம்பி, அதன் நிறைய நீரை நிரைத்துக் கொண்டு, பெருமாள் இருந்த இடம் வந்து சேர்ந்தார். மூன்றடி பீடத்தின் மேல், சுமார் மூன்றரை அடி உயரம் இருந்தது அந்த விக்ரகம். நின்ற இடத்திலிருந்து விக்ரகத்தின் சிரசு தமக்கு எட்டாததை அறிந்து, அருகே இருந்த பாறைக்கல் ஒன்றைப் புரட்டிக் கொண்டு வந்து போட்டு, அதன் மேல் ஏறி நின்று நீரை சிரசில் வார்த்து, தம் மேல் துண்டால் அதைத் துடைக்கலானார். உடம்பு முழுக்க அச்சிலை யைத் துடைத்து விட்டுப் பார்த்ததில் சிலை, மேலும் தெளிவாகத் தெரிந்தது. திருமேனியின் முழு அழகும் தெளிவாகத் தெரியும்படி இருந்ததைக் காண்கையில், அவர் பரவசத்தில் ஆழ்ந்தார். புன்னகை பொலியும்படி இருந்த அந்த முகம் அவருக்குள் மிகுந்த கிளர்ச்சியை ஏற்படுத்தியது. கல்லில் எப்படிக் கனிவு தோன்ற முடியும்? அந்தப் பெருமாள் அவரைப் புன்னகை, தோன்ற பார்த்ததோடு மட்டு மின்றி, அடுத்ததாக, ‘என்ன வாசுதேவா, சௌக்யமா?’ என்று கேட்டு விடுவார் எனும் படி இருந்தது. அரைக்கண் விழித்த அருட்பார்வை; தீர்க்கமாக நிமிர்ந்த மூக்கு. வழுவழுத்த கன்னமும், பலப்பல ஆரம் அணிந்த மார்பும், வாசுதேவன் போகலாம் என்று திரும்புகையில் அவர் அருகில் ஒருவர் நின்றிருந்ததைக் கண்டார். உயர்ந்த துணியில் சட்டையும், பேண்ட்டும், தொப்பியும் அணிந்திருந்தார் அவர். வாசுதேவனைக் கண்டு, “நமஸ்காரம் சுவாமி” என்றார் அவர். வாசு, விழித்துக் கொண்டே “நமஸ்காரம்” என்றார். 

“நான் பார்த்துக்கிட்டேதானே இருந்தேன், நீங்கள் பெருமா ளோடு பரவசமாய்ப் பேசிக்கிட்டு நின்னதை. என்னமோ சுலோகம் சொன்ன மாதிரித் தெரிஞ்சது. சரி. சரி. பெரியவர்கள் செய்வதை யாரால் புரிஞ்சுக்க முடியும்? நான் இந்த வழியேதான் பல வருஷ காலமாகப் போறதும், வரதும். இந்த சாமி கேட்பார் இல்லாமல் அழுக்குப் படிஞ்சு கிடந்ததை நானும் பார்த்தேன். நான் சாமியைத் தொடப்படாது. ஏதாவது ஒரு பெரியவர் வர மாட்டாரான்னு இருந்தேன். நீங்க வந்துட்டீங்… அங்… நீஙக ஒண்ணும் சொல்லப் படாது… இந்தாங்க… நூறு ரூபாய்… இவளோ தான் இப்போ என் பாக்கெட்டுல இருக்கு. இதை வச்சுக்கிட்டு, சாயங்காலமா,சுவாமி க்குப் புஷ்பம் சாத்தி, ஏதாவது பிரசாதம் பண்ணி சாத்தினீங்கன்னா, ரொம்பப் புண்ணியம்…” 

“நீங்க?” 

“நான் ரொம்பச் சின்னவன். என் பேர் ரங்கசாமி. பிரான்சிலே உத்தியோகம் பார்த்துட்டு ரெத்திரேத் (ரிடையர்மென்ட்) ஆகியி ருக்கேன். சாயங்காலமா வர்றேன் சாமி.” 

அவர் கும்பிட்டு விட்டு, போயே போய் விட்டார். வாசுதேவன் தன் உள்ளங்கையைத் திறந்தார். அதிலிருந்த நூறு ரூபாயைத் திரும்பித் திரும்பிப் பார்த்துக்கொண்டு நின்றார். 


என்னடி பண்ணறது? திகிலடைந்த வாசுதேவன், அலமேலு விடம் கேட்டார். 

“ஏன்னா தயங்கறேள்? பிராமணர்தானே நீங்க? உங்களுக்குத் தெரியாதான்னா. உங்ககிட்டே தேஜஸ் இருக்கு. இல்லாமலா தெருவில போறவர் நூறு ரூபாயைக் கொண்டாந்து கையிலே திணிச்சுட்டுப் போயிருக்கார்.” 

“எனக்கென்னடி சுவாமி காரியம் பண்ணத் தெரியும், நான் ஒரு ரெண்டும் கெட்டான்…” 

“அப்படி சொல்லாதேங்கோ; வரததேசிகாச்சார் பிள்ளை இல்லியா நீங்க! உங்களுக்கு அது வராம போயிடுமா ? தவிரவும், மனசுலே கல்மிஷம் இல்லாம எது பண்ணா என்ன? சபரி, எச்சிலை பகவான் வாங்கிக்கலையா? தைரியமா போயி நைவேத்யம் பண்ணிட்டு வாங்கோ…” 

போகாமல் இருந்து விடலாம் என்றுகூட அவர் ஒரு கணம் நினைத்தார். ஆனால் திருட்டல்லவா அது. அந்த ரங்கசாமி எங்கேயாவது தன்னைக் கண்டு, ‘அடேய் திருட்டு அயோக்கிய பேமானி பிராமணா” என்று கழுத்தில் துண்டைப் போட்டால் என்ன பண்ணுவது? 

சாயங்காலம் நாலு மணிக்கு ரொம்பத் தயக்கத்துடன் புறப்பட்டார் வாசு. செம்பு பிரசாதம், தட்டு, ஒரு பை முதலான சாமக்கிரியைகளுமாக, பையன் சைக்கிளை எடுத்துக் கொண்டு புறப்பட்டார் கடைத் தெருவுக்கு வந்து புஷ்பம், மாலை வாங்கிக் கொண்டு மறக்காமல் ஒரு துடைப்பமும் வாங்கிப் பேப்பரில் சுற்றிக் கொண்டு, பெருமாள் இருக்கும் இடம் வந்து சேர்ந்தார். சைக்கிளைப் பூட்டி சாவியை இடுப்பில் சொருகிக் கொண்டு, செம்பை எடுத்துக் கொண்டு சமுத்திரக் கரைக்குச் சென்றார். தண்ணீர் கொண்டு வந்து, திருமேனியைக் கழுவிச் சுத்தம் செய்தார். சந்தனம் கொண்டு உடம்பைப் பூசினார். கொண்டு வந்திருந்த மண் கட்டியைக் கரைத்து சுவாமிக்குத் திருமண் காப்பு சாத்தினார். அப்பா அவர் காலத்தில் பயன்படுத்தின அரக்க நிறக்கரை போட்ட துண்டை பகவான் இடுப்பில் சுற்றி மாலை அணிவித்ததும், பெருமாளின் தேஜசை அவராலேயே நம்ப முடியவில்லை, அடேயப்பா, அழகு அள்ளிக் கொண்டு போயிற்று அவரை. ஆண்டாள்தான் நினைவுக்கு வந்தாள். 

“கற்பூரம் நாறுமோ கமலப்பூ நாறுமோ? 
திருப்பவளச் செவ்வாய்தான் தித்தித்திருக்குமோ? 
மருப்பொசித்த மாதவன் தன் வாய்ச்சுவையையும் நாற்றமும்.
விருப்புற்றுக் கேட்கிறேன் சொல்லாழி வெண் சங்கே.” 

என்று தொடர்ச்சியாக, பாசுரங்களை முணுமுணுத்த படி, இலையை விரித்துப் பிரசாதமாகப் பண்ணிக்கொண்டு வந்த புளியோதரையைக் கொஞ்சம் வைத்தப்போது, சபாஷ்… பிரமாதம்’ என்கிற குரல் கேட்டுத் திரும்பினார். ரங்கசாமி நின்று கொண்டிருந்தார். சற்றுத் தள்ளி அலுவலகம் விட்டுப் போகிறவராகச் சிலர் சைக்கிளில், ஸ்கூட்டரில், இருந்த படியே காலை ஊன்றி வேடிக்கைப் பார்த்துக் கொண்டு இருந்தார்கள். ரிக்ஷாக்காரர்களின் குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகள் சில ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருந்தன. 

“ஆகா… என்ன அற்புதம்… நேற்று வரைக்கும் வெறும் சிலையாக இருந்த ஒன்னை இன்னைக்குக் கடவுளா கண்ணுக்கு முன் நிறுத்திட்டீங்களே… அதுதான் சொலவடையே இருக்கே… வல்லவனுக்குப் புல்லும் ஆயுதமுன்னு.” 

“ஏதோ எனக்குத் தெரிஞ்சது.” 

“தெரியுமே… பெரியவங்க எப்போதும் இப்படித்தான் அடக்க மாகப் பேசுவாங்க…” 

வாசு கரண்டியில் கற்பூர ஆரத்தி எடுத்தார். சடாரி இல்லை. துளசி மட்டும் கொணர்ந்திருந்தார். துளசி தீர்த்தம் கொடுத்து, பிரசாதத்தை வாழை இலையில் வைத்து மடித்துத் தந்தார். மிக மிகச் சந்தோஷத்துடன் அவைகளைப் பெற்றுக் கொண்டார் ரங்கசாமி. 

“அப்புறம் செலவு நாற்பது ரூவா அறுபத்து ஐந்து காசு ஆச்சுது மிச்சம் இந்தாங்கோ…” என்று மடியை அவிழ்த்தார் வாசு. 

“அபசாரம், நான் கேட்டேனா… நாளை செலவுக்கு வேணு மில்லீங்களா? வச்சுக்கிடுங்க…” 

“நாளை செலவுக்காக?” 

“பின்னே? நாளைக்குச் சுவாமியைப் பட்டினிப் போடுவீங்களா?”

வாசுவுக்குப் பயமாக இருந்தது. 

“சாமி வரப்பிரசாதிதான். நேற்று மனசுக்குள்ளாற வேண்டிக் கிட்டேன். இந்தச் சாமிகிட்டே தான், மாமாங்கமா எனக்கு வயித்து வலி. என்ன ஆச்சர்யம் பாருங்கோ.. இன்னிக்குக் காலைலே இருந்து வலி இருந்த இடம் தெரியலை. வேறு என்ன, பட்டாச்சாரியார் விசேஷம், அப்புறம், சாமி… பெருமாளுக்கு என்ன பேர்?” 

“பேரா?” 

“சாமின்னா பேரு வேணாமா? மனுஷாளுக்கே பேரு இருக்கே?” சட்டென்று வாசு சென்னார். 

“பூங்காவனப் பெருமாள்.” 

“பேஷான பெயர். அப்போ உத்தரவு கொடுங்க சாமி…” 

அவர்கள் சென்ற பின்னர், பிரசாதத்தை எடுத்து, வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்றிருந்த பையன்களுக்கம், ஒரு நோயாளிக்கும் கொடுத்தார். மிகுந்ததை எடுத்துக்கொண்டு புறப்பட ஆயத்தமானார். சரியாக அந்த நேரம், காளிமுத்து சைக்கிளில் வந்து இறங்கினான். 

“வாசு… வீட்டுக்குப் போயிருந்தேன். அண்ணி, இங்க போயிருக்கிறதா சொன்னாங்க… என்ன, இந்த ஒண்ணுக்குப் போற இடத்தைக் கோயில் மாதிரியே பண்ணிட்டயே.. 

காளிமுத்து, பெருமாளை, அவர் கோலத்தை ஆச்சர்யத்துடன் பார்த்தான். பிறகு சொன்னான். “ஆமா… இதுக்குச் செலவு ஆவுமே… காசுக்கு என்ன பண்ணே?” 

வாசு ரங்கசாமி பற்றிச் சொன்னார். 

“அதுவும் சரிதான். நம்மால எவனுக்காவது சந்தோஷம் வருதுன்னா, அதைச் செய்யறது தப்பில்லை. செய்யி ஆலைத் திறக்கிற வரைக்கும் உனக்கும் ஏதாவது வேலை வேணுமே…” 

“ரங்கசாமி பணம் என்கிட்டே அறுபது ரூபா இருக்கே..என்ன பண்ணறது, காளிமுத்து? சாமி பணமாச்சே…” 

“சாமிகிட்டே ஏது பணம்? ரங்கசாமி பணம்தானே அது? பத்து ரூபா அண்ணிக்கிட்டே குடு. அவங்க சாப்பிடனும். குழந்தைங்க பட்டினிக்கு ஆவுமே… மீதிப் பணத்தைச் சிக்கனமா சாமிக்குச் செலவு பண்ணு. வர்றவனுங்க தட்டுல காசி போடுவாங்க… அதை எடுத்து அப்புறமா உன் செலவுக்குச் சாமி செலவுக்கும் வச்சுக்கோ…” 

“சாமி பணத்தைச் செலவுக்கு எடுத்துக்கலாமா. காளிமுத்து?” 

“முட்டாத்தனமா பேசாதே… சாமியையே உருவாக்கி இருக்கே… உழைக்கிறே… அதுக்குக் கூலி வேணாமா? இப்ப என்னத்துக்கு மில்லுக்காரனோட சண்டை போட்டுகிட்டு, போராடிக்கிட்டு இருக்கோம். அந்தக் கம்மனாட்டி ஒழுங்கா உழைக்கிறவனுக்குக் கூலி கொடுத்திருந்தா நாம என்னத்துக்கு ஸ்டிரைக் அடிச்சிருக்கப் போறோம். அவன் என்னத்துக்கு லாக்-அவுட் பண்ணப் போறான்? சாமி, வேற வகையான முதலாளி. அவர் கையில பணம் இல்லே. ஆனாலும் நீ உழைக்கிறே. தட்டுல விழறதை எடுத்துக்கோ… ரங்கசாமி மாதிரி எவனாவது கொழுத்தவன் பணம் கொடுத்தா வாங்கிக்கோ.. அதுல தப்பே இல்லை.” 

வாசு, பையை எடுத்துக் கொண்டு கிளம்பினார். இருவரும் சைக்கிளில் கடற்கரை வழியாக மெதுவாக வண்டியைச் செலுத்தினார்கள். 

“பேச்சு வார்த்தை என்ன ஆச்சு?” 

“இழுத்துக்கிட்டே போவுது, முதலாளி ஒரு முடிவுக்கும் வரமாட்டேங்கறான். கூடிய சீக்கிரமே ஒரு பெரிய ஊர்வலம் நடத்த லாம்னு சங்கத்துல முடிவு பண்ணி இருக்கோம். மறந்துட்டேன். இந்த மாசம் சந்தாப் பணம் தரலாமில்லையா! அஞ்சு ரூபா கொடு- இந்த நேரத்துலதான் சங்கத்தை நாம் பலப்படுத்தணும்.” 

வீட்டண்டை வந்தப்புறம் சங்கச் சந்தாவை வாங்கிக் கொண்டு புறப்பட்டான் காளிமுத்து. 

அலமேலு, பையன், பெண் என்று மூவரும் மாற்றி மாற்றி அவரிடம் பேசினார்கள். 

“இதுல ஒரு தப்பும் இல்லேன்னா. பக்தியோட பூஜை எல்லாம் பண்றேள். இந்தப் பத்து நாளா நாலு ரூபா அஞ்சு ரூபான்னு விழுந்துண்டு இருக்கு. மோருஞ்சாதம் எல்லாருக்கும் கிடைச்சுட்டி ருக்கு அதுக்கும் லங்கணம் வந்துடப்படாது. நீங்க என்ன திருட் றேளா, பொய் சொல்றேளா பூஜைதானே பண்றேள் பட்டாசாரியா இருக்கிறது பெரிய கௌரவம்னா…” 

அது என்னமோ உண்மையாகத்தான் இருந்தது. நேற்று மாலை, பெருமாளுக்கு முன் ஒரு கார் வந்து நின்றது. அதிலிருந்து சிவந்த மேனியும், கருட மூக்கும், வெள்ளை வெளேரென்ற ஆடைகளும் கொண்ட ஒரு மனுஷர் இறங்கி வந்தார். வாசுவை வணங்கினார். 

“சுவாமி…என் பேர் சுந்தரவரதன். அரசாங்கத்துல உத்தியோகம். உங்க சிரத்தையை ஒரு வாரமா கவனிச்சுண்டு வர்றேன். சாஸ்ரோக் தமா பூஜை நடக்கலைன்னாலும், பக்தி இருக்கு அது போதும். பக்தியை மிஞ்சின வேதமா? என் குடிசைக்கு எழுந்தருளி, எனக்கு கௌரவத்தை பண்ணனும்…” 

சுந்தரவரதன், வாசுவை குடிசைக்குக் காரில் அழைத்துச் சென்றார். சுமார் இருபது முப்பது லட்ச ரூபாய் போட்டுக் கட்டிய அந்தக் குடிசையில் இருந்த பத்தாயிரம் பெறுமான சோபாவில் வாசுவை அமர வைத்து, சுமார் முன்னூறு பெறுமான சால்வை போர்த்தி தாம்பூலத்தில் இருநூறு ரூபாயை வைத்து சுந்தரவரதன் அளித்ததோடு அல்லாமல், குடும்பசகிதம் அவர் காலில் விழுந்து ஆசியும் பெற்றார். விசாலாட்சி அவ்விஷயத்தை ஞாபகப்படுத்திப் பேசினாள். 

“சுந்தரவரதன் சாமான்யப்பட்ட மனுஷரா? எப்பேர்க்கொத்த மனுஷர். சீப்செக்ரடரின்னா? அப்பேர்க்கொத்த மனுஷர் ஆத்து வாசல் படியை மிதிக்கக் கூட நமக்கு ஐவேஜி இருக்கா? அந்த மனுஷர், உங்க காலில் என்னத்துக்கு விழறார்? பகவானைத் தொட்டுக் காரியம் பண்றேளேன்னோ… அதுதான்.” 

அலமேலு சொன்ன எல்லா நியாயங்களை விடவும், அவளும் குழந்தைகளும் மூன்று வேலை மோருஞ்சோறு சாப்பிட முடிந்தி ருக்கிறதே என்பதே வாசுவுக்கு திருப்தி தந்தது. அவரை தேடிக் கொண்டு அடுத்த நாள் காலையிலேயே, ஒரு நபர் வந்து சேர்ந்தார். 

“வாசுதேவப் பட்டாசாரியார் வீடு இதுதானே?” என்றார் அவர். முன் போர்ஷன் மாமி அவரை அழைத்து வந்து இந்த போர்ஷனில் விட்டாள். 

“நான்தான் அது. என்ன விஷயம்?” என்றார். 

“ரங்கசாமியோட மைத்துனன் நான். ரொம்ப நாளா வரணும் வரணும்தான். இன்னிக்குத்தான் லபிச்சுது. உங்களைப் பற்றி மாமா ரொம்ப சொன்னார். புரட்டாசி வரது இல்லீங்களா? ஒரு வாரம் பெருமாளுக்கு உற்சவம் பண்ணலாம்னு தோணிச்சு. பெருமாள் ரொம்ப வரப்ரசாதி. அவர் பேரைச் சொல்லற பாட்டு, சதிர்க் கச்சேரிகள் வைக்கலாம்னு அபிப்ராயம்.” 

பூங்காவனப் பெருமாள் கடந்த சில மாதங்களில் மிகவும் பிரபல்யம் ஆனார். பக்கத்து ஆசுபத்திரிக்கு வருகிற நோயாளிகள் பெருமாளுக்கு நேர்ந்து கொண்டு ஆச்சர்யமாக நோய் நீங்கியதாகச் சொல்லி படையல் போட்டார்கள். ஆபீசுக்குப் போகிறவர்கள் ஒழுங்காகக் காலை வேளைகளில் வந்து கும்பிட்டுத் துளசி தீர்த்தம் பெற்றுச் சென்றார்கள். எட்டாவது மாசமே பிள்ளை பெற்ற ஒரு கர்ப்பிணியின் கணவர், வேண்டிக் கொண்டு சுவாமிக்குச் சடாரி செய்து கொடுத்தார். 

ஒருநாள் மாலை, படித்தவர் மாதிரி காணப்பட்ட ஒருத்தர், இன்னொருத்தரோடு வந்தார் சுவாமியைக் கூர்மையாக அவதா னித்து விட்டு அவர் உடன் வந்தவரிடம் சொன்னார். “ரொம்ப சரி. இந்தச் சிலை சுமார் எண்ணூறு வருஷங்களுக்கு முன் செய்த தாய் இருக்கும். அதாவது குலோத்துங்க சோழன் காலம். அந்த காலத்தில் இந்தப் பகுதி பூங்காவாக இருந்திருக்க வேண்டும். ஆகவேதான் இந்தப் பெருமாளுக்குப் பூங்காவன நாதர் என்ற பெயர் வந்திருக்கிறது. ஏதோ சோழர் காலத்துப் பெரிய கோயிலிலிருந்து இங்கு வந்திருக்கிற இச்சிலையின் அழகைப் பார்த்தால், கம்பர் பூசித்தச் சிலையாகக் கூட இது இருக்க முடியும்.” 


காலையில் தூங்கிக் கொண்டிருந்த வாசுவை எழுப்பிச் சேதி சொன்னான் காளிமுத்து. 

“கண்ணையன் தன் குடும்பத்தோடு தற்கொலை செய்து கொண்டான்.” 

கண்ணையன், வாசுவோடு வேலை பார்க்கும் சக தொழிலாளி. ரொம்பசாது. நாலு பெண் குழந்தைகள். இரண்டு பையன்கள். சீக்காளி அம்மா. அப்புறம் மனைவி. எவரிடமும் வம்பு தும்புக்குப் போகாத மனுஷன். எப்படியோ வாசுவிடம் அவருக்குச் சினேகம். இருவரும் தான் இடைவேளையில் டீ சாப்பிடப் போவார்கள். வாசு, முதலியார் பேட்டையில் இருந்த அவர் வீட்டுக்குப் பலமுறை போயிருக்கிறார் கண்ணையன் பெண்ஜாதி அவருக்கு டீயோ, காபியோ போட்டுக் கொடுக்கத் தவறுவதில்லை. மூத்த குழந்தைக்கு வயது இருபது இருக்கும். கடைக்குட்டிக்கு ஆறு, வாடகை வீடு. வீட்டைக் காலி பண்ணச் சொல்லி வீட்டுக்காரர் தொந்தரவு. பிச்சுப் பிடுங்கும் வறுமை. 

காளிமுத்து சொன்னான். 

“வெள்ளை அடிக்கிற வேலை பண்ணிகிட்டு இருந்தார், கண்ணையன். வாரத்துலே ஒருநாள் வேலை கிடைச்சாலே பெரிசு; பஞ்சாயத்துக்கு ஆண்டிங்கிறாப்போலே, புதுசா பிரஷ்ஷை எடுத்தா வேலை வந்துடுமோ? நேற்று சாயங்காலம் வீட்டுக்கு வந்திருக்கார். கடை வீதியிலே ஏதேச்சையாக பார்த்திருக்கார். ஒரு டீ கடையில் கடைசிப் பொண்ணு செம்பகமும், அடுத்தப் பையன் சீனிவாசனும் சாப்பிட்டுக்கிட்டு இருந்த ஒருத்தன் கிட்டே கையை நீட்டிப் பிச்சைக் கேட்டுக்கிட்டிருந்ததைப் பார்த்திருக்கிறாரு… தாங்க முடியல்லே… தொழிலாளி இல்லையா மானஸ்தன் ஆச்சே. வீட்டுக்கு வந்து இரண்டு பழைய நாற்காலிகளையும், ஒரு ரிக்ஷாவில் ஏத்தி, பழைய மரச்சாமான் கடைக்கு எடுத்துப் போயிருக்காரு- வந்த வெலைக்கு வித்து, எதையோ வாங்கிட்டு வந்து, டீ வாங்கிட்டு வந்து, போட்டு கலக்கி, எல்லோருக்கும் கொடுத்திருக்காரு… புள்ளைங்க ஆசையா குடிச்சிருக்கு…” 

நீண்ட மௌனத்துக்குப் பிறகு, வாசு கேட்டார். 

“எல்லோருமே போயிட்டாங்களாமா?” 

“கண்ணையனும், அவர் பெண்ஜாதியும் போயிட்டாங்க. குழந்தைகள்ள அஞ்சு போச்சு, பெரிய பொண்ணு இன்னிக்கோ, நாளைக்கோன்னு இருக்காம். இத்தனைக்கும் என்ன நடக்குதுண்ணே தெரியாமே அவரோட அம்மா, சீக்கா படுத்துக் கிடக்கு…” 

நெஞ்சை அடைத்துக் கொண்டு வந்தது வாசுவுக்கு. எட்டு மனுஷ உயிர்கள், பேசத் தோன்றாமல் அவர்கள் உட்கார்ந்தி ருந்தார்கள். நேரமும், காலமும் ஸ்தம்பித்து விட்டாற் போன்று இருந்தது. 

“எப்போ அடக்கம்?” 

“சாயங்காலம் வச்சுக்கலாம்னு தலைவர் சொல்லியருக்காரு.” “அடக்கச் செலவெல்லாம்?” 

“நாமதான் ஏத்துக்கணும்… ஒருவேளை பட்டினிக் கிடந்து கொடுத்தாகணும்!” 

வாசு அலமேலுவிடம் ஐம்பது ரூபாய் தரச்சொல்லி, அதைக் காளிமுத்துவிடம் தந்தார். காளிமுத்து எழுந்தான். 

“இரு, நானும் வர்றேன்.” 

“சாமி வேலை?” 

“கிடக்கு. இதுதான் அதைவிட முக்கியம்.” 

அவர்கள் ஆசுபத்திரிக்குப் போய்ச் சேர்க்கையில், ஊசலாடிய பெண் உயிரும் போய்விட்டிருந்தது. பெரிய ஆம்புலன்ஸ் வண்டி ஏற்பாடு செய்து சடலங்களை எடுத்துக் கொண்டு, கட்சி ஆபீசுக்குச் சென்றார்கள் தொழிலாளர்கள். 


வாசு மணியைப் பார்த்தார் ஒன்று முப்பத்தைந்து, தூரத்தில் சுருட்டிக்கொண்டு படுத்திருந்தாள் அலுமேலு சற்று தள்ளி குழந்தைகள் படுத்திருந்தார்கள். துக்கம் வரவில்லை. 

சுமார் முப்பது உயிர்களைக் கொள்ளை கொண்ட பின் நாற்பது ஐம்பது குடும்பங்கள் ஊரைவிட்டுச் சென்ற பின் முன்னூறு நானூறு தொழிலாளர்கள் வேறு வேறு தொழில்களில் தம்மை ஈடுபடுத்திக் கொண்ட பின், ஒரு வழியாக இரண்டு இரண்டரை வருஷங்களுக்குப் பிறகு ஆலையை நாளை திறக்கிறார்கள். 

ஆலைத் தொழிலாளி ஆவதா அல்லது பாட்டாசாரியார் வேலையிலே தொடர்ந்து இருப்பதா என்பதே அவருக்கு முன் இருந்த கேள்வியாக இருந்தது. கோயில் இந்த ஒன்று ஒன்றரை வருஷத்துக்குள் ஸ்திரம் பெற்றுவிட்டது. ஆண்களும் பெண்களுமாக நிறையக் கூட்டம் வந்தது. ஒருநாளைக்குக் குறைந்தது ஏழு எட்டு வந்தது. விசேஷ நாட்களில் பத்தும் பதினைந்தும் கண்டது. அதெல்லாமல், ரங்கசாமி போன்றவர்கள் அவ்வப்போது நூறு ஆயிரமாகக் கொடுத்தார்கள். பையன் கல்லூரி படிப்புச் செலவை சீஃப் செகரட்டரி ஏற்றுக்கொண்டார். அத்தோடு நீட்டி முழக்கிக் கொண்டு பட்டாச்சாரியார் என்கிற பெயர் வேறு. 

அலமேலு, இப்படியே இருந்து விடுங்கள் என்றாள். புளியோ தரை, ரொட்டி வெண்ணெய் ததியோதன்னம் என்று பெருமாளுக் குக்குப் பலப்பல செய்து, அவள் அதில் ஈடுபட்டு விட்டாள். 

ஆனாலும் மனசை என்னமோ செய்தது. கண்ணையனும் அவன் குடும்பத்தாரும் அவர் நினைவில் வந்தார்கள் எங்களை விட்டுவிட்டு போகிறீர்கள் என்று அவர்கள் கேட்பார்கள். பசியும் பட்டினியும் பரிதவித்த வேளையில் தனக்குக் கிடைத்த கொஞ்சம் கோதுமையையும் பகிர்ந்து கொண்ட காளிமுத்து நினைவுக்கு வந்தான். யோசித்தபடியே உட்கார்ந்திருந்தார். 

விடிந்தது. குளித்தார் அரவம் கேட்டுக் கண் விழித்த அலமேலு விடம் “காளிமுத்து வீட்டண்டை போய் வர்றேன்” என்றார். 

“காபி போடட்டுமா? மாவு இருக்கு. ரெண்டு தோசை வாக்கட்டுமா?” 

“வேணாம்.” 

அவர் நடந்தே காளிமுத்து வீட்டுக்கு வந்து சேர்ந்தார். காளிமுத்து புறப்படத் தயாராக இருந்தான். காளிமுத்து மனைவி வாசுவை அதிக சந்தோஷமாக வரவேற்றாள். 

“என்ன ஐயரே… ஐயரா, ஐயங்காரா? இப்ப என்ன முடிவெடுத் திருக்கே? கோயிலா? ஆலையா?” 

“அதான் ரொம்ப யோசனையா இருக்கு.” 

காளிமுத்து மனைவி காபி கொண்டு வந்து கொடுத்தாள். அதைக் குடித்தபடி சுவரில் இருக்கும் படங்களை வேடிக்கை பார்த்தபடி இருந்தார். கண்ணையனின் இறுதி ஊர்வலம். ஆயிரக் கணக்கான மக்கள் கலந்துகொண்ட ஊர்வலம் ஃபோட்டோவாக அங்கு மாட்டப்பட்டிருந்தது. அந்த ஆயிரக்கணக்கானவர்களில் அவரும் இருந்தவர். அவர் முகம் தனியாகத் தெரியவில்லை. அவர் களில் ஒருவர் அவர். அவர்களுடைய உணர்வில் கலந்தவர் அவர். அவர் சுக துக்கங்களில் பங்கேற்றவர்கள். 

“சாப்பிட்டியா?” என்றான் காளிமுத்து.

“இல்லை.” 

“நானும் இல்லை. கடையில சாப்பிடுவோம்.” 

அவர்கள் தெருவுக்கு வந்தார்கள். 

“என்ன முடிவு பண்ணியிருக்கே?” 

“குழப்பமா இருக்கு.” 

“ஒரு குழப்பமும் இதில் இல்லை.” 

“பெருமாளை யார் பார்த்துப்பா காளிமுத்து?’ 

“பெருமாள் உம்ம தயவிலதான் இருக்காரா? உன் வீட்டுச் சோத்தாலதான் ஜீவிக்கிறாரா?” 

“அதுக்கில்ல. சும்மா கிடந்த சிலையைச் சாமியாக்கிட்டு.” “அதை கோயிலாக்கறதுக்கு உன்னை மாதிரி ஒருத்தன் வருவான்.” 

அவர் செக்ஷனில் பணியாற்றும் தாமோதரன் கடைக்கு வந்தான். வாசுவைப் பார்த்ததும் ஓடிவந்து அவர் கையைப் பிடித்துக் கொண்டான். 

“எப்படி இருக்கீங்க வாசு? நான் ஒண்ணரை வருஷமா என் மாமனார் வீட்டிலே இருந்துட்டேன். அடிக்கடி உங்களை நினைச் சுக்குவேன். வாசு, பிள்ளைக்குட்டிக்காரர். என்ன பண்ணறா ரோன்னு இருக்கும். சௌக்யம் தானே?” என்றான் தாமோதரன். 

வாசுவுக்குக் கண்களில் நீர் சுரந்து விட்டது. 

காளிமுத்துவும், வாசுவும் திரும்பவும் தெருவுக்கு வந்தார்கள். காளிமுத்து, பெட்டிக் கடையில் ஒரு சிகரெட்டை வாங்கிக் கொண்டான். புகையை இழுத்து விட்டவாறே “ம்… என்ன யோசிச்சே?” என்றான். 

“உன் கூட ஆலைக்கே வர்றேன்.” 

“உன் சாமி…” 

“இருக்கட்டும்.” 

காளிமுத்து முன்னால் போனான். பின்னால், அவனைத் தொடர்ந்தார். திடுமென, அவன் முதுகுப் புறத்தில், பெருமாள் நடந்து போவதாகவும், பெருமாளுக்குப் பின் தான் போவதாகவும் தோன்றியது வாசுவுக்கு. 

– 1992

– பிரபஞ்சன் சிறுகதைகள், முதற் பதிப்பு: 2004, கவிதா பப்ளிகேஷன், சென்னை.

பிரபஞ்சன் பிரபஞ்சன் (ஏப்ரல் 27, 1945 - டிசம்பர் 21, 2018) தமிழ் எழுத்தாளர் மற்றும் இலக்கிய விமர்சகர். வார இதழ்களில் பணியாற்றிய இதழாளர். அரசியல் கட்டுரையாளர். தமிழுக்கான சாகித்ய அகாதெமி விருது 1995-ம் ஆண்டு பெற்றவர். பிரபஞ்சன் 1980-1982-ல் குங்குமம் வார இதழிலும், 1985-1987-ல் குமுதம் வார இதழிலும் பின்னர் 1989-1990-ல் ஆனந்த விகடன் வார இதழிலும் பணியாற்றினார். நக்கீரன் இதழில் அரசியல்கட்டுரைகளும், மொழியாக்கங்களும் செய்துவந்தார். பிரபஞ்சன் பொதுவாசிப்புக்குரிய பெரிய இதழ்களில் பணிக்குச்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *