வரம்!





முன்னொரு காலத்தில் கள்ளுபட்டி என்ற ஊரில் சுந்தரம், பாலன் என்ற இருவர் பக்கத்து பக்கத்து வீடுகளில் வசித்து வந்தனர். ஒருவர் மீது ஒருவர் பொறாமை கொண்டனர். சுந்தரம் ஒரு பொருள் வாங்கினால் எப்பாடுபட்டாவது அதை விட சிறப்பான பொருளை பாலன் வாங்குவான். இப்படி பொறாமையில் ஒருவர் ஒருவரை மிஞ்சிவிடுவர்.
எப்படியாவது பெருஞ்செல்வம் பெற வேண்டுமென்று நினைத்தான் பாலன். குளத்தின் ஒரு கரையில் அமர்ந்தான். “கடவுள் தோன்ற வேண்டும். கேட்ட வரம் தரவேண்டும்’ என்ற எண்ணத்தில் கடுந்தவம் புரிந்தான்.
இதை அறிந்தான் சுந்தரம். அவனும் குளத்தில் மறுகரையில் அமர்ந்து தவம் செய்யத் தொடங்கினான்.
நாட்கள் ஓடின. கடவுள் பாலன் முன் தோன்றினான். “”உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்!” என்றார்.
பொறாமை உள்ள கொண்ட பாலன், “”இறைவா! குளத்தில் அந்தக் கரையில் என் பக்கத்து வீட்டுக்காரன் சுந்தரம் தவம் செய்கிறான். அவன் என்ன வரம் கேட்கிறானோ அதைப் போல இரண்டு பங்கு எனக்குத் தாருங்கள்!” என்றான்.
உடனே கடவுள் மறுகரையில் இருந்த சுந்தரம் முன் தோன்றினார். “”என்ன வரம் வேண்டும்?” என்று கேட்டார்.
கடவுளைப் பார்த்து சுந்தரம், “”என் பக்கத்து வீட்டுக்காரன் கேட்ட வரம் என்ன?” என்றான். கடவுளும் நடந்ததைச் சொன்னார்.
இதைக் கேட்ட சுந்தரம் உள்ளம் பொறாமையால் துடித்தது. “நான் ஒரு மாளிகை கேட்டால் அவனுக்கு இரண்டு அல்லவா கிடைக்கும். என்னைவிட வளமாக வாழ்வானே. இப்படிப்பட்ட வரம் கேட்பதால் எனக்கு எந்தப் பயனும் இல்லையே’ என்று நினைத்தான்.
சிறிது நேர சிந்தனைக்குப் பின் அவன் மகிழ்ச்சி அடைந்தான். “”கடவுளே! என் ஒரு கண் குருடாக வேண்டும். இதுதான் நான் கேட்கும் வரம்,” என்றான் சுந்தரம்.
கடவுளும் அப்படியே வரம் தந்துவிட்டு மறைந்தார்.
இது எப்படி இருக்கு பார்த்தீங்களா குட்டீஸ்… இத்தகைய கெட்டவர்களாய் நீங்கள் இருக்கக்கூடாது.
– ஜூன் 18,2010