கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 10, 2025
பார்வையிட்டோர்: 15,504 
 
 

மீனாட்சி இல்லம்,

மகள் அக்சயாவின் கண்டிப்பான குரல், வீட்டு வாசல் வரை கேட்டு கொண்டு இருந்தது. அக்சயா தனியார் துறையில் கணக்காளராக பணிபுரிந்து வரும் பெண். வயது இருபத்தி இரண்டை தொட்டு விட்டது. தந்தை சில வருடத்திருக்கு முன் இறந்து விட்டார். தாய் மீனாட்சி வயது நாற்பத்தைந்துக்குள். ஒரே மகள் அக்சயா. மீனாட்சி தன் கணவரின் பென்ஷன் பணத்தில் குடும்பத்தை சமாளித்து மகளை படிக்க வைத்தாள். வீடு சொந்த வீடு என்பதால் வாடகை பிரச்சனை இல்லை. மகள் அக்சயாவுக்கு வரண் பார்க்கிறாள்.

“அம்மா, நிச்சயமா முடியாது. உன் பேச்சை இந்த பெண் பார்க்கிற விசயத்தில் கேக்க மாட்டேன். இன்னைக்கு சாயந்திரம் பொண்ணு பார்க்க அவர வர சொல்லிட்டேன். என்கூட வேலை செய்றவரு. எனக்கு மேனேஜர். அவருக்கு வயசு நாற்பத்தி எட்டு. முதல் மனைவி அவங்க குடும்பம் ஒரு விபத்தில் 5 வருசத்திற்கு முன்னாடி இறந்துட்டாங்க. அவரு இப்ப தனியா தான் இருக்கிறார். அவருக்கு இப்போ ஒரு துணை தேவை. ரொம்ப நல்ல மனுஷன். எனக்கு பிடிச்சிருக்கு. “ என்று அக்சயா திட்டவட்டமாக கூறி கொண்டு இருந்தாள்.

“நீ சொல்றத நான் கேக்கலாம்டி , ஊரு வாய மூட முடியுமா ? உன்னை செல்லமா வளர்த்தது தப்ப போச்சு. நீ என்னமோ புதுசு புதுசா பேசுற. இதெல்லாம் சினிமால தான் பார்க்க முடியும். நிஜ வாழ்க்கையில இல்ல ! “ என்று அம்மா மீனாட்சி கூறினாள்.

“எனக்கு அவர ரொம்ப பிடிச்சிருக்கு. அவருக்கு உன் வயசு தான்மா இருக்கும். வயசு பிரச்னை இல்லை எனக்கு. அவர் கிட்ட ஏற்கனவே இந்த கல்யாணத்தை பத்தி பேசிட்டேன். அவரும் முதல்ல ஒத்துக்கல. பிறகு சம்மதம் சொல்லிட்டார். இன்னைக்கு சாயந்திரம் பொண்ணு பார்க்க வராரு. “ என்று அக்ஷயா கண்டிப்பாக கூறினாள்.

“பைத்தியமாடி நீ. எனக்கு சுத்தமா இந்த விசயத்தில் விருப்பம் இல்லை. ஊரு வாய மூட முடியுமா? இல்ல சொந்த காரங்க தான் என்ன பேசுவாங்க ? “ என்று கேள்விக்குறியுடன் மீனாட்சி.

“அம்மா ஊரு வாய மூட முடியாது. நீ நல்ல இருந்தாலும் பேசும் , நல்லா இல்லைனாலும் பேசும். அத பத்தி கவலைபடாத. சொந்தகாரங்க பேசுனா பேசட்டும். நம்மள வளர்த்து விடலனாலும் , வளர்ச்சிய தடுக்க நினைக்கிறவங்க தான் நம்ம சொந்தம். ஆம்பள இல்லாத வீடு , எப்படி சமாளிகிறாங்க ? என்று நோட்டம் போடறவங்கள பத்தி கவலைபடாத. உன் பொண்ணு முடிவு தப்பா போகாது.

தைரியமா இரு. “ என்று அம்மா மீனாட்சிக்கு , மகள் அக்சயா தைரியம் கொடுத்தாள்.

“அம்மா சொல்றத ஒரு தடவ கேளுடி. உன்கூட வேலை பார்கிறாருனு சொல்ற , உனக்கு பிடிச்சிருச்சுனு சொல்ற. மத்த விஷயம் அவர பத்தி எதுவும் தெரியுமா ? “ என்று கேட்டதுக்கு , மகள் அக்சயாவின் கோபம் கண்களில் தெரிந்தது.

“அம்மா, நான் நம்ம வாழ்க்கைக்கு தேவையான முடிவு எடுக்கிறேன் , அத சரியா தான் எடுப்பேன். கவலைபடாத , அவரு ரொம்ப நல்ல மனுஷன் , எந்த கெட்ட பழக்கமும் இல்லை. சொந்த வீடு , பேங்க் அக்கௌண்டில் இலட்ச ரூபாய்க்கு மேல இருக்கு. நீ கவலை படாத. ஓகே மட்டும் சொல்லு , மத்த விஷயத்தை நான் பார்த்துப்பேன்“ என்று அக்ஸயாவின் முடிவில் தீர்க்கமாக கூறினாள்.

“எனக்கு என்ன சொல்லனும்னு தெரியல. அந்த வயசுக்கு அப்புறமா குழந்தை குட்டினு நெனச்சு பார்க்க முடியல ? “ என்று கேள்விகளோடு அம்மா மீனாட்சி.

“பைத்தியகார அம்மா. கொழந்தை பெத்துகிறது நோக்கமில்லை. நமக்கு ஒரு ஆதரவு வேணும். அவ்ளோதான். அவரு இந்த விசயத்தில தீர்க்கமா தான் இருக்கிறார். இந்த வயசுல அவருக்கும் ஒரு ஆறுதலனா ஆதரவு தான் வேணுமாம். “ என்று அக்சயா கூற , முடிவுகள் எடுக்க தயங்கிய படி , ஒப்பு கொண்டாள்.

“சூப்பர் அம்மா. “ என்று அம்மாவை கொஞ்சிய படி , செல்போனை எடுக்க சென்றாள் அக்சயா.

“ ஹலோ சுந்தரம் அப்பா. என்னை மக மாதிரின்னு சொல்லுவிங்க , இனிமே மக மாதிரி இல்ல மகளே தான். ஆமா அம்மா கல்யாணத்திற்கு சம்மதம் சொல்லிடாங்க. அவங்கள சம்மதிக்க வைக்க, நான் ரொம்ப கஷ்ட பட்டுட்டேன் அப்பா. உங்களக்கும் அம்மாக்கும் அடுத்த முகூர்த்தத்தில் கல்யாணம் வச்சிரலாம்ன்னு இந்த பெரிய மனுசி முடிவு பண்ணிடேன். நீங்க அம்மாவை நல்லா பார்த்துப்பீங்கனு நம்புறேன். உங்கள நம்பி தான் இந்த முடிவ எடுக்க வச்சிருக்கேன். என் அம்மாக்கு ஒரு நல்ல ஆதரவா இருப்பீங்கன்னு உறுதியா நம்புறேன்.

உங்க கல்யாணத்தை முடிச்சா , தான் அடுத்து என் கல்யாணத்தை பத்தி யோசிப்பேன்னு அம்மாட்ட சொல்லிட்டேன். ஆகையால நீங்க எங்க வீட்டுக்கு பொண்ணு பார்க்க தயங்காம வரலாம் , பொண்ணு மீனாட்சி ரெடியா இருப்பாங்க. உங்கள ஜோடியா பார்க்க ஆர்வமா இருக்கேன்.“ என்று அக்சயா கூறினாள்.

மறுமுனையில் ,

“அக்சயா குட்டி , அம்மா மீனாட்சிய தயாரா இருக்க சொல்லு , அப்பா சுந்தரம் வரேன்னு! “ என்று கூறி இணைப்பை துண்டித்தார் .

அக்சயாவின் எண்ணம்: தன் திருமணதிற்கு பின் தன் தாய், தனிமையில் கஷ்ட படுவதை தவிர்க்க , வயது முதிர்வின் போது ஒரு துணை வேண்டும் என்ற என்ற எண்ணத்தில் எடுத்த முடிவு.

மணிராம் கார்த்திக் என் பெயர் : மணிராம் கார்த்திக். பிறந்த வருடம் : 25-ஜனவரி -1987 ஊர் - மதுரை மாவட்டம் , அனுப்பானடி . அப்பா : மணிராம் - அம்மா : மகாலட்சுமி - மனைவி : சித்ரா. நான் BCOM பட்டதாரி. 2007ம் ஆண்டு கல்லுரி படிப்பை முடித்தேன். தற்போது தனியார் ஜவுளி சார்ந்த கடை ஒன்றில் கணக்காளராக பணியாற்றி வருகிறேன். எனக்கு கதை எழுதும் ஆர்வம் ,…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *