வன்சொல் நன்மையைக் கெடுக்கும்
(1955 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
ஒரு புலவர் வறுமையால் மிகவும் வாடினார். ஒரு செல்வனைக்கண்டு ஏதேனும் பரிசில் பெற்று வரலா மென்று சென்றார். அந்தப் புலவர் எல்லா நூல்களை யும் நன்கு படித்துணர்ந்தவராக இருந்தும் இன்சொல் பேசுவதற்கு உணராதவராக இருந்தார். செல்வனைக் கண்டு தமது வறுமை நிலைமையை உருக்கமாக உரைக்கவில்லை. அழுத்தந் திருத்தமாகவும் வெட் டொன்று துண்டு இரண்டு என்பதைப்போலவும், “ஏதாவது கொடுக்க முடியுமா? முடியாதா?” என்று கண்டிப்பாகப் பேசினார்.
அந்தச் செல்வன் இயற்கையில் நல்லவன் தான். இரப்பார்க்குத் தன்னால் இயன்ற உதவியைச் செய்து தான் அனுப்புவான். ஆனால், இந்தப் புலவருடைய கண்டிப்பான பேச்சு அவனுக்குப் பிடிக்கவில்லை. அவன் புலவரைப் பார்த்து, “ஐயா பெரியவரே! தங்க ளுடைய கண்டிப்பான பேச்சுக்கும் நமக்கும் பொருந்தி வராது. ஆகையால், வந்த வழியைப் பார்த்துக் கொண்டு திரும்பிப் போங்கள்,” என்று கூறிவிட்டான்.
புலவர் வெளியே வந்தார். ஒரு வேலையாள் புலவருக்கு முன் வந்து அவருடைய வழியை மறித்து நிறுத்தினான். “ஐயா அவர்கள் தங்களிடம் கொடுக்குமாறு கொடுத்தார்கள்; இதனைப் பெற்றுக் கொள்ளுங்கள்,” என்று கூறி நூறு வெண்பொற் காசுகளை அவருடைய கையிலே கொடுத்தான். அதனைப் பெற்றுக்கொண்ட புலவர், ‘நாம் இத்தகைய வள்ளலிடம் இனிமையாகப் பேசியிருந்தால் எவ்வளவோ பொருள் கிடைக்குமே’ என்னும் எண்ணத்துடன் திரும்பிச் சென்றார்.
“வெட்டெனப் பேசேல்” (இ – ள்.) வெட்டு என – கத்தி வெட்டைப்போல, பேசேல் – ஒருவரோடுங் கடினமாகப் பேசாதே.
– கருப்பக்கிளர் சு.அ.இராமசாமிப் புலவர், ஆத்திசூடி விளக்கக் கதைகள் (இரண்டாம் புத்தகம்), முதற் பதிப்பு: டிசம்பர் 1955