வந்தது எதற்கு?





(2005ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
திரு.சுதாராஜ் அவர்கள் சிறுகதைகள் தளத்திற்கு எழுதிய 100வது சிறுகதை. சிறுகதைகள்.காம் தொடங்கப்பட்ட ஆரம்ப காலம் முதல் (2013) தொடர்ந்து சிறுகதைகளை வெளியிட்டு வருகிறார். 100+ கதைகளை வெளியிட்ட 18வது எழுத்தாளர். வாழ்த்துக்கள் ஐயா.

(இதில் வரும் மனிதர்கள் உண்மையானவர்கள், கற்பனைப் பாத்திரங்கள் அல்ல. கட்டுக் கதைகளும் அல்ல. – சுதாராஜ்)
அறிமுகமாகிய ஓரிரு மணித்தியாலங்களிலேயே அவன் எனக்கு நெருக்கமாகிவிட்டான். அவனுடைய பெயர் இப்போது எனக்கு ஞாபகமில்லை. (ஏன், அப்போதுகூட ஞாபகமில்லைதான்) சட்டென மனதிற் பதியாததும் நீண்டதுமான பெயராயிருந்தது. நீங்களே சொல்லுங்கள்.. ரஷ்யமொழித்தொனியுள்ள ஒரு நீண்ட பெயரை உச்சரிக்கும்போது நாக்குக் கொளுவிக் கொள்ளும் சங்கடம் இருக்காதா, என்ன?
ஒருவேளை நீண்ட காலம் அவன் எங்களுடன் பழகும் சந்தர்ப்பம் கிடைத்திருந்தால் அவனது பெயரின் ஒரு குறுகிய பதத்தையாவது கண்டுபிடித்திருக்கலாம். உக்ரேன் நாட்டைச் சேர்ந்தவன் அவன். உயர்ந்த கம்பீரமான தோற்றம். அகன்று பரந்த நெஞ்சு. கப்பல் கப்டின் அவனை ‘மார்க்கோணி” என்றே அழைப்பார். அந்த ஆகுபெயரிலேயே நானும் அவனை அழைப்பேன். மார்க்கோணி என்பது கப்பலில் ரேடியோ அலுவலராகப் பணிபுரிபவரின் கிரேக்க பாஷையிலான பதவிப் பெயர்.
அவனை இன்னும் சரியாக அறிமுகப் படுத்துவதானால் இதற்கு முதல் எழுதிய அத்தியாயத்தின் தொடருக்குப் போகவேண்டும்.
வானலைக் கருவி அலுவலரோ முதன்மை என்ஜினியரோ பயிற்றப்பட்ட மாலுமிகளோ அற்ற கப்பலில் யேமனிலிருந்து பயணித்து அண்மையிலுள்ள நாடான ஜிபூர்ட்டியைச் சென்றடைந்தோம். தலைமை அலுவலகத்துடன் தொடர்பு கொண்டதில் ஒரு முதன்மை என்ஜினியரையும் ரேடியோ அலுவலரையும் (மார்க்கோணி) உடனே அனுப்பி வைத்தார்கள். எங்கள் பயணத்தைத் தொடர்ந்து மேற்கொள்வதற்கு இவர்கள் இன்றியமை யாதவர்களா யிருந்தார்கள்.
தலைமை அலுவலகத்தின் கட்டளைப்படி நாங்கள் அடுத்து ருமேனியாவுக்குச் செல்ல வேண்டியிருந்தது. முதலில் சவூதி அரேபியாவுக்குச் செல்லும்படியும் மாலுமி தரத்திலுள்ளவர்கள் அங்கு எங்களோடு சேர்ந்து கொள்வார்கள் என்றும் பணிப்புரைக்கப்பட்டது.
கம்பனியின் வேறு கப்பலில் இருந்து தற்காலிகமாகத்தான் மார்க்கோணியை இங்கு அனுப்பியிருந்தார்கள். ருமேனியா போகும்வரை இந்த மார்க்கோணி பணிபுரிவான். பின்னர் வேறு ஒருவர் மாற்றப்படுவார்.
மார்க்கோணி வந்த நேரத்திலிருந்தே அவனது பணியைத் தொடங்கி அதில் மும்முரமாக ஈடுபட்டிருந்தான். ஆர்வம் காரணமாக நானும் அவனோடு சேர்ந்து பல திருத்த வேலைகளுக்குக் கை கொடுத்தேன். கப்பல் புறப்படுவதற்கு முன்னர், வானலைக் கருவிகளை ஓரளவு சரிசெய்து இயங்கு நிலைக்குக் கொண்டுவந்தான். மார்க்கோணிக்குக் கப்பலில் எல்லோரும் புதுமுகம் ஆதலால், கூடச் சேர்ந்து பழகிய என்னுடன் இயல்பாகவே மிக நட்புணர்வு கொண்டான். வேலையற்ற நேரங்களிலெல்லாம் என்னுடன் வந்து பேசிக் கொண்டிருப்பான். இரண்டொரு நாட்களிலேயே உற்ற நண்பனைப் போல சொந்த விஷயங்களையும் மனம் விட்டுக் கதைப்பான்.
ஒருசில நாட்கள்தான் இப்படிப் பகிர்தலும் அமைதியானதுமாகப் பொழுதுகள் கழிந்தன. கப்பல் ருமேனியாவை நோக்கிப் பயணித்துக் கருங்கடலை அடைந்தபோது, காலநிலையில் சடுதியான மாற்றங்கள் தோன்றின. காற்று கடுமையாக வீசத் தொடங்கி பெரும் புயலாக மாறியது. கப்பல் புயலிற் சிக்குண்டு அலைக்கழிந்தது. (இதைப்பற்றி இங்கு விபரமாக எழுதப்போவதில்லை.) ஆனால் அந்த இரண்டு நாட்களும் கண் துஞ்சாது கணத்துக்குக் கணம் கால நிலை மாற்றங்கள், காற்றின் வேகம், திசை போன்ற தகவல்களைச் சேகரிப்பதில் அவன் ஆற்றிய பணி ஆச்சரியமூட்டியது.
கப்பல் கப்டின் கூட பதட்டத்தின் உச்ச நிலையில் இருந்தார். அவர் தளர்ந்து போன நேரங்களிலெல்லாம் மார்க்கோணி பக்கத் துணையாய் நின்று அவரது பணியில் உதவினான். கப்பற் பயணத்தில் இதுபோன்ற முன் அனுபவம் இல்லாத எங்களின் நிலைபற்றிச் சொல்லத் தேவையில்லை. எங்களது பயத்தையும் பதட்டத்தையும் தெளிவிக்கும் முயற்சியையும் மார்க்கோணி செய்தான்.
“சரியான முறையிற் கட்டப்பட்ட ஒரு கப்பல் எந்தப் புயலிலும் கடலில் மூழ்காது. பயப்படவேண்டாம்.”
ஆனால் எங்களுடைய கப்பலோ, கட்டப்பட்ட பின்னர் கப்பலாக தொழிற்சாலைக் ஒரு மாற்றியமைக்கப்பட்டது. பெரிய இயந்திரங்கள் பொருத்தப்பட்டமையாலும், தொழிற்சாலை அமைப்புக்களாலும் அதன் சமநிலை பாதிக்கப் பட்டிருக்குமோ என்ற பயம் எங்களுக்கு.
இந்த நேரத்தில் ‘சகல கப்பல் கப்டின்களுக்கும்’ என ஒரு அறிவித்தல் வந்தது – துறைமுக அதிகாரி பேசினார் இரு கப்பல்கள் அதிலிருந்த அனைவருடனும் கடலில் மூழ்கிவிட்டதாகவும், உங்களுடைய பாதுகாப்பை உறுதிசெய்துகொள்ளுங்கள் எனவும் கூறப்பட்டது. இதைக் கேட்டதும் கப்டின் செயலிழந்த நிலைக்குள்ளானவர் போலானார். மார்க்கோணி கிட்டத்தட்ட அவரது பணிகளில் முழுமையாகவே ஈடுபட்டதுபோல பக்கபலமாக நின்றான்.
காற்றின் வேகத்திற்கும் திசைக்கும் தகுந்தமாதிரி, எந்தத்திசையிற் கப்பலைச் செலுத்தலாம் எனத் தீர்மானிப்பதில் மார்க்கோணி கப்டினுக்கு உதவினான். காற்றின் திசையை ஊடறுத்துச் செல்லும் போதெல்லாம் நாங்கள் பின்நோக்கித் தள்ளப்பட்டுக் கொண்டிருப்பதை, வரைபடத்தில் நாங்கள் நிற்கும் நிலையைக் குறிப்பெடுக்கும்போது தெரிந்தது.
ருமேனியா நோக்கி வந்த நாங்கள் ரஷ்யப் பகுதியெல்லாம் காற்றினால் அலைக்கழிக்கப்பட்டோம். காற்று ஓய்ந்தபாடில்லை. எல்லோரும் அவரவர் தெய்வங்களை வேண்டிக் கொண்டிருந்தோம்.
இரண்டாம் நாள் நடு இரவில் பல பெருமூச்சுக்களுடன் காற்று ஒரு கட்டுப்பாட்டுக்குள் வந்து ஓய்ந்தது.
நாங்கள் ருமேனியா நோக்கி வந்து கொன்ஸ்ரான்ரா துறைமுகத்தில் நங்கூரமிட்டோம். அடுத்த நாள் கப்பல் துறைமுகத்துக்கு உள்ளே கொண்டு செல்லப்பட்டு கட்டப்பட்டது.
அப்போது பனிமழை பெய்துகொண்டிருந்தது. குளிர். கை நீள ஜக்கட்டுக்களுடனும் மூடிக் கட்டிய தொப்பிகளுடனும் மனிதர்கள் பணியில் ஈடுபட்டிருந்தார்கள். மரங்களிலெல்லாம் வெண்பஞ்சு பூத்திருந்தது. இந்தப் பனிக்குளிரும் வெண்பஞ்சுத் தூற்றலும் மூடிக் கொண்டிருக்கும் கொன்ஸ்ரான்ரா துறைமுக நகரைச் சுற்றிப் பார்க்கும் விருப்பத்தில் நானும் எனது என்ஜினிய நண்பர் ஒருவரும் வெளியே கிளம்பினோம்.
ரக்சியில் நகருக்கு வந்து, காலாறப் பல வீதிகளிலும் சுற்றிச் சுற்றி நடந்தோம். கடலிற் பல நாட்கள் பயணித்து வந்த பின் பூமியிற் கால் பதித்து நடப்பது ஒருவித இதம்! சுகம்! காலை பத்தோ பதினொரு மணிப் பொழுதானாலும் சூரியன் இன்னும் தலை காட்டாமலிருந்தான். அதைப் பொருட்படுத்தாது மக்கள் தங்கள் கடமைகளைச் செய்து கொண்டிருந்தனர்.
கோப்பி குடிப்பதற்காக ஒரு ரெஸ்ரோரன்டுக்குள் போனோம். ஜக்கட்டும் சப்பாத்தும் அணிந்து குளிரிலிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொண்டு சில சிறுவர்கள் எங்களிடம் கையேந்தி பிச்சை கேட்டுக் கொண்டிருந்தார்கள். ஒருவருக்கு ஏதாவது கொடுத்தால் இன்னும் சில சிறுவர்கள் கூடிக் கூடிப் பின் தொடர்ந்து வந்தார்கள். நாங்கள் ரெஸ்ரோரன்டுக்குள் நுழைந்ததே இந்தத் தொல்லையைத் தவிர்த்துக் கொள்வதற்காகத்தான். வாசலில் நான்கைந்து சிறுவர்கள் வந்து நின்று கையேந்தினார்கள்.
அவர்களைக் கவனிக்க வேண்டாம்.. நாங்கள் எங்கள் பாட்டில் இருப்போம்…” என நண்பன் எனக்குப் புத்திமதி கூறினான்.
நாங்கள் மறுபக்கம் பார்த்தோம். கோப்பியை எடுத்துக் குடிப்பதும் பின்னர் கோப்பிக் கோப்பையை மேசையில் வைப்பதுமாகப் பேசிக் கொண்டிருந்தோம். ஒரு கட்டத்தில் நாங்கள் கோப்பையை மேசையில் வைத்தபோது சட்டென இரு சிறுவர்கள் பாய்ந்து எங்களது கோப்பியை எடுத்துத் தங்களது பாத்திரத்தில் ஊற்றிக் கொண்டு பறந்து போனார்கள். கண் மூடி விழிப்பதற்குள் இது நடந்தது போலிருந்தது.
வெறும் கோப்பைகள் ‘என்னைப் பார் உன்னைப் பார்’ என்பது போல முன்னே கிடந்தன. ரெஸ்ரோரன்ட் சிப்பந்தி எதுவும் நடக்காததுபோல வந்து எங்களிடம் பில்லைத் தந்துவிட்டு கோப்பைகளை எடுத்துக்கொண்டு போனான். பணத்தைச் செலுத்திவிட்டு நாங்கள் வெளியேறினோம். (வாசகர்கள் மன்னிக்க வேண்டும். கதை தடம் மாறிப் போவதாகக் கருதவேண்டாம். மார்க்கோணி சீக்கிரம் வருவான்.)
கடைகளின் ஷோகேஸ்களைப் பார்த்தவாறு நடந்தோம். சில கடைகளுக்குள் ஏறி இறங்கினோம். குளிர் உடுப்புக்கள் வாங்கினோம். ‘இனித் திரும்பப் போகலாம்’ என முடிவெடுத்துக்கொண்டு வெளியே வந்தோம்.
நண்பன் கேட்டான் : “கொஞ்சத் தூரம் நடந்தே போவமா…?”
கப்பலில் பெண்களின் குரலையேனும் கேட்கமுடியாது அடைந்து கிடக்கிறவனுடைய மனநிலை எனக்குத் தெரியும்.
“சரி…!” என்றேன்.
சற்றுத் தூரம்தான் நடந்திருப்போம்.
எனது கைகளைப் பின்னாலிருந்து யாரோ பிடித்து இறுக்கினார்கள். ஒருவரல்ல. இருவர் இரு பக்கமும்! முன்னால் ஒருவன் வந்து எனது ஜக்கட்டின் பொக்கட்டினுள் கை விட்டான். நான் திமிறித் தடுத்தேன். அந்தப் பொக்கட்டினுள்ளிருந்த பேஸை (காசை) எடுத்துக் கொள்வதற்குப் பிரயத்தனப்பட்டார்கள். எனது நண்பன் திகைத்துப்போய் நின்றான். (என்னை விட்டு ஓடவும் ஆயத்தம்!) நான் இன்னமும் திமிறிக் கொண்டிருந்தேன். அவர்கள் விடவில்லை. வீதியிற் போய்க் கொண்டிருந்த ஒருசிலருக்கும் எனது பரிதாப நிலை புரிந்தமாதிரித் தெரியவில்லை. அவர்கள் அவர்களது பாட்டிற் போய்க்கொண்டிருந்தார்கள்.
‘இது சரிப்படாது… பேஸைக் கைவிட வேண்டியதுதான்…’ என்று தோன்றியது. அவர்களுடன் பிடுங்குப்பட்டுக்கொண்டே பேஸிற்குள் சுமார் எவ்வளவு பணமிருக்கும் என மனதிற் கணக்கெடுத்தேன். பணம் அதிகமாயிருந்தால் எதிர்த்துப் போராடிப் பார்க்கலாம். அல்லது அவர்கள் கத்தியைக் கித்தியை எடுத்துக் காட்டுவதற்கு முன்னர் ‘போகட்டும்!’ எனக் கை விட்டு விடலாம்…விட்டுவிட்டேன். அது போய்விட்டது.
எடுத்துக்கொண்டு ஓடினார்கள். ஓடி மறைந்தார்கள்.
நாங்கள் வந்துவிட்டோம்.
அவர்கள் உங்களைத் தொடர்ந்து வந்திருப்பார்கள்… நீங்கள் கவனிக்கவில்லை. நீங்கள் போன கடைகளுக்கெல்லாம் அவர்களில் ஒருவன் தொடர்ந்து வந்திருப்பான்… நீங்கள் பொருட்களை வாங்கிவிட்டு பேஸை பொக்கட்டினுள் வைத்தபோது, கவனித்து… தனது சகாக்களுக்குக் கைத் தொலைபேசியில் தகவல் கொடுத்திருப்பான். அதனாற்தான் சரியாகக் காசுள்ள பொக்கட்டினுள் கை வைக்கிறார்கள்.” – இவ்வாறு மார்க்கோணி கவலைப்பட்டான்.
“வீதியில் இவ்வளவு இழுபறி நடந்தும் யாரும் பொருட்படுத்தவில்லையே…” என எனது சந்தேகத்தைக் கேட்டேன்.
“இவர்கள் ஒவ்வோரிடங்களாக அலைந்து திரியும் ஜிப்ஸிகள். முரட்டுத்தனமானவர்கள். இந்தத் துறைமுக நகருக்கு வரும் வெளிநாட்டவர்தான் இவர்களது இலக்கு. பொலிஸ்காரர்கூட இதைக் கவனிக்காதமாதிரித்தான் தெரிகிறது. எல்லாவற்றுக்கும் வறுமைதான் காரணம். ஒரு காலத்தில ஐரோப்பாவின் பணக்கார நாடாக இருந்தது ருமேனியா… இதை ஆட்சி செய்தவர்கள் எல்லாவற்றையும் நாசமாக்கிவிட்டார்கள்…
என் மனக் கண்ணில் கையேந்திக்கொண்டு நின்ற சிறுவர்கள் தோன்றினார்கள். அவர்களது எதிர்காலமும் இப்படித்தான் மாறிப் போகுமோ…?
அடுத்த நாள் மார்க்கோணி என்னை அழைத்தான்.
“வெளியே போய் ஒரு கோப்பி அருந்தி வரலாம்… வருகிறாயா…?”
“ஐயோ…!”
“என்ன… பயப்படுகிறாயா…?”
“நான் வரவில்லை… நீ போய்விட்டு வா…!” முதல் நாளின் நடுக்கம் இன்னும் என்னை உலுக்கியது .
ஆனால் மார்க்கோணி என்னை வற்புறுத்தினான்.
“நாங்கள் அவதானமாகப் போய் வரலாம்… நான் சில பொருட்களும் வாங்கவேண்டும்… அவங்களுக்குப் பயந்துகொண்டு உள்ளே முடங்கிக் கிடக்கவேண்டாம்… வா!”
மார்க்கோணியுடன் சென்றேன். கடைத் தெருவில் நடந்தபோது எனக்கு மிரட்சி. மார்க்கோணி இங்கும் அங்கும் ஒவ்வொரு கடையாக என்னை அழைத்துக்கொண்டு (அல்லது அலைந்துகொண்டு) திரிந்தான். எனக்கு அவன்மேல் எரிச்சல்கூட வந்தது.
மார்க்கோணி சில பொருட்களை வாங்கினான். நானும் (துணிவு வரப் பெற்றவனாக) தேவையான பொருட்களை வாங்கினேன். திரும்புவதற்காக வெளியே வந்தபோது, “சுணங்காமல் ரக்ஸியைப் பிடித்துக்கொண்டு போவோம்” என மார்க்கோணியிடம் கூறினேன்.
“இல்லை… இன்னும் சில அலுவல்கள் இருக்கு…!”
நாங்கள் வீதியில் நடந்தோம்.
இவர்கள் எங்கிருந்து வருகிறார்கள் என்றும் தெரியாது. எப்படி வருகிறார்கள் என்றும் தெரியாது. எதிார்பாராத தருணத்தில் என்னைப் பிடித்துக் கொண்டார்கள். ஓநாய்களைப்போல சுற்றி நின்றார்கள். நான் திமிறினேன்.
கண் இமைக்கும் நேரத்தில் கண்கள் மின்னும்படியாக ஒரு உதை விழுந்தது.
மார்க்கோணிதான்! என்னைப் பிடித்துக் கொண்டவன் உதை பட்டு விழுந்தான். அவனது சகாக்கள் மார்க்கோணியை எதிர்த்து அடிக்க முயன்றார்கள்.
நடுச் சந்தியில் வாகனங்கள் அங்கும் இங்கும் பிரேக் போட்டு நிற்க, தனியொருவனாக நின்று கைகளாலும் காலினாலும் அவர்களுக்குப் பதில் சொல்லிக் கொண்டிருந்தான் மார்க்கோணி.
அவனை எதிர்கொள்ள முடியாது அவர்கள் ஓட்டம் பிடித்தார்கள்.
“சரி..! வா..! இனிப் போகலாம்..!” என எனது கையைப் பிடித்து அழைத்தான் மார்க்கோணி.
ரக்ஸியில் ஏறினோம்.
“இவர்கள்தானே நேற்று உனது பேஸைப் பறித்தது..?” என என்னிடம் கேட்டான்.
“இவர்கள்தான்..!”
“நான் வந்தது இதற்காகத்தான்..!”
தனது கையில் விசேடமாகப் பூட்டி வந்த பெரிய இரும்பு மோதிரத்தைக் காட்டினான்: “இது அவர்களது அலகை உடைத்திருக்கும்!”
நான் இன்னும் பிரமிப்புடன் அவனைப் பார்த்தேன்.
– மல்லிகை, 2002.
– மனித தரிசனங்கள் (சிறுகதைகள்), முதற் பதிப்பு: 2005, மணிமேகலைப் பிரசுரம், சென்னை.
![]() |
விபரக்குறிப்பு இயற்பெயர்: சிவசாமி இராஜசிங்கம்புனைபெயர்: சுதாராஜ்கல்வி: பொறியியற் துறை, மொரட்டுவ பல்கலைக்கழகம், இலங்கை. தொடர்புகளுக்கு:முகவரி: சி.இராஜசிங்கம், (சுதாராஜ்)சீ கிறெஸ்ட் அபார்ட்மென்ட்,189/1, 6/1, மகாவித்தியாலய மாவத்த,கொழும்பு 13, இலங்கை. S.Rajasingham (Sutharaj)Seacrest Appartment,189/1, 6/1, Mahavithyalaya Mawatha,Colombo 13, Srilanka. தொலைபேசி: 0094 112380999 (இலங்கை)தற்போதைய தொலைபேசி தொடர்பு: 00218 913084524 (லிபியா) E mail: rajsiva50@gmail.comrajasinghamsivasamy@yahoo.com படைப்புகள்: (வெளிவந்த நூல்கள்) சிறுகதைத் தொகுப்பு பலாத்காரம் - தமிழ்ப்பணிமனை வெளியீடு -1977…மேலும் படிக்க... |