வடுக்கள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 22, 2025
பார்வையிட்டோர்: 200 
 
 

(2002ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

வெயில் அதி உக்கிரமாகக் கொளுத்திக் கொண்டிருந்தது. 

மண்டையைப் பிளக்கிற தலை வலி. ‘அட்வான்ஸ் லெவலில்’ ஆழ்வாப்பிள்ளை சேர் ஓகனிக் கெமிஸ்றி’ படிப்பிக்கும் போது வருமே… அந்த மாதிரி. 

வீதியோரம் குடைவிரித்திருந்த அந்த ஆலமரத்தடியில் சிறிது நேரம் தரித்து நிற்கின்றேன். தஞ்சமென வருவோர்க்கு எல்லாம் தாராளமாகவே இடம்கொடுப்பதற்கென நிறையவே கிளைகளைச் சுமந்துகொண்டு நின்றது அந்த மரம். 

இன்னும் ஒரு மைல் தூரமாவது சைக்கிளை மிதிக்கவேண்டும். அதன் பின்னர்தான் ஓவியர் பரசுராமன் வீட்டிற்குப் பிரிந்து செல்லும் முடக்கு வரும். 

ஆறு வருடங்களுக்கு முன்னர், இறுதியாக ஊர் வந்து நின்றபோது, பரசுராமனைச் சந்திக்கக் கூடவே தங்கராசனும் வந்திருந்ததில், பிரதான வீதியிலிருந்து கோபித்துக்கொண்டு போகுமாப் போல் இருண்ட, ஒடுங்கிய பனங்கூடல் பாதையொன்றில் போய் முடியும் அவரது வீட்டிற்குச் செல்லும் வழியினை இனங்காண அதிகளவில் சிரமம் இருக்கவில்லை. 

அந்த மைமல் பொழுதிலும் தங்கராசன் என்ன மாதிரி பனங்காணிகளினூடாகக் கூட சைக்கிளை வேகமாக ஓட்டிச் சென்றான். ஈடுகொடுக்க முடியாது ‘சைக்கிள் பெடல்’ தடக்கி நாலைந்து தடவைகள் பனை மரங்களோடு மோதியபடியே நான் அவன் பின்னால் சென்றேன். 

தண்ணி பட்டபாடாகச் செல்லுமளவிற்கு அந்தப் பாதைகளுக்கும் தங்கராசனுக்கும் அப்படி ஒரு காதலா என்று கூட நான் வியந்ததுண்டு. 

ஆனால், காதல் அப்பாதைகளுக்கும் அவனுக்கும் அல்ல, கிளாலிக் கடலேரிக்கும், அவனுக்குமே என்பதை நிரூபித்தது அவனது அகாலமரணம். 

வடமராட்சிச் சனங்களெல்லாம் கால்நடைகள் சகிதம் இடம்பெயர்ந்து வன்னி சென்ற காலகட்டத்தில் தான் கிளாலிக் கடற்பரப்பில் தங்கராசனின் மரணம் நிகழ்ந்தது. 

‘தங்கராசன் என்ன ஆனான்?’ என்று பரிதவித்த அவனது குடும்பத்தினருக்கு சன்னங்கள் துளைத்த அவனது உடல் பூநகரிக்கரையில் ஒதுங்கியது என்ற தகவல் மட்டுமே கிடைத்தது. 

‘சைக்கிள்’ மீண்டும் ஓடத் தொடங்குகின்றது. 

கற்றாளைகளும், காரைமுட்செடிகளுமாக காடு பத்திப்போயிருந்த நிலங்களிலெல்லாம் குடிசைகள் அமைக்கப்பட்டிருந்தன. சில குடிசைகளின் ஒத்தாப்பு களிலிருந்து வானொலிப் பெட்டி ‘விக்கி, விக்கி’ செய்தியை ஒலிபரப்பிக் கொண்டிருந்தது. அருகே ‘சைக்கிளை’ கவிழ்த்து வைத்து கைகளால் ‘பெடலைச்’ சுழற்றி வானொலிப் பெட்டிக்கு சக்தியூட்டியவாறே புன்னகை கழன்ற முகங்களுடன் சிலர். 

‘ஏ ஒன்பது’ பாதைபோல் எங்கள் நிலங்களுக்கான பாதை எப்போ திறக்கும்? என்ற ஆசுவாசப் பெருமூச்சுடன் அவர்கள். 

வீதியின் இரு மருங்கிலும் இடையிடையே கிடுகுக் கொட்டிலினால் அமைக்கப்பட்ட சிறு சிறு கடைகள். 

தேங்காய்களோ, மரக்கறிவகைகளோ, விறகுக் கட்டுகளோ குவிக்கப்பட்டும், வாழைக்குலைகள் தொங்கிக்கொண்டும், மண்ணெண்ணெய் போத்தல்களில் அடைக்கப்பட்டும் அக்கடைகளில் இருந்தன. “வா,வா” என அழைத்தவாறே இளநீர் குலையும் ஓரிடத்தில் தொங்கிக் கொண்டிருந்தது. ஆனால், பெரும்பாலும் எல்லாக் கடைகளிலும் பட்டடையில் இருந்தவர்கள் கொட்டாவி விட்டபடியே இருந்தார்கள். 

தேங்காய்களையும், காய் பிஞ்சுகளையும் குவித்து அன்றாட சீவியத்துக்காக இம்மண்ணில் இந்த நிமிடங்களில் கடை விரித்திருக்கும் இவர்கள் தங்களது சொந்தத் தேசங்களில் தென்னந்தோப்புகளின் சொந்தக்காரர்களாகக் கூட இருந்திருக்கலாம். 

தனது முகப்பு வேலி முட்கம்பிகளை எங்கோ ஒரு ‘சென்ரிப்பொயிண்டிற்காக’ தாரை வார்த்துக் கொடுத்த நிலையில் ஒரு சிறிய பள்ளிக்கூடம். ஏதோ ஒரு கனிஷ்ட வித்தியாலயம் என வானவில் வடிவில் சுவரில் எழுதி யிருந்தார்கள். துப்பாக்கி குண்டு மாரி பொழிந்ததில் பாடசாலையை இனங்காட்டும் பெயரும், கூடவே சரஸ்வதி சிலையின் முடியும் உடைந்து கம்பியில் தொங்கிக் கொண்டிருந்தன. 

அப்பாடசாலை அகதிகளால் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது. வகுப்பறைகளில் சேலைகளும்,பாவாடை, சட்டைகளும் உலர்ந்து கொண்டிருந்தன. 

பள்ளிக்கூடத்தில் ஒரு குழாய் கிணற்றடி! அதனருகில் மரக்கறிச் சமையல் மணத்தது. கோயில்களில் அன்னதானத்திற்கு காய்கறி அவிக்குமாப்போல சிலர் நீள அகப்பை கொண்டு அடுப்பிலிருந்த கிடாரத்தினைத் துளாவிக் கொண்டிருந்தார்கள். 

என் நினைவு சரியானதெனில் இடது பக்கமாக அடுத்துவரும் முச்சந்தியே பரசுராமனின் வீட்டிற்குச் செல்லும் திருப்பமாக இருக்கவேண்டும். தங்கராசன் தவறிவிட்ட செய்தியினை நானறிந்த பின்னர், ஐந்தாறு தடவைகள் இதே பாதையூடு பரசுராமனிடம் அவனோடு செல்வது போன்ற கனவு வரும் போதெல்லாம்…… பரசுராமனின் வீட்டுக்கு செல்லும் முடக்கு வருமுன்னரே கனவு குழப்பிப்போவது………. ஏனோ இப்போது நினைவில் வந்து தொலைக்கிறது. 

எதிரே குரோட்டன் செடிகளுடனும், சில அசோக மரங்களுடனும் கூடிய அமெரிக்கன் ‘பாஷன்’ வீடொன்று ‘வானிடிந்து வீழுகின்ற போதிலும் அச்சமென்பதில்லையே!’ என்ற பாரதியின் வரிகளுக்கு உயிர் கொடுத்துக் கொண்டிருந்தது. 

‘இந்தப் பானை வற்றினால் தான் எங்கள் வயிறு நிரம்பும்’ என்று எழுதி ஒட்டியதைப் போன்ற முகத்துடனும், மோர்ப் பானை ஒன்றுடனும் பேரூந்து தரிப்பில் ஒரு சிறுவன். பாடசாலைச் சீருடைத்துணியில் தைத்த அரைக் காற்சட்டையை அவன் அணிந்திருந்தான். 

‘இதமான சவாரிக்கு இச்சைக்கிளைத் தேர்ந்தெடுங்கள்!’ என்று ஏதோ ஒரு சைக்கிளிற்கு பத்திரிகையில் வந்த விளம்பரத்தினை ஞாபகமூட்டுமாப் போல், நாலைந்து பெண்பிள்ளைகள் வீதியின் பெரும் பகுதியினை குத்தகைக்கு எடுத்த நிலையில் என்னை ஓரங்கட்டி, நான் வந்த திசை நோக்கிச் சென்று கொண்டிருந்தார்கள். 

அவர்களுக்கு வழிவிட்டு என் ‘பலன்ஸ்சை’ சரிசெய்து; ‘பெடலினை’ மிதித்தபோது அந்த முச்சந்தி என்னை வரவேற்றது. 

ஆனால், அந்த முச்சந்தி முடமாக்கப்பட்டிருந்தது. 

அதனை மையங்கொண்டு பெரிய ‘பண்ட்’ ஒன்று பின்னால் தோட்டத்தை ஊடறுத்துச்செல்கிறது. 

புகையிலையும், மரவள்ளியுமாக அப்போதெல்லாம் காட்சியளித்த தோட்டத்தறையில் புல் பூண்டுகளும், செடிகளும் பச்சைக் கம்பளம் விரித்திருந்தன. 

முடிச்சவிழ்ந்த மண் மூடைகளும் முக்கோணமாக சரிந்த பச்சைப் ‘பெயிண்ட்’ அடித்த தகரப் பீப்பாக்களுமாக ‘சென்றிப் பொயிண்ட்’ ஒன்று உருக்குலைந்து போயிருந்தது. ‘மிதிவெடி கவனம்’ என்ற அறிவிப்புப் பலகை ஒன்று நிலத்தில் விழுந்து பாதி புதையுண்டு கிடந்தது. 

வீதியெங்கும் ‘ஓ’ என்ற ஒருவித அமைதி. 

குரக்கன் பிட்டு வாசனை எங்கிருந்தோ வந்து மூக்கைத் துளைத்தது. கீரி ஒன்று பற்றைகளைப் பிய்த்தவாறே பாய்ந்து சென்றது. 

வீதியின் மறுபுறத்தே மாடி வீடொன்றின் கூரையும், படிகளும் இந்நிமிடமே நியூட்டனின் புவியீர்ப்புக் கோட்பாட்டினை நிரூபித்து விடுவோம் என அடம்பிடித்துக் கொண்டிருந்தன. 

அவ்வளவின் மூலையில் உக்கிப்போன கூரைக்கு ஈடுகொடுத்தவாறே ஒரு கொட்டில். நாலைந்து மாடுகள் அசைமீட்டவாறே அக்கொட்டிலில் படுத்திருந்தன. 

வீட்டு முற்றத்தில் எரிந்து கருகிய ‘கார்’ ஒன்று கோணலாக நின்றது. 

‘சைக்கிளைத்’ திருப்ப எத்தனித்தேன். 

‘அண்ணை, ஆரைத் தேடுறியள்?” உடைந்த குரலொன்று, அவ்வீட்டினை ஒட்டினாற் போல் அமைந்திருந்த குச்சொழுங்கையில் இருந்து மிதந்து வந்து என்னைத் திடுக்கிடவைத்தது. 

உருக்குலைந்த காட்சிகளால் ஸ்தம்பித்து நின்றதில் மாடுகளை மேய்த்தவாறே ஒழுங்கைக்குள் இருந்த அந்த நடுத்தர வயது மனிதர் மீது இதுவரை என் கவனஞ் செல்லவில்லை. 

செம்படை பற்றிய தலைமயிர், ஒடுங்கிய, தாடை விழுந்த முகம், குச்சி உடல், சாரத்தை மடித்துக் கட்டியிருந்தார். இரு கால்களையும் நீட்டிக்கொண்டு விழுந்த மதில் கல்லில் இருந்தவாறே இன்னமும் என்னையே பார்த்த வண்ணமிருந்தார். 

“இந்த ஒழுங்கையிலை இருக்கிற ஒருவரை சந்திக்கவெண்டு வந்தனான்.” வலது காலை நிலத்தில் ஊன்றியவாறே அவரது பதிலுக்காகக் காத்து நின்றேன். 

“நீங்கள் கனகாலமாக ஊரோடை இல்லையோ?’ 

“ஓமோம். நான் கொழும்பிலை வேலை செய்யிறனான். ஏழெட்டு வருசத்துக்கு பிறகு ஏ நயின் பாதை திறந்த கையோடை…… இப்பதான் வந்திருக்கிறன்.” 

“அதுதானே பார்த்தன். இப்ப ஐஞ்சாறு வருஷமா, அதுதான் ஆமிக்காறன் வந்ததுக்குப் பிறகு உந்தப் பகுதியில் சனங்கள் இடம்யெர்ந்து வேறை எங்கையோ இருக்குதுகள். ஆனால், எங்கையெங்கை இருக்கினமோ தெரியாது. கொஞ்சச் சனம் வன்னிக்கும் போயிட்டுதுகள் எண்டு அறிஞ்சன்.” இன்னமும் கால்களை அகல விரித்தபடி இருந்தவாறே அவர் சொன்னார். 

அப்போதுதான் எனது பார்வை அவரைத் துழாவியது. 

அவரது காலின் வலதுபுறத்தே ஜெய்ப்பூர் கால் பொருத்தப்பட்டிருந்தது. இப்போது ‘சைக்கிளை’ விட்டிறங்கி நான் அவரது பக்கமாகச் செல்கின்றேன். 

“நீங்கள் இங்கைத்தையில் ஆளோ?” 

“இல்லைப் பாருங்கோ. நான் தென்மராட்சியைச் சேர்ந்தனான். எங்கடை பகுதியில் சனங்கள் 

சனங்கள் இடம் பெயர்ந்ததோடை இப்பிடித்தான் அலைஞ்சு திரிஞ்சு கடைசியிலை ‘பங்கார்’ அந்த வளவுக்கை வந்திருக்கிறம்” என்றவாறே பின்னால் இருந்த குடிசை ஒன்றைக் காட்டினார். 

“அப்ப இந்த விபத்து….” 

“அதை ஏன் அண்ணை கேக்கிறியள்?” நீட்டிய ஜெய்ப்பூர் கால் அப்படியே இருக்க இடதுகாலை இழுத்து கல்லோடு சேர்த்துக் கொண்டார். 

“இல்லை……. உங்களுக்குச் சொல்லுறதிலை சங்கடம் எண்டால் பரவாயில்லை” என்றவாறே எனது விபரங்களையும் பரசுராமனைத் தேடிவந்த தேவையினையும் அவருக்கு கூறிக்கொண்டிருந்தேன். 

“அந்த எழுத்தாளர் நீங்கள் தானோ?” என்றவர், என்ன நினைத்தாரோ, நீண்ட பெருமூச்சுடன் தனது மறுபக்கத்தைப் புரட்ட ஆரம்பித்தார். 


தென்மராட்சி மண்ணில் வசதியான வீடொன்றில் மனைவி, இருபெண் பிள்ளைகளுடனும் நிறையக் கற்பனைகளுடனும் இவர் வாழ்ந்து வந்தார். அவ்வூர் சங்கக் கிளை ஒன்றில் ‘மனேஜர்’ வேலை இவருக்கு. 

அத்தகைய வேளையில்… 

அசாதாரண புதிய கோலங்களுடன் அன்றைய காலை புலர்ந்தது. குண்டுகளை அம்புகளாகப் பொழிந்து கொண்டு வானில் ஏழெட்டுப் ‘பொம்பர்’கள் வட்டமிட்டுக் கொண்டிருந்தன. 

‘பட,பட’வென ஏதோ முறிந்து விழுகின்ற சத்தம் ஊரெங்கும் ஒலித்தது. 

ஏணையில் படுத்திய குழந்தைகளைக் கூட தூக்க அவகாசமில்லாமல் சனங்கள் நாலாபக்கமும் சிதறி ஓடினர். 

அவர்களோடு சேர்ந்து குடும்பத்தினருடன் இவரும் இடம்பெயர ஆரம்பித்தார். 

“வந்திட்டாங்கள்… வந்திட்டாங்கள்…கெதியாப் போங்கோ.” 

பின்னே வந்தவர்கள் அவசரம் காட்டினார்கள். வானம் வேறு இன்னமும் உறுமிக்கொண்டிருந்தது. 

ஒவ்வோர் முகத்திலும் பெருங்குழப்பம். 

குடிமனைகளைக் கடந்து வெளியினூடாக, வடமராட்சியை நோக்கி வந்துகொண்டிருந்தார்கள். 

வானிலிருந்து ‘பொம்மரும், ஹெலி’யும் குண்டு களையும், சன்னங்களையும் மூர்க்கத்தனமாகப் பொழிந்து கொண்டிருந்தன. சீறிக்கொண்டு அருகேயே குண்டு வந்து விழுவது போன்ற பிரமை. செவிப்பறை வெடித்துத் தொங்குவதைப் போன்ற உணர்வு. 

கடந்து வந்துகொண்டிருந்த வெளியிலேயே சனங்கள் விழுந்து படுத்தனர். குஞ்சு, குருமனுகளின் ‘கீயோ மாயோ’ குரல்கள் காற்றில் கலந்து அந்த வெளியெங்கும் ஒலித்தது. 

சிறிது நேரத்தில் வானம் ஓய்ந்தது. 

சனங்கள் கண்களை விழித்தவாறே எழுந்தார்கள். கையில் கொண்டு வந்த மூட்டைமுடிச்சுகள் எல்லாம் சிதறிப் போய்க்கிடந்தன. 

முதலில் இவர் எழுந்தார். 

தலையை வெளியே நீட்டிப்பார்த்தவாறே பதினாறு வயதுடைய மூத்தமகள் பின்பு எழுந்தாள். 

கீச்சுக்குரலுடன் இளையவள் அடுத்ததாக எழுந்தாள். 

ஆனால் இவரது மனைவி…… எழவே இல்லை. “அம்மா…. அம்மா எழும்புங்கோ…… அப்பா! அம்மா எழும்பாவாம் எழுப்புங்கோ!” 

இளையவள் சத்தமிட்டாள். 

மூட்டை முடிச்சுகளைச் சரிசெய்து கொண்டிருந்தவர் ஓடிவந்து குனிந்து பார்த்தார். அவளது கண்கள் மூடியிருந்தன. வயிற்றுப்பக்கத்தில் சேலை பிசுபிசுத்தது. நிலத்தில் இரத்தம் சொட்டுச் சொட்டாகச் சிந்திக்கொண்டிருந்தது. உடலைத் திருப்பிப் பார்த்தார். நெஞ்சில் குண்டு பாய்ந்திருந்தது. 

“அம்மா… என்ரை அம்மா……” இளையவளின் ஒலி வெளியில் முன்னால் சென்று கொண்டிருந்தவர்களையும் திரும்பவைத்தது. 

மீண்டும் வானத்தில் ஒலி கேட்க ஆரம்பித்தது. 

ஆள் முடிஞ்சு போச்சு. பிரேதத்தை விட்டுட்டு பிள்ளையளையும் புருஷனையும் இழுத்துக்கொண்டு வாருங்கோ. பிறகும் பொம்மர் வரப்போகுது.” 


“அப்பா…அம்மா எழும்பாவாம்…எழுப்புங்கே…அப்பா…அம்மா எழும்பாவாம்…எழுப்புங்கோ…” 

பின்னே வளவிலிருந்து குரல் கேட்டு மெல்ல எழுந்து அவர் உள்ளே செல்கிறார். ‘சைக்கிளை’ குச்சொழுங்கையின் முகப்பில் விட்டுவிட்டு நானும் அவரைப் பின்தொடர்கின்றேன். 

அந்தக் குச்சொழுங்கைக்குள் பூவரசம் சருகுகள் மாநாடு நடாத்திக் கொண்டிருந்தன. நான்கு, ஐந்து நாட் சாணி அள்ளப்படாது அப்படியே வரண்டுபோய்க் கிடந்தது. 

“அப்பா…அம்மா…எழும்பாவாம்.” 

பத்து வயது மதிக்கத்தக்க பெண்பிள்ளை ஒன்று குடிசைக்குள் இருந்து கீச்சுக்குரல் எழுப்பிக்கொண்டிருந்தது. 

“என்ன அண்ணை பார்க்கிறியள்? தாய் செத்த நாளையிலையிருந்து இந்தப்பிள்ளையின்ரை நிலையும் இப்பிடியாப்போச்சு.” 

அது பனையோலையால் வேயப்பட்ட ஒரு பழைய குடிசை. கூரையின் சில இடங்களில் தகரம் செருகப் பட்டிருந்தது. 

வாங்கில் ஒன்று குடிசையின் பெரும் பகுதியை ஏப்பம் விட்டிருந்தது. 

குடிசையின் ஒரு மூலையில் ஒரு பழைய கள்ளிப்பெட்டி. அதன்மேல் பிடி கழன்ற ஒரு ‘சூட்கேஸ்’. 

மாலின் மறுபுறத்தே மூட்டிய அடுப்பில் சோற்று உலை கொதித்துக் கொண்டிருந்தது. 

நிலத்தில் ஒரு ‘பிளாஸ்டிக்’ வாளி நிறைய நீருடன். 

அருகே அரிக்கன் சட்டியில் வெள்ளை அரிசி. மூடலொன்றின் முறிக்கப்பட்ட பயிற்றங்காய்கள். கீரைக்கட்டு ஒன்று சருவச் சட்டியிலிருந்து தலை நிமிர்த்திக் கொண்டிருந்தது. 

சவரம் செய்யப்படாத முகத்தைப்போல வேப்பமிலைகளும், பூக்களும் முற்றத்தை நிரப்பியிருந்தன. 

“எங்கை உங்கடை மூத்த பிள்ளையைக் காணேலை பள்ளிக்கூடம் போயிருக்கிறாவோ?” 

“இல்லை, அவள் பொடிச்சி வன்னியிலை.” 

“ஏன் ஆரும் சொந்தக்காரறோடையோ?” 

“இல்லை……போராளியளோடை!” அமைதியாகக் கூறிவிட்டு அவர் என்னை உற்றுப்பார்த்தார். 

நான் அவரது முகத்தை நேருக்குநேர் நோக்கும் சக்தியற்றவனாகின்றேன். 

குடிசையின் கப்பினைப் பிடித்தவாறே மெல்ல மெல்ல அவர் அடுப்பின் அருகே உள்ள குந்தில் அமர்கின்றார். 

“அண்ணை, உந்த வாங்கிலிலை ஒல்லுப்போலை இருங்கோ. மிச்சக் கதையையும் கேட்டுப்போட்டுப் போங்கோ.” 

வாங்கிலில் அந்தப் பிள்ளையின் அருகே சென்று இருந்தேன். அண்ணாந்து பார்ப்பதுவும் நிலத்தைப் பார்ப்பதுவுமாக அப்பிள்ளை. அதன் கண்கள் பயத்தால் விரிந்திருந்தன. முகத்தில் சொல்ல முடியாத சோகம் குடிகொண்டிருந்தது. 

“இந்தப் பிள்ளைக்கு நான் செய்யாத வைத்தியமில்லை. பாராத டாக்குத்தருமில்லை. மந்திகையிலை கூட ஒண்டரை மாதம் மறிச்சு வைச்சிருந்து பார்த்தினம். ஒண்டுமே சரிவரேல்லை. இப்ப கடவுளிலை பாரத்தைப் போட்டிட்டு இருக்கிறன். வைத்திய செலவுக்கு உள்ளதெல்லாம் போக, வைச்சிருந்த நகை, நட்டை வித்து நாலைஞ்சு மாடு வாங்கினன். அந்த வருவாயிலைதான் இப்ப எங்கடை சீவியம் போகுது. ஒரு நாள் முன்னுக்குள்ள ‘ஆமிச் சென்றி’க்குள்ளை மாடொண்டு போட்டுது. அதைப் பிடிக்கவெண்டு பின்னாலை நானும் போனன். பாழாப்போன மிதிவெடி ஒண்டு கிடந்து வெடிச்சதிலை மாடும் போய்ச்சு, என்ரை ஒரு காலும் போய்ச்சு.” 

சட்டென்று அவரது முகம் எனது பக்கமாகத் திரும்பியது. அதில் ஒரு வரட்டுக் குறுநகை. 

“அண்ணை, ஏதோ கதைப் புத்தகம் போடுறதாகச் சொன்னியளே. அதிலை எங்கடை இந்தக் கதையையும் எழுதுங்கோ…… பரசுராமனைப் போல புத்தகத்துக்கு முகப்புப் படம் தான் என்னாலை தரமுடியேல்லை. ஆனால், முகப்புப்படத்துக்கான கதையைத் தந்திருக்கிறன்.” 

அவரது கண்களில் ஆயிரங்காலத்து நட்புத் தெரிந்தது. 

அந்தப் பிள்ளையின் பக்கமாகத் திரும்புகிறேன். இன்னமும் அது ஆகாயத்திலும், தரையிலும் அம்மாவைத் தேடிக் கொண்டே இருந்தது. 

அரிசியைக் கிழைந்தவாறே அவர் சமையலைத் தொடரும் பணிகளில் இறங்கலானார். 

வாங்கிலிருந்து நான் எழுகின்றேன். 

“அப்ப நான் போட்டு வரப்போறன் பாருங்கோ…” 

“ஒ..ஒ… இந்த வெயிலுக்குள்ளாலை மூண்டு நாலு கட்டை ‘சைக்கிள்’ உழக்க வேணுமெல்லே….. வெளிக்கிடுங்கோ!” 

அவருக்கு ஏதாவது உதவவேண்டும் என மனம் கூறிற்று. 

புத்தக அட்டைப் பட ஓவியம் வரைவதற்கு பரசுராமனுக்குக் கொடுப்பதற்காக வைத்திருந்த இரண்டாயிரம் ரூபா சட்டைப் பைக்குள் இருப்பது நினைவிற்கு வந்தது. 

அதைக் கையில் எடுத்தவாறே அவரை அணுகினேன். 

“என்ரை ஒரு சின்ன அன்பளிப்பாக இதை வைச்சிருங்கோ.” 

“என்னண்ணை அது?” 

“காசு ஒரு இரண்டாயிரம் ரூபா. மகளுக்கு ஏதாவது வாங்கிக் குடுங்கோ.” 

“இப்ப எங்களுக்கு வேண்டியது உதில்லை அண்ணை…… நீங்கள் போட்டு வாங்கோ. அது சரி கொழும்புக்கு எப்ப போறியள்?” 

”படிக்கிற இரண்டு பிள்ளையளோடை குடும்பம் கொழும்பிலை எண்டபடியாலை வலு கெதியிலை போயிடுவன். உங்களுக்கும் இன்னும் கொஞ்ச நாளையிலை சொந்த இடத்துக்குப் போயிடலாம் எண்டு நினைக்கிறேன்.” 

“இழந்த பூமி திரும்ப வந்திடலாம். பாதை திறந்து நாங்கள் பயணமும் செய்யலாம். ஆனால், போன உயிரும், உடமைகளும், நினைவிழந்த இந்தப் பிள்ளையின்ரை நினைவும், நிம்மதியும், என்ரை காலும் திரும்ப வந்திடுமோ?” அவரது கண்களில் இப்போது சொல்லமுடியாத வன்மம் தொனித்தது. 

நான் மௌனியாக நின்றேன். 

“அப்ப சரி அண்ணை… நீங்கள் நடவுங்கோ!” கிழைந்த அரிசியை உலையில் போட்டார் அவர். 

அவருக்குக் கொடுக்கவென்று எடுத்த காசை மீண்டும் சட்டைப் பைக்குள் வைத்தவாறே…… குடிசையை விட்டு குச்சொழுங்கையில் இறங்கி சைக்கிள் விட்ட இடத்தை நோக்கி நடக்கின்றேன். 

“அப்பா…… அம்மா எழும்பாவாம்…..எழுப்புங்கோ!”

அந்தக் கீச்சுக்குரல் காற்றில் மிதந்த வந்து என் காதுகளில் மோதியது. 

வந்த வழியே சைக்கிளைத் திருப்பி பெடலை மிதிக்கிறேன். 

வெய்யில் இன்னும் விட்டபாடில்லை. 

ஆனால், அந்த வெயில் அதி உக்கிகரமாகக் கொளுத்திக்கொண்டிருப்பதாக என்னால் இப்போ உணரமுடியவில்லை. 

– 28.04.2002, ஞாயிறு தினக்குரல்.

– நிலாக்காலம் (சிறுகதைத்தொகுப்பு), முதற் பதிப்பு: 25 ஜூலை 2002, ஆ.இரத்தினவேலோன் வெளியீடு, கொழும்பு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *