வசீகரம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: January 30, 2025
பார்வையிட்டோர்: 3,163 
 
 

வணக்கம். வாருங்கள். நான் உங்கள் சாரதி கங்காதரன்.

டிரான்ஸ் – கனடியன் என அழைக்கப்படும் கனடாவின் மிக நீளமான புகையிர பாதையில் எழிலான எண்ணங்களுடன் பயணத்தை ஆரம்பித்துள்ள உங்கள் அனைவரையும் வரவேற்பதில் மகிழ்ச்சி.

ஒன்டாரியோ மாகாணத்தின் தலை நகரமாகிய ரொரன்ரோவில் உள்ள யூனியன் புகையிரத நிலையத்திலிருந்து புதன் காலை 9.55 மணிக்குப் புறப்பட்டுள்ள 4466 கி.மீ.தூரமான எமது இந்தப் பயணம், இடையில் மனிடோபா, சஸ்காசுவான், அல்பேட்டா மாகாணங்கள் ஊடாக ஞாயிறு காலை 8.00 மணிக்கு பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள வன்கூவரை சென்றடையும்.

கேப்ரோல், சியோக்ஸ் லுக்கவுட், வின்னிபெக், சக்ஸ்கடூன், எட்மன்டன், ஜஸ்பர் ஆகிய புகையிரத நிலையங்களில் தரிக்கவுள்ள இவ்வண்டியின் சாரதியாக கேப்ரோல் வரை நான் கடமையாற்றுவேன். உசோமா எனது உதவியாளர்.

சிக்கன வகுப்பு, முதலாம் வகுப்பு, பெருமித வகுப்பு ஆகிய மூன்று பிரிவுகள் உள்ளன. சலுகைகளும் வசதிகளும் வேறுபட்டவை. சகல பயணிகளுக்கும் பார்வையாளர் கூடத்திற்கான அனுமதி இலவசம்.

எந்தவொரு சாரதியும் 12 மணித்தியாலங்களுக்கு மேலாக ஒரே நாளில் பணியில் அமர்த்தப்படுவதில்லை.18மணித்தியாலங்கள் வரை ‘என்ஜின்’ சேவையில் ஈடுபடும்.

ஒன்டாரியோவின் ஏரிகள், காடுகள், மனிடோபாவின் புல்வெளிகள், சாஸ்கட்சுவானின் விளை நிலங்கள், அல்பேட்டா பிரிட்டிஷ் கொலம்பியாவின் எலியாஸ் மற்றும் ராக்கி் மலைத் தொடர்கள் என இயற்கை எழில் கொஞ்சும் பேரழகு உங்களின் இந்தப் பயணத்தை என்றுமே மனதில் நிலை நிறுத்தும்.

ஊதா நிறம் கொண்ட பத்து டாலர் தாளில் கனடாவின் முதலாவது பிரதமர் சேர் ஜோன் மக்டொனால்டின் படம் ஒரு புறத்திலும், கனடாவின் மிக நீண்ட புகையிரதப்பாதையான ரொரன்ரோ யூனியன் முதல் வன்கூவர் பசுபிக் மத்தி வரை சேவையில் உள்ள நீங்கள் பயணிக்கவுள்ள இந்தத் தொடருந்தின் படம் மறு புறத்திலும் உண்டு.

சுத்தத்தை மதிக்கும் மக்கள் உங்களுடன் பயணிக்கின்றார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

இப் பயணத்தின் பெறுமதி வியப்பதற்குள் முடிந்துவிடும் ஒரு நிகழ்ச்சியின் மகிழ்ச்சி அல்ல. பலரால் பல காலம் நினைவில் நிலை கொள்ளக்கூடிய மகிழ்ச்சியின் நிகழ்ச்சி.

களங்கமற்ற காலநிலை நிலவுகின்றது.

– இனி உங்கள் ஜன்னலுக்குள் உங்கள் வானம்!

ஒலிவாங்கியை நிறுத்தினேன்.

கனடாவின் நீண்ட தூர புகையிரத சேவையின் சாரதியாக பொறுப்பேற்று ஒரு வருடம் கடுகதியாக விரைந்துவிட்டது.

தொடரியின் பயிலுனராக சில தடவைகளும் நியமனத்தின் பின் பலமுறையும் இதே வழித்தடத்தில் சாரதித்துவம் செய்துள்ளேன்.

கனடாவின் அழகை அழகாக இதே தடத்தில் படம் பிடித்த எனது முதல் நாள் நினைவுகள் ஒவ்வொரு முறையும் புகையிரதத்தின் வேகம் போல் காற்றைக் கிழிப்பதில் உதட்டோரத்தில் முறுவல் மேலோங்கும்.

கனடாவில் பயிலுனர் சாரதியாக எனது பயணம் தொடங்கிய முதல் நாளில் கன தூரம் கலைத்துக் கொண்டு வந்த ரொரன்ரோவின் அடையாளமான 553 மீ. உயரமுள்ள சி.என்.டவர் எப்பொழுது திரும்பிப்போயிற்று என்பது அன்று தெரியவில்லை. வானுயர்ந்த அடுக்கு மாடி குடியிருப்புகளும் விக்டோரியன் கட்டிடங்களும் நிறைந்த கட்டிடக் காடுகளும் சிறிது நேரத்தில் கானாமல் போயிருந்தன.

சென்.லோரன்ஸ் நதியும் அதில் மிதந்த ஒன்டாரியோ மாநில பறவையான லூனிகளும் – அதுதாங்க வாத்துகளும் – என்னுடனே வரப்போவதற்கு அடம் பிடிப்பது போல நெடுந்தூரம் வரை தெரிவதும் மறைவதுமாக கண்ணாமூச்சி விளையாடின.

விவசாய நிலங்கள் வந்தன.போயின. புல் வெளிகள் தெரிந்தன. மறைந்தன. மேபிள் மரங்களும் ஊசியிலை மரங்களும் அடர் காடுகளாயின. தங்கம் வெள்ளி தாமிரம் பிளாட்டினம் சுரங்கங்களின் அசுமாத்தம் யாமிருக்கப் பயமேன் எனச் சொல்லாமல் சொல்லின.

சட்பரி நகரில் உள்ள கேப்ரோல் புகையிரத நிலையத்தின் அருகே நுரைத்தோடிய வெர்மிலியன் ஆற்றில் மிதந்த லூனிகள் இன்னமும் ஒன்டாரியோ முடியவில்லை என நீர் திவலைகளை அள்ளி வீசிச் சிறகடித்து சிரித்தன.

இதே கேப்ரோல் நிலையத்திலிருந்து அடுத்த நிலையமான சியோக்ஸ் லுக்கவுட் வரை அடுத்த தட பயிற்சியிலும் நான்தான் சாரதியாக இருந்திருக்க வேண்டும்.

எனக்கு பயிற்சியாளனாக வந்து சேர்ந்தான் அந்தனியோ. இரக்கமற்ற இறுக்கமான மனிதன். இதே வழித்தடத்தில் இருபத்தைந்து வருடங்களுக்கு மேலாக சாரதியாக உள்ளவன். மெக்ஸிகோவிலிருந்து அடிமைகளாக அழைத்து வந்த தமது மூதாதையரை சித்திரவதைக்குள்ளாக்கி கனடாவில் பல தண்டவாளங்கள் போடப்பட்டமையால் ‘கண்ணீர் பாதை’ என்ற பதத்தையே பாவிப்பவன் என வகுப்பறை பயிற்சியின் போது அறிந்துள்ளேன்.

‘என்ன? இன்றைக்கு ஓட்டப் போகின்றாயாமே? வேண்டுமானால் நீ வந்த நாட்டுக்கே ஓடு!’ இடக்கராக சொல்லியவாறே இயந்திரத்தை இயக்கினான்.

இலங்கையில் பத்து வருடங்கள் விரைவு ரயில் சாரதி அனுபவத்துடன் கனடா வந்த நீ இப் பதவிக்கான இறுதித் தேர்வில் பொது அறிவுப் பரிட்சையில் மிகவும் குறுகிய நேரத்தில் மிகவும் அதிகமான கேள்விகளுக்கு பதிலளித்ததாக கேள்விப்பட்டேன். இப்ப நான் கேட்கின்றேன் சொல்லு பார்க்கலாம்…

1. விகிதாசார அடிப்படையில் உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் பட்டதாரிகள் செறிந்திருப்பது எந்த நகரில் மிக அதிகம்?

2. கூரான ஆயுதங்களைக் கொண்டு மீன் பிடிப்பதற்கு வசதியாக ஏராளமான மரங்கள் தண்ணீருக்குள் நடப்பட்டிருந்ததால் அநாதியில் பழங்குடி மக்களிடம் தண்ணீரில் மரங்கள் நிற்கும் பிரதேசம் என அர்த்தத்தை பெற்ற நகரம் எது?

3. தற்போதைய நிலைக்கு 125 கிலோ மீட்டர் அப்பால் உள்ள ஒரில்லா நகரில் சிம்கோ ஏரியின் முடிவில் அமைந்திருந்து நிலவியல் ரீதியாகவும் மொழியியல் ரீதியாகவும் காலத்துக்குக் காலம் நகர்ந்து இடப்பெயர்வினை கண்டுள்ள நகரம் எது?

4. பிரிட்டிஷ் தேசாந்திரிகளால் யோர்க் என கருதப்பட்ட பகுதி 06.03.1834 முதல் நிரந்தரமாக என்ன பெயர் பெற்றது?

5. கனடிய நகரங்களுக்குள் மிகவும் பெரியது எது?

முதல் நான்கு கேள்விகளுக்கும் எதுவுமே புரியாது குழப்பத்தில் குமிழியிட்டது எனது அகமும் முகமும்!

உவனை விட்டால் நோண்டி நொங்கெடுத்துப் போடுவான் என்ற அச்ச உணர்வு ஐந்தாவது கேள்விக்கான தெரிந்த பதிலை ரொரன்ரோ என அவிட்டு விட்டது.

என்ரை செல்லமே! நீ அறிவாளிதான்டா! ஐந்து கேள்விகளுக்கும் ஒரே பதிலான ரொரன்ரோ என்பதை சரியாக சட்டென்று சொல்லிப் போட்டாய். இது வரை பலரிடம் கேட்டுள்ளேன். எந்த மவனும் சொல்லவில்லை. நானும் என்ரபாட்டுக்கு அடுத்த நிலையமான சியோக்ஸ் லுக்கவுட் வரை ரயிலை ஓட்டிச் சென்று விடுவேன். இதை ஏன் உன்னிடம் கேட்டேன் தெரியுமா?

நீ குண்டக்க மண்டக்க என என்னத்தையாவது கேள். ஆனால் இன்று இந்த ரயிலை செலுத்துவது எனது வேலை. அதை மட்டும் தந்து விடு என எண்ணிக் கொண்டேன்.

நான் எரிச்சலடைந்துள்ளதாக எனது மௌனத்தை அவன் கருதியிருக்கக் கூடும்.

இப்போது இவை எரிச்சலைத் தந்திருந்தாலும் எதிர்காலத்தில் தொலைவிலுள்ள கட்டுப்பாடு அதிகாரியும் கடக்கவிருக்கும் நிலைய அதிபரும் எதிர்த் திசையில் வரும் சாரதியும் ஒரே சமயத்தில் கேட்கும் வித்தியாசமான கேள்விகளுக்கு ஒரே

பதில் அளிக்கும் பொழுது உனக்குத் தயக்கமிராது. இது நான் அனுபவத்தில் கற்றுக் கொண்ட பாடம் என்றான். கல்லுக்குள் ஈரம்!

நடுவண் அரசு, மாகாண அரசு, நகராட்சி அரசு எனமூன்று நிலை அரசமைப்பைக் கொண்டுள்ள கூட்டமைப்பு நாடுகளில் ஏதாவது ஒன்று என்றதற்கு, கனடா என்றும், ஒரு நாட்டின் குடியுரிமையை கைவிட்டு விட்டு பிறிதொரு நாட்டில் குடியுரிமையை ஏற்பதை எவ்விதம் அழைப்பர்? என்றதற்கு, குடியுரிமை பதலி என்றும் பதிலளித்தது தடையற்ற தண்டவாளத்தில் பயணித்தது போல சீராக இருந்தது.

கனடாவின் தலைநகரம் என்ன? கனடா தினம் எப்பொழுது? தேசிய கீதம் தேசிய கொடி எவை? நேர மண்டலங்கள் எத்தனை? போன்ற பல கேள்விகள் நின்று நிதானிக்க வேண்டிய அவசியம் இன்றி சிறு புகையிரத நிலையங்கள் போன்று விரைந்து மறைந்தன.

நான் இறங்க வேண்டிய இடம் வந்துவிட்டது. இந்த ‘என்ஜினை’ கொண்டு போய் ‘யாட்டில்’ விட்டு விட்டு அங்கு தயாராகவுள்ள ‘என்ஜினை’ கொண்டு வந்து இந்தப் பெட்டிகளுடன் பொருத்தி விட்டு தங்குமிடத்துக்குப் போ என்றவாறே அகன்றான்.

பிறிதொரு நாளில் இதே சியோக்ஸ் லுக்கவுடிலிருந்து அடுத்த நிலையமான வின்னிபெக் வரை புகையிரதத்தை செலுத்துமாறு தெரிவித்தது எனது நேரசூசி.

ஊரிலை எனக்குத் தெரிய மூலை முடுக்கில் வீற்றிருந்த தெய்வங்களுக் கெல்லாம் நேர்த்திக்கடன் வைத்தவாறே புகையிரத நிலையத்தை அடைந்தேன்.

அங்கு என்னை எதிர் பார்த்துக் கொண்டிருந்தார் கிறிஸ்தோப்பர். இருபது வருட அனுபவத்தில் இதே வழித்தடம் அவருக்கு அத்துப்படி. கிரேக்கத்தையும் இத்தாலியையும் பூர்வீகமாகக் கொண்டவர். தும்மினால் கூட அதிராமல் தும்மக் கூடியவர். பயிற்சி அளிப்பவர்களுள் மிகவும் வல்லவர். நல்லவர். ரோமன் கத்தோலிக்கர் நம்புவது போல பெயருக்கேற்ப பயணம் செய்வோரின் காவலர்.

இன்று நீதான் செலுத்தப் போகிறாய். எட்டு மணி நேர பயணம். என்னை பயிற்றுனராக பார்க்காதே. உதவியாளனாகவே பார் என்று உற்சாகத்தையும் தென்பையும் தந்தார்.

“ரொரன்ரோ முதல் வன்கூவர் வரை உள்ள எல்லா நிலையங்களின் பெயர்களையும் ஒரு எழுத்துக்கூட பிசகாமல் மனப்பாடம் செய்வது பிரயோசனமற்றது. ஆனால் எங்கெங்கே உள்ளது என அறிந்து கொள்வது உசிதமானது.

தண்டவாளத்தில் தடையிருப்பின் உணரலை கருவிகள் மூலம் உன்னருகே எச்சரிக்கை மணி ஒலிப்பதால் வேகத்தைக் குறைத்து தடம் புரள்வதை தவிர்ப்பதற்கு போதிய அவகாசம் இருக்கும்.

சரக்கு ரயில்களை நீ செலுத்தும் வேளை வேகத்தை கூட்டிக்குறைக்க வேண்டியதில்லை. பயணிகள் ரயில்களெனின் அவர்கள் பார்க்கக் கூடிய சூழலில் வேகத்தை சற்றே குறைத்தும் காடு கரம்பைகளில் அதனை ஈடு செய்யும் விதத்தில் கொஞ்சம் கூட்டியும் இயக்குவது விரும்பப்படும்” என்றார்.

ஒன்டாரியோ மாகாணத்திலிருந்து விலகி மனிடோபா மாகாணத்துள் புகையிரம் புகுந்ததற்கான அடையாளமாக சமவெளி காட்டெருமைகள் வெளியே தெரிய ஆரம்பித்தன.

காண்பதற்கு அரியதான கீரிகளையொத்த நீர் நாய்கள் – அதுதாங்க பீவர்கள் – ஏரிகளருகே புகையிரதத்தை எட்டி எட்டி பார்ப்பதும் ஓதுங்கி மறைவதும் தெரிந்தது. ஆறுகள் ஓடைகளில் களி மண்ணையும் தாவரங்களின் கொப்புகளையும் கொண்டு அரண்களை அமைத்து நீரோட்டத்துக்கு மறுபுறம் தமது குடியிருப்புகளை நிர்மாணிக்கும் வல்லமையுள்ள தாவர உண்ணிகளான இவற்றிக்கு கனடாவின் தேசிய விலங்கு என்ற அந்தஸ்தும் உண்டு என்பது நினைவில் எட்டிப் பார்த்தது.

ரயிலின் வேகத்தை தளர்த்தினேன். சிரித்தார்.

அவரது அனுமதியுடன் பார்வையாளர் கூடத்திற்கு முதன் முறையாகச் சென்ற நான் திரும்பும் பொழுது தேநீர்சாலையில் அவருக்கும் சேர்த்து கோப்பியுடன் திரும்பினேன்.

பார்வையாளர் கூடம் ‘வாவ் வாவ்’ என்ற ஆர்ப்பரிப்பில் நிறைந்திருந்தது.

அலைபேசியுடன் இளித்திடாமல் அங்கு எவருமே காணப்படவில்லை. வாய்ப்பை பயன்படுத்தும் வாய்ப்புள்ள அவர்கள் அரட்டை அடிக்கிறார்களா? அல்லது படம் பிடிக்கினறார்களா? அல்லது இயற்கையின் எழிலை பகிர்கிறார்களா? ஒன்றுமே புரியல்லை.

அங்கிருந்த பலர் பலதையும் கதைத்துக் கொண்டாலும் மாகாணங்களும் நாணயங்களும் பற்றி இருவரும் மாகாணங்களும் பிரதம பட்டினங்களும் பற்றி வேறு இருவரும் கதைத்தது கவர்ந்தது.

“எந்தவொரு நாட்டிலும் வட்டம் சதுரம் போன்ற வடிவங்களில் நாணயம் பாவனையில் இருப்பது சர்வ சாதாரணம். ஆனால் அச்சொட்டாக நாட்டின் உருவத்தைப் போலவே நாணயத்தை வெளியிட்டு வியப்பை விழிகளுக்கு கொண்டு வந்திருந்தது கனடா.” என்றார் ஒருவர்.

“கனடாவின் ஒவ்வொரு மாகாணத்துக்குமுரிய ஒரு விலங்கோ அல்லது ஒரு பறவையோ அந்தந்த மாகாணத்தை அடையாளப்படுத்துவது போல சேகரிப்பாளருக்குரிய சிறப்பு நாணய வடிவில் அந்த நாணயம் வடிவமைக்கப்பட்டிருந்தது புதுமையானதாகவும் கவர்ச்சிகரமானதாகவும் வரவேற்கப்பட்டது.” என்றார் மற்றவர்.

“1.ஆல்பேட்டா–பெரிய கொம்புகள் கொண்ட ஆடுகள் 2.பிரிட்டிஷ் கொலம்பியா–கெர்மோட் கரடி 3.மனிடோபா–சமவெளிக் காட்டெருமை 4.நியூ பிரன்ஸ்விக்-பாடும் சிறு பறவை-சிக்கடி 5.நியூ பவுண்ட் லாந்து மற்றும் லாப்ரடோர்-துருவ மான். 6.நோவா ஸ்கோஸியா-விரால் அடிப்பான் 7.ஒன்ராரியோ–பொதுவான லூனி 8.பிரின்ஸ் எட்வேட் தீவு–நீல வாத்து 9.கியூபெக்-பனி ஆந்தை 10.சஸ்காட்சுவன் -வெள்ளைவால் மான். வட மேற்கு பிரதேசங்கள்-வல்லூறு நுனாவூட்-கனடிய இன்யூட் நாய்கள். யூகோன்-காக்கை. என இத்தனையையும் ஒரு நாணயம் பிரதிபலிப்பது விந்தையிலும் விந்தை.” என வியந்தார் முதலாமவர்.

“சில மாகாணங்களும் பிராந்தியங்களும் பிரபலமான நகரங்களை விடுத்து வேறு நகரங்களை தமது தலை நகராக கொண்டிருப்பதேன்? தெரியுமா?” என்றார் மற்ற இருவரில் ஒருவர்.

“அரசியல் பொருளாதாரம் சரித்திரம் அமைவிடம் வணிகம் போக்குவரத்து போன்ற காரணங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. சிறிய பட்டினங்களாக இருந்தவற்றின் அபரமிதமான வளர்ச்சி பின்நாளில் வந்ததே. நிர்வாகச் சிக்கலையும் பாரிய செலவையும் தவிர்ப்பதற்காக மாகாணங்களின் தலைநகரங்கள் நிலை கொண்ட இடங்களிலேயே நிலைத்து நீடிக்கின்றன.” என பதிலளித்தார் மற்றவர்.

ரொரன்ரோ மொன்றியல் வன்கூவர் போன்றன ஆரம்பத்தில் வளர்ச்சி அடைந்திருக்கவில்லை. ஆனால் ஒட்டவா கியுபெக்சிட்டி விக்ரோரியா போன்றவை சரித்திர காரணங்களுக்காகவும் போக்கு வரத்து வசதிக்காகவும் அந்நாளில் முக்கியத்துவம் பெற்றிருந்ததும் எட்மன்டன் ரெஜீனா போன்றவை நதியோரங்களில் வணிகரீதியாகவும் பூகோளரீதி யாகவும் பிரபலமாயிருந்ததும் இதற்கு நல்ல உதாரணம் என முடித்தார் முதலாமவர்.

புகையிரதம் வின்னிபெக்கை நெருங்கியிருந்தது.

நியமனம் கிடைத்த பின் வந்த நாட்களில் வெவ்வேறு நேரங்களில் வின்னிபெக் எட்மன்டன் ஜஸ்பர் வன்கூவர் ஆகிய நிலையங்களிலிருந்து ஓட்டுனராக இருந்துள்ளேன். எனக்கு உதவியாளரும் உதவியாக இருந்துள்ளார்.

மானிடோபா றோஸ்வூட் புல்வெளிகளிலும் சாஸ்காட்சுவான் விவசாய விளை நிலங்களிலும் ராட்சஸ எண்ணெய் விசை குழாய்கள் மேலும் கீழுமாக இயங்கிக் கொண்டு விளைச்சலை மறைத்தன!

சாஸ்காட்சுவான் கனடாவின் முக்கிய விவசாய மாகாணம் என்பது நினைவிலும் மறந்திடுமோ என்று தோன்றியது.

உலகின் மிகப் பெரிய யுரேனியம் சுரங்கம் சாஸ்காட்சுவானில் உள்ள சிகார் ஏரிக்கு அருகில் உள்ளது. யுரேனியம் அணுமின் நிலையத்திலிருந்து மின்சாரம தயாரிக்கப் படுகின்றது. எமது வழித்தடத்திலிருந்து பார்த்தால் தெரியாது. ஆனாலும் நினைவில் வந்தது.

சமதரையாக இருந்த மனிடோபா சஸ்காட்சுவான் மாகாணங்கள் – அல்பேட்டா பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணங்களில் மலைகளாகி உயர்ந்தன.

அல்பேட்டாவின் ஜஸ்பர் புகையிரத நிலையத்துள் நுழைந்து கொண்டதும் உன்னுள் நுழைபவை எவை? என்றேன் உதவியாளரிடம்.

“ஜஸ்பர் புகையிரத நிலையத்தில் ரொரன்ரோவிலிருந்து வன்கூவர் வரை முதன்முதலாக சேவையிலீடுபட்ட ‘கரிக்கோச்சி’ உருக்குலையாது அப்படியே பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது முதலில் நினைவில்வரும்.

ராக்கி மலைத்தொடருடன் ஆரம்பிக்கும் இயற்கை அழகு. கடலில் இருந்து மலை உச்சிவரை செல்லும் பாதையின் வசீகரம். ஆழமான பள்ளத்தாக்குகள் உயரமான பாறைகள் தெரியும் கெட்ட நகரம். பெயரே அதுதான்.- பாட்லாண்ட்! 600 ஏரிகள் 245 நதிகள் உள்ள மாகாணம் மட்டுமல்ல பசுபிக் அத்திலான்டிக் ஆர்டிக் ஆகிய மூன்று சமுத்திரங்களில் நதிகள் சங்கமிக்கும் மாகாணமும் இதுதான். கனடாவில் முதலாவது தேசிய பூங்கா முதலாவது கோளரங்கம் முதலாவது பள்ளிவாசல் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு உற்பத்தியில் முதலிடம் என்பனவுடன் டைனசோர் மாகாண பூங்காவும் அங்குள்ள 75 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு

வாழ்ந்த உயிரினங்களின் புதை படிவ அருங்காட்சியகமும் பிரசித்தம்.”என முடித்தான் அவன்.

“பிரிட்டிஷ் கொலம்பியாவில் எவற்றைப் பார்க்கலாம்?” என்ற கேள்வி எனக்கு குறுஞ்செய்தியாக வராத நாட்களே இல்லை எனலாம்!

பார்த்தது கொஞ்சம்.பார்க்காதது கனக்க என்ற தலைப்புடன் அவற்றிக்கெல்லாம் ‘ரெடிமேட்’ ஆக நான் அனுப்பும் பதில் இது –

கனடாவின் மிக அழகிய மாகாணம் பிரிட்டிஷ் கொலம்பியா. கனடாவின் ஹாலிவூ ட் என்றும் சொல்லப்படுவதுண்டு. மிக அழகான நகரம் வன்கூவர்.

மலைகள், ஏரிகள், செழிப்பான காடுகள், கடற்கரைகள் மற்றும் கடல் முனைகள் ஆகியவற்றின் அழகைக் காண விரும்பினாலும், இயற்கை எழில் கொஞ்சும் நகரங்கள் மற்றும் சிறிய நகரங்களில் சுற்றிப் பார்க்க விரும்பினாலும், அல்லது பனிச்சறுக்கு, நடைபயணம் மற்றும் முகாம் சாகசங்களைச் செய்ய விரும்பினாலும், அனைத்துக்கும் ஏற்றது பிரிட்டிஷ் கொலம்பியா.

ரொரன்ரோவையும் கியூபெக்கையும் அடுத்து தமிழர் அதிகமா உள்ள இடம் வன்கூவர் கனடாவில் மிகக் கூடுதலான சைவ உணவுகாரர்களும் நனி சைவர்களும் உள்ள மாகாணம் பிரிட்டிஷ் கொலம்பியா.

வன்கூவர் தீவில் உள்ள ஸ்ட்ராத்கோன மாகாண பூங்காவின் டெல்லா நீர் வீழ்ச்சி கனடாவின் மிக உயரமான நீர் வீழ்ச்சி. 440 மீ உயரமுள்ள இது நயாகராவை விட எட்டு மடங்கு உயரம் கொண்டது.

வன்கூவர் நகரின் எல்லையில் உள்ள இயற்கையான பூங்காவான ஸ்டான்லி பூங்கா வரலாற்றுப் பிரியர்களின் பெரு விருப்பம். முதற் குடியின் காலத்தால் அழியாத கலாசாரத்தை பிரதிபலிக்கும் சிற்பங்கள் நிறைந்த மரக்கம்பங்கள் அதன் காரணம்.

இலையுதிர் காலத்தில் மேப்பிள் மரங்கள் பல வர்ணங்களில் கவர்வது போல் வன்கூவரின் 100 கி.மீ. கிழக்கில் உள்ள கிளிலுக் ஏரியில் உள்ள 365 குளங்களும் நீலம் பச்சை மஞ்சள் வெள்ளை என அதன் கனிம கலவையால் அருகருகே வெவ்வேறு நிறங்களில் கண் கவரும்.

ஓகோபோகோ என்ற புராண கால உயிரினம் அங்குள்ள ஓகனகன் ஏரியில் இன்னமும் இருப்பதாக நம்பப்படுகின்றது.

வன்கூவர் தீவின் கடலோர நகரமான நனைமோ உலகின் ‘குளியல் தொட்டி பந்தையத்தின்’ தலைநகரம் எனக் பெயர் பெற்றது.

கடல்சார் அருங்காட்சியகம் அறிவியல் அருங்காட்சியகம் க்ரூஸ் மலையின் மலைக்க வைக்கும் சாகசங்கள் காபிலோனா தொங்கு பாலம் கிட்சிலோனா கடற்கரை ஆகியன வித்தியாசமான அனுபவங்களை தருபவை.

இன்று கனடாவில் 375 000 மக்களை யூத சமுதாயம் கொண்டுள்ளது.. அவர்களுக்கான முதலாவது திருச்சபை 1863 ம் ஆண்டு விக்டோரியா பிரிட்டிஷ் கொலம்பியாவில் உருவாக்கப்பட்டு இன்றும் செயல்படும் அதி பழமைமிக்கது.

1905 ம் ஆண்டு ஜப்பானியரால் முதலாவது பௌத்த விகாரை வன்கூவரில் சாதுகளுக்கு சரணளிக்கும் சன்னிதானமாயிற்று.

விக்டோரியன் கட்டிடங்களை நினைவு கூர வென்றே உள்ளது காஸ்டவுன்.

உணவுப்பியரின் சொர்க்கம் கிரான்வில் தீவுவின் கடைத் தொகுதி.

புகழ்பெற்ற வரலாற்றுத் தலமான வெளிச்சவீடு பூங்கா வன்கூவரின் மேற்கே உள்ளது.

விக்டோரியாவில் மாகாணமன்றம் அரண்மனைகள் பாரம்பரிய கட்டிடங்கள் கிரெய்க் கோட்டை வைட் ஹாட்லி கோட்டை கோன்சலஸ் கடற்கரை கார்டன் கடற்கரை முயர் கடற்கரை பார்வையிடக் கூடியவை.

கனடாவில் பிரிட்டிஷ் கொலம்பியாவில் மட்டுமே உள்ள கடல் ஓநாய்கள் இங்கேயே நீச்சலடிக்க விதம் விதமான கழுகுகள் ஆந்தைகள் ராஜாளிகள் வல்லூறுகள் வானம்பாடிகள் காகங்கள் கரடிகள் காண்டாமிருகங்கள் ஓநாய்கள் காட்டு எருமைகள் மலையாடுகள் கருமான்கள் கடமான்கள் கலைமான்கள் பெரிய கொம்பு ஆடுகள் மான்கள் நரிகள் வெள்ளைவால் எனப்பல உங்கள் உயிருடன் விளையாடும்.

மிக நீண்ட தூரத்திற்கு நீண்ட கடற்கரைகளும் அடுத்தடுதது வரும் நான்கு தேசிய பூங்காக்களும் அடர்வனங்களும் பாதாளமான பள்ளத்தாக்குகளும் 3363 மீட்டர் உயரத்தில் எடித் கேவல் மலையும் தொடர்ந்து 3950 மீ உயரத்தில் 17 மலைத் தொடரில் ராப்சன் மலையும் பனி படர்ந்த சிகரங்களுடன் பிரிட்டிஷ் கொலம்பியா எல்லை வரை தெரிந்து மனதில் நிலைக்கும்.

இந்த குறுஞ்செய்தியை பார்த்தவர்களிடமிருந்தும் நேரில் சென்று பார்த்தவர்களிடமிருந்தும் எனக்குக் கிடைக்கும் ஒரே பதில் –

“வாவ்! அற்புதம்!”

மாகாணத்துக்கு மாகாணம் வேறுபட்ட கனடாவின் கதை வசீகரத்துடன் நிறைந்தது!

– அவுஸ்திரேலியா அக்கினிக்குஞ்சில் (24.01.2024) வெளியாகிய இக்கதை சிறிது மாறுதல்களுடன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *