லுமினா கிரகத்தின் அழகு






பூமியிலிருந்து பத்து ஒளியாண்டுகள் பயணம் செய்த அந்த விண்கலம் ஒரு வழியாக லுமினா கிரகத்தில் தரையிறங்கியது. கமாண்டர் சென் தலைமையிலான மூவர் குழு கலத்திலிருந்து வெளி வந்தனர்.
“அட, இது நம்ம பூமியைப் போலவே இருக்கிறதே!” என்று வியந்தார் டாக்டர் சர்மா. சுவாசிக்கக்கூடிய வளிமண்டலம், பழக்கமான ஈர்ப்பு விசை, நிலப்பரப்பு – எல்லாமே பூமியை ஒத்திருந்தது.
லுமினாவின் நிலத்தில் அவர்கள் முதல் காலடி எடுத்து வைத்த போது தான் தெரிந்தது லுமினா பூமியிலிருந்து எவ்வளவு வேறுபட்டிருக்கிறதென்று. அவர்களின் காலடிகள் மெத்தை போன்றிருந்த தரையில் பதிந்தபோது நீர்த்துளிகள் குளத்தில் விழுவது போல் எழுந்த ஓர் இனிய இசை சுற்றிலும் பரவியது.
தூரத்து வானில் இரண்டு சூரியன்கள்! தங்க-ஊதா நிற ஒளியில் லுமினாவின் முழு நிலப்பரப்பும் குளித்துக் கொண்டிருந்தது. அவர்களுக்கு முன்னே பரவியிருந்த விசித்திரமான ஆளுயர மரங்கள் – அவற்றிலிருந்து வானை நோக்கி நீண்டிருந்த கலர் கலரான கொடிகள் மெதுவாக அசைந்து அவர்களை வா வா என்று அழைத்தன.
“அங்கே பாருங்கள்!” என்று கூவினார் உயிரியல் நிபுணரான டாக்டர் சோப்ரா. அவர் காட்டிய திசையில் தரையில் பாசி போன்ற செடிகள் நீலம், பச்சை, சிவப்பு என்று நிறம் மாறிக் கொண்டிருந்தன! காற்றில் ஒளிரும் துகள்கள் நடனமாடின.
“இது எல்லாம் சாத்தியம் தானா?” என்று வியந்தார் சென்.
அப்போது ஒரு உயரமான உருவம் அவர்களை நோக்கி மெதுவாக வந்தது. லுமினாவின் வாசி. தரையை முட்டும் நீண்ட மேலாடை, முகத்தை மறைக்கும் நீண்ட காலர். அந்த நபர் நடந்து வருகிறாரா அல்லது மிதந்து வருகிறாரா என்று சரியாகத் தெரியவில்லை!
“வாருங்கள்,” என்று அந்த நபர் சைகையால் அழைத்தார். அவர்களை அழைத்து வர நியமிக்கப்பட்டிருக்கும் வழிகாட்டி அவர்.
அவர்கள் மூவரும் அந்த நபரை பின் தொடர்ந்து நடக்க ஆரம்பித்தனர். படிக மலைகள், பாதரசம் போன்ற திரவக் குளங்கள், தங்க அருவி என்று வழியில் அவர்கள் கண்ட ஒவ்வொரு காட்சியும் அவர்களை பிரமிக்க வைத்தது.
கொஞ்ச நேரத்தில் இரவு வந்தது. அடடா! அந்த இரவு செய்த மாயாஜாலத்தை என்னவென்று சொல்வது? அவர்கள் கீழிருந்த மண் இதமான நீல ஒளியில் ஒளிர ஆரம்பித்தது! வானில் மூன்று நிலவுகள்! தலைக்கு மேலே மிதந்து கொண்டிருந்த ஜெல்லிமீன் போன்ற உயிரினங்கள் எங்கிருந்து வந்தன? அவைகளின் உடலில் கலர் கலராக நூற்றுக்கணக்கான வெளிச்சக் கீற்றல்கள்!
அவர்கள் நகர மையத்திற்கு வந்து சேர்ந்த போது அவர்களுக்காக இன்னொரு லுமினா வாசி காத்திருந்தார். லுமினாவின் தலைவர் போலும். அதே மேலாடை, அதே காலர். அவர் முகமும் தெரியவில்லை.
“பூமியின் குழந்தைகளே, உங்களை லுமினாவிற்கு வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சி!” அவர் பேசினாரா என்ன? அவர் குரல் காதில் கேட்கவில்லை. நேரடியாக மனதில் கேட்டது! டெலிபதி போலும் என்று நினைத்துக் கொண்டார் டாக்டர் சர்மா.
கமாண்டர் சென் முன்னே வந்தார். “உங்கள் அழைப்புக்கு மிக்க நன்றி.” என்றார்.
“விண்கலத்திலிருந்து உங்களை இவ்வளவு தூரம் நடக்க வைத்ததிற்கு மன்னிக்க வேண்டும்.”
“இருக்கட்டும். இவ்வளவு தூரம் நடந்தது எங்களுக்கு சோர்வாகத் தெரியவில்லை. வழி நெடுக உங்கள் உலகின் அழகை ரசித்துக் கொண்டே அல்லவா நங்கள் வந்தோம்!”
“அழகா? அது என்ன? அந்த கருத்து எங்களுக்கு அறிமுகமில்லாதது.” என்றார் லுமினாவின் தலைவர்.
“உங்கள் உலகில் இருக்கும் விதம் விதமான நிறங்கள், ஒளிகள், அருவிகள், செடிகள்…”
“ஓ! நீங்கள் மின்காந்த அலைகளைப் பற்றி சொல்கிறீர்களா?”
அப்போது ஒரு மென்மையான காற்று வீசியது. லுமினாவின் தலைவரின் காலர் சிறிது விலகி முகம் தெரிந்தது.
கமாண்டர் சென் திடுக்கிட்டு பின் வாங்கினார். அழகு என்ற கருத்து அவர்களுக்கு ஏன் விசித்திரமானது என்பது அப்போது தான் புரிந்தது.
காலர் விலகிய அந்த முகத்தில் கண்கள் இரண்டும் இல்லை.
![]() |
பொள்ளாச்சியில் பிறந்து இன்ஜினீரிங் பட்டம் பெற்று தற்போது அமெரிக்காவில் வடக்கு கரோலினாவில் ஒரு வங்கியில் வேலை செய்து வருகிறார். எழுத ஆரம்பித்தது கோவிட் சமயத்தில் ஒரு வாரம் வீட்டில் முடங்கிக் கிடந்த போது. முதலில் எழுதியது ஆங்கிலத்தில் தான். அமெரிக்காவில் குடியேறி இருபத்தைந்து வருடங்கள் எந்த தமிழ் வாசனையும் இல்லாத ஒருவரால் தமிழில் எப்படி எழுத முடியம்? சிறுகதைகள்.காம் தளத்தைப் பற்றி அறிந்த போது இவருக்கும் தமிழில் எழுத வேண்டும் என்ற ஆசை வந்தது. அப்போது இவருக்கு கை…மேலும் படிக்க... |