ராவண சித்தம்!
கதைத்தொகுப்பு: சரித்திரக் கதை
கதைப்பதிவு: July 22, 2024
பார்வையிட்டோர்: 1,418
மளவ தேசத்து மன்னன் விக்கிரமனுக்கு இரவு உறக்கம் வர மறுத்தது. களவ நாட்டு மன்னன் போர் தொடுப்பதே தன் மனைவி ரம்பையை அபகரித்துச்செல்லத்தான். இதற்கு முக்கிய காரணமே ஒரு ஜோதிடர் தான் என்பதையறிந்து மனதில் ஏற்பட்ட கிலேசத்துடன் இரவு முழுவதும் படுக்கையில் விழித்தே இருந்தார்.
காலையில் அவசர அவசரமாக மந்திரிசபையைக்கூட்டி ஆலோசித்தார். மன்னரின் மனவருத்தமும், சோகமான முகமும் கண்டு சபையே கலங்கி நின்றது.
“ஒரு ஜோதிடரின் சொல்லால் ஒரு போரா? மிகவும் ஆச்சர்யமாக உள்ளது. அப்படி என்ன சொல்லியிருப்பார்? அதை உங்களுக்குக்கூறியது யார்?” தலைமை ராஜாங்க மந்திரி வினவினார்.
“ஒவ்வொரு நாட்டிலும் நடக்கும் ரகசிய விசயங்களை அறிந்து செய்தி அனுப்ப நம்பகமானவர்களை ஒற்றர்களாக பணியமர்த்தியுள்ளேன். அது நமது சபைக்கே தெரியாது. எல்லாம் நாட்டின் நலன் கருதித்தான். நாட்டையே கேட்டால் கூட அவசியமென்றால் கொடுப்பேனே தவிர ஒரு கணமும் எனது அன்பு மனைவியை பிறர் அபகரிக்க விடமாட்டேன்” என மன்னர் உணர்ச்சி வசப்பட்டு கூறிய போது ஒரு கணம் சபையே அதிர்ச்சியில் உறைந்து போனது.
“மகாராணிக்கு இப்படியொரு சோதனையா? யாருக்கும் கடுகளவும் துன்பம் தர நினைக்காமல் சத்தியம் காத்து உத்தமராக ஆட்சி புரியும் மன்னராகிய தங்களது உத்தம பத்தினியை மனதால் கவர நினைப்பதே பாவம் என்பது ராவண சித்தம் கொண்ட எதிரி நாட்டு மன்னருக்குப்புரிந்திருக்க வாய்ப்பில்லை. அவரது மனைவியும் நம் மகாராணியைப்போல பேரழகியாக இருப்பதாகவும், கணவனைத்தொழுது வாழும் கற்பின் அரசியாக வாழ்வதாகவும் அல்லவா கேள்விப்பட்டுள்ளோம். அவ்வாறு இருக்கையில் எதற்காக தேவையற்ற மனக்கிலேசத்தை நமக்கு உண்டாக்க வேண்டும். அந்த ஜோதிடர் அப்படி என்ன ஆலோசனையை வழங்கியிருப்பார் என்பதை நமது ஒற்றனிடம் விசாரித்தீர்களா மன்னா?” தலைமை அமைச்சர் கேட்டதற்கு பதில் கூறினார் மன்னர்.
“நான் நமது மகாராணியாரான ரம்பையை திருமணம் செய்து கொள்வதற்கு முன்பே களவ நாட்டு மன்னன் காளமேகம் எனது மாமனாரான சிலவ நாட்டு மன்னர் சித்தனிடம் பெண் கேட்டிருக்கிறார். ஆனால் சிறு வயது முதலே எனது தந்தைக்கும் அவருக்கும் இருந்த நட்பால் ஒருமுறை ‘மளவ தேசத்தின் ராணியே….’ என ரம்பையைப்பார்த்து என் தந்தை கூறிட, அவரது சொல்லுக்கு மறுப்பு தெரிவிக்காத சிலுவ மன்னர், ‘அப்படியே ஆகட்டும்’ என கூறியதால் பல தேசங்களை ஆளும் சக்ரவர்த்திகள் பெண் கேட்டும் தர மறுத்து, எனக்கு பெண் கொடுத்தார். அந்தப்பகை தவிர அவரது குடும்ப ஜோதிடர் ரம்பையின் ஜாதகத்தைப்பார்த்து இது தேவலோக ரம்பையின் பிறப்பு ஜாதகம். இப்பெண்ணைத்திருமணம் செய்பவர் ஒரு குடையின் கீழ் உலகை ஆள்வார் எனக்கூறியது தான் காரணமாகி விட்டது என ஒற்றன் சொன்னான்” என முடித்தார்.
“அப்படியென்றால் நாம் எதற்குப்பயப்பட வேண்டும்? நமது மகாராணியின் ஜாதகம் தான் இத்தனை பலமாக இருக்கிறதே…. போர் தொடுப்பவர்கள் தோற்றுத்தானே போவார்கள்?” என கேட்டார் தளபதி தாண்டன்.
“நீ சொல்வது சரிதான். அந்த யோகத்தோடு பிறந்தாலும் அதற்கான நேரம் இன்னும் கூடிவரவில்லை என நமது அரண்மனை ஜோதிடர் கூறியுள்ளார்” என்றார் கவலையுடன்.
“அப்படியென்றால்….?” தளபதி தயங்கியபடி கேட்டார்.
“இன்னும் ஒரு வருடத்திற்கு பின்பே அந்த யோக திசைகாலம் ஆரம்பிக்கிறதென்றும், அக்காலம் வருவதற்குள் போர் தொடுத்து ராணியை கவர்ந்து சென்று பரந்த சாம்ராஜ்ய யோகத்தைப்பெற்று விடலாம் என ஒரு ராவணனைப்போல துர்மணம் படைத்த சண்டாளன் துணிந்துள்ளான். தற்போது நமது ராணிக்கு கேது திசை நடக்கிறது. போர் ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. நமது குல தெய்வம் காளியை வேண்டி பலியிட்டு விட்டு போருக்கு ஆயத்தமாகுங்கள். ராணி ரம்பையை மாறு வேடத்தில் அவர்களது பிறந்த தேசமான சிலவ தேசத்திற்கு பாதுகாப்புடன் அனுப்புவதைத்தவிர வேறு வழி தெரியவில்லை. ஒரு வீரனான கணவனால் நம் பெண்ணைக்காப்பாற்ற இயலாமல் நம் தேசத்துக்கு அனுப்பி விட்டார் எனும் அவப்பெயர் வந்தாலும் பரவாயில்லை. எப்படியாவது ராணியைக்காப்பாற்றியாக வேண்டும் என சபையிடம் கூறியதை சபை ஏக மனதாக ஆமோதித்தது.
போர் தொடங்கியது. இரண்டு பக்கங்களிலும் உயிர் சேதம், பொருட்சேதம் அதிகமானது. “மண்ணுக்காகவும், பெண்ணுக்காகவும், பொன்னுக்காகவும் தான் ஒலகத்துல இது வரைக்கும் போர் நடந்ததாக வரலாறு சொல்லுது. அதனால் தான் நமக்கு மூத்தவங்க மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை ஒரு மனுசனுக்கு ஆகாதுன்னு சொன்னாங்க” என வயதானவர்கள் பேசிக்கொண்டார்கள்.
பத்து மாதங்களாக போர் தொடர்ந்து நடந்தது. வீரர்கள் பற்றாக்குறை ஏற்பட நாட்டு மக்களில் வீட்டுக்கொருவர் என தாமாகவே முன் வந்து போரில் கலந்து கொண்டனர். மகாராணியைக்காக்க உயிர் துறக்கவும் தயாரானார்கள்.
வீரர்களது இழப்பைத்தாங்க இயலாத மன்னர் ஒரு தந்திரம் செய்தார். சிலவ நாட்டு மன்னரான தன் மாமனார் மூலமாக களவ நாட்டு ஜோதிடருக்கு ஓலை அனுப்பச்செய்தார்.
அந்த ஓலையைப்படித்த போது தான் மளவ நாட்டு ராணியைக்கவர்ந்து வரவே தமது களவ நாட்டின் மன்னர் போர் தொடுத்துள்ளார் என்பது ஜோதிடருக்கே தெரிந்தது. தான் போர் தொடுத்து தங்களது மகளைக்கவர மன்னருக்கு யோசனை ஏதும் சொல்லவில்லை என்றும், பெண்ணின் ஜாதகத்தை தம் மன்னருக்காக, திருமணத்துக்காகப்பார்த்த போது ஜாதக யோக சிறப்பை ஒரு முறை சொன்னதாகவும் கூறி மறு ஓலை அனுப்பியதோடு இரண்டு தரப்பினரின் நன்மைக்காகவும், போரை நிறுத்தும் பொருட்டும் ஓலையில் எழுதப்பட்டிருந்த உபாயத்தை செயல் படுத்த அரண்மனைக்கு மன்னரைக்காண ஜோதிடர் விரைந்தார்.
“என்ன ஜோதிடரே இப்படி அவசரமாக வந்து அதிர்ச்சி தரும் தகவலைத்தருகின்றீர்கள்? “
“நான் படித்த ஜோதிடக்கலையை உள்ளபடி தங்களிடம் கூறியது உண்மை தான். ஆனால் சில சமயம் கிரகங்கள் நம்மிடம் குழப்பங்களை விளைவிக்க சக மனிதர்கள் மூலமாக ஜனன ஓலையை மாற்றி விடுகின்றன. அவ்வாறு தான் மளவ நாட்டு மகாராணி ரம்பையின் ஜாதகமும்.
நான் சொன்ன போது இரண்டு ஜாதகங்களைக்கொண்டு வந்து கொடுத்தீர்கள். ஒன்று ரம்பையுடையது, இன்னொன்று தங்களது தேவி காந்தாரையுடையது. மன்னர்களைப்பொறுத்தவரை தங்களது குழந்தைகளுக்கு ஜாதகம் எழுதினாலும் அதில் பெயர் எழுதும் பழக்கமில்லை என்பது தங்களுக்கும் தெரியும். பெயர் தெரிந்தால் ஜாதகத்தில் தீய காலத்தைக்கணித்து வைத்துக்கொண்டு நாட்டைப்பிடிக்க எதிரிகள் திட்டமிடுவர். யோகங்களை வைத்து பெண்களை அபகரித்து விடுவர் என ஜாதகத்தில் பெயர் குறிப்பிடும் பழக்கமில்லை. இதனால் குழப்பம் உண்டானதே தற்போதைய போருக்கு காரணமாகிவிட்டது”
“சற்று புரியும்படி கூறுங்கள்”
“மன்னா நான் சொன்ன யோக பலன் நமது மகாராணி காந்தாரையுடையது. அன்று நான் பலன் சொன்னபோது ஜாதகம் மாறி விட்டது. அவர்களுடைய ஜாதகத்தில் தான் அகண்ட சாம்ராஜ்ய யோகம் உண்டாகப்போகிறது. அப்போது போர் செய்யாமலேயே பக்கத்து நாட்டு மன்னர்கள் தங்கள் நாடுகளை உங்களிடம் ஒப்படைப்பார்கள். போர் தொடுத்தாலும் வெற்றி தான். அதற்கு இன்னும் இரண்டு மாதங்கள் தான் உள்ளன. போரால் உயிர் சேதங்களைத்தடுக்க தற்போது நடக்கும் போரை இரண்டு மாதங்களுக்கு நிறுத்தி வையுங்கள்” என ஜோதிடர் கூறியதைக்கேட்ட மன்னர் உடனே தளபதிக்கு போர் நிறுத்தம் செய்ய உத்தரவிட்டு ஓலை அனுப்பினார்.
போர் நிறுத்தப்பட்ட நல்ல செய்தியை அறிந்த சிலவ நாட்டு மன்னர், களவ நாட்டு ஜோதிடருக்கு ஓலை மூலமாகத்தெரிவித்த வேண்டுகோளை நிறைவேற்றியதற்கு மானசீகமாக நன்றி தெரிவித்துக்கொண்டார்.
இரண்டு மாதங்களுக்குப்பின் மளவ தேசத்துப்படைகள் களவ தேசத்து அரண்மணையைச்சுற்றி வளைத்தன. ‘தனது மனைவிக்கு ஜோதிடர் சொன்ன யோகமிருந்திருந்தால் மளவ படைகள் உள்ளே நுழைய முடியுமா? உண்மையில் மளவ மகாராணிக்குத்தான் அந்த யோகம் என்பது தற்போது நிதர்சனமாகிவிட்டதே….’ என குழப்பமடைந்தார் களவ மன்னர்.
களவ நாட்டு மன்னர் ஜோதிடரை அழைத்துக்கேட்டார். “எல்லாம் கிரக இயக்கங்கள் படியே நடக்கிறது மன்னா. மண்ணுக்காக நீங்கள் போரிட்டிருந்தால் நானும் கூட நமது படையில் இணைந்து போரிட்டிருப்பேன். ஒரு பெண்ணுக்காக…. அதுவும் மணமான பெண்ணுக்காக…. அரிச்சந்திரன் மரபில் வந்த எமது மன்னர் போர் தொடுப்பதை என்னால் ஜீரணிக்க முடியாமல் தான் வாழ்வில் ஒரு பொய்யைச்சொன்னேன். இதற்காக நீங்கள் எனக்கு மரண தண்டனை வழங்கினாலும் ஏற்றுக்கொள்கிறேன். பிறப்பவர்கள் யாரும் இறக்காமல் போவதில்லை. ஆனால் வரலாற்றில் தங்களது பெயர் ராமனைப்போல இல்லாமல் ராவணனைப்போல இடம்பெற்று விடக்கூடாது மன்னா… ” என கூறிய ஜோதிடரைக்கட்டியணைத்தபடி நன்றி சொன்னார் களவ நாட்டு மன்னர் காள மேகம்.
தற்போது எதிரி படைகளை எதிர்த்து இறந்தாலும் வரலாறு பெண் பித்தன் எனக்கூறாமல் மாவீரன் எனக்கூறுமெனக்கருதி உறையிலிருந்த வாளை எதிரிகளை விரட்ட உருவினார்.