ராகிங் – ஒரு பக்க கதை






‘‘இங்கே புதுசா சேர்ந்தவர்களை ராகிங் பண்ணுவாங்களா..?’’
‘‘சேச்சே! அப்படியெல்லாம் இல்லை… யார் சொன்னது?’’
‘‘புதுசா சேர்ந்த ஸ்டூடன்ட்ஸ் தலையில் தண்ணி ஊத்துவாங்கன்னு கேள்விப்பட்டேன்…’’
‘‘அதெல்லாம் எப்போவோ நடந்தது… இப்போ அது மாதிரி இல்லை. ரொம்ப டிசிப்ளினா இருப்பாங்க…’’
‘‘பேப்பரை கிழிச்சு தலையில் போடுவாங்களாமே?’’
‘‘அப்படி எல்லாம் இல்லை!’’
‘‘ஜூனியர்ஸோட லன்ச் பாக்ஸைத் திறந்து மத்தவங்க சாப்பிடுவாங்கன்னு புகார் இருக்காமே?’’
‘‘மேடம்… யாரோ ஒருத்தன் எப்பவோ செய்ததை வெளியில இருக்குறவங்க பெரிசு பண்ணிப் பேசுறாங்க. எங்க நிறுவனத்துக்கு கெட்ட பேர் உண்டாக்குறதுக்காகவே கிளப்பிவிடுறதுதான் இதெல்லாம். நீங்க நம்பாதீங்க. எந்தத் தப்பும் நடக்காம நாங்க பாத்துக்குவோம்…’’
‘‘இன்னும் ஒரே ஒரு விஷயம்… சீனியருங்க தப்புப் பண்ணிட்டு பழியைப் புதுசா சேர்ந்தவங்க மேல போட்டுடுவாங்கன்னு சொல்றாங்களே… அது…’’
‘‘போட்டா..? நாங்க நம்பிடுவோமா? ஏன் உங்களுக்கு இப்படி எல்லாம் சந்தேகம்..?’’
‘‘மூணு வருஷமா என் மனசில் உறுத்திக்கிட்டு இருக்கிறதை இப்பத்தானே கேக்க முடியும்? அதுவும் ஆயிரக்கணக்கில் பணத்தைக் கட்டிட்டு… உங்களை நம்பித்தான் என் மகனை எல்.கே.ஜியில சேர்க்கறேன். யூ.கே.ஜி பசங்க அவனை படுத்தாம பாத்துக்குங்க!’’
– பெப்ரவரி 2014