ரகுபதி..!




கோட்டுச்சேரியையும் நெடுங்காட்டையும் இணைக்கும் ஆறு கிலோ மீட்டர் சாலை… காவிரியின் கிளை நதியான நாட்டார் வாய்க்கால் என்னும் ஆற்றை ஒட்டியது. ஆற்றைப் போலவே வளைந்து நெளிந்து செல்வது.
அந்த சாலையின் இருபுறங்களிலும் கட்டி அணைக்க முடியாத அளவிலான பெரிய புளிய மரங்கள். எல்லாம் அசோகர் காலத்தவை போல. அவ்வளவு பிரம்மாண்டம் .!
பகலில் , சாலை முழுவதும் சூரிய வெளிச்சம் படாமல் குளிர்ச்சியாக இருக்கும்.
இரவில், அப்படியே அட்டக்கரியாய்க் கும்மிருட்டாக இருக்கும். வெளிச்சம் ஏதும் இல்லாமல்…. ஆட்கள், வண்டி வாசிகள் எது வந்தாலும், சென்றாலும் தெரியாது.
ஆற்றின் அக்கறை….மனிதன் புழங்கும் ஒற்றையடிப் பாதையைத் தவிர மரம், செடி, கொடிகள் அடர்ந்த காடு.
சாலையை ஒட்டிய இக்கரையில் சுற்றுப் பட்ட கிராமங்களின் கிலோ மீட்டருக்கு ஒன்றாக ஐந்தாறு சுடுகாடுகள்!!
கோட்டுச்சேரியிலுருந்து மேற்கே ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவில் தெற்கு, வடக்கால் இருந்து வரும் வேறு இரு ஆறுகளும் இதனோடு இணையும் சந்திப்பு. அது தரை மட்டத்திலிருந்து கொஞ்சம் உயர்ந்து அடர்ந்த ஆலமரங்கள் அடங்கிய இடம். பெயர் முக்கூட்டு ஆலமரம்.
அதில் அனைவரையும் மிரட்டும் விதமான முனீஸ்வரன் கோயில்.!!?
அது பயப்படுவர்களை காப்பதற்கும், தைரியமாக செல்லவும் எழுப்பப் பட்டதாக இருக்கும் என்பது என் அனுமானம், கணிப்பு. ஆனால்… அது யாவரையும் மிரட்டி , பயமுறுத்தும் வகையில் அமைந்திருப்பது போக்குவரத்தாளர்களின் துரதிர்ஷ்டம்.
அந்தத் துரதிஷ்டத்திற்கும் துணை சேர்த்தாற்போல் பக்தர்கள் வணங்கி…. விழுது, மரங்களில் கட்டப்பட்ட வேண்டுதல் சிகப்புத்துணிகள். பார்க்கவே திகிலாய் இருக்கும். என்பது வேறொரு அதிர்ச்சி.!!
இது இல்லாமல்… தற்கொலைக்கென்றே முத்திரைக் குத்தப் படத்தைப் போல் எல்லா மரங்களிலும் ஆண் , பெண் பேதமில்லாமல் சகட்டு மேனிக்குத் தொங்கி இருக்கிறார்கள். !! நானே பலரைப் பார்த்திருக்கிறேன் விழிகள் பிதுங்கி, நாக்குத் தொங்கி கோரமாய்…!!
இந்த ஆறு கிலோ மீட்டர் சாலையில் எவரும் கூக்குரலிட்டாலும் கேட்க முடியாத தொலைவில் கிராமங்கள்.
பேருந்து போக்குவரத்துக் கிடையாது.
நடை, சைக்கிள், வாகனங்கள்….. மட்டுமே புழக்கம்.
எல்லா பயமுறுத்தல்களும் உள்ள இந்த சாலையில் இரவு ஏழு மணிக்கு மேல் நடமாட்டம் ரொம்ப கம்மி.
நான் காரைக்காலிருந்து கம்பெனி வேலை விட்டு வந்து கொண்டிருக்கிறேன். இந்த சாலையில் பயணித்துதான் நான் என் வீட்டிற்குச் செல்ல வேண்டும்.
இந்த சாலையைத் தொடும்போது மணி 9.30.
பயத்தில் என் இருசக்கர வாகனத்தை இறுக்கிப் பிடித்துக் கொண்டு பயணிக்கிறேன். முக்கூட்டு ஆலமர முனீஸ்வரன் கோயிலுக்கு எதிரே…என் வாகன முகப்பு விளக்கு வெளிச்சத்தில் …
நடு சாலையில்… தாறுமாறாக இரு சக்கர வாகனம் கிடைக்க… அருகில் அடிபட்ட ரத்தக் காயங்களுடன்……ஒருவன்- இளைஞன்.
‘முனீஸ்வரன் குறுக்கே நின்று அடித்துப் போட்டுவிட்டதா..? இல்லை… எதிரிகள் வழி மறித்து அடித்து நொறுக்கி விட்டார்களா..? !’- நினைத்தவாறே… அருகில் வண்டியை நிறுத்த….
“அம்மா… ! அப்பா …! தண்ணி… தண்ணி…!” வலி, இம்சை, உயர்வதை முணகளில் அவன்.
நெருங்க…. ரகுபதி !!
எனக்கு ஆளைக் காப்பாற்ற மனமில்லை.
‘போய்விடலாமா…? எவனாவது காப்பாற்றட்டும், இல்லை செத்துத் தொலையட்டும்!’ யோசனை வந்தது.
காரணம்…மூன்றாண்டுகளுக்கு முன்னான எதிரி. என் தங்கையைக் காதலித்துக் கைவிட்ட படுபாவி. அவள் இறப்பிற்குக் காரணமான கொலையாளி!!
பட்டப்படிப்புப் படித்து விட்டு ஒரு கம்பெனியில் வேலை செய்த அவளுக்கும், அதே கம்பெனியில் மேற்பார்வையாளாராகப் பணியாற்றிய இவனுக்கும் காதல்.
இந்த கைபேசி வந்துதான்…காதல் என்பது கடைச்சரக்காகி விட்டதே. அங்கே நின்று இங்கே நின்று பழகி வெளிக்குத் தெரியாமல் எல்லாம் இதிலேயே முடித்து திருமணத்திற்கு நாள் குறித்து வெளியேறுகிறார்களே…!
இவர்கள் காதல் இப்படித்தான் வளர்ந்தது போல.. எனக்குத் தெரியவில்லை. ஏன்…. வீட்டில் எவருக்குமேத் தெரியவில்லை.
ஒரு நாள். அறையில் தனியே இருந்த என்னிடம்…பம்மியப்படி வந்தாள் மகாராணி.
“அண்ணா.. !” அழைத்தாள்.
“என்ன விமலா…?”
“நான் இவரைக் காதலிக்கிறேன். பேர் ரகுபதி.! …..” என்று விபரம் சொல்லி தன் கைபேசியில் இருந்த இவன் படத்ததைக் காட்டினாள்.
“சரி.. அதுக்கு என்ன..?”
“இப்போ இவருக்கு வீட்டில் பெண் பார்க்குறாங்க..”
“சரி”
“இவர் சம்மதத்தோட வீட்டில் வேலை நடக்குது.”
“அப்படியா..?!!”
“ஆமாம்ண்ணா..”
“நான் கேட்டதுக்கு… அம்மா, அப்பா வற்புறுத்தல் சொல்றாரு…”
“ம்ம்ம்… நீயும் மறந்துடேன்..!”
“அண்ணா…!!”
“அலறாதே…! நீ… காதலிக்காதவனைக் காதலிச்சிருக்கே. வற்புறுத்தி திருமணம் முடித்து வைத்தாலும் அவன் உன்னோடு சரியா வாழமாட்டான். அப்புறம் உன் விருப்பம்…”
“இல்லேண்ணா… கேட்க ஆளில்லேன்னாலும் ஆள் இப்படி மாறலாம். நீங்க சந்திச்சு….”
“சரி. பார்க்கிறேன். உன் அன்புக்காகச் செய்யறேன்!”
அகன்றாள்.
மறுநாள்.
அவனை கம்பெனி வாசலிலேயே மடக்கி… அருகிலிருந்த பூங்காவிற்கு அழைத்துச் சென்றேன்.
“என் தங்கை விமலா…” இழுத்தேன்.
“உண்மையைச் சொல்றேன் சார்.”
“சொல்லு..?”
“என் அம்மா, அப்பாகிட்ட என் காதலைச் சொன்னேன். தாய் மாமன் தன் பெண்ணுக்கு நூறு சவரன் போட்டு, ஒரு காரும் வாங்கிக் கொடுத்து கலியாணம் முடிக்கத் தயாராய் இருக்கார். உன் காதலியும் இந்த அளவுக்கு வந்தா சம்மதம். இல்லேன்னா… எங்க சொத்துல உனக்குப் பத்துப் பைசா கிடைக்கும் என்கிற உத்திரவாதம் கிடையாதுன்னு கறாராய்ச் சொல்றார். அதான் என்ன பண்ணனும்ன்னு தெரியாம..”
“உன் முடிவு…?”
“நீங்க சொல்லுங்க சார்..?!”
“அவ்வளவு வசதி இல்லே ரகுபதி. இருபது பவுன், கொஞ்சம் சீர்வரிசை. அவ்வளவுதான் செய்ய முடியும். நான் வேணும்ன்னா… உன் அப்பா, அம்மாகிட்ட பேசி பார்க்கவா..?”
“எனக்கு ஆட்சேபணை இல்லே சார். ஆனா… யார் எப்படி பேசினாலும் அவர் அந்தப் பிடியிலதான் நிற்பார். நாங்க தப்புத்தாண்டா செய்யலே. விமலாகிட்ட சொல்லி புரிய வைங்க சார்.” கெஞ்சலாகச் சொன்னான்.
எனக்குள் இவன் முடிவு தெரிந்து விட்டது.
“சரி” சொல்லி….இவளிடம் சந்திப்பைச் சொன்னேன்.
மௌனமாகக் கேட்ட அவள்…
மறுநாள்…காலை தூக்கில் பிணம்!!
இடுப்பில்….
‘என் தற்கொலைக்கு யாரும் காரணமில்லை. வயிற்று வலி!’- கடிதம்.
எப்படி இவனைக் காப்பாற்ற மனசு வரும்…?
நகர்ந்தேன். நின்றேன்.
‘தாலிக் கட்டாமல் குடும்பம் நடத்தும் இந்தக் காலத்தில் உயிர்க் காதல், உன்னதக் காதல் , காதல் இல்லையென்றால் சாதல் எல்லாம் உதவாக்கரை.
எதையும் எதிர்பாராமல், எதிர்த்து முடித்து வாழ்வதும், எதிர்ப்பு, வெறுப்பு, மனக்கசப்பென்றால்… பிரிதல்,விலகுதல், விட்டுக் கொடுப்பு என்பதுதான் இன்றைய வாழ்வியலுக்குச் சரி.
அது இல்லாமல்… வெட்டு, குத்து, கொலை என்பது ஆத்திரம், ஆவேசம், அராஜகம், அநாகரீகம்.
உயிர் விடுதல் என்பது எந்தவிதத்திலும் சேர்த்தி இல்லாதது.
அப்படி இருக்கும்போது…இவனை விட்டுச் செல்வது எப்படி சரி. ?
எதிரியாய் இருந்தாலும் ஆபத்திலிருப்பவனுக்குக் கை கொடுப்பது மனிதம். உயிருக்குப் போராடுபவனுக்கு உதவி செய்வது மனிதாபிமானம். அப்படிப்பார்த்தால்…. ?’
திரும்பினேன்.
பாக்கெட்டில் கை விட்டு கர்சீப் எடுத்து ஆற்று நீரில் நனைத்து வந்து ஆளைத் தூக்கி சாய்த்து, வாயில் பிழிந்து விட…
“ஐயா… !…ஐயா…!” அவன் மிடறு விழுங்கி விழித்தான்.
காயத்திலிருந்த ரத்தத்தைத் துடைக்க… அவன் அடையாளம் கண்டுகொண்டு….
“சார்.! சார்…” நெகிழ்ந்தான்.
“எப்படி நடந்தது…?”
“பின் பக்க டயர் வெடிச்சு…தாறுமாறா விழுந்துட்டேன். சார்..” அழுதான்.
“சரி வா.உன்னை வீட்ல கொண்டு விடுறேன்.”
எழுப்பி, கைத்தாங்கலாய் அணைத்து, நடத்தி…என் வாகனத்தில் அமர வைத்து, மருத்துவமனைக்குச் சென்று முதலுதவிகள் முடித்து அவன் வீட்டு வாசலில் இறக்கி விடும்போது…
“சார்! தங்கை தற்கொலைக்குக் காரணமானவன்னு வெறுத்து ஒதுங்கிப் போகாம என் உசுரைக் காப்பாத்தி வீடுவரை கொண்டு விட்டதுக்கு என்ன கைம்மாறு செய்யப்போறேன்னு தெரியல. விமலா தற்கொலைக்குப் பிறகு நானும் கலியாணம் பண்ணிக்கல. பண்ண மாட்டேன்!” தழுதழுத்தான்.
எனக்குள் ஆயிரம் வோட்டிற்கு மேலான மின்னதிர்ச்சி. உறைந்தேன். சிலையாக நின்றேன்!