ரகசியத்தை சொல்லுங்க !





முன்னொரு காலத்தில் கொட்டாரப்பட்டி என்ற ஊரில் அமுதவள்ளியின் குடும்பம் வசித்து வந்தது. அழகான மாப்பிள்ளை வேணும் என தேடிப்பிடித்து ஒரு ஆண் அழகனை வெளியூரில் கண்டுபிடித்து தன் மகளை கட்டிவைத்தாள். வெகு தூரம் என்பதால் அவன், பெண் வீட்டுக்கு போனதில்லை. திடீரென்று ஒருநாள் தன் அத்தையின் வீட்டிற்கு விருந்தினராக வந்தான்.
“வராத அழகு மருமகன் வந்து விட்டானே’ என்ற எண்ணத்தில் பலவிதமான பலகாரங்கள் செய்யத் தொடங்கினாள் அவள். அப்போதுதான் வீட்டில் முந்திரிப் பருப்பு இல்லை என்பது அவளுக்குத் தெரிந்தது. மருமகனிடம் பணத்தைக் கொடுத்தாள் அவள்.
“”மளிகைக் கடைக்குச் சென்று முந்திரி பருப்பு வாங்கி வாருங்கள்!” என்றாள். அவனும் மளிகைக் கடைக்குச் சென்றான்.
அவன் கொண்டு வந்திருக்கும் பணத்திற்கு தன்னிடம் சில்லறை இல்லை என்றான் கடைக்காரன் . “”நாளை வந்து மீதிச் சில்லறையை வாங்கிக் கொள்கிறேன்!” என்று முந்திரிப் பருப்பை வாங்கினான் அவன். கடையை மறந்து விடாமல் எப்படி நினைவு வைத்துக் கொள்வது என்று சிந்தித்தான். சுற்றும் முற்றும் பார்த்தான். எதிரே எருமை மாடு ஒன்று மேய்ந்து கொண்டிருப்பது அவனுக்குத் தெரிந்தது. கடைக்கு எருமை மாடுதான் அடையாளம் என்ற எண்ணத்தில் வீடு திரும்பினான்.
மறுநாள் பொழுது விடிந்தது. சில்லறை வாங்குவதற்கு அடையாளமாக வைத்திருந்த எருமை மாட்டைத் தேடிப் புறப்பட்டான் அவன். அந்த எருமைமாடு இப்போது ஒரு தையல் கடையின் முன்னால் மேய்ந்து கொண்டு இருந்தது. நேராக தையல் கடைக்குள் நுழைந்தான் அவன். அங்கு தைத்துக் கொண்டிருந்த முதியவரிடம், “”மீதிச் சில்லறை தாங்க!” என்றான்.
“”எதற்குச் சில்லறை தர வேண்டும்?” என்று கேட்டார் அவர்.
“”நேற்று உங்களிடம் முந்திரி பருப்பு வாங்கினேன். சில்லறை இல்லை; நாளை தருகிறேன் என்று நீங்கள் சொல்லவில்லை?” என்று கேட்டான் அவன்.
அதற்கு அவர், “”நான் தையல் கடைதான் வைத்து இருக்கிறேன். மளிகைக் கடை இல்லை. உன்னை இதற்கு முன் பார்த்ததே இல்லை. சில்லறை தர முடியாது போ!” என்று கோபமாகச் சொன்னார்.
“”நீங்கள் மீதிச் சில்லறை தரவில்லை என்றாலும் பரவாயில்லை, உங்களால் எப்படி ஒரே நாளில் ஒரு அடி நீளதாடி வளர்த்துக் கொண்டு கிழவனாக முடிந்தது. அதை மட்டும் சொல்லி விடுங்கள்!” என்று கேட்டான் அழகு மருமகன். தையல்காரன் ஏற்கனவே சட்டை சரியாகத்தைக்காமல் போராடிக் கொண்டிருந்தான். ஆத்திரத்தில் அவனை நன்றாக திட்டி அனுப்பினான். வீட்டிற்கு வந்த மருமகன் அத்தையிடம் நடந்த விஷயத்தை கூறினான்.
அதிர்ச்சியில் உறைந்து போனாள் அமுதவள்ளி. “இப்படிப்பட்ட முட்டாளா நம் மாப்பிள்ளை. இவரோட அழகை பார்த்து மயங்கினோமோ… இவருடன் எப்படி நம் மகள் குப்பை கொட்டுகிறாள்’ என்று நினைத்து மிகவும் வேதனை அடைந்தாள்.
– டிசம்பர் 03,2010