யானை சிரித்தது

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: மல்லிகை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: June 27, 2025
பார்வையிட்டோர்: 2,522 
 
 

(2005ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

(இதில் வரும் மனிதர்கள் உண்மையானவர்கள், கற்பனைப் பாத்திரங்கள் அல்ல. கட்டுக் கதைகளும் அல்ல. – சுதாராஜ்)

நிர்வாக சம்பந்தமான விடயங்களைச் சொல்லும்போது இன்னொருவர் நினைவில் வருகிறார். திருவாளர் மொறிஸ் அவர்கள். இவரைப் பற்றியும் கொஞ்சம் சொல்ல வேண்டும். பூரி சகோதரர்களில் மூத்தவருக்கு அடுத்தவர். பொறியியற் துறையில் படித்தவர். கம்பனியின் தொழில்நுட்பப் பிரிவிற்கும் தொழிற்தலங்கள் எல்லாவற்றிற்கும் பொறுப்பாக இருந்தவர். அவர் ஒருமுறை இத்தாலிக்கு விஜயம் செய்தார். இத்தாலியில் விரிவாக்கம் அடைந்து கொண்டிருக்கும் கம்பனியின் வேலைத் திட்டங்களைப் பார்வையிடும் நோக்கம். 

அவர் வந்த காலகட்டத்தில் நான் ஒருவித பிரச்சினைக்கு முகம் கொடுத்துக் கொண்டிருந்தேன். இலங்கைத் தொழிலாளர்கள் தங்களது சம்பள உயர்வு தொடர்பாகப் போர்க் கொடிப்பிடித்துக் கொண்டிருந்தனர். இலங்கையிலிருந்து வந்து ஒரு வருடமளவில் வேலை செய்திருக்கிறார்கள். இவ்விடத்து சம்பள நிலமைகள் அவர்களுக்குத் தெரியவந்திருந்தது. 

இந்த நாட்டுக்காரர்களுக்கு ஒரு மாதிரியான சம்பளமும் இலங்கையிலிருந்து வந்த தங்களுக்கு இன்னொரு விதமான சம்பளமும் தருவது நியாயமற்றது எனக் கோரிக்கை விடுத்தார்கள். வெளியே போனால் இன்னும் அதிகமாக உழைக்கலாம் எனவும் வாதிட்டார்கள். வெளியே, இலங்கையிலிருந்து வந்த பலர் ஹௌஸ்மெயிட்டாகவோ அல்லது வேறு ரெஸ்ற்டோரன்ற்களிலோ வேலை செய்தாலும் கை நிறையச் சம்பாதிக்கிறார்கள் என்பதையும் குறிப்பிட்டு தங்களுடைய சம்பள உயர்வு பற்றிக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். 

தலைமை அலுவலகத்துடன் தொடர்பு கொண்டு என்னால் ஆனதைச் செய்வேன் என அவர்களுக்கு உறுதியளித்துக் கொண்டிருந்தேன். இதுபற்றி பலமுறை தலைமை அலுவலகத்தில் உரியவர்களிடம் அறிக்கை அனுப்பியுமிருந்தேன். நிக்கொலசிடமும் இந்த விடயம் பற்றிப் பேசியிருந்தேன். அவரும் தலைமை அலுவலகத்துடன் தொடர்பு கொண்டு கேட்டிருக்கிறார். 

“சம்பள அளவுகள் மற்றும் சம்பள உயர்வுகள் விடயமாக கம்பனியில் சில பொதுவான கொள்கைகள் இருக்கின்றன. அதன் அடிப்படையில்தான் இன்ன இன்ன நாட்டுக்காரர்களுக்கு இவ்வளவு சம்பளம் என ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறது. அதை மாற்றுவது இலகுவான காரியமல்ல. இங்குள்ளவர்களுக்கு சம்பள உயர்வு செய்தால் ஏனைய நாட்டு வேலைத்திட்டங்களில் உள்ளவர்களுக்கும் இதே மாதிரி உயர்த்த வேண்டும். அதை எழுந்தமானமாக யாரும் தீர்மானிக்க முடியாது. நிர்வாக மட்டத்தில் கூடி ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும்” என்றெல்லாம் தலைமை அலுவலகத்திலிருந்து பதில் வந்து கொண்டிருந்தது. 

இந்தக் கதைகளையெல்லாம் தொழிலாளர் மட்டத்தில் உள்ளவர்களுக்குப் போய்ச் சொல்லிக் கொண்டிருக்க முடியாது. அவர்கள் எந்தவிதமான சாக்குப் போக்குகளையும் கேட்க விரும்பமாட்டார்கள். அவர்களுக்குத் தேவையானதெல்லாம் சம்பள உயர்வு. 

இப்படியான மனக்குறையுடன் வேலை செய்பவர்களிடம் அவர்களின் முழு ஆற்றலையும் எதிர்பார்க்க முடியாது. இவ்வாறான பிரச்சினைகளை இரண்டு பக்கங்களிலும் சமாளிக்க வேண்டிய இக்கட்டில் நானிருந்தேன். எனினும் அவர்களுக்கு எப்படியாவது சம்பள உயர்வு பெற்றுக் கொடுக்கவேண்டும் எனும் உறுதியும் மனதில் இருந்தது. 

ஒருசில தொழிலாளர்கள் கம்பனி வேலையை விட்டு இரவோடு இரவாகக் காணாமற் போய்க் கொண்டிருந்தார்கள். இந்த வேலையை விட்டு ஓடி இத்தாலியில் வேறு மாவட்டங்களில் போய் உழைக்கும் நோக்கம். அல்லது வேறு ஐரோப்பிய நாடுகளுக்கு ஊடுருவிப் போய்விடுவார்கள். இதனால் வேறு பிரச்சினைகளுக்கும் முகங்கொடுக்க வேண்டியிருந்தது. உள்ளூர் அதிகாரிகளுக்கும் பொலிஸிற்கும் தெரியப் படுத்தும்போது அதற்குரிய விளக்கங்களையும் அளிக்க வேண்டும். இது இன்னொரு பக்கமாக உதைக்கவும் செய்தது. வேலைக்கு இலங்கையிலிருந்து ஆட்களை மேற்கொண்டு எடுப்பதைத் தடுப்பதற்குரிய கெடுபிடிகளும் செய்தார்கள். 

தொழிலாளர்களுக்கு சற்றேனும் சம்பள உயர்வு செய்தால் நிலைமைகளைக் கொஞ்சமாவது தணிக்கலாம். ஆனால் தலைமை அலுவலகத்து அதிகாரிகளுக்கு இதுபற்றிய புரிதல்நிலை இல்லாதிருந்தது. 

இந்தக் கட்டத்திற்தான் மொறிஸ் பூரி எங்கள் வேலைத் தலத்திற்கு விஜயம் செய்திருந்தார். 

அவரிடம் நேரடியாகவே இதுபற்றிப் பேசினால் என்ன என்று தோன்றியது. வேலைத்தலத்தைச் சுற்றிப் பார்த்தபின் அலுவலகத்தில் வந்து உரையாடிக் கொண்டிருந்தார். 

சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு தொழிலாளர்களின் சம்பள உயர்வு பற்றிக் கதைத்தேன். ஏற்கனவே தலைமை அலுவலகத்திற்கு இதுபற்றி அறியத் தந்திருப்பது பற்றியும் கூறினேன். உடனடியாகத் தொலைபேசியில் தொடர்புகொண்டு அவர்களிடம் இதுபற்றிய விளக்கத்தைக் கேட்டார். எனினும் சாதகமான பதில் தரவில்லை. பின்னர் இதுபற்றிப் பேசுவோம் என அவர் கூறியது ஒரு மழுப்பல்தனமான பதிலா என்று கூடத் தோன்றியது. 

இரவு ஒரு ஹோட்டலில் விருந்துபசாரம் நடந்தது. குறிப்பிட்ட சிலர் வந்திருந்தார்கள். நிக்கொலசும் இருந்தார். கம்பனியின் இத்தாலியப் பிரிவில் பணியாற்றும் அதிகாரிகள் மட்டத்திலுள்ள இன்னும் பத்துப் பன்னிரண்டு பேர் வரை கூடியிருந்தார்கள். 

மொறிஸ் பூரி சந்தோஷமான மனநிலையில் இருந்தார். இத்தாலியப் பிரிவு தொழிற்திட்டங்கள் விரிவாக்கம் அடைந்தமை பற்றிப் பாராட்டிப் பேசினார். நகைச்சுவையாகவும் வேடிக்கையாகவும் அவரது பேச்சு அமைந்திருந்தது. 

நீளமாக அடுக்கப்பட்ட சாப்பாடு மேசையைச் சுற்றி முகத்துக்கு முகம் பார்த்தபடி அமர்ந்தார்கள். எல்லோரும் எல்லாரும் ஏதாவது பேசவேண்டும் என மொறிஸ் பூரி கேட்டுக் கொண்டார். 

எனது முறை வந்தது. 

நான் ஒரு கதை சொல்லப் போகிறேன் என எனது பேச்சை ஆரம்பித்தேன். (நான் ஓர் எழுத்தாளன் என்பது அவர்களுக்குத் தெரியும்… ஆனால் எழுத்தாளர்கள் இப்படித்தான்… எங்கு போனாலும் கதை சொல்லியே கழுத்தறுத்துவிடுவார்கள் என்பது அவர்களுக்குத் தெரியுமோ என்னவோ..!) 

இந்தக் கதையை எங்கேயோ கேட்ட ஞாபகம் எனக்கு. அதற்கு என் கையாலும் போட்டு சற்று மாற்றிக் கதை அளக்கத் தொடங்கினேன். 

ஒரு நாட்டில் ஒரு ராசா இருந்தார். மிகப் பெரிய ராசா. அவரது பிறந்த நாள் விழா விருந்துபசாரங்களுடன் கோலாகலமாக நடந்தது. பிறநாட்டு மன்னர்கள் வந்திருந்தார்கள். குறுநில மன்னர்கள் வந்திருந்தார்கள். மந்திரி பெருமக்கள் அதிகாரிகள் எனப் பலதரப்பட்ட மக்களும் வந்திருந்தார்கள். 

ராசா ஒரு வேடிக்கையான போட்டி வைத்தார். 

அங்கே ஒரு யானை நின்றது. அதைச் சிரிக்க வைக்க வேண்டும். அதைச் சிரிக்க வைத்தால் பெரிய தொகைக்குரிய பணமுடிச்சு பரிசாகத் தரப்படும் என அறிவித்தார். மிகப் பெரிய தொகை. இதைப் பரிசாகப் பெற்றுக் கொள்வதற்காகவும் தங்களது வல்லமையை ராசாவுக்குக் காட்டுவதற்காகவும் ஒவ்வொருவராக அந்த யானைக்கு அண்மையில் சென்று பலவிதமாக முயற்சித்தார்கள். அந்த யானை சிரிக்கவில்லை. 

இறுதியாக ஒருவர் அந்த யானைக்கு அண்மையில் போனார். அதன் காதில் ஏதோ கிசுகிசுத்தார். யானை சிரிக்கத் தொடங்கிவிட்டது. கெக்கட்டமிட்டுச் சிரித்தது. 

ராசாவுக்குச் சந்தோஷம். 

அவனை அழைத்து பண முடிப்பை வழங்கினார். அவருக்கு வியப்பாயுமிருந்தது. 

“நீ அந்த யானைக்கு என்ன கூறினாய்?” என அவனிடம் கேட்டார். 

“மகாராசா! நான் லிபெக்சிம் சீமென்ற் கம்பனியில் பணியாற்றுகிறேன் என்று அந்த யானைக்குக் கூறினேன். அது சிரிக்கத் தொடங்கிவிட்டது…” (லிபெக்சிம் சீமென்ற் என்பது நாங்கள் பணியாற்றும் கம்பனியின் பெயர்) 

“அந்த யானையை அழவைக்க முடியுமா? அதை அழவைத்தால் இன்னும் பெரிய தொகை பரிசாக வழங்குவேன்” என ராசா கூறினார். 

“அது மிக இலகுவான விடயம்!” எனக் கூறிவிட்டு அவன் யானைக்கு அண்மையாகச் சென்றான். அதன் காதில் ஏதோ கூறினான். 

அந்த யானை ‘ஓ…’ வென அழத் தொடங்கிவிட்டது. விக்கி விக்கி அழுதது. 

“இப்போது அதற்கு என்ன கூறினாய்?” என ராசா கேட்டார். 

“லிபெக்சிம் சீமென்ற் கம்பனியில் எனக்கு வழங்கப்படும் சம்பளம் எவ்வளவு என யானைக்குக் கூறினேன். அதுதான் அழுகிறது. 

இதுதான் கதை. இந்தக் கதையைக் கூறி முடித்துவிட்டு இயல்பாகவே மொறிஸ் பூரியைப் பார்த்தேன். 

அவர் அந்த யானையைப் போலவே சிரித்தார். 

“மிஸ்டர் ராஜா. தொழிலாளர்களுக்கு எவ்வளவு சம்பளம் உயர்த்தலாம் என்ற உங்களது பிரேரணையுடன் நாளைக்கு அலுவலகத்தில் வந்து சந்தியுங்கள்” எனக் கூறினார். 

அதிசயம் என்னவென்றால் அந்தக் கிழமையே அனைவருக்கும் சம்பள உயர்வு கிடைத்தது. 

– மல்லிகை, 2002.

– மனித தரிசனங்கள் (சிறுகதைகள்), முதற் பதிப்பு: 2005, மணிமேகலைப் பிரசுரம், சென்னை.

சுதாராஜ் விபரக்குறிப்பு இயற்பெயர்: சிவசாமி இராஜசிங்கம்புனைபெயர்: சுதாராஜ்கல்வி: பொறியியற் துறை, மொரட்டுவ பல்கலைக்கழகம், இலங்கை. தொடர்புகளுக்கு:முகவரி: சி.இராஜசிங்கம், (சுதாராஜ்)சீ கிறெஸ்ட் அபார்ட்மென்ட்,189/1, 6/1, மகாவித்தியாலய மாவத்த,கொழும்பு 13, இலங்கை. S.Rajasingham (Sutharaj)Seacrest Appartment,189/1, 6/1, Mahavithyalaya Mawatha,Colombo 13, Srilanka. தொலைபேசி: 0094 112380999 (இலங்கை)தற்போதைய தொலைபேசி தொடர்பு: 00218 913084524 (லிபியா) E mail: rajsiva50@gmail.comrajasinghamsivasamy@yahoo.com படைப்புகள்: (வெளிவந்த நூல்கள்) சிறுகதைத் தொகுப்பு பலாத்காரம் - தமிழ்ப்பணிமனை வெளியீடு -1977…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *