மோசம் செய்யக் கூடாது




ஒரு ஊரில் செட்டியார் ஒருவர் சிறு சிறு தொகையை வட்டிக்குக் கொடுப்பார். ஆனால், வட்டி அதிகமாக வாங்குவார். அவசரமான வேளைகளில், சிறு வியாபாரிகள் அவரிடம் சென்று கடன் வாங்குவார்கள்.
ஒரு சமயம், காய்கறி விற்பனை செய்பவனும், பழம் விற்பவனும் செட்டியாரிடம் வந்து கடன் கேட்டனர்.
“எவ்வளவு ரூபாய் தேவை? யாருக்கு வேண்டும்?” என்று கேட்டார் செட்டியார். மேலும்,
“நூற்றுக்கு பத்து ரூபாய் வட்டி தினம் ஒரு ரூபாய் கொடுக்க வேண்டும் யார் ஜாமீன்?” என்று கேட்டார்.
“எனக்கு நூறு ரூபாய் கொடுங்கள். தினமும் ஒரு ரூபாய் கொடுக்கிறேன். பழக்கடைக்காரன் ஜாமீன்” என்றான் காய்கறி வியாபாரி.
இருவரிடமும் சீட்டில் கையொப்பம் பெற்றுக் கொண்டு, வட்டி முப்பது ரூபாய் போக எழுபது ரூபாயைக் கொடுத்தார் செட்டியார்.
வெளியே வந்ததும், “செட்டியாருக்கு முப்பது ரூபாய் லாபம், எனக்கு எழுபது ரூபாய் லாபம்” என்று கேலியாகச் சொன்னான் காய்கறி விற்பவன்.
“நீ சொல்வதைப் பார்த்தால், செட்டியாரின் கடனைத் தீர்க்காமல் ஏமாற்றலாம் என்று தோன்றுகிறது. சொன்ன சொல்லைக் காப்பாற்றுவதே மனிதத் தன்மை. செட்டியார் சந்தைக்கு வந்து கேட்கும் போது கிஸ்தி கட்டிவிடு. செட்டியார் சத்தம் போட்டுச் சொன்னால், உன் மானம் போய் விடும். ஒருவனும் உன்னை மதிக்காமல், நூறு ரூபாய் கடனை வாங்கி மோசம் செய்தவன் என்று பேசுவார்கள். நூறு ரூபாய்க்காக மானத்தை இழக்கப் போகிறாயா! உனக்காக, நான் ஜாமீன் கையொப்பம் போட்டிருக்கிறேன்” என்று அறிவுரை கூறி எச்சரித்தான் பழ வியாபாரி.
“நான் தவறாகச் சொல்லி விட்டேன் என்னை மன்னித்து விடு; கிஸ்தியை ஒழுங்காகச் செலுத்துகிறேன்” என்றான் காய்கறி வியாபாரி.
– சிறுவர் சிறுமியருக்கு நீதிக் கதைகள், முதற் பதிப்பு: நவம்பர் 1997, முல்லை பதிப்பகம், சென்னை.