கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 4, 2025
பார்வையிட்டோர்: 431 
 
 

(1964ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

நானும் எனது தங்கையும் ஒரே மரத்தில் கணு விட்டு வெடித்து வளர்ந்த இரு காம்புகள். இந்த இரு காம்புகளையும் பருவம் ‘மொட்டு’ வரை ஒன்றாக வளர்த்து விட்டது. இரண்டு காம்புகளும் மொட்டு வரை வளர்ந்து, இடையில் ஒன்றை யொன்று வென்றுவிட்டது. எனது தங்கை ‘மொட்டு’ என்ற நிலையைக் கடந்து ‘மலர்’ ஆகிவிட்டாள்.இன்று அவள் இதழ்கள் விரிந்து, தேன்பிலிற்றி மகரந்தம் சிந்திக் கொண்டிருக்கின்றாள். காம்பு, மொட்டாக, மொட்டு மலராகும் வரை காத்திருந்த வண்டு, இன்று அதன் தேனை உறிஞ்சப் பறந்து வந்திருக்கின்றது. 

ஆனால் நான்……!? 

2

சுப மங்கள முகூர்த்த தினத்தில் பிள்ளையார் கோவிலில், இனபந்துக்கள், நண்பர்கள் முன்னிலையில் தாலி கட்டியபின் எனது தங்கையும் அவளது துணைவருமாக வீடு நோக்கி வந்துகொண்டிருக்கின்றார்கள். அவள் அணிந்திருக்கும் கூறைச்சேலை, அவள் நடக்கும் போது ‘சரசர’ வென்று சத்தம் இடுகின்றது. அவள் கூறைச் சேலையுடுத்து, நெற்றிப்பட்டம் கட்டி, திலகமிட்டு, கொண்டைக்கு மாலை யணிந்து, மெதுவாக அன்னம் போல நடந்து வருகின்றாள். அவளது கழுத்தில் தாலி மடிந்து கிடந்து வெயில் படும் போதெல்லாம் டால் வீசிக்கொண்டிருக்கின்றது. தங்கையைப் பார்த்த கண்களைச் சிறிது அகற்றி, அவளது கணவரைப் பார்க்கின்றேன். அவர் நல்ல தக்காளிப்பழம் போல நல்ல சிவந்த நிறம். நல்ல உயரம். உயரத்திற்கேற்ற பருமன். பக்க வகிடு விட்டு நன்றாக வாரிவிடப்பட்ட சுருள் கேசம். சில சுருண்டு மடிந்து அவரது நெற்றியில் துவள்கின்றன. அது கூட அவருக்குத் தனி அழகைத் தான் கொடுக்கின்றது. அவர் எனது தங்கையின் கையைப்பிடித்துக்கொண்டு மெல்ல மெல்ல நடந்து வருகின்றார். இவர்களைச் சூழ்ந்து நாதஸ்வர இசையும், தவில் வாத்தியங்களும் முழங்கிக் கொண்டுதான் இருக்கின்றன. வையெல்லாம் எனது தங்கைக்கு நாணத்தைப் பிறப்பிக்க, அவள் தலையைக் குனிந்தபடியே வந்துகொண்டிருக்கின்றாள். 

நான் எனது தங்கைக்கு அப்பால் வந்து கொண்டிருக்கின்றேன். எனக்கு, அவளுக்கருகில் வருவதற்கு வெட்கம் மட்டுமல்ல பயமுமாக இருக்கின்றது. நான் இந்த நல்ல முகூர்த்த தினத்தில் எனது தங்கைக்கு அருகில் வருவதை இந்த உலகம் மன்னிக்காது. ‘என்ன இவளுக்கு மனச்சாட்சி இல்லையா, வாழ்வில் ஒளியை நாடி ஓடிக்கொண்டிருப்பவளுக்கருகில் இந்த இருளியா?’ என்று கேட்பார்கள் என எனது மனம் எண்ணியதால் நானாகவே விலகி எங்கோ தள்ளி வந்து கொண்டிருக்கின்றேன். 

“ஆகா, நல்ல பொருத்தமான ஜோடி, அன்றிலும் பேடையுமா இது!” என்று யாரோ திருமணத்திற்கு வந்தவர்கள் கதைக்கிறார்கள். நான்தான் வாழ்க்கையின் நிழலையே காணமுடியாதவ ளென்றால் எனது தங்கையின் வாழ்க்கையில் சிறிதளவாவது அக்கறையில்லாதவளா? நான் எனது தங்கைக்கும் அவளது கணவருக்கும் திருஷ்டிபட்டுவிடக்கூடாதென்று மனத்திற்குள் பிரார்த்திக்கின்றேன். 

சீனவெடிகளும் மேள தாழங்களும் கலந்து ஒலிக்க, தங்கை புஸ்பமும் அவளது ‘அத்தானும்’ வீட்டை நெருங்கி வந்துகொண்டிருக்கின்றனர். அவர்கள் வாசலை நெருங்கியதும், யாரோ ஆரவாரப்பட்டு ஆலாத்தி கொண்டுவந்து இருவரையும் ஆலாத்துகின்றார்கள். ஆலாத்தியின் தீப வெளிச்சத்தில் அவர்களின் முகங்கள் நளனும் தமயந்தியுமாய் எவ்வளவு வடிவாக… நான் அந்தக் காட்சியை வெறும் கோள விழிகளால் தான் பார்க்கின்றேனே தவிர இதயக் கண்ணால் பார்க்க முடியவில்லையே. எனது இதயக் கண்ணுக்குள் ஏதோ மண் தூவப்பட்டு, பார்க்க முடியாத அளவுக்கு எரிவும் உருட்டும். அந்தக் காட்சியைப் பார்த்த பொழுது சிறு வயதில் நானும் புஸ்பமும் அடுத்த வீட்டு யோகத்தோடும், ரங்கனோடும் கல்யாண வீடு விளையாடிய ஞாபகம் மனத்தில் ஊருகின்றது. அப்பொழுது என்னை மணப்பெண்ணாகவும் அடுத்த வீட்டு ரங்கனை மாப்பிள்ளையாகவும் ‘வேஷம்’ போட்டு விளையாடி… எனக்கு  வாழ்க்கையில் இப்படி ஒரு சந்தர்ப்பம் கிடைக்காதென்றுதான் அன்று ‘நீ பொம்புளையாம் ரங்கன் உனக்கு மாப்பிள்ளையாம்’ என்று சொல்லி வாயால் பீ…பீ என்று சூழலூதி டும்டும் என்று மேள மடித்து விளையாடி எனது ஆசையைத் தீர்த்தாளோ அவள். ஆம். அன்று ஆசைதீர்ந்ததுதான். அது வெறும் விளையாட்டில் பிறந்த ஆசை. ஆனால் இன்று…… என்னால் அழுகையை அடக்க முடியவில்லை. கீழுதட்டைக் கடித்து மன உழற்சியை ஏதோ விதமாக அடக்கி விடுகின்றேன். 

மணப்பெண்ணும் மாப்பிள்ளையும் ஆலாத்தியைப் பெற்றுவிட்டு மணப்பந்தலுக்குள் வந்து கொண்டிருக்கின்றார்கள். அவர்களை இடையில் மறித்து, யாரோ ஒரு பாத்திரத்திற்குள் பாலை ஊற்றிக் கொடுக்கின்றார்கள். மாப்பிள்ளை அதை வாங்கித் தானும் பருகிவிட்டு ‘உமக்கும் வேணுமா?’ என்று குறும்பாகக் கேட்க, புஸ்பம் நாணத்தால் குறுகி, தனது கடையோர விழிகளால் பார்த்துச் சிரிக்கின்றாள். தனது வாழ்விலும் தாழ்விலும், நிழலாகத் தொடர்பவளுக்கு, தான் அனுபவிக்கும் இனிமையிலும் அவளுக்கும் கட்டாயம் பங்குண்டு’ என்று காட்டுவதற்காக, அவளின் கையைப் பிடித்து, பால் வைத்திருந்த பாத்திரத்தைக் கொடுத்தார். அவளும் அதை வாங்கிப் பருகிய பின், இருவருமாக மணப்பந்தலுக்குள் அவர்களுக்கெனப் பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட ஆசனத்தில் போய் அமர்கின்றார்கள். அவர்களது ஆசனத்தில் ஒரு கம்பளம் விரிக்கப்பட்டிருக்கின்றது. அந்தக் கம்பளத்தில் இரு அன்னங்கள் ஒன்றையொன்று இறுகிப் பிணைந்து, ஒன்றை மற்றையது பார்ப்பதான படம் ஒன்று வரையப்பட்டிருக்கின்றது. அதை மாப்பிள்ளை கண்டுவிட்டார் போலும். அவருக்கு அந்தக் காட்சியில் ஏதோ ஒரு நினைவு பிறக்க, மெதுவாகப் புஸ்பத்தைச் சுரண்டி அதைக் காட்டுகின்றார். அவர் சரியான குறும்புக்காரர் போலும். அவர் காட்டியதன் அர்த்தம் புஸ்பத்திற்கும் புரிந்ததினால் அவள் மெதுவாகச் சிரிக்கின்றாள். அவள் மட்டுமல்ல அவர்கள் இருவரும் சிரிக்கின்றனர். 

அந்தச் சிரிப்பை நானும் பார்க்கின்றேனே. முதல் முளைத்த மொட்டு ‘வெறும்’ மொட்டாக இருக்க, பின்பு வந்த மொட்டு மலருவதைப் பார்த்து, முதல் மொட்டு அடையும் வேதனையா இது. 

மணப் பெண்ணும் மாப்பிள்ளையும் மணவறையில் வீற்றிருக்கின்றார்கள். அவர்களை வாழ்த்துவதற்கு அங்கு வந்தவர்கள் ஒவ்வொருதராக எழுந்து வந்து வாழ்த்துகின்றார்கள். 

“அன்றிலும் பேடையுமாய் வாழ்க” 

“நகமும் சதையுமாய் வாழ்க”

“இறைவன் இருவரையும் ஆசீர்வதிக்குக” 

இப்படியிப்படி யெல்லோரும் ஆசீர்வதித்துக் கொள்கின்றார்கள் அடுத்தபடியாக இன்னொருவர், இவர் மாப்பிள்ளையின் உற்ற நண்பராம். அவர், 

“பதினாறும் கலந்து பெறுக” என்று ஏதோ அர்த்தப்படக்கூறிய பொழுது, மாப்பிள்ளை மெதுவாகத் தனது தலையைப் பக்கவாட்டாகத் திருப்பி, எனது தங்கையைப் பார்த்து,. 

“பதினாறு போதுமா புஸ்பம்” என்றார். அவர் குறும்புக்கார ரென்று சொன்னது உண்மை தான். நாணம் புஸ்பத்தின் தலையைக் கவிட்க, அவள் நிலத்தைப் பார்த்துக்கொண்டு சிரிக்கின்றாள். 

அவர்கள் இருவரும் கதைத்துச் சிரிப்பதைப் பார்க்க எனக்கும் ஆசையாகத்தான் இருக்கின்றது. ஏதோ ஒரு உணர்வில் நானும் என்னை மறந்து அந்தக் காட்சியில் லயித்திருந்தேன். பின்பு நானே ‘நானாகி’ திடுக்கிட்டு அங்கும் இங்கும் பார்க்கின்றன். இந்த உல கம் பொல்லாதது அல்லவா? என்னைப்பற்றி என்னவும் நினைத்து விட்டால்…? 

மலருக்கு மொட்டான நிலையில் இருக்கும் பொழுதே உணர்வுகளும் இருக்கின்றன. அது மொட்டென்ற நிலையிலிருந்து மாறி, மலராகிய பின்பே உலகம் அந்த உணர்வுகளைப் புரிந்து ஏற்றுக் கொள்கின்றது. இது சொல்லித் தெரியவேண்டியதில்லை. அப்படி யென்றால் மொட்டிற்கும் உணர்வுகள் இருக்கென்பதை ‘நானா’ சொல்ல வேண்டும்? 

கல்யாண வீட்டுக் கலவரங்கள் ஒரு வாறு அடங்கி, ஒவ்வொரு வரும் சிறிது ஆறியிருக்க நேரம் கிடைத்தது. எனவே மாப்பிள்ளை, எனது தங்கை, மாப்பிள்ளையின் நண்பர், அவரது மனைவி எல்லோருமாக இருந்து சுவராஷ்யமாக ஏதோ கதைத்துக்கொண்டிருக்கின்றார்கள். 

மலர்களும் வண்டுகளும் இருக்கும் இடத்தில் இம் மொட்டுக்கு ஏன் அங்கு பிரசன்னம்? நான் எங்கோ தொலைவில் இருந்து ஏதோ புத்தகம் ஒன்றை வாசித்துக் கொண்டிருக்கின்றேன். நான் உண்மையில் அந்தப் புத்தகத்திலேயே இலயித்துவிட்டேன். நான் எதிர்பார்த்தே இருக்கவில்லை இப்படியொரு நிகழ்ச்சியை. 

எனது தங்கை எழுந்து வந்து, கையைப் பிடித்து என்னை எழுப்பி “அக்கா என்னோடு ஒருக்காவா, அவர்கள் உன்னை யொருக்காப் பார்க்க வேண்டுமாம்” என்றாள். 

“என்னை என்னத்துக்குப் புஸ்பம் அங்கு, நான் வரவில்லை, நான் இதிலையே இருக்கின்றேன்…” என்றேன். 

“இல்லை அக்கா எனக்காக  ஒருக்கா வா” – அவள் அப்படி அழைக்கும் போது என்னால் சகோதர பாசத்தை மீற முடியவில்லை. எனக்கு விருப்பமில்லை யென்றாலும் கூட அவளோடு எழுந்து சென்றேன். அவள் எனது கையைப் பிடித்து, அழைத்துக் கொண்டுபோய், தனது கணவரின் நண்பரின் மனைவிக்கு, 

“இவதான் எனது ஒரேயொரு அக்கா” – என்றாள். 

“சரியா உங்களைப் போலவே தான் இருக்கின்றா”‘ –  என்று சிரித்துக்கொண்டு சொன்னா எனது தங்கையின் நண்பரின் மனைவி. 

“ஆமாம் அது தான் அக்கா வென்று சொன்னேனே…” குறும்பாகப் பேசினாள் எனது தங்கை. எனவே எல்லோரும் ‘கொல்லெ’ ன்று சிரித்துவிட்டு அமைதியாக இருந்தார்கள். அந்த அமைதி எனக்கே பொல்லாததாகி விடு மென்றதனால், நானே அதைக் குலைத்துக்கொள்ள முயன்று, அங்கு நின்ற குழந்தை யொன்றைக் கூப்பிட்டு எனது மடியில் இருத்திக்கொண்டு கதைக்க ஆரம்பித்தேன். 

“பபா… உங்களுக்கு என்ன பெயர்…?” 

“எனக்கு… சாந்தி…” 

“அச்சா பபா… உங்களுக்குச் சாந்தியா பெயர்” 

“ஓ…”

“இந்தச் சட்டை ஆர் தைத்துத் தந்தது…” 

‘“அது… சொல்ல மாட்டன் “சொக்கா தருவன் சொல்லுங் கோ…” 

“ஆ… அது மம்மி தைத்தவ…”

“இந்தப் பூ ஆர் போட்டது…?”

“அதுகும் மம்மிதான்…” 

“அன்ரி…” – அவளே என்னைக் கதை கேட்க ஆரம்பிக்கின்றாள். 

“ஓ… என்ன சாந்தி…?”

“உங்களுக்குப் பேர் என்ன…?” 

“சொல்ல வேணுமோ…” 

“ஓ…” 

“நான் சொல்லமாட்டன்” 

“அப்ப நான் உங்களோடை கோவம்… அன்ரி… சீ… நீங்கள் கக்கா…” 

“இல்லை இல்லை என்னுடை பேர் பூமணி…” 

“ஆ… அச்சா அன்ரி…” 

”அப்ப அச்சா அன்ரி யெண் டால் என்னை யொருக்கா கொஞ்சுங்கோ…” 

“உம்… ச்ச்… சா…” 

“அன்ரி…” – மீண்டும் என்னவோ கேட்கப் போகின்றாளோ? 

“என்னடா சாந்தி…”

“உங்களுக்கு என்னைப்போலைப்பா ஒண்டு இல்லையா அன்ரி…?” – ஐயோ இதுவா அவள் கேட்கும் கேள்வி. அவளின் இந்தச் சின்னஞ் சிறு கேள்வி, எனது உடம்பிலுள்ள துவாரங்களுக்குள் சென்று ஈட்டியாகத் தைக்கின்றது. எனது முகம் கருகி, சுருங்கி, வாடிச் செத்துக்கொண்டிருக்கின்றது எனது மனத்திற்குள் எத்தனை யெத்தனை கேள்விகள் விடைகள் … அமைதி எனக்கே பொல்லாத தாகிவிடுமென்று நான் அந்தப் பெரியவர்களோடு கதைக்க வில்லை. கதைத்திருந்தால் உங்கள் கணவரெங்கே அவர் எங்கு வேலை செய்கின்றார் என்று கேட்கக் கூடாத அல்ல ஆனால் எனக்கு வேண்டாதவைகளைக் கேட்டுவிடுவார்களே யென்றுதான் அந்தச் சின்னக் குழந்தை சாந்தியோடு கதைக்க ஆரம்பித்தேன். ஆனால் அவளே என்னை இப்படி வதைத்து விட்டாளே. எனக்கு, எனது உடலில் உள்ள இரத்த நாளங்கள் எல்லாம் வெடித்து விட்டனவோ என்ற நிலை. 

இயற்கையின் விதியில் அரும்பும் எல்லாக் காம்புகளும் மொட்டாவது நிசமே. அதே போல, பருவத்தின் வளர்ச்சியில் அந்த மொட்டுகளெல்லாம் மலராவதும் மலராவதும் இயற்கையே. 

காம்பு மொட்டாகுமென்றால், மொட்டு மலராகாமல் இருக்க முடியாதல்லவா? இது இயற்கையின் நியதி. அப்படியென்றால் நான் ஏன் இத்தனை வயது வந்தும். ‘வெறும்’ ‘மொட்டா’கவே இருக்கின்றேன். நான் நியதிக்கு அப்பாற்பட்டவளா… நியதிக்கு அப்பாற்பட்டவளென்றால் இயற்கையின் விரோதியா… ஆமாம் நான் வாழ்நாளெல்லாம். இயற்கைக்கு விரோதியேதான். 

4

“அன்ரி…” 

“..”

“அன்ரி ஏன் அழுகுறீங்க…?”

“…” 

“ஏன் உங்கடை பபா செத்தும் போச்சா… 

“…”

“மெய்யா அன்ரி..” 

“…”

“ஏன் அன்ரி என்னோடை கோவமா…” 

“…”

“ஐயோ இந்த அன்ரி ஒண்டும் பேசமாட்டாவாம் சீச்சி… கக்கா அன்ரி… மம்மீ… இந்த அன்ரி..” 

சாந்தி ஏதோ சொல்லுவதற்குத் தாயிடம் ஓடுகின்றாள். என்னால் அந்த இடத்தில் இருக்கவே முடியவில்லை. நான் அதையும் இருந்து கேட்கவா சொல்கின்றீர்கள். நான் வெறும் ‘மொட் என்று எப்படி அந்தப் பிஞ்சுக் குழந்தைக்குச் சொல்ல முடியும். நீங்கள் ஆறுதலாகச் சொல்லுங்கள் அந்தச் சாந்திக்கு… இல்லை யில்லை… வேண்டாம் காலம் அவளுக்குத் தன்னாலேயே அறிவிக்கும். 

– ஈழச்சுடர், செப்டம்பர் 1964.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *