மொக்கையான சோகக் கதை




ஒரு திருடனின் கையை உடைப்பது என்பது சாதாரண விஷயமா அதுவும் என்னைப் போன்ற நோஞ்சானுக்கு. நான் குடியிருக்கும் ஒண்டிக் குடித்தன வீட்டிற்கு எதிர்புறமுள்ள வீட்டில்தான் திருட்டு நடந்தது. அந்த வீட்டு அம்மிணி சாயந்திரமானால் வாக்கிங் போவார். அரை மணி நேரம்தான். ஆனால் ‘பங்க்சுவல்’ பிரியா என்று சொல்லலாம். ஐந்தரை மணிக்கு கிளம்பி ஆறு மணிக்கு வந்துவிடுவார்.
என்னைப் போன்ற ஒரு சோப்பலாங்கியை எதிர் வீட்டில் வைத்துக் கொண்டு இப்படி நேரம் கடைப்பிடிப்பது எனக்கு பெரிய ‘இன்சல்ட்’.இதையெல்லாம் அவர்களிடம் பேச முடியுமா? சைட் அடிப்பதோடு நிறுத்திக் கொள்வேன். இந்த ‘பங்க்சுவல்’ விஷயத்தை வைத்தே திருடர்கள் தங்களின் ஆட்டத்தை காட்டிவிட்டார்கள். ஐந்தரை மணிக்கு உள்ளே புகுந்து ஆறு மணிக்கு எல்லாம் கதையை முடித்துவிட்டார்கள். அரசு ஊழியரின் வீட்டில் இரண்டு லட்சம் அபேஸ் என்று அடுத்த நாள் ‘ஈநாடு’ பத்திரிக்கையில் செய்தி ‘ஒஸ்துந்தி’.
திரும்பி வந்த அம்மிணி கையும் ஓடாமல் காலும் ஓடாமல், போலீஸ் சைரன் போல அலற ஆரம்பித்துவிட்டது. பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு எல்லாம் ‘செம ஹாட்’ விவகாரம் கிடைத்துவிட்டது. கஷ்டப்பட்டு தங்களின் ஆர்வத்தை மறைத்து சோகமாக இருப்பதாகக் காட்டிக் கொண்டார்கள். ‘சுத்த கூர்கெட்ட திருடன்’கள் என்று நினைத்துக் கொண்டேன். அதே பகுதியில் இருக்கும் ஏதாவது சாப்ட்வேர் ஆசாமியின் வீட்டை உடைத்திருக்கலாம். பத்தோ,பன்னிரெண்டோ வாங்கி குருவி சேர்ப்பது மாதிரி சேர்க்கும் அரசு ஊழியர் வீட்டிலா திருட வேண்டும்?
நானும் சோகத்தைக் காட்டிக் கொண்டு நின்ற போது, ஒரு ஆள் வீட்டிற்குள் ஒளிந்திருப்பதாக சத்தம் போட்டார்கள். ஆனால் உள்ளே போவதற்கு அத்தனை பேருக்கும் தயக்கம். கத்தி வைத்திருப்பான், கடப்பாரை வைத்திருப்பான் என்று சொல்லிக் கொண்டே நின்றார்கள். எனக்கு ஒரு குருட்டு தைரியம் வந்தது. ஒளிந்திருப்பவன் நிச்சயம் பயந்திருப்பான் அப்படியே பிடித்தாலும் என்னை அடித்தால் மற்றவர்கள் பிடித்துக் கொள்வார்கள் என்றும் நினைத்துக் கொண்டு நகர்ந்தேன். என்ன ஆனாலும் சரி, கழுத்தில் வயிற்றில் கத்தி படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று அந்த நேரத்தில் சாமி கும்பிட்டேன்.
கீழ் வீட்டுச் சிட்டு மானஸா இதை எல்லாம் பார்த்தது கூட என் தைரியத்திற்கு காரணமாக இருக்கும் என்று நினைக்கிறேன். நான் அறைக்குள் சென்ற போது பேசாமல் அடங்கிவிட்டான். கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விட்டேன். என்ன நினைத்தேன் என்று தெரியவில்லை, கையைத் திருகி குத்தியதில் அவன் கையும் முறிந்துவிட்டது. மற்ற விவகாரங்களை மக்கள் பார்த்துக் கொண்டார்கள்.
—————————————
கடந்த ஞாயிற்றுக்கிழமையில் ஒரு மிகச் சுவாரசியமான நிகழ்வின் விளைவாக எனது செல்போன் தொலைந்து விட்டது (அல்லது) பறிக்கப்பட்டது.
இரவு 10 மணிக்கு ஹைதராபாத் சிக்கன் பிரியாணி உண்டு முடித்த களைப்போடு ‘மசாப் டேங்க்’ மேம்பாலத்தின் கீழாக நடந்து வந்தேன். பஞ்சாரா ஹில்ஸ்க்கும், மெகதிப்பட்டணத்திற்கும் இடையில் இந்தப் பகுதி இருக்கிறது. கொஞ்சம் இருட்டாக இருந்தது. பாலத்தின் கீழாக ஆட்களின் நடமாட்டமும் இல்லை. இரண்டு கதாநாயகர்கள்(தெலுங்கு சினிமாக்களில் பெரும்பாலும் கதாநாயகன் திருடுபவனாக வருவதுண்டு) இரு சக்கர வாகனத்தில் வந்து என் பின்னந்தலையில் தட்டினார்கள்.
யாரோ தெரிந்தவர்களாக இருக்கும் என்று நினைத்துக் கொண்டு திரும்பினேன். நமக்கு யார் இங்கே தெரிந்தவர்கள் இருக்கிறார்கள் என்று என் கொஞ்சூண்டு மூளை சுதாரிப்பதற்குள் கையில் வைத்திருந்த செல்போனை ‘லவட்டி’விட்டார்கள். அந்த இழவெடுத்த செல்போனிலிருந்து நீல நிற குட்டி விளக்கு எரிந்து கொண்டே இருக்கும். அது அவர்களுக்கு வசதியாக போய்விட்டது. நானாவது பாக்கெட்டில் வைத்து தொலைந்திருக்கலாம். அதையும் செய்யவில்லை. என்ன நடக்கிறது என யோசிப்பதற்குள் வண்டி நகர ஆரம்பித்துவிட்டது. ரஜினி அளவிற்கு இல்லையென்றாலும் குறைந்த பட்சம் அவரது மருமகனாரின் துணிச்சலை வெளிக்காட்டும் விதமாக எட்டி பின்னாலிருந்தவனின் சட்டையைப் பிடித்தேன், கீழே விழுந்து முட்டியைக் கிழித்துக் கொண்டதுதான் மிச்சம்.
ரோந்து போலீஸாரிடம் 4,500 ரூபாய் மதிப்புள்ள செல்போன் போய்விட்டதாகச் சொன்னேன். வண்டி எண்ணைக் குறித்தீர்களா என்றார்கள். என் கொஞ்சூண்டு மூளை பாவம் அதை பற்றி அப்பொழுது நினைக்கவில்லை போலிருக்கிறது. சாப்ட்வேரில் இருக்கிறீர்களா என்றவர்கள் இனிமேல் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று அறிவுரை கொடுத்தார்கள். சரி அய்யா என்று சொல்லிவிட்டு, டெட்டால் ஊற்றிக் கழுவிய புண்ணோடு அந்தக் கதாநாயகர்களுக்கு கொஞ்சம் சாபம் கொடுத்துவிட்டு கடைசியாக ஹிந்திச் சேனலில் வந்த பிரியங்கா சோப்ராவுடன் டூயட் பாடியவாறு தூங்கிப் போனேன்.
———————-
ஒரு திருடனின் கையை உடைத்தவனுக்கு இவர்களைப் எட்டிப் பிடிக்க முடியவில்லை என்கிறீர்களா? அட நீங்க வேற. நான் எல்லாம் கதாநாயகனாகவா முடியும்? இப்படி அவ்வப்போது கதாநாயகன் மாதிரி நினைத்துக் கொள்வது மட்டும்தான். அப்படி திருட்டு நடந்த வீட்டில் நான் கதாநாயகன் ஆவதாக நினைத்துக் கொண்டு நடந்த சமயத்தில்தான் என் செல்போனை ‘ஆட்டய’போட்டுவிட்டார்கள். நான் கதாநாயகன் ஆனால் என்னையவே ‘ஆட்டய’ போட்டுவிடுவார்கள். நெனப்புல இதுவரைக்கும் கதாநாயகனாக இருந்துவிட்டேன். இனிமேல் நெனப்பு கூட ஆகாது போல் இருக்கு. என்ன சொல்றீங்க?
– டிசம்பர் 17, 2007