மெல்லத் தெரிந்து சொல்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 2, 2021
பார்வையிட்டோர்: 3,738 
 
 

எந்த அப்பாவனு கேட்டுட்டானே இந்த பொடிப்பய. விசயம் என்னவா இருக்கும். மனசு போட்டு குடைந்து தள்ளியது. என்னவோ சென்னைய ரொம்ப ஒழுக்கமான உயர்ந்த இடத்தில வச்சிதான் இவ்ளோ நாள் கோட்டை கட்டிக்கிட்டு இருந்தேன். இங்கயும் இப்டித்தானா. அதிக யோசனையால் தலை லேசா வலிக்க ஆரம்பிச்சுடுச்சு. விரலால் நெற்றிப்பொட்டை அழுத்திவிட்டுக் கொண்டே சோபாவில் சாய்ந்தேன்.

என்ன டீச்சரம்மா இன்னிக்கு ஸ்கூலயே தலையில வச்சி கொணந்த மாதிரி இருக்கீங்க. கேட்டுக்கொண்டே பக்கத்தில் அமர்கிறார் கணவர்.

சொல்லவா வேண்டாமா? யோசித்தேன். அதற்குள் கணவர் எழுந்து சென்றுவிட்டார். மனம் தறிகெட்டு ஓடிக் கொண்டிருந்தது. பழைய ஞாபகங்கள் மனத் திரையில் வந்து வந்து மறைந்து கொண்டிருந்தன. ஏனோ மானவ் குப்தா நினைவிற்கு வந்தான். மும்பை பள்ளியில் பயிற்றுவித்துக்கொண்டிருந்தபோது நடந்த அந்த சம்பவம் மறக்கக் கூடியதா.

மானவ் குப்தா ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவன். நான் அவனின் வகுப்பில் கணிதப்பாடம் எடுத்துக்கொண்டிருந்தேன். எல்லா மாணவர்களிடமும் ஜாலியாக நட்பு முறையில் பழகுவதால் அனைவருக்கும் என்னைப் பிடிக்கும். போலி மரியாதை குடுத்து யாரும் நடிக்க மாட்டார்கள். என் வகுப்பில் மனதில் உள்ளதை நேரடியாகப் பேசும் சுதந்திரம் அவர்களுக்கு இருந்தது. ஆனா பாடம் சம்பந்தமான விடயங்கள்ல நான் கண்டிப்பானவள் என்பதும் அவங்களுக்குத் தெரியும். சுட்டிப் பையனான மானவ் குப்தா படிப்பில கெட்டிக்காரன். கேட்ட கேள்விகளுக்கு பளீர் பளீர்னு பதில் சொல்வான். ஏனோ அந்தச் சம்பவம் நடக்கறதுக்கு ஒருவாரம் முன்னாலேந்தே அவன் பாடவேளைகளில் கவனம் செலுத்தறதக் குறைச்சிருந்தான். போதாததற்கு வீட்டுப்பாடம் வேற எழுதிட்டு வரல.

குழந்தைகளின் திடீர் கவனச் சிதறலுக்கு பெற்றோரும் ஒருவகையில் பொறுப்பு அப்டினு நினைக்கறவ நான். அதனால அவனோட வீட்டுச் சூழலைத் தெரிஞ்சிக்கறதுக்காக கேள்விகள் கேட்க ஆரம்பிச்சேன். என்னோட ஒவ்வொரு கேள்விக்கும் ஒண்ணுரெண்டு வார்த்தைகளிலயே பதில் சொல்லிக்கிட்டு இருந்தான்.

வீட்ல அம்மா, அப்பா ரெண்டு பேரும் வேலைக்குப் போறவங்களா?

ஆமாம்.

பள்ளியிலேருந்து வீட்டுக்குப் போனப்புறம் அம்மா அப்பா வர வரைக்கும் நீ தனியாதான் இருப்பயா?

ஆமாம்

நீயே சாப்பாட எடுத்துப்போட்டு சாப்பிட்டுக்குவியா? இல்ல வேலையாட்கள் இருக்காங்களா? இப்டி என் கேள்விகள் தொடர மத்த பசங்க எல்லாரும் அவனையே பாத்துக்கிட்டு இருந்தாங்க. அது அவனுக்குப் பிடிக்கல போல நெளிய ஆரம்பிச்சான். கடைசியா நான் அவன்கிட்ட வர திங்கட் கிழமை காலையில உங்கப்பாவ நம்ம ஸ்கூல் ரிசப்ஷன் போன் நம்பருக்குக் கூப்பிடச் சொல்லுப்பா அப்பதான் உன் பிரச்சினையெல்லாம் எடுத்துச் சொல்ல முடியும்னு ஊக்குவிச்சு, எல்லாம் சீக்கிரத்தில் சரியாகிவிடும்னேன்.

என்பேச்சு அவன்கிட்ட எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தல. அதுக்கு மாறாக எந்த அப்பாகிட்ட சொல்லணும் எனக்கு ரெண்டு அப்பா இருக்காங்க அவன் கேட்டுவிட்டு சாதாரணமா உட்கார்ந்தான்.

என் தலைவலி தொடங்கிருச்சு. அவனோட வகுப்பாசிரியரைப் பார்த்து நடந்ததைச் சொன்னேன். அதுக்கப்புறம் அவங்க தெளிவுபடுத்தினாங்க.

மணமுறிவு செஞ்ச அவன் அப்பாவும் அம்மாவும் வெவ்வேற திருமணம் செஞ்சுகிட்டாங்களாம். ஆனா இவனோட பொறுப்ப முழுசா ஏத்துக்க ரெண்டுபேருக்கும் மனசில்ல. ஆறு மாசம் ஒருவீட்லயும், ஆறு மாசம் இன்னொரு வீட்லயும் இருக்கணும்னு கோர்ட்ல ஆர்டர் வாங்கி வச்சிருக்காங்க. இது நடந்து ரெண்டு வருசம் ஆகிப்போச்சு. தொடக்கத்துல இவனுக்கு ஒண்ணும் சரியாப் புரியல. இப்பதான் புரிய ஆரம்பிச்சிருக்குபோல. அதான் எப்பவுமே சோகமா இருக்கான். நான் ஸ்கூல் கவுன்சிலர்கிட்ட ரிப்போர்ட் குடுத்துட்டேன். இனிமே அவங்க பாத்துப்பாங்க. சொல்லிவிட்டு வகுப்பாசிரியை போய்விட்டாள்.

அதுக்கப்புறம் ஒருசில மாசத்துல நான் சென்னைக்கு இடம் பெயர்ந்ததால இந்தப் பள்ளியில சேர்ந்தேன்.

இப்போ இங்கயும் அதே பிரச்சினை. இங்க ஐந்தாம் வகுப்பு ஆதர்ஷும் எந்த அப்பாவக் கூப்பிடணும். எனக்கு ரெண்டுஅப்பாங்கறான். இந்த ஸ்கூல்ல கவுன்சிலர் எல்லாம் இருக்காங்களோ என்னவோ. இத எப்டித்தான் சமாளிக்கப்போறேனோ மனதுள் புலம்பிக்கொண்டே எதுஎப்படியோ நாளைக்கு சமாளிச்சுக்கலாம் மனதை சமாதானப்படுத்தி வேலையை கவனிக்கத் தொடங்கினேன். .

அடுத்தநாள் பள்ளிக்குள் நுழையும் முன்பே ஆதர்ஷ் இரண்டு நபர்களுடன் வாசலிலயே நிக்கறான்.

அட ஆண்டவரே! இவன் கூட்டிக்கிட்டே வந்துட்டானே. ரெண்டு அப்பாவும் ரொம்ப ஒற்றுமையா வேற நிக்கறாங்க. எப்படி பேச்ச ஆரம்பிக்கறது யோசிக்கும் முன்பே

ஆதர்ஷ் ஆரம்பிக்கிறான். வணக்கம் மிஸ். இவங்க என் மூத்த அப்பா. இவர் ரெண்டாவது அப்பா. அதில் மூத்த அப்பா என அறிமுகப்படுத்தப்பட்ட நபர் மேடம் நீங்க ஏதோ பேசணும்னு சொன்னீங்களாம். ஆதர்ஷ் சொன்னான். ஏதும் தப்பு கிப்பு பண்ணிட்டானா. சொல்லுங்க புத்தி சொல்றோம். எனக்கும் என் தம்பிக்கும் கணக்கு அவ்ளோ வராது. கணக்கு டீச்சர் கூப்பிட்டாங்கனு சொல்லவும் எங்க வீட்டுப் பையனும் எங்களமாதிரி ஆயிடக்கூடாதுனு ஓடிவந்தோம். ஏதும் டியூஷனுக்கு அனுப்பணும்னாலும் சொல்லுங்க. அனுப்பிடலாம். அவன் நல்லாப் படிக்கணும் அதுதான் எங்களுக்கு வேணும்.

நாங்க கூட்டுக்குடும்பமாதான் இருக்கோம். எனக்குப் பிள்ளையில்லாததால இவன நானும் என் மனைவியும் எங்க பிள்ளையாதான் நெனச்சிருக்கோம். அவரின் கண் கலங்குகிறது.

பெரியப்பா டோன்ட் வொரி. நேத்துகூட என் டீச்சர்கிட்ட உங்கள என் அப்பானுதான் சொன்னேன். வேணும்னா நீங்களே கேட்டுப்பாருங்க.

அவனின் வார்த்தை என்காதுகளில் சாட்டையடிபோல் விழுந்தது. கவலைப்படற அளவு ஒண்ணுமில்ல. நான் பாத்துக்கறேன். நீங்க போங்க. அவசரமா அவங்கள வழியனுப்பிட்டு வேலைகளை கவனிக்க ஆரம்பிச்சேன். ஏதோ ஒரு வகுப்பிலேருந்து தமிழ் ஆசிரியரின் குரல் கேக்குது., ‘மெல்லத் தெரிந்து சொல்’,னு. ஆமாம். பாரதியார் இந்தப் புதிய ஆத்திசூடிய எனக்காகவே எழுதியிருக்கார் போல. இனிமே பசங்களப் பத்தி முழுசாத் தெரிஞ்சுக்கிட்டுதான் பேசணும். தீர்மானித்தேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *