மூர்த்திகளின் சிறைவாசம்
கதையாசிரியர்: சி.எம்.ராமச்சந்திர செட்டியார்
கதைத்தொகுப்பு:
ஆன்மிகக் கதை
கதைப்பதிவு: November 11, 2025
பார்வையிட்டோர்: 140
(1945ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஊரைச் சின்னதென்பர்; ஆனால் சின்னதல்ல. பெருமாளோ ஊ பெரிய பெருமாள்; அவர் ஆலயமும் பெரியதே. திருவிழாவோ மிகப்பெரியது. சொல்ல வேண்டுமா? வைஷ்ணவ கோஷ்டிகளுக்கு அளவில்லை. பாகவதர்களோ எப்போதும் நிறைந்தே உள்ளார்கள். சன்னிதித் தெருக்களில் திருமாளிகைகளுக்கு அளவில்லை. ததியோதனம், புளியோதனம், திருக்கண்ணமுது, அக்கார அடிசில்கள் முதலியவைகளைத் தலத்தார்கள், மிராசுதார் முதலியோருக்கும் அவர்களுடைய பந்து வர்க்கத்தார்களுக்கும் விநியோகம் செய்த பிறகும்கூட, தலத்திற்கு யாத்திரையாக வரும் சகல மக்களுக்கும் விற்கப்படும் என்றால் இத்தலத்தின் சிறப்பைப் பற்றிக் கூறவும் வேண்டுமா? ஆலய நிர்வாகமோ அதே முறைகளை நூற்றாண்டுகள் கணக்காக நடைபெறுகின்றது. பரம்பரைப் பாத்தியம் என்றால் குடும்ப வகையில் மாத்திரம் அல்ல; அவ்வாலயத்தில் உள்ள யானை, பசு, பூனை, எலி முதற் கொண்டு எல்லாச் சீவராசிகளுக்கும் உண்டு; ததியோதனம், புளியோதனம், இட்டலி முதலிய வகைகளுக்கும் உண்டு என்றறிக. எந்த நிலையில் எந்த முறையில் எந்த அளவில் வந்தார்களோ அதே நிலையில், முறையில், அளவில், களவில் செய்யப்பட வேண்டிய உரிமை அவைகளுக்கும் உண்டு. ஆகவே அவ்வசேதனப் பொருள்களுக்கும் பரம்பரை பாத்தியம் உண்டு என்றேன்; நீங்கள் அதனைப் பத்ததி அல்லது வழக்கம் எனலாம். இப்பரம்பரைகள், உரிமைகள், பத்ததிகள், சுதந்திரங்கள் எல்லாம் ஆங்கில ஆட்சி வந்தது முதற்கொண்டு மேன்மைதாங்கிய நீதிமன்றங்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டு வந்திருக்கின்றன. அவ்வாலயத்திற்குச் சம்பந்தப்பட்ட ஒவ்வொரு கைங்கரியதாரருக்கும் கைங்கரியத்திற்கும் நீதிமன்றத் தீர்ப்பு ஒன் இருக்கிறதென்றால் இதனை யார் தான் மறுத்து எதிர்த்துப் பேச முடியும்? யாராவது ஒருவர் இதனை அறியாது வாதுக்கு வந்தாலும், அசட்டை செய்தாலும் இவ்வாலயத்தில் பூனையும் எலிக்குஞ்சும் நம் சக்கரவர்த்திக்கு எழுதி அவரால் ஆணையிடப்பட்ட ஒரு தீர்ப்பு நகலை அவர்கள் மிரண்டோடு மாறு கண்ணுக்கெதிரில் காட்டிவிடுமாம்! இத்தனைப் பாதுகாப்புகளினால் காக்கப்பட்ட ஓர் ஆலயத்தில் இனிமேலும் விவகாரங்கள் வரமுடியுமா என்று நீங்கள் வியந்து கேட்கலாம். ஆனால் மனிதனுக்கு அறிவு இருக்கும்வரையில் ஆசாபாசங்கள் அதனோடு ஒத்துழைக்கும் காலம்வரையில், விவகாரங்கள் ஏற்படாமல் இருக்குமா? ஆங்கில ஆட்சி ஏற்பட்டு ஒன்றரை நூற்றாண்டு ஆகியும், நீதித்தலங்கள் ஒவ்வொரு கேள்விக்கும் ஒவ்வொரு தீர்ப்பளித்தும், அத்தீர்ப்புகளின் அளவுகளை அறியவேண்டி மறுபடியும் நீதிபதிகளை அண்டவேண்டியது முறையல்லவா? அல்லது நீதிபதிகள் நியமிக்கப்படவேண்டும்? என்ற கேள்வி கிளம்பும். ஆகவே ஆலய அன்பர்கள் எப்போதும் நீதிபதிகளுக்கு வேலை கொடுத்து வந்தார்கள். எப்பேர்ப்பட்ட மேலதிகாரிகள் வந்தாலும் அவர்களுக்கும் வேலை கொடுப்பதில் தவறார் ஆலயத்திற்குச் சம்பந்தப்படாத ஆப்காரி உத்தியோகஸ்தர், கல்வி இலாகா அதிகாரி, நெசவு இலாகாதாரர், வேறு எவர் வந்தபோதிலும் அவர்களுக்கும் ஒரு மனுக் கொடுத்து விசாரிக்கச் சொல்லி ஒரு சிறு வேலையாவது கொடுப்பார்கள். சமீபகாலத்தில் அறநிலையச் சங்கத்தார். சுகாதாரச் சங்கத்தார் முதலியோர் இவ்வாலயத்தாரிடம் அகப்பட்டுக் கொண்டு திண்டாடிவரும் தொல்லை எழுதமுடியாது. இதையெல்லாம் நன்கறிந்த பெரிய நீதி மன்றம் இப்பெருமாளைக் கவனிக்கும் பணியில் ஸ்ரீ வைணவர்கள் இருப்பது அழகல்ல என்று எண்ணி ஒரு சுமார்த்தரையோ அல்லது மாத்துவரையோ நியமிக்கவேண்டுமென்று தீர்மானித்தனர். அன்னிய சமயத்தார் வந்தால் என்ன, விவகாரங் குறைந்து போகுமோ, அது வீண் பிரமை என்று எடுத்துக் காட்டுவர் வடக்கு மாளிகைக் கோவிந்தாச்சாரியார்.
ஆனால், பெரும் பிசகு ஏற்பட்டுவிட்டது. ததியோதனத்திற்கும் புளியோதனத்திற்கும் உரிமைப்பாத்தியம் வழங்கின நீதிபதிகள். பெரிய பெருமாளுக்கும் அவருடைய தொண்டர்களாகிய ஆழ்வாராதியர்களுக்கும் யாதொரு தீர்ப்பும் பாதுகாப்பும் தரவே இல்லை. என்ன இருந்தாலும் சட்டத்தில் இம்மூர்த்திகள் மைனர்களாகவே இருக்கிறபடியால் அவர்களைப் பாதுகாக்கக் கார்டியன்கள் இருக்க வேண்டும். அக்கார்டியன்களுக்கு உரிமை கொடுத்தால் போதுமானது என்பர். கார்டியன்களுடைய அருமை பெருமைகளைப் பற்றி நாம் எடுத்துரைக்க வேண்டியதில்லை. மைனருடைய சொத்து என்னவானாலுமென்ன? தம் நிலைமையை உயர்த்திக்கொள்ள வேண்டியதுதான் தமதுரிமை என்ற கொள்கை உறுதிப்படுத்திக் கொண்டு அம்மைனர் வயது வருவதற்குள் ஒரு புது வீடு, ஒரு நன்செய் நிலம், ஒரு தென்னந்தோப்பு இவைகளை வாங்கி வைப்பது வழக்கம். மைனர் வயது வந்தவுடன் தடையில்லாமல் உள்ள ஒரு சொத்தாவது கிடைத்ததே என நன்றி செலுத்த வேண்டும். இல்லாவிடில் மைனர் கதி அதோகதிதான். வாயுள்ள ஆறறிவு மக்களே இந்த நிலைமையை அனுபவித்தால் வாயில்லாத அர்ச்சா விக்கிரகங்கள் என்ன செய்ய முடியும்? அம்மூர்த்திகளை எப்போது நீதிமன்றங்கள் மைனர்கள் என்று தீர்மானித்தனவோ அப்போதே அவர்கள் ஒடுக்கப்பட்ட அடிமைகள் ஆகிவிட்டார்கள். தலத்தார், அர்ச்சகர், சுதந்திரத்தார் எவ்விதமாக ஆட்டுவார்களோ அவ்விதமாக ஆடவேண்டி வந்தது. மானிட மைனர்களுடைய இருப்பிடங்கள் இடிந்துவிட்டாலும் கார்டியன்களுடைய கூறை வீடுகள் சில நாட்களில் மாடமாளிகையாக மாறிவிடுவதை நாமறிவோம். அக்கதியே நமது மூர்த்திகளுக்கும் வரும் அல்லவா? உலக இயற்கை ஒன்றுதானே!
இந்தத் திவ்வியதேசத்துப் பெருமாளைச் சதா சேவை செய்து கொண்டிருக்க ஆழ்வார்களும் ஆச்சாரியர்களும் ஆலயத்தைச் சுற்றி எழுந்தருளியிருப்பார்கள். பல நூற்றாண்டுகளுக்கு முந்தி நாட்டில் எங்கும் பரம பாகவதர்கள் திகழ்ந்திருந்த நன்னாட்களில் சில மகோபகாரிகள் இவ்வாழ்வார்களுக்குத் திருத்தளிகளை அமைத்தார்கள். ஆதியில் இட்டிகை ஆலயங்களாக இருந்தவை நாளாவட்டத்தில் கற்றளிகளாயின. ஆழ்வாராதியரும் அவைகளில் சுகமாக எழுந்தருளி நாடோறும் பூசை, ஆராதனை திருவமுது முதலியவைகளைப் பெற்றுக்கொண்டு சாத்துமுறை நாட்களில் புறப்பாடு, அருளிப்பாடு, திவ்விய சேவை முதலியவைகளை ஏற்றுக்கொண்டு சுகமாக வாசஞ்செய்து வந்தார்கள். ஆனால் கல் கட்டடமானாலும் பழுது பார்க்காமல் விட்டால் சீர்ணமாகி விடாதா? அவ்வப்போது சீர்ணோத்தாரணம் செய்ய வேண்டியது கார்டியன்களான அறக் காப்பாளர்களைச் சேர்ந்தது. ஆனால் அவர்களோ மற்றக் கார்டியன்களைப் போன்று தம் தேக போஷணை, திருமாளிகை அமைப்பு இவைகளைக் கவனித்தார்களேயன்றி ஆழ்வார்களின் திருமாளிகைகளைக் கவனிக்கவில்லை. நாளா வட்டத்தில் சிறகினங்களான பாகவதர்கள் பெருமாளைச் சேவித்துப் பழவர்க்காதிகளைத் திருவமுது செய்ய விரும்பிய போது அவர்களுக்கு ஏற்ற உணவு விடுதி ஆழ்வாராதிகளின் திருத்தளிகளின் மேல் தளங்களே ஆகும் என்று பரம கருணையுடன் ஈந்துதவினார்கள். சிறகினங்கள் வைத்துச் சென்ற உச்சிட்டமான சேஷங்களைச் சுத்திசெய்ய வருணனும் வாயுபகவானுமே வரச் சம்மதித்தார்கள். ஆனால் சில தடவைகளில் ‘நெல்லுக்கிட்ட நீர் புல்லுக்குமாம்’ என்ற நியாயப்படி வருண வாயுக்கள் அகற்றின சேஷங்கள் கற்களின் இடையில் சிக்கி வேரூன்றின. நாளா வட்டத்தில் வேர்கள் பலப்பட்டுச் செடிகளாயின; மரங்களும் மாகி, ‘நெட்டிருப்புப் பாறைக்கு நெக்கு விடாப்பாறை பசு மரத்தின் வேருக்கு நெக்கு விடும்’ என்றாற்போல் கற்களைப் பிளந்து திருத்தளிகளைக் கற்குவியல்களாக்கத் தொடங்கி விட்டன. பலமான சில தளிகள் பார்வைக்குப் பிருந்தாவனங்களாகவும் துளசி மாடங்களாகவும் ஆகிவிட்டன. இத்தகைய ஆலயங்களுக்குள் ஆதிசேடர்களும் வாசம் செய்யத் தொடங்கினர். அர்ச்சகர்கள் பரம பக்தியுடன் ஆலயங்களுக்கருகில் செல்லாது வெளியே இருந்து ஆராதித்தனர்.
ஒரு முறை ஒரு சிறு ஆலயத்தின் மேல்தளியும் விழுந்து திருமூர்த்தியின் உருவமே சிறிது சிதைவடைந்தது. அப்போதுதான் அறநிலையக் காப்பாளருக்கும் கண் தெரிந்தது. ஊரில் பாகவதர்களில் பெரும் பூசலும் நிகழ்ந்தது. பரமபாகவதர்கள் பிரயோகிக்கக் கூடிய துர்வாசத் திரவியங்களின் அபிஷேகங்களுக்கும் திருச் சிலாப்பூசைக்கும் அஞ்சி, சீரணம் அடைந்த ஆலயங்களில் இருந்த மூர்த்திகளை யெல்லாம் ஒரே நாளில் புறப்பாடு செய்வித்து, சீர்ணம் அடையாது தப்பி யிருந்த ஓர் ஆலயத்திற்குள் எழுந்தருளச் ‘செய்தனர். அன்று முதல் தனித்தனியாக இருந்த ஆழ்வார்கள் ‘ஒன்று பட்டால் உண்டு வாழ்வு’ என்ற சொல்லின்படி ஒரே அறையில் ஒற்றுமையுடன் வசிக்கத் தொடங்கினர். அறக் காப்பாளர்களுக்கோ முந்தியிருந்த தொல்லையில் பெரும் பாகம் குறைந்தது. பதினைந்து ஆலயப் பணிவிடைகளும் சாமக்கிரியைகளும் ஒரே இடத்தில் ஒரே அளவில் ஏற்பட்டன என்றால், சிக்கனத்தின் சிறப்பிற்கு இதை விட வேறு உதாரணம் வேண்டியதில்லை அல்லவா? இனி, கணக்குப் பரிசோதகரும் அதிகச் செலவு என்று முறையிடமாட்டார் அல்லவா? இந்த வகையில் பெரிய அபாயத்தை இந்தப் பரம காருண்ய அற நிலையர்ளர்கள் விலக்கிவிட்டார்கள். இதனை உலகம் மெச்சிக்கொள்ளாது? இவ்வாறு பதினைந்து மூர்த்திகளை ஒரே மண்டபத்தில் சிறையிட்டதிலே தர்மகர்த்தர்களுக்கு வெகு திருப்தி. செயற்கரிய செயலைத் தாம் செய்ததாகப் பெருமையுடன் பேசிக்கொண்டார்கள். ஒரு கல்லாலே இரண்டு பறவைகளைக் கொன்ற தீரத்திற்குத் தம் சாகசத்தை ஒப்பிட்டுப் பேசினார்கள். மூர்த்திகளுக்குத் தகுந்த அடைக்கல இடம் தேடிக் கொடுத்ததனாலே ஊர் வாயை மூடிவிட்டது ஒன்று; ஆலயச் செலவுகளைக் குறைத்துத் தம் வருவாயைப் பெருக்கிக் கொண்டது இரண்டு என்பதாம். பதினைந்து மூர்த்திகளுக்கும் ஒரே துணி உடுத்தி ஒரே தட்டத்தில் பிரசாதம் காட்டி ஒரே கற்பூரத்தால் தீபங் காட்டுவது மாத்திரம் அல்ல; மற்றொரு அதிசயமான வேறுபாட்டினை நிகழ்த்தி வைத்தார்கள்.
தனி ஆலயமாக இருந்தால் ஒவ்வொரு ஆழ்வாருக்கும் சாத்துமுறை நாளிலே புறப்பாடு கோஷ்டி நிவேதனம் முதலியன நடத்தவேண்டி வரும். ஆழ்வார்கள் அனைவரும் ஒரே இடத்தில் இருந்தால் “எவ்வாறு யாருக்குச் சாத்து முறை நடத்துவது? ஆகவே இம்முறை ஆகமங்களுக்கு விரோதமானது” என்று சொல்லிச் சாத்துமுறைகளை நிறுத்திவிட்டார்கள். இதனால் பெருஞ் செலவு நின்று விட்டது. ஆனால் பெருஞ் செலவு நின்றதனால் ஆலயத்தில் மிச்சம் ஏற்பட்டதோ என்றால் அதுதான் இல்லை. தருமகர்த்தர்கள் வெகுநாளைய அநுபவம் பெற்றவர்கள். ஆகவே வெகு நுட்பமாகக் கணக்கு எழுதிப் பரிசோதகராலும் காணமுடியாதவாறு வரவு செலவுகளை நேர் செய்து வைத்துவிடுவார்கள். இம்முறையில் இரு வகையிலும் வெற்றி பெற்றார்கள். ஆனால் இவ்வெற்றி வெறும் லௌகிகமான பணவகை வெற்றிமாத்திரம் அல்ல. இதில் வைதீக வெற்றியும் ஒன்று உண்டு. தருமகர்த்தர்கள் பண்டைக்காலத்தில் கோடி கன்னிகாதானம் செய்து பெரும் புண்ணிய கீர்த்திபெற்ற மூல புருஷனுடைய சந்ததியார். இக்கோடி கன்னிகாதானம் என்றால் அதுஒரு நந்தா விளக்குப்போல் என்றும் அழியாமல் பரம்பரையாக ஆங்கில நாட்டுப் பிரபுப் பட்டம்போல் பின் சந்ததியாருக்கு வருவதொன்றாம். கோடி கன்னிகாதானம் என்பது ஒரு புண்ணியச் செயலானால் அக்கோடிக் கன்னியர்களில் ஒருவரும் பொற்றாலி பெருக்கிக் கொண்டவர் இருக்க வில்லையா என்ற கேள்வி இப்போது எழுப்புவதில் யாதொரு பயனும் இல்லை. பல தலைமுறைகளுக்குப் பின்வந்த தற்காலத் தருமகர்த்தரும் அந்தவாய் நிறைந்த பட்டத்தை வகிப்பர். அவருடைய பெயருக்கு முன் அப்பட்டத்தைத் திறந்து பார்க்காமலே கிழித்துவிடுவார். போதாக் குறைக்கு அவர் ஒரு பெரும் வடகலைச் சம்பிரதாயர். கீர்வாணத்திலேயே பிறந்தபோது அழுததாகச் சொல்லிக்கொள்ளுவார். ஆனால் யாதாவதொரு சுலோகத்தைக் கொடுத்து நாம் ஒரு சந்தேகம் கேட்டால் ஒரு சிறிது முழங்கால் வலி என்றாவது அல்லது ஒரு அவசரச் செய்தி வந்ததென்றாவது சொல்லி அப்போது மறைந்து விடுவார். ஆனால்தென்கலையாளரைக் கண்டால் உடனே அவர்களைப் பஸ்மீகரிப்பதற்கு நெற்றிக்கண் இல்லையே என்று வருந்துவார். சில தடவைகளில் திருத்தடிப் பிரயோகமும் திருவாய் மலர்ச்சியும் கைக் கொண்டதினால் நீதிமன்றம் ஏறி வெண்பொன்னைத் தானம் றி வெண்பொன்னைத் தானம் செய்திருக்கிறார். அப்படிப்பட்ட புண்ய சீலருக்கு ஆழ்வார்களை ஒரு அறையில் சிறைப்படுத்தியது பெருமகிழ்ச்சி.
தென்கலையார் ஆழ்வராதியர்களைத் தம் கைைலயினர் என்று வாதாடுவதுண்டு. வடகலையினர் தம் மூர்த்திகள் என்று சொன்னால் அவர்கள் விடுவதில்லை. ஆழ்வாராதியர்கள் தமிழிலேயே திருவாய் மலர்ந்திருக்கிறபடியால், வடகலை யாருடைய கட்சி அத்தனைச் சிறப்புப் பெறுவதில்லை. ஆகவே வடகலைத் தருமகர்த்தர் இவ்வாழ்வாராதியாரை எவ்வாறு அப்புறப்படுத்துவதென்று எண்ணி இருந்தார். ஒரு மண்டபம் இடிந்ததும் அந்தச் சாக்க்ை கொண்டு எல்லா ஆழ்வார் ஆதியரையும் ஒரு அறையில் சிறைப்படுத்தி விட்டார். செலவும் குறைந்தது. சாத்துமுறைத் திருவிழாவும் நிறுத்தப்பட்டது. சாத்து முறையைத் திருப்பி நடத்தவேண்டுமென்று தென்கலையார் செய்த முயற்சியும் வீணாய்விட்டது. ஆலயங்களைப் புதுப்பித்த பிறகு சாத்து முறை நடத்தவேண்டும் என்று தீர்ப்பும் ஆயிற்று. வடகலையார் வெற்றி பெற்றனர். ஆலயங்களை எப்போது புதுப்பிப்பது? தரும சிந்தனையுள்ள தனவந்தர்களின் வரவைத் தென்கலையார் எதிர் பார்த்திருக்கின்றனர். வடகலையார் இலேசானவரா? தனவந்தர் வரும்போது ஒரு தடை போடுவார். காரியம் நிறைவேறுவதில்லை. ஆழ்வார்கள் எப்போது விடுதலை பெறுவார்களோ என்று இன்றும் அருந்தவம் செய்து கொண்டிருக்கிறார்கள் ! தென் கலையார் களுடைய கொட்டத்தை ஒரே அடியில் அடக்கவேண்டும் என்று வடகலைத் தருமகர்த்தர் வெகுநாளாகச் சிந்தனை செய்து வந்தார். ஆழ்வார்களைச் சிறைப் படுத்தியது போதாது. அவர்களை வடகலையினர்களாக ஆக்கவேண்டுமென்று பிரதிக்கினை செய்து கொண்டார். அவ்விதம் செய்து விட்டால் தென்கலையே மாய்ந்துவிடும் என்பது அவர்கள் கோரிக்கை.
அதற்குச் செய்யவேண்டிய முயற்சியும் எடுத்துக் கொண்டார். அவ்வூரில் கோபால பட்டர் என்ற ஒரு தென்கலை அந்தணர் உண்டு. பெருமாள் கைங்காயத்தில் மிகுந்த ஈடுபாடு அவருக்கு உண்டு. வடகலை தென்கலைப் போர்களில் எப்போதும் முன்னணியில் நிற்பார். எந்தக் கச்சேரி வழக்கிலும் கட்சிக்காரர் அல்லது சாட்சியாக இருப்பார். தென்கலைக்கு ஒரு தூண்போல் விளங்குவார். யாருடைய அகத்திலும் சாப்பிடமாட்டார். சென்னைக்கு விவகாரத்திற்குச் சென்றால், தம்மூர் சேருமட்டும் நீரும் உணவும் உட்கொள்ளாமலே இருப்பார். ஆனால் திருமேனி அமாவாசை இரவுபோல விளங்கிக்கொண்டிருக்கும். அந்தத்திருமேனியில், வெண்மைத் திருமண் இட்டு வெளிக்கிளம்பினால் இரண்டு காத தூரத்திலும் அது தெரியுமென்பர். ஒரு தடவை ஒரு நீதி மன்றத்தில் அப்பெரியார் சாட்சியாக வந்தார்; பெட்டி ஏறினார். நீதிபதியோ ஒரு முதலியார் பட்டாச்சாரியாருடைய திருமேனியின் வண்ணத்தைக் கண்டதும் அவர் ஒரு சாத்தாதவர் என்று எண்ணினார். வகுப்பைப் பற்றிக் கூறுகையில் ஸ்ரீ வைஷ்ணவர் என்று கேட்டவுடன் ”சுவாமி, இராமானுஜர் பரம காருண்யத்தினால் வைணவராக்கப்பட்ட வைணவர்களில் ஒருவரோ நீர்?’ என்று வேடிக்கையாகவும் சமத்காரமாகவும் பேசுவதாக எண்ணிக்கொண்டு கேட்டுவிட்டார்.ரு உடனே கிளம்பினார் பட்டாச்சாரியார், கோர்ட்டார் ஓரம் செய்பவர் என்று மாற்றல் மனுக் கொடுத்தார். தம்மை நிந்தனை செய்ததாக அவதூறு மனுக்கொடுத்தார். இவையெல்லாம் பெரிய நீதிமன்றம்வரை சென்றது. முதலியார் கதி திண்டாட்டத்திற்கு வந்தது. வேடிக்கை வினையாகிவிட்டது என்று எண்ணவேண்டி வந்தது. இறுதியில் பெரிய நீதி மன்றத்தார், இவ்வார்த்தைகள் கெட்ட எண்ணத்துடன் சொல்லப்படவில்லை யென்று மனுக்களைத் தள்ளிவிட்டு, முதலியாரை இனிமேல் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்று எச்சரித்து விட்டுவிட்டனர்.
இப்பேர்ப்பட்ட விடாக்கண்டரான பட்டர் ஒருநாள் இரவு ஆழ்வார்கள் சிறையிடப்பட்ட ஆலயத்தருகில் சென்று கொண்டிருந்தனர். ஆலயத்துக்குள் ஒரு சிறு விளக்கு வெளிச்சம் இருந்தது. எலி உராய்தல்போல ஒரு சிறு ஒலியும் கேட்டது ஐயப்பட்டுத் திறவுகோல் துவாரத்தில் நோக்கினார். யாரோ ஒருவர் என்னவோ செய்துகொண்டிருப்பதாகத் தெரிந்தது. கதவு தாழ்ப்பாள் இடப்பட்டிருந்தது. தட்டினார்; ஒலி நின்றது ; விளக்கும் மாய்ந்தது. பிறகு என்ன முயன்றும் ஒன்றும் தோன்றவில்லை. மறுநாள் பட்டர் ஆலயந்திறந்தவுடன் உள்ளே சென்று பார்த்தார். ஆனால் பட்டருக்குப் பெருஞ் சந்தேகம்தான்.
ஒருதடவை கணக்குப் பரிசோதகர் ஆலயக் கணக்குகளையும் சொத்துக்களையும் பரிசோதித்தார். பலபேர்கூட இருந்தனர். பட்டரும் இருந்தார். ஆழ்வார்கள் விடுதியில் கணக்கு எடுத்தார்கள். பட்டர் உள்ளே சென்று வெகு தீவிரமாக மூர்த்திகளைச் சோதித்தார் மூர்த்திகளுடைய திருமுகங்களில் தென்கலை நாமங்களுக்கு மாறாக வடகலை நாமங்கள் இருந்தன. விரலால் தடவிப் பார்த்தார். நாமத்தின் பாதம் இராவப்பட்டிருந்தது. உடனே எழும்பினது சீற்றம். வடகலையாரை மனதிற்குத் தோன்றினபடி வைதார். அடுத்த நாளே நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. தருமகர்த்தரோ ஒரே விடையில் எதிர் வழக்காடினார். ஆழ்வார்களின் உருவங்களில் எப்போதுமே வடகலைத் திருநாமம்தான் இருந்தது. அது வார்ப்பிலேயே அவ்விதம் என்றனர். தென்கலை என்பதற்கு ஒரு விதச் சாசனமும் கிடைக்கவில்லை. ஒருவேளை இருந்தாலும் வழக்கு வந்தால் அவை வெளிவருமோ? நீதிபதி உண்மை அறியவேண்டி ஒரு அமீனாவை அனுப்பி மூர்த்திகளைப் பார்வையிட்டு அறிக்கை அனுப்ப உத்திர விட்டார். நாஜரோ ஒரு கிறிஸ்தவர். அவர் ஒரு முகம்மதிய அமீனாவை அனுப்பினார். அமீனா ஆலயம் சென்றவுடன் அவனை ஆலயத்துக்குள் எவரும் விடவில்லை. திரும்பி நாஜரிடம் முறையிட்டார். ஆலயத்துள் விட்டால் என்ன கெடுதி என்று கடிந்து பேசிவிட்டு அவனையே மறுபடியும் அனுப்பினார். முகம்மதியனோ உள்ளே செல்ல முடியவில்லை. ஆனால் திரும்பிப் போவதற்கும் இஷ்டம் இல்லை. இருதரப்பாரையும் சில கேள்விகளைக் கேட்டுவிட்டுத் தன் இந்து நண்பர்களை உள்ளே அனுப்பி விசாரித்துவிட்டு அறிக்கை எழுதி அனுப்பிவிட்டான். அறிக்கையோ தன் கைக்கு வந்த வருமானத்தைப் பொறுத்திருந்தது.
முகம்மதியனுக்கு நடந்த உபசரணை பெருமாளுக்கும் நடந்திராது. விக்கிரகங்களுக்கு யாதொரு மாறுதலும் நடைபெறவில்லை என்று உறுதிமொழியுடன் அறிக்கை இருந்தது. இதை அனுசரித்து வழக்குகளும் தள்ளுபடியாயின. மேல் மன்றங்களுக்கு அப்பீல்களும் நடந்தன. அமீனாவின்மீது குற்றங்கள் சாட்டப்பட்டன. ஆனால் ஒரு விதமான பயனும் ஏற்படவில்லை. ஐந்து வருடங்கள் வழக்குகள் நடந்தன. வேறு தருமகர்த்தாவும் வந்தார். சிறையிடப்பட்ட ஆழ்வாராதியர் செதுக்கப்பட்ட திரு நாமங்களுடன், பொறுமையுடன், ‘என்று விடுதலை கிடைக்குமோ? ‘ என்று கடுந்தவம் புரிந்துகொண்டிருக்கின்றனர்.
– கோயிற் பூனைகள் (சிறுகதைகள்), முதற் பதிப்பு; 1945, திராவிடர் கழக வெளியீடு, சென்னை.