மூடு திரை
கதையாசிரியர்: செ.யோகநாதன்
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: August 8, 2026
பார்வையிட்டோர்: 97
(1968ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“இனி ஆட்களுக்கு முன்னாலை நான் எப்பிடித் தலை நிமிர்ந்து நடக்கப் போறன்? இந்த நாற்பத்தைஞ்சு வருஷத்துக்கை ஆருக்கும் குனியாத தலை, இனிக் குனிஞ்சுதான் நடக்கப் போகுது. சாந்தம் ஓமோம் நல்லபேர் வைச்சம் சாந்தகுமாரி.”
அளவுக்கு மீறிய மனக்கசப்புடன் தங்கம்மா முணுமுணுத் துக் கொண்டிருந்ததை, முன் திண்ணையில் உட்கார்ந்திருந் தவர்கள் தெளிவாகக் கேட்டபோதிலும், அதைக் கேளா தவர்கள் போலவே குனிந்தபடி கனகரெத்தினத்தின் முன் இருந்தார்கள். கனகரெத்தினம், மனைவி தங்கம்மாவின் குரலின் முன்னால் தன்னையறியாமலே குற்றவாளி போலக் குறுகினார். அவரது கம்பீரமான முகம், ஐம்பது வயதேயா யினும் களையுடனிருக்கும் அவரது முகம் சோர்ந்து மற்றவர் பார்வையின் முன் கூசிக் குனிந்திருந்தது. ஆயினும் அது இதய ஆழத்திலிருந்து ஏற்பட்ட வருத்தத்தால் இதய பூர்வமான குற்ற உணர்வால் ஏற்பட்டதல்ல.
அவர் நிமிர்ந்து வீட்டுச் சுவரைப் பார்த்தார். காலண்டர்ப் படத்திற்கு வைக்கப்பட்டிருந்த செவ்வரத்தம் பூ வாடிக் கிடந்தது. அதை, நேற்றுக் காலையில் காலண்டரில் உள்ள லட்சுமி படத்துக்கு பயபக்தியுடன் வைத்து வணங் கிய சாந்தகுமாரி, அக்காலண்டருக்குப் பக்கத்தில் இப்போது படமாக மட்டும் இருக்கின்றாள். காலண்டர்ப் படத்திற்குப் பக்கத்தில் இருந்த அவளின் படத்தைப் பார்த்து மனஞ் சீறிக் கனகரெத்தினம் பெருமூச்செறிந்தார்.
அவரது மகள் சாந்தகுமாரியின் அழகில் அவருக்கே பெருமையிருந்தது. அவளுக்குப் பார்த்தவரைக் கவரும் அழகிய குறுகுறுத்த கண்கள். பணிவோடு கலந்த வசீகரம் அவளது முகத்தின் புன்னகையில் சோகங்களையும் மீறித் தனிக் கவர்ச்சியாய்ப் பொங்கிக் கிடந்தது. அவளுக்கு இரு பத்தியாறு வயதென்று யார்தான் சொல்லுவார்கள்? இன் னமுமென்ன, பதினாறு வயதென்றே சொல்லுமளவிற்கு வயதினைக் குறைக்கும் வடிவம். இருபத்தியாறு வருடங் களாய் இளமையின் கீதமாய், இந்த வீட்டில் என்றுங் கல கலப்பின் ஒலியாய், சிரிப்பாயும், அழுகையாயும், பேச்சா யுமிருந்த சாந்தகுமாரி நேற்று இரவு யாரோ ஒருவனோடு ஓடிப்போய் விட்டாள்!
”அவளை, நெசவுக்குப் படிக்க எண்டு விடேக்கையே நான் நினைச்சன்; எவ்வளவிலை அழுது குளறினன். பொம் பிளையள் எண்டால் வீட்டோடை இருந்திட வேணும். வேலிக்கு வெளியாலை அவளின்ரை தலையும் தெரியப்படாது என்டு நான் சொல்லேக்குள்ளை, என்னை உலகத்தின்ரை போக்குத் தெரியாத கர்நாடகம் எண்டு தகப்பனும், மகளுமாய்ப் பழிச்சினை. இப்பிடியெல்லாம் சிரிச்சுப்போட்டு இப்ப சாந்தம் மானத்தை வாங்கிப்போட்டாளெண்டு தலை தலையாய் அடிச்சு என்ன வரப்போகுது?”
அவளின் மனதோடு கண்களும் அழ, வார்த்தைகள் கடந்த காலங்களை எல்லாம் மற்றவர் கண்களின் முன் காட்சிகளாகத் தோற்றுவித்துக் கொண்டிருக்கையில், அவர்களின் மனத்தினுள், பெருமூச்சும் சிரிப்பும் சீறின. கனக ரெத்தினத்திற்கு எதையும் எண்ண முடியவில்லை. இரு பத்து எட்டு வருடங்களாய் வாழ்ந்த தாம்பத்திய வாழ்வில் அவர் மனைவி தங்கம்மா இப்படி அழுதறியாள். அவளின் அழுகையும், விம்மலுமே அவருக்கு எதிராய்க் குற்றம் சாட்டி மாபெரும் கரமாய்க் எழுந்ததுபோல அவருக்கு உணர்வு தட்டியது. அர்த்தமற்ற சம்பிரதாயங்களை உடைக்க வலுவின்றி, நெளிந்தும் தயங்கியும் நின்ற அவரை பழகிய அன்பாலும், கண்ணீரின் வலிமையாலும் வளையப் பண்ணிய சாந்தகுமாரியும் தன் எண்ணம் வெற்றி பெறுவ தற்குக் கடைசியில் என்ன கொடூரமான குற்றம் சாட்டி னாள். அவருக்கு இதயத்துள் துக்கம் குடைந்தது.
அவள் தன்னுடைய ஆசையை அவரிடம் சொன்ன போது, அவர் எதிர்பாராத அடிபட்டவர்போல முகம் மாறி அவளைப் பார்த்து அதனால் வரும் கஷ்டங்களையெல் லாம் விஸ்தாரமாக எடுத்துச் சொன்னார். அப்பொழுது அவள் சிறிது நேரம் மௌனமாயிருந்துவிட்டு குற்றம் சாட்டும் குரலில் அவரைக் கேட்டாள்.
“நீங்களும் இப்படி மூடத்தனங்களை ஏற்கிறீர்களா? அந்த மூடத்தனங்களை ஏற்றுக்கொண்டு என் வாழ்வையும் அழித்து நாசப் படுத்தப் போகின்றீர்களா?”
பார்வையைச் சற்றுச் சரித்து, வாசலைத் தாண்டி அவர் வெளியே பார்த்தார். தங்கம்மா நன்கு சடைத் திருந்த செவ்வரத்த மரத்தின்முன் எதையோ பார்த்த படி நின்றாள். அவள் முகத்தில் இன்று விடிந்த சில மணி நேரங்களில் அப்படியொரு மாற்றம் நிகழ்ந்து விட்டது. வாசலில், சில வேளைதான் அவள் போய் நிற்பாள். அது வும் மகனான தர்மலிங்கத்தின் வருகைக்காகத்தான். தர்ம லிங்கம் இன்று பகல் பத்து மணிக்கு வருவதாகப் போட்ட கடிதத்தைக்கூட சாந்தகுமாரி முந்த நாள் தான் இதே திண்ணையில் இருந்து தாய்க்கு வாசித்துக் காட்டினாள்.
தர்மலிங்கம் மனதில் வளர்ந்த நம்பிக்கை என்ற செடி இலை துளிர்க்க முன்னரே நசித்து அழிக்கப்பட்டு விட்டாதோ என்ற கேவல், தங்கம்மாவின் மனதினுள் அழுகையாய் விக்கிற்று.
தங்கம்மா அசையாமலே இன்னும் செவ்வரத்த மரத் தடியில் நிற்கிறாள். என்றுமே அவள் இப்படி ஓரிடத்தில் நெடுநேரம் தரித்து நில்லாத பம்பரம். இந்தச் சிறிய நேரத் திற்குள் அவள் நெஞ்சில் அவளையே மீறிய வைராக்கியம் முளைத்துவிட்டது. சாந்தகுமாரி ஓடிப்போனவள். தனது சாதியின் மானத்தையும், தங்கள் குடும்பத்தின் பரம்பரை யின் மானம், புகழ் யாவையும் அள்ளிக்கொண்டே போய் விட்டாள் எனத் தங்கம்மா பொருமினாள். இனி எந்த இடத்திற்குப் போவதற்கும் அவள் விரும்பமாட்டாள். எப்படிப் போவாள்? அவளைப் பார்த்து அனுங்கும் அனு தாபங்களையும், முன்னால் போகவிட்டுப் பின்னால் இரகசி யமாயும், பரகசியமாயும் எழும் கேலிச் சொற்களையும் அவள் எப்படித் தாங்க முடியும்? இனி அவர்களை, அனேக மாக அவர்களின் சாதிக்காரர் தங்களோடு மதித்தும் சேர்க்க மாட்டார்கள். அவர்களின் வாழ்வெல்லாம் அந்தப் பழி நீண்ட நிழலாகத் தொடர்ந்து கொண்டே வரும் எனத் தங்கம்மா தன்னுள் தானே நினைத்துக் கொண்டாள்.
அது கொடுமையான தண்டனையல்லவா?
எட்டு மணிக்கு வரும் பஸ்ஸின் ஓசை இலேசாகக் கேட்டது. குழப்பத்தில் ஆழ்ந்திருந்த கனகரெத்தினம் தன் னிச்சையாகவே வெளியே பார்த்தார். அவரும் சாந்தகுமாரியும் அந்த பஸ்ஸில்தான் பெரியகடைக்குப் போவார்கள். பஸ் டிரைவர் கனகரெத்தினத்தோடு மிகவும் பழக்கமான வர்.வழக்கமாகவே கனகரெத்தினத்தின் வீட்டடியில் ‘கோர்ண்’ அடிப்பவர். அன்றும் அறிவிப்பதற்காகக் ‘கோர்ண்’ அடித்தவர். சில நிமிடம் நின்று தாமதித்துப் பிறகும் ‘கோர்ணை’ அடித்தபடி பஸ்ஸை இரைச்சலுடன் எடுத்ததைக் கனகரெத்தினம் அவதானித்தார்.
என்ன முகத்தோடு இன்று அச்சகத்திற்குப் போவது என்ற சலிப்பிலும் தலைக்குனிவிலும் அவர் அச்சகத்திற்கு வேலைக்கு போகாமலே நின்று விட்டதாக தங்கம்மா நினைத்தாள். அவள் அப்படித்தான் நினைக்கவேண்டுமென்று அவரும் நினைத்தார். இருபத்தியெட்டு வருடத் தாம்பத்திய வாழ்வில் மனதறிந்து அவளுக்கே மறைத்த அந்த உண்மை, காரிய நியாயங்களோடு ஒட்டியது என்பது அவரே தீர் மானித்து அத்தீர்மானத்தில் மன ஆறுதலும் அடைந்தார். இருபத்தியெட்டு வருடத் தாம்பத்திய வாழ்வில் மன தறிந்து தனது மனைவிக்கு மறைத்த அப்பொய் காரண காரிய நியாயங்களோடு ஒட்டியது என்ற நினைவில் கனக ரெத்தினம் பெருமூச்செறிகையில் படலையடியில் கலகலப்பு கேட்டது.
நிமிர்ந்து படலையைப் பார்த்தார்.
தங்கம்மாவின் தங்கச்சி பூரணமும் அவளது மைத்துனி பாக்கியமும் உள்ளே வந்து கொண்டிருந்தனர்.
“என்றை இரத்தம் வந்திட்டியோடி… பார்…அந்தச் சிறுக்கி எனக்குச் செய்து போட்டுப்போன உபகாரத்தை” தங்கம்மா அழுகையும், ஒப்பாரியும் கலக்கம் புலம்பி, பூரணத்தின் தோளோடு சாய்ந்து அணைத்தாள்.
“என்ன மாதிரி அந்தப் பிள்ளை இருந்தாள். மிரிச்ச இடத்துப் புல்லுக்கூடச் சாகாதெண்டு ஒரு கிழமைக்கு முந்தித்தான் நான் அதைப் பார்த்திட்டுச் சொன்னனான்.
“சீ… அது இப்படிச் செய்து போட்டுதே.”
பாக்கியம் சொன்ன குரல் கனகரெத்தினத்திற்கும் கேட்டது. அவருக்கு இன்னும் நல்ல நினைவு இருக்கிறது. கறுத்துத் தடித்த மதமதத்த அவள் அவரறிய இருபத்தி யொரு வயதில் இன்னொருவனோடு ஓடி பிறகு அவனிட மிருந்து பொலிசின் துணையோடு தகப்பன் அவளை மீட்டு வந்து ஊர் பேர் தெரியாத ஒருவனுக்குக் கட்டி வைக்கப் பட்டவள். பதினொரு வயது தொடக்கம் அவள் அவனைக் கண்டு சிரித்து, மயங்கி, தனிமையில் சந்தித்து அவனை மணப்பதாக வாக்குக் கொடுத்து சாதியென்ற தடையால் அவனை அவனோடு வாழ்ந்தும் இழந்தவள். சம்பிரதாயப் பழமைக் கொடுமையால் வாழ்வின் நிம்மதியையே இழந்து மனம் விரும்பாத ஒருவனை மனம் விரும்ப நிர்ப் பந்திக்கப்பட்டு அடிமையின் மனதோடு ஆனால் நிறைவு பெற்றவள் போல தனக்கே பொய் சொல்லி, அதையே உண்மையாய் நினைத்து வாழ்பவள். இவள் எந்தக் கொடுமையின் முன் தோற்று தன் மனதைக் கொன்று, செல்லரித்துப்போன சம்பிரதாயங்களெல்லாம் தன்னை தன் வெல்ல வழி கொடுத்தாளோ, அதே கொடுமைகளை உடைத் தெறிந்து தன் மனதின் மகிழ்ச்சிக்காக அர்த்தமற்றுப் போன செல்லரித்த சம்பிரதாயக் கொடுமைகளையெல் லாம் வீசி எறிந்தவளை சாந்தகுமாரியை ஏன் இவள் போற்றவில்லை ? மனதார வாழ்த்தவில்லை ? மாறாக அவளைத் திட்டுகிறாள் ; நாக்கு வலிக்க வசைமாரி பொழிகின்றாள் ! சீ, என்ன மனிதர்கள் !
கனகரெத்தினம் மனதிற்குள் காறித் துப்பினார்.
பாக்கியம் எதனால் வஞ்சிக்கப்பட்டாளோ, அதற்கே அடிபணிந்து அதையே சத்தியம் என ஏற்றுக் கொண்டாள். எவ்வளவு பரிதாபமானவள் அவள். ஏதோ ஒரு கொடுங் கரம் அவளை அப்படி ஒப்புக் கொள்ள வற்புறுத்தி அவளை வெற்றி கொண்டதா ? அவர் மட்டுமென்ன ?
அவருந்தான் நூறு உபதேசங்களை சொன்னார். சாதி யென்ன, சமயமென்ன என்று மனைவி திட்டத் திட்ட சொன்னவர். மூடுதிரை ஒன்றை இட்டுத்தானே, தனது மகளின் அழுகைக்கும் சமாதானங் கண்டார்.
அவரின் மனஞ்சேகரித்த கருத்துக்களைச் செயலாக்க அவர் துணியவில்லை. தனது கருத்துக்களைச் செயலாக்கி னால், தனக்கு எதிரே பிற்போக்கான ஒரு உலகம் பூத மாய்த் தோன்றித் தன்னையும் தன் குடும்பத்தையும் நாசஞ் செய்து கொண்டுவிடும் என்ற அச்சத்தால்-அவரே மீண் டும் தானே போய், தோற்று, பழமையின் சம்பிரதாயங் களினது வக்கரித்துப்போன நிழல்தனிலே போய்விழுந்தார். அவருக்கும் பாக்கியத்திற்கும் அடிப்படையில்தான் என்ன வித்தியாசம்?
உள்ளே வந்த பாக்கியமும், பூரணமும் தங்கம்மாவு டன் ஏதோ குசுகுசுத்தும், சிணுங்கியும் கதைத்துக் கொண் டிருக்க, கனகரெத்தினம் எழுந்து, வளவின் முன்பாய் நின்ற செம்பரத்த மரத்தடியில் போய் நின்றார்.
“இருபத்தியாறு வருடங்களாய் சாந்தகுமாரி இந்த வீட்டில் வாழ்ந்தாள். இவள் என்றுமே பெற்றோருக்கு கீழ்ப்பணிந்து அவர்கள் சொற்தட்டாமல் அடக்கமாகத் தான் வாழ்ந்தாள். பதினாறு வயதில் எஸ் எஸ்.ஸி சித்தி யெய்திய உடனேயே தான் நல்ல வருவாய் தரும் படிப்புப் படிக்க வேண்டுமென்று அடிக்கடி தகப்பனிடம் சொல்வாள். இன்று அவள் வீட்டைவிட்டு இன்னொருவனுடன் ஓடி விட்டாள் என்று சொன்னவுடன்தான் அவளைப்பற்றி விசாரிக்கவும், திட்டவும் இங்கே பலர் கூடிவிட்டார்கள். இந்தக் கிராமத்தில், இன்னும் பழமையையே இறுகப் பிடித் திருக்கும் பகுதியில் இருபத்தியாறு வயதுவரை ஒரு பெண் திருமணமாகாமல் இருப்பதே மிகவும் அருவருக்கத்தக்க நிகழ்ச்சிதான் – தர்மலிங்கமே அடிக்கடி “சாந்தத்தை எத்தினை நாளைக்கு இப்படியே வைத்திருக்கப் போகின்றோம்? ஊர்க்கதை, சாத்திரங்கள் இவையெல்லாம் சாந்தகுமாரியை எத்தனை விதங்களில் வதைக்கின்றன?”
அவள், பஸ்ஸில் ஏறி வேலைக்கு போகின்றாள் என்பதைத் தூற்றித் தூற்றிப் பலருக்குக் நாக்குத் தழும்பேறிவிட்டது. குமரியைப் பஸ்சிலை ஏறி, இறங்கவிட்டு காசு சம்பாதிக்கினை என்ற பழமொழிகூட அவள் குடும்பத்தின் மீது சுமத்தப் பட்டது. இந்தப் பழிமொழியைச் சுமத்திய ராசாத்தி, அவரறிய வந்து சாந்தகுமாரியிடம் அழுது மன்றாடி ஐம்பது ரூபா கடன் வாங்கிச் சென்றிருக்கின்றாள்-இவையெல்லாம் என்ன போலித்தனங்கள்! குடும்பத்தின் கஷ்ட நிலைமையைத் தாங்கமுடியாமல்தான் சாந்தகுமாரி வேலை செய்வதற்குப் போனாள். தனது குடும்பமிருக்கும் கஷ்டமான நிலைமையில் தனக்குத் திருமணமே ஆகாது; தான் விரும்பியவனை மணக்கவே முடியாது என்று தெரிந்தபின்புதான் அவள் வீட்டைவிட்டு ஓடிப்போனாள். அவள் தன் மனதைக் கொன்று, பண்பாட்டின் பொய் இருளினுள் புதைந்துகிடக்க விரும்பாது ஒளியை நோக்கித்தானே ஓடினாள்-இருபத்தி யாறு வருடங்களாய் இதே வீட்டில் இருந்துவிட்டு, இறுதி யில் பெற்றோருக்குத் துன்பத்தையும் அவமானத்தையும் கொடுத்துவிட்டு ஓடிப்போய்விட்டாள் என்று பூரணம் புலம்புகின்றாள். ஆனால் இருபத்தியாறு வயதாகியும் பிறர் பழிக்க அவள் புண்பட்ட இதயத்தோடு வாழ்ந்தாளே என்று யாராவது அவளுக்கு ஆறுதல் சொன்னார்களா?-இவைகளை யெல்லாம் மதிக்காது, வீட்டினுள் அழுதுபுலம்பிக்கொண்டு தான் சாந்தகுமாரியைப் போன்ற யுவதிகள் வாழவேண்டும் என்று இச்சமுதாயம் விரும்புகிறதா?-என்ன வரட்டுத்தன மான அர்த்தமற்ற மூடப் பண்பாடு இது!
கனகரெத்தினத்தின் மனம் எங்கெங்கெல்லாமோ சுற்றிவந்து சிந்திக்கிறது. அவர், தாம் வேலை செய்யும் அச்சகத்தில் எத்தனையோ பேருக்குப் புத்தி சொல்லி ஆறுதல் கொடுத்திருக்கின்றார். சகஊழியர்களோடு மட்டுமல்லாது,
எல்லோருடனும் வெகு சீக்கிரமாகப் பழகி அவர்களோடு, இன்ப துன்பங்களோடு ஒன்றிவிடும் அவர், சாதி சமயபேதம் பாராட்டுவதை விரும்பாதவர். ‘எல்லோருமே கடவுளின் பிள்ளைகள்’ என்று அடிக்கடி நாத்தழும்பேறச் சொல்லிக் கொண்டிருக்கும் அவருக்கும் இந்நிகழ்ச்சி ஒருசோதனையென வந்தது. சாந்தகுமாரி சாதி குறைந்த ஒருவனுடன் ஓடிப் போய்விட்டாள்!
ஊருக்கு அவர் சாதிசமய பேதமற்றவராய் விளங்கி விட்டு தனது வீட்டுக்கு மட்டும் வேறு நீதியைக் கைக்கொண் டாரா?
கனகரெத்தினம் அழுத நெஞ்சோடு சிரித்தார்.
‘இந்த இரகசியம் மூவருக்குள் மட்டும்தான் இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறதால், நான் ஒரு கோழை என்று அர்த்தம் வந்து விடுமா?’
இந்த இரகசியம் மூவருக்குள் மட்டுந்தான் இருக்க வேண்டும் என்று நான் விரும்புவதால், நான் ஒரு கோழை என்று அர்த்தம் வந்துவிடுமா? சாந்தகுமாரி என்னுடைய மகள். எந்த விஷயத்தையுமே யாரிடமும் ஒளித்தோ மறைத்தோ வைக்காதவள். தான் வாழ்ந்த உலகில் அள வற்ற பொய்யும், ஏமாற்றும் நிறைந்திருக்கின்றது என்பதை உணர்ந்தவள் அவள். எந்தவிதமான காரணமுமற்ற, வெறும் போலித்தனமான பழக்க வழக்கங்களை வெறுத்த அவள், தானாகவே புதிய உலகத்தினுள் பிரவேசித்திருக்கின்றாள். என்னால், பெற்று வளர்த்த தகப்பனாகிய என்னால், தனக்குச் சீதனம் கொடுத்துத் திருமணம் செய்து வைக்கமுடியாது என்பது அவளுக்கும் தெரியும்; எனக்கும் தெரியும்; என் மனைவிக்கும் தெரியும். ஒரு பெண்ணை வாழவைக்க எங்கள் சம்பிரதாயங்களால் முடியவில்லை; எங்களுக்கும் தெரிய வில்லை. ஆனால் சாந்தகுமாரி ஓடிப்போய் மானத்தை வாங்கி விட்டாளே என்று என் மனைவி புலம்புகின்றாள். குடும்ப கௌரவத்தால் சாந்தகுமாரிக்கு வாழ்வு கொடுக்கமுடிய வில்லை நானும் என்ன; ஊருக்கு உபதேசித்தவைகளை என் வீட்டிற்குள் நடைமுறைப்படுத்த முடியாமல் அதற்குத் துணிவற்றவனாய் இந்த வைதீகங்களுக்குப் பயந்து, தலை குனிந்து இருட்டின் துணையோடுதான் என் மகளுக்கு நான் உதவினேன்…’
தன்னுடைய மகள் சாந்தகுமாரி, குறைந்த சாதிக்காரன் ஒருவனோடு ஓடிப்போனது பற்றி, என்றுமே மௌனத்தி லும், சிந்தனையிலும் காலங்கழிக்கும் தர்மலிங்கம் என்ன சொல்வானோ என்று கனகரெத்தினத்தார் யூகிக்க முடியா திருந்தார். அவனது போக்கே அப்படியானதுதான். அவன் கடைச் சிப்பந்தியாக அநுராதபுரத்தில் வேலைசெய்கின்றான். சிறு வயதிலிருந்தே மௌனத்தின் உரத்தில் வளர்ந்து, எதற்கும் பேசாது, பேசாதிருப்பான் என்று நினைக்கின்ற வேளையில் உரத்து அட்டகாசமிட்டுத் தர்க்கித்தும், ஆத்திர வசப்பட்டும் கதைப்பவன் அவன். உரத்து அட்டகாசமிடு வான் என நினைத்திருக்கையில் சிரித்துச் சாந்தமாகப் போய் விடும் அவன், எப்போதும் பத்திரிகை, புத்தகங்களோடும், பலத்து வாதமிடும் நண்பர்களோடும் பரிச்சயமான அபூர்வப் பிறவி.
அவன் அடிக்கடி சொல்வான்.
“நூறு தரம் சொன்னாலும் அது தர்க்கத்திற்குச் சரியான தாக இருக்கவேண்டும்…எதையும் ஆராய்வற்று ஏற்றுக் கொள்வதும், எதற்கும் அர்த்தமற்றுத் தலைசாய்ப்பதும் என்னால் முடியாதவை. அற்பத்தனமான சுயநலங்கள், வீணாகக் கருத்தேயற்று பழைய நம்பிக்கைக்களினைத் தழுவி வாழும் அறியாமை ஆகிய இவை யாவும் கீழானவை; வெறுக்கத் தக்கவை; அழிக்கப்படவேண்டியவை”
அவன் சொல்லிக்கொண்டிருக்கையில், சாந்தகுமாரி அவனை விழுங்குவது போலப் பார்த்திருந்துவிட்டு இவை யெல்லாவற்றையும் இவன் எங்கிருந்து கற்றானோ என்ற பாவனையில் முகம் மாறுகையில் தர்மலிங்கமே சொல்வான்! “சாந்தம், நீயும் வெறும் சமையலறைப் பெண்ணாக வாழ்ந்து சாக நினைக்காதே…உலகத்தில் மாடுகள்கூடத் தங்களுக்குத் தாங்களே நுகத்தடி போட்டுக்கொள்ள முன்னுக்கு வருவ தில்லை ஆனால் தமிழ்ப் பெண்களோ வாழ்நாள் முழுவதும் அடிமைகளாயிருக்க மனம் ஒப்பி, தாங்களே தங்களுக்கு தாங்களே நுகத்தடி இட்டுக் கொள்கிறார்கள்… ஆனால் எனக்கு ஒரேயொரு கவலை. சாந்தம், நான் நினைத்தபடி உன்னைக் காண முடியாத ஏழையாக, நாடோடியாக பரதேசி யாக ஆகிப்போயிட்டன்”.
கனகரெத்தினத்தாருக்கு நெஞ்சைக் கீறி அழுகை பொங்கினும், அடக்கிக்கொண்டு மனதினுள் வெதும்பினார். தர்மலிங்கம் இன்னும் சிறிது நேரத்தில் அங்கு வந்து விடுவான்.
பிறகு என்ன நடக்கும்?
அவன் சீறுவானா? சினப்பானா? மௌனமாகவே நிற்பானா?
சாந்தகுமாரி அவன்மீது வைத்திருந்த அன்பைவிட, அவனும் அவள்மீது அதிக அன்பினை வைத்திருந்தான். தன்னுடைய தங்கச்சிக்கு இவ்வளவு வயதாகிறதே என்று அவன், கனகரெத்தினத்தாரிடமே நேரடியாகவும்
மறை முகமாகவும் உணர்த்தியிருக்கின்றான். அவன் ஒரு நாள் இதனைத் தாயிடம் வற்புறுத்தி ஏதோ அட்டகாசமிட்ட போது தங்கம்மா கூறியது இப்போதும் கனகரெத்தினத் தாருக்கு காதோடு கேட்பதுபோலப் பிரமை தட்டுகிறது; “தம்பி கலியாணமெண்டது நீயும் நானும் மட்டும் தீர்மானிக்கிற விஷயமில்லையடா. இதெல்லாம் விதி வழி வாற விஷயம் விதிப்படித்தான் எல்லாம் நடக்கும். என்ரை பிள்ளை இப்ப என்ன கரைஞ்சோ போகப்போகுது?”
மௌனமாய் இருப்பான் என்று எதிர்பார்த்த தர்ம லிங்கம் துள்ளி எழுந்தான்; “விதியும், மண்ணாங்கட்டியும். அவள் கிழவியானாபிறகு விதி வந்து கலியாணம் செய்து வைக்கும். பார்த்துக் கொண்டு இருங்கோ. உங்கடை இயலாமைக்கு விதி எண்டு திரை போட்டுக் கொண்டு அதி லேயே ஆறுதலடையுங்கோ… அவள்- சாந்தம் அழுதழுது தனக்குள்ளேயே சாகட்டும்.”
தங்கம்மா ஓய்ந்த பாடாயில்லை. கடைசியில் முழுக் குற்றத்தையும் தர்மலிங்கத்தின் மேல் போட்டுவிட்டுப் போனாள். தர்மலிங்கம் உழைத்துத் தங்கச்சிக்குத் திரு மணம் செய்து வைக்க வேண்டும் என்று அவள் சொல்லி விட்டுப் போனதும், தர்மலிங்கம் ஆறிப்போன நீராகி, செயலற்று இருந்து யோசித்தான். ஒரு வருடத்திற்குள் எப்படியும் சாந்தகுமாரிக்குத் திருமணம் செய்து வைத்து விடுவேன் என்று மனதினுள் உறுதி எடுத்து, அதைப் பெற்றோருக்குச் சொல்லிவிட்டுப் போன தர்மலிங்கம் ஒன் றரை வருடங்களுக்கு மேலாகியும் அதைச் செய்ய முடிய வில்லை. திடீரென்று தர்மலிங்கம் கடிதம் போட்டிருந்தான். அதைச் சாந்தகுமாரிதான்— அதோ அந்தத் திண்ணையி லிருந்து வாசித்துக் காட்டினாள். அப்போது கடிதம் வாசித் துக் கொண்டிருந்தவள், ஏதோ நினைவில் தலைநிமிர்ந்து தகப்பனைப் பார்க்க, தகப்பன் பெருமூச்செறிந்தார். அந்த இரகசியத்தை வெளிப்படுத்தி விடாதே என்பது போலத் திரும்பவும் மகளைப் பார்த்தார்.
தன் தங்கச்சிக்குத் தன்னால் கொடுக்கக் கூடியதைக் கொடுத்து, திருமணம் செய்து வைப்பதற்கான அடுக்கு களுடன் தான் தர்மலிங்கம் வரப்போகிறான் என்றால், வந் ததும் அவன் மாபெரும் ஏமாற்றத்தை அல்லவா எதிர் கொள்ளப் போகின்றான்…
தன் தங்கச்சிக்குத் தன்னால் கொடுக்கக் கூடியதைக் கொடுத்து, திருமணம் செய்து வைப்பதற்கான அடுக்குகளு டன் வீட்டிற்கு வரும் தர்மலிங்கம் மாபெரும் ஏமாற் றத்தை அல்லவா எதிர்கொள்ளப் போகின்றான் என்ற தவிப்பிலும், பயத்திலும் மனங்குழம்பியிருந்த கனகரெத் தினத்தார் படலையைத் திறந்து கொண்டு தர்மலிங்கம் வருவதைக் கண்டதும், ஒன்றரை வருடமாய் அவனைக் காணாதிருந்த ஆசையும் மனதிலெழத் திண்ணையில் இருந்து எழுந்தார்.
மகனைக் கண்டதும், தங்கம்மா நெஞ்சினுள்ளிருந்து அழுகை பீறி வெடிக்க ஓடிப் போய் அவனைக் கட்டிக் கொண்டு விம்மினாள்.
“என்ரை ராசாவின்ரை ஆசையிலை மண் விழுந்து போச்சுதடா…”
தாயின் ஒப்பாரியைத் தர்மலிங்கம் தொடரவிடவில்லை. தாயை ஆதரவோடு ஆதாரமாகத் தாங்கிக் கொண்டு அமைதியாக அவன் சொன்னான்:
”அம்மா… எனக்கு எல்லாமே தெரியும். எல்லாவற்றை யும் விரிவாக எனக்குச் சாந்தமே எழுதியிருந்தாள். படலையடியிலை நின்று அழவேண்டாம். நடவாத ஒன்றும் இப்போது நடந்து விடவில்லை-”
கனகரெத்தினத்தாரின் மனம் எகிறிற்று.
‘சாந்தம் எல்லாவற்றையுமே இவனுக்கு எழுதிவிட் டாளா? தர்மலிங்கம், சாந்தகுமாரி குறைந்த சாதிக்கார னோடு ஓடியதை மனதார ஒப்புக்கொள்ளுவானா? இருபத் தியாறு வயதுவரை அவளைத் திருமணம் செய்து கொடுக் காமல் வீட்டினுள்ளேயே அமுங்கி அழ வைத்திருந்தால் அவள் இதைச் செய்யாமல், வேறு என்னதான் செய்வாள் என்று என்னைத்தான் இவன் திட்டப்போகின்றானா?… தர்ம லிங்கம், சாந்தத்தை நீயுந்தான் நம்ப வைத்தாய். ஆனால் அந்த நம்பிக்கையை நீயும்கூட நிறைவேற்றிவைக்க முடிய வில்லையேடா. ஒரு வருடத்தில் தங்கச்சிக்குத் திருமணம் செய்து வைக்கிறேனென்று உறுதியோடு கூறிப்போன நீ ஒன்றரை வருடங்கழித்து இங்கே வந்திருக்கின்றாய்… வெறுமையைத் தரிசிக்கப் போவது தெரிந்தும் இங்கே வந்திருக்கின்றாய். சாந்தம் எல்லா இரகசியங்களையும் உனக்கு எழுதினதால் அதற்குப் பழிவாங்கவென்று நீ வந்தாயா? புரிந்துகொள்ள முடியாத உனது வார்த்தைகளிலே என் னால் எதைத்தான் அறிந்து கொள்ள முடியும்?
தர்மலிங்கத்தை உட்திண்ணையில் இருத்திவிட்டு, பக்கத் தில் அவனைப் பார்த்தபடியே தங்கம்மா இருக்க, அதே மூலைத் திண்ணையில் அவர்களுக்கு எதிராக, முதுகைக் காட்டியபடியே இருந்தார் கனகரெத்தினத்தார். அவர் இருந்தது தாய்க்கும் மகனுக்கும் தெரியாமற் செய்ய இடையில் ஒரு சாக்குப்படங்கு தொங்க விடப்பட்டிருந்தாலும் தாங்கள் கதைப்பது கனகரெத்தினத்தாருக்கும் கேட்கும் என்பது அவர்கள் இருவருக்கும் தெரியும்.
தங்கம்மாதான் கதையைத் தொடங்கினாள் :
“உனக்கும் அந்த ஆட்டக்காறி காயிதம் எழுதினவளோ?…எழுதுவாள்…எழுதுவாள்… இந்தப் பூனையும் இந்தப் பாலைக் குடிக்குமோ எண்டிருந்துவிட்டு இப்பிடி ஒரு அவப் பெயரைத் தேடி வைச்சிட்டுப் போயிருக்கிறாள் சண்டாளி. நீயும் கொய்யாவும்தான் நான் சொல்லச் சொல்ல அவளுக்குச் செல்லம் குடுத்தியள். இப்ப அவள் எல்லாருக்கும் தலைக்குனிவை ஏற்படுத்தியிட்டுப் போயிட் டாள். சாதி குறைஞ்சவனோடை ஓடிப்போற நாய் ஒண்டு என்ரை வயித்திலை பிறக்கப்போகுது எண்டு தெரிஞ்சிருந் தால் பிறந்த உடனேயே கழுத்தைத் திருகி…இனி என்ரை சந்ததிகூட மானத்தோடை தலைநிமிர்ந்து—”
மூச்சுவிடாமற் சொல்லிக்கொண்டுபோன தங்கம்மாவின் குரலைத் திடீரென்று மெல்லக் கிளம்பிய தர்மலிங்கத்தின் சிரிப்பு இடைமறிக்க, கனகரெத்தினம் அவனின் குரலிற் காய் காதைத் தீட்டிக்கொண்டு கூர்ந்து கவனித்தார்.
“அம்மா, மானம் மானமெண்டு நீங்க சொல்லிறபோது எனக்குச் சிரிப்பாகத்தான் வருகுது. மானம் போயிட்டுது, மானத்தோடை தலைநிமிர்ந்து வாழேலாது எண்டு நாங்க சொல்லேக்கை எதைக் குறிக்கிறம் ? பொய்யான, பழமை யான, உளுத்துப்போன கருத்துக்களுக்கை எங்களைச் சிறைப் பிடிச்சு நாங்களே வைச்சுக் கொண்டு இப்பிடி வாழுறது பெரிசாச் பெரிய முட்டாள்த்தனம்-எல்லாரும் இப்ப சத்தம் போட்டுத் திட்டுற அளவுக்கு சாந்தம் செய்த குற்றம் தான் என்ன?”
“டே தம்பி… இதென்னடா, இதென்ன நீ கதைக்கிற கதை? நாங்க அவளுக்கு என்ன குறை வைச்சம் ? இப்ப கடைசியாய் அவள் எங்கடை மானம் மரியாதை எல்லாத் தையும் கெடுத்துப் போட்டு, இனி எங்களை எண்டைக்குமே தலைநிமிர்ந்து நடவாதபடிக்குச் செய்திட்டுப் போட்டாளோ இல்லையோ ?’ தங்கம்மாவிற்கு மூச்சிழுத்தது.
“சாந்தம் இப்ப புதுமையாய் என்ன செய்திருக்கிறாள்? ஒருத்தனைக் கலியாணம் முடிச்சிருக்கிறாள். அவளைப் புரிஞ்சு கொண்டு, அவளைக் கண்கலங்காமல் பாதுகாக்கக்கூடிய ஒருத்தனை விரும்பி அவனோடை போயிருக்கிறாள். நீங்க குறைஞ்ச சாதியெண்டு திட்டுற ஏழையொருத்தன் கூடின சாதியிலிருக்கிற இன்னொரு ஏழையை-சாந்தத்தை மண முடிச்சிருக்கிறான். ஏழைக்கு ஏழைதான் துணை. அவள் செய்ததிலை என்ன தவறு இருக்கு? இருபத்தாறு வயதாகி யும் அவளுக்குக் கலியாணம் பண்ணிக் கொடுக்க நாங்கள் யாரும் முன்வரவில்லை. அதுக்காக அவள் எங்களிட்டை வந்து அழவும் இல்லை. புலம்பவுமில்லை. ஆனால் கடைசியிலை அவளே ஒருத்தனை விரும்பிக் கலியாணம் முடிச்சிட்டாள். நாங்கள் அவளுக்கு முன்னாலை தலை நிமிர்ந்து நிற்க வெட்கப் படவேணும். இருபத்தியாறு வயது ஆகுமட்டும் அவளை வீட்டிலை வைச்சிருந்து அவளைக் கொண்டு உழைப்பிச்சுத் தின்றமே என்று ஆராவது யோசிச்சிருக்கிறியளா?”
கடைசியில் கனகரெத்தினத்தாரும் அவனது கதைக்குள் இழுபட்டார்.
“உண்மையிலை சொல்லப் போனால் அவள் இவ்வளவு காலமும் வீட்டுக்கை இருக்கிறாளே என்று நினைக்கவோ, பரிதாபப்படவோ யாருக்கும் மனமுமில்லை; யோசனையு மில்லை. அவளுக்கு உதவி செய்ய ஒருத்தருக்கும் நாதியில்லை. ஆனால் இப்பதான் அவளைப் பற்றி நினைக்க எல்லாருக்கும் நேரம் வந்திருக்கு. அவள் ஓடிப்போகுமட்டும் அவளைப் பற்றிக் கதைக்க ஒருவருமில்லை. இப்பதான் அவளைத் திட்ட எல்லாரும் கூடியிருக்கிறியள். சாந்தத்தை இப்படி ஓடிப் போக வைச்சது ஆர்? நீங்கதான்…நீங்க உடும்புப் பிடியாப் பிடிச்சிருக்கிற முட்டாள்க் கொள்கைகள் தான். நல்ல காலம், சாந்தம் மூளையுள்ளவள். சிலரைப் போல மடைத் தனமாக சாகாமல் தான் நினைச்சவனோடை ஓடிப்போயிட்டாள்-”
கனகரெத்தினத்தார் நிம்மதியாகப் பெருமூச்சு விட்டார். அவர் ஒளித்தோ மறைத்தோ மூவருக்குத் தெரிந்த இரகசியமாய் செய்த செயலை ஆதரிக்க மகன் இருக்கிறானே என்ற நிம்மதியில் அவர் பெருமூச்செறிந்தார். அவரது நெஞ்சுக்குள் கிடந்து தயங்கிய கருத்துக்களை அவனே இப்பொழுது சொல்லிக் கொண்டிருப்பது போல அவர் உணர்ந்தார்.
“இரும்புப் பிடியாய் முட்டாள்க் கருத்துக்களைப் பிடித் துக்கொண்டு உயிர்களைக் கொல்லுறதுதான் மானமில்லாத செயல். தனக்கு ஒரு வாழ்வு வரேல்லையே எண்டு ஏங்கிக் கொண்டிருக்கிற குமரை வீட்டுக்குள்ளை வைச்சுக்கொண்டு அவளின்ரை உணர்ச்சிகளை மதிக்காமல் சீவிக்கிற மனிதன் தான் தலை குனிஞ்சு நடக்க வேண்டியவன். உண்மையிலை சொல்லுங்கோ…மானம் போயிட்டுது, மரியாதை போயிட் டுதெண்டு சொல்லி அவளுக்கு நீங்கள் இதுவரை என்ன செய்தியள்? உங்களாலை, உங்கடை பண்பாட்டின்படி அவ ளுக்குச் சீதனம் கொடுத்து திருமணம் செய்து வைக்க முடியுமா? முடியாது. இப்படித்தான் பொய்ப் பெருமை யாலும், சாதிபேதத்தாலும் ஆயிரமாயிரம் உயிர்கள் வீணா கக் கொல்லப்பட்டிருக்கின்றன. ஆனால் எல்லாரும் நினைத்த படி, நினைத்ததை அடைந்து மகிழ்வோடு வாழக்கூடிய ஒரு காலம் வரும். அந்தப் பொன்னான புதுயுகம் வரும்வரை இப்பிடி விஷயங்கள் நடப்பதை யாரும் தடுக்க முடியாது இது அழுகிப்போன முதலாளித்துவ சமுதாயத்தின் விதி. தன்னை நம்பினவனை ஏமாத்தாமல், நீங்க போற்றுகிற இந்தச் சமய சம்பிரதாயங்களை உடைத்துத் தகர்த்துக் கொண்டு தைரியமாய்ப் போன சாந்தாதான் நேர்மை யுள்ளவள்…மானமுள்ளவள்…அது சரி ஏனம்மா பேசாமலிருக்கிறாய்?”
எங்கோ மனதைவிட்ட தங்கம்மா பேசமுடியாது மௌனமாயிருந்த நேரத்தில் கனகரெத்தினத்தாரின் வாய் மூவருக்குத் தெரிந்த இரகசியமொன்றை அவனுக்கும் சொல்லத் துடித்துக் கொண்டிருந்தது.
“தம்பி தர்மலிங்கம், உன்னைப்போலை எனக்கு அறிவு மில்லை. இவ்வளவு துணிவுமில்லை. ஆனால் பயந்து பயந்து சாந்தத்தின் மேல் வைத்த அன்பாலும், எனது அற்ப அறி வாலும் நான்தான் அவள் அவளது காதலனோடை ஓடிப் போகும்படி தூண்டிவிட்டேன். ஏற்கனவே, சாந்தம் தான் காதலித்ததை எனக்குச் சொல்லியிருந்தாள். அவனைத் தவிர வேறு யாரையும் மணக்கமாட்டேன் என்று சொன் னாள் அவள். ஊர், உலகம், சம்பிரதாயம் ஆகிய யாவும் இதனை ஒப்பாதே என்றேன். அவள் என்னையே கேட்டாள்; ‘நீங்களும் இப்படியான மூடத்தனங்களை ஏற்றுக்கொண்டு என்னுடைய வாழ்வையே அழிக்கப் போகிறீர்களா?’ என் றாள். என்னால் என்ன பதில் சொல்ல முடியும்? நான் திரை மறைவில்தான் இதனைச் செய்யும் வலிமையுடையவன். நானே அந்த இரவு, என் மகளைச் சஞ்சலம் நிறைந்த இதயத் தோடு, அந்தப் பையனின் கையில் பிடித்துக் கொடுத்து விட்டு, காலையில் எழுந்து வேறு நாடகம் ஆடினேன்- சாந்தம் ஓடிப்போய் விட்டாள் என்று அழுதேன். என்னடா மகனே செய்ய முடியும்… நீ புது உலகத்தின் மனிதன். புதிய தலைமுறையின் பிரதிநிதி. நானோ?… உன்னளவு வலிமை எனக்கில்லையே…”
தர்மலிங்கத்தின் காலடியோசை கேட்டது.
தகப்பன், மகனை மௌனத்தோடு நிமிர்ந்து பார்த்தார். அவன் சொன்னான்; “ஐயா, இனி ஆட்களுக்கு முன்னாலை நான் எப்படித் தலைநிமிர்ந்து நடக்கப் போறேன் எண்டு நினைச்சுக்கொண்டு நீங்களுமா மனவருத்தப்படப் போறியள்? எனக்கு எல்லாம் தெரியும். சாந்தம் எனக்கு எல்லாமையுமே விபரமாய் எழுதியிருந்தாள்!”
– 1968
– தேடுதல் (சிறுகதைகள்), முதற் பதிப்பு: டிசம்பர் 1983, நர்மதா பதிப்பகம், சென்னை.
![]() |
ஈழத்து எழுத்தாளர் செ.யோகநாதன் - எழுதியவர்: முல்லை அமுதன் - 05 February 2008 1942ல் பிறந்த செ.யோகநாதன் அவர்கள் மாரடைப்பால் இறக்கும் வரை நிறையவே எழுதிக்குவித்தவர். 1962ல் தன் முதல் சிறுகதையான ‘மனக்கோலத்தை’ எழுதியது முதல் தொடர்ந்து சிறுகதை, நாவல், குறுநாவல், சிறுவர் இலக்கியம், திரைப்படம், விமர்சனங்கள் என எழுத்தை விரிவுபடுத்தியவர். ஜெயகாந்தனின் ‘வாழ்க்கை அழைக்கிறது’ நாவலை ‘அக்கினிப் பிரவேசம்’ எனும் சிறுகதையை வாசித்தபோது ஏற்பட்ட அதிர்வலைகள் எனக்கு…மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
இரத்தத்தில் இல்லையே
இரா.துரைமாணிக்கம்
August 19, 2026
எனக்கெனவே… நீ… கிடைத்தாய்!
ஆர்.மணிமாலா
August 19, 2026
இரட்டைப் பின்னல் இந்திரா
இரா.கலைச்செல்வி
August 19, 2026
