மூக்குக் கண்ணாடி




(1966ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
1

கதிரையைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு ‘சடக்’ கென்று எழுந்து நின்று இடதுகாற் செருப்பை மாட்டிக்கொண்டு, வலது காற் செருப்பை மாட்டுவதற்காகத் தேடி, அகப்படாததால் திடீரெனக் கீழே குனிந்து மேசைக்குக்கீழ் பார்க்க முனையும்போது தற்செயலாகச் சிவகுருவின் மூக்குக்கண்ணாடி கீழே விழுந்து, ஒரு பக்கத்துச் சட்டம் சாடையாக விட்டுவிட்டது மூக்குக் கண்ணாடி இப்படி முறியுமென எதிர்பார்க்காத சிவகுரு, அதன் சட்டம் விட்டிருந்ததைக் கண்டதும், ஏங்கிப்போய், தான் அவசரமாகப் போக இருந்த காரியத்தையும் மறந்து, விட்டுப் போன தனது மூக்குக் கண்ணாடியின் சட்டங்களைக் கையில் எடுத்து வைத்துக் கொண்டு யோசித்தபடியே மீண்டும் தனது கதிரையில் அமர்ந்து கொண்டார். அந்தக் கண்ணாடி, தான் படிக்கும் போது தனக்குத் தகப்பன் வாங்கித்தந்ததென்பதை யும் அதற்குப் பின்பு, தான் ‘கிளறிக்கலில்’ சேர்ந்தும் இப்பொழுது கிட்டத்தட்ட பதினைந்து வருடங்கள் ஆகின்ற தென் பதையும் எண்ணி “அது சரியான பழசுதான்… முறியும் தானே…” என்ற முடிவுக்கு வந்து முறிந்து போன கண்ணாடி யின் இழப்பிற்குச் சாந்தி தேடினாலும், தற்போதைய நிதி் நெருக்கடியை எண்ணிப்பார்க்கும் போது ‘அது முறிந்திருக்கக் கூடாது’ என்ற ற எண்ணம் ஜீரணிக்காத உணவு செரித்துச் செரித்து மேலே வருவதைப் போல வந்து கொண்டிருக்க கண்ணாடியை அப்படியும் இப்படியும் திருப்பிப் பார்த்து விட்டு ‘அதை நூலாலை ஒரு மாதிரிக் கட்டலாம்’ என்று எண்ணிக் கொண்டு கண்ணாடியை மடித்துப் பையுக்குள் போட்டுக் கொண்டார்.
பீயோன் சோமபால இரண்டாம் தடவையும் வந்து “சிவ குரு மாத்தையாட சீ. சீ. மாத்தையா கதாகறனவா” என்று சொன்ன பொழுதான் தான் எதற்காக அவசரமாக எழுந்த தென்ற நினைவு வரவே தேவையான ‘பைலை’யும் தூக்கிக் கொண்டு தலைமைக் குமாஸ்தாவின் அறைக்குள் நுளைந்தார் சிவகுரு.
2
சிவகுரு, சாயந்திரம் வீட்டிற்குச் சென்றதும், வழக்க மாகத் தான் செல்வது போல முகம் கால் கழுவி சுவாமி கும்பிட்டு விட்டு வெளிவிறாந்தைக்கு வந்து, உடைந்த கண்ணாடி யின் சட்டத்தைக் கட்டும் எண்ணத்தோடு, பத்தியில் அண் ணாந்து பார்த்தபடி நூற்பந்து சொருகியிருக்கலாமெனத் [தேடிப் பார்க்கின்றார்.
சிவகுரு அங்கும் இங்குமாக அண்ணாந்து பார்த்துக் கொண்டிருப்பதை அவதானித்த சிவகுருவின் மனைவி லெட்சுமி அவருக்குக் கிட்டவாக வந்து,
“என்னவும் பத்தியிலை அப்போதை கூடப் பார்க்கின்றீர்?” என்று கேட்க, சிவகுரு மேலே நூற்பந்தைத் தடவிக் கொண்டே கையுக்குள் பொத்தி வைத்திருந்த விட்டுப்போன கண்ணாடிச் சட்டத்தையும் கண்ணாடியையும் காட்டிக் கொண்டு,
“நூற்பந்து தடவுற …ன்…” என்றார் வெகு மெதுவாக. ”உதை என்ன செய்யப் போறீர்?” என்று லெட்சுமி கேட்டாள்.
“என்ன செய்யவோ…… ?” என்று இழுத்துக் கேட்டார் சிவகுரு. இந்தக் கேள்வியில், ‘மூன்றாம் வகுப்புக் ‘கிளறிக்கல்’ சம்பளத்தோடை இந்தப்பெரிய குடும்பத்தைக் கொண்டு போகக் கஸ்ட்டப்படுகிற நான், கண்ணாடி உடைஞ்ச உடனை ஒரு புதுக் கண்ணாடி வாங்கிப்போடலாமே ? ஏதோ இப்படித்தான் நூலாலை கீலாலை கட்டி ஒரு மாதிரிக் காலத்தை இழுக்க வேணும்… இது தெரியாததைப் போல கேட்கிறீர்’ என்ற எண்ணம் படர்ந் திருந்தது.
“நூலாலை கட்டப் போறியள் போலகிடக்கு…”
“பின்னை என்ன செய்யலாம்…?”
“நூலாலை கட்டினால் நிக்குமோ?”
“அப்ப கம்பியாலை கட்டச் சொல்றீரோ…!”
“இல்லைப்பாரும்… புதுக்கண்ணாடி என்ன விலை வரும்…”
“அது இப்ப கனகாசுவரும்…”
“கனகாசெண்டால்…?”
“ஐம்பது அல்லது அறுபது ரூபாய் வரும் …”
“அப்பிடியெண்டால், நான் பாரும் சிவக்கொழுந்தக்கா வோடை ஒரு சின்னச் சீட்டொன்று போட்டனான், வாற மாதம் எனக்குத்தான் வரும்… அதை எடுத்து ..”
”சின்னச் சீட்டென்றால்…எவ்வளவு…?”
“நாற்பத்தைஞ்சு ரூபாய்…”
“அப்ப மிச்சத்துக்கு…?”
“மிச்சத்துக்கு நீங்கள் என்னாலும் செலவைக் குறைச்சு, மிச்சம் பிடிச்சுப் பாருங்கோவன்…”
இதைக் கேட்டதும் சிவகுருவுக்கு மனதிற்குள் ‘பெரிய’ சந்தோசம்தான். இருந்தாலும் வாறமாதம் வரைக்கும் கண்ணாடி? எனவே நூலைத்தேடி எடுத்து ஒரு மாதிரிக் கட்டிப் போட்டுக் கொண்டார்.
3
“அண்ணை சிவகுரு, நீங்கள் இப்ப ஒரு மாதமாகக் ‘கன்ரீன்’ பக்கம் வந்ததைக் காணவில்லை நான்… இப்ப நீங்கள் ‘ரீ’ குடிக்கிறதில்லையோ.. ?” – சிவகுருவோடு வேலை செய்யும் சக குமாஸ்தா ஒருவரின் ‘அவதானிப்பில்’ எழுந்த கேள்வி இது.
“இல்லைத்தம்பி, நெடுக இந்தத் தேத்தண்ணியைக் குடிக்ககக் குடிக்க, கைகாலெல்லாம் உழையுது… அதுதான்..” என்று இழுத்து நிறுத்தினார் சிவகுரு. கண்ணாடி வாங்க லெட்சுமி கொடுக்கும் பணத்தோடு இன்னும் ஐந்து பத்துத் தேவையென்பதனால் இந்த ஒறுத்தல் இதையெல்லாம் நேரடியாக வெளியில் சொல்லலாமா ? இவருக்கு வெட்கமும் இருக்கும் தானே. அதனால்தான் சிவகுருவுக்கு இந்தக் ‘கைகால் உழைவு’.
“அதுதானே உங்களைக் காணேல்லையென்று பார்த்தன்…”
“ஓ…” சாடையாகத் தலையை ஆட்டி ஆமோதித்து சொண்டிற்குள் சிரிக்கின்றார். கையாண்ட உத்தியில் வெற்றி.
4
சம்பளம் கொடுக்கும் ‘கிளாக்’கிடம் தனது சம்பளத்தை வாங்கிக் கொண்டுவந்து எல்லா வற்றையும் எண்ணிப் பார்த்து, தனது லாச்சிக்குள் இருந்து கடதாசித் துண்டொன்றை எடுத்து, கடன் கொடுக்க வேண்டிய பணத்தைக் கூட்டிப்பார்த்து வந்ததைத் தனது சம்பளத்திலிருந்து கழித்த போது ஒன்பது ரூபாய் பதினெட்டுச்சதம் மிகுதியாக நின்றது. இது அவர் நடத்திய ஒறுத்தலில் கிடைத்தது. இன்று மனைவிக்கும் சீட்டுக் காசும் கிடைத்திருக்கும். அதையும் சேர்த்தால் சரியாக ஐம்பத்து நாலு ரூபாய் பதினெட்டுச் சதம் கண்ணாடிக்காக இருக்கென்பதை நினைக்கும் போது இன்று பின்னேரம் வீட்டிற்குப் போகும் போதே ஒரு கண்ணாடி ‘செலெக்’ பண்ண வேண்டும் என்ற எண்ணமும் வந்தது. அதன்படி அன்று சாயந்திரம் வீட்டிற்குப் போகும் போது கண்ணாடிக் கடை யொன்றிற்குள் நுழைந்து ‘சோ கேசை’த் தாராளமாகப்பார்த்து தனக்குப்பிடித்த கண்ணாடியொன்றை மனதிற்குள் ‘செலக்ற்’ பண்ணிக் கொண்டார் சிவகுரு.
வீட்டிற்குப் போனதும் மனைவி தனது வாக்குத்தவறாமல் சீட்டுக் காசைக் கொண்டுவந்து கொடுத்ததும் தான் வைத்திருக்கும் பணத்தோடு அதையும் சேர்த்துக் கொண்டு, நாளைக்கு மட்டும்தான் இந்தக் கண்ணாடி என்று அதை ஒருதடவை கழற்றிப்பார்த்து விட்டு, பின்பும் அதை அலட்சியமாகப் போட்டுக் கொண்டார்.
5
விடிய நித்திரையால் எழும்பும் போது, இரவு வேண்டா வெறுப்பாகக் கழட்டி மேசைக்கு மேல் ‘போட்ட’ அவரது கண்ணாடியையும் எடுத்துக் கொண்டு வெளி விறாந்தைக்குக் கோப்பி குடிக்க வந்த சிவகுரு, தான் நூலால் கட்டிய கட்டுக் சாடையாகத் தளர்ந்திருத்ததைக் கண்டார். அதைச் சற்றும் பறுவாய்படுத்தாமல் சிறிது நேரம் இருந்தார்.
”இஞ்சேரும் கோப்பியைக் கொண்டாரும்” என்று மனைவியிடம் கேட்டதும் லெட்சுமி, வெகுபக்குவமாகக் கோப்பியை ஆற்றிக் கொண்டுவந்து கொடுத்தாள்.
சிவகுரு அரைவாசிக் கோப்பியைக் குடித்து முடித்து விட்டு நிமிர்ந்தார்.
“ஒரு சங்கதி எல்லே பாரும் நடந்து போச்சு”
“என்ன?”
“எங்கடை புஸ்பமெல்லே….”
“என்ன அவளுக்கு…”
“அவள் பெரிசாப்போனாள்…”
சிவகுருவுக்குத் தனது இரண்டாவது மகள் பெரிய பிள்ளையாகியதைக் கேட்டதும் நல்ல சந்தோசம்தான். ஆனால் மகளின் செலவிற்கு, கண்ணாடி வாங்க வைத்திருந்த பணத்தைத்தவிர வேறு பணம் இல்லை யென்று நினைக்கும் போது மனதில் சாடையான கீறல் விழத்தான் செய்தது. இருந்தும் அவர் அதைக் காட்டிக் கொள்ளாமல் அமைதியாகக் கேட்டார். “அதுகும் அப்பிடியா…?”
அவர் மிகுதிக் கோப்பியையும் குடித்து முடிக்கும்போது “நீங்கள் ஒருகால் எங்கடைசீனித்தம்பீட்டை விஷயத்தைச் சொல்லி புள்ளைக்குச் சீலை கொண்டுவரச் சொல்லிப்போட்டு வாங்கோ” என்று சொன்னாள் லெட்சுமி.
சீனித்தம்பியிடம் சேலைக்குச் சொல்ல வெளிக்கிட்ட சிவகுரு தான் அலட்சியமாக வைத்ததினால் தனது மூக்குக் கண்ணாடியின் நூற்கட்டுகள் தளர்ந்து போய் இருப்பதைக் கவனித்து விட்டு, “இனி எங்கை காசு கிடைக்கப் போகுது புதுக் கண்ணாடி வாங்க’, என்ற எண்ணிப் பெருமூச்சோடு வெளிவரவே ‘இதைக் கம்பியாலைதான் இறுக்கிக் கட்டுவம்’ என்று நினைத்துக் கொண்டு, கோப்பிக் கிண்ணம் வைக்கப் போன லெட்சுமிக்குக் குரல் கொடுக்கின்றார்.
“லெட்சுமீ……”
“என்னவும்…”
“மெல்லிய கம்பியிருந்தால் எடுத்துக் கொண்டு வாரும்…”
“மெல்லிய கம்பி என்னத்துக்கு இப்ப?”
சிவகுரு மெல்லிய கம்பியின் தேவையை வாயால் சொல்லி மனவருத்தத்தை அதிகரிக்காமல், தூரத்தில் நிற்கும் லெட்சுமிக்கு, தனது விட்டுப் போன மூக்குக் கண்ணாடியைத் தலைக்கு மேல் உயர்த்திப்பிடித்துக் காட்டுகிறார்.
– வசந்தம், ஆகஸ்ட் 1966.