முத்துச் சிப்பி
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 30, 2024
பார்வையிட்டோர்: 1,197
அத்தியாயம் 16-20 | அத்தியாயம் 2.1-2.10 | அத்தியாயம் 2.11-2.20
இரண்டாம் பாகம்
2.1. கதம்பச் சரம்
மாலை சுமார் நான்கு மணி இருக்கலாம். தோட்டக்காரன் கோபாலன் கூடை நிறைய ஜாதி அரும்புகளையும், கனகாம்பரத்தையும் பறித்து வந்து, கொல்லைத் தாழ்வாரத்தில் உட்கார்ந்த பவானியின் முன்பு வைத்தான். வாழை நாரைத் தொட்டித் தண்ணீரில் ஊற வைத்து எடுத்து வந்து கொடுத்தான். தூணுக்கு அப்பால் நின்று கொண்டு “அம்மா” என்று கூப்பிட்டுவிட்டுத் தலையைச் சொறிந்து கொண்டு நின்றான்.
பவானி அவனை ஏறிட்டுப் பார்த்தாள். பிறகு “என்னப்பா வேணும் உனக்கு?” என்று கேட்டாள்.
”சின்னக் குழந்தையைப் பள்ளிக்கூடத்திலேருந்து வீட்டுக்கு அழைத்து வந்தாச்சு செடிகளுக்கு தண்ணி ஊத்தியாச்சு. மாட்டுக்குத் தீனிவைச்சாச்சு” என்று தன்னுடைய வேலைகள் முடிந்து விட்டதை அறிவித்தான் கோபாலன் .
”சரி உனக்கு என்ன வேணும் என்று சொல்லேன்?” என்று கேட்டாள் பவானி.
கோபாலன் மறுபடியும் தலையைச் சொறிந்நான். ”வீட்டிலே அது சினிமா பார்க்கணும்னு ஒரு வாரமா கேட்டுக்கிட்டு இருக்குது. சாயங்கால ஆட்டத்துக்குப் போகலாம்னு…”
”இருக்கிறயாக்கும்! சரி எதுக்கும் மாடியிலே போய் அம்மாவைக் கேட்டுக்கோ போ…”
இவ்விதம் கூறிவிட்டு, வாழை நாரைக் கிழித்துப் பூ தொடுக்க ஆரம்பித்தாள் பவானி. மாடி அறையிலே அவள் மன்னி கோமதி கோபாலனுக்கு உத்தரவு போடுவது கேட்டது.
“சினிமாவுக்குப் போகிறது இருக்கட்டும், முதலிலே டாக்டர் வீட்டுக்குப் போய் ’இன்றைக்கு என்னாலே அங்கே வரமுடியவில்லை. அவரையே கொஞ்சம் வந்து பார்த்து விட்டுப் போகச் சொன்னாங்க’ என்று சொல்லி விட்டு வா” என்றாள் கோமதி.
அப்புறம் எதையோ நினைத்துக் கொண்டவளாக ”கோபாலா! பூப்பறித்து விட்டாயோ? அம்மாவைக் கேட்டு டாக்டர் தங்கச்சிக்கும் மகளுக்கும் கொஞ்சம் பூ வாங்கிப் போய்க் கொடு” என்றாள்.
கோபாலன் மாடியிலிருந்து கீழே வந்தான். “அம்மா, டாக்டர் வீட்டுக்குப் பூதரச் சொன்னாங்க” என்று சோர்ந்த முகத்துடன் பவானியிடமிருந்து பூச்சரத்தை வாங்கி எடுத்துக் கொண்டு டாக்டர் ஸ்ரீதரனின் வீட்டை நோக்கி நடந்தான்.
கோடம்பாக்கம் ரயில் நிலையத்துக்கு அருகில் செல்லும் நீளமான தெருவின் கோடியில் இருக்கும் பங்களா டாக்டர் ஸ்ரீதரனுடையது. வாயில் சுவரில் ஒரு புறத்தில் டாக்டர் ஸ்ரீதரன் எம். பி. பி. எஸ். என்கிற பெயரையும், மறுபுறத்தில் ஜெயஸ்ரீ’ என்கிற வீட்டுப் பெயரையும் காணலாம்.
டாக்டர் வெளியே போகவில்லை. வீட்டில் இருக்கிறார் என்பதற்கு அத்தாட்சியாக அவருடைய கார் ’போர்டிகோ’வில் நின்றிருந்தது. ஒன்றிரண்டு நோயாளிகளும் வெளிப்பக்கம் தாழ்வாரத்தில் நாற்காலிகளில் உட்கார்ந்திருந்தனர்.
கோபாலன் வராந்தாவில் இருந்த ஜன்னல் வழியாக உள்ளே எட்டிப் பார்த்தான். டாக்டர் ஸ்ரீதரன் நோயாளி ஒருவரைப் பரிசோதனை செய்து கொண்டிருப்பது தெரிந்தது. வாசல் பக்கத்திலிருந்து மாடிக்குச் செல்ல படிகள் இருந்தன. மாடியிலிருந்து மெல்லியதாக ரேடியோ இசை கேட்டுக் கொண்டிருக்கவே மாடிக்குப் போனான் கோபாலன்.
அங்கே இருந்த சோபா ஒன்றில் ஸ்ரீதரனின் தங்கை ராதாவும் ஸ்ரீதரனின் மகள் ஜெயஸ்ரீயும் உட்கார்ந்திருந்தார்கள். எதிரில் இருந்த மேஜை மீது கிடந்த பத்திரிகைகளை ஒவ்வொன்றாக எடுத்துப் புரட்டிக் கொண்டிருந்தாள் ராதா. கோபாலன் தயங்கிக் கொண்டே ஹாலுக்குள் நுழைந்தான்.
”அம்மா கொடுத்தாங்க” என்று சொல்லிவிட்டு, பூச்சரத்தை மேஜை மீது வைத்து விட்டு நின்றான் கோபாலன.
”அம்மாவுக்கு உடம்பு எப்படி இருக்கு கோபாலா? பூவெல்லாம் தொடுக்க ஆரம்பிச்-சுட்டாங்க போலிருக்கே!” என்று கேட்டுக்கொண்டே ராதா பூச்சரத்தை. எடுத்துக் கத்தரித்து ஜெயஸ்ரீக்கு வைத்துவிட்டுத் தானும் சூட்டிக் கொண்டாள்.
“அவங்க உடம்பு கொஞ்சம் சுமாருங்க. பூ அவங்க கட்டல்லீங்க. ஊரிலிருந்து ஐயாவோட தங்கச்சி வந்திருக்காங்களே, அந்த அம்மா கட்டினாங்க” என்றான் கோபாலன்.
”ஜோராய்க் கட்டி இருக்காங்க. கனகாம்பரம், அதன் பக்கத்தில் ஜாதி, அதன் பக்கத்தில் தவனம், அப்புறம் ரோஜா என்று அழகான கதம்பமாகக் கட்டியிருக்காங்க. நம்ப வீட்டிலேயும் ஏகப்பட்ட பூதான் பூக்கிறது. இந்த மாதிரி எனக்குக் கட்டத் தெரிய-வில்லையே!” என்று ராதா, அந்தக் கதம்பச் சரத்தைப் புகழ்ந்து பேசினாள். பிறகு ரேடியோவை மூடிவிட்டு “நீ எங்கே வந்தே?” என்று விசாரித்தாள்.
”ஐயாவைப் பார்க்க வந்தேம்மா. அம்மாவுக்கு இன்னிக்கு இங்கே வரமுடிய-வில்லையாம். ஊசி போட டாக்டர் ஐயாவையே அங்கே வரச் சொன்னாங்க…”
“சரி ஐயா உள்ளே வந்ததும் தகவலைச் சொல்லுகிறேன்” என்று கூறிவிட்டு ராதா மாடியிலிருந்து கீழே இறங்கிச் சென்றாள்.
வெளியிலே இருந்த ஒன்றிரண்டு நோயாளிகளுக்கு மருந்து கொடுத்து அனுப்பிவிட்டு ஸ்ரீதரன் உள்ளே வந்தார். கைகளை அலம்பிக் கொண்டு மேஜை அருகில் உட்கார்ந்தார் அவர்.
ஜெயஸ்ரீ மாடிப்படிகளில் குதித்து இறங்கி வந்தாள் ”அப்பா! அப்பா! உன்னோட நானும் சுமதி வீட்டுக்கு வரேன்” என்று தன் தகப்பனாரைப் பார்த்துக் கேட் டாள் அந்தப் பெண்.
ஸ்ரீதரன் மகளைத் தம் அருகில் இழுத்து மடியில் உட்கார்த்திக் கொண்டார். ஆசையுடன் அவள் முகத்தைப் பார்த்து, ‘ஏனம்மா! நான் ‘ பேஷண்டை’ப் பார்க்கப் போனால் நீயும் கூட வருவதாவது?” என்று கேட்டார் கொஞ்சலாக.
இதற்குள் சமையலறையிலிருந்து தட்டுக்களில் சிற்றுண்டியும் ’டீ’ யும் எடுத்துக் கொண்டு சமையற்காரர் சுவாமிநாதன் வெளியே வந்தார். மேஜை மீது வைத்து விட்டுக் குளிர்ந்த ஜலமும் கொண்டு வந்து வைத்தார். ”குழந்தை என்ன சொல்கிறாள்?” என்று கேட்டார்.
”உம் சரி, நீயே கேளு சுவாமியை! ஒரு டாக்டர் வைத்தியம் பண்ணுவதற்காக நோயாளிகள் வீட்டுக்குப் போனால் கூடவே தம் குழந்தையையும் அழைத்துப் போவாரா என்று கேட்டுப் பாரேன்” என்று குழந்தை யிடம் கூறிவிட்டுப் பெரிதாகச் சிரித்தார் ஸ்ரீதரன்.
“நான் எல்லோர் வீட்டுக்கும் வருகிறேன் என்று சொல்லவில்லையே அப்பா. அங்கே என் சிநேகிதி சுமதி இருக்கிறாள். அவளைப் பார்க்க வருகிறேன் என்றேன்” என்று அவள் தன் காதுகளில் இருந்த ஜிமிக்கி அசைந்தாடக் கூறி முடித்தாள்.
“என்ன சுவாமி! இவளுக்கு இந்த ஆனியோடு ஒன்பது வயசு பூர்த்தியாகிறது. ஆனால் எப்படிச் சாதுர்யமாகப் பேசுகிறாள் பார்த்தீரா? இவள் தொட்டிலில் உதைத்துக் கொண்டு பாலுக்காக அழுததை நீர் பார்த்திருக்கிறீர். எண்ணெய் தேய்த்துக் கொள்ள இந்த வீட்டைடச் சுற்றி உம்மைத் திணற அடித்தவள் இவள். வக்கணையாகப் பேசத் தெரிந்துவிட்ட….து இப்போது!” என்று ஸ்ரீதரனைப் பார்த்துப் பாதிச் சிரிப்பும் பாதிக் கேலியுமாகச் சொல்லி முடித்தார்.
சுவாமிநாதன் தம் வழுக்கைத் தலையைத் தடவிக் கொண்டார். பிறகு நிதானமாக. இன்னொரு பத்து வருஷங்களைத் தள்ளிப் போட்டுப் பாருங்கள். குழந்தைக்குக் கல்யாணம் ஆகிவிடும். இன்னொரு குழந்தையும் இந்த வீட்டிலே குதிபோடும். நீங்களும் தாத்தா ஆகிவிடுவீர்கள்! ஆனால் உங்கள் சம்சாரம்தான் ஒன்றையும் இருந்து பார்க்கக் கொடுத்து வைக்கவில்லை” என்றார். ஸ்ரீதரன் அப்படியே பிரமை பிடித்தவர் மாதிரி உட்கார்ந்திருந்தார்.
2.2. டாக்டர் ஸ்ரீதரன்
டாக்டர் ஸ்ரீதரனுக்கு இப்பொழுது வயது முப்பத்தி ஐந்து – சென்னை நகரின் பிரபல டாக்டர்களில் அவரும் ஒருவர். மாதம் ஆயிரம் ரூபாய்களுக்கு மேல் வரும்படி வந்தது. மனைவி இறந்து போய் எட்டு வருஷங்கள் ஆகின்றன. மறுமணம் செய்து கொள்ளும் எண்ணமா அதை தூண்டி நடத்தி வைப்பவர்களையோ ஒன்றையும் அடையக் கொடுத்து வைக்காதவர் ஸ்ரீதரன். உடன் பிறந்த தங்கையும், மகள் ஜெயஸ்ரீயும் தவிர, அவருடைய லட்சிய மெல்லாம் வைத்தியத் தொழிலில் இருந்தது. அவருடைய அன்பு மனைவி இறந்து போன பிறகு அந்த லட்சியம் வலுப்பெற்றது. அவளை அடியோடு மறந்து விட்டு வேறொருத்தியை மணந்து வாழ விரும்பவில்லை. மண வாழ்க்கையின் சுவையை அவர் நான்கே வருஷங்களில் அனுபவித்து முடித்து விட்டார்.
ஜெயஸ்ரீயின் தாய் பத்மாவுக்கு அழகும் குணமும் ஒருங்கே பொருந்தி இருந்தன. பிறந்த வீட்டிலிருந்து அவள் கொண்டுவந்த சீதனப் பொருள்களில் சுவாமி நாதனும் ஒருவர். பத்மாவுக்குத் துணையாக ஒத்தாசை புரியவந்த அந்தக்கிழவர் பத்மா இவ்வளவு சடுதியில் மறைந்து போவாள் என்று நினைக்கவேயில்லை. அவள் போன பிறகு ஒரு தினம் சுவாமிநாதன் தம் மூட்டையை எடுத்துக் கொண்டு ஸ்ரீதரனைப் பார்க்க வந்தார்.
“என்ன? எங்கே கிளம்புகிறீர்கள்?” என்று கேட்டார் ஸ்ரீதரன்.
“எனக்கு இங்கே என்ன பாக்கி இருக்கிறது? மகாலட்சுமி மாதிரி இருந்தவள் போய்விட்டாள்!” என்று கண்ணீர் பெருகக் கூறினார் சுவாமி.
ஸ்ரீதரன் நாற்காலியை விட்டு எழுந்து வந்தார். அவர் கைகளைப் பற்றிக் கொண்டு ”சுவாமி! உமக்கு இங்கேதான் இனிமேல் முக்கியமான வேலைகள் பாக்கி இருக்கின்றன. அவள் போய் விட்டாள். நீரும் போய் விட்டால் இந்தக் குழந்தையை யார் வளர்ப்பார்கள்?”
குழந்தை ஜெயஸ்ரீ விண் விண் என்று தொட்டிலை உதைத்துக் கொண்டு படுத்திருந்தாள். இன்னும் சிறிது நேரத்தில் பால் புகட்ட வேண்டும். தொட்டிலையும் அதில் கிடந்த குழந்தையையும் மாறி மாறிப் பார்த்தார் சுவாமி.
தாயின் பராமரிப்பிலே வளரவேண்டிய மகவு அந்தப் பாக்கியத்தை இழந்து வாடுகிறது. தாமும் அதை உதறித் தள்ளி விட்டுப் போய்விட்டால்? அந்த நினைவே தம்மைச் சுட்டுப் பொசுக்கிவிடும் என்று தோன்றியது சுவாமிக்கு. மூட்டையைக் கொண்டு போய் பரணில் வைத்தார். குழந்தை ஜெயஸ்ரீயும் ராதாவும் அவர் பராமரிப்பில் வளர்ந்து வருகிறவர்கள் தான். ஏன்? டாக்டர் ஸ்ரீதரனைக் கூட அவர்தான் வளர்த்து வருகிறார்.
”இன்றைக்குச் சனிக்கிழமை. வென்னீர் போட்டு வைக்கிறேன். டிஸ்பென்சரியிலிருந்து வந்ததும் எண்ணெய் தேய்த்துக் கொள்ளுங்கள்” என்று கண்டிப் பாக உத்தரவு போடுவார் சுவாமி. வீட்டுக்கு அவரைப் பெரியவராக ஆக்கியிருந்தார் டாக்டர்.
ஸ்ரீதரனுக்கு ஒரு பெரிய பொறுப்புக் காத்துக் கிடந்தது. இருபது வயதை அடைந்த அவர் தங்கை ராதாவைச் சரியான இடத்தில் கல்யாணம் பண்ணிக் கொடுத்து விட்டால், அவர் நெஞ்சிலே இருக்கும் பாதிப் பளு இறங்கிவிடும். ஜெயஸ்ரீயைப் பற்றி இப்போதைக்குக் கவலை இல்லை.
டாக்டரின் கவலை தோய்ந்த முகத்தைப் பார்த்த சுவாமி, ”டாக்டர்! யாருடைய வீட்டுக்கோ போக வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்தீர்களே நேரமாக-வில்லையா?” என்று கேட்டு அவருடைய சிந்தனைகளுக்கு ஒரு முடிவை ஏற்படுத்தினார்.
ஸ்ரீதரன் தம் கைப் பெட்டியை எடுத்துக் கொண்டு காரில் போய் உட்கார்ந்தார். மாமரத்தில் போடப்பட்டிருந்த ஊஞ்சலில் ஜெயஸ்ரீ மட்டும் உட்கார்ந்து ஆடி கொண்டிருந்தாள். குழந்தை தனியாக இருக்கிறான் என்று நினைத்துக் கொண்டு… ”ஜெயஸ்ரீ! நீயும் என்னோடு வருகிறாயா அம்மா? உன் அத்தை எங்கே?” என்று கேட்டார் காரின் கதவைத் திறந்து வைத்துக் கொண்டு.
ஜெயஸ்ரீ ஊஞ்சலை நிறுத்தினாள். பிறகு பலமாகக் கைகளை ஆட்டி. நான் வரல்லேப்பா. அத்தை கிளப்புக்குப் போயிருக்கா. நான் மாமாகிட்டே கதை கேட்கப் போறேன். தான் வரலை. நீ போகலாம்… டா……. டா……..” என்று கையை அசைத்துத் தகப்பனாருக்கு விடை கொடுத்தாள் அந்தப் பெண்!
ஸ்ரீதரன் தனக்குள்ளாகச் சிரித்துக் கொண்டார். குழந்தையின் மனம் எவ்வளவு நுட்பமானது. போகிற இடத்துக் கெல்லாம் நீ வர முடியுமா என்று தாம் சற்று முன் கேட்டதைப் புரிந்து கொண்டு, எவ்வளவு சமர்த்தாக நடந்து கொள்கிறாள் ஜெயஸ்ரீ என்று மனதுக்குள் வியப்பும் திகைப்பும் அடைந்தார்.
காரை வெளியில் நிறுத்தி விட்டு அவர் உள்ளே நுழைந்ததும் நாகராஜனின் மகள் சுமதி எதிரே ஓடி வந்தாள். கைகளைக் குவித்து அவருக்கு வணக்கம் செலுத்தி விட்டு , ”டாக்டர், ஜெயஸ்ரீ வரவில்லையா?” என்று கேட்டாள்.
”முதலில் வருகிறேன் என்று தான் சொன்னாள் அம்மா. பிறகு வரவில்லை என்று சொல்லி விட்டாள். எனக்கு ஒன்றும் புரியவில்லை போ. காரணம் என்னவாக இருக்கும்? நீ சொல் பார்க்கலாம்………? ரைட்… அம்மா எங்கே? மாடியில் இருக்கிறாளா?” என்று கேட்டுக் கொண்டே படிகளில் ஏறி மாடிக்குச் சென்றார்
ஸ்ரீ தரன்.
சுமதி குதித்துக் கொண்டு உள்ளே ஓடினாள். “அத்தை! அத்தை! டாக்டர் மாமா வந்திருக்கிறார். கை அலம்ப சோப்பும், வென்னீரும் வேண்டுமாம்” என்று கூவிக் கொண்டே சமையல் அறைக்குள் சென்றாள் அவள்.
பவானி ஒரு பீங்கான் பாத்திரத்தில் வென்னீரை ஊற்றி வைத்தாள். சோப்பை நறுக்கி எடுத்துக் கொண்டே, “சுமதி! உன்னாலே இவற்றை எடுத்துப் போய் மாடி:பில் கொடுக்க முடியுமா?” என்று கேட்டாள். சிறிது நின்று யோசித்து விட்டு, ”அந்த கோபாலன் பொருந்தி வேலை செய்கிறதில்லை. பெண்டாட்டியை சினிமாவுக்கு அழைத்துப் போகிற ஜோரில் பாதி வேலைகளைப் போட்டு விட்டுப் போய் விட்டான். வென்னீர் சுடப் போகிறது. நானே எடுத்து வருகிறேன்” என்று சொல்லிக் கொண்டு மாடிக்குப் போனாள் பவானி.
கோமதியின் உடம்பு பவானி வந்த பிறகு எவ்வளவோ தேறியிருந்தது. வெள்ளை வெளேர் என்று வெளுத்துப் போயிருந்த கன்னங்களில் செம்மை படர ஆரம்பித்திருந்தது. நாலைந்து பவுண்ட் நிறை கூட ஏறி இருப்பதாக ஸ்ரீதரன் கூறினார். கை – நாடியைப் பரிசோதித்து விட்டு அவர், ”பலவீனம் ரொம்பவும் குறைந்து விட்டது. இன்னும் மூன்று ஊசிகள் போட்டால் போதும். பிறகு தேவையில்லை. மாடியிலேயே இப்படி அடைந்து கிடக்காதீர்கள், காற்றோட் டமாக வெளியிலே உலாவ வேண்டும். சிறுசிறு வேலைகள் செய்தாலும் குற்றமில்லை. இப்படிக் காற்றாட வெளியில் போய் விட்டு வருகிறது தானே! நாகராஜன் எங்கே? ஊரில் இல்லையா?” என்று கேட்டார் ஸ்ரீதரன். இப்படிப் பேசிக் கொண்டே ஊசியையும் ஏற்றினார். பச்சைக் கவனித்துக் கொண்டிருந்த கோமதிக்குக் கூட அவர் எப்பொழுது குத்தினார் என்பது புரியாமல் போய் விட்டது.
கை அலம்ப வென்னீர் கொண்டு வந்த பவானி அதை அங்கிருந்த மேஜை மீது வைத்து விட்டு ஒதுங்கி நின்றாள்.
பிறகு மெதுவான குரலில். ”இந்த வாரத்தில் இன்னொரு தரம் தலைக்கு ஜலம் விடலாமா? சாப்பாடு பிடிக்க வேயில்லையே. சரியாகவே மன்னி சாப்பிடுகிற தில்லை ” என்று கூறினாள்.
ஸ்ரீதரன் கைகளைத் துண்டினால் துடைத்துக் கொண்டே பவானியை ஏறிட்டுப் பார்த்தார்.
’நாகராஜனுக்கு இப்படி ஒரு விதவைத் தங்கையா? வியாபாரத்தில் பணம் ஒன்றையே குறியாக வைத்து வாழ்க்கையில் மனைவி குழந்தைகளைக் கூடக் கவனிக்க அவகாசமில்லாமல் திரிபவனுக்கு இப்படி ஒரு உடன் பிறந்தவளா?’ என்றுதான் ஆச்சரியம் அடைந்தார் ஸ்ரீதரன்.
“ஓ! தாராளமாய் ஸ்நானம் செய்யலாம். உடம்புக்கு ஒன்றுமில்லை. கொஞ்சம் ரத்தக் குறைவு. அதுவும் நாளடைவில் சரியாகி விடும்” என்று கூறிவிட்டு “நான் வருகிறேன் அம்மா” என்று சொல்லிக் கொண்டே மாடிப்படிகளில் இறங்கிச் சென்று காரில் உட்கார்ந்து காரைச் செலுத்த ஆரம்பித்தார்.
மாடி ‘பால்கனி’யில் கை அலம்பிய நீரைக் கீழே மாற்றுவதற்காக வந்த பவானியின் பார்வை, ஸ்ரீதரனின் பார்வையைச் சந்தித்து மீண்டது.
2.3. உடலும் உள்ளமும்
ஒன்றுமில்லாததற்கெல்லாம் பிரமாதப்படுத்துவது சிலருடைய பிறவிக்குணம். நன்றாக ஆரோக்கியமாகவே இருப்பார்கள்; பாலும் பழமும் வெண்ணெயும் ரொட்டியும் சாப்பிடுவார்கள். கன்னத்திலேயும், கண்களிலேயும் ஆரோக்கியத்தின் செம்மை படர்ந்திருக் கும். மகிழ்ச்சி துள்ள வேண்டிய முகத்தைச் சோர்வாக வைத்துக் கொண்டு எனக்கு உடம்பு சரியில்லை, வயிற்றில் வலி. சாப்பாடு பிடிக்கவில்லை. இரண்டு வாய் சாப்பிட்டால் வயிறு நிறைந்து விடுகிறது” என்று சொல்லிக்கொண்டே இருப்பார்கள்.
”போன பிரசவத்தின்போது உடம்பு கெட்டுப் போய் விட்டது. திரும்பவும் தேறவில்லை. குழந்தைக்குக் கூட நான் பால் கொடுப்பதில்லை. ‘உடம்புக்கு ஆகாது . பாலை நிறுத்தி விடு’ என்று டாக்டர் சொல்லி விட்டார். புட்டிப்பால்தான் கொடுக்கிறேன்” என்று பெருமைப்பட்டுக் கொள்ளும் தாய்மார்கள் அநேகம் பேர் உண்டு. இவர்களைப் பார்த்தால் வியாதியஸ்தர் கள் மாதிரி இருக்க மாட்டார்கள். தாங்கள் பெற்ற மகவுக்குப் பாலூட்டினால் தங்களுடைய அழகு குறைந்து போகும் என்கிற ஒரு வித அசட்டு மனப்பான்மை உடையவர்கள் இவர்கள்.
டாக்டர் ஸ்ரீதரன் சென்ற பிறகு, கோமதி ’உஸ்’ என்று கூறிக் கொண்டே படுக்கையில் சாய்ந்தாள். “அப்பா அவர் போட்ட ஊசி எப்படி வலிக்கிறது!” என்று சொல்லிக் கொண்டு கைகளைத் தடவிக் கொண்டாள்.
பால்கனியை விட்டு வந்த பவானி தன்னுடைய மன்னி படுக்கையில் ஆயாசமாகச் சாய்ந்து இருப்பதைப் பார்த்து அன்புடன் அவள் அருகில் வந்து, ”மன்னீ! ஏதாவது சூடாகச் சாப்பிடுகிறாயா? புதுப் பால் கறந்து விட்டான். காய்ச்சி வைத்திருக்கிறேன். ஓவல்டின் போட்டுக் கொண்டு வரட்டுமா?” என்று கேட்டாள்.
”அதெல்லாம் ஒன்றும் வேண்டாம் பவானி எனக்குப் பசியே இல்லை” என்றாள் கோமதி.
பவானி சிறிது தயங்கிக் கொண்டே நின்றாள். பிறகு சற்றுப் பயத்துடன். “கீழே இறங்கி வாயேன் மன்னி. இன்றைக்கு வெள்ளிக்கிழமை, கைகால்களை அலம்பிக் கொண்டு சுவாமி படத்துக்கு விளக்கேற்றி நமஸ்காரம் செய்யேன். சற்றுக் காற்றாட ஊஞ்சலில் உட்காரேன். இப்படி நாள் கணக்கில் இந்த அறைக்குள்ளேயே அடைந்து கிடந்தால் மனசு தான் என்னத்திற்கு ஆகும்?” என்று அழைத்தாள்.
கோமதிக்கு முதலில் அலுப்பாகவும் வேண்டா வெறுப்பாகவும் இருந்தது. பவானி சொல்லுகிறாளே என்று நினைத்துக் கீழே இறங்கி வந்தாள்.
கூடத்தில் ரேடியோ மேஜை மீது முன்னைப் போல் பத்திரிகைகளும் கிழிந்த துணிகளுமாக இராமல் துப்புரவாக வைக்கப்பட்டிருந்தது. அதற்கடுத்த பூஜைக் கூடத்திலிருந்து மலர்களின் நறுமணம் ’கம்’ மென்று வீசியது. பலவித மலர்களால் தொடுக்கப்பட்ட மாலைகளைப் படங்களுக்குச் சாத்தி இருந்தாள்.
அந்த வீட்டில் சமையலுக்கு ஆள் கிடையாது. மாதத்தில் அநேக நாட்கள் ஹோட்டலிலிருந்து எடுப்புச் சாப்பாடு வந்து விடும். அதைக் குழந்தைக்குப் போட்டுத் தானும் சாப்பிடவே கோமதிக்கு அலுப்பாக இருக்கும். மின்சார அடுப்பில் காலையில் பாலைக்காய்ச்சி, தானே காட்பி போட்டுக் கொண்டு விடுவான் நாகராஜன். மனைவி எழுந்து போட்டுக் கொடுக்க வேண்டும் என்று காத்திருக்க மாட்டான். அவள் படுக்கையை விட்டு எழுந்து வருவதற்குக் காலை சுமார் ஏழு மணி ஆகும். பால்காரன் பாலைக் கறந்து வைத்து விட்டுப் போய் விடுவான். வேலைக்காரி சுமதிக்குத் தலைவாரிப் பின்னி குளிப்பாட்டி உடை அணிவித்து விடுவாள். சில நாட் களி வேலைக்காரி கொடுக்கும் ஆகாரத்தைச் சாப்பிட்டு சுமதி ‘கான்வெண்டு’க்குப் போய் விடுவாள். தலை வாரிப் பூச்சூட்டி, மை தீட்டிப் பொட்டிட்டு மகிழ வேண்டிய தாய் உள்ளம் உறங்கிக் கிடந்தால், அந்தக் குழந்தையின் வளர்ச்சியைப் பற்றி என்ன சொல்ல முடியும்?
கோமதி சுபாவத்தில் கொஞ்சம் நோயாளி. ‘நோய் பீடிப்பது உடலையே தவிர உள்ளத்தை அல்ல’ என்று அதை உதறித் தள்ளும் சுபாவத்தைப் படைத்தவள் அல்ல, தலையை வலிக்கிறதா? அது சாதாரணத் தலைவலி என்று இருந்து விடமாட்டாள். நரம்புத் தளர்ச்சியினால் வந்த தலைவலியா ‘மெனிஞ்ஜைடிஸ்’ என்கிற பயங்கர வியாதியின் ஆரம்பமா என்றெல்லாம் மண்டையைப் பிளந்து கொள்வாள். வீட்டில் ’போன்’ இருந்தது. தானாகவே ’போன்’ செய்வாள் டாக்டருக்கு.
”தலைவலிதானே? சூடாகக் காப்பி சாப்பிடுங்கள். குளிர்ந்த காற்றில் உலாவுங்கள், சரியாகி விடும்” என்று டாக்டர் கூறினால், அதைச் சரியென்று ஆமோதித்து விடமாட்டாள் கோமதி.
”நரம்புத் தளர்ச்சியினால் ஏற்பட்ட தலைவலி யானால் அதற்குக் காப்பி நல்லதா? சீதளத்தினால் வந்த தலைவலியானால் குளிர்ந்த காற்று உடம்புக்கு ஆகுமா?” என்று கேட்பாள் டாக்டரை.
தன்னுடைய ஆரோக்கியத்தில் இப்படித் திடமான நம்பிக்கையை ஏற்படுத்திக் கொள்ளாமல் அரைகுறை யாக எதையாவது படித்தும் கேட்டும் அவள் தினசரி நோயாளியாக மாறிவிட்டிருந்தாள்.
மனைவி ஒரு வியாதிக்காரி. ஆண்களின் மனம் ரீங் காரமிடும் வண்டைப் போன்றது. மலர்ந்த மலர்களிலே மதுவும் அழகும் இருக்கின்றனவா என்று சோதனை போடும் தன்மையை உடையது வண்டு.
வாயிற்படி ஏறும் போதே சிரித்துக் கொண்டு வரவேற்கும் மனைவி சதா கட்டிலில் படுத்துக்கொண்டு முனகியவாறு இருந்தால் எந்தக் கணவன்தான் அலுத்துக் கொள்ள மாட்டான்?
பணத்தை மதியாமல் நாகராஜன் புட்டி புட்டியாக மருந்துகள் வாங்கினான். அவள் வாய் அசைப்பதற்கு முன் பணிபுரிய அந்த வீட்டில் மூன்று வேலைக்காரர்கள் இருந்தார்கள். வீட்டில் இருப்பவர்கள் மூன்று பேர்! வேலையாட்கள் மூன்று பேர்!
கோமதியின் உடல் நிலையை விட மனோநிலையைச் சரியாகப் புரிந்து கொண்டவர் டாக்டர் ஸ்ரீதரன். உடலில் ஏற்பட்டிருக்கும் வியாதிகளுக்கு வைத்தியர்களால் சிகிச்சை செய்ய முடியும். உள்ளத்தில் ஏற்பட்டிருக்கும் நோய்க்கு அவர்களால் என்ன செய்ய முடியும்?
”கோமதி அம்மா உங்களை வரச் சொன்னாங்க” என்று டாக்டர் வீட்டுக்கு, நாகராஜன் வீட்டைச் சேர்ந்த வேலைக்காரர்கள் யார் வந்து அழைத்தாலும் டாக்டர் ஸ்ரீதரன் பதறிக் கொண்டு போக மாட்டார்.
“அம்மாவுக்கு என்ன உடம்பு?” என்று கேட்பார்.
“ஒண்ணுமில்லீங்க, ஏதோ உ.டம்பு சரியில்லையாம். வரச் சொன்னாங்க” என்பான் வேலையாள்.
“பேசிக் கொண்டு நடமாடிக் கொண்டு தானே இருக்காங்க?”
”ஆமாங்க, இன்னிக்கு எங்க சம்பளம்கூட அம்மா தான் குடுத்தாங்க”
ஸ்ரீதரன் மனதுக்குள் சிரித்துக் கொண்டு, ”வரேன் என்று சொல்லப்பா” என்று அவனை அனுப்பி விடுவார். அன்று போக மாட்டார். நாலு தினங்களுக்கு அப்புறம் தான் போய்ப் பார்த்து வருவார்.
இப்படித்தான் ஒரு மாசத்துக்கு முன்பு இரவு இரண்டு மணிக்கு நாகராஜன் டாக்டரைக் கூப்பிட்டான் போனில்.
”ரொம்பவும் ஆபத்தாக இருக்கிறது. மயக்கம் தான். கருச்சிதைவு என்று நினைக்கிறேன். என்ன செய்வது?” என்று கேட்டான்.
“கருச்சிதைவா? நான் எதிர்பார்த்தேன் மிஸ்டர் நாகராஜன் உங்கள் மனைவிக்கு உடல் உழைப்பு போதாது. கர்ப்ப ஸ்திரீகள் உட்கார்ந்த இடத்தை விட்டு நகராமல் இருப்பது நல்லதில்லை. அதே சமயத்தில் அதிகமாக உடம்பை அலட்டிக் கொள்ளவும் கூடாது இப்பொழுது என்ன செய்வது? ஆசுபத்திரிக்குப் போன் பண்ணுகிறேன். ’அட்மிட்’ செய்து விடுங்கள்” என்றார்.
அதற்கப்புறம் தான் வீடு இருக்கும் அவல நிலையைப் பார்த்து நாகராஜன் பவானியை வரவழைத்தான். அவள் வந்த பிறகு வீட்டிற்கு ஒரு அழகு. சோபை எல்லாமே வந்து விட்டது. இல்லாள் அகத்திருக்க இல்லாதது ஒன்றில்லை’ என்பார்கள். அந்த இல்லாளும் அமைய வேண்டிய முறையில் அமைந்தால் தான் உண்டு. இல்லாவிட்டால் அந்த வீட்டில் ஆசை. அன்பு, காதல். இன்பம் ஒன்றுமே இல்லைதான்!
தன்னுடைய மன்னி இப்படி ஏன் இருக்கிறாள் என்று வியந்தாள் பவானி.
கொல்லையில் சென்று கால் அலம்பிக் கொண்டு வந்த கோமதி கூடத்து சோபாவில் சென்று உட்கார்ந்தார். இதற்குள் பவானி ஓவல்டின் கரைத்து எடுத்து வந்தாள். அதைச் சாப்பிடும் வரை பவானி கோமதியுடன் ஒன்றுமே பேசவில்லை. அவள் சாப்பிட்டு முடித்ததும் அவள் அருகில் உட்கார்ந்து “ஏன் மன்னி அண்ணா மாசத்தில் வீட்டில் எத்தனை நாளைக்கு இருப்பான்? நான் வந்ததிலிருந்து சேர்ந்தாற்போல் அவனை நாலு நாட்கள் கூட வீட்டில் பார்க்க முடியவில்லையே?” என்று கேட்டாள்.
கோமதி பவானியை ஒரு தினுசாகப் பார்த்தாள். பிறகு வறண்ட குரலில், ”ஏன் அப்படிக் கேட்கிறாய் பவானி? மாசத்துக்கு நாலைந்து நாட்களுக்கு மேல் உன் அண்ணா வீட்டில் இருப்பதில்லை. அப்படி இருந்தாலும் அந்த சமயங்களில் அவருக்குத் தன் ‘ பிஸினஸ்’ அலுவலா கவே பிறருடன் ‘ போனில் பேசுவதற்குச் சரியாக இருக்கும்” என்றாள்.
மனதில் இருந்த ஏக்கமும் வருத்தமும் அவள் குரலில் பிரதிபலித்தன. அழகுள்ள மனைவி, ஆசைக் குழந்தை, சுகவாழ்வு எதையும் கவனிக்காமல் ’வேலை வேலை’ என்று எதையோ லட்சியமாக வைத்துக் கொண்டு நாகராஜன் நடந்து கொண்டான்.
இவையெல்லாமே வேடிக்கையாகவும் விசித்திர மாகவும் இருந்தன பவானிக்கு.
2.4. கிழவரின் கண்ணீர்
மனித வாழ்க்கையில் நடப்பவை யாவுமே வேடிக்கை என்றோ விசித்திர மென்றோ தள்ளிவிட முடியாது. ’கஷ்டங்களைச் சிரிப்பினாலேயே வெல்ல வேண்டும்’ என்று வாயளவில் சொல்லி விடலாம். செய்கையிலே காண்பது அரிது. சிற்சில விஷயங்களை மிகைப் படுத்தாமல் சிலவற்றை வேண்டுமானால் ஒதுக்கி வாழ முயற்சிக்கலாம். ஆனால், அதி முக்கியமான விஷயங்களைச் செய்யமுன்பு ஆலோசித்துதான் ஆகவேண்டும்.
டாக்டர் ஸ்ரீதரன் சிறந்த அறிவாளி. வைத்திய மேதை. ஒரு டாக்டரின் வாழ்க்கையில் அலகாசச்தைக் காண்பது அரிது. அதுவும் பொறுப்பு உள்ள, திறமையுள்ள டாக்டருக்கு ஓய்வு கிடைக்கிறதா என்பது சந்தேகம், ஸ்ரீதரனின் மருத்துவ சாலையில், காலையிலும் மாலையிலும் கூடும் கூட்டத்தைப் பார்த்தே இதை அறிந்து கொள்ளலாம். ஒட்டி உலர்ந்த உடம்புடன் வரும் தாய் மார்கள், கன்னங்கள் ஒட்டி எலும்பு தெரியும்படி ஆடவர்கள், நோஞ்சான் குழந்தைகள், அளவுக்கு மீறிய சுகவாசத்தால் பருத்த உடல் கொண்ட பெண்கள், ஆண்கள். இப்படி ஏதோ ஒரு நோயைச் சொல்லிக் கொண்டு கூட்டம் நெரிந்தது.
அந்த நோயாளிகளில் பாதிக்கு மேல் குழந்தைகள் இருந்தார்கள். மாம்பழக் கதுப்புப் போன்ற கன்னங்களையும் நீலோற்பல விழிகளையும், முகத்திலே துள்ளி விளையாடும் சிரிப்பையும் அடைந்திருக்க வேண்டிய அவர்கள் நோய்களுக்கு இரையாகிவிடும் கொடுமையைத் தான் டாக்டர் ஸ்ரீதரனால் சகிக்க முடிய வில்லை.
இப்படி அல்லும் பகலும் பிறர் நலனைக் கருத்தில் கொண்டு வாழும் ஸ்ரீதரனால் தன்னுடைய குடும்பத்தில் அதிக அக்கறை செலுத்த முடியவில்லை. குடும்பப் பொறுப்பு பூராவும் சுவாமிநாதனே ஏற்று நடத்தி வந்தார். மாதாந்தரம் வாங்க வேண்டிய சாமான்கள் இதர செலவுகள் யாவும் அவருடைய மேற்பார்வையில் நடந்து வந்தன. குழந்தை ஜெயஸ்ரீயை விட அவர் அன்பு செலுத்தியது ராதாவிடம் தான். தாயையும் தந்தையையும் இழந்து சகோதரன் ஒருவனையே ஆதாரமாகக் கொண்டு வாழும் அந்தப் பெண்ணிடம் அவருக்கு அலாதி அன்பு ஏற்பட்டது. அத்துடன் ராதா வயது வந்த பெண். அவளைத் தக்கபடி காப்பாற்றித் தகுந்த இடத்தில் கல்யாணம் பண்ணித் தரவேண்டும் என்கிற கவலையும் பட்டு வந்தார் சுவாமிநாதன். அவர் வாழக்கையை விளையாட்டாகவும் விசித்திரமாகவும் கருதுபவர் அல்ல. எதையும் தீர ஆலோசித்தே செய்ய வேண்டும் என்கிற கொள்கையை உடையவர்.
அன்று மாலை ஆறு மணிக்கு வெளியே சென்ற ராதா இரவு ஒன்பது மணி வரையில் வீடு திரும்பவில்லை. வாசல் ’கேட்’டுக்கும், உள்ளுக்குமாக அலைந்து கொண்டிருந்தார் சுவாமிநாதன். ஸ்ரீதரன் யாரோ நோயாளியைப் பார்ப்பதற்காக வெளியே சென்றிருந்தார். ஜெயஸ்ரீ படுத்துத் தூங்கி விட்டாள். ’இந்த இடத்துக்குப் போகிறேன் என்று ஒரு பெண் சொல்லி விட்டுப் போகாதோ’ என்று சுவாமிநாதன் தமக்குள் பல முறைகள் சொல்லிக் கொண்டார். ’வயசு வந்த பெண். என்ன தான் பி.ஏ. படித்திருந்தாலும், இவ்வளவு துணிச் சல் ஆகாது’ என்று தான் அவருக்குத் தோன்றியது.
தெருவுக்கும் உள்ளுக்குமாக அலைந்து அலைந்து கால்கள் சோர்ந்து போய் உள்ளே வந்து உட்கார்ந்தார் சுவாமிநாதன். வெளியே சென்றிருந்த ஸ்ரீதரனும் வந்து விட்டார். காரைக் கொண்டு போய் ஷெட்டில் விட்டு விட்டு ஹாலுக்குள் நுழைந்தபோது பெஞ்சில் கவலை யுடன் உட்கார்ந்திருந்த சுவாமி நாதனைப் பார்த்தார்.
“என்ன சுவாமி, எனக்காகவா காத்துக் கொண் டிருக்கிறீர்கள்? சாயங்காலம் சாப்பிட்ட சிற்றுண்டியே வயிறு நிறைந்திருக்கிறது எனக்குப் பசியே இல்லை. ஒரு டம்ளர் பால் மட்டும் கொடுங்கள் போதும். ஜெயஸ்ரீயும், ராதாவும் தூங்கிப் போய்விட்டார்களா?” என்று கேட்டார்.
”ராதாவா? அவள் சாயங்காலம் வெளியே போனவள்தான். இன்னும் வரவே இல்லையே? எங்கே போனாள் என்று உங்களுக்கு தெரியுமா?” என்று கவலையுடன் விசாரித்தார் சுவாமிநாதன்.
“எனக்குத் தெரியாதே!” என்றார் ஸ்ரீதரன். “எங்கே போயிருப்பாள்? யாராவது சினேகிதியின் வீட்டுக்குப் போயிருக்கலாம். வந்து விடுவாள்” என்று சொல்லிக் கொண்டே மாடிக்குச் சென்றார் ஸ்ரீதரன்.
சுமார் பத்து மணிக்கு ராதா வீடு வந்து சேர்ந்தாள். சோர்ந்த முகத்துடனும் கவலையுடனும் தனக்காக வழி பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருக்கும் சுவாமி நாதன் எதிரில் வந்து நின்றாள். ஏதோ டிராமாவிற்கோ நடனத்துக்கோ அவள் வேஷம் போட்டுக் கொண்டு வந்திருந்த மாதிரி இருந்தது அவள் அலங்காரம். நெற்றியில் வகிட்டுக்கருகில் கட்டியிருந்த பதக்கமும், காதுகளில் ஆடும் ஜிமிக்கியும், காதளவு மை தீட்டிய கண்களும் அவளை ஒரு கோபிகையாகத் தோன்றச் செய்தன.
“என்னம்மா குழந்தை! என்ன வேஷம் இது?” என்றார் சுவாமி நாதன்.
”வேஷம் தான்! நாங்கள் எல்லோரும் டிராமா போடுகிறோம். அதற்காக நானும் வேஷம் போட்டுக் கொண்டிருக்கிறேன். உங்களிடம் காண்பிக்க வேண்டும் என்று தான் வேஷத்தைக் கலைக்காமல் என் சினேகிதியின் காரில் வந்தேன். இன்றைக்கு ‘ரிகர்ஸல்’ ஆயிற்று. இன்னும் நாலு நாளில் டிராமா இருக்கிறது. நீங்களும் வருகிறீர்களா?” என்று கேட்டாள் ராதா.
சுவாமி நாதனுக்கு அவளை என்ன சொல்வது என்றே புரியவில்லை. சிறிது நேரம் பேசாமல் அவளையே பார்த்துக் கொண்டு நின்றார். பிறகு நிதானமா “அதெல்லாம் சரிதான். இப்படி நீ இரவு பத்து மணி வரைக்கும் வெளியே சுற்றி விட்டு வரலாமா? சாப்பிட வேண்டாமா? வேளையில் சாப்பிட வில்லை யென்றால் உடம்பு என்னத்துக்கு ஆகும்?” என்று தம் கருத்தை நாசூக்காக அறிவித்தார் சுவாமிநாதன்.
கீழே பேச்சுக்குரல் கேட்கவே மாடியிலிருந்து ஸ்ரீதரன் கீழே இறங்கிவந்தார். கூடத்தில் ஒளிரும் மெர்க் குரி விளக்கின் ஒளியில் அழகுப்பிம்பமாக நிற்கும் ராதையைப் பார்த்தார் ஸ்ரீதரன். தன் சகோதரி இப்படி ஒப் பற்ற எழிலுடன் இருப்பது அவருக்கு மகிழ்ச்சியையும் பெருமையையும் ஏற்படுத்தியது.
“என்ன சொல்கிறார் சுவாமி? நேரம் கழித்து வீடு திரும்பலாமா என்று கேட்கிறா-ராக்கும்?” என்று சிரித்துக் கொண்டே கூறியவாறு ஸ்ரீதரன் தங்கையின் அருகில் வந்து நின்றார்.
“அதெல்லாம் ஒன்றும் இல்லை. வேளையில் சாப்பிடா விட்டால் உடம்புக்கு ஆகாதாம். அதைப் பற்றித் தான் கவலைப்படுகிறார் அண்ணா” என்றாள் ராதா சிரித்துக் கொண்டே.
சுவாமி நாதன் ஒரு பாத்திரத்தில் தயிர் சாதத்தைப் பிசைந்து கொண்டு எலுமிச்சை ஊறுகாயும் கொண்டு வந்தார். ராதையை அங்கிருந்த சோபாவில் உட்காரச் சொல்லி, ஒவ்வொரு பிடியாகச் சாதத்தை எடுத்து அவள் கையில் வைத்தார்.
இந்தக் காட்சியைப் பார்த்துக் கொண்டு நின்ற ஸ்ரீதரன், “என்னம்மா ராதா! உனக்குக் கல்யாணமாகி விட்டால் இந்தக் கிழவர் இங்கே இருக்க மாட்டார். உன்னுடன் வந்து விடுவார் ! அப்புறம் என்பாடும் ஜெயஸ்ரீயின் பாடும்தான் திண்டாட்டமாகி விடும்” என்றார் வேடிக்கையாக.
தலையைக் குனிந்து கொண்டிருந்த சுவாமிநாதன் திமிர்ந்து ஸ்ரீதரனைப் பார்த்தார்.
“நான் அவளுடன் புக்ககம் போகிறது இருக்கட்டும். முதலில் இந்த வருஷம் ராதாவுக்குக் கல்யாணம் பண்ணி விட வேண்டும்; நல்ல இடமாக வந்தால் பாருங்கள்” என்றார்.
கலகலவென்று சிரித்துக் கொண்டே ராதா உட் கார்ந்திருந்த இடத்தை விட்டு எழுந்தாள். அவள் இப்படி. ஒன்றும் அறியாத பெண்ணாக வெகுளியாக இருப்பதை நினைத்து சுவாமிநாதன் வருந்தினார், ஒரு சொட்டுக் கண்ணீர் திரண்டு அவர் கண்களின் முனையில் தேங்கி நின்றது.
2.5. குரங்கு மூஞ்சி பாலு….!
ஒருநாள் பிற்பகல் மூன்று மணிக்கு டாக்டர் ஸ்ரீதரனும், ராதாவும் நாகராஜனின் வீட்டிற்கு வந்தார்கள், தெருப் பக்கத்து அறையில் மேஜைமீது கட்டுக் காகிதங்களை வைத்துக் கொண்டு நாகராஜன் உட்கார்ந்திருந் தான் . கூடத்து சோபாவில் சாய்ந்து கொண்டு கோமதி புத்தகம் படித்துக் கொண்டிருந்தாள். பவானி உள்ளே வேலையாக இருந்தாள். வீடு நிசப்தமாக ‘வெறிச்’ சென்று கிடந்தது.
டாக்டரும், ராதாவும் வருவதைக் கவனித்த கோமதி வாரிச் சுருட்டிக் கொண்டு எழுந்தாள். வாயிற்படி அரு கில் வந்து நின்று சிரித்துக் கொண்டே “வா ராதா! என்னவோ நீங்கள் எல்லாம் டிராமா போடுகிறீர்களாமே? சுமதி சொன்னாள். அவள் தான் அதில் கிருஷ்ணனாம். நீ மீராவாக வருகிறாயாம், எனக்கு இலவசமாக டிக்கெட் உண்டோ இல்லையோ?” என்று கேட்டாள்.
கையிலிருந்த அழகுப் பையைச் சுழட்டிக் கொடே ராதா புன்முறுவலுடன் உள்ளே வந்தாள். இதற்குள் அறையைவிட்டு உவளியே வந்த நாகராஜனைப் பார்த்து வணக்கம் செலுத்திவிட்டுச் சோபாவில் அமர்ந்தாள் ராதா.
”என்ன டாக்டர்! இப்படி விச்ராந்தியாக உங்களைப் பார்ப்பதே அபூர்வமாயிற்றே! சௌக்கியம் தானே?” என்று கேட்டான் நாகராஜன்.
”சௌக்கியந்தான் மிஸ்டர் நாகராஜன். பள்ளிக்கூட டிராமாவுக்கு டிக்கட்டுகள் விற்க வேண்டுமாம். என்னையும் கூட வரும்படி, நச்சரித்து விட்டாள் ராதா. இனிமேல் உங்கள் பாடு அவள் பாடு. நீங்கள் பணம் கொடுத்தே டிக்கட்டுகள் வாங்குவீர்களோ, அல்லது படங்கள் மனைவி கூறிய மாதிரி அவளே இலவசமாக டிக்கட்டுகள் கொடுப்பாளோ எனக்குத் தெரியாது” என்று கூறிவிட்டு ஸ்ரீதரன் தமக்கே உரித்தான முறையில் கட கட வென்று சிரித்தார்.
யாரோ நண்பர்கள் வந்திருக்கிறார்கள் என்று தெரிந்து பவானி தட்டுக்களில் பழங்களும், காப்பியும் கொண்டு வந்து கூடத்தில் இருந்த மேஜை மீது வைத்தாள். பிறகு டாக்டரைப் பார்த்துப் புன்முறுவலுடன் வணக்கம் செலுத்திவிட்டு, அருகிலிருந்த சோபாவில் உட்கார்ந்தாள்.
தன் அருகில் உட்கார்ந்திருந்த ராதாவைக் காண்பித்துக் கோமதி பவானிக்கு அவளை அறிமுகம் செய்து வைத்தாள்.
நாகராஜன் தனக்கு அவசர வேலை இருப்பதாகச் சொல்லிக் கொண்டு தன் அறைக்குச் சென்று விட்டான். டாக்டர் ஸ்ரீதரன் தாம் நேராக ‘டிஸ்பென்சரி’க்குப் போய்விட்டு வருவதாகச் சொல்லிவிட்டு ராதாவிடமும் கோமதியிடமும் விடை பெற்றுக்கொண்டு சென்றார்.
ஆண்களை விடப் பெண்கள் சீக்கிரம் ஒருவரை ஒருவர் தெரிந்து கொண்டு நண்பர்களாகி விடுவார்கள். கூடத்தில் உட்கார்ந்திருந்த கோமதியும் பவானியும் ராதாவும் நெடுநாள் பழகியவர்களைப் போலப் பேச ஆரம்பித்தார்கள் . பவானியை நாடகத்துக்கு வரச் சொல்லி ராதா மிகவும் வற்புறுத்தினாள். மூன்று டிக் கட்டுக்களைக் கிழித்துக் கொடுத்து விட்டு நாகராஜனிடம் முப்பது ரூபாய்கள் வாங்கிக்கொண்டு ஒரு பெரிய கும்பிடு போட்டு விட்டுக் கிளம்பினாள் அந்தப் பெண். அவள் இருந்த சிறிது நேரம் வரை அங்கு கலகலவென்று சிரிப்பும், பேச்சுமாக இருந்தது. அவள் போன பிறகு பவானி, ‘என் மன்னி! பெண் துரு துருவென்று நன்றாக இருக்கிறாள் இல்லையா? ரொம்பவும் வெகுளியான சுபாவம்” என்று தன் அபிப்பிராயத்தைத் தெரிவித்தாள்.
”த்சூ……” என்று சூள் கொட்டினாள் கோமதி. ”என்ன சுபாவமோ? வீட்டிலே அரை மணிகூ:– த் தங்கு கிறதில்லையாம். காலையில் ஒரு உடை. நடுப்பகலில் வேறு உடை. மாலையில் ஒரு அலங்கரம் என்று உடுத்திக் கொண்டு ஊரைச் சுற்றி வருகிறது. வயசுப் பெண் ஆயிற்றே என்று கவலைப்பட யார் இருக்கிறார்கள்? டாக்டருக்கு அவர் வேலை தான் சரியாக இருக்கிறது. அத்துடன் ஆண்களுக்குப் பெண் குழந்தைகளை வளர்க் கும் விதம் தெரியுமா என்ன?” என்றாள் கோமதி,
பவானியின் மனம் உண்மையில் ராதாவுக்காக இரக்கப்பட்டது. இளமையும் அழகும் படிப்பும் சேர்ந்த அந்தப் பெண்ணுக்கு வாழ்க்கையில் இன்னல்கள் வராமல் இருக்க வேண்டுமே என்று கவலைப்பட்டாள்.
”இங்கே அடிக்கடி வருவது வழக்கமா?” என்று விசாரித்தாள் பவானி கோமதியை.
”அதெல்லாம் ஒன்றுமில்லை. எப்பொழுதாவது வருவாள். நான் என்ன பி.ஏ. வா படித்திருக்கிறேன்? அவளுக்கென்று படித்த சிநேகிதிகள் ஏகப்பட்டவர்கள் இருக்கிறார்கள்” என்றாள் கோமதி அலட்சியமாக,
படித்தவர்கள் படித்தவர்களுடன் தான் பழக வேண்டும். படித்தவர்கள் படிக்காதவர்-களுடன் பழகுவதோ பேசுவதோ கூடாது. ஏன் இப்படி எல்லாம் வித்தியாசங்களை நாமே வகுத்துக் கொள்ள வேண்டும் என்று தான் பவானிக்குப் புரியவில்லை .
சிந்தனை தோய்ந்த மனத்துடன் பவானி கொல்லைத் தாழ்வாரத்தில் போய் உட்கார்ந்தாள். அவள் மனத் திரையை விட்டு மூர்த்தியோ அவனுடைய செயல்களோ மறையவே இல்லை. பட்டண வாசத்தில் சாரி சாரியாக ஒரு அலுவலுமின்றித் திரிந்து வரும் ஆண்களையும் அவர்கள் நடுவில் ராதாவைப்போன்ற இளம்பெண்களின் வாழ்க்கையையும் ஒப்பிட்டுப் பார்த்தாள் பவானி.
அப்போது பள்ளிக்கூடத்திலிருந்து பாலு வந்தான். கண்கள் சிவந்து உதடுகள் துடிக்க சோர்ந்த முகத்துடன் வரும் அவனைப் பார்த்துப் பவானி திடுக்கிட்டாள். “என்னடா பாலு! என்ன ஆயிற்று?” என்று கேட்டாள் பதறியவாறு. பாலு தாயின் அருகில் வந்து உட்கார்ந்தான். அழுது கொண்டே பையிலிருந்த புத்தகங்களை வெளியே எடுத்தான். அதில் இருந்த கணக்கு நோட்டுப் புத்தகத்தில் இருந்த ஒரு சித்திரத்தைத் தாயிடம் காண்பித்தான். பூசனிக்காய் போன்ற உடலில் மாங்காயைப் போன்ற தலையும் கொட்டையாக விழிகளுமாக வரையப்பட்டிருந்தது கீழே அந்தச் சித்திரத்திற்கு விளக்கமும் தரப்பட்டிருந்தது . “குரங்கு மூஞ்சிபாலு! உன்னோடே பேச மாட்டேன்!” என்று எழுதியிருந்தது. எழுதியவர் தம் பெயரையும் போட்டிருந்தார். இந்தப் பிரபல ஓவியர் வேறு யாருமில்லை சுமதி தான்.
பவானி இதைப்பார்த்ததும் ‘பக்’ கென்று சிரித்து விட்டாள். அம்மா சிரிப்பதைப் பார்த்ததும் பாலுவுக்கு அழுகை அதிகமாக வந்தது.
”பாலு, இதெல்லாம் விளையாட்டுக்குப் போட்டிருக்கிற படம் அப்பா. உன் முகம் குரங்கு மாதிரி இல்லை யென்பது உனக்குத் தெரியாதா? சே! சே! சுமதி உன்னை விடசின்னவள். அவள் பேரில் கோபித்துக் கொண்டு அழலாமா? வா, டிபன் சாப்பிட்டுவிட்டு விளையாடப் போகலாம்…” என்று கூறி அவனைத் தேற்றினாள். ஆனால் பாலுவின் உள்ளம் பொருமிக் கொண்டே இருந்தது. “ஆகட்டும், அந்த சுமதியை விட்டேனாபார்!” என்று கருவிக்கொண்டே யிருந்தான்.
சுமதி அன்று பள்ளிக்கூடத்திலிருந்து நேரம் கழித்து வந்தாள். வந்தவள் உற்சாகம் பொங்கப் பாலுவை அழைத்தாள்.
சுமதி அவன் அந்தப்புறம் திரும்பினால் அப்படிப் போய் நின்றாள். இந்தப் பக்கம் பார்த்தால் எதிரில் வந்து நின்றாள்.
“சீ! போ. நான் தான் குரங்கு மூஞ்சியாச்சே. என்னோட பேச மாட்டேன் என்று எழுதினாயே. ஏன் பேச வந்தாய்? வெட்கமில்லை, மானமில்லை, வெள்ளைக் கத்தரிக்காய்’ என்று கூச்சல் போட்டான் பாலு.
”பாலு” என்று கண்ணீர் பொங்க அழைத்தாள் சுமதி. ”டேய்! டேய்! நான் தெரியாமல் எழுதினேன். என்னை மன்னித்துக் கொள்ளடா” என்றாள் கண்ணீருக்கடையில். ஆசையுடன் அவன் கரங்களைப் பற்றிக் காண்டு அவள் கெஞ்சும் காட்சியைப் பவானி பார்த்து உவகை யெய்தினாள். அவள் மனத்திலே பற்பல கனவுகள் தோன்றின.
2.6. பழிக்குப் பழி
சுமதியை விட பாலு மூன்று வயசு மூத்தவன் . பெண் குழந்தையாகிய சுமதியின் உள்ளத்தில் நிறைந்திருந்த கருணையும், மென்மையும் அவனிடத்தில் அவ்வளவாக இல்லை. இந்தப் பெண் இத்தனூண்டு இருந்து கொண்டு என் நோட்டிலே ’குரங்கு மூஞ்சி’ என்று எழுதிப் படம் வேறு போட்டாளே! இவளை எப்படியாவது பழிவாங்கியே தீரவேண்டும்’ என்றெல்லாம் கழுவிக் கொண்டேயிருந்தான். சுமதியும் ஜெயஸ்ரீயும் ஒரே வகுப்பில் இருக்கிறவர்கள், ஜெயரீயின் நோட்டுப் புத்தகங்களை இவள் வாங்கி வருவாள். ஏதாவது ’நோட்ஸ்’ எழுதிக் கொண்டு திருப்பித் தந்து விடுவாள். பாலு சமயம் பார்த்துக் கொண்டிருந்தான் பழிவாங்க.
அடுத்த நாள் பள்ளிக்கூடம் விட்டதும் சுமதியுடன் ஜெயஸ்ரீ இவர்கள் வீட்டுக்கு வந்தாள். இருவரும் வேடிக்கையாகச் சிரித்துப் பேசிக் கொண்டே அத்தை பவானி கொடுத்த சிற்றுண்டியைச் சாப்பிட்டார்கள்.
பவானி பெண்கள் இருவருக்கும் தலைவாரிப் பின்னிப் பூச்சூட்டினாள். குதூகலத்துடன் சிரித்துக் கொண்டே….. அவர்கள் வெளியே போனார்கள்,
பாலு அவர்கள் வெளியே போவதைப் பார்த்துக் கொண்டிருந்தான். மெள்ளப் பதுங்கிப் பதுங்கி வெளியே ஹாலுக்கு வந்தான். மேஜை மீது கிடந்த சுமதியின் பள்ளிப் பையைத் திறந்து ஜெயஸ்ரீயின் நோட்டுப் புத்தகம் ஒன்றை எடுத்தான். அழகாக முத்துக்கள் கோத்தது போல் எழுதியிருந்த அவள் பாடங்களில் நான்கைந்து தாள்களைக் கிழித்துப் போட்டான்.
” உம்” என்று ஒரு முறை தொண்டையைக் கனைத்தான். போர்க் களத்திலே பழிக்குப் பழி வாங்கிய வெற்றி வீரபாது சிரிப்பு ஒன்று அவன் தொண்டைக்குள் ளிருந்து வெளிப்பட்டது. பிறகு சுமதியின் நோட்டுப் புத்தகம் ஒன்றில் ‘சுமதீ! ’ஸயன்ஸ்’ நோட்ஸ் எப்படி எழுதிக் கொள்வாய் பார்க்கலாம்?–பாலு” என்று எழுதி வைத்தான்.
அன்றிரவு அவன் சாப்பிட்டுவிட்டுச் சீக்கிரமே தூங்கி விட்டான்.
அடுத்த நாள் காலை பாலுவும் சுமதியும் ஒன்றாகவே காப்பி சாப்பிட்டார்கள். சுமதி எவ்வளவோ பேச முயன்றும் பாலு விறைப்பாகவே நடந்து கொண்டான். இருவரும் கூடத்தில் இருந்த மேஜையருகில் உட்கார்ந்து வீட்டுப் பாடங்களை எழுத ஆரம்பித்தார்கள். ஜெயஸ்ரீயின் விஞ்ஞான நோட்டுப் புத்தகம் ஏ ஏடாகக் கிழிந்து கிடந்தது. அவசர அவசரமாக எல்லாப் புத்தகங்களையும் பார்வையிட்டாள். பாலு எழுதிவைத்திருந்த குறிப்பும் அவள் கண்ணில் பட்டது. சுமதிக்கு ஒரே சமயத்தில் கோபமும் பக்கமும் போட்டி போட்டுக் கொண்டு கிளம்பின. அழுதவாறு, கிழிந்த நோட்டுப் புத்தகத்துடன் அவள் மாடிக்குச் சென்றாள்.
இந்தச் சமயம் பார்த்து அத்தையிடம் போகாமல் அம்மாவிடம் போகிறது. மாமி கோமதி என்ன சொல்லுவாளோ என்று பயந்தான் பாலு. பசுமலையில் பவானியிடம் விசிறிக் காப்பால் பட்ட அடிகள் அவனுக்கு நினைவு வந்தது. யார் கண்ணிலும் படாமல் பள்ளிக் கூடம் போய் விட வேண்டும் என்று அவன் முயன்ற போது கோதி மாடிப் படிகளில் அவசரமாக இறங்கி வந்தாள். அவன் கிழித்துப் போட்ட நோட்டுப் புத்தகத் காதர், கையில் பிடித்துக் கொண்டே, “ஏண்டா பாலு இ து உன் வேலையா?’ என்று இரைந்தாள்.
வியாதிக்காரியான தன் மாமிக்குக் குரல் இவ்வளவு கபளீரென்று இருந்து பாலு பார்த்ததில்லை. அவள் அவ்வளவு அவசரமாக மாடிப் படிகளில் இறங்கி வந்த தையும் அவன் கண்டதில்லை; ஆகவே வியப்புடனும் பயத்துடனும், “ஆமாம் மாமி! தெரியாமல் கிழித்து விட்டேன். இனிமேல் செய்ய மாட்டேன். அவள் மாதிரம் என்னைக் குரங்கு மூஞ்சி என்று படம் போடலாமா?” என்று கேட்டான்.
”அவள் உன் புத்தகத்தில் தானே போட்டாள்? உன்னைப் போல் ஊரார் புத்தகத்தைக் கிழித்துப் போட வில்லையே. சே! சே! பதிமூன்று வயசுப் பையனுக்கு வகையாக இருக்கத் தெரியவில்லையே” என்று இரைந்தாள் கோமதி.
அம்மா இப்படி இரைந்து பாலுவைக் கோபித்துக் கொள்வாள் என்பது சுமதிக்குத் தெரியாது. தெரிந்திருந்தாள் அவனைப் பற்றி அம்மாவிடம் புகார் செய்திருக்க மாட்டாள்.
உள்ளே இருந்த பவானியைப் பார்த்ததும் கோமதிக்கு கோபம் அதிகமாக வந்தது.
”இதோ பார் பவானி! உன் பிள்ளை. டாக்டர் ரீதரனின் பெண் ஜெயஸ்ரீயின் நோட்டுப் புத்தகத்தைக் கிழித்துப் போட்டிருக்கிறான். அவர்கள் வீட்டிலிருந்து யாராவது வந்து கேட்டால் நீ என்ன பதில் சொல்லு வாயோ எனக்குத் தெரியாது அம்மா’ என்று கூறியவாறு அந்த நோட்டுப் புத்தகத்தை வீசிக் கூடத்தில் எறிந்து விட்டுப் போனாள்.
கீழே கிடந்த நோட்டுப் புத்தகத்தையும், பாலுவையும் மாறி மாறிப் பார்த்தாள் பவானி. அவனுடன் அவளுக்குப் பேசவே பிடிக்கவில்லை. கண்ணியமும் கௌரவமும் வாய்ந்த டாக்டர் வீட்டாருடன் இவனால் விரோதம் ஏற்பட்டு விடுமோ என்று அஞ்சினாள்.
நெஞ்சிலே நிறைந்திருந்த கவலையும் பயமும் அவளுக்கு ஒரு வித அசட்டுத் தைரியத்தை அளித்தன. கிழிந்த அந்தப் புத்தகத்தை எடுத்துக் கொண்டு டாக்டர்
ஸ்ரீதரன் வீட்டை நோக்கி நடந்தாள்.
அன்று அதிகாலையிலேயே ஸ்ரீதரன் வெளியே போய் விட்டார். ராதாவும் அன்று மாலை நடக்கவிருந்த டிராமாவுக்கா ஏற்பாடுகள் செய்வதற்காக வெளியே சென்றிருந்தாள்,
வீட்டுக் கூடத்தில் சுவாமிநாதன் மட்டும் உட்கார்ந்திருந்தார். ஜெயஸ்ரீ பள்ளிக்கூடம் போவதற்காகக் கிளம்பி வந்தவள், பவானியைப் பார்த்துப் புன்னகை புரிந்தாள். பிறகு, “வீட்டிலே யாருமே இல்லையே, அத்தை ராதா கூட வெளியே போயிருக்கிறாளே” என்று தெரிவித்தான்.
பவானி ஆசையுடன் அந்தக் குழந்தையின் கைகளைப் பற்றிக் கொண்டாள். வருத்தம் நிறைந்த குரலில் ”ஜெயஸ்ரீ! பாலு ஒரு தவறு செய்து விட்டான். சுமதியோடு சண்டை பிடித்துக் கொண்டு உன் நோட்டுப் புத்தகத்தைக் கிழித்து வட்ட்டானம்மா….” என்றாள்.
ஜெயஸ்ரீக்கு வருத்தமாகத்தான் இருந்தது . இருந்தாலும் அந்தப் பெண் அதை வெளியே காட்டிக்கொள்ளவில்லை. ”பரவாயில்லை. அதனால் என்ன? வேறு யாரிடமாவது வாங்கி எழுதிக் கொள்கிறேன்” என்று கூறிவிட்டு அவசரமாகப் போய்விட்டாள்.
அப்போது சுவாமிநாதன் வெளியே வந்தார். யாரை பார்க்க வேண்டும்? டாக்டர் வெளியே போயிருக்கிறார். ராதாவும் வீட்டில் இல்லை” என்று கூறியபடி பவானியைக் கவனித்தார் அவர்.
பவானி முதலில் சிறிது தயங்கினாள். அப்புறம் ஜெயஸ்ரீயைப் பார்க்க வந்தேன்” என்றாள்.
”நீங்கள் எங்கேயிருந்து வருகிறீர்கள் அம்மா?” என்று சுவாமிநாதன் விசாரிக்கவும் பவானி, விவரங்களைக் கூறினாள்.
சுவாமிநாதன் சிரித்தார். “குழந்தைகள் அப்படித் தான் ஒன்றோடொன்று சண்டை பிடித்துக் கொள்ளும். விரோதத்தை மனசிலே வைத்துக் கொள்ள மட்டும் அவர்களுக்குத் தெரியாது” என்று கூறி விட்டு, ‘நாகராஜனுக்கு ஒரு தங்கை இருப்பதாகவே எனக்குத் தெரியாது…” என்று சொல்லிப் பேச்சை முடிக்காமல் நிறுத்தினார் அவர்.
அந்த இளம் பெண் ஒரு விதவை என்பதை அவர் தெரிந்து கொண்டபோது, அவருடைய உள்ளம் வாடி வருந்தியது.
2.7. சென்னையில் மூர்த்தி
அன்று மாலையில் மியூஸியம் தியேட்டரில் கூட்டம் நெரிந்தது. சென்னையில் இருக்கும் பிரபல பெண்கள் கல்லூரி மாணவிகளால் நடத்தப்படும் பக்தை மீராவின் நாடகம் அங்கு நடத்த ஏற்பாடு ஆகியிருந்தது. வசூலாகும் பணத்தை காசநோய் நிவாரணத்துக்கு அளிப்பதாக அவர்கள் அறிவித்திருந்தபடியால் கூட்டம் அதிகமாகவே இருந்தது. முதல் வகுப்பிலிருந்து கடைசி வகுப்புவரையில் இடமில்லாமல் ரசிகர்கள் நெருக்கியடித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தார்கள்.
இரண்டாவது வகுப்பில் நாகராஜனும் கோமதியும் உட்கார்ந்திருந்தார்கள். நாகராஜன் சற்றைக்கொரு தரம் தன் கைக்கெடியாரத்தைப் பார்ப்பதும், பிறகு மனைவியின் பக்கம் திரும்பி ஏதோ முணுமுணுப்பதுமாக இருந்தான். கோமதி முகத்தில் கோபம் பொங்க உட்கார்ந்திருந்தாள்.
வீட்டை விட்டு அவர்கள் புறப்படும் போது ஒரு சின்னஞ்சிறு தகராறு நடந்தது. கணவனுடன் டிராமாவுக்குச் செல்ல வேண்டும் என்று கோமதிக்கு ஆசை அவனும் அவமாகச் சேர்ந்து எங்குமே வெளியே போவதேயில்லை. நாகராஜனுக்குத் தன் ‘பிஸினஸ்* ஒன்றேதான் லட்சியம். இந்த மாசத்தில் இருபதினாயிரத்துக்கு பிஸினஸ் போயிருக்கிறது. ”நான் கவனிக்கா விட்டால் அதில் கால் பங்குக்கூட நடந்திருக்காது” என்று மனைவியிடம் பெருமைப்பட்டுக் கொள்வான்.
பணம் ஏராளமாக வருகிறது. வீட்டில் கார் இருக்கிறது. வேலையாட்கள் இருக்கிறார்கள். இதனால் எல்லாம் கோபதிக்கு மனத்தில் திருப்தி ஏற்படவில்லை. வாழ்க்கையில் திருப்தியடையப் பணம் மட்டும் இருந்து விட்டால் போதுமா? அன்பும் ஆரோக்கியமும் சீரிய பண்பும் சேர்ந்தால்தானே அந்தப் பணத்தின் மதிப்பும் உயர்ந்து பிரகாசிக்கும்? மாசத்தில் இருபது நாட்கள் கணவனும் மனைவியும் சரியாகப் பேசக்கூட அவகாச மில்லாமல் நாகராஜன் வெளியிலேயே சுற்றிக் கொண்டிருப்பான். மிகுதி நாட்கள் வீட்டில் இருந்தாலும் மனைவி மகளுடன் பேசுவதற்கு அவனுக்கு அவகாசம் இருக்காது. மாதாந்தரச் செலவுகள், புடைவைக் கடை பில்கள், டாக்டர் பில்கள். அவன் மேஜைமீது வைக்கப் பட்டிருக்கும். அவற்றுக்கு ‘செக்’ கிழித்துக் கையெழுத்துப் போட்டு குமாஸ்தா மூலமாக அனுப்பி விடுவான் .
மனைவி எழிலரசியாக அலங்காரம் பண்ணிக் கொண்டு நின்றாலும் கவனிக்க அவனுக்கு அவகாசம் இருக்காது. மகள் பள்ளிக்கூடத்தில் பரிசுகள் வாங்கிக் கெட்டிக்காரியாக விளங்கினாலும் பெருமைப்பட அவன் கொடுத்து வைத்தவனல்ல. இக்காரணங்களே கோமதியை ஒரு நிரந்தர நோயாளி ஆக்கிவிட்டன. வெளியார் அந்தத் தம்பதியைப் பற்றிப் பெருமையாகத்தான் நினைத்துக் கொண்டிருந்தார்கள். ஒரு தடவை பெங்களூர் போய்விட்டு வந்த நாகராஜன் புடவை ஒன்று வாங்கி வந்தான். உடல் தெரியும்படி அவ்வளவு மெல்லியதாக இருந்தது அப்புடவை. உடலெங்கும் ஜரிகைப் பூக்கள் வைத்து தைக்கப்பட்டிருந்தது. ”இந்தப் புடவையை உடுத்திக் கொண்டு என்னோடு என் நண்பர் வீட்டுக் கல்யாணத்துக்கு வா” என்று அழைத்தான் நாகராஜன்.
புடவையைப் பார்த்தவுடன் கோமதியின் மனத்தில் ஓர் அருவருப்பு ஏற்பட்டது. அவள் அதுவரையில் அம் மாதிரி உடுத்திக் கொண்டதில்லை. கணவன் சொல்கிறாரே என்று மனைவி எதை வேண்டுமானாலும் செய்து விட முடியுமா? நன்மை தீமையை ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வருவது தான் சிறந்தது.
கோமதி அதை உடுத்திக் கொண்டு வர மறுத்தாள். அத்தி பூத்தாற் போல் தன்னன உடன் வரும்படி அழைக்கும் கணவனின் அன்பை உதறுகிறோமே என்று கோமதி மனம் வருந்தினாள். இருந்தாலும் சுய கௌரவத்தை இழக்க, அவள் விரும்பவில்லை . அன்று அவனுடன் அவள் கல்யாணத்துக்குப் போகவில்லை.
நாகராஜன் மனைவியைப் பற்றி வேறு விதமாக நினைத்துக் கொண்டான். அவள் ஒரு ஜடம் என்பது அவன் அபிப்பிராயம். அதன் பிற, அவளை அவன் வெளியே அழைத்துச் செல்லவேயில்லை.
அன்று பகல் சாப்பாட்டிற்கு அப்புறம் கோமதி டிராமா டிக்கெட்டுக்களை எடுத்துக் கொண்டு நாகராஜனின் அறைக்குள் துழைந்தாள். ஈமலும் மின்சார விசிறியின் கீழ் உட்கார்ந்திருக்கும் அவர் அருகில் தயங்கியபடி நின்றாள் , பிறகு தைரியத்தை வரவழித்துக் கொண்டு ”இன்றைக்கு டிராமாவுக்குப் போகலாமா வருகிறீர்களா?” என்று கேட்டாள்.
நாகராஜன் சிறிது நேரம் ‘பைல்’களைப் புரட்டிக் கொண்டிருந்தான். பிறகு கோமதியை நிமிர்ந்து பார்த்து “என்ன கேட்டாய்?” என்று விசாரித்தான்.
கோமதிக்கு ஆத்திரம் வந்தது. அதைக் காட்டிக் கொள்ளாமல், “டிராமாவுக்குப் போகலாமா என்றேன்?” என்றாள்.
“ஓ! பேஷாய்ப் போயேன். நான் வெளியே போக ’டாக்ஸி’ வைத்துக் கொள்கிறேன்.”
”இல்லை …….. நீங்களும் வாருங்களேன் என்னோடு!” என்றாள் கோமதி முகத்தில் வெட்கம் படர.
”பார்த்தாயா? என்னைப் போய்க் கூப்பிடுகிறாயே எனக்கு ’பிஸினஸ்’ விஷயமாய் ஒருத்தரை ஹோட்டல் ’பிரகாஷில்’ இன்று இரவு எட்டு மணிக்குச் சந்தித்தாக வேண்டும், முன்னாடியே போய்ப் பார்த்தாலும் தேவலை.”
கோமதிக்கு முன்பு அடங்கிப் போன ஆத்திரம் மீண்டும் கிளம்பியது .
“உங்களுக்கு என்றைக்கும் தான் ‘பிஸினஸ்” இருக்கிறது! அப்படி என்ன முழுகிப் போகிறதோ தெரியவில்லை. சம்பாதித்த மட்டும் போதுமே” என்று கூறி விட்டு அருகில் கிடந்த சோபாவில் உட்கார்ந்து கொண்டாள்.
“நோ, நோ, கோமதி! உனக்கு வியாபார விஷயம் எல்லாம் தெரியாது, ஒரு நிமிஷம் அருந்திருந்தாலும் போச்சு!”
“போகட்டும் போங்கள்! நான் இந்தத் தடவை சாகப் பிழைக்க ஆஸ்பத்திரியில் கிடந்தேன். பிழைத்து வீட்டுக்கு வந்த நா ரெண்டு பேரும் சேர்ந்து போட்டோ கூட எடுத்துக் கொள்ள வேண்டும் என்கிற ஆசை எனக்கு. உடம்பு தேறட்டும் என்று இருக்கிறேன். நீங்கள் வந்து தான் ஆக வேண்டும்……”
என்னதான் பணத்துக்கு அடிமையாக இருந் தாலும் அவனால் மனைவியின் இந்த வேண்டுகோளைத் தட்ட முடியவில்லை.
அரை மனத்துடன் நாடகத்துக்கப் புறப்பட்டான் நாகராஜன். சுமதி முன்னதாகவே ஜெயஸ்ரீயுடன் போய் விட்டாள். அவள் பாலகிருஷ்ணனாக டிராமாவில் நடிக்க வேண்டும்.
”ஒரு டிக்கெட் வீணாகப் போகிறதே. பவானி நீ வருகிறாயா அம்மா!” என்று கேட்டான் நாகராஜன்.
”நாடகத்துக்கா? வேண்டாம் அண்ணா நீயும் மன்னி யும்போய் வாருங்கள். கோபாலன் எனக்குத் துணை இருப்பதாகச் சொல்லுகிறான். அவன் மனைவியும் இங்கு வருகிறேன் என்று சொல்லியிருக்கிறாள்” என்றாள்.
”உம்…சரி…பாலு எங்கே? அவனாவது வரட்டும்!” என்றான் நாகராஜன்.
”பாலுவா?” என்றாள் கோமதி கோபத்துடன். அவள் முகம் கோபத்தால் சிவந்தது.
“அவன் ஒருத்தர் எதிரிலும் வரமாட்டான். அவள் காலையில் பண்ணின விஷமத்துக்கு டிராமா ஒன்றுதான் அவனுக்குக் குறைச்சலாக இருக்கிறது!”
நாகராஜன் லினன் ஸ்லாக் ஷர்ட்டை உதறிப் போட்டுக் கொண்டு . ’ சரி நீயாவது சீக்கிரம் கிளம்பு’ என்றான் அலுப்புடன். இருவரும் காரில் ஏறிக் கொண்டு நாடகம் பார்க்கப் புறப்பட்டார்கள்.
மாடி வராந்தாவில் நின்று தன்னை நாடகத்துக்கு அழைத்துப் போகாமல் வெளியே செல்லும் தன் மாமா மாமியைக் கவனித்தான் பாலு அந்தப் பிஞ்சு மனத்திலே ஏமாற்றம், ஏக்கம், துக்கம் முதலியவை நிறைந்திருந்தன. கண்களிலிருந்து வழியும் கண்ணீருடன் தொலைவில் செல்லும் காரையே பார்த்துக்கொண்டு நின்றிருந்தான் பாலு. நோட்டுப் புத்தகத்தைக் கிழித்ததை ஜெயஸ்ரீ பொருட் படுத்தவில்லை. ‘பாலு! நீ டிராமாவுக்கு வருவாயில்லையா?’ என்று அவனைப் பார்த்துப் பள்ளிக்குச் செல்லும் பொழுது கேட்டாள். ஆனால் பெரியவர்கள், எல்லாம் தெரிந்தவர்கள். ஒரு குழந்தை செய்த அற்பத் தவறை மகத்தானதாக நினைத்துப் பெரிதாக்க அதற்கு தண்டனையும் அளித்து விட்டார்கள்.
பவானியின் மனமும் வருந்தியது. ‘தனக்கெதற்கு நாடகமும் இன்னொன்றும்? வாழ்க்கையிலே நாடகம் ஆரம்பித்து, நடித்து முடித்து வெளியேறிய நடிகையாகி விட்டோமே நாம்! நம்மைக் கூப்பிட்டார்களே! ஒன்றும் தெரியாத சிறு பையன். அவளை மன்னித்து அழைத்துப் போக அவர்களுக்கு மனமில்லையே’ என்று வருந்தினாள் அவள்.
”பாலு! நீ சமர்த்தாகப் படித்துப் பெரியவனாகி சுதந்திரமாக இருக்கும் போது இதைப்போல எவ்வளவோ நாடகங்கள் பார்க்கலாம் அப்பா. வா, கை கால்களை அலம்பிக்கொண்டு கீதை சுலோகங்களைச் சொல், கேட்கிறேன்” என்று மகனைக் கையைப்பற்றி அழைத்துக்கொண்டு கீழே வந்தாள் பவானி.
அங்கே மியூஸியம் தியேட்டரில் நாகராஜனுக்கு இருப்புக் கொள்ளவில்லை. கோமதியைத் தனியாக விட்டு விட்டு நான் போய் அவரைப் பார்த்துவிட்டு நேராக வீட்டுக்குப் போய் விடுவேன். காரை அனுப்புகிறேன், நீ சுமதியை அழைத்துக் கொண்டு வந்து விடு” என்று கூறிவிட்டு, திரை தூக்கிச் சில காட்சிகள் நடந்து கொண்டிருக்கும்போது வெளியே எழுந்துபோய் விட்டான்.
மஞ்சத்திலே சாய்ந்து படுத்திருக்கிறாள் பக்த மீரா. மேவாரின் மகாராணி அவள். இட்டதைச் செய்ய ஆயிரம் பேர் காத்துக் கிடந்தார்கள். பெட்டி பெட்டியாக அணிகளும் ஆடைகளும் கேட்பாரற்றுக் கிடந்தன. அவள் எண்ணும் எண்ணமெல்லாம் அந்தக் கண்ணனைப் பற்றித்தான். அவள் பார்க்குமிடங்களில் எல்லாம் அவன் தெரிந்தான். மகாராஜா தம் மனைவியைக் காண அந்தப்புரம் வருகிறார். அழகே உருவான மீரா பதறி எழுந்து பதிக்கு மரியாதை செய்கிறாள் . அவர் மனைவியிடம் இன்பமாகப் பேசுகிறார். ஆனால் அவள் செவிகளிலே கண்ணனின் வேய்ங்குழல் இசை கேட்கிறது. மஞ்சத்திலிருந்து எழுந்து அரண்மனைப் பூங்காவினுள் பாய்ந்து ஓடுகிறாள். அங்கே நீலவானில் மிதந்து செல்லும் வெண்ணிலவில் கண்ணன் தெரிகிறான். மலர் செறிந்த மரங்களின் ரகத வண்ணத்தில் தோன்று கிறான் கண்ணன். தடாகத்திலே கண்ணன். மீராவின் இதயம் முழுவதும் அவன் உருவமே வியாபித்து திருக் கிறது. மீரா மயங்கிக் கீழே விழுகிறாள்.
பக்த மீராவாக வந்த ராதையின் எழிலும் நடிப்பும் சபையோரைப் பரவசப்படுத்தி விட்டன. பலமான கர கோஷம் எழுந்தது சபையில்.
நாடகம் முடிந்தது. அநேகமாக எல்லோரும் வெளியே போய்விட்டார்கள். நாடகத்தில் நடித்த பெண்களின் பெற்றோர்கள் உறவினர்கள் மட்டும் இருந்தார்கள்.
வேஷத்தைக் கலைத்துவிட்டு ராதா வெளியே வந்தாள். சுவாமிநாதன் நின்று கொண்டிருந்தார். ”போகலாமா அம்மா?” என்று கேட்டார். எல்லோரிடமும் விடை பெற்றுக்கொண்டு வெளியே வந்தாள் ராதா. அங்கே ஒரு சிறு கூட்டம் நின்றிருந்தது. ஐந்தாறு வாலிபர்கள் வரிசையாக நின்றிருந்தார்கள்.
‘வொண்டர் புல் ஆச்ஷன்!” என்றான் ஒருவன் .
“மார்வெலஸ்!” என்றான் இன்னொருவன்.
“ரொம்பவும் பிரமாதமாக இருந்தது உங்கள் நடிப்பு” என்று, தான் தமிழன் என்பதை மறந்து விடாமல் தமிழிலேயே பேசித் தன் உற்சாகத்தைத் தெரிவித்தான் மற்றொருவன்.
கடைசியில் இருந்த வாலிபன் முன்னே வந்தான். “என்னைத் தெரிகிறதா? நேற்று கோடம்பாக்கம் ஹாஸ்டலில் டிக்கட் விற்க வந்தீர்களே. உங்கள் நடிப்பைப் பார்த்த மூன்று மணி நேரமும் நான் மீராவின் காலத்தில் வசித்தவன் மாதிரி இருந்தேன். கங்க்ராஜு லேஷன்ஸ்” என்றான் அவன். அவன் வேறுயாருமில்லை மூர்த்தி தான்!
சுவாமிநாதனுக்கு இவர்கள் உற்சாகம் ஒன்றும் வேண்டிருக்கவில்லை. வா அம்மா. மணி பதினொன்று ஆகப்போகிறது” என்று சொல்லிக்கொண்டே அவளை அழைத்துக் கொண்டு காரை நோக்கி நடந்தார் அவர்.
2.8. சந்திப்பு
மூர்த்தி சென்னைக்கு வந்து விட்டான் என்பது நாம் ஆச்சரியமோ பரபரப்போ அடைய வேண்டி தில்லை. பசுமலையில் சுமார் நான்கைந்து மாதங்கள் அவன் தங்கியிருந்த-தற்குக் காரணமே பவானி தான். அந்த இளம் பெண்ணின் மனத்தைக் கெடுத்து தன் சுயநலத்தைப் பூர்த்தி செய்து கொள்ளவே மூர்த்தி அங்கு தங்கியிருந்தான். வயது சென்ற மாமாவுக்காகவோ மாமிக்காகவோ அங்கு இல்லை.
பசுமலை ரயில் நிலையத்தை விட்டு பவானி புறப் பட்டு வந்த பாசஞ்சர் வண்டி கிளம்பிப்போன பிறகு சோர்ந்த மனத்துடன் மூர்த்தி வீட்டுக்கு வந்தான். பூட்டப்பட்டுக் கிடந்த பவானியின் வீட்டு வாசலை ஏக்கத்துடன் பார்த்தான். அவள் தினமும் மாலை வேளைகளில் மல்லிகைப் பூப்பறிக்கும் மல்லிகைப் பந்தலின் கீழ் பெருமூச்சுடன் சிறிது நேரம் நின்றான். ஆனால் உறுதியும், வைராக்கியமும், நெஞ்சழுத்தமும் நிறைந்த அவள் தோற்றத்தைப் பற்றி ஒரு கணம் சிந்தித்தான் மூர்த்தி. கருணையே வடிவமாக விளங்கும் அந்தக் கண்கள் நடராஜப் பெருமானின் படத்தை நோக்குங்கால் கசிந்து கண் மல்கித் தம் அன்பை வெளியிட்டதைக் கவனித்திருக்கிறான். அதே கண்கள் நெருப்புத் துண்டங்களாக ஜ்வலித்ததையும் பார்த்தான்.
திடசித்தம் நிறைந்த அந்தப்பெண் எங்கே இருந்தாலும் ஏமாற மாட்டாள் என்பது அவனுக்கு பொங்கிவிட்டது. ஆகவே இனி அவளைப் பற்றி சிந்திப்பதில் பலனில்லை என்பது அவனுக்குத் தெள்ளெனத் தெரிந்து போயிற்று.
பவானி ஊருக்குச் சென்று இரண்டு தினங்கள் கழித்து மூர்த்தி தனக்குச் சென்னையில் முக்கியமான அலுவகள் இருப்பதாகச் சொல்லிக் கொண்டு புறப்பட்டு விட்டான். சென்னையில் அவன் தங்குவதற்கு உறவினர் யாரும் கிடையாது. கல்கத்தா ஆபீசில் அவனுடன் வேலை பார்த்து வந்த நண்பர் ஒருவரின் சகோதரன் கோடம் பாக்கம் ஹாஸ்டல் ஒன்றில் இருந்து கொண்டு படித்து வந்தான்.
எழும்பூரில் இறங்கியதும், அவன் நினைவு வரவே மூர்த்தி நேராக கோடம்பாக்கம் சென்று ஹாஸ்டலில் அந்தப் பிள்ளையைப் பற்றி விசாரித்தான். தகவலும் கிடைத்தது. தன் பெட்டி படுக்கையை அங்கே வைத்து விட்டு, ஸ்நானம் செய்து காலை ஆகாரத்தை முடித்துக் கொண்டான் மூர்த்தி. பிறகு கம்பெனி வேலையாக சைனா பஜாருக்குச் சென்று விட்டு இரவு மவுண்ட்ரோட் ஹோட்டல் ஒன்றில் சாப்பாட்டை முடித்துக் கொண்டு ஹாஸ்டலுக்கு வந்தான்.
அடுத்த நாள் அவனும், அவன் நண்பனும் வெளியில் எங்கும் போகவில்லை. அன்று சனிக்கிழமை. விடுமுறை நாள். நண்பர்கள் இருவரும் சாப்பிட்டு விட்டு அறையில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். வாயில் இருந்த சிகரெட்டைப் புகைத்தபடி மூர்த்தி, தன்னுடைய அகில இந்திய விஜயத்தைப் பற்றி அளந்து கொண்டிருந்தன்! பார்த்த இடங்கள் பாதி இருந்தால், பார்க்காத இடங்களையும் அவன் வர்ணித்தபோது தேர்ந்த ஓர் எழுத்தாளனுக்கு இருக்க வேண்டிய கற்பா சக்தி இப்படி ஒருவனிடம் வீணாக விரயமாகிறதே என்று தான் எண்ணத் தோன்றும். ஹாஸ்டல் அறைகளில் திடீரென்று நிசப்தம் நிலவியது,
நாலைந்து பெண்கள், அழகாக உடுத்திக் கொண்டு கல கல வென்று பேசியபடி வந்தார்கள். ஒவ்வொரு அறையாக நுழைந்து அங்கிருந்த மாணவர்களிடம் பேசி -டி.ராமாவுக்கு டிக்கெட் வாங்கிக் கொள்ளும்படிக் கேட்டார்கள். கடைசியாக மூர்த்தி இருந்த அறைக்குள் நுழைந்தார்கள் அவர்கள், அவர்களில் ஒரு பெண் படிப்படியாக இருக்கும் கூந்தலை இரட்டைப் பின்னல்களாகப் பின்னி, பாதியில் வெண்ணிற ரிப்பனால் கட்டியிருந்தாள். காதுகளில் ஜிலு ஜிலு வென்று பிரகாசிக்கும் வைரத் தோடும், வைர ஜிமிக்கிகளும் அணிந்திருந்தாள். மூக்கில் ஒன்றும் ஆபரணம் இல்லை. நெற்றியில் வட்ட வடிவ மாகப் பெரிய அளவில் பொட்டு வைத்து. அதன் கீழே சிறிய பொட்டொன்று வைத்திருந்தாள். ரோஜா வண்ணத்தில் ’ஷிபான்’ புடவையும், முழங்கை வரையில் கை வைக்கப்பட்டிருந்த சோளியும் அணிந்திருந்தாள் அவள். துரு துரு வென்று அவள் முகம் பார்ப்பதற்கு வசீகரமாக இருந்தது. கண்களைச் சுழற்றி அவள் புன்னகை புரிந்தவாறு மூர்த்தியையும், அவன் நண்பனையும் கைகுவித்து வணங்கினாள்.
”காசநோய் நிவாரணத்துக்காக டிராமா போகிறோம். இவர்கள் எல்லாம் பி. ஏ. படிக்கும் மாணவிகள் இரண்டு டிக்கெட்டுக்கள் வாங்கிக்கொள்ள வேண்டும்” என்றாள் அவள்.
அவர்கள் பதிலையும் எதிர்பாராமல் இரண்டு ஐந்து ரூபாய் டிக்கெட்டுகளைக் கிழித்து மேஜை மீது வைத்தாள் அந்தப் பெண். மூர்த்தி பர்ஸைத் திறந்து நண்பனுக்கும் சேர்த்து பத்து ரூபாய் கொடுத்து டிக்கட் வாங்கினான்.
”அடேடே! எனக்கெதற்கப்பா வாங்கினாய்? என்றான் நண்பன்.
”பரவாயில்லை, போய் விட்டு வரலாம்” என்று மூர்த்தி சிரித்துக் கொண்டே கூறினான்.
பெண்கள் விடை பெற்றுக் கொண்டு அந்த அறை மயக் கடக்கும் போது ஒருத்தி சொன்னாள். ”அடி ராதா! நீ வந்திருக்காவிட்டால் எங்களால் பத்து டிக்கெட்டுகள் கூடவிற்றிருக்க முடியாது. கெட்டிக் காரியடி நீ!”
ராதா கல கலவென்று சிரித்தாள். ”பூ! இதென்ன பிரமாதம்? நீ தான் கட்டுப் பெட்டி மாதிரி தலையை குனிந்து கொண்டு நின்றாய், பேசுகிற விதத்தில் பேசினால் ஒருவர் இரண்டு டிக்கெட்டுகள் என்ன நாலைந்து டிக்கெட்டுகள் கூட வாங்கிக் கொள்வார்”
என்றாள்.
”இருந்தாலும். ராதாவின் கண்களுக்கு அடிமை ஆகாமல் ஒருத்தர் இருக்க முடியுமா?” என்று சொல்லிக் கொண்டே மற்றொரு பெண் செல்லமாக ராதாவின் கன்னத்தில் தட்டினாள்.
”சீ! போடி?” என்று சொல்லிக் கொண்டே ராதா மறுபடியும் கலகலவென்று சிரித்தாள். மூர்த்தி ஜன்னல் ஓரமாக நின்று கீழே தோட்டத்தில் ஒற்றையடிப் பாதையில் நடந்து செல்லும் அந்தப் பெண்களின் மத்தியில் போய் ராதாவைக் கண் இமைக்காமல் பார்த்தான். அவர்கள் அவன் பார்வையை விட்டு மறைந்ததும் அறைக்குள் திரும்பி, ”கோபி! கட்டாயம் இந்த டிராமாவை ‘மிஸ்’ பண்ணக்கூடாதுடா!?” என்று சொல்லிக் கொண்டே டிக்கட்டுடன் அவர்கள் கொடுத்த நாடக நோட்டீசை எடுத்துப் பார்த்தான், நடிப்பவர்களின் பெயர்கள் வரிசையாகக் காணப்பட்டன. முதலில் மிஸ் ராதா, பி. ஏ. மீரா’ என்று போடப்பட்டிருந்தது.
மனிதன் சிந்திக்கும் சிந்தனைகள், செய்கைகள் யாவுமே புனிதமானவை என்று சொல்ல முடியாது. தன்னால் கூடுமான வரையில் நல்லவைகளையே செய்து நினைத்து வாழ்ந்தானாகில் அவன் வாழ்க்கையில் ஓரளவு உண்மையாக வாழ்ந்தவன் என்று சொல்லலாம். அப்படி இராமல் அவன் எண்ணும் எண்ணமெல்லாம், செய்யும் செய்கைகள் எல்லாம் பிறர் மனத்தை நோகச் செய்வனவாகவும் இழிவானவை-களாகவுமே இருந்தால் ‘மனிதப் பிறவியும் வேண்டுவதே இம் மாநிலத்தே’ என்று வேண்டி அவன் மனிதனாகப் பிறக்க வேண்டிய அவசியமே இல்லை.
மூர்த்தியின் மனம் சடுதியில் இப்படிப் பல விதங்களாக மாறும் இயல்பை அடைந்து விட்டது. பிறகு தான் அவன் தன் நண்பனுடன் நாடகம் பார்க்க வந்தான். வந்த இடத்தில் ராதாவிடம் தன் சந்தோஷத்தையும் அறிவித்தான். அதற்குப் பதிலாகக் கிடைத்த அவள் புன்சிரிப்பை அவன் விலை மதிக்க முடியாத *கோஹினூர்’ வைரத்துக்கு ஒப்பிட்டான். அதைப் பற்றியே அவன் சிந்தித்துக் கொண்டு சென்னையை வலம் வந்து கொண்டிருந்தான்.
2.9. கோமதியின் குறை
ஹாலில் இருந்த புத்தர் சிலையைத் துடைத்து வைத்து விட்டு, தோட்டத்தில் மலர்ந்திருந்த பெரிய ரோஜா மலரை எடுத்து வந்து சிலையின் பாதங்களில் வைத்தாள் பவானி. கீழே கம்பளத்தில் உட்கார்ந்து பாலுவுடன் ‘ கேரம்’ ஆடிக் கொண்டிருந்த சுமதி “அத்தை! நீ ஏன் அன்றைக்கு டிராமாவுக்கு வரவில்லை. பாதியில் அப்பா, அம்மாவைத் தனியாக விட்டு விட்டு எழுந்து போய்விட்டாராமே . அம்மா சொன்னாள். நீ ஏன் அத்தை எப்பொழுதும் ஒரு மாதிரியாக இருக்கிறாய்? சுவாமிக்குப் பூஜை பண்ணுகிறாய். எங்களுக் கெல்லாம் வேலை செய்கிறாய். அம்மா கூடச் சொல்கிறாள். ‘பவானி வராவிட்டால் என் உடம்பு தேறி இருக்காது. பாவம்! அவளைப் பார்த்தால் என் மனசு சங்கடப்படுகிறது’ என்று. இனிமேல் என்னோடு வெளியே வாயேன் அத்தை. ஜெயஸ்ரீயின் வீட்டுக்குப் போகும் போது வருகிறாயா?” என்று கேட்டாள். பேச்சின் இடையில் அந்தக்குழந்தையின் குரல் கம்மிற்று. பளபளக்கும் அவள் விழிகளில் கண்ணீர் திரண்டு நின்றது.
பவானி வாஞ்சையுடன் சுமதியின் அருகில் வந்து உட்கார்ந்தாள். ஆசையுடன் அவள் தலையை வருடினாள். அப்புறம். ‘கண்ணே ! பிறருக்கு உபகாரமாக இருக்க வேண்டும் என்பது ஒன்றுதான் என் ஆசை. வேறு ஆசைகளோ விருப்பங்களோ எதுவும் எனக்கில்லை. உனக்குத் தலைவாரிப் பின்னி மலர் சூட்டிப் பொட்டு வைத்தால் என் மனத்திலே ஆனந்தம் பொங்குகிறது. நல்ல உணவாகச் சமைத்து எல்லோருக்கும் பரிமாறினால் அவர்கள் சாப்பிட்டுப் பசி தீர்ந்தவுடன் என் வயிறு திருப்தியால் நிறைந்து விடுகிறது.
”இங்கே பார் சுமதி! இந்த மகானைப் பற்றி நீ உன் சரித்திரப் புத்தகத்தில் படித்திருப்பாய். பிறருடைய துன்பங்களுக்காக இரக்கப்பட்டு அன்பையும். அஹிம்சை யையும் தம் லட்சியமாகக் கொண்டு அரச போகத்தைத் துறந்தவரல்லவா இவர்?” என்று அருகில் மேஜை மீது இருந்த புத்தர் சிலையைக் காட்டிப் பேசினாள் பவானி. சுமதியும் பாலுவும் திறந்த வாய் மூடாமல் பவானி சொல்வதைக் கவனித்துக் கொண்டிருந்தார்கள். புத்தரையும் காந்தி அடிகளையும் போற்றி வணங்குவதால் தான் அத்தை இவ்வளவு நல்லவளாக இருக்கிறாள் என்று சுமதி நினைத்துக்கொண்டாள்.
“அத்தை! அத்தை!” என்று சொல்லிக் கொண்டே சுமதி அவள் கழுத்தைக் கட்டிக் கொண்டு கன்னத்தில் இரண்டு முத்தங்கள் கொடுத்தாள்.
சுமதி தன் அம்மாவை முத்தமிடுவதைப் பார்த்து ”ஹே! ஹே!” என்று சிரித்தான் பாலு.
“எதற்கெடுத்தாலும் சிரிப்புத் தாண்டா உனக்கு” என்று பவானி அவனைக் கோபித்துக் கொண்டாள்.
மாடியில் இருந்த கோமதி கீழே இறங்கி வந்தாள். மூன்று நாட்களாக அவளுக்கு மறுபடியும் உடம்பு சரியில்லை. நாடகத்தில் நாகராஜன் பாதியில் அவளை விட்டு விட்டு எழுந்து போனவுடன் மனம் சோர்ந்து உட்கார்ந்திருந்தாள் கோமதி. நாடகத்தில் பல ரசமான காட்சிகள், நடனங்கள், சம்பாஷணைகள், பாட்டுக்கள் இருந்தும் அவளால் ஒன்றையுமே ரசிக்க முடியவில்லை. ‘எதற்காக வந்தோம்’ என்று அலுத்துக் கொண்டாள். ஜோடி ஜோடியாக உட்கார்ந்து நாடகம் பார்க்கும் தம்பதிகளைப் பார்த்துப் பெருமூச்செறிந்தாள் கோமதி. கடைசிக் காட்சி நடந்து கொண்டிருந்தபோது. அலுப்புடன் வெளியே வந்து பார்த்தாள். நாகராஜனே காருடன் வந்திருந்தான். நாடகம் முடிவதற்கு முன்பே மனைவி வெளியே வந்து விடவே, “என்ன? ஒன்றும் நன்றாக இல்லையா? எனக்கு அப்பொழுதே தெரியும்”, என்று ஆரம்பித்தான் அவன்.
“எல்லாம் நன்றாகத்தான் இருக்கிறது; எனக்குத் தான் இருக்கப் பிடிக்கவில்லை. பிறந்த இடத்தில் தான் ஒண்டியாகப் பிறந்தேன் என்றால், புகுந்த இடத்திலும் ஒண்டிக் கட்டைதான்!” என்றாள் நிஷ்டூரமாக.
“யார் அப்படிச் சொன்னது?” என்றான் நாகராஜன் காரை ‘ஸ்டார்ட்’ செய்து கொண்டே. கோமதி பதில் ஒன்றும் கூறாமல் முகத்தை ‘உர்’ ரென்று வைத்துக் கொண்டிருந்தாள். மனைவியைத் திரும்பிப் பார்த்தான் நாகராஜன்.
“கோமு! ஒரு நெக்லெஸ் விலைக்கு வந்திருக்கிறது. எட்டாரத்க்குள் அடங்குமாம். பழைய வைரமாம். வாங்கிப் போட்டு வைத்தால் மேலே மூன்று நாலு வந்தால் விற்று விடலாம்!”
“அதை வாங்குவானேன், பிறகு விற்பானேன்? வாங்காமலேயே இருந்து விட்டால் அலுப்பே இல்லை.”
“அட, போட்டுக் கொள்கிற வேளையில் போட்டுக் கொள்ளேன். மேலே மூவாயிரம் கிடைத்தால் நமக்குத் தானே லாபம்! விற்கிறவருக்கு ரொம்பப் பணமுடையாம்.”
கோமதிக்கு இந்த வியாபாரப் பேச்சே பிடிக்கவில்லை. வீட்டுக்கு வந்த பிறகு, பவானி பரிமாறிய உணவைச் சாப்பிட்டு விட்டு மாடிக்குப் போய் விட்டாள். பளபள வென்று மின்னும் வைர ‘நெக்லெஸை’ எடுத்துக் கொண்டு நாகராஜன் மாடிக்கு வந்தான். கோமதி அயர்ந்து துங்கிக் கொண்டிருந்தாள்.
அதற்கப்புறம் நாகராஜன் அந்த நகையை வாங்கினானா என்பதை கோமதியும் கேட்கவில்லை. அவனும் ஒன்றும் கூறவில்லை. வேலை விஷயமாக வெளியூர் சென்று விட்டான்.
மாடியில் உட்கார்ந்து உட்கார்ந்து அலுத்துப்போன கோமதி கீழே இறங்கி வந்து டாக்டர் ஸ்ரீதரன் வீட்டுக்கு போன்’ செய்து, “ராதா இருக்கிறாளா?” என்று விசாரித்தாள். ”அவள் வெளியே போயிருக்கிறாள். கச்சேரிக்கு” என்று சுவாமிநாதன் தெரிவித்தார். அத்துடன், * நீங்கள் சௌக்கியந்தானே அம்மா?” என்றும் விசாரித்தார் அவர்.
“உம்… சௌக்கியத்துக்கு ஒரு குறைவும் இல்லை ” என்று அலுப்புடன் கோமதி சொல்லிக் கொண்டே ’ரிஸீவரை’ போனில் வைத்தாள்.
2.10. கண்டான் ராதாவை..
அன்றிரவு நாடகம் பார்த்து விட்டு வந்த மூர்த்திக்கு வேறு எதிலும் மனம் செல்லவில்லை. ராதையின் எழில் உருவம் அவன் மனத்தில் நிறைந்திருந்தது. தன்னைக் கோபிகையாக பாவித்துக் கொண்டு மீரா கண்ணனுடன் கனவில் விளையாடிய காட்சி அவன் மனத்தில் பதிந்து போயிற்று. அவளுடைய அழகிய முகத்தில் எத்தனை விதமான பாவங்கள் வெளிப்பட்டன! அவள் கணீர், கணீர் என்று பேசியும் பாடியும் சபையோரிடம் வாங்கிய பாராட்டுக்களை நினைத்து மூர்த்தி மனம் களித்தான். எல்லோரும் தான் சிரிக்கிறார்கள். ஆனால் ராதா சிரித்தால் அதில் ஒரு தனி அழகு இருப்பதாகவே அவனுக்குத் தோன்றியது. இப்படி எதையோ நினைத்துக் கொண்டு அறையில் குறுக்கும் நெடுக்குமாக உலவும் மூர்த்தியை அவன் நண்பன் கோபி கவனித்தான்.
“என்னப்பா இது! குட்டி போட்ட பூனை மாதிரி அலைகிறாயே, சரியாகச் சாப்பிடுகிற-தில்லை, தூங்குகிற தில்லை. மூன்று நாட்களாக ஆபீஸ் வேலைக்கு மட்டம் வேறே!” என்று கேலி செய்தான் கோபி.
“அதெல்லாம் ஒன்றும் இல்லை அப்பா, அந்தப் பெண் யார்? எங்கிருக்கிறாள் என்பது ஒன்றும் தெரிய வில்லையே?” என்று கூறினான் மூர்த்தி. கோபிக்கும் அந்த விவரங்கள் ஒன்றும் தெரியாது.
“ஓஹோ! அதுதானா விடியம்? என்னவோ என்று பார்த்தேன்” என்று கூறிவிட்டு அவன் காலேஜூக்குப் புறப்பட்டார்.
மூர்த்திக்குத் தனியாக அந்த அறையில் இருப்புக் கொள்ளவில்லை. உடுத்திக் கொண்டு வெளியே புறப் பட்டான். நேராக சைனா பஜாருக்குச் சென்று தன் காரியாலயத்தில் நுழைந்து, டெலிபோன் அறைக்குள் சென்றான். ஜேபியிலிருந்த நாடக நோட்டீசை எடுத்து எந்தக் கல்லூரி மாணவியர் அன்று நாடகம் போட்டார்கள் என்று கவனித்து விட்டு, அந்தக் கல்லூரிக்குப் ‘போன்’ செய்தாள்.
காலேஜ் பிரின்ஸிபால் பேசினார்.
“நாடகம் மிகவும் நன்றாக இருந்தது. அதைப் பாராட்டிச் சொல்லவே தங்களை அழைத்தேன். ஹூம்… நாடகத்தில் மீராவாக நடித்தாளே அந்தப் பெண் யார்? எந்த வகுப்பில் படிக்கிறாள்?” என்று நாசூக்காக விசாரித்தான் மூர்த்தி.
“ஐஸீ. அவரை, மிஸ் ராதாவைத் தானே கேட்கிறீர்கள்? அவள் எங்கள் கல்லூரியின் பழைய மாணவி. சென்ற வருஷம் தான் படித்து பி. ஏ, பாஸ் செய்திருக்கிறாள். சூடிகையான பெண், எஸ்… எஸ்… டாக்டர் ஸ்ரீதரன் இருக்கிறாரே. அவருடைய தங்கை.”
மூர்த்திக்கு இதற்குமேல் விவரங்கள் தேவை இல்லை. தேவையாக இருந்தாலும், ஒவ்வொன்றையும் விசாரித்தால் நன்றாக இராதென்று நினைத்துக்கொண்டு “போனை’ வைத்து விட்டு வெளியே வந்தான். அவனுக்கு இருந்த உற்சாகத்தில் அருகில் இருந்த ஹோட்டல் ஒன்றில் நுழைந்து ‘ஐஸ்க்ரீம்’ வரவழைத்துச் சாப்பிட்டான். நேராக டவுனில் இருந்து கோடம்பாக்கம் செல்லும் பஸ்ஸில் புறப்பட்டான்.
வடபழனி செல்லும் பாதையில் பஸ்ஸிலிருந்து இறங்கி நடக்க ஆரம்பித்தான் அவன். கொஞ்ச தூரம் சென்றதும், ஒரு சிறிய காம்பவுண்டுக்குள் இருந்த கட்டடத்தின் வாசலில் போர்டு ஒன்று தொங்குவதைக் கவனித்தான். ‘டாக்டர் ஸ்ரீதரன் எம். பி. பி. எஸ் . மருத்துவ சாலை’ என்று போட்டிருந்தது. பகல் வேளையானதால் கதவு பூட்டப்-பட்டிருந்தது. தாழ்வாரத்தில் இருந்த பெஞ்சியில் காவல்காரன் மட்டம் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தான். மெதுவாகக் கேட்டைத் திறந்து கொண்டு உள்ளே சென்று “ஐயா! ஐயா!” என்று அவனை எழுப்பினான் மூர்த்தி.
அவனுக்கு நல்ல தூக்கம். ”பகல் வேளைகளில் டாக்டர் இங்கே வரமாட்டார் ஐயா! வீட்டிலே போய்ப் பாரு” என்று சொல்லிக்கொண்டே திரும்பிப் பார்த்துத் தூங்க ஆரம்பித்தான் அவன்.
“அங்கேதான் போகிறேன். விலாசம் சொல் ஐயா” என்று மறுபடியும் அவனை எழுப்பிக் கேட்டான் மூர்த்தி. காவல்காரனுக்குத் தூக்கம் தெளிந்து விட்டது.
“என்னய்யா சும்மாத் தொந்தரவு பண்றீங்க! ரயில்வே லயன் ஓரமாப் போவுது பாருங்க ரோடு. அந்த ரோடு கடைசியிலே இருக்குதுங்க அவர் பங்களா” என்று கூறிவிட்டு, சட்டைப் பையில் இருந்த பீடித் துண்டைப் பற்ற வைத்துப் புகைவிட ஆரம்பித்தான் அவன்.
அப்பொழுது நடுப்பகல் வேளை. தெருக்கள் எல்லாம் நிசப்தமாக இருந்தன. சில வீடுகளிலிருந்து வானொலியில் மத்தியான இசை கேட்டுக் கொண்டிருந் சூது. பெண்கள் சிலர் வீட்டு வராந்தாவில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். தெருவில் சில பையன்கள் ஐஸ் விற்றுக் கொண்டிருந்தார்கள்.
மூர்த்தி தெருவிலே வேடிக்கை பார்த்துக் கொண்டு நடந்தான். ஒரு வீட்டு வாசலில் ‘அறை வாடகைக் விடப்படும்’ என்ற விளம்பரம் காணப்பட்டது . கதவை தட்டிக் கூப்பிட்டு விசாரித்தான். ஐம்பது வயசு மதிக்கும்படியான ஒரு பெண்மணி கதவைத் திறந்து கொண்ட வெளியே வந்தாள். ”என்ன வேண்டும்?” என விசாரித்தாள்.
மூர்த்தி தனக்கு ஓர் அறை தேவையாக இருப்பதாகக் கூறினான். அறையைத் திறந்து காண்பித்தாள் அந்த அம்மாள். அறை விசாலமாகவும் காற்றோட்டத்துடனும் இருந்தது. மாதம் பதினைந்து ரூபாய் வாடகையென்றும் லைட்டுக்காக இரண்டு ரூபாய் தனியாகக் கொடுத்து விட வேண்டும் என்றும் அறிவித்தாள் அவள். ஒரு மாதத்திய வாடகையை முன் பணமாகக் கொடுத்து விட்டு மூர்த்தி அங்கிருந்து கிளம்பினான்.
நேராக அதே தெரு வழியாகச் சென்று தெருக் கோடியை அடைந்தான் அவன். அங்கே பெரிய பங்களா ஒன்று காணப்பட்டது. வாசலில் டாக்டர் ஸ்ரீதரன் என்று ஒரு புறமும், மறுபக்கத்தில் ஜெயஸ்ரீ என்று வீட்டின் பெயரும் எழுதப்பட்டிருந்தது. பங்களாவின் வாசலில் இருந்து உள்ளே கவனித்தான் மூர்த்தி. வீட்டிலே சந்தடி ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. வீட்டிலிருந்து யாராவது வெளியே வருகிறார்களா என்று கவனித்தான் மூர்த்தி. இப்படியும் அப்படியும் ஏதோ ஒரு வீடு தேடுகிற மாதிரி மதில் சுவர் ஓரமாக நடந்தவாறு கவனித்துக் கொண்டிருந்தான். அரைமணி நேரம் ஆகியும் ஒருவரும் வெளியே வரவில்லை . அலுத்துப் போய்ச் சோர்ந்த உள்ளத்துடன் அவன் திரும்புகிற போது, மாடியிலிருந்து ஒரு குரல் தெளிவாகக் கேட்டது.
“ராமையா ! வெட்டி வேர் தட்டிகளுக்குத் தண்ணீர் ஊற்றவில்லையா?” என்று கூறியவாறு ராதா ‘பால்கனி’ பக்கமாக வந்து தோட்டத்தில் மாமரத்தின் கீழ் சிமிட்டிபெஞ்சியில் படுத்திருந்த தோட்டக்காரனைக் கூப்பிட்டாள். வெள்ளைப் புடவை உடுத்தி, ஸ்நானம் செய்த கூந்தலைப் பின்னல் போடாமல் முதுகில் புரள விட்டுக் கொண்டு அவள் அங்கு நின்ற காட்சி அழகாக இருந்தது.
ராமையா அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தான். ராதாவின் குரல் கேட்டு சுவாமிநாதன் வெளியே வந்தார்.
“ராமையா! அம்மா கூப்பிடறாங்க பார். எழுந்திரு’ ‘ என்று அவனை எழுப்பினார்.
”யார் இந்த வழுக்கைத் தலை ஆசாமி?” என்று யோசித்தான் மூர்த்தி. நெற்றியில் பளிச்சிட்ட திரு நீறும் அவருடைய வெள்ளை வேஷ்டியும், மேல் துண்டும் அவ ருக்கு எந்த விதமான உருவமும் கொடுக்கவில்லை. கண்டிப்பாக அவர் டாக்டராக இருக்கமுடியாது என்று தீர்மானித்தான் அவன். ராதாவின் தந்தையாக இருக்கலாம் என்று தோன்றியது. ’யாருமில்லாத ஒரு பங்களாவுக்குள் இந்த மோகினி இருந்தால், அவளை அடைவது எவ்வளவு சுலபம்? இப்படிக் காவல்காரனும், வழுக்கைத் தலையருமாக ஒருவர் மாற்றி ஒருவர் எதற்காக இருக்க வேண்டும்?’ என்று மூர்த்தி நினைத்துக் கொண்டே ராதாவின் வீட்டைக் கண்டு பிடித்த மகிழ்ச்சியுடன் மெதுவாக ஹாஸ்டலை நோக்கி நடந்தான்.
– தொடரும்…
– முத்துச் சிப்பி (நாவல்), முதற் பதிப்பு: அக்டோபர் 1986, சமுதாயம் பப்ளிகேஷன்ஸ், சென்னை.