முதுகச் சொறியுங்கோ
(1989ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
போட்டிக்குச் சிறுகதை கேட்டிருக்கிறார்கள். என் எழுத்துக்களைப் பற்றிச் சில விமர்சகர்கள் கூறியிருப்பது வெறும் முகஸ்த்துதிதானா, முதுகுச் சொறியல்தானா என்று நானே பரிசோதித்துக் கொள்ள ஒரு நவீன சந்தர்ப்பம்!
“நீங்களும் பங்கெடுக்கிறீர்களா?” என்று ஜோசப்பிடம் நேற்றுக் கேட்டேன்.
‘நானும் பங்கெடுக்கிறதா?’ என்று கேட்பது போல் சிரித்தார் அவர். நல்ல அனுபவசாலி. அந்த அநுபவமே பரிசை அவர் தலையிற் கட்டிவிடும். என்றாலும் தானும் இதிற் பங்கு பற்றுவதை ஒரு சிறுபிள்ளைத்தனமாக அவர் கணக்கெடுத்ததைப் போன்றிருந்தது அந்தச் சிரிப்பு!
கடைசியில் அவர் இப்படித்தான் சொன்னார்:- “இது வரைக்கும் தீர்மானம் இல்ல!.. இனிமேலும்…. தீர்மானம் இல்லாமயும் இல்ல!”
சரி, எனக்கு அப்படி இல்லை. நான் பங்கு பற்றப் போகிறேன்.
எந்த விஷயமாகவும் இருக்கலாமாம். ஓப்பன் வீஸா! யாருமே கட்டுரை எழுதாமல் கதையே எழுத முடியும். நிஜமான உயிர்ப்புக்கள்! இப்போது கைலாஸும் இல்லை; கானாசூவும் இல்லை; காசிதான் வாசியாயிற்றே!
ஆனால் பத்துப் பக்கங்களுக்கு மேல் வேண்டாமாமே! கொஞ்சம் கூடக் குறையப் போனால் தீட்டாகி விடுமோ? ஐந்து வருஷமென்று பெட்டி தூக்குபவர்கள்கூடத் தங்களின் பெட்டி வருகிற மட்டும் மலர் வளையம் விற்கவில்லையா? நடுவர்கள் இரக்கப்பட்டே ஆக வேண்டும்! ஒரு பக்கத்துக் கதையைப் பத்துப் பக்கத்துக்கு வளர்த்தானா, இருபது பக்கத்துக் கதையைப் பத்துப் பக்கத்துக்குச் சுருக்கினானா என்று புரியாதவர்களும், எண்பதுக்கு முதலிலேயே செத்துப் போயிருக்க வேண்டியவர்களும் நடுவர்களாக இருப்பார்களா? இருக்கலாம்! எனக்கு நிறைய அனுபவம் உண்டு- போட்டி முடிவுகள் வாசித்து வாசித்தே!
நல்ல தீமாகப் போட வேண்டும் – இது தரிகிடதீம் இல்லை, சரியான சிறுகதைத் தீம் என்று ஒத்துக்கொள்ளும்படி!
எது நல்ல தீம்?.. ஈழப் பிரச்சினை? அது மார்க்கட்டில் மலிந்துபோன பொருளாக இருக்கிறது! அகில உலகமும் அதில்தான் ட்றேட் ஸோன் நடத்துகிறது! தொழிலாளர் பிரச்சினை? ம்ஹும்! நாட்டிலே தொழிலாளர்களே இல்லை என்ற அளவுக்கு இப்போதே குவிந்து விட்டது. காதல்? மண்ணிலேயே பற்றில்லாத பயல்களுக்குக் காதல் ஒரு அவசரமா? அப்படியென்றால் கல்வி? சரியான டொக்கியூமெண்டறி! பல்கலைக் கழகங்களை இருபத்தோராம் நூற்றாண்டு வரையில் ஊறப்போட்டு விடுவார்கள்! இலக்கியப் பிரச்சினைதான் இனிப் பாக்கி. அதுவும் வேண்டாம்! யாராவது ஒருவன் நான்தான் கைலாஸின் ஆவி,கானாசூவின் ஆவி என்று கிளம்பப் போகிறான்!* இப்போதே ஒவ்வொரு வரிக்கும் ஒவ்வொருவன் என்ற விகிதத்தில் பேனையைத் தூக்குகிறான்கள்!
சரி, தீமுக்குப் பிறகு வரலாம். கதையை வளர்ப்பது எப்படி? நனவோடை உத்தி? அதைப் பற்றி இன்னும் ஒரு மனிதனுக்குமே தெரியாத மாதிரித் தெரிகிறது. தெரிந்ததாகக் காட்டிக் கொள்ளும் சிலர்கூட, அந்தத் தனி மனிதக் குப்பைத்தனம் சமுதாயத்துக்குத் தேவையில்லை என்கிறார்கள்! ஃப்ளேஷ் பேக்? பாவம், நடுவர்கள்! லிங்கம் பெயர்ந்த வரலாறு மாதிரி நாட்டை விட்டே ஓடிப் போய்விடுவார்கள்.
எந்த நடையாக இருந்தாலும் முடிவிலிருந்து தொடங்கினால் எப்படி?
எந்த நடையை எப்படித் தொடக்கினாலும் சரி, பெட்றோலுக்கு மேல் தீக்குச்சியை உரசி வீசிய மாதிரி பக பகவென்று பற்றி எரிந்து போய்த் தண்ணீரை ஊற்றிய மாதிரி டப்பென்று அணைந்து போக வேண்டும்!
யாவும் கற்பனை என்று போடுவதா? அப்படிப் போட்டால் யதார்த்தத்தைக் கேலி செய்த மாதிரிப் போய்விடுமே!
யாவும் கற்பனை அல்ல? அப்படி ஒன்றைப் போடப் போய், அலையில் யேசுராசா பிரம்போடு நிற்கப் போகிறார்! கற்பனை அல்ல என்று போட்டால்? கற்பனை அல்ல என்றால் அதை ஏன் போட்டும் காட்ட வேண்டும்? என் கவிதை நெருப்புக் கவிதை என்று தப்படித்த மாதிரி ஆகாதா அது? சும்மாவே விட்டு விடுவோம்.
முற்போக்காளர்கள், யாதார்த்தப் படைப்பு என்று சொல்ல வேண்டும். நற்போக்காளர்கள், இதொன்றும் புதியதல்ல, என்றாலும் பரவாயில்லை என்றாவது சொல்ல வேண்டும். பிற்போக்காளன் ஒவ்வொருவனும், நான் இதைவிட நன்றாக எழுதியிருப்பேனே என்று அடிக்கடி எரிய வேண்டும். ஒரு சாக்கா, மௌனி, சுந்தர ராமஸ்வாமி, மாமல்லன் மாதிரி இருக்க வேண்டும். நம் நாட்டு பாஷையில் சொன்னால், ஒரு தளையசிங்கம், தெளிவத்தை, உமா, ரஞ்சகுமார், கொத்தன் மாதிரி இருக்க வேண்டும். பிற நாட்டு பாஷையில் சொல்லும் போது, குமுதத்துக்கு வந்து கெட்டுப் போகாமல் இருந்திருந்தால் பிரபஞ்சனையும் சொல்லலாம்தான்.
வேண்டாமப்பா, ஒன்றுமே வேண்டாம்! நான் நானாக இருந்தால் போதும்! புதுமைப் பித்தனின் அந்த முட்டாள் வேணு மாதிரி நானும் போய்விடக் கூடாது!
சட்! நானே அன்று மேடையிற் பேசினேன், பேனையை உருட்டிக் கொண்டே எழுதுவது ‘வதை’ என்று! பிச்சை எடுத்துத் திரியக் கூடாது என்றும்! கலண்டர்க் கவிகளுக்கும் எனக்கும் பிறகு என்ன வித்தியாசம்?
இந்த மூடே இப்படித்தான் எழுத வேண்டிய நேரத்தில் பெண்டாளப் போகிற மாதிரி!
ஃபஸ்ஸில் போகும் போதெல்லாம் என்னென்ன வகையாக மூடு வருகிறது! கக்கூஸில் இருக்கும் போதுதான் அருமையாக வந்து தொலைக்கும்! வெளியில் வந்து, ‘இந்த ஷேவிங் செட்ட இங்ஙின வச்சனே, எங்க? என்பதைப் போல் ஒன்றால் மனைவியோடு கொளுவுவதோடு அதுவும் பறந்து விடும்! கக்கூஸுக்குப் போனால் நோட் புக்கோடு போகும்படியாகவா அது பொறுமை யாக வந்து தொலைக்கிறது? வெள்ளைக்காரன்தான் சரி, அங்கேயே தாள் இருக்கும்! எனக்குக் கதை எழுதவே தாள் இல்லை; கக்கூஸில்தான் வைக்கப் போகிறேனா?
நேற்றோ முந்தாநாளோ நல்ல ஒரு ப்ளொட், அதுவும் கனவில் வந்தது. அருமையான தீம்! என்ன அது?… ம்…. ? அது மகன்மார் காதலிக்கிற கதையா? கிழிச்சான்கள்! வீட்டுக்காரன் கூலியையும் உயர்த்தி இரண்டு வருஷத்துக்கு அதிகப்படியான முன் பணமும் கேட்ட கதையா?… இல்லையே!… அதைத்தான் வட்டிக்கு வாங்கிக் கொடுத்தாயிற்றே!…. ஜேவீப்பீ சரணடைவது மாதிரியா கனவு கண்டேன்? நோ, நோ! சனியன்! சமயத்துக்கு வராது! சுப்பரான ப்ளொட் அது! இனித் தேதி முடிந்த பிறகுதான் அது நினைவுக்கு வரும் – நமது விமர்சனக்காரர்களுக்கு மேடையை விட்டு இறங்கிய பிறகு, ‘ஐயையோ, நான் அப்படிப் பேசியிருக்கக் கூடாதே’, என்று ஞானோதயம் வருகிற மாதிரி!…. ஒரு தமிழனோ முஸ்லிமோ ஜனாதிபதியாக வந்த மாதிரியோ? இல்லையே, இல்லையே!..
சில நேரங்களில் என் மனைவிக்கு நல்ல நல்ல தீம்கள், யோசனைகள் வரும். ‘சுற்றிவரப் பிணங்களாகக் கிடக்கும் போது உங்களுக்கு இலக்கியம்’! என்ற மாதிரி ஒரு ராத்திரி இரண்டு மணிக்கு முணுமுணுக்கிறாள்! நான்கூடக் கனவில்தான் பிதற்றுகிறாள் என்றுதான் நினைத்தேன்.
இவள் ஒன்றையும் தீவிரமாக யோசித்துப் பேசுபவளும் இல்லை. இரவான பின் என் வாசிப்பும் எழுத்தும் இவளுக்குச் சில வர்மங்களில் பிடிக்கிறதில்லை! அதிலும் டீவீ நிகழ்ச்சி முடிந்த பிறகு படு மோசம்! நான்வேறு பாவி, கட்டிலில் இருந்து கொண்டுதான் எழுதுவேன், வாசிப்பேன் -நெருப்பில் சீனி போட்ட மாதிரி! இதனால் தெறிக்கும் ஏமாற்றமோ ஆத்திரமோதான் இப்படி உருவம் கொள்ளும்!
அவளுக்கு அப்போதே சொல்லியிருக்கக் கூடிய மறுமொழியும் இப்போதுதான் ஞாபகம் வருகிறது:-
மழை; வெயில்; வதை; பசி; கிழிசல்; வறுமை. ஒரு பிள்ளை பிணமாகக் கிடக்கிறது. கணவன் ஆஸ்பத்திரித் திண்ணையில். கைக் குழந்தை பட்டினியில் துடிக்கிறது. காய்ந்த முலை. உலகத்தில் புட்டிக்குரிய பாலே இல்லை! அவள் என்ன செய்கிறாள்? குழந்தையை வாரி அணைத்துக் கண்ணீர் விட்டுக் கதறித் தூங்க வைக்கிறாள் – தாலாட்டில்! இது இலக்கியம் வளர்ந்த வரலாறு. நாங்களும் தாய் வழிதானே? நான் போய் ஒரு பணக்காரிக்குப் பிறந்திருக்க முடியுமா? இதை இவளுக்குக் கூறி இவள்
இவள் வாயை அன்று அடைத்திருக்க வேண்டும்! இப்போது வேண்டாம், ஆண்டவனே; எனக்கிப்போது கதை முக்கியம்!
நல்ல தலைப்பாக வைக்க வேண்டும்- ஒரு படிமமாக, ஒரு குறியீடாக, முழுக் கதையையும் பிழிந்தெடுத்துப் பில்ஸ் செய்தது போல!
துள்ளல், எள்ளல், கொள்ளல் என்று தனித் தலைப்பு நன்றாயிருக்குமா? அல்லது அரசத் துள்ளல், மக்கள் எள்ளல், மாட்டிக் கொள்ளல் மாதிரியாக இரட்டைத் தலையங்கம் நன்றாயிருக்குமா? அல்லது ஈப்பா மாதிரியோ நெல்லை மாதிரியோ நீண்டவை? காலங் காலமாக நினைத்தெண்ணிய காரிய வினை? ஒரே ஓர் வான் கோழிப் பறவைப் பட்சி கானவான் மயிலாக ஆகிறது? அல்லது வினாக் குறி? ஆச்சரியக் குறி?
வட்டம்? நீ? வா ? போ, தா, தீ, தூ, ஆ, ஊ, சீ ?……
இந்தக் கதையின் தலைப்பைப் புதுமையாக வைக்க வேண்டும்! புதுமை! புதுமை! கலியாணக் கதையானால் சாவு வீடு என்று வைக்கலாமே! ஹா! பிரமாதம்! தலையங்கத்தை வைத்தே நடுவர்களும் விமர்சகர்களும் பத்துப் பதினைந்து மணித்தியாலம் பேசி விடுவார்கள்! ஹப்பாடா! ஒரு மாதிரியாகத் தலையங்கம் வந்து விட்டது! இனித் தீமும் வந்துவிடும்! பேனையை உருட்டிக் கொண்டே யோசித்தால் ஏன் வராமற் போகிறது? அகிலன், நாபா, லக்சுமி ஜன்மங்களுக்கு வந்ததென்றால், வாரிசுகளுக்கு வராமலா போகும்?
இந்த நடை முக்கியமாயிற்றே! யாருடைய நடை நல்லது?
யார் யார் பரீசீலிக்கப் போகிறார்கள் என்று தெரிந்தால் அவர்களுக்குத் தகுந்த மாதிரி எழுதி விடலாம்! மூப்போ இருந்தால் மெய்யுள் நடை. யேசுராசா இருந்தால் மௌனி நடை. தெளிவத்தையானால் பேச்சு நடை. முருகையனானால் விஞ்ஞான நடை. யாரென்றுதான் தெரியவில்லை! போட்டி நடத்துபவர்கள் நடுவர்களையும் அறிவித்துவிட்டால் என்ன? நாளை எனக்கு இரண்டாயிரம் ரூபாப் பிரிண்டிங் ஓடர் ஒன்றும் வரவிருக்கிறது!
குடும்பக் கதையை விரும்புபவர் காதல் கதையை விரும்புவாரா, :டைவஸ் கதையை விரும்புவாரா? இல்லாவிட்டால் கொழுத்த சீதனத்தோடு ஒரு :புரோக்கர் கல்யாணக் கதையை எழுதிக் கெட்டி மேளம் அடிக்க வேண்டியதுதான்! இதை நடுவர்கள் விரும்பாவிட்டால்? விரும்பாவிட்டால் அதற்கு நேர் எதிராக ஓடிப் போகும் ஒரு கதையையும் அனுப்பி வைக்க வேண்டியதுதான்! அதுதான் எத்தனைக் கதைகளையும் அனுப்பலாமே!..
புரட்சி நடுவர்களானால்? சிகப்பு ஆகாஸத்தில் அதி சிகப்பு ஸூர்யன் புஷ்பித்து அதி அதி அதி சிகப்பு மனுஷ்யர்கள் அஹிலத்தில் பிரவேஸம் கொண்டார்கள் என்று காது குத்தலாம்.
நிச்சயமாக ஒரு பெண்ணின் பெயரில்தான் எழுத வேண்டும்! அது எந்தக் குப்பைக் கதையாக இருந்தாலும் முதற் பரிசு சர்வ நிச்சயம் ! நடுவர்கள் பாகாய் உருகிவிடுவார்கள்! இல்லாவிட்டால் என்னதான் கலையம்சம், மொழிநடை, உத்தி என்பன சிறக்க எழுதியிருந்தாலும், நாலு நடுவர்களுள் ஒருவர் நவீன சிறுகதைகள் வாராதாராக இருந்து, அது எனக்குக் கதையாகப் படவில்லை என்று ஒதுக்கித் தள்ளி விடுவார்! பிறகென்ன, மூன்று பேரின் புள்ளிகளைக் கூட்டி நாலால் பிரித்துக் கடைசியில் தள்ளி விடுவார்கள்! ஆமாம், பெண் பெயரில்தான் எழுத வேண்டும்!
ஐப்பீகேயெஃப் ப்ளோட்தான் இப்போதைய மார்க்கட் என்று நினைக்கிறேன். உறுப்புக்களை அறுத்து அங்கேயே ஈடு வைத்துவிட்டு வந்த இந்த அப்பிராணி மயான அமைதிப்படைக்கு, மேகம் மேகமாய் நோய் பரவியிருப்பதாக இந்தியாவில் புதிய வாகடம் எழுதப்படுகிறதென்று ஒரு புதிய ஐதீகக் கதை! இந்தப் படைக் குழந்தைகளை நினைத்தால் பாவமாகக் கிடக்கிறது. தூக்கி வைத்துக்கொண்டு அமாவாசை நிலவைக் காட்டிப் பழங்காலப் பாற் கடலின் அசுர பானத்தைக் கொடுக்க ஆசை! அதிலும் ஒரு சிக்கல் வரும்போல் தெரிகிறது!
மனைவி என்னமோ தூக்கத்தில் அனுங்குகிறாள்…
நான் பரிசை வாங்கிக் கொள்ளப் பேப்பர்க்காரர்கள் பிரஸ்ஸை இழப்பார்களோ?..
க்கும்! இவள் விழித்தே விட்டாள்!
“என்னாப்பா இது, இன்னும் தூங்கலியா?”
“ம்!”
“இந்த மனுசன் இப்பிடி ராத்திரி பகலா யோசிச்சி யோசிச்சிப் பைத்தியந்தாம் புடிக்கப் போகுது!”
“ம்!”
திரும்பிப் படுக்கிறாள். படுக்கட்டும்! பகல் முழுக்க மாரடிக்கும் மனைவிக்கு இரவிலாவது நல்ல தூக்கம் அவசியம்!
பரிசு கிடைத்தால் மட்டும் அந்தப் பணத்தையோ புகழையோ இவள் வேண்டாமென்றுதான் சொல்லி விடுவாளா? இவளும் ஜானகி, ஜெயலலிதா வம்சம்தானே!… ச்சே பாவம்! என்ன இருந்தாலும் அந்த அம்சத்தைப் புகுத்தி நான் இவளைப் புண் படுத்தக் கூடாது!
ஆறேழு வருஷத்துக்கு முதல் இப்படித்தான், இரவிரவாகக் கண் விழித்து, பிரமச்சரிய விரதமும் பூண்டு, மூன்று – நான்கு வாரங்களாகத் தனி வெண்பாவில் ஒரு நெடுங் கவிதை எழுதினேன்.பூஜை மாதிரித்தான். அதைப் புத்தகமாகவும் போட்டேன். நகையைப் பிறகு செய்யலாம் என்று தள்ளியும் வைத்தேன்.
ஐந்து வருஷமாகக் கொஞ்சமாகவா ஊடினாள்? புத்தகம் போடும் பிரச்சினை வள்ளுவருக்கு இருக்கவில்லை. இருந்திருந்தால் அந்தக் குறளைப் பிடுங்கி எறிந்து விட்டு, ‘ஆடுதல் காமத்துக் கின்பம் அதற்கின்பம் போடுதல் பொன்னா பரண்!’ என்றல்லவா பாடியிருப்பார்!.
புத்தகத்தை வெளியிட்டேன். போன வருஷம் வரையில் :டைவஸ் செய்த மாதிரித்தான்! பிறந்த பிள்ளை என்னமோ அருட்டுணர்வில்தான் பிறந்திருக்க வேண்டும்! எப்படியோ, என்னைப் போன்ற அப்பாவிகளை வைத்தும் புகழ் சம்பாதிக்கும் ஒரு சிலர் இருக்கத்தானே செய்கிறார்கள்! இந்த வெண்பாவுக்குப் போய் அந்த வருஷத்தின் சிறந்த கவிதை நூல் என்று மைக்குக்கும் கெமராவுக்கும் முன்னே நின்று ஒரு செக்கைக் கொடுத்து விட்டார்கள்! மறுநாளே மரியாதையாகச் செக்கை மாற்றி, இன்னுங் கொஞ்சங் கடன் பட்டுச் சொன்னதில் பாதியைச் செய்து போட்டேன். அத்தோடு பிரச்சினை :பூஸாவுக்குப் போய்விட்டது! இப்போது அவசரங்களுக்கு ஈடு வைக்கக் கேட்டாலும்கூடக் கழுத்தைத் திருப்பிப் படுக்க மாட்டேன் என்கிறாள்!….
விழித்து வேதாளமாகப் பார்க்கிறாள்! எழுத வேண்டாம், யோசிக்க வேண்டாம் என்று அலங்கோலமாகத் தூங்கினால், நானென்ன வசிஷ்ட்டரா – என் எழுத்துத் தவத்தைக் குலைத்துக் கொள்ள?
என் தவறை நானும் ஒத்துக்கொள்ள வேண்டும்தான். அவளை நிம்மதியாக உறங்க வைத்துவிட்டு நான் பின் தூங்கிப் பின்னெழ வேண்டும். இலக்கியம் வந்துவிட்டது என்பதற்காக இல்ல ஐக்கியம் கெட்டுப்போக விடக்கூடாது!
என்ன செய்வது, இலக்கியம் என் முதல் மனைவி என்று நானே பீத்திக் கொள்கிறேன் புத்தகம் போடுவது பிரசவம் மாதிரி என்று தாயின் பிரசவத்தையே கொச்சைப்படுத்துகிறது போல! ‘இல்லறக் களைப்புக்குப் பிறகுதான் இலக்கியம் பிறக்கும்!’ என்று யாராவது மந்திரவாதி மாதிரி சைக்காலஜி எழுதி வைத்திருந்தால் நிச்சயமாக நானும் நீங்களும் எல்லோருமே அதற்குப் பலியாகியிருப்போம்! அதன் பிறகு எல்லாப் பெண்களுமே இலக்கியக்காரனைத்தான் கட்டுவோம் என்று நிற்பார்கள்!
இலக்கியக்காரனைப் பெண்கள் கல்யாணம் செய்து கொள்ளவே கூடாது என்று இப்போது யாரும் ஊர்வலம் போகாமல் இருந்தால் பெரிய காரியம்!
இப்போது அந்தப் பலவீனமெல்லாம் வேண்டாம்! கதைதான் வேண்டும். இன்னும் ஐந்தாறு நாள்தான் மிச்சம். தபால் என்னவாகுமோ அதுவும் தெரியாதே! இன்றிரவு எப்படியும் குறிப்பெடுத்துவிட வேண்டும். நாளைக்கு எழுதிவிட வேண்டும். நாளை நின்று அதை மறுபடியும் செப்பனிட்டுவிட வேண்டும். எழுத்துக்கென்றே பிறந்தவர்களுக்கு ஒரு தரம் எழுதினால் போதும்! இரண்டாம் முறை திரும்பிக்கூடப் பார்க்க மாட்டார்கள்! விமர்சகர்களுக்கு அப்படி ஒரு தண்டனையை நான் கொடுக்க மாட்டேன். வாசகர்கள் இளிச்ச வாயர்களானால் பரவாயில்லை. எனக்கு ஆகக் குறைந்தது இரண்டு மூன்று முறையாவது அடித்துக் கிழித்துத் திருத்தினால்தான் ஆழியில் குளித்த சுகம் வரும்!
சரி, தீமுக்கு வருவோம். ஒரு கதா நாயகன். அவன் தமிழ் வளர்க்கிறான். அடச் சீ! தமிழ் சினிமாவுக்குக் கதை கட்டுகிற மாதிரி! தமிழை எந்தக் கதாநாயகன் வளர்த்தான்? தமிழல்லவா ஒவ்வொருவனையும் வளர்த்துக் கொண்டிருக்கிறது! பாரதி தமிழ் வளர்த்தானா பாரதியைத் தமிழ் வளர்த்ததா? இதுகூட நல்ல ஒரு ப்ளொட்தான். ஆனால் அது கட்டுரைக்குத் தான் சரி.
கதாநாயகன். அவன்… அவன்?
இந்த நடுவர்கள் சோஷலிஸ்ட்டுகளாக இருப்பார்களோ? அப்படியானால் ஆன்மீகவாதி சுரண்டுவதாக இருக்க வேண்டும். முதல் பரிசு சத்தியம்! ஓர் ஐயர் பண்டாரப் பொடியனை நொருக்கி இருநூறு, முந்நூறு சம்பாதித்ததாகக் கோவிலும் கட்டலாம்; அதில் உட்கார்ந்து பூவும் சுற்றலாம்!
இவர்கள் ஆன்மீகவாதிகள் என்றால், சோஷலிஸ்ட்டு காசு லிஸ்ட்டைச் சுரண்டுவதாக அமைக்க வேண்டியதுதான்! சுரண்டுதல் என்னவோ சோஷலிஸ்ட்டுக்கும் பொதுவானது, ஆன்மீக வாதிக்கும் பொதுவானதுதானே!
சோஷலிஸ்ட்டு என்ற பதப் பிரயோகம் சரிதானா? வேண்டுமானால் என் பெயரையும் பரிசையும் காப்பாற்றிக் கொள்ள மானிடவாதி என்று போடுவோமே!
இந்த மானிடவாதிக்கு மட்டும்தான் மானிடம் வருமென்று என் நண்பன் ஒருவன் கூறினான். அதனால்தான் அவன் மானிடவாதி வட்டத்தில் சேர்ந்தானாம். அதற்கு முன் எப்படி இருந்திருப்பான்? என்னைக்கூடச் சேரச் சொல்லிக் கரைச்சல்!
போன மாதம் ஒரு மானிடக் கூட்டத்துக்குப் போனேன். அறுபது எழுபது மானிடர்கள் வந்திருந்தார்கள். மேடையில் ஆறோ ஏழோ மானிடர்கள். சபையில் எக்கச் சக்கமான புழுக்கம். புழுக்கம் சரியா, புளுக்கம் சரியா? ஏதோ, ஒரு புழுலுளுக்கம்! எல்லாமே வாய்ச் சூட்டு வினை! மேடை மானிடர்கள் நாலைந்து இஞ்சிச் சோடா வாங்கிக் குடித்துக் குடித்தே பேசினார்கள். ஏனைய மானிடர்கள் தொண்ணாந்துபோய் இருந்தோம். இனிமேல் மானிடக் கூட்டத்துக்குப் போனால் குடிப்பதற்கும் ஏதாவது கொண்டு போக வேண்டும்! பஞ்சுச்சோடா நல்லது! வாயிலும் அடைக்கலாம்; காதிலும் அடைக்கலாம்!
ஆஹாஹா! இதையே ப்ளொட்டாக வைத்து என் கதையை எழுதிவிடலாமே! தலைப்பு மானிடம். மனிதம் என்றும் வைக்கலாம்! மனுஷ்யம் என்றாலும் புதுக் கவிதையைப் போல ஹெல்மெட்டுடன் நிற்கிறது! சிங்களத்தில் மொழி பெயர்த்தால் மனுஷ்யத்வய! மகனிடம் கொடுத்தால் சிங்களத்தில் பெயர்த்து விவரணயில் போட்டு விடுவான். அதில் ஏதாவது தவறிருந்தால் அதையே ஐந்தாறு வருஷங்களுக்குச் சொல்லிக் கொண்டு திரிவார்கள் சில விமர்ஸ்கள்! அதே பெரும் புகழ் ஆகிவிடுமே! விஷயத்துக்கு வருவோம். ஆங்கிலத்தில் ஹியூமனிசம்! கம்யூனிசம் என்றால் ருஷ்ய பாஷை! ஆகா! ருஷ்யா வரையில் போகுமே!
அட, அதிலும் ஒரு சங்கடம் கிடக்கிறதே! போனவாரம்தான் ஒட்டுக் கவிதை உத்தமசீலன் எனக்குப் புதிய ஐடியா ஒன்றைக் கொடுத்திருந்தான்.
“அட பேப்பயலே! முப்பது வருஷமா எழுதிறியே; இது வரைக்கும் எவனாவது ஒருத்தன் ஒன்னப் பத்தி மேடையிலயோ பேப்பர்லயோ குசினிக்குள்ளயோவாவது சொல்லியிருப்பானா? ரெண்டே வருஷத்ல ஏம் பேரு இந்தப் பக்கம் ரஷ்யா வரைக்கும் அந்தப் பக்கம் அமெரிக்கா வரைக்கும் போயிருக்கு! இப்ப நாஞ் சொல்ற மாதிரி செய்! ஏதாவது ஒரு வட்டத்ல சந்தாதாரனா சேந்துக்க! விடியல், புஷ்ப்பம், ரத்தப்புரட்சி, ஜன ஸுன்யம், சிவப்புன்னு அடிக்கடி எழுது. சிகப்புன்னு எழுதினா இன்னும் விசேஷம்! அதுக்குப் பொறகு பாரு, ஆஹாம்பான்; இல்லேன்னா ஓஹோம்பான்! எத எழுதணும், எப்பிடி எழுதணும்னு நீ ஒண்ணுக்கும் யோசிக்க வேண்டியதில்லை! கன்னா பின்னாவுக்குக் கருத்துச் சொன்ன மாதிரி ஒன்ட ஒவ்வொரு பேத்தலயும் காத்திரம்பான்! யாருக்கும் எதுவும் வௌங்கணுமேங்கிற பிரக்ஞையும் வேண்டியதில்ல! எம்ஜியார் பேசுற மாதிரி எழுதீட்டா அதுதாண்டா புதிய இலக்கியம்! கொஞ்சக் காலத்துக்குப் பொறகு நீ எழுத வேண்டியது கூட அவசியமில்ல! சும்மா ஒளறிக்கிட்டே இருக்க வேண்டியது; அவனவன் அத டேப் பண்ணிக்கிட்டுப் போய்றுவான்! அப்பறம் வெள்ளி விழா, பொன்னுவிழா, வைர விழா, சாம்பல் விழா எல்லாமே வரும்! அந்த வட்டத்தில ஒருத்தன் காத்து விட்டாக் கூட, ‘ஆஹா, ஸுஹந்தம்!’ னு வட மொழியில சொல்லக் கத்துக்க! அந்த முன் பல் ரெண்டையும் புதுசாக் கட்டிக்க!…”
ஆஹா, இப்படிப் புத்தி கெட்டு என் எதிர்காலம் அத்தனையும் வீணாகும்படியாக நான் கதை எழுத முடியுமா? வேண்டாமே! எழுத்துச் சுதந்திரம் வந்த பிறகு அப்படியெல்லாம் எழுதலாம்!..
சரி, இப்போது எதைத்தான் எழுதுவது? போட்டி முடிந்துதான் ப்ளொட் வரப் போகிறது! இந்த மாதிரி நேரங்களில்தான் பேனையை ஒடிக்க வருகிறது
பாரதியை யானை கொன்றது போல!
சீ! எவ்வளவு புழுக்கமாகக் கிடக்கிறது! இவள் எப்படி இப்படித் தூங்குகிறாள்?
பாவம், இன்று ‘:டினஸ்ட்டி’ போகும் போதே இவளுடைய பார்வை சரியில்லாமல் இருந்தது! பாவந்தான் இவள்! இலக்கியம் செய்வதை விட இல்லறம் செய்வது லாபமாகத் தெரிகிறது!
சரி, என்ன தீம் நல்லது?
புரண்டு படுக்கிறாள்.
சாம்பாராக ஒரு தீம் ? ஒரு குண்டும் ஒரு குழந்தையும்! ஒரு பயங்கரவாதியும் ஒரு பயந்தாங் கொள்ளியும்! ஒரு மாங்கொட்டையும் அல்லது மாங்காயும் ஒரு ஜோடிப் பாத ரட்சையும்?
”முதுகக் கொஞ்சம் சொறிஞ்சி விடுங்களேன்,” என்று இவள் பின் புறமாக நக்கரித்து நெருங்குகிறாள்!
இலக்கியம் படைக்கு முன் மனைவிக்கு முதுகு சொறிவது கூடப் பிள்ளையார் சுழி போலத்தானா?
– 1989ல் ‘திசை’ நடத்திய சிறுகதைப் போட்டியில் மூன்றாம் பரிசு ரூபா 250 பெற்றது.
– வெள்ளை மரம் (சிறுகதைகள்), முதற் பதிப்பு: டிசம்பர் 2001, துரைவி பதிப்பகம், கொழும்பு.