முதல் வரிசையில் மூன்றாவது இருக்கை

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: குமுதம்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 3, 2025
பார்வையிட்டோர்: 6,007 
 
 

ஒரு கல்யாணத்துக்குப் போய்விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தோம். நானும் ஜானுவும். போகும்போது கலகலப்பாக இருந்த ஜானகி, வீடு திரும்பும்போது கடுகடுவென்று வந்தாள்.

காரணம் கேட்டதற்கு பதில் சொல்லவில்லை. என்னவாக இருக்கும் என்று நானும் யோசித்து மண்டை காய்ந்ததுதான் மிச்சம். பயணம் முடிந்து வீட்டிற்குள் நுழைந்த நொடியே வெடித்தாள்.

‘யார், அவ கல்யாண மண்டபத்துல வச்சு பத்துபேர் பார்க்கறாங்களேன்னு கூட கூச்சமே இல்லாம உங்களையே விழுங்கற மாதிரி பார்த்துகிட்டிருந்தாளே, அவளுக்கும் உங்களுக்கும் என்ன உறவு.. எத்தனை காலமா தொடர்பு?’

‘நிறுத்தறியா… கல்யாணப் பொண்ணைக்கூட ஏறிட்டுப் பார்க்கலை நான். மேளச்சத்தத்துக்கு பயந்து அழுத நம்ம குழந்தையைத் தூக்கிக்கி்ட்டு வெளியில் வந்தவன்தான். முகூர்த்தம் முடிஞ்சு, மண்டபம் பாதி காலியாகிற நேரத்துக்குத்தான் உள்ளேயே வந்தேன்’

‘வெளியே நின்னாலும் அவள் பார்வை படற இடமா பார்த்துதானே நின்னிங்க. அவ முன் வரிசையில மூணாவதா உட்கார்ந்துக்கிட்டு நீங்க திரும்பின பக்கமெல்லாம் பார்த்து ரசிச்சாளே..’

‘அங்கயே அப்பவே அவகிட்ட கேட்டிருக்கலாமே, அவளை…யார் நீ எதுக்கு எம் புருஷனை அப்படி பார்க்கறேன்னு’

‘மாயமாய்ட்டாளே சக்களத்தி. அவ யார்னு தெரிஞ்சாவணும்.’

‘இந்த விளையாட்டுக்கு நான் வரலை. நீயா ஏதோ கற்பனை பண்ணிகிட்டு வம்பு வளர்க்கற…’

‘சாதாரண பார்வை இல்லை. ஆண்டாண்டு காலமாய் ஆசை வெச்சு நேசிச்சு பழகிய ஒருத்தி ஒரு இடைவெளிக்குப் பிறகு தன் ஆளைப் பார்க்கிற ஏக்கப் பார்வை. முன்னப் பின்ன தெரியாத ஒரு ஆளை
எந்தப் பொண்ணும் அப்படிப் பார்க்க மாட்டாள். நிச்சயம் உங்களுக்கு தெரிஞ்சிருக்கணும். கட்டாயமா உங்களுக்குள்ள ஏதோ இருந்திருக்கு. அவ பார்வையோட தீட்சண்யம் தாங்க முடியாமதான் நீங்க
வெளியேறியிருக்கிங்க.’

‘அபாண்டம் சாமிக்கே அடுக்காது’ என்றேன்.

அவள் நம்பத் தயாரில்லை. குழந்தையைத் தூளியில் இட்டுவிட்டு தரையில் அழுத்தமாக அமர்ந்தாள். இனி பச்சைத் தண்ணிகூட குடிக்கமாட்டாள். கொடுக்க மாட்டாள் என்று தெளிவாக தெரிந்தது.

மாப்பிள்ளையின் அண்ணனைத் தொடர்பு கொண்டு காலையில் நடந்த கல்யாணத்தை வீடியோ, போட்டோ எடுத்த வீடியோ கிராபரின் விலாசத்தைக் கேட்டு வாங்கி கொண்டேன்.

குழந்தையைப் பக்கத்து வீட்டில் விட்டு பார்த்துக் கொள்ளச் சொல்லி விட்டு ஜானகியுடன் வீடியோ கிராஃபரைப் பார்க்கப் போனேன்.

வீடியோ ஃபுட்டேஜ்களை கம்ப்யூட்டரில் ஏற்றி வைத்திருந்தார்கள்.

அதை ஓட விட்டு, ‘பாரு.. அவள் இதில் யாருன்னு சொல்லு’ என்றேன். உன்னிப்பாக பார்த்துக் கொண்டு வந்தவள் ஒரு இடத்தில் ‘இவதான் இவதான்’ என்று அலறினாள்.

பார்த்தேன். அசந்து போனேன். பேரழகு எங்கேயோ பார்த்த ஞாபகம்…

‘இவளா.. என்னைப் பார்த்தவள்…அதுவும் காதலோடும், ஏக்கத்தோடும்..சான்ஸே இல்லையே..’

அவள் முகத்தை பிரிண்ட் போட்டுக் கொடுக்கச் சொல்லி வாங்கிக் கொண்டு வந்து மாப்பிள்ளையின் அண்ணனான என் நண்பனிடம் காட்ட, ‘இது ஆனந்தி. செந்தில் நகரில் இருக்கா. யாருக்கு பார்க்கப் போறே?’ என்று கேட்டான் நண்பன்.

‘எனக்குத்தான்’ என்று விலாசம் வாங்கிக் கொண்டு ஒரு டாக்சி பிடித்து இடத்தை அடைந்தோம்.

‘நீங்க உள்ள போங்க. நான் வெளியில் நிக்கறேன். காரணமாதான்’ என்று வெளியில் நின்று கொண்டாள் ஜானகி. கதவு இடுக்கு வழியாகவோ ஜன்னல் வழியாகவோ நோட்டமிடுவாள் போலிருந்தது. அசிங்கம். கதவைத் தட்டி விட்டு உள்ளே போனேன்.

அந்த பெண் வானம் வரை வியந்தாள். பரவசப்பட்டாள். பச்சைப் பட்டில்தான் இருந்தாள்.

‘வாங்க சேகர். மனசுக்குள் ஒரு பட்டாம்பூச்சி படபடத்து கிட்டிருந்திச்சு. பிரியமானவர் யாரோ பார்க்க வரப் போறாங்கன்னு நீங்களே வந்தது சர்ப்ரைஸ். காலைலதான் கல்யாணத்தில் வச்சு. உங்களை பார்த்தேன்.’

‘வந்து, என்னை உங்களுக்கு எப்படித் தெரியும்?’

‘காலேஜ்ல உங்கள் ஜூனியர் நான். உங்க பங்க்சுவாலிடி, சின்சியாரிடி, டிரெஸ் பண்ணும் ஒழுங்கு. பெண்களிடம் வழியாமல் கண்களை நேருக்கு நேர் பார்த்துப் பேசும் நேர்மை, படிப்பில் முதன்மை, அது மட்டுமா கவிதை கதைன்னு எழுதி. கல்சுரல் புரொக்ராமில் அசத்தலாக ஓரங்க நாடகம் போட்டு அசத்துவிங்க. பன்முக ஆற்றல் இருந்தாலும் அதற்காக அலட்டிக்கவே மாட்டிங்க. படிக்க வந்த இடத்துல அதுவும் ஒரு சப்ஜக்ட் என்கிற மாதிர நடந்துக்குவிங்க. எல்லாத்துக்கும் மேல பெண்கள் விஷயத்தில் நீங்கள் ஒரு ஜென்டில்மேன். நீங்க எது சொன்னாலும் செய்யத்தயாராய் கேர்ள்ஸ் உங்களை மொய்க்கும் போது அவர்களின் எதிர்கால நல் வாழ்க்கைக்கு வாழ்த்துச் சொல்லி நாசூக்காய் விலகிடுவிங்க.’

‘வெய்ட்.. வெய்ட்.. அடுக்கிட்டே போறிங்க. ஆனால் எனக்கு உங்களைப் பத்தி ஒண்ணுமே தெரியாது. சாரி.. உங்க பேரைக் கூட இன்னைக்குதான் தெரிஞ்சுக்கிட்டேன். அதுவும் அவசியம் ஏற்பட்டதால். என்ன பண்ணிக்கிட்டிருக்கிங்க ஆனந்தி?’

‘ஓவியம் டாட்.காம்னு ஆன்லைன் வர்த்தகம் ஆரம்பிச்சு ஒவியர்களிடமிருந்து படம் வாங்கி விநியோகம் பண்ணிக்கிட்டிருக்கேன். ்ப்பா கோவையில் மில் நிர்வாக பண்ணிக்கிட்டிருக்காங்க. அம்மா டாக்டர். நர்சிங் ஹோம் போயிருக்காங்க.’

‘மேரேஜ் ஆயிடுச்சா?’

‘உங்களைத்தான் நினச்சிருந்தேன். ஆனால், மனசிலிருந்ததைச் சொல்ல வாய்ப்பு அமையலை. இன்னைக்குக் கல்யாண மண்டபத்துல குழந்தையோடு உங்களைப் பார்த்தேன். இனி எனக்கு வாய்ப்பு இல்லைனு முடிவாயிடுச்சு. நீங்க கிடைக்கலை. அட்லீஸ்ட் உங்களைப்போல ஒருத்தர் கிடைத்தால் கல்யாணத்தைப் பத்தி யோசிப்பேன்’ என்றாள்.

என்னுள் ஏதோ நழுவியது. ஏக்கமும் ஏமாற்றமும் நிறைந்த அவள் கண்களை நீண்ட நேரம் ஏறிட்டுப் பார்க்க முடியவில்லை. குல்லூரி நாட்களில் கொஞ்சம் காதலிக்கவும் செய்திருக்கலாமோ.. என்று உள்ளூர ஒரு எண்ணம் ஓடுவதை தவிர்க்க முடியவிலலை.

மனதை இறுக்கிக் கொண்டு..

‘நிச்சயம் கிடைப்பார் வாழ்த்துக்கள்’ என்று வெளியில் பாய்ந்தேன்.

‘உங்களை சந்தேகபபட்டதுக்கு மன்னிச்சுக்குங்க. எப்பேர்ப்பட்டவங்க எல்லாம் உங்களை ஆசைப்பட்டிருக்காங்க. மனசை விடாம நல்லவரா இருந்து என்னைத் தேர்ந்தெடுத்து கட்டியிருக்கிங்க. உங்களைப் போய்’ என்று கண்ணீ்ர காட்டினாள்.

‘போதும்.. போதும்.. நட.. மூக்கும் முகரையும்…’

என்னையும் அறியாமல் எரிந்து விழுந்தேன். அடுத்த நொடியே திடுக்கிட்டேன்.

தாலி கட்டிய நாளிலிருந்து இந்த இரண்டரை வருடத்தில் ஜானகியை ஒரு சுடு சொல்லும் சொன்னதில்லை. இப்போதுதான் முதன் முதலாக எரிந்து விழுந்திருக்கிறேன்.

டாக்சியில் புறப்பட்ட போது ஆனந்தியின் வீட்டை இன்னொரு முறை திரும்பிப் பார்த்தேன். இனி வரும் காலத்தில் ஜானகி மேல் அடிக்கடி எரிந்து விழுவேனோ என்ற பயம் ஏற்பட்டது.

– குமுதம், ஜூன் 2016.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *