முதல் சுவாசம்
தின/வார இதழ்: பாக்யா
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: September 28, 2018
பார்வையிட்டோர்: 12,801
“வணக்கம்..வருண்.!..எப்ப சென்னையிலிருந்து வந்தாப்ல…என்ன ‘சினிபீல்டு’ல நுழைஞ்சிட்டீங்களா.!?நாங்களும் தியேட்டர்ல கலர்கலரா பேப்பர் துகள்களை பறக்கவிட்டுகிட்டு..எங்க ஊரு இயக்குனர் தந்த படைப்புன்னு காலரை தூக்கிவிட்டு அலைய ஆசைப்பட மாட்டோமா.!?”என்றான் டைலர் சிவா.
“என்னப்பா செய்யறது..எட்டு வருசமா போராடற எங்க மாமாவே இப்பதான் கையில’ஸ்கிரிப்ட்’டோட கம்பெனி கம்பெனியா ஏறி இறங்கிகிட்டிருக்கார்..அவருக்கு வாய்ப்பு கிடைச்சுட்டா…என்னை உதவியா சேர்த்துக்கறதா சொல்லியிருக்கார்…ம்..பார்ப்போம்”என்றான் வருண்.
“உங்க மாமா இயக்குனரா ஆகற வரைக்கும் வேற இயக்குனர்கிட்ட வாய்ப்பு கேட்கலாமே…”
“எல்லா துறைகளிலேயும் புதுசா வாய்ப்பு தேடறவங்களை சந்தேக கண்ணோடதான் அணுகறாங்க…பார்ப்போம்..”பெருமூச்சை வெளிப்படுத்தினான் வருண்.
“சோர்ந்து போயிடாதே வருண்…நல்லதே நினை..நல்லதே நடக்கும்..சரி கொஞ்ச நேரம் உட்கார்…டீ வாங்கிட்டு வரேன்”என்றான் சிவா.
“வேணாம் சிவா…கொஞ்ச நேரம் சைக்கிள் கொடேன்…பெரியக்கடை வீதி வரைக்கும் போயிட்டு வரேன்”
“கொஞ்சம்…பொறுப்பா…இப்பதான் ‘காஜா’பையனை நூல்கண்டு வாங்க செட்டியார் கடைக்கு அனுப்பியிருக்கேன்”
“அது சரி..என்னைப்பத்தி கேட்டுகிட்டிருந்தே…உன் தொழில் எப்படி போகுது அதை சொல்ல மறந்துட்டியே.!”
“ஏதோ..போகுதுப்பா..புதுசா கடை போட்டிருக்கறதால புதுத்துணிகளை நம்பள நம்பி யாரும் தர்றதில்ல…பழைய துணிகளுக்கு ‘பஞ்சர்’போட்டுத்தான் என் தொழில் திறமையை நான் நிருபிச்சாகனும்.!..அதன் மூலமா புது’கஸ்டமர்’களை சம்பாதிச்சுட்டேன்னா…எனக்கான பெயரும் ,பொருளும் என்னைத்தேடி வரும்ன்னு நம்பறேன்..அதை நோக்கியே உழைக்கிறேன்..அவ்வளவு தான்.!”
“சாரிடா…சிவா,நான் கூட உன்கிட்ட சைக்கிள் கேட்டது என்னோட புதுத்துணிகளை பெரிய டைலர்கடையில தைக்க கொடுக்கலாம்னுதான்…நல்ல வேளை என் கண்ணை திறந்துட்ட..இருநூறு ரூபாய் சட்டை துணியைக்கூட நண்பன்தானேன்னு நினைச்சு கொடுக்காம…அனுபவத்தை தேடி ஓடும் மனசு…இருபது முப்பது கோடிகளை கொட்டி காலம்கடந்து நிற்குற படைப்பை தர்றவங்க அனுபவத்தை எதிர்பார்க்கும் போது தப்புன்னு நினைக்கறது முரண் தானே..சிவா.!?”.
” ஒவ்வொருத்தரும் சின்னச்சின்ன வாய்ப்புகளையும்…வாழ்த்துக்களையும் ..பரிமாறி,பக்குவப்பட்டுத்தானே வளர்ந்தாகனும் இங்கே…என்னோட துணிகளை நீயே தைச்சுக்கொடுப்பா.!”என்றான் வருண்.
கனிந்து சிரித்த இரண்டு உள்ளங்கள் நாளைய நம்பிக்கை ஒ ளியை கண்களில் தேக்கி அதை ஆனந்த கண்ணீராக கசியவிட்டன.
– ‘பாக்யா’ வாரஇதழ், ஏப்ரல்2_8;2010இதழ்