மீளா வட்டம்




நகரத்தின் பிரபலமான அந்த வணிக நிறுவனத்தின் கணக்கு வழக்குகள், பணப்பரிமாற்றங்கள் போன்றவற்றைச்செய்ய, வங்கிக்கு வழக்கமாக வெங்கோஜிதான் வருவார். சென்ற பத்துபதினைந்து தினங்களாக புதிதாக வந்துகொண்டிருப்பவரிடம், “வெங்கோஜி விடுப்பிலிருக்கிறாரா?” என்று கேட்டேன். அவர், “இல்லை சார்! அவர் உடல்நிலை மிகவும் மோசமாகி மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொண்டபின், நேற்றுதான் வீடு திரும்பினார். ஆனால் முழுவதும் குணமாகவில்லை. அதனால்தான் நான் வந்துகொண்டிருக்கிறேன்.” என்றார். அவரிடம் வெங்கோஜியின் இருப்பிடத்தை கேட்டுத்தெரிந்துகொண்டேன்.
தினமும் நூற்றுக்கணக்கான வாடிக்கையாளர்களை சந்திக்கும் போது, ஒருசிலர் அவர்கள் பேச்சு, நடவடிக்கை, செயல்கள் மூலம், நினைவில் இருப்பர். வெங்கோஜியும் அப்படித்தான். மிகவும் ஒல்லியான, எளிமையான தோற்றம். கொஞ்சம் வெளுத்துப் போன வண்ணத்தில் அரைக்கை சட்டை: சற்று மங்கிய நிறத்தில் வெள்ளை வேட்டி: பளிச்சென்று நன்கு துவைத்து உடுத்தும் பாங்கு. உள்ளூரில் தயார்செய்யப்பட்ட செருப்பு: நெற்றியில் சந்தனம், குங்குமம். சிலசமயங்களில் எனக்கு காப்பி வரும்போது, அவருக்கும் கொடுக்கச்செய்தேன். மிக்கமகிழ்ந்து என்னுடன் நெருக்கமாக உணர்ந்தார் போலும். அவர் அலுவலக வேலையைத் தவிர, தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி ஒரு கேள்விகேட்டாலே போதும்: தனிமனித வரலாற்றையே ஒப்புவித்து விடுவார். வழக்கமாக நிறுவனத்திற்குத்தான் மரியாதையோ தவிர, அங்கு வேலைபார்க்கும் ஊழியர்களுக்கல்ல என்ற பொதுவான போக்கிலிருந்து மாறி, நேரம் கிடைக்கும்போது, அவர்களிடம் பரிவுடன் பேசினாலேயே, நம்மைப் பற்றி உயர்ந்தமதிப்பை உருவாக்கிக் கொள்வார்கள்.
நான் இங்கு மாற்றலாகிவந்த இந்த ஆறுமாதங்களில், வெங்கோஜி சொல்லத்தெரிந்து கொண்டது இதுதான். அவரது தாத்தா,தற்போது வேலை பார்க்கும் நிறுவன முதலாளியின் தாத்தாவிடம் – கிராமத்தில் பண்ணையாராக இருந்தவரிடம்- காரியம் பார்த்தவர். அவரது அப்பா, பண்ணையார் மகனிடம். அவர், முதலாளி ஆரம்பித்த வணிகநிறுவனத்தில், ஆரம்பத்திலிருந்தே பணிபுரிகிறார். நான் முதலாளியின் மகன் என்ன செய்கிறார் என்று கேட்டததற்கு, வெளிநாட்டில் படிப்பதாகச்சொன்னார்.
குடும்பச்செலவிற்குத்தேவையான அளவிற்கு சம்பளம் கொடுக்கிறார்களா என்று வினவினேன். ஐந்து நபர்கள் கொண்ட சிறு குடும்பத்திற்கு அது போதும் என்றார். போதும் என்ற மனம் எத்தனை பேருக்கு இருக்கிறது? லட்சக்கணக்கில் பணப்பரிவர்த்தனையை, முதலாளி இவரிடம் நம்பிக்கை வைத்து நடத்தச்சொல்வதையே, பெருமிதமாகக்கருதும் குணம். முதலாளி அவருக்கு சொந்தமான இடத்தில் வீடு கட்டிக்கொடுத்தி ருக்கிறார். வாடகை கிடையாது. மூத்த பெண் திருமணத்திற்கு, கடனாக கேட்ட தொகையை வட்டியில்லாமல் கொடுத்து, மாதசம்பளத்தில் பிடித்துக் கொள்கிறார்களாம். ஆனால் தம்பதியரின் மருத்துவ செலவுக்கு அடிக்கடி வாங்கும் கடன்தான் பெரிய அளவில் பாக்கியிருக்கிறதாம். நேர்மையான உழைப்பு:அதீதமான ஆசைகளும் இல்லை:எவ்வித கெட்ட பழக்கங்களும் இல்லை. இருந்தபோதும், சொற்பவருமானத்தில், போஷாக்காக என்ன செய்துகொள்ள முடியும்? பற்றாக்குறை பட்ஜெட்டில் நடத்தப்படும் குடும்பம், இப்படித்தானே இருக்கும்.
பையன் பிளஸ் டூ: அடுத்த பெண் ஒன்பதாவது வகுப்பு. பையன் பொறுப்புணர்ந்து நன்றாக படிக்கிறானாம். குடும்பத்தினரின் ஒரே நம்பிக்கை அவன்தான்! அவன் நன்கு படித்து வேலைக்கு சென்று விட்டால், கடமை முடிந்துவிடும். கடைசி பெண்ணை படிக்க வைப்பதோ, திருமணம் செய்வதோ மகனின் பொறுப்பு. நானும் நம்பிக்கையூட்டும்விதமாக, “நன்கு படிக்கமட்டும் சொல்லுங்கள்:முடித்தவுடன், அவன் விரும்பும் படிப்பை, நல்ல கல்லூரியில் படிக்க, இங்கு கல்விக்கடன் பெற்றுக்கொள்ளலாம். எத்தனையோ பேர் இதுபோன்ற வாய்ப்பைப் பயன்படுத்தி முன்னேறியிருக்கிறார்கள்: அவனை என்னிடம் அழைத்து வாருங்கள்: நானும் எடுத்துச்சொல்கிறேன்,” என்று சொல்லி வைத்திருந்தேன். .
அன்று மாலை கொஞ்சம் பழங்களை வாங்கிக்கொண்டு, வெங்கோஜியின் இருப்பிடத்தைத்தேடிக்கண்டுபிடித்து அடைந்தேன். உள்ளே கட்டிலில் படுத்திருந்தவரிடம் அழைத்துச்சென்றார்கள். மெல்லிய தேகம் மேலும் துவண்டு பரிதாபமாகக் கிடந்தார். மருத்துவ சிகிச்சையைப்பற்றி விசாரித்தேன். கண்திறந்து பார்த்தவரின் கைகளைப்பற்றினேன். விசும்பி விசும்பி அழஆரம்பித்துவிட்டார். நான் ஆறுதலாக, “பலவீனத்தால் இப்படி ஆகியிருக்கிறது. உடம்பு நன்கு தேறியவுடன் பழையபடி வேலைக்குச் செல்லலாம். மருத்துவர்கள் சொன்னபடி தவறாமல் மாத்திரை மருந்து எடுத்துக்கொள்ளுங்கள். எல்லாம் விரைவில் சரியாகிவிடும்” என்றேன். அவர் மனைவியிடம் மருத்துவசெலவிற்கு மேலும் பணம் தேவைப்பட்டால் ஏற்பாடு செய்வதாகச்சொன்னேன். இப்போது இருப்பதாகவும், தேவைப்பட்டால் சொல்கிறேன் என்றும் சொன்னார். பையனும், பெண்ணும், மருத்துவமனை யிலேயே துணைக்கு இருந்ததாகவும், அன்றுதான் பள்ளிக்கு சென்றிருப்ப தாகவும் சொன்னார்.
சிலநாட்கள் கழித்து, என்னை தற்காலிகமாக வேறு கிளைக்கு ஒருமாதத்திற்குமட்டும் மாற்றி உத்தரவு வந்தது. தூரம் அதிகம் என்பதால் அங்கேயே தங்கவேண்டி வந்தது. அங்கிருந்தவர் விடுப்பை நீட்டித்ததால், கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் இருந்துவிட்டு திரும்பினேன். அன்றுதான் மீண்டும் அலுவலகத்திற்கு வந்தேன். தலைவலியாக இருந்ததால், மாத்திரை வாங்கிவரச்செயது, போட்டுக்கொண்டு, அந்நேரத்தில் கொண்டுவரும் காபியையும் குடித்துவிட்டு அமர்ந்தேன்.
முன்னரே வந்து காத்துக்கொண்டிருந்தான் ஒரு பையன். மொட்டையடித்தபின் பத்துநாட்களில் வளர்ந்த அளவு முடி. முகத்தில் ஒரு இனம்புரியாசோகம். எங்கேயோ பார்த்ததுபோல் முகம். “என்ன வேண்டும், தம்பி?” வங்கியில் பரிவர்த்தனை தொடர்பான வழக்கமான ஆவணங்களை நீட்டினான். பார்த்தபின், “நீ புதிதாக இந்நிறுவனத்தில் வேலையில் சேர்ந்தி ருக்கிறாயா? உன் பெயரென்ன?” அவன், “நான் நாகோஜி! வெங்கோஜியின் மகன். அப்பா இறந்துவிட்டார். சென்றவாரம்முதல், அதே நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்துள்ளேன்.” என்றான். நான் விக்கித்து இருக்கையில் சரிந்தேன்.